வியாழன், அக்டோபர் 31, 2013

ஹலோவீன், ஏன், எதற்கு?

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
நாம் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த காலம் தொட்டே, அர்த்தம் தெரிந்தும், தெரியாமலும், உணர்ந்தும், உணராமலும், பல மேலைத்தேயக் கொண்டாட்டங்களைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவற்றில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர் போன்றவை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கிறீஸ்தவ மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவையாகும். இதற்குக் காரணமாக இலங்கையும், இந்தியாவும் மேற்கத்தைய நாட்டவர்களின் ஆட்சிக்குள் பல நூற்றாண்டுகள் உட்பட்டிருந்ததைக் கூறலாம்.
இதற்கடுத்தாற்போல், புலம்பெயர் மக்களிடையே இன்று பிரபலம் பெற்றுவரும் ஒரு கொண்டாட்டம் அல்லது விளையாட்டு ஒன்று உண்டென்றால் அது 'ஹலோவீன்' என்ற குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் விளையாட்டாகும்.
இது ஒரு மதச்சார்பற்ற விளையாட்டாக அமைந்திருப்பதால்,  நாம் குடி புகுந்துள்ள இந்தத் தேசங்களில், பெரும்பாலான பெற்றோர்கள் தயங்காமல் தமது பிள்ளைகளை கலந்து கொள்ள அனுமதிக்கின்றனர். "ரோமாபுரியில் ரோமானியனாக இரு"(Be a Roman, when you are in Rom) என்ற ஆங்கிலப் பழமொழி இங்கு மேற்கத்திய நாடுகளில் பிரபலம், அப்பழமொழிக்கு நிகரான பழமொழி ஒன்று நமது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு "ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு, ஊரே ஓடினால் ஒத்து ஓடு' என்பதுதான் அதுவாகும். அநேகமாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பாலானோர் இக்கொள்கைக்கு அமைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகவே, நான் கருதுகிறேன்.நன்றி: http://thrillgeek.com
இந்தச் சிறுவர் சிறுமியரைக் கவர்ந்திழுக்கும் 'ஹலோவீன்' கொண்டாட்டத்தில், அல்லது விளையாட்டில் நமது முன்னோர்களின் 'பேய், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள், மந்திர, தந்திர வித்தைகள், சூனியக் கிழவி, திகிலூட்டும் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள் பிரதிபலிப்பதையும், இழையோடியிருப்பதையும் காண முடியும். இதில் நீங்கள் பின்வரும் விடயங்களை குழந்தைகள் மத்தியில் அவதானிக்க முடியும்:

  1. பலவிதமான பயமுறுத்தும் மாறுவேடங்கள் அணிவது.
  2. மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது.
  3. மாறுவேட விருந்துகளில் கலந்துகொள்வது.
  4. பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது.
  5. திகிலூட்டும் திரைப்படங்களைப் பார்ப்பது.
  6. நம்மூரில் கார்த்திகைத் தீபத்திற்கு(விளக்கீடு) வீட்டிற்கு வெளியே அல்லது வாயிலில் 'சொக்கப்பனை' எரிப்பதுபோல், இங்கும் பூசணிக்காயில் செய்த அல்லது குடைந்து உருவாக்கிய திகிலூட்டும் உருவத்திற்குள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அடுத்தவர்களைப் பயமுறுத்துவது போன்றவை.

மேலே கூறப்பட்ட விடயங்களில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவாரசியமான ஓர் விளையாட்டாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.
இவ்விளையாட்டின் வேர்கள் கிறீஸ்தவ சமயத்திலிருந்து வந்தாலும், இன்று உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழி, கலாச்சாரம் பின்பற்றப்படும் நாடுகளில் அனைத்து இன, மத மக்களாலும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஒக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இக்கொண்டாடம் முதலில் அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டில் 'அனைத்துத் துறவியர் தினமாகவும்'(All saint's day) பிற்பட்ட காலப் பகுதியில் 'அறுவடைத் திருவிழாவாகவும்' கொண்டாடப் பட்டது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக 'சாத்தான்கள்' விரட்டியடிக்கப்படும்' ஒரு சமய மற்றும் கலை நிகழ்வாக இது மாற்றம்பெற்று, இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளின் முக்கியத்துவமான கொண்டாட்டமாகவும், விடுமுறைத் தினமாகவும் மாறிவிட்டது.
இவ்விளையாட்டை விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று கூறுகின்ற கிறீஸ்தவ மத அமைப்புகளும் உள்ளன. இவ்விளையாட்டு "சாத்தான்கள், பேய்கள் பற்றிய நம்பிக்கைகளைக்' குழந்தைகளின் மனதில் விதைக்கின்றன, சிறுவயதிலேயே அவர்களைப் பயந்த தன்மையுள்ளவர்களாக ஆக்குகின்றது" என்பது அவைகளின் வாதம். ஆனால் குழந்தைகள் சுவாரசியமாக விளையாடுகின்ற இந்த விளையாட்டில் பெரியவர்கள் ஏன் தலையிடவேண்டும்? என்பது எதிரணியினரின் வாதமாகும்.
ஆபிரிக்காக் கண்டத்தில் மத அமைப்புகளின் கண்டனங்களால் இவ்விளையாட்டு பெரிய அளவில் பிரபலம் பெறவில்லை, இருப்பினும் 'உலகமயமாக்கல்' என்ற சித்தாந்தத்தில் ஊறிப்போயிருக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளாகிய மேற்கத்திய நாடுகளில், மக்களின் அபிமானம் பெற்ற ஒரு கொண்டாட்டமாக இது திகழ்கிறது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையர் சீறின் இடைமுரிந்து 
வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: உயர்ந்த விரதங்களையுடையோர் வெகுள்வாராயின் (கோபப்பட்டால்) இந்திரன் போன்ற வாழ்க்கையையுடையவனும் அப்போதே அழிவான்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
 
தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முழுமையான முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனைப்  படுபாதாளத்தில் தள்ளி விடும் .

புதன், அக்டோபர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு 
நின்றுஅன்னார் மாய்வர் நிலத்து. (898)

பொருள்: குன்றத்தை(மலையை) ஒக்கும் அருந்தவத்தவர் கெட நினைப்பாராயின் குடியோடு நிலை பெற்றார் போன்ற பெருஞ்செல்வரும் மாய்வர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நல்லவர்களின் அறிவுரைகள் தங்க நகைகளை விடப் பெறுமதி வாய்ந்தவை.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: Listening to good advice is worth much more than jewellery made of gold.

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க?
முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?


ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

நன்றி: தினகரன்

செவ்வாய், அக்டோபர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம் 
தகைமாண்ட தக்கார் செறின். (897)

பொருள்: தகுதிகள் நிறைந்த அறிவுடையவரின் கோபத்துக்கு ஆளானவர் பலவகையான பெருமைகளுக்குரியவராகவும், நிறைய செல்வம் உடையவராகவும் வாழ்ந்தாலும் என்ன பயன்? அவர்கள் அழிவது உறுதி. 

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

'பகவத் கீதை' எனும் நூல் எங்குள்ளதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ, அங்கு புண்ணிய தீர்த்தங்களும், நல்ல தவத்தினாற் கிடைக்கக் கூடிய அருளும் வந்து கூடுகின்றன.  

திங்கள், அக்டோபர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம்; உய்யார் 
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். (896)

பொருள்: நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் பெரியாரை அவமதிப்பவர் தப்பிப் பிழைக்க இயலாது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

கோபம் கொண்ட மனிதன் ஆபத்தானவன். ஆனால் பொறாமை கொண்ட மனிதன் கோபம் கொண்ட மனிதனை விட ஆபத்தானவன்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "An angry person is dangerous, but a jealous person is even worse".

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின் 
வேந்து செறப்பட் டவர். (895)

பொருள்: மிக்க வலிமையுடைய அரசனால் வெகுளப்பட்டவர்(கோபத்திற்கு ஆளானவர்) அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது  

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் அங்கியை(கீழ் ஆடையை) அவர் எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள். உங்களை அவர்  ஒரு கல் தொலைவு(ஒரு மைல்) வருமாறு கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலைவு செல்லுங்கள்.

சனி, அக்டோபர் 26, 2013

இன்று நேர மாற்றம், மறக்க வேண்டாம்!

இன்று சனிக்கிழமை (26.10.2013)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு) நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர் அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
www.anthimaalai.dk

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

கூற்றத்தைக் கையால் விளித்துஅற்றால் ஆற்றுவார்க்கு 
ஆற்றாதார் இன்னா செயல். (894)

பொருள்: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய முற்படுதல், கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்ற செயலாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இனிய சொற்கள் 'தேன்' போன்றவை. அவைகளால் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் இனிமையே பிறக்கும். அவை நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவது மட்டுமன்றி நம்மை பலமானவர்களாகவும் மாற்றுகின்றன.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "Kind words are like honey. They cheer you up and make you feel strong.

வெள்ளி, அக்டோபர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

கெடல்வேண்டின் கேளாது செய்க, அடல்வேண்டின் 
ஆற்று பவர்கண் இழுக்கு. (893)
பொருள்: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய முற்படுதல், கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்ற செயலாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அதிர்ஷ்டம் வீரனைக் கண்டு அஞ்சுகிறது. கோழைகளைத் திணற அடிக்கிறது. 

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "Fortune fears the brave, the cowardly overwhelms".

வியாழன், அக்டோபர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 
பேரா இடும்பை தரும். (892)
 
பொருள்: வேந்தன் பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அது அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மன நோயைத் தாங்கி கொள்ள முடியாது.மனத்தை நோய் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதன், அக்டோபர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் 
போற்றலுள் எல்லாம் தலை. (891)

பொருள்: மேற்கொண்ட செயல்களை முடிக்க வல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

செல்வத்தைத் தேடி நட்பு வரும். ஏழ்மை அந்நட்பைச் சோதிக்கும்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "Prosperity gains friends but adversity tries them".

செவ்வாய், அக்டோபர் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 
பாம்போடு உடன்உறைந் துஅற்று. (890) 

பொருள்: மனப் பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்போடு உடன் வாழ்வதைப் போன்றது.

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

கீதையைத் தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மகாபாவமும் தீண்டுவது கிடையாது. தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாது இருப்பது போன்று உலகப் பற்றுக்களில் இருந்தும் அவன் விடுபட்டு இருப்பான். 

திங்கள், அக்டோபர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் 
உட்பகை உள்ளதாம் கேடு. (889)

பொருள்: மன்னனது உட்பகை எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும் அவன் பெருமையெல்லாம் அதனால் பிற்காலத்தில் கெட்டு விடும். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு கலங்கி நிற்கிறோம். அவை நிரந்தரமானவை என்று எண்ணி அச்சமடைகிறோம். உலகில் எதுவும் நிரந்தரமானதல்ல. துன்பங்கள் மட்டுமல்ல. இன்பங்களும்தான்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "nothing is stable in tis world"

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது 
உட்பகை உற்ற குடி. (888)
 
பொருள்: உட்பகை உண்டாகிய குடும்பம் அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

யார் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம். நீங்கள் பேசும் போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

சனி, அக்டோபர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே 
உட்பகை உற்ற குடி. (887)

பொருள்: செப்பினது மூடி பொருந்தியிருப்பது போலப் புறத்து வேற்றுமை தெரியாமல் கூடினராயினும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உலகில் எதுவும் வீணாகிப் போக வாய்ப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதனின் 'விடாமுயற்சி' ஒருபோதும் வீணாகாது.

*இதற்கு ஒப்பான ஆங்கிலப் பொன்மொழி: Perseverance prevails

வெள்ளி, அக்டோபர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

ஒன்றாமை ஒன்றியார் கண்படின்; எஞ்ஞான்றும் 
பொன்றாமை ஒன்றல் அரிது. (886)

பொருள்: மன்னனுக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், அந்த உட்பகையால் அவன் அழியாமல் இருத்தல் எப்போதும் அரிது.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

"இவனை நம்பு, அல்லது அவனை நம்பு" என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

நன்றி: இருவர்உள்ளம்

வியாழன், அக்டோபர் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 
ஏதம் பலவும் தரும். (885)

பொருள்: உறவு முறையோடு உட்பகை உண்டாகுமானால் அது மன்னனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் தரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வாய்ப்பு என்பது தானாக வருவதில்லை. மனிதன் தானே உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து கொள்வதற்கிடையில் வாழ்நாளில் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

ஆக்கம்: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில், இந்தியா 
(muthukamalam.com)


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
 
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
 
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
 
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
 
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
 
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
 
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
 
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
 
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

புதன், அக்டோபர் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா 
ஏதம் பலவும் தரும். (884) 

பொருள்: உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால் மன்னன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால் அது சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்து விடும்.

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

கேள்வி: பகவானே! பரமேஸா! உலக இன்பங்களின் கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் நிகரில்லாத பக்தியையும், அறிவையும் பெறுவது எப்படி?

பதில்: பகவத் கீதையின் பயிற்சியில் ஒருவன் தினமும் மகிழ்ந்திருப்பானேயானால், உலகப் பற்றுக்களில் கட்டுண்டு கிடந்தாலும் அவனே முனிவன். இவ்வுலகத்தில் சுகங்களை அனுபவித்து  வாழ்ந்தாலும் அவன் தவத்தில் தொய்வுறாத முனிவனுக்கு நிகரானவன் 

செவ்வாய், அக்டோபர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவிடத்து 
மட்பகையின் மாணத் தெறும். (883)

பொருள்: உட்பகையாக ஆனாரை அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை(மண்ணால் ஆன பாத்திரத்தை) அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை தவறாமல் அழிவைத் தரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

யார் புகழ்ச்சியில் பேராசையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கிறார்கள்.

திங்கள், அக்டோபர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக 
கேள்போல் பகைவர் தொடர்பு. (882)

பொருள்: வாளைப்போல் வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். ஆனால் சுற்றத்தார் போல அன்பு காட்டி உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். 

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 

தன் மனைவியானவள் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்தால் மட்டுமே அவளைக் கணவன் விலக்கி வைக்கலாம். அவ்வாறன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படி செய்வோர் எவரும் அவளை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். இழிவான ஒழுக்கத்தின் நிமித்தம் விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்ததற்கு ஒப்பானவர்கள்.

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை


நிழல்நீரும் இன்னாத இன்னா; தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். (881)

பொருள்: இன்பம் தரும் நிழலும், நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவேயாகும்; அதுபோல சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் தருமானால் தீயனவேயாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்இளமையில் உற்சாகமும், முதுமையில் மகிழ்ச்சியும் வேண்டுமா? இலக்கியங்களைப் படியுங்கள்.

சனி, அக்டோபர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

உயிர்ப்ப உளர்அல்லர், மன்ற செயிர்ப்பவர் 
செம்மல் சிதைக்கலா தார். (880)

பொருள்: பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு இருந்தும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர் உயிரோடு இருந்தும் பயன் இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

வெள்ளி, அக்டோபர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் 
கைகொல்லும் காழ்த்த இடத்து. (879)

பொருள்: முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும். காழ்ப்பு(கசப்பு உணர்வும்) உணர்வும் அத்தகையதே. முள் மரம் வளர்ந்து பெரிய மரமானால் அதை வெட்டுகின்றவரின் கையை வருத்துவது போல வளர்ந்துவிட்ட பகையும் நம்மை வருத்தும்.