திங்கள், ஜனவரி 31, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின் (17)

பொருள்: மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.

ஞாயிறு, ஜனவரி 30, 2011

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 12

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது


மழைத் தண்ணீரைச் சேகரித்து உபயோகித்தல் 
இக்கட்டுரையில் கடந்த சில அத்தியாயங்களின் தலைப்பாக 'சிங்கப்பூர் வழிகாட்டுகிறது' என்று நான் எழுதியதற்குக் காரணம், அந்நாடு மேற்படி திட்டங்களை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, மேற்படி 'மழைநீரைச் சேகரிக்கும்' திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறி சிங்கப்பூரின் பிரதான விமான நிலையமாகிய 'சாங்கி விமான நிலையத்தின்' (Changi Airport)  சுற்றாடல், மாடிக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல் 'விமான ஓடுபாதையிலும்' கிடைக்கும் மழைத் தண்ணீரை மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் சேகரித்து விமான நிலையத்தின் தண்ணீர்த் தேவையில் 1/3 (மூன்றிலொரு பங்கு) பங்கை ஈடு செய்கிறது. இதன்மூலம் அப்பகுதியில் மட்டும் வருடமொன்றுக்கு 390,000 அமெரிக்க டொலர்களைச் சேமிக்க முடிகிறது(மிச்சம் பிடிக்க முடிகிறது.


சரி இப்போது இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறதல்லவா? அதாவது மழைநீரைச் சேகரித்து உபயோகிக்கும்போது அத் தண்ணீர் குடிப்பதற்கோ, அன்றேல் சமைப்பதற்கோ ஏற்றதா? என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கைதானே? இதற்கான பதில் "இல்லை" என்பதாகும். சரி அவ்வாறாயின் ஏன்? என்றொரு புதிய கேள்வியும் எழுகிறதல்லவா? அக்கேள்விக்கான விடை இதுதான்: அதாவது மாடிக் கட்டிடங்களின் மேற்பரப்புகள், வீடுகளின் கூரைகள் போன்றவற்றினூடாக ஓடிவரும் மழைத் தண்ணீரில் காற்றிலுள்ள மாசுக்கள்(தூசிப்படலம், வாகனங்களின் புகையால் உண்டாகிய கார்பன் படலம் போன்றவை) கலப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் இத்தகைய தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்பதே மேற்படி கேள்விக்கான விடையாகும். சரி அவ்வாறாயின் இத் தண்ணீரை ஏன் சேகரிக்கிறார்கள்? எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? என்ற புதிய கேள்விகள் முளைக்கின்றன. அவற்றிற்கும் விடை உள்ளது. கடந்த அத்தியாயத்தை ஒரு தடவை திரும்பவும் பார்க்கவும். அதாவது கடந்த அத்தியாயத்தில் நான் கூறியது போல இத் தண்ணீரானது, குடித்தல், சமைத்தல் போன்ற தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகள் அத்தனைக்கும் பயன்படுகிறது. உதாரணமாக: நீச்சற் தடாகங்கள், தீயணைப்பு, குளித்தல், மலசலகூடத் தண்ணீர்த் தேவை, மரம்,செடி, கொடிகளுக்கு நீர்பாய்ச்சுதல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படுகிறது.
சரி குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ உபயோகிக்க முடியாத இம்மழைத் தண்ணீரை, மேற்கூறிய தேவைகளுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? என்றொரு கேள்வியும் எழலாம். அதற்கும் பதில் உள்ளது. அதாவது இம்மழைத் தண்ணீர் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளிலேயே சேகரிக்கப் படுகிறது. விரிவாகக் கூறுவதாயின் ஒரு நாளில் மழை பெய்யும்போது, மாடிக்கட்டிடங்களின் வழியாகவும், வீட்டுக் கூரைகளின் வழியாகவும் ஓடுகின்ற தண்ணீரில் முதல் பதினைந்து நிமிடங்களும் ஓடுகின்ற தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு சென்று சேராதவாறும், பதினாறாவது நிமிடத்திலிருந்து மழைத்தண்ணீர் சேகரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும் பொறிமுறை(Mechanism) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. காரணம் மாடிகளிலும், வீட்டுக் கூரைகளிலும் படிந்து கிடக்கும், அழுக்கு, தூசிப்படலம், வாகனங்களின் புகை போன்றவை இந்த முதல் 15 நிமிடமும் பெய்கின்ற மழையில் கழுவிச் செல்லப் பட்டுவிடும். மீதியாக 16 ஆவது நிமிடத்திலிருந்து தொடர்ந்து எத்தனை நிமிடங்கள்/மணித்தியாலங்கள் மழை பெய்கிறதோ, அவ்வளவு மழைநீரும் 'மழைநீர் சேகரிப்பு நிலையத்திற்கு' சென்று சேருகின்ற வகையிலேயே பொறிமுறைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு சிக்கலான ஒரு செயற்திட்டமாக இருப்பினும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஏன் இத் திட்டத்தை பின்பற்றுகின்றன?. அதற்கும் காரணம் இருக்கிறது. உலகிலேயே தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நாடுகளின் வரிசையில் 'முதலாமிடத்தில்' இருப்பது சிங்கப்பூர் ஆகும். வழமையாக ஒரு நாட்டில், பல வருடங்கள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே அந்நாடு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் பட்டியலில் சேரும். இவ்வாறிருக்கையில் வருடாந்தம் 2400 மில்லி மீற்றர் மழை பெறும் 'சிங்கப்பூர்' எவ்வாறு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திற்கு வந்தது?
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே 
பசும்புல் தலைகாண்பு அரிது. (16)

பொருள்: மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது.

சனி, ஜனவரி 29, 2011

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.
கடந்த அத்தியாயத்தில் "மேற்கத்திய நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்தும், உடல் ஊனமுள்ள குழந்தைகள் அதிகம் பிறப்பது ஏன்? என்றொரு கேள்வியை வாசகர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு சில வாசகர்கள் தமது பதில்களை 'ஊகத்தின்' அடிப்படையில் எழுதியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஏற்புடையதாக இல்லாதிருப்பினும், பதிலளித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


மீண்டும் 'கருத்தடை முறைகளில்' ஏற்படும் குறைபாடுகளுக்கே வருகிறேன். மேற்கத்திய நாடுகளில் பதின்ம வயதிலேயே (Teenage) இளையோர் தமது மனதுக்குப் பிடித்த ஒரு இணையை (Mate) காதலனாகவோ அன்றேல் காதலியாகவோ தேர்வு செய்து அவருடன் நெருங்கிப் பழகுதல் ஒரு சாதாரண விடயம் ஆகும். இத்தகைய இளையோரில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்திற்கு முன்பே தனது காதலன்/காதலியுடன் சேர்ந்து வாழ்வதும், பாலுறவில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். இத்தகைய சோடிகளில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற எண்ணமும், பொருளாதார நெருக்கடி பற்றிய பய உணர்வுமே காரணமாகும். அத்துடன் இப்பராயத்தினரில் பலர் ஏதாவதொரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களாக இருப்பர். அவர்களில் பெண்கள் ஒரு குழந்தைக்குத் தாயாகுமிடத்து அவர்களது கல்வி பின்தள்ளப் படும் அல்லது இடைநிறுத்தப் படும் ஏதுநிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 'கர்ப்பத்தடை' முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.


இவ்வாறு பதின்ம வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறிப்பிட்ட வயதிற்குள் குறைவடைவதுடன், அவர்களது கருப்பையின் ஆரோக்கியம் மிகவும் குறைவடைகிறது. எவ்வாறு எமது உள்ளுறுப்புகளில் நிகழும் செயற்பாடுகளுக்கும், இயக்கத்திற்கும் கூட 'மூளை' பொறுப்பாகிறதோ அதேபோன்று பெண்களின் கருப்பையின் செயற்பாட்டிற்கும், சினைப்பையின் (Ovary) ஒழுங்கான இயக்கத்திற்கும் மூளை காரணமாகிறது. இதைப் பெரும்பாலான பெண்கள் தமது வாழ்நாளில் உணர்வதேயில்லை. நான் மேலே குறிப்பிடட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில், காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள் 



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)

பொருள்: பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும், அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.  


வெள்ளி, ஜனவரி 28, 2011

மண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 12


ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
கம்போடியாவில் பெரிய கோவிலுக்கருகில் பனையும் வடலிகளும் 

கடந்த சில வாரங்களாக இத்தொடரில் 'கிறிஸ்துமஸ்' மரத்தைப் பற்றியும், இலங்கை 'மண்ணில்' ஆங்கிலேய ஆட்சியில் விளைந்த சில அனுகூலங்களையும் பார்த்தோம். அனுகூலங்களில் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டபோதும், பிரதிகூலங்களை(Disadvantages) பட்டியலிடாமல் தவிர்த்தமைக்கான காரணத்தை கூறவேண்டிய கடப்பாடு அடியேனுக்குள்ளது. அதாவது ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட தீமைகளை பட்டியலிட்டால் கட்டுரையின் திசை மாறிவிடும். அதேபோல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளைவிட இலங்கை மண்ணிலும், மனிதர்கள் மத்தியிலும் நன்மைகளை ஓரளவுக்கேனும் தந்த ஆட்சி என்றால் அது 'ஆங்கிலேய' ஆட்சி என்பதே எனது கடந்த வார அத்தியாயத்தின் கருப் பொருளாக இருந்தது.


பிள்ளையோ பிள்ளை

எமது மக்கள் மண்ணை மட்டும் நேசிக்கவில்லை, மரங்களையும் நேசிக்கிறார்கள், பறவைகள், மிருகங்கள், பிராணிகள் என அத்தனையையும் நேசிக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த ஒரு விடயமே, ஆனால் சிறு வயது முதலே என்னை ஆச்சரியப் படவைத்த தமிழ் மக்களின் 'சொல்வழக்கு' பற்றி இந்த வாரம் சிறிது ஆராய இருக்கிறேன். முதலாவதாக எமது கற்பக தருவாம் பனை மரத்தை எடுத்துக் கொண்டால், அது பாண்டியர்களின் கொடியிலும், கம்போடியாவின் தேசியச் சின்னமாகவும், அதேவேளை  உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலாகவும் விளங்கிய(தற்போது அது பௌத்த கோவிலாக மாற்றப்பட்டு விட்டது) கம்போடியாவின்  'அங்கோர் கோயில்'(ankor  wat) அருகில் நின்று கொண்டிருப்பதால் உலகின் கண்களிலும், புகைப்படக் கருவிகளிலும்(Camera) நின்று 'தமிழர் ஆட்சியை' உலகிற்கு எடுத்தியம்பிக்  கொண்டிருக்கிறது. கம்போடியாவைத் தமிழர்கள்(சோழர்கள்) ஆண்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை இத்தொடரின் பிறிதொரு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறேன்.




சரி பனை மரத்திற்கும், இத்தொடருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?காரணம் இருக்கிறது. பனையில் இளமையானதைத் தமிழ் மக்கள் 'வடலி' என்று அழைப்பது/கூறுவது வழக்கம். ஆனால் தென்னையில் இளமையானதைத் 'தென்னங்கன்று' என்று கூறுவார்கள். இது என்னை ஆச்சரியப் படுத்தவில்லை, ஆனால் தமிழ் மக்களில் பெரும்பாலானோர்(விசேடமாக இலங்கைத் தமிழர்) தென்னை மரத்தைத் 'தென்னம்பிள்ளை' என்றல்லவா கூறுகிறார்கள். இது ஆச்சரியமான ஒரு விடயமல்லவா? பனையானது தமிழ் மக்களுக்கு கேட்பதை எல்லாம் தருவதால், தென்னை மரத்தை விடப் பனையின் பயன்கள் அதிகம் என்பதால் அது தமிழில் 'கற்பகதரு' எனப் பெயர் பெற்றது நியாயமானதே. ஆனால் பனையைத் தென்னையை விட அதிகம் நேசிக்கும் தமிழ் மக்கள் பனையை ஒருபோதும் 'பனைப்பிள்ளை' என்று கூறுவதில்லையே. இங்குதான் நம் 'தமிழன்னை' சற்றுத் தடுமாறுகிறாள். இதைப் போலவே 'பாக்கு மரத்தையும்' யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'கமுகம்பிள்ளை' என்று கூறுகின்ற வழக்கம் உள்ளது. குறிப்பாக வலிகாமம் கிழக்கு, வடக்கு பகுதி மக்கள் பாக்கு மரத்தை  'கமுகம்பிள்ளை' என்றே கூறுவார்கள். இதற்கான காரணம் யாது? என்று அப்பகுதி மக்களில் எவரேனும், அல்லது தமிழ்ப்புலமை மிக்கோர் விளக்கினால் நன்று.

.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 





ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)

பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால், உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழமுடியாமல் துன்புறுவர். 

வியாழன், ஜனவரி 27, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 15

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
அவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.
மிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.



அதாவது கொலம்பஸ் திருட்டுத் தனமாக எடுத்துக்கொண்டு சென்ற படகிற்குரிய பெறுமதியாகிய 200 புளோரின்களை(அக்காலத்து ஜெனோவா நாட்டு நாணயம்) படகிற்குச் சொந்தக் காரனாகிய ஒரு மீனவனுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். ஏழை நெசவுத் தொழிலாளியாகிய அத் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை(இக்காலத்து நாணயத்தோடு ஒப்பிட்டால் 200 யூரோக்கள்) கொடுப்பதற்கு முடியாமல் போனது. இதற்காக தனது வீட்டிலிருந்த உலோகப் பாத்திரங்களையும், தனது கால்நடைகளையும், விற்கவேண்டிய நிலை அம்மனிதனுக்கு ஏற்பட்டது. 
இவ்வாறெல்லாம் செய்தும்கூட மேற்படி தொகையை அவரால் முழுவதுமாக திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனால் அவர்களது நாட்டு வழக்கப்படி அவ்வூரில் வாழ்ந்த பணக்காரர்களில் ஒருவனாகிய அம்மீனவர் தலைவனின் வீட்டில் சில மாதங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்துடன் அடிமைகளாக இருப்பவர்கள் தேவாலயங்களில் நடைபெறும் 'பிரார்த்தனைகளில்' பங்குபற்றுவது தடைசெய்யப் பட்டிருந்ததால் கொலம்பஸ்ஸின் குடும்பத்தினர் தேவாலயங்களில் ஆராதனையில் பங்குபற்றுவது சில மாதங்கள் தடுக்கப் பட்டிருந்தது.
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 





விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. (13)

பொருள்: பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால், பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும். 

புதன், ஜனவரி 26, 2011

அந்திமாலையில் அறிவியல்

 கடந்த வாரம் முதல்உங்கள் 'அந்திமாலை' அறிவியல் ரீதியான தகவல்களைக்   காணொளி வடிவில் வெளியிட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. இதன் முதற் கட்டமாகக் கடந்த டிசம்பர் மாதம் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த(சுனாமி) ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று, 'மக்கள்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற, எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் நேர்காணல் வாசகர்களின் பார்வைக்குக் காணொளி வடிவில் இடம்பெற்றது.
இந்த வாரமும் அதன் தொடர்ச்சியைக் காணொளி வடிவில் எமது வாசகர்களுக்காகத் தருகிறோம்.


'சுனாமி' ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2







நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்". என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடியே கேட்டார்.
அவர் கேள்வியை முடிக்குமுன்னரே இடையில் குறிக்கிட்ட நான் "இல்லையில்லை, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 'நெத்தலி மீன்' என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தமல்ல, சிறு வயதில் என் பேர்த்தியார் சமைத்த நெத்தலி மீன் குழம்பையும், நெத்தலிமீன் பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல் போன்றவற்றையும் நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் அதை நினைக்கையில் வாயூறுகிறது. இருப்பினும் நெத்தலிக் கருவாடும், நெத்தலி மீனும் இன்றுவரை இலங்கையில் அடித்தட்டு மக்களின் உணவாகவே இருந்து வருகிறது, மேல்தட்டு மக்கள் நெத்தலி மீனையோ, நெத்தலிக் கருவாட்டையோ விரும்பி/தேடி உண்பார்கள் என்று நான் எண்ணவில்லை" என்று எனது பங்கிற்கு கூறினேன்.
அவர் தொடர்ந்தார். நீங்கள் கூறுவது ஓரளவுக்குச் சரியானது, ஆனால் இந்த நெத்தலி மீன் (Anchovy/White Bait), கருவாடு தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் உணவு என்று உறுதியாகக் கூற முடியாது காரணம் அதன் சுவை. அதன் சுவையில் கிறங்கிப் போயிருக்கும் பல பணக்காரக் குடும்பங்களை நான் அறிவேன். நெத்தலி மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் ஏனைய மீனினங்களை விடவும் சுவை அதிகமானவை. அத்துடன் இந்த மீனினம் அத்தனை மீன் இனங்களிலும் மிகவும் சிறியது, குறிப்பாக ஒரு முழு வளர்ச்சியடைந்த 'நெத்தலி மீன்' 6 சென்டி மீட்டர்களுக்குமேல் வளர்வதில்லை. மிகவும் சிறிய மீனினமாக இருப்பதால் ஏனைய மீன் இனங்களைவிடவும் அதிக அளவில் உயிர்ச் சத்துக்களையும் (Vitamins), கல்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருட்களையும், குறைந்த அளவில் கொழுப்பையும், அதிக அளவில் புரதத்தையும் கொண்டுள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த உணவாகும். குழந்தைகளின் பல், எலும்புகள் வளர்ச்சியடைவதற்கும், வலுப் பெறுவதற்கும் உதவும் ஒரு மலிவான திட உணவாகும். ஏனைய மீன்களைப்போல் சாப்பிடும்போது 'தொண்டையில் முள் சிக்கிவிடும்' என்று குழந்தைகள் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் நெத்தலி மீனின் முட்கள் மிகச் சிறியவை, அவை குழந்தைகளின் பற்களாலேயே அரைபடக் கூடிய தன்மை உடையவை. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாடுகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப் பட்டு கடைகளில் விற்கப்படும் 'தின் பண்டங்களில்' நெத்தலிக் கருவாடு சேர்க்கப் படுகிறது" என்று நிறுத்தினார்.
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

முருங்கைக்காய் நெத்தலிக் கருவாடு குழம்பு


ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

முருங்கைக்காய் - 2
நெத்தலிக் கருவாடு - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


நெத்தலிக் கருவாட்டை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
முருங்கைக்காயை ஓரளவு துண்டுகளாக்கி இரண்டாக பிளக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் நெத்தலிக் கருவாட்டை சேர்த்து வேகவிடவும்.
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும். இதை சோறு, புட்டு, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
Note:
விரும்பினால் பால் அரை கப் சேர்க்கலாம்.

 நன்றி: www.arusuvai.com




குறள் காட்டும் பாதை


இன்றைய குறள் 





துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை. (12)

பொருள்: உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து, அவற்றை உண்பவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும்.

செவ்வாய், ஜனவரி 25, 2011

நாடுகாண் பயணம் - பஹாமாஸ்




நாட்டின் பெயர்:
பஹாமாஸ் (The Bahamas)


அமைவிடம்:
அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் கியூபாவிற்கு வடக்குப் பக்கம்.

நாட்டின் பூகோள அமைப்பு:
29 பெரிய தீவுகள்(மனிதர்கள் வாழும் தீவு),
661 மணற் தீடைகள்(திட்டுக்கள்),
2387 பாறைத் தீவுகள்.

எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் அத்திலாந்திக் சமுத்திரம்.
இருப்பினும் தெற்குப் பக்கத்தில் கியூபா, கெயிட்டி, மற்றும் டொமினிக்கன் குடியரசு போன்ற நாடுகளும் மேற்குப் பக்கத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலமும் அமைந்துள்ளன.

பரப்பளவு: 
13,939 சதுர கிலோ மீட்டர்கள்.

தலைநகரம்:
நாசு(Nassau)

அலுவலக மொழி:
ஆங்கிலம் 

தேசிய மொழி:
பகாமியன் கிரியோலி 

தேசிய இனங்கள்:
ஆபிரிக்கர்கள் 85%
ஐரோப்பியர்கள் 12%
ஆசியர்கள்: 3%

சமயங்கள்:
பாப்டிஸ்ட், அங்கிலிக்கன், ரோமன் கத்தோலிக்கம், பெந்தேகொஸ்தே, மெதடிஸ்ட், புரட்டஸ்தாந்து, சிறிய தொகையில் யூதர்கள், முஸ்லீம்கள், பகாய் மற்றும் இந்துக்கள்.
அரசாங்க முறை:
அரசியின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயகம் 

முடிக்குரிய அரசி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)

மேதகு ஆளுநர்:
சேர்.ஆர்தர் பொல்கேஸ் (Sir. Arthur Foulkes)

பிரதமர்:
கூபெட் இங்ரஹாம் (Hubert Ingraham)

நாணயம்:
பகாமியன் டொலர் (BSD)

பிரதான வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை 

ஆயுட்காலம்:
ஆண்கள்: 66,3 வருடங்கள் 
பெண்கள்: 73,4 வருடங்கள் 

கல்வியறிவு:
98,2 %

ஏற்றுமதிப் பொருட்கள்:
பழங்கள், காய்கறிகள், விலங்குணவுகள்(கோழி இறைச்சி, முட்டை)

தொழிற்சாலை உற்பத்திகள்:
சீமெந்து, கப்பல் உதிரிப்பாகங்கள், உப்பு, மதுபானம், மருந்துப் பொருட்கள், உருக்குக் குழாய்கள்.