செவ்வாய், டிசம்பர் 25, 2018

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


தேவகுமாரன் பிறப்புக் கவிதை



புவியை மீட்க வந்த பாலன்


சீதளக் காற்று வீசிய - ஓர் புது இரவினிலே 
சீர் வந்தது உலகுக்குப் புதுச் சீர் வந்தது - அது 
மாதிளங்கன்னி மரியாள் வயிற்றுப் பொன் முத்து 
மனுக்குலம் மீட்க வந்த இறையின் சொத்து.

கோடி வெள்ளி சேர்ந்தவொளி சிந்திச் சிரித்தது - புவி மாந்தர் இனி மீள்வரென சிறிய விழி மலர்ந்தது.
நாடியிறை நமக்களித்த நற்செய்தி வாய்திறந்து 
தாயணைப்பில் செவி குளிர இருள் விடியத் தானழுதது.
அழுத முகம் சிரிக்கையிலே புனிதமெங்கும் தெறித்தது 
பிறந்த பாலன் யேசுவை உலகமின்றும் போற்றுது
சிலுவையிலே துயர் சுமந்து மரித்த பின்னும் உயிர்த்தெழுந்து 

இறையரசை நிறுவவந்த புனிதபாலன் வாழ்கவே. 
   

-ஆக்கம்-
ஈழக்கவிஞன் 
இரா.கெளரிநாதன்

செவ்வாய், நவம்பர் 06, 2018

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மிக்க அன்புடன்
-நிர்வாகி-
அந்திமாலை இணையம்

சனி, அக்டோபர் 27, 2018

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2018)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி(04.11.2018) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  

அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 07.10.2018 அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது
அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம் 
டென்மார்க் 

புதன், அக்டோபர் 17, 2018

மரண அறிவித்தல்

தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
திரு. ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' )
தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து 'Leeuwarden' நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' ) அவர்கள் நேற்றைய தினம் (16.10.2018) நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம்(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்தம்பி ( 'பொன்னுத்துரை' ), நாகம்மா (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதா தேவியின்(நெதர்லாந்து) அன்புக் கணவரும், காலம் சென்ற மகேந்திரன், வரலட்சுமி (மண்டைதீவு), குணபாலசிங்கம் 
( 'குணம்', நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனலோஜினி ( 'மீனா', ஃபிரான்ஸ்) பிரதாப் ( 'பிரபு', ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், பிரபாகரன் ('பிரபா' ஃபிரான்ஸ்) லொறின் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார் ( 'உதயன்', ஜெர்மனி), கெளரிமாலா ('கெளரி', லண்டன், ஐக்கிய இராச்சியம்), வசந்தமலர் ( ஆனந்தி ) - 'அபிவிருத்தி உத்தியோகத்தர்', நல்லூர் பிரதேச செயலகம்; இலங்கை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற வின்சன், புவனேஸ்வரி (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லலீந்திரா (ஜெர்மனி), சோமசுந்தரம் / சுந்தர் (லண்டன், ஐக்கிய இராச்சியம்), சத்தியசீலன் / சீலன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜித், லொனொக்ஸ்சிவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நெதர்லாந்தில் எதிர்வரும் 23.10.2018  செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 16:30 மணி வரை Haskerpoarte 2 , 8465 HP Oudehaske, Holland என்ற முகவரியில் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள், முகநூல் நட்புகள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

பூதவுடல் பார்வைக்கு பின் வரும் முகவரியில்:
Noorderhof Uitvaartcentrum 
Sem Dresden Straat 6
8915 Bz Leeuwarden 
Holland

தகவல்: பி.மீனலோஜினி (மகள்)

தொடர்புகளுக்கு: 
சீதாதேவி (மனைவி) - 0031 - 615 262 070
மீனலோஜினி (மகள்) - 0031 - 617 635 455

பிரதாப் (மகன்) - 0049 - 1749 0591 99
பிரபாகரன் (மருமகன்) - 0033 - 651 723 375
வரலட்சுமி (சகோதரி) - 0094 - 779 737 381           

வியாழன், செப்டம்பர் 20, 2018

எட்டாவது ஆண்டில் உங்கள் அந்திமாலை

இணைய உலகில் கால் பதித்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது  ஆண்டை நோக்கிப் 
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2018) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 
"ஒன்றுபட்டு உயர்வோம்"
உளமார்ந்த அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம்
www.anthimaalai.dk 
டென்மார்க். 

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

80 ஆவது அகவை வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!
இலங்கை, திருகோணமலை மாவட்டம், 'அன்பு வழிபுரத்தில்' வசிக்கும் திருமதி இராமலிங்கம் சுந்தரா தேவி அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ( 02.09.2018) சென்னையில் வசிக்கும் அவரது மூத்த மகன் கவிஞர். இரா.கெளரிநாதன் அவர்கள் புனைந்த வாழ்த்து மடல் :
 

அன்புள்ள அம்மாவுக்கு
அகவை எண்பதைக் காணும் 
அன்புள்ள அம்மாவிற்கு! 
முட்டும் விழி நீரை 
மையாய் விட்டு 
உங்கள் பாதம் தொட்டெழுதும் மடலிது.
அகவை எண்பதை - நீங்கள் 
காணும் நன்னாளில்
உங்கள் முதற் பிள்ளை; 
புலர் காலைப் பொழுதெழுந்து 
உங்கள் கால்கள் தொட்டு வணங்கிக்
கட்டியணைத்து முத்தமிட்டு 
"என்றும் என் அன்பிற்கினிய 
அம்மாவுக்கு எண்பதாவது
பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
என்றே நான் சொல்ல 
அருகே இல்லையென்ற 
உங்கள் மன வலியை
என் இதயம் உணரும். 
அந்த உணர்வினில்
மனம் கனத்து 
கண்கள் குளமாகி
விழி நீர் உருண்டு 
கன்னங்கள் தாண்டி - நிலம் 
பட்டுத் தெறிக்கும் - என் 
நெஞ்சக் கூட்டின் வெம்மை 
பெரு மூச்சாய்ப் பிறக்கும்.
சட்டென்ற கோபம் 
உங்கள் ஒரு குணம்
அதையும் பட்டென்று
மறப்பீர்கள் மறுகணம்.
நேர்மை, உண்மை, அன்பு, அறம்
இந்த நான்கும் தான்
நான் வணங்கும் என் 
தெய்வத்தாய் சுந்தரம்.
இருப்பதைக் கொண்டு 
சிறப்புடன் வாழக் கற்பித்த 
வாழ்வியற் புத்தகம் நீங்கள்.
மறந்திட முடியா என் 'தாய்'
கவிதையின் மையக் கரு நீங்கள்.
அறுபதுக்கு மேல் 
அகவை ஒவ்வொன்றும் 
ஆண்டவன் தரும் 'வெகுமதி' 
இருபதாவது தடவையும் 
ஆண்டவனிடம் வெகுமதி  
பெறும் எங்கள் அன்பின் 
சுந்தரி நீங்கள்.
உங்கள் பூட்டப் பிள்ளைகளின் 
நீராட்டு விழாவிலும் 
பூத்தூவி வாழ்த்த நீங்கள் 
இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் 
என்று இறைவனை வேண்டி 
வாழ்த்தும் : 
அன்புத் தலைமகன்: ராசா / கெளரிநாதன் 
மருமகள்: கலா 
பேரன்: பிரியன் 
பேர்த்தி: யாழினி 

சனி, மார்ச் 24, 2018

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் (24.03.2018 சனிக்கிழமை) 
நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 25.03.2018 )ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல்  சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த
11.03.2018 அன்று நிகழ்ந்தமையும்,
அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியாவில்) இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம் / நேரக்குறைப்பு) எதிர்வரும் 01.04.2018 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம் 

வியாழன், மார்ச் 08, 2018

ஓராண்டு நினைவு அஞ்சலி

அமரர்.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.
தோற்றம்: 16.02.1923
மறைவு: 08.03.2017


எங்கள் பேர்த்தியாருக்கு நீங்கள் "இஞ்சேரப்பா' (அதனை நாங்கள் 'விண்ட்ஸரப்பா' என்று கிண்டலடிப்பதும் உண்டு) 
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் 'ஐயா'
உங்கள் மருமக்களுக்கு நீங்கள் 'அம்மான்' / 'மாமா'
உங்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவாக நீங்கள் 'அப்பையா' ('அம்மையா' என்று அழைக்கும்படி இடையிடையே  வற்புறுத்தியபடி நீங்களும் இருந்தீர்கள்; இந்த விடயத்தில் சமரசம் செய்யாமல் நாங்களும் வளர்ந்தோம் அது தவறாக இருந்தும்) 
உங்கள் பெறாமக்களுக்கு நீங்கள் 'குஞ்சி ஐயா' / ஆசை ஐயா'  
அல்லைப்பிட்டியில் உங்களை அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு நீங்கள் 'பிரகாசம் அப்பா' , நண்பர்களுக்கு 'பிரகாசம்' ஒரு சில வயது வித்தியாசம் உள்ளவர்களுக்கு மட்டும் 'பிரகாசம் அண்ணன்'
இப்படியாக ஒரே மனிதனின் பல வித நாமகரணமும், உறவு சொல்லி அழைக்கும் 'உறவு முறையும்' கடந்த ஆண்டில் இதே நாளில் கால தூதனால் முடிவுரை எழுதி வைக்கப் பட எங்கள் அனைவரிடம் இருந்தும், இந்தப் பூமிப் பந்தில் இருந்தும் உங்கள் 94 ஆவது வயதில் விடை பெற்றீர்கள் அப்பையா!
அல்லைப்பிட்டியில் "100 வயதுக்கு மேல் வாழ்ந்த மனிதர்" என்ற பெருமையை எங்கள் அப்பையா பெற வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையைத் தவிர வெறெந்தப் பேராசையும் எங்களுக்கு இருக்கவில்லை. 
உங்கள் மரணத்தால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் 32 வருடங்களுக்கு முன்னால் உங்கள் கண் பார்வை பறி போனதால் வாழ்வு உங்களுக்கு சுமையாகிப் போனதை நினைத்தே எங்களுக்கு வலியும், வேதனையும். 94 வயது வரை ஒரு மனிதன் அமைதியாக, மனத்தால் கூட அடுத்தவருக்கு துரோகமோ, துன்பமோ செய்யாமல், தானுண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்தாலும் கீழைத்தேய நாடுகளில்(ஆசிய நாடுகளில்) சாதனைதான். ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்று நாங்கள் கவலைப் பட்டதே இல்லை. மாறாக எங்கள் நாட்டிற்குள், ஊருக்குள் மேடை நாடகங்களும், திரைப்படங்களும் நுழைவதற்கு முன்னால் பிரபலமாக இருந்த 'நாட்டுக் கூத்து' என்ற கலையில் எங்கள் அப்பையா சிறந்து விளங்கினார் என்பதும் அல்லைப்பிட்டியில்  பங்கேற்ற 'கூத்துகளில்' எல்லாம் 'சேனாபதி' (படைத் தளபதி) என்ற வேடத்திலேயே தோன்றினீர்கள் என்பது நாங்கள் பெருமைப்படும் விடயங்களில் ஒன்று. (போதிய 'ஞாபக சக்தி' + மொழியறிவு இல்லாதார்களிடம் அந்தப் பாத்திரத்தை 'அண்ணாவியார்' / நாட்டுக் கூத்து இயக்குனர் கொடுக்க மாட் டார் என்பதை நாங்கள் அறிவோம்) 
நீங்கள் பேரப் பிள்ளைகளாகிய எங்களுக்குப் பாடிக் காட்டிய நாட்டுக் கூத்துப் பாடல் வரிகளில்:
"சிங்காரன் தாரணி மார்பன் 
செகத்து(ஜெகத்து) மாநகர் துதிக்கும் மன்னவன் 
மங்கா முடி புனைந்து வாழ்பவன், மதிக்கும் ஆற்றலர் திகைக்க ஆழ்பவன்"..................என்று தொடங்கும் பாடலும் 
"மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? மிக வேகமாகவே மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? என்று தொடங்கும் பாடலும் உங்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்குமே மனப்பாடம் அப்பையா. உங்கள் பாடல்களை பதிவு செய்து வைத்தோம். 1990 ஆம் ஆண்டில் போரால் அழிந்து போனது. அதன் பின்னர் உங்கள் பாடல்களை காணொளி வடிவில் பதிவு செய்யும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கையில் எங்களை விட்டு, இவ்வுலக வாழ்வைத் துறந்தீர்கள். அந்த ஒரு ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நீங்கள் எங்களுக்கு விட்டு வைக்கவில்லை. எங்கள் மாமாவிடம் இளம் வயதில் இருந்த 'நடிப்புத் திறமையும்', என் தாயாரிடம், என்னிடம், என் தம்பியிடம் இருந்த, இருக்கின்ற 'பாடும் திறமையும்', மனனம் (மனப்பாடம்) செய்கின்ற திறமையும் உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த சொத்து என்று நம்புகிறவர்கள் நாங்கள். விண்ணுலகில், நிச்சயமாக சொர்க்கத்தில் இறைவன் திருவடி நிழலில் எங்கள் பேர்த்தியார்(அம்மம்மா) மற்றும் ஏனைய சொர்க்கத்திற்கு வந்த உறவினர்கள் சகிதம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வீர்கள் என்று இந்த உங்களது நினைவு நாளில் உளப்பூர்வமாக நம்புகிறோம் அப்பையா. நீங்கள் உங்கள் வாழ்நாளில் எங்களுக்குத் தந்த அத்தனைக்கும் நன்றியோடு இருக்கிறோம். உங்களுடைய இந்த நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செய்கின்றோம் அப்பையா! 
  
"இதயங்களில் ஏந்துவோர் இருக்கும் வரை மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் முடிவு அல்ல"
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி. 
மிக்க அன்புடனும் 
நினைவேந்தும் மனதுடனும் 
பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள். 

ஞாயிறு, ஜனவரி 14, 2018

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.


எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
மிக்க அன்புடன் ஆசிரியர் 
-அந்திமாலை- 

திங்கள், ஜனவரி 01, 2018

புத்தாண்டு வாழ்த்துகள்

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2018 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம் "
மிக்க அன்புடன் 
-ஆசிரியர் -அந்திமாலை