ஆக்கம்:மனுவேல் மகன், பிரான்ஸ்.
இந்த முறை சரஸ்வதி பூசை எங்கள் வீட்டில் தடல் புடலாய் நடந்தது. சரஸ்வதி கடாட்சம் எங்கள் குடும்பத்திற்கு அதிகமாகவே இருப்பதாய் என் மனைவி அட்டகாசப் படுத்தி விட்டார்.பொங்கல் என்ன, சுண்டல் என்ன, அவல் என்ன என்ன?? நானும் "சுந்தரவதனி சுகுண மனோகரி" என ஓம் சக்தி ஓம் பாடி, மனைவி எனக்குப் படைத்த ஒரு பெரியசட்டி பிரசாதத்தை ஒரு கை பார்த்தேன்.
ஒரு வேதக்காரன் இப்படிச்செய்தது ஆரோக்கியமாதாவுக்கு கோபத்தைத் தரும்தானே? இரவு நெஞ்சு முட்டி, மூச்செடுக்க இயலாமல் டொக்டரிடம் போனதில் கைக்கிற மருந்துகளும், மூன்று நாள் ஓய்வும் தண்டனையாகக் கிடைத்தன. அந்த ஓய்விலும் மருந்திலும் பல பழைய கதைகள் நினைவுக்கு வந்தன.
அப்பா!
குடும்பத்துக்கொரு சுவாமியையும் சிஸ்ரரையும் கொண்டிருக்கிற, கரம்பொன் கத்தோலிக்க வேதக்காரன்.
அம்மா!!
செபமாலைக் கன்னியர் சபையின் இரண்டாவது" மதர்ஜெனரல்" ஆய் இருந்த "சிஸ்ரர் "இன் சிறிய மகள்.
அப்பிடியாக்கொத்த குடும்பத்தில் பிறந்த, வருங்காலச் சுவாமியாகிய நான்; 'பொங்கல்' ஆல் திசை மாறிய கதை இது.
எங்கள் வீட்டைச்சுற்றி சொந்தங்கள் சூழ்ந்திருந்தாலும் தெற்குத் திசையில் மட்டும் சைவக்காரக் குடும்பமாய் மகேஸ் மாமி குடும்பம் இருந்தது. சூழ்ந்திருந்த எல்லாச் சொந்தங்களையும்விட மாமி வீட்டு உறவு, அம்மாவுக்கு நெருக்கமானதாயும்,மதிப்புமிக்கதாயும் இருந்தது .'அக்கார வடிசல்' என்று இந்தியர்களால் அழைக்கப்படும் சர்க்கரைப் பொங்கல், ஒரு தைப்பொங்கல் நன்னாளில் மகேஸ் மாமியால் எனக்கு அறிமுகம் ஆகியது.
மாமி போனபின்,அம்மா பொங்கல் மீது சிலுவை அடையாளமிட்டு அதை புனிதப் படுத்த செபம்செய்த பின்னரே எங்களுக்குப் பங்கிட்டளித்தார். நான் முதன் முதலில் பொங்கலைச்சுவைத்தேன். அதன் சுவை என் நாவை விட்டு அகலப் பல நாள் ஆகியது." எப்ப அம்மா தைப்பொங்கல் வரும்" என்று அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினேன் . அம்மா "சும்மா இரடா" என்று வெருட்டிப் பார்த்தா. "போசனப்பிரியம் சாவான பாவம்" என்று அறிவுரை சொன்னா. ஒண்டுக்கும் அடங்காத எனக்கு, அப்பாவின் சிபாரிசில் அம்மா பொங்கல் செய்து தந்தா. பார்க்கப் பொங்கல் மாதிரியே இருந்தது."தமிழ்ப் பொம்பிளைகளின்(சைவக்காரப் பெண்கள்) கைப் பக்குவம் வேதக்காரப் பொம்பிளைகளுக்கு வராது." என்ற அப்பாவின் கொமேன்றிற்கு, அம்மா ஒரு கிழமை அப்பாவோடு பனிப்போர் நடத்தினது இப்பவும் நினைவிருக்கிறது.
கடைசியாய் "இப்ப கிட்டடியில் சரஸ்வதி பூசை வரும். மாமி வீட்டிலிருந்து பொங்கலும் வரும்" என்று அம்மா என்னை ஆறுதல் படுத்தினா. நான் சரஸ்வதி பூசைக்காய் காத்திருந்தேன்.
பள்ளிக்குப் போகத்தொடங்கியபோது ஆலு ரீச்சரால் 'தைத்திருநாள் இல்லமெல்லாம்' பாட்டு சொல்லித்தரப்பட, "வெண்ணிறப் பால் பொங்கிவர வெடி சுடுவோம் நாங்கள்" என்ற வரி என்னைப் பிடித்துக் கொண்டது.ஆலு ரீச்சரின் விமர்சிப்பில் என் மனக்கண் முன்னால் எங்கள் வீட்டில் ஒரு பொங்கலே கொண்டாடி முடித்தேன். எனக்கு வகுப்பு நேரத்திலேயே அழுகை வந்தது. குடும்ப நண்பராகிய ஆலு ரீச்சர், அப்பாவிடம் நான் அழுதகதையச் சொல்ல; அப்பா அடுத்த தைப்பொங்கலில் இருந்து பொங்கலுக்கு சரவெடி வாங்கத் தொடங்கினார்.பொங்கலன்று காலையில் நாங்களும் குளித்து முழுகி, நத்தாருக்கு எடுத்த புது உடுப்புகள் போட்டு, சரவெடியை மாமரத்தில் கட்டி விட்டு மகேஸ் மாமிக்காய் காத்திருப்போம். மாமி கொண்டுவரும் பொங்கல் கிண்ணம் அம்மாவிடம் கைமாறும்போது அண்ணா அம்மாவையும் மாமியையும் அப்படியே அசையாமல் நிக்கச்சொல்லிவிட்டு சரவெடியைக் கொளுத்துவான். நாங்கள் எல்லோரும் "பொங்கலோ பொங்கல், மகேஸ் மாமிவீட்டுப் பொங்கலோ பொங்கல் "என்று கோஷமிடுவோம்.மாமி சிரித்துக் கொண்டே போவார். அம்மா சீ......... இதென்ன வெக்கக் கேடு என்று கடிந்து கொள்ளுவார்.
பள்ளி நாட்களில் எனக்கு கருப்பையா, ரம்புட்டான், விசுக்கோத்து, பிரக்கிராசி என்ற பட்டப் பெயர்களையுடைய, சைவக்கார நண்பர்கள் நாலு பேர் இருந்தார்கள். (இப்போது இவர்கள், என்னால் பிடிக்க முடியாத உச்சத்தில் இருப்பது அது தனிக் கதை.)
மாலை நேரங்களில் முருகன் கோயிலடியில்தான் நாங்கள் கிளித்தட்டு, வட்டக்கோடு, அல்லது 'ஆஸ்பெயில்' விளையாடிக்கொண்டிருப்போம். கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை கருப்பையா திடீரெனப் பக்திமானாய் ஆனான். விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டு "நான் கோயிலுக்குப் போகப்போறன் " என்று கால் முகம் கழுவ வீட்டுக்குப் புறப்பட்டான்.
ஒவ்வொரு வெள்ளியும் முருகன் கோவிலில் மாலைப் பூசை விமரிசையாய் நடக்கும். மற்ற நண்பர்களும் கோயிலுக்குப் போக முடிவுசெய்து விளையாட்டை நிறுத்தினர். என்னையும் வரச்சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன்.
ஒரு வேதக்காரப் பொடியன் சைவக்கோயிலுக்குப் போவது முப்புறத் தாக்குதலைத் தரும். கோயிலுக்குப் போனதைக் கண்ட உறவினர்கள் யாராவது பிறடியில் அடிக்கலாம், நான் போகமுதல் விசயம் வீட்ட போயிரும். அம்மாவோ அப்பாவோ பூவரசம் தடி முறியும்வரை காலில் அடிக்கலாம், அடுத்த ஞாயிற்றுக்கிழமை பூசை முடிய சுவாமி காதைப் பிச்செடுக்கலாம். இந்தப் பயத்தோடும் 'ஒரே சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்' என்ற பக்தியோடும், "நீ சுவாமியாய்ப் போக வேணும்" என்ற அம்மாவின் ஆசையோடும் நான் மறுக்க, நண்பர்கள் வற்புறுத்த, இதைப் பார்த்த 'ஆலு ரீச்சர்' சும்மா கோயிலுக்குப் போனாப் பிழை இல்லை நாங்களெல்லாம் மாதாங்கோயிலுக்குப் போறம்தானே" என்று சமாளிக்க, நான் முதல் முறையாக முருகன் கோயிலுக்குப் போனேன்.
பூசை முடிய பிரசாதமாய் பொங்கல் தரப் பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு வெள்ளியும் கோயில்தான். ஆலு ரீச்சரின் பெயர், அப்பாவிடம் இருந்து என்னைக் காப்பாற்ற மற்றப் பக்கத்துத் தாக்குதல்கள் நடந்தது. சொந்தமெல்லாம் நக்கலடிக்க, சுவாமி தலையில் அடிக்க, அண்ணன் கலைச்சுக் கலைச்சு அடிக்க எனக்கு வேதக்காரரிலேயே கோவம் வந்தது. அம்மாவின் சுவாமியாய்ப் போற ஆசையைத் தூக்கி எறிஞ்சேன். பள்ளியில் சைவ பரிபாலன சபை சோதனை எழுதினேன்.தேவாரப் போட்டிக்குப் போனேன். நல்லை ஆதீனத்துக்குப் பேச்சுப் போட்டிக்குப் போனேன். ஆனால் ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கு மெல்ல மெல்லப் போகாமல் விட்டேன்.
சப்பாத்து, மேஸ் போட்டு அமைதியாய் "உன்னதங்களிலே ஓசான்னா " பாடுவதை விட, மார்கழிக் குளிரில் விடிகாலை எழுந்து, வரிந்து கட்டிய சாரத்துடன் நண்பர்களுடன் "எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே" என ஊரைச்சுற்றி பாடி வருவது மகிழ்வைத் தந்தது. இப்படி ஒரு மார்கழி மாதத்தில் நான் திருவெம்பாவை பாடி முடித்து கோவில் பிரசாதத்துடன் வீடு திரும்ப, அண்ணன் வாசலிலேயே காவல் நின்றான்.முதல் நாள்தான் மார்கழி விடுமுறைக்காய் பள்ளியிலிருந்து வந்திருந்தான். பொங்கல் சாப்பிடவே இப்படி வீட்டுமானம்போக, நான் ஊர் சுற்றுவதாய் கூச்சலிட்டு அடி பின்னிஎடுத்தான். அம்மாவுடன் சேர்ந்து அயலவர்களான மச்சாள் ,சித்தி, பெரியம்மா, சின்னமாமி என எல்லோரும் "நல்லாக்குடடா இனி இவன் சைவக் கோயில் பக்கம் தலை வைக்கக் கூடாது " என அண்ணனை சப்போட் பண்ண அவன் 'வைரவர்கலை' வந்த 'மூத்தாம்பியர்' மாதிரி வெளுத்து வாங்கினான்.
உறவெல்லாம் வன்மம் தீர்க்க, பின்வேலி பாஞ்சு மகேஸ்மாமி வீட்டில் தஞ்சம் புகுந்தேன். மாமிதான் எனக்கு ஆறுதல் சொல்லி அடிகாயத்துக்கு நல்லெண்ணெய் போட்டா .அப்ப எனக்கு இந்த வேதக்காரரின் குணம் அறவே பிடிக்காமல் போக, நான் சைவக்காரனாய் மாற சபதம் பண்ணினேன்.
எப்படி மாறுவது? மறுநாள் நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியதில், ஒரு சைவக் காரப் பிள்ளையை சைட் அடித்து கல்யாணம் பண்ணுவது. என்று ஒரு நண்பன் ஒரு ஐடியா சொன்னான். நண்பர்கள் எனக்கேற்ற ஊர்ப் பிள்ளை யார்? என்று விவாதம் நடத்தத் தொடங்கினார்கள் .எனக்கு அப்பாவின் விறைத்த கையும், வீட்டுக்கூரைக்குள் செருகியிருக்கும் செப்புப் பிடி போட்ட வாளும் ஞாபகம் வர, நண்பர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனேன்.
பத்தாவது பாஸ் பண்ணி, உயர்தரம் படிக்க பட்டணம் போனேன்.அப்ப சைவக் கோயில், பொங்கல் ,மதமாற்றம் எல்லாம் மறந்து படிப்பில் மூழ்கிப் போனேன். என்னையும் அறியாமல் என் சபதம் என்னைத் தொடர்ந்து வந்தது . அது கடல் கடந்து, நாடுகள் கடந்து, ஒரு தசாப்தம் கடந்து, என்னளவில் மதம் கடவுள் என்பவற்றுக்கான இலக்கணங்கள் மாறிய பின்னும், நான் 'எந்தமதமும் அற்றவன்' என்று ஆன பின்னும் தொடர்ந்தது. நிறைவேறியது. இப்ப எங்கள் வீடு சைவக்கார வீடு(ம்)ஆகிப் போச்சு.
பின் குறிப்பு:- சில நாட்களுக்கு முன் இருபத்தைந்து வருடங்கள் கழித்து என்னைச் சந்தித்த என் பால்ய நண்பன் "கடைசியாய் என்ர ஐடியாதான் வேலை செய்திருக்குது" என நக்கலாய் சிரித்தான்.