ஆக்கம்:முனைவர்.நாகேஸ்வரி அண்ணாமலை,
நியூ ஹேவன், அமெரிக்கா.
பிளாஸ்டிக்கினால் சுற்றுப்புறச் சூழ்நிலை கெடுவது மட்டுமல்லாமல் அதை உபயோகிக்கும் மனிதர்களுக்கே அதனால் அபாயம் விளையும் ஆபத்து இருக்கிறது. இப்போது அமெரிக்காவில் மைக்ரோவேவ் அவன் (microwave oven) என்பது மிக அதிக அளவில் உபயோகத்தில் இருக்கிறது. (இந்தியாவிலும் இதை அறிமுகப்படுத்த தீவிர ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இவற்றின் விலை அதிகம் என்பதால் இப்போதைக்கு நடுத்தர வர்க்கத்தினரிடம் கூட அவ்வளவு அதிகமாகப் புழக்கத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.) இதில் வேகமாகவும் மிகக் குறைந்த சிரமத்தோடும் உணவுப் பதார்த்தங்களை சூடு செய்யலாம். இந்த அவன்களில் உணவுகளைச் சூடுபடுத்த உபயோகிக்கும் பிளாஸ்டிக் கொள்கலங்களால் எந்த விதத் தீமையும் இல்லை என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறினாலும் சிலவற்றிலிருந்து மிகச் சிறிய அளவில் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் கசிவதாகச் சொல்கிறார்கள். மிகச் சிறிய அளவே என்றாலும் நாளடைவில் இந்த நச்சுப்பொருள் புற்றுநோய் போன்ற வியாதிகள் வரக் காரணமாக அமையலாம் என்கிறார்கள். இதற்காகவும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைப்பது நல்லது.
இந்தியாவிலும் இப்போது பிளாஸ்டிக்கின் உபயோகம் மிகுந்த அளவில் கூடியிருக்கிறது. ஏழைகளிலிருந்து பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக்கின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். மண்பானைகள், குடங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. முன்பெல்லாம் பை எடுத்துச் செல்லாமல் கடைக்குச் சென்றால் சாமான்கள் வாங்க முடியாது. இப்போது தெருவின் ஓரத்தில் காய்கறி விற்கும் பெண்கள் கூட பிளாஸ்டிக் பைகளைத் தராளமாக விநியோகிக்கிறார்கள்.
மனிதனால் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியாது என்றான பிறகு அதன் உபயோகத்தையாவது ஒவ்வொருவரும் முடிந்த அளவு குறைத்துக்கொள்ளலாமே. உபயோகத்தைக் குறையுங்கள், ஒரு பிளாஸ்டிக் பையை/பொருளை மறுபடி,மறுபடி உபயோகியுங்கள், மறுசுழற்சி செய்யுங்கள் (reduce, reuse, recycle) என்பதில், குறைத்துக்கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. என்ன சாமான் வாங்குவதென்றாலும், அதுவும் பிளாஸ்டிக் அடங்கிய சாமான் என்றால் மிகவும் யோசித்து, கண்டிப்பாக அந்தச் சாமான் தேவைதானா என்று முடிவு செய்த பிறகே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் அதை வேகமாக எறிந்துவிடக் கூடாது. கடைசி வரை உபயோகித்துக்கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு மறுசுழற்சி(recycle) செய்ய முடிவதை தயவுசெய்து செய்யுங்கள். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். எல்லோரின் முயற்சியாலும்தான் இதைச் சாதிக்க முடியும். பிளாஸ்டிக், மனிதனை முழுவதுமாக ஆட்கொள்ளும் முன்னால் மனிதன், பிளாஸ்டிக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம்மை வாழவிட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பூமியை நாம் காப்பாற்றி நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல முடியும்.
1 கருத்து:
சிறந்த வழிகாட்டல்
கருத்துரையிடுக