வெள்ளி, செப்டம்பர் 30, 2011

வாழ்வியல் குறள் - 12


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

சோம்பலின் ஆட்சி.

தீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி
நீறு பூத்த நெருப்பாக்குகிறது.
மூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.
சீதேவி ஆதரிப்பாள் முயற்சியாளனை.
தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.
மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.
முயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய
அயர்ச்சியாளரை ஒதுக்கி விடும்.
சோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.
அம்பலத்திலும் ஆட மாட்டான்.
புவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,
கவனயீனத்தினாதி காரணம் சோம்பலே.
ளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்
ஆளும் தகுதி உடையவன்.
சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
தாம்பூல வரவேற்பு உண்டு.
ம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
சோம்பல் அழித்தோன் மனது

வியாழன், செப்டம்பர் 29, 2011

கனவு காணும் வாழ்க்கை

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
2 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் பிரபலமான ஒரு பல்பொருள் வணிக வளாகத்திற்கு சென்று விட்டு, அதனோடு ஒட்டியிருக்கின்ற உணவகத்தில் நண்பரோடு காபி அருந்திக் கொண்டிருந்தேன். சுவாரஸ்யமான உரையாடலில் இருந்த போது, பக்கத்து இருக்கையில் இருந்து ஒருவர் "சார். S-Pass -ன்னா என்ன சார்?" என்று கேட்டார். 35-40 வயதிருக்கும். சோர்ந்து போயிருந்த முகம். சிங்கப்பூரைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணி புரிவோருக்கு 4 விதமான அடையாள அட்டைகள் இருக்கின்றன .


1. Work Permit (கட்டிடத் தொழிலாளர் ,உணவகத்தில் வேலை செய்பவர் போன்ற நாள் கூலி மற்றும் குறைந்த சம்பளம் உள்ளவர்

2. S-Pass (1000-2500 டாலர் அடிப்படை சம்பளமுள்ள நடுத்தர வேலை செய்வோருக்கு)
3. Emloyement Pass (2500 டாலருக்கு மேல் அடிப்படை சம்பளமுள்ள புரபஷ்னல் வேலை செய்வோருக்கு)

4. Permenant Resident (நீண்ட நாள் வேலை செய்வோர் தங்களை நிரந்தர வாசிகளாக மாற்றிக்கொள்ளலாம்)

இதையே நான் அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார் "சார். நான் இஞ்சினீயரிங் படித்துள்ளேன். சென்னையில் 8 ஆண்டுகள் Production துறையில் அனுபவம் உண்டு. 2 மாதங்களுக்கு முன் S-Pass-ல் சிங்கப்பூர் வந்தேன். இப்போது இந்த வளாகத்தில் உள்ள கழிவறைகளை(Toilets) சுத்தம் செய்து விட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்". நான் ஆடிப்போய்விட்டேன். அவருடைய S-Pass அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார். அதில் அவருடைய வேலை 'Mechine Technician' என்று போட்டிருந்தது .என்ன நடந்தது என கேட்டேன் .தான் அனுபவம் பெற்ற 'புரொடக்சன் வேலை' என்று தன்னை அழைத்து வந்ததாகவும், ஆனால் உடனடியாக அந்த வேலை காலியாக இல்லை, எனவே அதுவரை வேறு வேலைகள் கொடுப்பதாகவும் சொல்லி அவரை பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார். இப்படியே நாட்கள் கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டதாம். வணிக வளாகங்களில் ட்ராலிகளை சேகரிப்பது, கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்ய அவர் நிறுவனம் அனுப்பி வைப்பதாக கூறினார்.

பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது .மிகவும் சோர்ந்து காணப்பட்டார். ஊருக்கு திரும்பிப் போய்விடலாமா என நினைப்பதாக சொன்னார்.  இஞ்சினியரிங் வரை படித்த ஒருவர் எப்படி இவ்வளவு ஏமாந்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன் "சார். நீங்க இஞ்சினியரிங் படித்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?"..அவரோ "என்ன சார்..நான் படிக்காதவனா இருந்திருந்தா மகிழ்ச்சியோடு இந்த வேலைகளை செய்திருப்பேன் .இப்படி ஏமாற்றம் இருந்திருக்காது. இப்போது 8 வருடம் ப்ரொடக்சன் வேலை செய்து விட்டு பல கனவுகளோடு வந்து இங்கு இப்படி இருப்பது ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றார்.

"சரி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். "என்னால் முடிந்த வரை இதே வேலைகளை செய்ய வேண்டியது தான் .அதற்குள் எனக்கு சொல்லப்பட்ட வேலை தரல்லிண்ணா வேற வழியில்லை..ஊருக்கு போக வேண்டியது தான்" என்றார் .நான் அவரிடம் "நீங்கள் வருமுன்னர் நன்கு விசாரித்து வந்திருக்க வேண்டும் .சரி அதை விடுங்கள் .இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் .நீங்க சொன்ன மாதிரி அவர்கள் சொல்லப்பட்ட வேலை தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு சிறிது காலம் ஓட்டி விடுங்கள் .அல்லது ஊருக்குத் தான் போகப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் ,வெறுமனே சென்று விடாதீர்கள் .அந்த நிறுவனத்தின் இந்த மோசடியைப் பற்றி 'மனித வள அமைச்சுக்கு' ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டு போங்கள் .அரசாங்கம் கண்டிப்பாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் .அட்லீஸ்ட் இனிமேலாவது உங்களைப் போல பலரை அவர்கள் ஏமாற்றாமல் தடுத்த 'புண்ணியமாவது' உங்களுக்கு கிடைக்கும்" என்று சொன்னேன் .அவரும் ஆமோதித்து அப்படியே செய்வதாக சொன்னார்.

இந்த மனிதர் எத்தனை கனவுகளோடு இங்கே வந்திருப்பார் .விமானத்தில் பறந்து வரும் போது என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருப்பார்? 8 ஆண்டுகள் 'ப்ரொடக்சன்' அனுபவம் பெற்றிருந்தாலும் சிங்கப்பூர் போல அதி தொழில் நுட்பம் நிறைந்த இடத்தில், தனக்கு மேலும் நுட்பமான வேலை கிடைத்தால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டாரா? இப்போது அவருக்கு கிடைத்தது 'கழிவறைகளை' சுத்தம் செய்யும் வேலை .அது ஒன்றும் தரக்குறைவான ,'இழிவான' வேலையல்ல .ஆனால் அதை ஏற்றுக்கொண்டு எதிர்பார்த்து வந்திருந்தால் பிரச்சனையில்லை .இப்போது அவர் குடும்பத்தினரிடம் கூட உண்மையை சொல்லியிருப்பாரா? தெரியவில்லை.

ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மேல் கோபமாகவும் இருக்கிறது .இவ்வளவு படித்தவர் இப்படி கண்ணை மூடிக்கொண்டு வரலாமா? படிக்காத பாமர மக்கள் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி எதாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று எதையும் விசாரிக்காமல் இங்கு வந்து கஷ்டப்படுவது வாடிக்கை தான் .ஆனால் படித்தவர்களும் அப்படியே இருந்தால் என்ன செய்வது ?தான் பணிபுரியப்போகும் நிறுவனத்தைப் பற்றி இங்கு வரு முன்னரே விசாரித்து அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது .இவ்வளவு படித்த ஒருவருக்கு யார் மூலமாகவோ ,சிங்கையில் பணிபுரியும் ஒருவரிடம் அந்த நிறுவன விபரங்களை கொடுத்து ,அவை உண்மை தானா ,உண்மையிலேயே அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலை கொடுக்கும் நிலையிலுள்ள,அது சம்பந்தமான பணிகள் நடக்கும் நிறுவனம் தானா என்று விசாரித்து அறிந்து கொள்ளலாமே?இங்கிருக்கின்ற நண்பர்கள்,அல்லது நண்பர்களின் நண்பர்கள் யாராவது ஒருவர் குறைந்த பட்சம் இந்த உதவி கூடவா செய்யாமல் போய் விடுவார்கள்?

இங்கே ஒரு இந்திய தூதரகம் இருக்கிறது என்று தான் பெயர்.அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளத் தோழர்களின் பிரச்சனைகளில் எந்த அக்கரையும் காட்டியதாக தெரியவில்லை .Work Permit-ல் இங்கு வரும் இந்திய தொழிலாளர்களை விட அதே வேலை செய்யும் மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் .பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்கள் கூட தம் நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் அக்கரையோடு நடந்து கொள்வதாக கேள்விப்பட்டேன் .ஆனால் நம் நாட்டு தூதரகத்துக்கு ஒரே வேலை, பிறப்பு சான்றிதழ் 40 டாலர் ,திருமண சான்றிதழ் 40 டாலர் இப்படி வித விதமாக சான்றிதழ்களுக்கு பணம் வசூலிக்கும் ஒரே பணி .இது தூதரகமா இல்லை போஸ்ட் ஆபீசா தெரியவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டு என்னை அணுகினார் .உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிப்படை ஆங்கிலம் ,எளிய உரையாடல்கள் ,பணியிடத்தில் அணுகு முறைகள், சிங்கை நடைமுறைகள் போன்ற பயன் மிக்கவை பற்றி அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக ,அதற்கான பாடத்தை தமிழ்ப் படுத்தித்தர வேண்டும் என்று கேட்டார்.நானும் செய்து கொடுத்தேன் .இதில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் சீனர்கள் .நமது தொழிலாளர்கள் மீது இந்த சீனர்களுக்கு உள்ள அக்கரையாவது இங்குள்ள தூதரகத்துக்கு இருக்கிறதா ?சுதந்திர தினத்தன்று கொடியேற்றி இனிப்பு வழங்கி விட்டால் ஒரு வருட தேச சேவை முடிந்து விட்டது போலும்.

சரி. நாம் தொடங்கிய விடயத்துக்கு வருவோம். பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு மனநிலை இருக்கிறது .நேரடியாக நிறுவனங்களை அணுகியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமோ அல்லாமல் ,ஒரு தனி இடைத்தரகர் மூலம் இப்படி வேலைக்கு வருபவர்கள் சிங்கப்பூர் வந்து விட்டால் போதும் என்ற ஒரே கண்ணோட்டத்தோடு வேறு சிக்கல்களைப் பற்றி எண்ணுவது கூட கிடையாது. அப்படி எண்ணினால் இங்கு வருவது தடைபட்டு விடுமோ என்ற பயம். தனக்கு தெரிந்தவர்களிடம் கூட விவரங்கள் சொல்வதில்லை .யாராவது எதையாவது சொல்லி தாங்கள் போவதை தடுத்து மனம் மாற வைத்து விடுவார்களோ என்ற அச்சம், கண்ணை  மூடிக்கொண்டு இங்கு வந்து சேருகிறார்கள்.இதை படிக்காத 'பாமரர்கள்' விபரமின்றி செய்கிறார்கள் என்பதை பொறுத்துக்கொள்ளலாம் .ஆனால் ஓரளவு 'படித்தவர்களே' இப்படி நடந்து கொண்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

இனிமேலாவது, குறைந்த பட்சம் படித்தவர்கள் சிங்கை போன்ற நாடுகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வருமுன் ,இங்கிருக்கும் யார் மூலமாவது கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் ஓரளவு உண்மை தானா என்று சற்று விசாரித்து விட்டு வரவும் .உதவி செய்ய என்னைப் போன்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

புதன், செப்டம்பர் 28, 2011

ஆன்மிகம் - 2


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சக்திகளின் இரவுகள்

க்திகளின் இரவுகள் நவராத்திரி. முத்தியுடை முதல் மூன்றும் வீரஇரவுகள். ஆண்டி முதல் அரசனும் ஆதரிப்பது. ஆங்காரம் அழித்து அனுக்கிரகமாவது. ஆளும் வினை பொடிக்கும் சூலக்காரிமகிசாசுரமர்த்தனியின் மகாராத்திரி.மகாசக்தி காளியின் தைரிய இரவுகள்.
மகாதேவி துர்க்காவின் மூன்று இரவுகள்.
செல்வத்திருமகளின் நடு மூன்று இரவுகள்செயங்கள் சேர்க்கும் ஐசுவரிய இரவுகள்.செந்தாமரை நாயகிக்குச் சேவைகள் புரிந்துசெழிப்பை, அதிஷ்டத்தைத் தனதேவியிடம்செறிவான நவமணி நுகர்ச்சி தேடல்.செல்வம் குவியென திருமால் நாயகியிடம்சேர்த்தவை காத்து, வரங்கள் கேட்கும்
சொர்ண சொரூபி இலட்சுமியின் இரவுகள்.

டை மூன்றிரவுகள் வெண்கலை வாணியின்
கடாட்சம் குவித்து கலைகளை வேண்டுதல்.
கல்வி முதலாம் காணும் கலைகள்
நல்கும் கலைமகள், படைப்போன் நாயகி.
எல்லா வித்தைகளும் விஐயதசமியில்
வித்யாரம்பமாய் நவராத்திரி முடியும்.
வெண்மலர்த் தேவி, ஞான வாணியை

வேண்டுவோர் விருப்பு வெற்றியாய் முடியும்.
(2007 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களால் வாசிக்கப்பட்டது)

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

நாடுகாண் பயணம் - ஐவரி கோஸ்ட்/கோட் டி வோர்

நாட்டின் பெயர்:
ஐவரி கோஸ்ட் (கடந்த 1985 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டின் உத்தியோகபூர்வமான பெயர் Cote D'Ivoire/கோட் டி வோர் என்பதாகும் இது ஐவரி கோஸ்ட்(Ivory Coast) என்ற ஆங்கிலப் பெயரின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஆகும்.தமிழில் மேற்படி வார்த்தையை மொழி பெயர்க்கும்போது 'யானைத் தந்தக் கடற்கரை' எனும் பெயர் நமக்குக் கிடைக்கும்.
டென்மார்க்கில்(டேனிஷ் மொழியில்) இந்நாட்டை எல்பன்பின்குஸ்டன்(Elfenbenkysten) என அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை டென்மார்க் நாட்டு வாசகர்கள் நினைவில் கொள்க. 
இந்நாட்டின் பெயர் 26 வருடங்களுக்கு முன்பே பிரெஞ்சுப் பெயராக மாற்றப் பட்ட பின்னரும் BBC போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் தற்போதும் இந்நாட்டின் ஆங்கிலப் பெயராகிய 'ஐவரி கோஸ்ட்' என்பதையே உபயோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

வேறு பெயர்கள்:
கோட் டி வோர் குடியரசு (Republic of Cote d'Ivoire)

அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்கா


எல்லைகள்:
வடக்கு - மாலி, புர்கினா பாசோ
தெற்கு - கினிய வளைகுடா 
கிழக்கு - கானா 
மேற்கு - லைபீரியா, கினியா 


தலைநகரம்:
யமுசூக்ரோ (Yamoussoukro)

பெரிய மற்றும் வணிகத் தலைநகரம்:
அபிஜான்(Abidjan)

அலுவலக மொழி:
பிரெஞ்சு, மற்றும் 60 உள்ளூர் மொழிகள்.


சமயங்கள்:
இஸ்லாம் 38.6 %
கிறீஸ்தவம்(ரோமன் கத்தோலிக்கம்) 32.8 %
பழமைவாத சமயங்கள் 11.9 %
சமயம் சாராதோர் 16.7 %


ஆயுட்காலம்:
ஆண்கள் 55.7 வருடங்கள் 
பெண்கள் 57.8 வருடங்கள்


கல்வியறிவு:
48.7 % (பெண்களின் கல்வியறிவு வீதம் மிகவும் குறைவு ஆகும்)

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு 

ஜனாதிபதி:
அல்சானே உவட்டரோ (Alassane Ouattara) *இது 27.09.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பிரதமர்:
குலாமே சோரோ (Guillaume Soro)

பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
07.08.1960

பரப்பளவு:
322,460 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
20,617,068 (2009 மதிப்பீடு)

நாணயம்:
மேற்கு ஆபிரிக்க பிராங் (West African franc / CFA /XOF)

இணையத் தளக் குறியீடு:
.ci

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+225


விவசாய உற்பத்திகள்:
கோப்பி(காப்பி), கொக்கோ, வாழை, தென்னை, சோளம், அரிசி, மரவள்ளிக் கிழங்கு, வற்றாழைக் கிழங்கு, சீனி, பருத்தி, ரப்பர், மரங்கள்.

தொழிற்சாலைகள்:
உணவு பதனிடல், மதுபானங்கள் உற்பத்தி, மரத்தளபாடங்கள் தயாரித்தல், எண்ணெய் சுத்திகரித்தல், கனரக வாகனங்கள் பொருத்துதல், பேருந்துகள் பொருத்துதல், துணிவகை தயாரிப்பு, உரம் தயாரிப்பு, கட்டிடப் பொருட்கள் தயாரிப்பு, கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல்.

ஏற்றுமதிகள்:
கொக்கோ(உலகில் கொக்கோ ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது), கோப்பி(காப்பி), மரம், பெற்றோலியம், பருத்தி, வாழைப்பழம், அன்னாசிப் பழம், மர எண்ணெய்(பாமாயில்), மீன்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

 • உலகின் மிகப்பெரிய கொக்கோ ஏற்றுமதி நாடு. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நீங்கள் விரும்பி உண்கின்ற பிரபலமான சாக்லேட்டுகள் அனைத்தும் இந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கொக்கோவிலிருந்தே' தயாரிக்கப் படுகின்றன.
 • இந்நாட்டின் ஏற்றுமதியில் 40% கொக்கோ ஏற்றுமதியாகும்.
 • நாடு விவசாயம், ஏற்றுமதி எனப் பல வகைகளிலும் வருமானத்தைச் சம்பாதித்த போதிலும் நாட்டு மக்களில் 25% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
 • இந்நாடு கடந்த இருபது வருடங்களில் பல தடவைகள் உள்நாட்டு யுத்தத்தையும், இராணுவச் சதிப்புரட்சியையும் சந்தித்துள்ளது.
 • கடைசியாக இவ்வருடம் ஏப்பிரல் மாதத்தில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, உள்ளநாட்டு யுத்தம் போன்றவற்றால் மேலைத்தேய ஊடகங்களில் இடம் பிடித்தது.
 • கடைசியாக இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறந்தவர்கள், காணாமற் போனோர் பற்றி சரியான தகவல்கள் இல்லை.
 • இந்நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கு என சுமார் 9000 வரையிலான ஐ.நா.அமைதி காக்கும் படையினர் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டுள்ளனர்.
 • கடந்த காலங்களில் நடந்து முடிந்த வன்முறைகளால் இதுவரையில் சுமார் 7 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
 • நாட்டின் சுகாதார நிலையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
 • பிறக்கின்ற 100 குழந்தைகளில் 12 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன அல்லது பிறந்தவுடன் இறந்து விடுகின்றன. 
 • ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 12 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.
 • நாட்டின் சனத் தொகையில் 3.4 % பேர் எயிட்ஸ் நோயாளிகள் ஆவர்.
 • இந்நாட்டில் எயிட்ஸ் நோயின் தாக்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆகும்.
 • தற்போதைய மதிப்பீட்டின்படி இந்நாட்டில் 450,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

திங்கள், செப்டம்பர் 26, 2011

இன்றைய சிந்தனைக்கு


ஒரு நண்பன் தன் இனிய நண்பனிடம் கூறியது:

உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்...நீ என்னை அறிந்துள்ளாய்.

தாய்லாந்துப் பயணம் - 20ஆக்கம்:
 வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

தாய்லாந்து வளைகுடாவில் வாழைப்பழ உருவப் படகில் இருந்தோம். (படத்தில் படகினூடு நீரை ஊடுருவிப் பார்க்கும் வசதியை நீங்கள் காணக் கூடியதாக இருக்கிறது).
வேகப் படகு எமக்குக் கிட்ட வந்தது. அதில் மாறி ஏறினோம். நடுக் கடலில் அப்படி மாறுவது நல்ல திறிலிங் ஆக இருந்தது.
 ’இந்த உல்லாச, அற்புத அனுபவத்திற்காகவே பலர் மாதக்கணக்கில் கடலில் படகில் போய், சட்டி முட்டியுடன் சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து விட்டு வருகிறார்கள்.  அது ஏன் என்பது இப்போது புரிகிறது’ என்றேன் நான் கணவரிடம். அவரும் ஒத்துக் கொண்ட மாதிரி ஆமோதித்துச் சிரித்தார்.
கோலான் தீவிலிருந்து மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு 5.15க்கு 'பற்றியா' கரையோர நகருக்கு வந்தோம்.
மாலை நேரமாகியதால் பல இளம் பெண்கள் கடற்கரையில் அலங்காரமாக வந்திருந்து உல்லாசப் பயணிகளுக்கு வலை வீசியபடி இருந்தது தெரிந்தது. அதைக் கவனிப்பதும் நல்ல முசுப்பாத்தியாக(வேடிக்கையாக) இருந்தது. எல்லாப் பெண்கள் கையிலும் ஒரு சிறிய அழகு சாதனப் பெட்டி இருந்தது. அடிக்கடி முகத்தைச் சரி செய்தபடியே இருந்தனர்.
பாய்கள் விரித்துப் பெண்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். சும்மா சொல்லக் கூடாது! அங்கே இங்கே என்று உடலில் சதைகள் தொங்காது சிக்கென்று அவர்கள் சிறு உடலுக்கு ஏற்ற ஆடைகளுடன் மாடல் பெண்கள் போலவே இருந்தனர்.
வேறு சிலர் ஆண்களும் சிறு சிறு கொறிக்கும் பணியாரங்களையும் மீன், றால் பொரியல் ஆகியனவும், தேனீரும் தட்டுகளில் காவியபடி விற்றனர். கடற்கரை கலகலக்கத் தொடங்கி விட்டது.
இந்திய சினிமாத் துறை 'மனோபாலா' ஏதோ படத்திற்கு ரௌடியாக வேடம் போட்டு மோட்டார் சைக்கிளில் ஓடும் போது பற்றியாவில் தான் பொலிஸ் பிடித்ததாம் பின்பு மொழி பெயர்ப்பாளர் வந்து விளக்கிக் கூற விடுபட்டாராம் என்று இங்கு வர வாசித்தேன். சிரிப்பு வந்தது.
உல்லாசப் பயணக் கந்தோருக்குப் போனோம். முதலில் எம்மைப் படம் எடுத்தனர் என்று கூறினேன் அல்லவா! அதை அழகாக சட்டம் போட்டு, பிரேம் போட்டு மேசையில் வைக்கக் கூடியதாகச் செய்து, விரும்பினால் 100பாத் கொடுத்து வாங்கலாம் என்றனர். 16 குறொனர் தான். பற்றியா தாய்லாந் என்று எழுதி, கீழே ஆழக்கடல் அதிசய உலகு, வண்ண மீன்கள், கடற் பாசிகளுடன், மிக அழகாக வரைந்து உருவமைத்து வெள்ளை நிறத்தில் இருந்தது. வேண்டாம் என்று கூற முடியவில்லை. வாங்கினோம். (அந்தப் படம்.)
நாமிருவரும் சேர்ந்து நின்ற படம் அது. வீட்டில் அதைப் பார்த்து ” Thats nice !  So sweet! ” என்று பிள்ளைகள் சந்தோசம் கொண்டனர்.
எம்மோடு பற்றியா வந்த சிலர் அங்கேயே 2, 3 நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து தமது இடத்திற்குப் பயணமாக இருந்தனர். சே! எமக்கு இப்படிச் செய்ய முடியவில்லையே! மறுபடி பட்டுனாம் போக வேண்டுமே! என்று இருந்தது.
பற்றியாவில் முதலைகள், விலங்குகள் வனம், யானைகள் என்று பல சங்கதிகள் பார்க்க இருக்கிறது. பார்த்தவர்கள் அது பற்றிப் பிரமாதமாகக் கூறியிருந்தனர். அவையெல்லாம் ஒரு இரவுக்கும் மேலாக 2 நாட்கள் என்ற கணக்கில் தங்கிப் பார்க்கும் சுற்றுலாக்கள் தான். அதனாலேயே நாம் அதைத் தெரிவு செய்ய வில்லை.
மாலை 8 மணியளவில் பட்டுனாம் வந்தோம். மிகவும் பிந்தினால் அல்லது வெளியே போக அலுப்பானால் அப்படியே ரென் ஸரார் உணவகத்திலேயே இரவு உணவை முடிப்போம்.
அறைக்கு வந்தோம். உப்புத் தண்ணீரில் தோய்ந்ததால், உப்பு எல்லாம் போக குளித்து ஆடை மாற்றி அங்கேயே இரவு உணவை முடித்தோம்.
முன்பு எமது கணனிக்கு நிற மைகள், (கலர் இங்க்) வாங்கவென்று கம்பியூட்டர் சென்ரர் சென்று சுற்றி வாங்கினோம். அங்கு வீட்டுக்கு ஒரு மிக்ஸி வாங்க வேணும் என்று தேடித் தேடிப் பார்த்துக் களைத்து விட்டோம். மிக்ஸியை வாங்குவது எங்கு என்று புரியவில்லை. விடுமுறை முடியும் நாளும் வந்தவிட்டது. அதை எங்கு வாங்கலாம் என்று யோசித்து இறுதியாக இந்திய உணவகத்தில் சென்று கேட்டோம். அவர்கள் முகவரியை எழுதித் தந்தனர்.  Big   C என்ற வியாபார நிலையத்தில் வாங்கலாம் என்றனர்.
அடுத்த நாள் புரட்டாதி 12-2008 வெள்ளிக்கிழமை காலையில் அந்த  Big C  க்கு சென்றோம். பட்டுனாம் சந்தைக்கு அருகிலேயே அது இருந்திருக்கிறது. எமக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது.
-
—பயணத்தின் இறுதி அங்கம் அடுத்த வாரம் வரும்.———

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

பாஸ்போர்ட் இல்லாப் பறவை !

இணைய நிர்வாகி,
தீவகன் இணையம் (www.theevagan.com)
இலங்கை.

அன்புடையீர்,
கடந்த 23.09.2011 அன்று 'தீவகனில்' தாங்கள் இணைத்திருந்த "மண்டைதீவில் இருந்த சரணாலயத்தை மறக்காத பறவைகள்" எனும் தலைப்பிட்ட ஒன்றரை நிமிடக் காணொளியையும், புகைப்படத்தையும் பாராட்டும் முகமாகவும், அது சம்பந்தமான சில மேலதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இக்கடிதத்தை வரைகிறேன்.இது ஒரு கடிதம் என்பதை விடவும் எனக்குத் தெரிந்த சில தகவல்களையும், என் சிந்தனைகளையும் உங்கள் வாசகர்களோடும், 'அந்திமாலையின்' வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய கட்டுரை என்று கூறுவது பொருத்தமாகும்.
சைபீரியன் வாத்து 
முதலில் என் போன்றவர்களுக்குப் பிடித்த ஒரு விடயத்திலும் 'தீவகன்' தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருப்பதை வரவேற்பதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன். நீங்கள் மேற்படி காணொளியில் குறிப்பிட்ட இடத்தைத் தவிரவும், மண்டைதீவுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் பிரிக்கும் பல கிலோமீட்டர்கள் பரப்பளவான களப்புக் கடலில் வளர்ந்துள்ள 'கண்ணாப் பற்றைக் காடுகள்' கூடப் 'பறவைகள்' சரணாலயம்தான். இக்காடுகளுக்கு கடந்த முன்னூறு வருடங்களுக்கு மேலாகப் பறவைகள் வந்து போகின்றன.
மேற்படி பகுதி இலங்கையை ஆண்டவர்களாகிய ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களாலேயோ அல்லது இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர்  வந்த ஆட்சியாளர்களாலேயோ 'பறவைகள் சரணாலயம்' எனப் பிரகடனப் படுத்தப் படவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டமே.
விசிலடிக்கும் வாத்து 
நீங்கள் காணொளியைப் பதிவு செய்வதற்கு 'செப்டம்பர்' மாதம் பொருத்தமானதல்ல என்பது எனது அபிப்பிராயம். நீங்கள் காணொளிப் பதிவு மேற்கொண்ட அப்பகுதிக்கு(மண்டைதீவு) நவம்பர் முதல் வாரத்திலிருந்து டிசம்பர் நடுப்பகுதி வரைதான் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.நான் குறிப்பிடும் காலப் பகுதியில் அங்கு சென்றால் தற்போது நீங்கள் பார்த்ததை விடவும் பத்து மடங்கு அதிகமான பல வண்ண மயமான  வெளிநாட்டுப் பறவைகளைக் காண முடியும். ஏனெனில் இங்கு ஐரோப்பாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும், ரஷ்யாவிலும் இன்னமும் குளிர் காலம் ஆரம்பிக்கவில்லை. நீங்கள் காணொளி வெளியிட்ட அதே தேதியில்தான்(23.09.2011) இங்கு இலையுதிர்காலம்(fall) ஆரம்பித்துள்ளது. நான் வசிக்கும் டென்மார்க் நாடு வட துருவப் பகுதிக்கு அண்மையில் இருப்பதால் இங்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் குளிர் அதிகம். இதே போலவே சுவீடன், நோர்வே, பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் குளிர் மிகுந்த பகுதிகள் ஆகும். இங்கிருந்தும், ரஷ்யாவிலிருந்தும், முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்தும், சீனாவிலிருந்தும் குளிர் காலத்தில் பல லட்சக் கணக்கான பறவைகள் ஆசிய நாடுகளை நோக்கி 'பாஸ்போர்ட், வீசா' எதுவுமின்றி வந்து சேருகின்றன.
ஆசிய நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கும், இலங்கையின் பதினைந்திற்கும் மேற்பட்ட 'பறவைகள் சரணாலயங்கள்' அமைந்துள்ள பகுதிகளுக்கும் பறந்து வருகின்றன. இவை நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து தை மாத நடுப்பகுதி வரையும்(சில சமயங்களில் மாசி மாதம் வரை) 'விசா' இல்லாமல் தங்கியிருக்கின்றன. இவைகளில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 'வேடந்தாங்கல்' பறவைகள் சரணாலயத்திற்கு மட்டும் வருடமொன்றிற்கு 40,000 தொடக்கம் 70,000 வரையான பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வருவதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இலங்கைக்கு வருடமொன்றிற்கு மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையில் மொத்தமாக 210 வகையான பறவையினங்கள் உள்ளன.ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து 129 வகையான வெளிநாட்டுப் பறவையினங்கள் வந்து சேர்கின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் இலங்கையில் வசிக்கும் பறவையினங்களின் வகைகள் மொத்தமாக 339 ஆகும். ஆச்சரியம் என்னவெனில் இலங்கைக்கு 'அழையா விருந்தாளிகளாக' வந்து சேர்கின்ற மேற்படி பறவைகளை இலங்கைப் பறவைகள் துன்புறுத்துவதும் இல்லை, துவேஷம் பாராட்டுவதும் இல்லை. வெளிநாட்டு விருந்தாளிப் பறவைகளும் 'பிழைப்புக்கென்று' வந்த இடத்தில் 'சண்டித்தனம்' செய்வதும் இல்லை. இவைகள் உலக ஆச்சரியம் அல்லவா? இதேபோல் விருந்தாளிப் பறவைகள் இலங்கையின் சிறு கடற் பிரதேசத்திலும், நீர் நிலைகளிலும் உள்ள மீன் இனங்களை "ஒரு கை பார்த்து விடுகின்றன". ஒரு சராசரி வெளிநாட்டுப் பறவை நாளொன்றுக்கு இரண்டு தொடக்கம் ஐந்து கிலோ வரையான மீனைப் பிடித்து உண்கிறது. இவற்றில் 'சைபீரியன் டக்' எனப்படும் 'கூளக் கிடாய்தான்' மோசமான பேர்வழி. நாளொன்றிற்கு ஐந்து கிலோவுக்கும் மேற்பட்ட அளவில் மீன்களைப் பதம் பார்க்கின்றது. இலங்கையில் சுமாராக மூன்று மாதங்கள் தங்கி நிற்கும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பறவைகள் தின்று தீர்க்கும் மீனின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால் "கண்ணைக் கட்டிக் கொண்டு வரும்" ஆனாலும் இயற்கையின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அரசினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. யாழ் குடா நாட்டில் மண்டைதீவு, அராலித்துறை, கல்லுண்டாய்வெளி போன்ற பகுதிகள் பல்லாயிரக் கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடமாக இருப்பினும் 'பறவைகள்' சரணாலயமாகப் பிரகடனப் படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. யாழ் குடாவில் ஒரேயொரு பறவைகள் சரணாலயமாகத் திகழ்ந்த 'சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும்' 1990 களுக்குப் பின்னர் நிகழ்ந்த கொடிய போர்கள் காரணமாகப் பொலிவிழந்து, கவனிப்பாரின்றிக் கிடக்கின்றது.
இது போன்ற இயற்கையோடு சம்பந்தப் பட்ட விடயங்களுக்கும் தங்கள் இணையத்தில் இடமளிக்குமாறு வேண்டுகிறேன். இத்தகைய விடயங்களில் அக்கறையும், ஆர்வமும் உள்ள பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் பூமிப்பந்தில் வாழ்ந்துகொண்டு இருப்பர். பொழுதுபோக்குக் கேளிக்கை நிகழ்ச்சிகளை அள்ளி வழங்குகின்ற ஏராளமான தொலைக்காட்சிச் சேவைகள் உலகம் முழுவதும் இருந்தபோதிலும் National Geographich மற்றும் Animal Planet(Discovery) போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்துத் தமக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளதன் காரணம் என்ன? "மனிதன் இயற்கை பற்றியும், விலங்குகள் பற்றியும் அறிந்துகொள்ள, புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறான்" என்பதுதான்.

உங்கள் சேவை சிறக்கவும், தொடரவும் எல்லாம்வல்ல பிரபஞ்ச சக்திகளின் அருள் உங்களுக்கு நிறைவாகக் கிடைக்கட்டும்.
நன்றி, வணக்கம்.

அன்புடன் 
இ.சொ.லிங்கதாசன் 
ஆசிரியர்
www.anthimaalai.dk 

சனி, செப்டம்பர் 24, 2011

பயந்ததும்... நடந்ததும் !

இன்று காலையில் ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஆபிரிக்க நாடொன்றில் மக்களின் தலையில், நிலத்தில் அல்லது வீடுகளின்மீது விழும் என எதிர்பார்க்கப் பட்ட 6 தொன்(6000 கிலோ) எடையுள்ள நாசாவின் விண்வெளிக் கலம் ஒன்று(Satellite) இன்று அதிகாலை 5.23 மணிக்கும் 07.09 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள் பூமியை நோக்கி வந்து ஒவ்வொன்றும் சுமார் 500 கிலோ எடையுள்ள பல துண்டுகளாக உடைந்து பசுபிக் சமுத்திரத்தில் விழுந்தது.
நன்றி:www.tv2.dk

அந்திமாலைக்கு ஆண்டுநிறைவு வாழ்த்து.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே !
அந்திமாலை ஓராண்டு நிறைவு எய்தியதை முன்னிட்டு வாழ்த்துக்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் எனது பாடசாலை நண்பனும், அந்திமாலையின் வாசகருமாகிய 'சுதா' என்றழைக்கப்படும் அமலதாஸ் அவர்கள் பிரான்சிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைத்த ஒரு மின்னஞ்சலை உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். இம்மடலில் அவர் 'பரிமளகாந்தன்' எனக் குறிப்பிட்டிருப்பது என்னை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, ஒரு பட்டதாரியாக உருவாக்கிய எனது மாமாவை (தாய்மாமன்)என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
உங்களன்புள்ள
இ.சொ.லிங்கதாசன் 

இதோ உங்கள் பார்வைக்கு சுதாவின் மடல்:

அந்திமாலைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
அதன் ஆசிரியர் லிங்கதாசனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நிற்க ,
உங்கள் தளத்தை நீங்கள் தொடங்கிய நாளிலிருந்து ஏறக்குறைய ஒவ்வொருநாளும் நுனிப்புல்லாக மேய்ந்தோ,
 அடிக்கரும்பாக சுவைத்தோ பார்த்திருக்கிறேன்.
 தாசனின் ஆழ்ந்த படிப்பும், அபார உழைப்புமாய் அந்திமாலை சிறப்பாகவே வளர்ந்து  வருகிறது. 
குறுகிய வட்டத்துக்குள்  சுழலாமல் பரந்து பட்டு எல்லாத்திசைகளையும் தொட்டு விரிந்து வருகிறது. 
இவ்வாறு மென்மேலும் வளர்ந்து மணம்பரப்ப எங்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் எப்போதும் கூடவரும்.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மருமகனை 
சான்றோன் எனக்கேட்ட மாமா."
--அந்திமாலையைப் போன்றே பரிமளகாந்தன் அண்ணாவுக்காக சற்றே மாற்றப் பட்ட குறள்.
என்றும் அன்புடன்

சுதா.
21.09.2011

தாரமும் குருவும் . பகுதி - 4.5

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 4.5

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
ஒரு பிள்ளையை அடித்துத் துன்புறுத்தாமல், ஏசாமல்(திட்டாமல்) பாடம் சொல்லித் தர ஒரு ஆசிரியரால் முடியுமா? மிகவும் கடினமான பணி இது என்பதால் மேற்கூறிய இரண்டில் ஒன்றை ஒரு ஆசிரியர் செய்தே ஆகவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக்குப் பாலர் வகுப்பில் கல்வி கற்பித்த 'கமலினி'(பெயர் மாற்றப் பட்டுள்ளது) டீச்சரின் முகவரியை முயற்சி செய்து பெற்றுத் தருகிறேன். அவர் இப்போதும் ஆசிரியையாக பணிபுரிகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விடயம் எனக்கு உறுதியாகத் தெரியும் அதாவது எங்கள் கமலினி டீச்சர் இப்போதும் எங்கள் கிராமமாகிய 'அல்லைப்பிட்டியில்' அல்லது யாழ் மாவட்டத்தில் உள்ளது எங்காவது ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவரிடம் நீங்கள் கேட்டறியலாம் குழந்தைகளை அடிக்காமல், ஏசாமல் படிப்புச் சொல்லித் தரும் 'வித்தை' எங்ஙனம் சாத்தியமாகும் என்பதை.
"வெறும் பாலர் வகுப்புத் தானே? அங்கு பிள்ளைகளை அடிக்க வேண்டிய அவசியமே இருக்காதே". என்று கூறுபவர்களுக்கு எனது மறு மொழி: "இலங்கையில் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கு அடிக்கின்ற பாடசாலைகள் இருந்தன. தற்போதும் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்த முப்பது ஆண்டு காலப் போரின் விளைவாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளின் காரணமாகவும் தற்போதைய இலங்கை அரசு மீது, ஆத்திரத்தில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரேயொரு விடயத்திற்காக தற்போதைய இலங்கை அரசைப் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. அதாவது இலங்கையில் உள்ள பாடசாலைகளில் பணிபுரியம் ஆசிரியப் 'பெருந்தகைகள்' "தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாணவனை / மாணவியை அடிக்கலாம்" என்பது ஆங்கிலேயர் காலம்தொட்டு இருந்துவந்த 'எழுதப்படாத' சட்டமாகும். எது எதற்கோவெல்லாம் சட்டம் போட்டுத் தடுத்த ஆங்கிலேயர்கள் இவ்விடயத்தில் வாளாவிருந்து விட்டனர். அடிப்பது இலங்கைச் 'சட்டம்பியார்'(அக்காலத்தில் ஆசிரியர்களை 'சட்டம்பியார்' என அழைத்தனர் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.), அடி வாங்குவது 'இலங்கைப் பிள்ளை'(தமிழ் அல்லது சிங்களம்) நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள் போலும்.
இலங்கை சுதந்திரமடைந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் 'மகிந்த ராஜபக்ச' தலைமையிலான அரசே முதன்முதலாக "பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கக் கூடாது" என்று சட்டம் நிறைவேற்றியது. இவ்வாறு சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிப்பதை முற்றாக நிறுத்தி விட்டார்கள் என்று கூறமுடியாது. இருப்பினும் முன்பு போல 'கண்மண் தெரியாமல்' அடிப்பது சட்டத்தின்மூலம் தடுக்கப் பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறாமலில்லை. "ஆசிரியரின் பிரம்பு மாணவனின் கண் பார்வையைப் பறித்தது", "ஆசிரியர் அடித்ததால் நஞ்சருந்திய மாணவன்" என்றெல்லாம் இடையிடையே செய்திகள் வருகின்றன. எங்கிருந்து தெரியுமா? சிங்களப் பகுதிகளிலிருந்து அல்ல, தமிழ்ப் பகுதிகளில் இருந்துதான். ஆனாலும் முன்பு போல ஆசிரியர்கள் விருப்பம்போல அடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போதும் அடிப்பது நிகழ்கிறது, மிகவும் ரகசியமாக(கமுக்கமாக) ஆனால் மாணவன் அல்லது மாணவி வழக்குத் தொடர்ந்தால் ஆசிரியர் 'சிறை' செல்ல நேரிடும். இதுவெல்லாம் நடப்பது எங்கோ ஒரு மேற்கத்திய நாட்டில் அல்ல நமது இலங்கையில்தான். இப்போது கூறுங்கள் மேற்படி அரசை நான் பாராட்டியது தகுமா? தகாதா?
தமிழ்நாட்டில் நிலைமை இப்போதும் மோசமாகத்தான் உள்ளது. Pre.KG, LKG, UKG வகுப்புகளில் பயிலும் இளம் குருத்துகளை, மெல்லிய மொட்டுகளை, இளம் பிஞ்சுகளை அடிக்கின்ற ஆசிரியைகள் தமிழ்நாட்டுத் தனியார் பாடசாலைகளில்(Matriculation Schools) கல்வி கற்பிக்கிறார்கள்.
(தொடரும்)

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

இன்றைய சிந்தனைக்கு

பகிர்வு:கௌசி, ஜேர்மனி
வாசித்துச் சுவைத்தது.
புத்தரிடம் ஆத்திரம் கொண்ட ஒருமனிதன், அவரை அணுகி ஆத்திரம் தீரும்மட்டும் திட்டித் தீர்க்கின்றான். "உன்னையே எல்லோரும் விரும்புவதற்கு நீ என்ன பெரிய மனிதனாநீ சொல்பவற்றை எல்லாம் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கின்றாயா?" என்று பலவாறாக அவரில் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகத் திட்டித் தீர்க்கின்றான்புத்தரும் நிதானமாகக் கேட்கின்றார். "ஒருவருக்கு ஒரு பரிசில்(பரிசு) பொருளொன்று அவருக்குக்கொடுப்பதற்காக வாங்கிச் செல்லுகின்றீர்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்என்று கேட்கின்றார்அந்த மனிதனும் "அதை நானே வைத்திருப்பேன்" என்று கூறுகின்றான்அதற்குப் புத்தரும் "அப்படியேநீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்குள்ளே புகுந்து கொள்ளவில்லைஅதற்கு உரிமையுள்ளவர் நீங்களாகின்றீர்கள்" என்று கூறி முடிக்கின்றார்அடுத்தவரை வெறுப்பவர்கள் தமக்குத் தாமே வெறுப்பைக் கொண்டவர்கள் ஆகின்றார்கள்.