'எந்தக் குழந்தையும்' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'எந்தக் குழந்தையும்' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 26, 2011

எந்தக் குழந்தையும் -அத்தியாயம் 13

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

நான் மேலே குறிப்பிட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில் காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
அதேபோல் பல சந்தர்ப்பங்களில் இப்பெண்கள் தாம் கர்ப்பமுற்று உள்ளதை அறியாமலே, ஒரு சில மாதங்கள் மதுபானம் அருந்துதல், புகைத்தல், போதைப் பொருட்களை உபயோகித்தல் போன்ற தீய செயல்களைத் தொடருகின்றனர். இவர்கள் தாம் கர்ப்பமுற்று இருக்கின்ற நிலை தெரிய வரும்போது அது பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையாகவே இருக்கிறது. இருந்தும் தமது கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு, ஆரோக்கியத்திற்கு கேடான செயல்களில் இறங்கியிருப்பதான எவ்வித 'குற்ற உணர்வும்' இவர்களை ஆட்கொள்வதில்லை. ஐரோப்பாவில் பல நாடுகளில் குறிப்பாக டென்மார்க்கில் கர்ப்பமுற்ற ஒரு இளம்பெண், தான் கர்ப்பமுற்ற பன்னிரண்டு வாரங்களுக்குள் (ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குள்) தனது 'சுய விருப்பத்தின்' பேரில் கருக்கலைப்புச் செய்துகொள்ள சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டம் 1973 ஆம் ஆண்டு தொடக்கம் டென்மார்க்கில் அமுலில் உள்ளது. இச்சட்டம் 'உயிர்க்கொலைக்கு' ஆதரவாக உள்ளது என்ற ஒரு பார்வையும், அதிருப்தியும் மக்களில் ஒரு பங்கினரிடம் உள்ளமையையும், காணக் கூடியதாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது சமுதாயத்தில் பெற்றோரின் 'போதுமான' கவனிப்பு இல்லாமல் போகக்கூடிய ஏதுநிலை உள்ள குழந்தைகள் உருவாவதை அரசு விரும்பவில்லை, மிகக் குறைந்த வயதில் ஒரு இளம்பெண் கர்ப்பமுற்று, ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பட்சத்தில் அக்குழந்தை போதுமான கவனிப்பு கிடைக்காமல், நேரிய முறையில் வளர்க்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. அக்குழந்தை பின்னர் நாட்டிற்குச் சுமையாக, குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரஜையாக மாறுகின்ற வாய்ப்பும் உள்ளது. ஆகவே 'கவனிப்பார் இன்றி' அதிக குழந்தைகள் வளர்வதை அரசு விரும்பவில்லை ஆதலால் 'கருக்கலைப்புக்கு' அரசின் பூரண  அனுமதி உள்ளது என்ற அரசாங்கத் தரப்பு வாதம் ஏற்புடையதே. 
ஆனாலும் இக்கருக்கலைப்பு விடயத்தில் சகல நெறிமுறைகளையும் 'காற்றில் பறக்கவிட்டு' அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக நாம் முடிவுக்கு வரக் கூடாது. ஏனெனில் 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு இளம் பெண்ணிற்கே கருக்கலைப்பு விடயத்தில் இவ்வாறு தனது சுய விருப்பத்தின் பேரில்(தன்னிச்சையாக) முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அப்பெண் 18 வயதிற்குக் குறைந்தவளாக இருந்தால் அவளது பெற்றோர் அல்லது கர்ப்பத்திற்குக் காரணமான அவளது காதலன்(ஐரோப்பிய நாடுகளில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே காதலனுடன் சேர்ந்து வாழ்தல் சாதாரண ஒரு விடயம் என்பதை ஆசிய நாட்டு வாசகர்கள் அறிக) மருத்துவரின் ஒப்புதலுக்கு அழைக்கப் படுவர். இதுவே பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியாக இருக்கும் பட்சத்தில் மேற்படி கர்ப்பத்திற்குக் காரணமான இளைஞன் சிறுமியை விடவும் வயதில் மூத்தவனாக இருப்பின் அவன் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்திற்குக் காரணமான ஆடவன் சிறுமியை விடவும் வயதில் மூத்த ஒரு ஆணாக இருப்பின் அவர் சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியுடன் பாலுறவு வைத்துக் கொள்வது டேனிஷ் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இச்சட்டமே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப் படுகிறது எனக் கருதுகிறேன். இதுவே கர்ப்பத்திற்குக் காரணமான அல்லது அச்சிறுமியோடு பாலுறவில் ஈடுபட்ட இளைஞன் பதினான்கு வயதிற்கு உட்பட்டவனாக இருப்பின் அவனைத் தண்டிப்பதற்கு டேனிஷ் சட்டத்தில் இடமில்லை ஆதலால் அவன் ஒரு நன்னடத்தைப் பள்ளிக்கு(சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) அனுப்பப் படுவான்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

சனி, ஜனவரி 29, 2011

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
கடந்த அத்தியாயத்தில் "மேற்கத்திய நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும், உடல் ஊனமுள்ள குழந்தைகள் அதிகம் பிறப்பது ஏன்? என்றொரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு சில வாசகர்கள் தமது பதில்களை 'ஊகத்தின்' அடிப்படையில் எழுதியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஏற்புடையதாக இல்லாதிருப்பினும், பதிலளித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


மீண்டும் 'கருத்தடை முறைகளில்' ஏற்படும் குறைபாடுகளுக்கே வருகிறேன். மேற்கத்திய நாடுகளில் பதின்ம வயதிலேயே (Teenage) இளையோர் தமது மனதுக்குப் பிடித்த ஒரு இணையை (Mate) காதலனாகவோ அன்றேல் காதலியாகவோ தேர்வு செய்து அவருடன் நெருங்கிப் பழகுதல் ஒரு சாதாரண விடயம் ஆகும். இத்தகைய இளையோரில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்திற்கு முன்பே தனது காதலன்/காதலியுடன் சேர்ந்து வாழ்வதும், பாலுறவில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். இத்தகைய சோடிகளில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற எண்ணமும், பொருளாதார நெருக்கடி பற்றிய பய உணர்வுமே காரணமாகும். அத்துடன் இப்பராயத்தினரில் பலர் ஏதாவதொரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களாக இருப்பர். அவர்களில் பெண்கள் ஒரு குழந்தைக்குத் தாயாகுமிடத்து அவர்களது கல்வி பின்தள்ளப் படும் அல்லது இடைநிறுத்தப் படும் ஏதுநிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 'கர்ப்பத்தடை' முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.


இவ்வாறு பதின்ம வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறிப்பிட்ட வயதிற்குள் குறைவடைவதுடன், அவர்களது கருப்பையின் ஆரோக்கியம் மிகவும் குறைவடைகிறது. எவ்வாறு எமது உள்ளுறுப்புகளில் நிகழும் செயற்பாடுகளுக்கும், இயக்கத்திற்கும் கூட 'மூளை' பொறுப்பாகிறதோ அதேபோன்று பெண்களின் கருப்பையின் செயற்பாட்டிற்கும், சினைப்பையின் (Ovary) ஒழுங்கான இயக்கத்திற்கும் மூளை காரணமாகிறது. இதைப் பெரும்பாலான பெண்கள் தமது வாழ்நாளில் உணர்வதேயில்லை. நான் மேலே குறிப்பிடட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில், காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

சனி, ஜனவரி 22, 2011

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
கடந்த வாரம் இத்தொடரின் பத்தாவது அத்தியாயத்தில் கர்ப்பத்தடை முறையில் ஏற்பட்ட ஒழுங்கீனங்கள் எவ்வாறு ஒரு தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பது பற்றி ஆராய இருப்பதாக எழுதியிருந்தேன் அல்லவா? அதற்கு முன்னதாக நாம் நமக்குள்ளேயே சில  கேள்விகளைக்  கேட்டுப் பார்ப்போம்.

  1. இலங்கை போன்ற யுத்தத்தால் பாதிக்கப் பட்ட நாட்டில் அங்கவீனர்கள்(Handicap) வாழ்வது போலவே யுத்தத்தால் அதிகம் பாதிக்கப் படாத(அண்மைக் காலத்தில்) மேற்கத்தைய நாடுகளிலும் பெருமளவில் பிறப்பிலேயே அங்கவீனர்களான மக்கள் வாழ்கின்றனரே, அது ஏன்?
  2. மருத்துவ வசதிகளும், அறிவியலின் வளர்ச்சியினால் கிடைத்த அபரிமித சாதனைகளும் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில் மன நலம் குன்றிய, மற்றும் பிறப்பிலேயே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடலியல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் என்ன?
  3. மருத்துவ உலகில் அதீத சாதனைகள் படைத்திருக்கும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளால், மக்களில் பலருக்கு உடல் ஊனமான குழந்தைகள் பிறப்பதை ஏன் குறைக்க முடியாமல் போனது?
மேலேயுள்ள கேள்விகளுக்கு விடை காணப் புகுந்தோமானால் இந்நாட்டில் வாழுகின்ற வாழ்க்கை முறைகளே இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வரும்.
 (தொடரும்)
 

சனி, ஜனவரி 08, 2011

எந்தக் குழந்தையும் அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

கடந்த அத்தியாயத்தின் நிறைவில் கர்ப்பத்தடை முறைகளைப்பற்றியும், அவைகளில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் பற்றியும் எதிர்வரும் வாரங்களில் விரிவாக எழுதவிருப்பதாக வாசகர்களுக்கு உறுதியளித்திருந்தேன், ஆனால் கடந்த வாரம் டென்மார்க் வீதியொன்றில் நான் கண்ட காட்சி ஒன்று என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்ததால் அதைப்பற்றிய விபரங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொண்டபின், ஏனைய குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி ஆராயலாம் என்று எண்ணுகிறேன்.
நான் டென்மார்க்கில் வீதியொன்றில் கண்ட, என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய காட்சி இதுதான்:
 "ஒரு பெண்மணி , ஏறக்குறைய முப்பது அல்லது 35 வயது மதிக்கக்கூடிய பெண்மணி , ஏழு அல்லது எட்டு மாதக் கர்ப்பிணியாக இருப்பார் என்று நினைக்கிறேன், வீதிகளால் சைக்கிளில் செல்வது மிகவும் ஆபத்தானது என்று கருதி, அனைவரும் சைக்கிளில் செல்வதைத் தவிர்த்திருந்த ஒரு நாளில் எதைப்பற்றியும் கவலையில்லாமல், சைக்கிளில் ஓரளவு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். இந்தச் சம்பவமே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
அப்பெண்மணி எந்தவிதமான ஆபத்துமில்லாமல்,(கருவிலிருக்கும் சிசுவுக்கும்) வீடு போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக இருந்தது."
சரி அப்பெண்மணி சைக்கிளில் சவாரி செய்வதில் என்ன தவறு? ஐரோப்பாவில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும், ஆண்களுக்கு அல்லது சராசரி பெண்களுக்கு உரிய வேலைகளை செய்வது சாதாரண விடயம்தானே? இதில் அதிர்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கக்கூடிய, ஆசிய நாடுகளில் வாழ்கின்ற வாசகர்களுக்கு நான் கூற விரும்பும் விளக்கம் இதுதான்:-
இங்கு மேற்கத்திய நாடுகளிலும், அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் பனிப்பொழிவு நிகழும் கார்த்திகை தொடங்கி மாசி மாதம் வரையிலான காலப்பகுதி மிகவும் ஆபத்தான கால கட்டமாகும். ஏனெனில் இக்காலப் பகுதியிலேயே குறிப்பிட்ட சகல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. பாதசாரிகள், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில், வாகனங்களில்(குறிப்பாக கார்களில் செல்வோர்) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும். ஏனெனில் வானிலிருந்து 'மணல்போல' (தேங்காய்ப் பூப்போல) நிலத்தில், வீதிகளில் விழும் பனிப்பொழிவானது, வீதிகளை, நடைபாதைகளை மூடியிருக்கும். இவைகள் அந்தந்த நாட்டு அரசு நிறுவனங்களாலும், பொதுமக்களின் பங்களிப்பின் மூலமும் உடனுக்குடன் வழித்துத், துடைத்துச் சுத்தம் 


செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பனிப்பொழிவு சில வேளைகளில் தொடர்ந்தாற்போல் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடருமானால் அதனைச் சுத்தம் செய்ய முடியாது போய்விடும். அதன்பின்னர் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். காரணம் இரண்டு மூன்று நாட்களாகக் கொட்டிய பனி மிகவும் உயரமாக வீதிகளை மூடியபடி கிடக்கும். உறைபனி நிலையிலிருந்து வெப்பம் சிறிது அதிகரிக்குமானால் அந்தப் பனிக்கட்டிப் படலம் முதலில் இறுகிப் பின்னர் உருகித் தண்ணீராக ஓட ஆரம்பிக்கும். இக்கால கட்டமே மேற்கத்திய நாடுகளில் வீதிப் போக்குவரத்தில் மிகவும் ஆபத்தான கால கட்டமாகும். காரணம் பனிக்கட்டிப் படலம் வீதிகள் முழுவதையும் (நடைபாதை உட்பட) பளிங்குக் கல்போல மூடியிருக்கும். இது மிகவும் வழுக்கும் தன்மையுள்ளதாக இருக்கும். இத்தகைய வீதிகளால் பயணம் செய்கின்ற பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் விபத்துக்கு உள்ளாகின்றனர். டென்மார்க்கில் மட்டும் ஒவ்வொரு வருடமும் பனிப் படலத்தில் வழுக்கி, விபத்துக்குள்ளாவதால் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர், ஆயிரக் கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.(இவர்களில் பலர் கை, கால் முறிவுக்கும் உள்ளாகின்றனர்) டென்மார்க்கில் மட்டும் ஒரு வருடத்தில், பனிப் பொழிவுக் காலத்தில் மட்டும் நாலாயிரம் கார்கள் விபத்துக்குள்ளாகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
(தொடரும்)  
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வெள்ளி, ஜனவரி 07, 2011

எந்தக் குழந்தையும் அத்தியாயம் - 9

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
வாசகப் பெருமக்களே! கர்ப்பப் பையிலிருக்கும் சிசுவிற்கு, வெளியே நடக்கும் சின்னச் சின்ன அதிர்வுகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும்(கிரகிக்கும்) தன்மை உண்டு. கருப்பையில் கருவைச் சுற்றி ஒம்னியன் என்னும் சவ்வு உள்ளது, மேற்படி ஒம்னியோடிக் திரவத்தில்தான் சிசுவானது நீந்திக்கொண்டிருக்கிறது. தாயின் அசைவுகளும், பேச்சுக்களும் இந்தத் திரவத்தின் ஊடாகத்தான் குழந்தையைச் சென்றடைகிறது. இந்நிலையில் ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்பு மேற்கூறப்பட்ட உண்மைச்  சம்பவத்திற் கூறியதுபோல் பல வருடங்களுக்குப் பிறகும் பாதிப்பை, பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

இதேபோல் கர்ப்பவதியான தாயானவள் ஏதாவதொரு கடுமையான நோயினால் பீடிக்கப் பட்டாலும் கடுமையாகப் பாதிக்கப் படுவது கருப்பையிலுள்ள குழந்தையே. இவ்வாறு கூறப்படுவதற்குக் காரணம் பெண்ணானவள் கர்ப்பமுற்றிருக்கும்போது, அவளது உடலானது கருவிலிருக்கும் குழந்தையை பேணி வளர்ப்பதற்காகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவளது உடலில் 'நோய் எதிர்ப்புச்' சக்தியானது, மிகவும் குறைவாக இருக்கும். இவ்வாறான நிலையில் அவள் நோய்களால் பீடிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். சிலவேளை நோய்களால் தாக்கப் படுமிடத்து 'மருந்து வகைகளைப்' பாவிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது, இம்மருந்துகளும் குழந்தைக்குத் தீங்காக அமைகிறது. இதனாலேயே கர்ப்பவதியானவள் நோய்கள் ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்வது அவசியமாகிறது.
ஒரு கர்ப்பிணிப் பெண் பின்வரும் நோய்களிலிருந்து தன்னைக்  காத்துக் கொள்ளல் அவசியமாகிறது:

  • சாதாரண காய்ச்சல் 
  • நெருப்புக் காய்ச்சல் 
  • சின்னமுத்து 
  • அம்மை 
  • கூகை கட்டு(Rubella)
  • பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்கள் 
  • கொனரியா(Gonorrhea) 
  • சிபிலிஸ்(Sifilis)
  • எயிட்ஸ் 
  • சிறுநீரகத் தொற்று
  • சொறி, சிரங்கு. 
இத்தகைய நோய்களால் தாயானவள் தாக்கப்படுமிடத்து, அவளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மிகவும் வீரியம் கூடியவையாக இருப்பதால் அவளுக்கு நிவாரணம் தருவதைவிடவும் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் குழந்தையானது அங்கவீனமுள்ள(Handicap) அல்லது மூளை வளர்ச்சி குன்றிய(Cerebral Parese) பிள்ளையாக பிறப்பதற்கு வாய்ப்புள்ளது.

நோய்களுக்கு அடுத்தபடியாக தாயானவள் கவனத்தில் கொள்ளவேண்டியது கர்ப்பத் தடை முறைகளில் ஏற்பட்ட ஒழுங்கீனங்களாகும்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

சனி, டிசம்பர் 11, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 8

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 


கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டியவை:


"ஒரு குழந்தையானது தனது அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தனது தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற அறிவியல் மேதைகளின் கருத்துக்கு ஆதாரமாக இந்த ஒரு சம்பவம், 'ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு' என்று எண்ணுகிறேன். கர்ப்பவதிகளான தாய்மார்களே நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் நாவல்கள், கேட்கும் கதைகள், பார்க்கும் நபர்கள் பற்றி மிகவும் அவதானமாக இருங்கள்.

இதேபோல் சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் மன்செஸ்டர் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தப் பாட்டிக்கு வயது 62, சில நாட்களாக இரவில் உறங்கவே முடிவதில்லை, கொஞ்சம் கண்ணயர்ந்து தூங்கத் தொடங்கும் நேரத்தில் அடிவயிற்றில் பாறாங்கல் போல ஏதோ ஒன்று அழுத்தும்.
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டும், திடீர், திடீரென்று எழுந்து உட்கார்ந்து விடுவார். சில நேரங்களில் ஏதேதோ பிதற்றுவார். சிறிது கால இடைவெளியின் பின்னர் அவருக்கு வலிப்பு நோயும் (Epilepsy) ஏற்பட ஆரம்பித்ததால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த குடும்பத்தவர்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
ஆரம்பத்தில் சாதாரண உளவியல் கேள்விகளைக் கேட்ட மருத்துவரால் பாட்டியின் பிரச்சனை என்னவென்று அறிய முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பாட்டியின் ஆழ் மனதிலிருக்கும் பிரச்சினையை ஆய்வு செய்ய விரும்பிய மன நல மருத்துவர், பாட்டியை ஹிப்னாடிசம்(Hipnotism) எனப்படும் 'அறிதுயில்' உறக்கத்திற்கு உட்படுத்தினார். இவ்வாறு அறிதுயிலில் இருந்த பாட்டி, தன்னை மறந்த நிலையில் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, மருத்துவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். படிப்படியாக பாட்டியின் கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்தன, ஆச்சரியப்படும் விதத்தில் பதில் சொல்லிகொண்டிருந்த பாட்டி தனது ஒரு வயது நினைவுக் காலம் வரை சென்று விட்ட போதிலும், மருத்துவரால் பிரச்சினைக்கான எந்தக் காரணத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
திடீரென்று அனைவரும் அதிசயிக்கத் தக்க விதத்தில் பாட்டி தனது அம்மாவின் 'வயிற்றுக்குள்' இருந்த காலத்திற்குச் சென்றுவிட்டார். இப்போது மருத்துவருக்கு பிரச்சினையின் 'வேர்' என்னவென்று தெரிய ஆரம்பித்தது. இதோ பாட்டி சொன்ன வார்த்தைகள்:-
  "நான் இப்போது எங்கம்மாவின் வயித்துக்குள் இருக்கிறேன், மிகவும் கதகதப்பாக, சுகமாக இருக்கு. வழு வழுவென்ற ஏதோ ஒரு மெத்தைமேல் படுத்திருக்கிறதுபோல் உணர்கிறேன், என்னால் கண்களைத் திறக்க முடியவில்லை, மிகவும் அமைதியாக இருக்கிறது. திடீரென்று பளாரென்று ஓர் அதிர்வு, அப்பாவும், அம்மாவும் பயங்கரமாகச் சத்தம்போட்டுச் சண்டை பிடிக்கிறார்கள். அச்சத்தம் என் காதில் இடிபோல கேட்கிறது. ஆ, ஆ, அப்பா அம்மாவை அடிக்கிறார், அம்மா கீழே விழுந்துவிட்டாள், உடம்பெல்லாம் குலுங்குதே" பேசிக் கொண்டேயிருந்த பாட்டி, குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார்.

வாசகப் பெருமக்களே! கர்ப்பப் பையிலிருக்கும் சிசுவிற்கு, வெளியே நடக்கும் சின்னச் சின்ன அதிர்வுகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும்(கிரகிக்கும்) தன்மை உண்டு. கருப்பையில் கருவைச் சுற்றி ஒம்னியன் என்னும் சவ்வு உள்ளது, மேற்படி ஒம்னியோடிக் திரவத்தில்தான் சிசுவானது நீந்திக்கொண்டிருக்கிறது. தாயின் அசைவுகளும், பேச்சுக்களும் இந்தத் திரவத்தின் ஊடாகத்தான் குழந்தையைச் சென்றடைகிறது. இந்நிலையில் ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்பு மேற்கூறப்பட்ட உண்மைச்  சம்பவத்திற் கூறியதுபோல் பல வருடங்களுக்குப் பிறகும் பாதிப்பை, பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

சனி, டிசம்பர் 04, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்

கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய் தந்தை கவனத்திற் கொள்ளவேண்டிய விடயங்கள்:

இதேபோல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அந்தத் தம்பதிகள் சமூகத்தில் மிகவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்கள், கணவன் வழக்கறிஞராகவும், மனைவி ஒரு சிறந்த ஆசிரியையாகவும் பதவி வகித்து வந்தனர். அவர்கள் வாழ்க்கையும் இன்ப மயமாகவே கழிந்தது. அவர்களுக்கு முதன்முதலாக பிள்ளைச் செல்வமாக ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்றோர் அவனுக்கு ஜோன் என்று பெயரிட்டனர். அவன் பெற்றோர்களைப் போல் கல்வியில் அதிக நாட்டம் செலுத்தவில்லை, மிகவும் குறும்புக்காரச் சிறுவனாக வளர்ந்தான். இங்கு 'குறும்பு' என்ற வார்த்தையை எம் இலங்கைத் தமிழில் 'குழப்படி' என்று எடுத்துக் கொள்ளவும். பாடசாலைக்குச் சென்றாலும், அல்லது சிறுவர்களுடன் விளையாடச் சென்றாலும் எங்கும் பிரச்சனைதான். 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக' அவனது குற்றச் செயல்கள்தான் அதிகரித்து வந்தனவே தவிர, அவன் திருந்தவுமில்லை, தனது செயல்களுக்காக வருந்தவுமில்லை.
இவ்வாறு இருக்கையில் அவனுக்கு 22 வயதாகும்போது, அவர்கள் வசித்த நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான வங்கியொன்றில் மிகவும் நூதனமான முறையில், மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்தது. அதாவது ஏனைய கொள்ளைச் சம்பவங்களைப் போல காவலாளி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்படவில்லை, ஆனால் ஆர்சனிக்(Arsenic) என்ற பெயருடைய ஒருவகை நச்சுத் திராவகத்தின் மூலம் கொல்லப் பட்டிருந்தார். அதேபோல் வங்கியின் பெட்டகங்களும் நூதனமான முறையில் இரசாயனத் தாக்கத்தின் மூலம் திறக்கப்பட்டிருந்தது. இக்கொலை, மற்றும் கொள்ளைச் சம்பவங்களைப் பற்றித் துப்பறிய வந்த காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகள் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல் திணறினர். இவ்வாறு பல மாதங்கள் உருண்டோடியபின்னர், இறுதியாக ஒரு காவல் அதிகாரி தற்செயலாக 23 வருடங்கள் பழமையான ஒரு துப்பறியும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தார். அந்நாவலில் வரும் ஒரு சம்பவம் அப்படியே சொல்லி வைத்தாற்போல், மேற்படி கொலை, கொள்ளைச் சம்பவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
அவரது அதிர்ச்சிக்குக் காரணம் மேற்படி கதையிலும் கொலை, மற்றும் கொள்ளைக்கு இரசாயனப் பொருட்கள் உண்மைச் சம்பவத்தில் வருவதுபோலவே உபயோகிக்கப் பட்டிருந்தது. ஒரு சில நாட்களில் குற்றத்திற்குக் காரணமான 'ஜோன்' கைது செய்யப் பட்டான். அவனிடம் காவல்துறையினர் கேட்ட கேள்வி 'ஜோன்' மேற்படி துப்பறியும் நாவலை வாசித்துத்தான் இவ்வாறு இரசாயனங்களின் மூலம் கொலை, கொள்ளையில் ஈடுபடும் அறிவைப் பெற்றானா? எனக் கேட்டனர். "எனக்கு நாவல்கள் படிக்கும் பழக்கமே கிடையாது" என்று ஜோன் பதிலளித்தான். இறுதியில் ஜோனின் பெற்றோர்கள் விசாரிக்கப் பட்டனர். இவர்களில் ஜோனின் தாய் கூறிய வாக்குமூலத்தைக் கேட்ட காவல்துறையினர் வியப்பு மாத்திரமின்றி அதிர்ச்சியும் அடைந்தனர்.
அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம் இதுதான்: ஜோனின் தாயார் கர்ப்பமாக இருந்தபோது(ஜோன் கர்ப்பத்தில் இருந்தபோது) மேற்படி துப்பறியும் நாவலை, அவள் படித்திருக்கிறாள் அது கருவிலிருக்கும் சிசுவுக்கு தெரியவந்திருக்கிறது என்பதுதான் உலக அதிசயங்களில் ஒன்று. ஆனால் அந்த நாவலின் முடிவில் கதையின் நாயகன் திருந்தி நல்லவனாக வருகின்ற கட்டத்தைத் தாயானவள் படிக்கத் தவறி விட்டாள், அதற்கிடையில் ஜோன் பிறந்து விட்டான். தாய் படித்த துப்பறியும் நாவலின் சம்பவம் கருவிலிருந்த சிசுவின் அறிவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஒரு குழந்தையானது தனது அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தனது தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற அறிவியல் மேதைகளின் கருத்துக்கு ஆதாரமாக இந்த ஒரு சம்பவம், 'ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு' என்று எண்ணுகிறேன். கர்ப்பவதிகளான தாய்மார்களே நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், படிக்கும் நாவல்கள், கேட்கும் கதைகள், பார்க்கும் நபர்கள் பற்றி மிகவும் அவதானமாக இருங்கள்.
(தொடரும்)  
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

சனி, நவம்பர் 27, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 6

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டியவை:
 10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அபிமன்யுவும் சுபத்திராவும் 
இதை விளக்க இரண்டு கதைகளை உங்களுக்குக் கூற விரும்புகிறேன் முதலாவது எமது இலக்கியங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு சம்பவம், ஆனால் மிகவும் முக்கியமான சம்பவம், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கு மனைவியாகிய சுபத்திராவுக்கு, அவள் கர்ப்பிணியாக இருந்த காலப் பகுதியில், ஒரு முனிவர் நீதி இலக்கியங்களில் இருந்து எடுகோள்கள் எடுத்துக் கதை சொல்லிக்கொண்டிருந்தார். கதை கேட்டுக்கொண்டிருந்த தாயானவள், ஒரு இருக்கையோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள், இவ்வாறு சாய்ந்து இருந்தவள் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப் போய்விடுகிறாள், இதைக் கவனியாத முனிவர் தொடர்ந்து கதையைக் கூறிக் கொண்டிருந்தார், ஆனால் முனிவரின் கதையை தொடர்ந்து செவிமடுப்பதற்கு ஆதாரமாக "ம், ம், ம்" என்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் தாயானவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முனிவர் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார், அதாவது "ம்,ம்,ம்" என்று கதை கேட்டுக்கொண்டிருந்தது சுபத்திரா அல்ல, அவளது வயிற்றிலிருக்கும்(கர்ப்பப் பையிலிருக்கும்) குழந்தை என்பதை. அவ்வாறு கருவிலிருக்கும்போதே கதைகேட்ட குழந்தைதான் பின்நாளில் 'வீர அபிமன்யு' என்று புகழ்பெற்றான் என்கிறது மகாபாரதம். மகாபாரதம் உண்மைக் கதையா? இவ்வாறான சம்பவங்கள் உண்மையானவையா? என்பதல்ல இங்கு விடயம், நவீன மருத்துவ உலகினர் கூறுகின்ற "குழந்தை தனது மூன்றிலொரு பங்கு அறிவைத் தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற கருத்துடன், நான் மேலே கூறிய கதை ஒத்துப் போகிறதல்லவா?

அர்ச்சுனனும் சுபத்திராவும் 
 'தாயின் கருவிலிருக்கும் சிசுவானது புறச் சூழலிலுள்ள விடயங்களையும் உணரும் தன்மையுள்ளது' என்ற உண்மையை, எமது முன்னோர்கள் இத்தகைய கதைகளின்மூலம்  
மறைமுகமாக எமக்கு உணர்த்தியுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவே மேற்படி கதையை உங்களுக்குக் கூறுகிறேன். இக்கதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாசித்ததாகும். இதில் நான் ஞாபக மறதி காரணமாக பெயர்களை தவற விட்டிருந்தால், அல்லது மாற்றிக் கூறியிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். மேற்படி சம்பவத்தை வாசகர்களின் முன் சமர்ப்பிப்பதே எனது நோக்கமாக இருந்தது.
இதேபோல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 5

இக்கட்டுரை கடந்த 22.10.2010 அன்று அந்திமாலையில் வெளியாகியது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரமாகிறது.
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:


8. தாயானவள் தினமும் தன் கண்ணால் யாரைப் பார்க்கிறாளோ, யாருடன் அதிகநேரம் செலவிட நேர்கிறதோ, அல்லது பழக நேரிடுகிறதோ அந்த நபரின் நடை, உடை, பாவனை, நிறம், ஆற்றல், போன்ற அம்சங்களைக் கொண்ட குழந்தை பிறக்கிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை, ஆயினும் பல சமூகங்களிலும், உளவியல் சித்தாந்தங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். உதாரணமாக எமது தமிழ் சமூகத்தில் ஒரு குழந்தையைப் பார்த்து "இவன் பேரனைப் போல உள்ளான்", "இவன்
See full size imageமாமனைப் போல இருக்கிறான்", "இவள் உரித்து வைத்து பேத்தியாரைப் போல" என்றும் கூறப்படுவதற்குக் காரணம் என்ன? அந்தத் தாய் கர்ப்பவதியாக இருக்கும்போது, தினமும் யாரைப் பார்த்தாளோ, அந்நபரின் உருவம், விபரிக்க முடியாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத ஒரு சில அம்சங்கள் காரணமாக, குழந்தையின் உருவத்திலும், குணாதிசயங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தாயானவள் கர்ப்பக் காலம் முழுவதும், நல்ல மனிதர்களின் சகவாசம், இன்சொல், நற்செயல், நல்ல கொள்கை உடைய மனிதர்களைத் தினமும் பார்க்க, பழக, உரையாட நேர்ந்தால் அவர்களது குணத்தை ஒத்த குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத உண்மையாகும்.

Indian_child_29. இதேபோல் இக்காலப் பகுதியில் தாயானவள் தான் பார்க்கின்ற திரைப்படங்கள், வாசிக்கின்ற புத்தகங்கள், கேட்கின்ற கதைகள் பற்றியும் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இத்தகைய காரணிகள் கூட குழந்தையின் அறிவில், எதிர்கால செயற்பாட்டில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் நல்ல இசையைக் கேட்கும் வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையானது இசையில் நாட்டமுள்ள, திறமையுள்ள குழந்தையாக இருக்கிறது என்கிற விடயம் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

(அடுத்த வாரமும் தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 4

கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:
7. கர்ப்பவதியாக இருக்கும் தாய்க்கு, போதிய சத்துள்ள உணவுகள் அவசியம் என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம், எந்த அளவுக்கு சத்துள்ள உணவுகள் அத்தியாவசியமானதோ, அதேயளவு கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியமாகும். ஒரு சாதாரண மனிதன் உறங்கும்போது, அவனது மூளையில் உள்ள பல கலங்கள்(செல்கள்) புதுப்பிக்கப் படுவதோடு, உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள கலங்கள் பழுது பார்க்கப் படுவதாகவும், இதானால் சராசரியாக உழைக்கின்ற ஒரு மனிதனுக்கு 8 மணித்தியாலங்கள் உறக்கம் அவசியம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். தனது கருவில் ஒரு குழந்தையைச் சுமக்கும் தாயின் விடயத்தில் இது 8 தொடக்கம் 10 மணித்தியாலங்களாக அமைதல் நலம் என்பது மருத்துவ உலகினரின் கணிப்பாகும். நம் ஈழத்தமிழரிடையே ஒரு மரபுவழி நம்பிக்கை நிலவுகிறது, அதாவது "கர்ப்பவதியான தாய் அதிகம் தூங்கினால், கருவிலுள்ள குழந்தையின் தலை பெருத்துவிடும்" இது பிரசவத்தின் போது மிகவும் சிக்கலை
ஏற்படுத்தும் என்பதே அந்த நம்பிக்கையாகும், ஆனால் இது மருத்துவ உலகினரால் உறுதிசெய்யப்படாத, 'தவறான' நம்பிக்கையாகும். ஆனால், எமது மக்களால் அடிக்கடி உபயோகிக்கப்படும் வாசகமாகிய "கர்ப்பிணிப் பெண்ணைத் திடீரென்று (தூக்கத்திலிருந்து) எழுப்பக் கூடாது, அவளது கர்ப்பப் பையில் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும், பிரம்மனின் படைப்புத் தொழில் இதனால் பாதிப்படைகிறது" என்ற வாசகம் மருத்துவ உலகினரின் கருத்தோடு ஒத்துப் போகிறது. அதாவது 'பிரமன்' 'படைப்புத் தொழில்' என்ற விடயங்களில் நம்பிக்கையில்லாத விஞ்ஞான உலகம் கூட 'தூங்குகிற கர்ப்பிணியைத்' தொந்தரவு செய்தல் ஆகாது என்ற விடயத்தில் சாதாரண மக்களின் நம்பிக்கையோடு உடன்படுகிறது.

-அடுத்த வாரமும் தொடரும்- 

வெள்ளி, அக்டோபர் 08, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 3

கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்:








ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
4.
தாயின் சிந்தனைகள் அனைத்துமே குழந்தையின் உடல், உள வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதால் தாயானவள் தனது சிந்தனைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், இக்காலப்பகுதியில் தாயானவள் அழுகை, ஏமாற்றம், விரக்தி, கோபம், அதிர்ச்சி, கவலை, வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகளுக்கு உட்படாமல் தன்னைக் காத்துக் கொள்ளல் வேண்டும். இதற்குக் குழந்தையின் தந்தையும், சுற்றத்தாரும் மிகுந்த உறுதுணையாக இருத்தல் சமுதாயக் கடமையாகும். உடல் நலக்குறைபாடுகள் உள்ள குழந்தை பிறப்பெடுப்பதற்கும், வாழ்நாள் முழுவதும் உடல், உள, ஊனத்தோடு வாழும் குழந்தைகள் பிறப்பதற்கும் 75% வரை பிள்ளையின் தந்தையும், சுற்றத்தாரும் காரணமாகிறார்கள். "ஒரு கர்ப்பிணிப்பெண் இச்சமுதாயத்தால் எவ்வாறு நடத்தப்பட்டாள்(பராமரிக்கப் பட்டாள்) என்பதைப் பொறுத்தே, அச்சமுதாயத்தில் அறிவான, பண்பான, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன" என்ற சமுதாயவியல் வல்லுனர்களின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

5. இக்காலப் பகுதியில் தாயானவள் முடிந்தளவு, சமச்சீரான சத்துணவுகளை உண்ணல் வேண்டும். உணவு உண்ணும் விடயத்தில் தனது விருப்பு, வெறுப்புகளை இந்தப் பத்துமாத காலத்திற்காவது தியாகம் செய்தல் வேண்டும். விரிவாகக் கூறின் பெண்ணானவள் சிறுவயதிலிருந்தே சில உணவுப் பதார்த்தங்களைத் தனக்குப் பிடித்ததென்றும், பிடிக்காததென்றும் வகைப்படுத்தியும், பிடித்ததை மட்டுமே உண்பவளாகவும், பிடிக்காததை முற்றுமுழுதாகத் தவிர்ப்பவளாகவும் இருத்தல் கூடும். இத்தகைய செய்கையினால் குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய சில அத்தியாவசியமான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் தாயானவள் பிறக்கப் போகும் தனது குழந்தையின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு குழந்தைக்கு நன்மை பயக்கக் கூடிய உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்ணல் அவசியம்.

6. தாயானவள் ஒருபொழுதேனும் பட்டினியாக இருத்தல் தவிர்க்கப் படவேண்டும். கர்ப்பிணியான ஒரு பெண் பட்டினி கிடக்க நேரிட்டால், அதற்கு அவளது கணவனும், அவள் சார்ந்திருக்கும் குடும்பமுமே முழுப் பொறுப்பாகின்றனர். ஒரு கர்ப்பிணிப் பெண் பட்டினி கிடக்கும் சூழல்களிளெல்லாம், அவளது கருவிலிருக்கும் குழந்தையின் எதிர்காலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி அழிக்கப்படுகிறது. அதன்பின் அவள் பெற்றெடுக்கும் குழந்தையானது, சமுதாயத்திற்கு ஒரு பாரமாக மட்டுமே விளங்கும். அந்தக் குழந்தை ஒருபோதும் நாட்டிற்கோ, வீட்டிற்கோ பயன்தரப் போவதில்லை. இதனாலேயே சமூகத் தொண்டு நிறுவனங்கள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கு முகமாக, அவர்களுக்குச் சத்துணவுகளை வழங்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன.






(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளி, அக்டோபர் 01, 2010

'எந்தக் குழந்தையும்' - அத்தியாயம் 2


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
குழந்தை வளர்ப்பைப் பற்றிக் கவிஞர்.புலமைப்பித்தன் ஒரு பாடலிலேயே சுருங்கக் கூறி விளங்கவைத்த சிறப்பைக் கடந்தவாரம் பார்த்தோம். இவ்வாரத்திலிருந்து, குழந்தை வளர்ப்பைப் பற்றி நிபுணர்களும், உளவியல் ஆய்வாளர்களும் கூறும் கருத்துக்களையும் சிறிது கவனிப்போம்.

முதலில் ஒரு நல்ல குழந்தை இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்னால் உள்ள, காலப்பகுதியாகிய, தாயின் கருவறையில் இருக்கும் காலப்பகுதியையும், அந்தப் பத்து மாதத்திற்குட்பட்ட காலத்தில் அக்குழந்தையின், தாயும், தந்தையும் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைப் பற்றியும் பாப்போம்.

குழந்தை வளர்ப்பைப் பற்றி பல ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சிமுடிவுகளைப் பற்றிய கட்டுரைகளையும், பத்திரிகைகள் வெளியிடத்தொடங்கி சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. குழந்தைவளர்ப்புக் கலை பற்றிப் பாலர் பள்ளி தொடங்கிப் பல்கலைக் கழகம் வரை விவாதத் தலைப்புக்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இருப்பினும் நம்மில் பலருக்குக் குழந்தையானது தன் தாயின் கருவில் இருக்கும்போதே, அதன் குழந்தைப் பருவம் தொடங்கிவிட்டது என்பது தெரிவதில்லை. தாயின் கருவில் இருக்கும் சிசுவை அது ஒரு சதையாலான சடப் பொருளாக எண்ணும் நிலை இன்றுவரை தொடர்கிறது.
ஆனால் விஞ்ஞானிகள் சொல்வதெல்லாம், பிறந்த குழந்தைக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதைவிடப் பலமடங்கு முக்கியத்துவத்தை அது தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கொடுங்கள் என்பதுதான்.

குழந்தை கருவாக இருக்கும்போது அதன் பெற்றோர் அதிலும் முக்கியமாகத் தாயானவள் கவனிக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.


கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை கடைப்பிடிக்க வேண்டியவை.

1. தான் கருவுற்ற விடயமானது இந்தப் பூமியின், மற்றும் இயற்கையின் வியப்பான செயற்திட்டங்களில் ஒன்று என எண்ணுதல் வேண்டும்.

2. இந்தப் பூமியில் மனித இனத்திற்கு தனது பங்களிப்பை இயற்கையும், பிரபஞ்ச சக்தியும் எதிர்பார்ப்பதாலேயே, இந்தக் கருவானது, தனது கருப்பையில் உருவாகியுள்ளது என்று பெருமித உணர்வு தாய்க்கு வரவேண்டும்.

3. கருவில் உருவாகியுள்ள சிசுவை ஒரு ஆரோக்கியமுள்ள, திறமைகளுள்ள, அறிவுமிக்க குழந்தையாகப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை தனக்குள்ளது என்பதை அவள் உணர வேண்டும்.


(அடுத்த வாரமும் தொடரும்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

சனி, செப்டம்பர் 25, 2010

'எந்தக் குழந்தையும்'










ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
"மனம் முழுக்க வேதனைகளும், சஞ்சலங்களும் சூழ்ந்திருக்கும் தருணங்களில் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி, நம் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தோமேயானால், எவ்வளவு மகிழ்ச்சி, எவ்வளவு புத்துணர்ச்சி பிறக்கிறது! குழந்தைப் பருவத்தில் நாம் வாழ்ந்த இனிய நாட்கள் எம்மைவிட்டு எங்கே போயின? அப்பழுக்கற்ற, மாசு மருவற்ற நம் குழந்தைப் பருவம் காலப்போக்கில் சிதைந்து, பலரின் ஆளுகைக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டு கவலை இல்லாத, கபடமில்லாத எம் குழந்தைப் பருவ வாழ்வு எம்மிடமிருந்து எம்மைச் சுற்றியிருப்பவர்களாலேயே பறிக்கப்பட்டுவிடுகிறது"


அன்பார்ந்த வாசக உள்ளங்களே! நான் இந்தத் தொடரை எழுதப் புகுந்தமைக்குக் காரணங்கள் உள்ளன. நாம் அந்திமாலையின் உருவாக்கம் சம்பந்தமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடியபோது நான் அவர்களிடம் முன்வைத்த கேள்வி இதுதான். அதாவது "அந்திமாலையின் பக்கங்களை எப்படிப்பட்ட கட்டுரைகள் நிரப்பியிருக்க வேண்டும்"? என்பதுதான். இதில் பலரும் பல ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். இவர்களில் அந்திமாலையின் வாசகரும், எமது உறவினருமாகிய, டென்மார்க், ஸ்கெயான் (Skjern) நகரத்தில் வாழும் திரு.சி.சக்திதாசன் அவர்கள் எம்மிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சகல அம்சங்களும் அந்திமாலையில் இடம்பெறவேண்டும், ஆனால் 'குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவூட்டல் கட்டுரைகள் இடம்பெறுதல் அவசியம்' என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கும், ஏனைய வாசகர்கள் சிலரது கருத்துக்கும் மதிப்பளித்து, புலம்பெயர் சமுதாய வாழ்வில் பாரியதொரு சவாலாக விளங்கும் இந்தக் குழந்தை வளர்ப்புப் பற்றியும் ஆராய முற்படுகிறேன்.

மனிதவாழ்க்கையின் பல கட்டங்களில் 'குழந்தைப்பருவமே' மிக முக்கியமானது என்பது மானுடவியல் ஆய்வாளர்கள் தொடங்கி சாதாரண மக்கள்வரை உள்ள அடிப்படைக் கருத்தியலாகும். சரி, குழந்தைப்பருவம் ஏன் முக்கியமானது? இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு முன்னர், நமது நவீன காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவருகின்ற கவிஞர்களிலேயே, குழந்தைப்பருவத்தைப் பற்றியும், அதன் அதி முக்கியத்துவத்தைப் பற்றியும் நூற்றுக்கணக்கில் பாடல்கள் எழுதிய, இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து வருகின்ற, நம்மில் பலரால் மறக்கப் பட்டுவிட்ட ஒரு கவிஞனை  உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர்தான் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் 'புலமைப்பித்தன்'. அவர் எழுதிய பாடல்களிலேயே, ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடமாகவும், வேதமாகவும் அமையவேண்டிய பாடலொன்றைப் பற்றிப் பார்ப்போம். அந்தப்பாடலை வாழ்வில் கேட்டிருந்தும், மறந்தவர்களுக்காகவும், பாடலை ஒருதடவை கூடக் கேட்கும் பாக்கியத்தை இழந்தவர்களுக்காகவும் அந்தப் பாடல் வரிகளை அப்படியே எழுத்தில் தருகிறேன். அப்பாடலை எழுதிய ஒப்பற்ற கவிஞனைக் கௌரவிக்கும் ஒரு முயற்சியாக அந்தப் பாடலிலுள்ள இரண்டு வார்த்தைகளையே எனது கட்டுரைத் தொடருக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளேன். இதோ உங்களுக்காக அந்தப் பாடல் வரிகள்:

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் 
தொட்டிலில் கட்டி வைத்தேன்-அதில்
பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைதேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட-இன்னும்
யாராரோ வந்து பாராட்ட                       (இந்தப் பச்சைக்...)

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே-பின்
நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே 
அன்னை வளர்ப்பதிலே                                               (நான் ஆராரோ...)

தூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர் 
போற்றும் புகழுரைகள் -நோய் 
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் 
கூறும் அறிவுரைகள்                          (நான் ஆராரோ...)

ஆறு கரையில் அடங்கி நடந்திடில் 
காடு வளம் பெறலாம்                                                  (ஆறு கரையில்...)
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில் 
நாடும் நலம் பெறலாம்                         
நாடும் நலம் பெறலாம்                        (நான் ஆராரோ...)

பாதை தவறிய கால்கள் விரும்பிய 
ஊர்சென்று சேர்வதில்லை                                          (பாதை தவறிய)
நல்ல பண்புதவறிய பிள்ளையைப் பெற்றவள் 
பேர்சொல்லி வாழ்வதில்லை
பேர்சொல்லி வாழ்வதில்லை              (இந்தப் பச்சைக்கிளிகொரு...)

பிள்ளை வளர்ப்பைப் பற்றித் தற்காலப் பெற்றோர்கள் நீதி நூல்கள் எதனையும் படிக்க வேண்டியதில்லை, எந்த உளவியல் கையேடுகளையும் புரட்ட வேண்டியதில்லை. இதோ மேலேயுள்ள பாடல் வரிகளை மட்டும் மனதில் வரிக்கு வரி, இடைவிடாமல் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது. அந்த அளவுக்கு மிகவும் அழகிய, எளிமையான தமிழில் பாடல் என்ற பெயரில் ஒரு மாபெரும் தத்துவத்தையே நமக்குத் தந்திருக்கிறார் அந்த ஈடு இணையற்ற கவிஞர்.    
(அடுத்த வாரமும் தொடரும்)