ஞாயிறு, டிசம்பர் 04, 2011

ஒரு லோடு மணலின் விலை 19 கோடி அமெரிக்க டாலர் !!!

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
19 கோடி அமெரிக்க டாலரா? ஸ்ஸ்.., யப்பா கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே! ஒரு லோடு மணலுக்கு 19 கோடி அமெரிக்க டாலரா? அந்த மணலில் அப்படி என்ன விசேஷம்? தங்கம் வைரம் ஒண்ணும் இல்லையே? என்று அதிசயிக்கிறீர்களா? உண்மைதான் ஒரு லோடு(ஒரு டிராக்டர் நிரம்ப) சாதாரண மணலின் விலை 19 கோடி அமெரிக்க டாலர் என்றால் நம்பவா போகிறீர்கள்?
உண்மைதான் அவ்வாறு ஒரு நாட்டில் ஒரு லோடு மணல் 19 கோடி அமெரிக்க டாலருக்கு விற்கப் பட்டது.
சரி நமது இலங்கையில் தற்போதைய நிலவரப்படி ஒரு லோடு மணலின் விலை என்ன? ஏறக்குறைய 5000 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் வரை இருக்குமா? தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டில் ஒரு லோடு மணலின் விலை என்னவாக இருக்கும்? சுமாராக இந்திய ரூபாயில் 15000 இருக்குமா? இலங்கையை விட தமிழகத்தில் மணல் மிகவும் தட்டுப்பாடான ஒரு மூலப் பொருள் என்பதும், இலங்கையை விட தமிழகத்தில் மணலின் விலை ஐந்து மடங்கு அதிகம் என்பதும் கட்டிடத் துறையில் உள்ளவர்கள் அறிவார்கள். சரி மீண்டும் நான் மேலே குறிப்பிட்ட 19 கோடி அமெரிக்க டாலர் சமாச்சாரத்திற்கு வருகிறேன். இச் சம்பவம் இவ்வருடத்தின் ஜூன் மாத நடுப் பகுதியில் நடைபெற்றது. மேற்படி ஒரு டிராக்டர் மணல் 19 கோடி அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது டென்மார்க் நாட்டில் ஆகும். டென்மார்க் நாட்டின்  தலைநகரமாகிய கொப்பன்ஹேகன் மாநகரசபைக்குச் சொந்தமான 'கற்ஹோல்ம்' சிறுவர் பாடசாலைக்கு முன்னால் உள்ள நிலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு லோடு மணல் தேவையாக இருந்தது. அவ்வாறு மணலைக் கொண்டு வந்து தருகின்ற டிராக்டர் உரிமையாளருக்கு 4.500 DKr. டேனிஷ் குரோன்கள் (ஏறத்தாள $900 அமெரிக்க டாலர்கள்) பணம் தருவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன்படி ஒப்பந்த காரரும் ஒரு டிராக்டர் நிரம்ப மணலை குறிப்பிட்ட சிறார் பாடசாலைக்குக் கொண்டு சேர்த்தார். மணல் ஏற்றி இறக்கப் பட்டதும் மேற்படி டிராக்டர் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பும் முயற்சியில் இறங்கிய மாநகர சபையின் கணக்குப் பிரிவு ஊழியர் ஒருவர் தனது பணி நெருக்கடி, பரபரப்பு இவைகளின் மத்தியில் பணம் பட்டுவாடா செய்யப் பயன்படுத்தும் பத்திரத்தில் (Voucher) கொடுக்கப் பட வேண்டிய தொகை எழுதப்பட வேண்டிய இடத்தில் பணம் பெறுபவரின் பணப் பெறுகை அட்டையின் இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் போன்றவற்றைக் கலந்து 957.072.606,57 DKr. (தொண்ணூற்றைந்து கோடியே எழுபது லட்சத்து எழுபத்தி ரெண்டாயிரத்து அறுநூற்று ஆறு குரோன்கள் மற்றும் ஐம்பத்தேழு சதம் டேனிஷ் பணம்) மேற்படி மணல் தந்த டிராக்டர் உரிமையாளருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதி விட்டார். 
அடுத்த சில மணி நேரங்களில் மேற்படி நபர் கணக்கு வைத்திருக்கும் டென்மார்க்கின் பிரபல வங்கியாகிய Nordea வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணப் பரிவர்த்தனைகளை பதிவு செய்யும் வங்கி ஊழியர் ஒருவருக்கு மேற்படி தொகையைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது. என்ன கொடுமை சரவணா? ஒரு டிராக்டர் வைத்து மணல் ஏற்றி இறக்குபவருக்கு மாநகர சபை தொண்ணூற்றைந்து கோடி குரோன் தொகையை வழங்குகிறதா? என்று அதிர்ந்த மேற்படி ஊழியர் தனது மேலதிகாரிகள் ஊடாக மாநகர சபையை எச்சரித்தார். பதறியடித்து, வெலவெலத்துப் போன மாநகர சபை ஊழியர்கள் மேற்படி தொகை குறிப்பிட்ட டிராக்டர் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்குச் சென்று விடாமல் தடுப்பதில் துடிப்போடு செயற்பட்டனர். ஆனாலும் காலம் கடந்து விட்டது. மேற்படி தொகை உரியவரின் வங்கிக் கணக்கிற்குச் சென்று விட்டது. உடனடியாக மேற்படி டிராக்டர் உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு "தங்கள் கணக்கில் தவறுதலாக கோடிக்கணக்கான பணம் வைப்பில் இடப்பட்டு விட்டது அதனைத் திரும்ப நாங்கள் எடுத்துக் கொள்வதற்கு உங்கள் அனுமதி தேவை" என்றனர். அனுமதியை உடனடியாக வழங்கிய டிராக்டர் உரிமையாளர் "எம்புட்டுப் பணம் தவறுதலாப் போட்டீக? என்று வடிவேல் பாணியில் கேட்க, அவர்களும் தொகையைச் சொல்ல, அடி ஆத்தி! ஏன் இந்தக் கொல வெறி? என்று நடுங்கித் தான் போய் விட்டார். அவருடைய வங்கிக் கணக்கில் மேற்படி தொகை வந்து சேர்ந்த சில மணி நேரங்களுக்கு மட்டும் வங்கி அவருக்கு வழங்க வேண்டிய வட்டியின் தொகை 55.000 குரோன்கள்(சுமராக $11.000 அமெரிக்க டாலர்கள்) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மேற்படி தொகையையும் மாநகர சபை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அந்த 'நாணயஸ்தன்' சம்மதித்தார். தனக்கு சேர வேண்டிய மணல் காசு 4500DKr. குரோன்களை மட்டும் பெற்றுக் கொண்டார். 
நன்றி:ritzau மற்றும் 24timer.dk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக