சனி, டிசம்பர் 31, 2011

இரைப்பையில் புற்றுநோய் தடுக்கும் வழி

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா 
முறையான உணவு முறை இன்றி தங்களுக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோயை உருவாக்குகிறது.

அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.

இரைப்பையில் புற்றுநோய் உருவாக ஹெலிகோபேக்டர் பைலோரி(Helicobacter pylori) என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது. அந்த அல்சரே, புற்றுநோய் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது.

புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும்.

நாளடைவில் இதுவே புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்படும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.

இரைப்பையில் ஏற்படும் புற்றுநோயை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

1. முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் புற்றுநோய் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.

2. உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் புற்றுநோய் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் புற்றுநோய் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும். இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும்.

3. சிலருக்கு இரைப்பை புற்றுநோய் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது புற்றுநோயின் முற்றிய நிலையை குறிக்கும். கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து இதனை கண்டறியலாம். இரைப்பை புற்றுநோய் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.

பாதுகாப்பு முறை: இரைப்பை புற்றுநோயை தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது.

ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

உங்க இம்சை தாங்க முடியலப்பா!

இப்பொழுதே அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, 2012 கிறிஸ்துமஸ் மற்றும் 2013 தொடக்கம் 2999 வரையான புத்தாண்டு வாழ்த்துக்கள்,  கி.பி.3000 மிலேனியம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னய்யா/என்னம்மா நடக்குது இங்க?இந்த முகநூலில் உள்ளவங்க குடுக்கிற அளப்பரைக்கு(அட்டகாசத்திற்கு) அளவே இல்லையா? பொங்கல் வருகுதா? ஒரு வாரம் முன்னாடியே "பொங்கல் வாழ்த்து" "பொங்கல் வாழ்த்து" ன்னு கெளம்பிருவாய்ங்க. தீபாவளி வருவுதா அதுக்கும் இதே கெதிதான். வெள்ளைக்காரன் தொடக்கம் தமிழன் வரைக்கும் குதூகலமா பட்டாசு, வாணம் வெடிச்சு கொண்டாடுற ஆங்கிலப் புத்தாண்டு வருவுதா? அதுக்கும் இதே கொல வெறிதான். ஒரு வாரத்துக்கு முன்னாடியே தொடங்கீருவாக. எங்க பார்த்தாலும் யாரோட முகநூல் சுவத்தில பாத்தாலும் Happy New Year தேங், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தேங், கொஞ்சம் பொறுமையா இருந்தாத்தான் என்னவாம்? செய்திகளை 'முந்தித் தர்ரவைங்க' மாதிரி, வாழ்த்துக்கள முந்தித் தர்ரவைங்க சங்கமா? இதுல யார மன்னிக்கலாம் தெரியுமா? இலங்கையிலையோ, தமிழ்நாட்டிலையோ சொந்தமா ஒரு கம்பியூட்டர் இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிற, ஒரு வாரத்திற்கு ஒருக்கா கம்பியூட்டர் சென்டருக்கோ/நெட் கபே க்கோ போய் முகநூல் பார்க்கிற அந்த சகோதரன்/சகோதரியை மன்னிக்கலாம் மத்தபடி உலகம் பூரா சொந்தமா கம்பியூட்டர் வைச்சிக்கிட்டு 24 மணி நேரமும் facebook யாகம் மற்றும் தவம் செய்கிற முனிவர்கள மன்னிக்கவே முடியாதையா. நீங்கள் செய்கிற 'அவசரக் குடுக்கை' தனத்தால பாதிக்கப் படுகிறது யாரு தெரியுமா? புத்தாண்டு அன்னிக்கி ஆசை ஆசையா வாழ்த்து அனுப்புறானே ஒரு 'அப்புராணி' அவனோட வாழ்த்து 'செல்லாக்காசு' ஆகிப் போய், அவனோட வாழ்த்த நாயும் சீண்டாம, முகப் புத்தக சுவருல 'தேமே' என்னு கெடக்கும். கவனிச்சிருக்கீங்களா? கவனிக்க மாட்டீங்க. நீங்க தான் 'பிஸி' ஆச்சே. சற்று சிந்தியுங்கள் நண்பர்களே, நண்பிகளே! பிறக்கின்ற இந்தப் புத்தாண்டு இனிய ஆண்டாகவும், சிறப்பையும், செழிப்பையும் அள்ளித் தரும் ஆண்டாகவும் அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் ரொம்ப நேரம் முதுகு வலிக்க உக்காந்து டைப் பண்ணிய மேற்படி வாசகங்களைக் கூட வெட்டி எடுத்து தங்களது சுவரில் ஒட்டி புகழ் தேடும் 'புண்ணியவான்களும்' இந்தப் பூமியில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை இறைவன் காப்பானாக.
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)

பொருள்: யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உலகிற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சராசரி ஆளாக இருக்கலாம். ஆனால் யாரவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.

வியாழன், டிசம்பர் 29, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல் (229)

பொருள்: ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளிக்காமல் தான் மாத்திரம் உண்பவன் நிலை யாசிப்பதிலும் கீழாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வலிமை என்பது அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. மேலும் மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக் கிடைக்கும்.

தொலைத்தவை எத்தனையோ - 4

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

(இது ஒரு தொடர் இடுகை)
அப்போது எனக்கு எட்டரை- ஒன்பது வயதிருக்கும். 
நாவலர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்தேன். பாடசாலை ஓரு மணியளவில் விடும். வீடு வந்து ஆடை மாற்றி உணவு உண்ட பின் ஒரு ஆயிரம் மீட்டருக்கு உள்ளாக இருக்கும் பாக்கியம் ஆசிரியை வீட்டிற்கு, தம்பி, தங்கைகளுடன் படிக்கப் போவோம்.
நாங்கள், பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள், இன்னும் பாக்கியம் ஆசிரியையின்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று, வயது, வகுப்பிற்கு ஏற்றபடி சேர்ந்து படிப்போம். பாக்கியம் ஆசிரியை எமது நாவலர் பாடசாலையில் ஆசிரியை, எமக்கு உறவினரும் கூட.
பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள், வேறாகவும் படிப்போம். விளையாடுவோம். மாலை ஐந்து, ஆறு மணி வரை நின்று வீடு வருவோம்.
நானும் குவீனும், தாமரையும் ஒன்றாகப் படிப்போம். படிக்கும் நேரம் தவிர எப்போதும் குவீனும், தாமரையும் சேர்ந்து குசுகுசுப்பார்கள். சேர்ந்து விளையாடுவார்கள்.  ஏனோ என்னை ஒதுக்கி விடுவார்கள். (நான் அவர்களிலும்  ஒரு வயது சிறியவள்.)
நான் போராடும் குணம் கொண்டவளில்லை. என் பாட்டில் சுற்றியுள்ள மல்லிகைப் பந்தலை,  முற்றத்துப் பூக்கன்றுகளை ரசிப்பேன். மற்ற பிள்ளைகளுடன் பாக்கியம் ஆசிரியை வீட்டுக் கோழிக் குஞ்சுகள் நிறமடித்திருப்பதை ரசித்து பருந்து தூக்க வர, கூச்சலிட்டு விரட்டுவோம். அடி பெருத்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவோம். இப்படிப் பொழுது போகும்.
பாக்கியம் ஆசிரியையும், அவரது தங்கையும் இதைக் கவனித்து, சேர்ந்து படிப்பவர்கள் சேர்ந்து விளையாடவும் வேண்டும் என்று, குவீனையும், தாமரையையும் நன்கு ஏசினார்கள் ” நீங்கள் இப்படி பேபியை ஒதுக்கக் கூடாது” என்று.  (எனது வீட்டுப் பெயர், பிறந்ததிலிருந்து பெற்றவர், ஊரார் அறிந்திருப்பது Baby தான்.)
எனக்கு அது மகிழ்வாக இருந்தது. மாற்றம் வருமென எதிர்பார்த்தேன், காத்திருந்தேன். ஆனால் அது தொடர் கதையாகவே இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் அம்மாவிடம் இலேசாகக் கூறியிருப்பேன்.  அம்மா,அப்பா ” சமாளித்து நட!”  என்றிருப்பார்கள். (இது எனக்குச் சரியாக நினைவில்லை)
ஒரு சிவராத்திரி வந்தது. அதற்கு நித்திரை விழிப்பது 'சிவ புண்ணியம்' என்பர். அங்கு வரும் பிள்ளைகள் நாங்கள் அதைக் குதூகலமாகக் களிக்க, பாட்டு நாடகம் என்று தயாரிக்கப் பட்டது.
பாக்கியம் ஆசிரியை கோவலன் கண்ணகி நாடகம் போட எங்களைத் தயாரித்தார். எனக்கு கோவலன் வேடம் தரப்பட்டது.
தாமரை மாதவியாக (சபையில் நடனமாட வேண்டும்). குவீனி மாதவிக்கு சாமரம் வீசும் சேடிப் பெண்ணாக. (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)
(மிகுதி அடுத்த அங்கத்தில் தொடரும்)

புதன், டிசம்பர் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை 
வைத்துஇழக்கும் வண் கணவர். (228) 

பொருள்: தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.

இன்றைய பொன்மொழி

அன்னை தெரெசா

அன்பு, ஆதரவு, நன்றி இவைகளுக்கு ஏங்குவோர்களின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகம்.

செவ்வாய், டிசம்பர் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பாத்தூண் மரிஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227) 

பொருள்: பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த ஒரு பயனும் விளையாது என்று தெரிய வருமேயானால் அதன் பின்னர் 'ஒரு சொல்லைக் கூட' விரயம் செய்யாதே.

நாடுகாண் பயணம் - எக்குவடோர்



நாட்டின் பெயர்:
எக்குவடோர்(Ecuador) 


வேறு பெயர்கள்:
ஈகுவடோர் அல்லது எக்வடோர் அல்லது எக்குவடோர் குடியரசு(Republic of Ecuador) அல்லது ஸ்பானிய மொழியில் ரெபூப்லிகா டெல் எக்வடோர்(Republica del Ecuador)


அமைவிடம்:
தென் அமெரிக்கா / தென் மேற்கு அமெரிக்கா


எல்லைகள்:
வடக்கு- கொலம்பியா  
கிழக்கு, தெற்கு - பெரு 
மேற்கு - பசுபிக் சமுத்திரம் 


அலுவலக மொழி:
ஸ்பானிய மொழி 


ஏனைய மொழிகள்:
அமெர் இந்திய மொழிகள் குறிப்பாக குவேகுவா(Quechua) 


இனங்கள்:
மெஸ்டிசோ 65%
அமெர் இந்தியர்கள் 25%
ஸ்பானியர்கள் 7%
கறுப்பர்கள் 3%


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 95%
ஏனையோர் 5%


கல்வியறிவு:
91%


ஆயுட்காலம்:
ஆண்கள் 72 வருடங்கள் 
பெண்கள் 78 வருடங்கள் 


தலைநகரம்:
கீட்டோ (Quito)


ஆட்சிமுறை:
கூட்டாட்சிக் குடியரசு


ஜனாதிபதி:
ரபேயேல் கோரெயா(Rafael Correa) *இது 27.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 


துணை ஜனாதிபதி:
லெனின் மொரினோ(Lenin Moreno)


ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
24.05.1822


கிரான் கொலம்பியாவிடமிருந்து விடுதலை:
13.05.1830


பரப்பளவு:
272, 046 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
15,007,343 (2011 மதிப்பீடு)


நாணயம்:
அமெரிக்க டாலர் (USD)


இணையத் தளக் குறியீடு:
.ec


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 593 


வேலையில்லாத் திண்டாட்டம்:
14%


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
33%


இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், மீன், மரம், நீர் மின்சாரம்.


விவசாய உற்பத்திகள்:
வாழை, காப்பி, கொக்கோ, அரிசி, உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கால்நடைகள்(ஆடு,மாடு,பன்றி), கோழி இறைச்சி, முட்டை, மீன், இறால்.


தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், உணவு பதனிடல், மரவேலை, இரசாயன உற்பத்திகள்.


ஏற்றுமதிகள்:
பெற்றோலியம், வாழைப் பழம், பூக்கள், இறால், மீன், கொக்கோ, காப்பி, மரம். 


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • பூகம்பம், மண் சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப் படும் நாடு.
  • பூமியைக் குறுக்கும் நெடுக்குமாக பிரிப்பதற்கு வரையப் பட்டுள்ள கோடுகளில் பூமத்திய ரேகை(equator) எனும் கோடு இந்நாட்டில் ஆரம்பிப்பதால், ஆரம்பத்தில் இந்நாடு 'ஈக்குவேட்டர்' என அழைக்கப் பட்டு பின்னர் அப்பெயர் மருவி 'எக்குவடோர்' என இந்நாட்டின் பெயராக மாறி இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
  • உலகின் ஆதிக் குடிகளாகிய இன்கா இன மக்கள் இந்நாட்டிலும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
  • தற்காலத்தில் இந்த இன்கா இன மக்கள் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
  • அமேசான் ஆற்றின் கரையோரப் பகுதிகளின்(ஆற்றுப் படுகை) உரிமைக்காக பல வருடங்கள் 'பெரு' நாட்டுடன் சண்டையிட்டுத் தோல்வி கண்ட நாடு.
  • தற்காலத்திலும் அண்டை நாடுகளாகிய கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
  • மலைகள், நீர் வீழ்ச்சிகள், எரிமலைகள் நிறைந்த நாடு.
  • 1970 களில் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு.
  • வெளிநாட்டுக் கடன் சுமை தாங்க முடியாமல் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தனது நாணயத்தை இல்லாதொழித்து அமெரிக்க டாலருக்கு மாறியுள்ள நாடு.
  • நாடு ஏழை நாடாக இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. இந்நாட்டில் 61 பல்கலைக் கழகங்கள் உள்ளன. நாட்டின் கல்வியறிவு 91% என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 

திங்கள், டிசம்பர் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226) 

பொருள்: ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை; ஆனால் உலகிற்குத் தெரிகிறது. அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது; ஆனால் உலகிற்குத் தெரிவதில்லை.

கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னால்..,

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்


இம்மரத்தை (Evergreen Coniferous Tree) கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை அல்லது தேவதைகளை(இலங்கைத் தமிழில் 'சம்மனசுகள்') நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.



இம்மரத்தை ஆரம்ப காலங்களில் படைவீரர்கள் அல்லது தேவாலயங்களில் கீதம் பாடுவோர் (இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'சாரணர்கள்' போல் இயங்கி வந்தனர்) போன்ற பிரிவினர் அலங்கரித்து, மரத்தைச் சுற்றி ஆடுதல், பாடுதல் போன்ற களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பர், அதன் பின்னர் இது மெல்ல, மெல்ல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும், அதன்பின் மரபு ரீதியாக கிறீஸ்தவ மக்களின் வீடுகளில் 'பாலன் பிறப்பு' அலங்காரங்களோடு சேர்த்து இடம்பிடித்திருக்கும், பல நூற்றாண்டுகள் கழிந்த நிலையில் 'கத்தோலிக்கர்' தவிர்ந்த ஏனைய கிறீஸ்தவர்கள் மத்தியில் 'பாலன் பிறப்பு' அலங்காரம் விடைபெற்று கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தல், அதன் கீழ் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைத்தல், மரத்தைச் சுற்றி ஆடிப் பாடுதல் போன்ற நடைமுறைகள் இடம்பிடித்திருக்கலாம் (அறிமுகமாகியிருக்கலாம்) என்கிறார் ஐரோப்பாவின் மூத்த சமூகவியல் ஆய்வாளரான ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி.இங்கபோ வெபர் கெல்லமான் (Ingeborg Weber Kellermann).


மேலும் சமயத் தலைவர்களின் கருத்துப்படி ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு கிறீஸ்தவ மதத் துறவியாகிய புனித.பொனிபாஸ் (St.Boniface) என்பவர் காரணமாக இருந்துள்ளார். இம்மரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் தற்போதுள்ளதைப் போல் செயற்கை அலங்காரப் பொருட்கள் தொங்கவிடப் படவில்லை என்பதுடன், அவைகளுக்குப் பதிலாக அப்பிள் பழங்கள், கடலைகள், பேரீச்சம் பழங்கள், போன்ற உண்ணத்தக்க பழவகைகளும், கடதாசிப் பூக்களும் தொங்கவிடப்பட்டன. கொண்டாட்ட முடிவில் இப்பழங்களை உண்ணுவதும் வழக்கமாக இருந்தது.


ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.

இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டதாயினும் அது மக்களிடம் வரவேற்புப் பெற்ற ஒரு பிரபலாமான கொண்டாட்டமாக இருக்கவில்லை. இதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் 'கிறிஸ்துமஸ் மரமும்' மிகவும் பிரபலம் அடைந்து இன்றவரை அவை மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக மாறியுள்ளன என்றால் மிகையில்லை.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் சிறப்புக் கவிதை

n

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நினைவில் வைத்திருங்கள்:-
மகிழ்ச்சி என்பது நீங்கள் யார்? உங்களிடம் என்ன இருக்கிறது? என்பதைப் பொறுத்ததல்ல. அது எப்படிப்பட்ட தருணமாயினும்உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. அதை விடவும் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் என்றும் சில நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப் பட வேண்டியவை.


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். 


2. பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டபின் புகை பிடிப்பதால் உண்டாகிறது.


3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு(பொருமல்) ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது. 
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 


4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து சமிபாட்டைத் தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.


7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.("உண்டபின் நூறடி உலாவிப் பின் உறங்கு" எனும் பழமொழியைப் போல) சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.


8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையிலும் பல நவீன மூட நம்பிக்கைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: Tamilfirez.blogspot.com

சனி, டிசம்பர் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின். (225) 

பொருள்: தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையுடையவர். அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடைய வலிமைக்குப் பிற்பட்டதேயாகும். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அறிவாளி தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்கத் தேர்ந்தெடுப்பது அடக்கத்தைத்தான். அது காய்களையும், பழங்களையும் தாங்கி நிற்கும் ஒரு மரக்கிளை எப்போதும் தரையை நோக்கித் தாழ்ந்திருப்பதை ஒத்திருக்கும்.

தாரமும் குருவும் பகுதி - 5.6

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 5.6 

அல்லைப்பிட்டி 1977
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வது போல் அல்லைப்பிட்டி, மண்கும்பானின் மணல் வளம் சுமாராக 14 வருடங்கள் கொள்ளையடிக்கப் பட்டபின்னர் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், கல்விமான்களும் கொஞ்சம் விழித்துக் கொண்டனர். இவர்கள் ஒன்று சேர்ந்து இம் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என 1984 இல் முடிவெடுத்தனர்.
இதன் முதலாவது கட்டமாக ஒரு 'கண்டன ஊர்வலம்' ஒன்று இவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த ஊர்வலத்தை அல்லைப்பிட்டி, மண்கும்பானைச் சேர்ந்த துடிப்புள்ள, துணிச்சலுள்ள இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இளைஞர்கள் மட்டும் சேர்ந்து ஊர்வலம் நடாத்துவதாயின் ஆகக் கூடுதலாக 30 வரையான இளைஞர்களை மட்டுமே சேர்க்க முடியும். சமூக ஆர்வலர்களையும் சேர்த்துக் கொள்வதாயின் மொத்தம் ஒரு 50 பேரை மட்டுமே சேர்க்க முடியும். ஆகவே இவர்கள் கடுமையாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது அல்லைப்பிட்டி மண்கும்பான் ஆகிய இரண்டு கிராமங்களிலும் உள்ள மூன்று பாடசாலைகளிலும் பயிலும் மாணவர்களையும், ஆசிரியப் பெருமக்களையும் சேர்த்தால் ஊர்வலத்திற்கு ஆகக் குறைந்தது 700 பேரையாவது சேர்க்க முடியும். இந்தத் திட்டத்தின்படி செயற்பட்ட அவர்கள் அல்லைப்பிட்டியிலுள்ள இந்துப் பாடசாலை, கிறீஸ்தவப் பாடசாலை, மண்கும்பானிலுள்ள இந்துப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளையும் நிர்வகித்த அதிபர்களை அணுகி வெற்றி கண்டனர். 
இதில் பாடசாலைகளின் பெயர்களை 'இந்துப் பாடசாலை', கிறீஸ்தவப் பாடசாலை என நான் குறிப்பிட்டதற்குக் காரணம் எங்களது காலத்தில் பாடசாலைகளின் பெயர்களை மக்கள் அவ்வாறே அழைத்தனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தை கிராம மக்கள் 'சைவப் பள்ளிக்கூடம்' எனவும், அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையை மக்கள் 'வேதப் பள்ளிக்கூடம்' எனவும், மண்கும்பானில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை மக்கள் 'மண்கும்பான் பள்ளிக்கூடம்' எனவும் அழைத்தனர். கிராமத்தில் எந்தவொரு விடயத்தையும் மக்கள் சமயம் சார்ந்தோ அல்லது 'சாதி' சார்ந்த கண்ணோட்டத்துடனோதான் பார்த்தனர் என்பதற்கு இதைவிடவும் பல உதாரணங்கள் கூற முடியும்.
இரண்டு கிராமங்களின் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள்(மாணவியரும் அடக்கம்), ஆசிரியர்கள் என பல தரப்பட்ட பிரிவினரின் ஒத்துழைப்புடன் 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இந்த ஊர்வலம் ஒழுங்கு செய்யப் பட்டது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் பிரதான கோஷங்கள் "நமது வளம் மண் வளம், மண் வளத்தை அழிக்காதே" "நமது வளம் நீர் வளம், நீர் வளத்தை அழிக்காதே" என்பதாக இருந்தது. இந்த ஊர்வலம் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து அல்லைப்பிட்டியில் இருக்கும் கிறீஸ்தவத் தேவாலயமாகிய 'உத்தரிய மாதா ஆலயத்தில்' நிறைவு பெறுமாறு ஒழுங்கமைக்கப் பட்டது. 
வழமையாக மிகவும் நிசப்தத்துடன் காணப்படும் இவ்விரு கிராமங்களும் வரலாற்றில் முதல் தடவையாக 700 க்கு மேற்பட்டவர்களின் கண்டன ஊர்வலத்தைக் கண்டு அதிர்ந்தது மட்டுமின்றி, ஆச்சரியமும் கொண்டன. ஊர்வலத்தில் வந்தவர்களின் கோஷம் வானத்தைத் தொட்டது. இவர்களின் கோஷம் மனச் சாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயக் கதவையும் தட்டியிருக்கும் என்று நீங்கள் நம்பினால் ஐயோ! பாவம் நீங்கள். இந்த ஊர்வலம் நிறைவு பெறும் இடமாகிய 'உத்தரிய அன்னை தேவாலயத்தில்' ஊர்வலத்தின் முடிவில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்கும்பானிலிருந்து மணலை ஏற்றியபடி மேற்படி ஆலய முன்றலில் செல்லும் வீதியூடாக ஒரு டிராக்டர் உறுமிக் கொண்டு வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக நின்ற ஊர்வலக் கூட்டம் டிராக்டரை சுற்றி வளைத்துக் கொண்டது. அந்த டிராக்டரில் ஒரு லோடு மணல் இருந்தது. அந்த டிராக்டரின் சாரதியை அடித்து, உதைக்கும் ஆத்திரத்தில் கூட்டத்தினர் அவரை நெருங்கினர். நிலைமையின் பாதகத் தன்மையை உணர்ந்துகொண்ட டிராக்டரின் சாரதி, நடிகர் திலகத்தை மிஞ்சும் விதத்தில் "நான் ஒரு ஏழை, நான் கூலிக்காகவே இந்த டிராக்டரை ஓட்டுகிறேன், இதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் என் பொண்டாட்டி, பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறேன்" என்று உருக்கமான வசனங்களை உதிர்த்தார். அவ்வளவுதான் கோபத்தில் நின்றோர் எல்லாம் 'குணக் குன்றுகளாக' மாறினர். "களிறோடு சண்டையிடு, கட்டெறும்பை விட்டுவிடு" எனப் புற நானூற்றுத் தமிழர்களாக மாறி அவரை மன்னித்து, "திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போ, நீ அல்லைப்பிட்டிக்கு/மண்கும்பானுக்கு மணல் ஏற்ற வருவது இன்றே கடைசியாக இருக்கட்டும்" என்று கூறி விட்டு விட்டனர்.
இந்த ஊர்வலம் இரண்டு கிராம மக்களின் ஒற்றுமை உணர்வையும், பொது விடயத்தில் அவகளது கருத்தொருமித்த 'எதிர்வினையையும்' புலப்படுத்தியது ஆயினும் அதில் பல குறைபாடுகளும் இருந்தன.அவையாவன.

  1. இந்த ஊர்வலத்தினால் அதற்குப் பின்னான காலப் பகுதியில் எந்தவித மாற்றமும் எற்படவில்ல. 'மணல் ஏற்றுதல்' என்ற சமூக விரோதச் செயல்1986 சித்திரை மாதம் பண்ணை வீதிப் போக்குவரத்து தடைபடும்வரை தொடர்ந்து நிகழ்ந்தது.
  2. இந்த ஊர்வலம் முடிவில் ஒரு மனுவோ, கோரிக்கையோ அரச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் படவில்லை.
  3. ஊர்வலத்தில் கலந்து கொண்ட 700 பேரைத் தவிர ஏனைய கிராம மக்கள் இந்த விடயத்தை தங்களையும் பாதிக்கும் ஒரு 'சமூகப் பிரச்சனை' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேயில்லை.
  4. இந்த ஊர்வலமானது ஊரின் மணல் வளத்தை அபகரித்த விஷமிகளின் மனங்களில் எந்தவித மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று மக்களும் வாளாவிருந்து விட்டனர்.
இவ்வாறு குறைபாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் 1945 ஆம் ஆண்டில் வீசப்பட்ட அணுக் குண்டுகளால் இப்போதும் ஜப்பானில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதுபோல், அல்லைப்பிட்டியிலும், மண்கும்பானிலும் 'மணற் கொள்ளையின்' தாக்கம் இன்றுவரை தென்படுகிறது. 'மணற் பாங்கான' நிலம் உள்ள கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எங்கள் இரண்டு கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு இணையங்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பற்றிய புகைப் படங்களையும், காணொளிகளையும் பார்த்தபோது இதயம் வலித்தது. முப்பது வருடத்திற்கு முந்திய தலைமுறையும், சமூக விரோதிகளும் செய்த தவறுக்கான விலையை தற்போது அங்கு வாழும் அப்பாவி, சராசரி மக்கள் செலுத்துகின்றனர்.

(இன்னும் சொல்வேன்)   

வெள்ளி, டிசம்பர் 23, 2011

மனுகுல மீட்புக்காய்….

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்



பெத்தலகேம் நகரில் ஒரு மீட்பர்
இத்தரையில் உதிப்பார் என்று பல
உத்தம அறிகுறிகள் அன்று தோன்றியதாம்.
அத்தியாயத்தின் கதவு அமைதியாய்த் திறந்தது.
நாட்டு வழிப் பாதையில் சூசை
காட்டிய வழியில் கர்ப்பிணி மரியாள்
கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.




திருவான தேவ கருணை இரட்சகர்
அருமை மாளிகை அந்தப்புரம் போல
ஒரு மகிமையான மாட்டுத் தொழுவத்தில்
கருவறை விட்டு பூமியில் உதித்தார்!
காரிருள் குளிர் போர்வை விரிக்க
அரிய மனுகுல மீட்பர்  பிறந்ததாய்
ஊர்த்துன்ப மேகம் கலைந்து மக்கள்
வாரி அள்ளும் துன்பமும் கரையட்டும்.
யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
நாலும்  சிறந்து நாடு சிறக்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களிற்கும் இனிய 

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துள்.