நித்தம் நித்தம் நெல்லுச் சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 14, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 21

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

காதலும் கத்தரிக்காயும்

"இன்று சமையல் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதை விட்டு, ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பற்றி உங்களிடம் கேட்கப் போகிறேன்" என்றேன் நான். "சமுதாயப் பிரச்சனையை அலசி ஆராய்வதற்கு நான் ஒன்றும் 'சமூக ஆய்வாளர்' அல்லவே? என்றார் திரு.பழனிச்சாமி அவர்கள். "இருந்தாலும் நான் உங்களை விடப்போவதில்லை, உங்கள் தமிழ்நாட்டிலாகட்டும், இலங்கையில் தமிழ்ப் பகுதியிலாகட்டும் காதலை ஏன் கத்தரிக்காயுடன் சம்பந்தப் படுத்துகிறார்கள்? "அடடா நீங்கள் எதைப்பற்றிக் கூற வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றார் மெதுவாகச் சிரித்தபடி. "உண்மையில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள். காதலுக்கும், கத்தரிக்காய்க்கும் என்ன சமபந்தம்? ஏன் எதற்கெடுத்தாலும் இலங்கைத் தமிழில் "கண்டறியாத காதலும் கத்தரிக்காயும்" எனவும், தமிழ்நாட்டுத் தமிழில் "காதலாவது கத்தரிக்காயாவது" என்று கூறுகிறார்கள். இது சாதாரண 'எதுகை மோனைக்காகக்' கூறப்படுகிறதா? அல்லது காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கினேன். "ஐயையோ என்னை விட்டுவிடுங்கள், சத்தியமாக எனக்குத் தெரியாது". என்றார் மீண்டும் சிரித்தபடி. பின்னர் மெதுவாக அவரே ஆரம்பித்தார் "நான் நினைக்கிறேன், இது காதலைக் கொச்சைப் படுத்துவதற்காக தமிழர்கள் கண்டுபிடித்த ஒரு 'சொல்லடை' என்று நினைக்கிறேன், நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம். இருப்பினும் ஒருவர் கூறும் கருத்தை மறுதலிப்பதற்காக 'மண்ணாங்கட்டி' என்ற வார்த்தையை சிலர் உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள், அதுபோலத்தான் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். இருப்பினும் எல்லாவற்றிற்கும் பதில் கூறுவதற்குத்தானே 'இணையத் தளங்கள்' வந்துவிட்டன, இணையத் தளங்களில் தேடுங்கள், "தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நினைவிருக்கட்டும். கிடைக்கும் விடையை என்னோடும், உங்கள் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார் அவர்.

அவர் கூறியபடியே பல தமிழ் இணையத் தளங்களில் கடுமையாக முயற்சிசெய்து தேடியதில் ஒரேயொரு தமிழ் இணையத்தில் மட்டும் என் கேள்விக்கான விடை கிடைத்தது. எனது கேள்விக்கு ஏற்ற பதிலை விளக்கமாகத் தனது இணையப் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானியான முனைவர்.P.கந்தசாமி அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்படி தனது விளக்கத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அனுமதியை வழங்கியுள்ளார்.

உங்களுக்கு நன்றி ஐயா. !

###############################################################


"காதலாவது கத்தரிக்காயாவது" என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.


இன்றும் கூட என்னைப்போன்ற 'கிழடுகள்' அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். 'பத்தாம்பசலி' என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'பழைய பஞ்சாங்கத்தையே' பாடிக்கொண்டிருப்போம்.

காதல் கல்யாணம் நன்மையா, தீமையா? என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.

"காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான்" என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர்? காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர்? இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர?

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் 'பாலுணர்வை' காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.

இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.
  
நன்றி: டாக்டர் P.கந்தசாமி PhD, ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானி, கோயம்புத்தூர், தமிழ்நாடு. Swamysmusings.blogspot.com


(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், ஜூன் 23, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 20

*(மூன்று மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் தொடர்கிறது.)

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 

"பரவாயில்லை கத்தரிக்காயைப் பற்றிப் பல விபரங்களை மிகவும் நுணுக்கமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனப் பாராட்டிய திரு.பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்தார், "சரி இப்போது 'கத்தரிக்காயைப் பற்றி' எனக்குத் தெரிந்த சில அறிவியல் விடயங்களைக் கூறுகிறேன்" என்றார். "கூறுங்கள், கூறுங்கள்" என்றேன் ஆவலுடன். அவர் தொடர்ந்தார் "நாம் நினைப்பதுபோல் கத்தரிக்காய் ஒரு காய்கறி வகை அல்ல, அது ஒரு பழ வகையச் சேர்ந்தது" என்று ஒரே போடாய்ப் போட்டார். என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "என்ன சொல்கிறீர்கள்? "கத்தரிக்காய் பழ வகையைச் சேர்ந்ததா? காய்கறிகளில் தக்காளிப் பழமும், மிளகாயும் மட்டுமே பழ வகையைச்(குடும்பத்தைச்) சேர்ந்தது என்று படித்திருக்கிறேன், இப்போது நீங்கள் கூறும் கருத்து எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது" என்றேன் நான். அவர் தொடர்ந்தார் "ஆம் நம்மில் பலர் கத்தரிக் காயை ஒரு 'காய்கறி' என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் விவசாய பீடத்திலும் (வேளாண்மைத் துறை), தாவரவியலிலும் கல்வி கற்றவர்களுக்குத் தெரியும் அது ஒரு பழ வகையைச்(Berry) சார்ந்த தாவர இனம் என்பது. விவசாயிகள் கத்தரிக்காயிலிருந்து நாற்று மேடைக்காகக் 'கத்தரி விதைகள்' எடுக்க விரும்பினால் கத்தரிக்காயை முதலில் நன்றாக முற்ற விடுவார்கள், அதன்பின் சில நாட்களில் கத்தரிக்காயானது நன்றாகப் பழுக்க ஆரம்பிக்கும் இறுதியில் அந்தப் பழம் ஒரு 'அழுகிய பழம்' போன்ற நிலையை எய்தும்போது அதைக் கைகளால் பிசைந்து 'கூழ்' ஆக்கி, அதைத் தண்ணீரில் கலந்து, துணியில், அல்லது 'வடிதட்டில்' வடித்து' (வடிகட்டி) விதைகளை வெயிலில் உலர்த்திக்   'கத்தரி விதைகள்' பெறுவார்கள். இதுதான் கத்தரிக்காய் 'கத்தரிப் பழமாக' மாறும் கதை என்றார். நானும் வியப்பு மேலிட "சிங்களக் கதையொன்றில் வரும் 'ஓணான் முதலையாக மாறிய கதை' போல் இருக்கிறது உங்கள் கதை என்றேன் சிரித்தபடி. அவர் தொடர்ந்தார் "அதுமட்டுமல்லாமல், கத்தரிக்காயைப் பச்சையாகக் கடித்துப் பார்த்தால் வாயில் மிகுந்த 'கசப்புச்' சுவை தெரிகிறதல்லவா? அதற்கும் காரணமுள்ளது. இந்தக் கத்தரிக்காயானது தாவரவியலில்(Botany)
புகையிலை விவசாயம், அல்லைப்பிட்டி 
புகையிலைச் செடியின் நெருங்கிய உறவினர். கத்தரிக்காயோ, அதன் இலையோ, தண்டோ பச்சையாகக் கடித்துப் பார்க்கும்போது மிகவும் 'கசப்பாக' இருப்பதற்குக் காரணம் அச் செடியிலுள்ள Nicotinoid alkaloids எனும் இரசாயனப் பொருளாகும். இந்த 'நிக்கோட்டின்' எனும் இரசாயனமே புகையிலையிலும் உள்ளது. ஒரேயொரு வேறுபாடு புகையிலையில் 'நிக்கோட்டின்' அதிகமாக உள்ளது, கத்தரிக்காயிலும் அதன் செடியிலும் குறைவாக உள்ளது என்பதாகும்.
"நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னை வியப்புறச் செய்கின்றன, சரி குழந்தைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்தால் பற்கள் 'சூத்தையாகி'(சொத்தையாகி) விடும் என்று அம்மாக்கள் கூறுகிறார்களே அது எந்தளவில் உண்மை? என்று புதியதொரு கேள்வியை போட்டேன். அவர் தொடர்ந்தார், "ஓரிரு தடவைகள் பச்சைக் கத்தரிக்காயைக் கடித்ததனால் பற்கள் சொத்தையாகிவிடும் என்பது அறிவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ நிரூபிக்கப் படாத ஒரு 'மூட நம்பிக்கையாகும்' இவ்வாறு நமது மக்கள் கூறுவது உண்மையானால் பர்மா தொடக்கம் கொரியா வரை உள்ள மக்கள் தமது உணவில் கத்தரிக் காயைப் பச்சையாகச் சேர்த்து உண்கிறார்கள், அவர்களது பற்களெல்லாம் சொத்தையாகியிருக்க வேண்டுமே? என்றார் என்னைப் பார்த்து, நானும் அவர் கூறியதை ஆமோதிக்கும் பொருட்டு "ஆமாம் நீங்கள் கூறுவதிலும் நியாயமுள்ளது" என்றேன்.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

குறிப்பு: முன்பு வெளியாகிய இத் தொடரின் 19 ஆவது அத்தியாயத்தைப் பார்வையிட இங்கே அழுத்தவும்:  
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 19

வியாழன், மார்ச் 24, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 19


ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.
"பரவாயில்லை, கத்தரிக்காயைப் பற்றி மட்டுமல்லாமல் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்" எனப் பாராட்டியவர் தொடர்ந்தார். "இது மாட்டும்தானா? அல்லது வேறு ஏதும் நடைமுறைத் தகவல்கள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நானும் விடுவதாக இல்லை. இன்னும் சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றேன். கூறுங்கள், கூறுங்கள் கேட்பதற்கு ஆவலாயிருக்கிறேன் என்றார்.
அதாவது கத்தரிக்காய்க் குழம்பில் கருவாடு சேர்த்துச் சமைக்கும் வழக்கம் இலங்கையில் பரவலாக எல்லாப் பாகத்திலும் வாழ்கின்ற மக்களிடமும் காணப் படுகிறது. ஆனால் இவ்வழக்கம் யாழ் மாவட்டத்தின் 'வடமராட்சி' பகுதியில் விசேடம். பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் யாழ் மாவட்டத்து உணவுகள், அவற்றின் 'நாவூற' வைக்கும் சுவைகள் பற்றி பேச்சு எழுந்தபோது பின்வருமாறு கூறினார்:
"நமது பகுதி மக்கள் 'சுவைப் பிரியர்கள்', அவர்களுக்கேயுரிய ஒரு வழக்கம் இருக்கிறது, மீன் இனங்களில் மற்றும் கருவாட்டில் 'திரியாப்பாரை'(Alectis Indicus) என்று ஒரு இனம் இருக்கிறது. அதைக் கண்டால் விடவே மாட்டார்கள். அந்த மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் அவற்றில் செய்த குழம்போ, பொரியலோ 'சுவை' சொல்லி மாளாது. இப்போதும் வெளிநாடுகளில் வாழுகின்ற நமது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் சுவையை" என்று கூறியவர், தொடர்ந்து உபரியாக இன்னொரு தகவலையும் கூறினார், "அதாவது கருவாட்டுக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது 'கத்தரிக்காயும் திரியாப்பாரைக் கருவாடும்' சேர்த்துக் காய்ச்சிய குழம்புதான். இதன் சுவைக்கு நிகராக நில புலங்களைக் கூட எழுதி வைக்கலாம்" என்று வாயில் நீர் ஊறும் வண்ணம் கூறினார். அதுமட்டுமல்லாமல் வடமராட்சிப் பகுதியில் 'திரியாப் பாரை' மீனை அல்லது கருவாட்டை 'தங்கத்திற்கு நிகரானது' என்று கூறுவார்கள். என்று கூறி முடித்தார். இவ்வாறு கத்தரிக்காயின் மகத்துவம் மட்டுமல்லாமல், 'திரியாப் பாரைக்' கருவாட்டின் மகத்துவமும் நான் அறிவேன். என்றேன்.
பரவாயில்லையே கத்தரிக்காய் உங்கள் மக்களின் உணவில் முக்கிய இடத்தை அல்லவா பிடித்திருக்கிறது. என்று வியந்தவரிடம் நான் கூறினேன். எமது மக்களின் உணவில் மட்டுமல்லாமல் 'முல்லாவின்' நகைச்சுவைக் கதையிலும் அல்லவா இடம்பிடித்துவிட்டது. என்றேன் என்னது முல்லாவின் கதையிலுமா? என்றார்.

முல்லாவும் கத்தரிக்காயும்  
அரசரும் முல்லாவும் அருகருகே அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவில் கத்தரிக்காய்க் கறியும் இடம்பெற்று இருந்தது.அரசர் கூறினார் "கத்தரிக்காய் ஒரு அற்புதமான காய்கறி, அதன் சுவையே அலாதியானது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே, கத்தரிக்காய் மிகவும் சுவையானது" என்றார்.இன்னொருநாள் இருவரும் சேர்ந்து உணவருந்தியபோது மன்னர் கூறினார் "இந்தக் கத்தரிக்காய் ஒரு மோசமான காய்கறி, அதில் எந்தவிதச் சுவையும் கிடையாது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே கத்தரிக்காய் ஒரு வெறுக்கத்தக்க காய்கறி, அதனை உண்பதால் 'சொறி', 'சிரங்கு' போன்றவையும் ஏற்படுகின்றன" என்றார். உடனே மன்னர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார்.என்ன முல்லா? அன்று நான் கத்தரிக்காயைப் பாராட்டியபோது நீரும் பாராட்டினீர், இன்று நான் கத்தரிக்காயை இகழ்ந்து பேசும்போது நீரும் வெறுப்பாகப் பேசுகிறீர்? என்று கேட்டார். அதற்கு முல்லா கூறினார் "அரசே நான் வேலை பார்ப்பது, உங்களிடம்தான், கத்தரிக்காயிடம் அல்ல. எனக்குச் சம்பளம் தருவது நீங்கள்தான்,கத்தரிக்காய் அல்ல" என்று பதிலளித்தார்.
எனது கதையைக் கேட்ட திரு.பழனிச்சாமி அவர்கள் "இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் பிழைக்கத் தெரிந்த முல்லா" என்றார் சிரித்துக் கொண்டே.
(தொடரும்)

புதன், மார்ச் 16, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு அத்தியாயம் 18

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும்"(யாழ்ப்பாணத் தமிழில் 'கிரந்தி')  என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
"சரி நெல்லுச் சோறையும், நெத்தலிக் கருவாட்டையும் பற்றி விரிவுரை ஆற்றி விட்டீர்கள், அந்த கண்ணதாசன் அவர்கள் பாடலில் விதந்துரைத்த 'நெய்மணக்கும் கத்தரிக்காயைப் பற்றியும்' கூறுங்கள்" என்றேன்.
"சரி சொல்கிறேன், அதற்கு முன்னால் ஒரு கேள்வி, உங்களுக்குக் 'கத்தரிக்காய்க் கறி' பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை முதலில் எனக்குக் கூறுங்கள் என்று ஒரு நிபந்தனையுடன் கூடிய ஒரு கேள்வியை' என்னை நோக்கி வீசினார்.
"எனக்கு மிகவும் பிடித்த காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று, அதிலும் 'கத்தரிக்காய் பொரித்துக் குழம்பு' என்றால், பாடலில் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது போல் 'நினைக்கையிலே வாயூறும்'. நம்மூரில் கத்தரிக்காயில் மூன்று விதமாகக் கறி சமைப்பார்கள், முதலாவது வகை 'கத்தரிக்காய்ப் பிரட்டல்' அல்லது 'கத்தரிக்காய் பிரட்டல் கறி' என இலங்கைத் தமிழில்(தமிழ்நாட்டுத் தமிழில் 'கறி' என்றால் பெரும்பாலும் மாமிசத்தையே குறிக்கும் என்பதை நினைவில் கொள்வதுடன், இலங்கைத் தமிழும் தமிழ்நாட்டுத் தமிழும் இவ்விடத்தில் வேறுபடுகிறது என்பதையும் நினைவில் கொள்க)   அழைப்போம். இது மிகவும் தடிப்பானதாக(thick) இருப்பதால் இதற்கு 'பிரட்டல்' எனப் பெயர் வந்திருக்கலாம் அல்லது 'பிரட்டல்' என்பது மலையாள வார்த்தையாகவும் இருக்கலாம். இரண்டாவது வகை 'கத்தரிக்காய்க் குழம்பு' என 'இலங்கைத் தமிழில்' அழைக்கப் படுகிறது. இது 'பிரட்டல்' போல தடிப்பானதாக இருக்காது, இதில் தண்ணீரும், தேங்காய்ப் பாலும் அதிகமாகச் சேர்க்கப் படுவதால் 'குழம்பு' அதிகமாக இருக்கும், கத்தரிக்காய் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குழம்புக்குள் கிடக்கும், பெரும்பாலும் கத்தரிக்காய்ப் பிரட்டலுக்குப் பயன்படுத்தப்படும் சகல வாசனைத் திரவியங்களும், மிளகாய்த் தூளும்(மிளகாய் பொடி) இதற்கும் சேர்க்கப் படுவதாலும், எண்ணையில் தாளிக்கப் படுவதாலும் இந்தக் கத்தரிக்காய்க் குழம்பும் வாசனை மிக்கதாக, பக்கத்து வீட்டிற்கும் 'மணக்கும்' வகையில், நாவூறச் செய்கின்ற ஒரு 'கறியாக' 
இருக்கும். இதற்கு அடுத்த படியாக இலங்கைத் தமிழ் மக்கள் கத்தரிக்காயில் மிளகாய்த் தூள் சேர்க்காமல், பச்சை மிளகாய் வெங்காயம் போன்றவற்றையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து 'கத்தரிக்காய் வெள்ளைக் கறி(கத்தரிக்காய்ப் பால்க் கறி எனவும் அழைப்பர்) என ஒரு கறியைத் தயாரிப்பர். இது பெரும்பாலும் ஒரு மீன்கறி, அல்லது கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றோடு சேர்த்து உண்ணுகின்ற உறைப்பில்லாத(காரமில்லாத) ஒரு 'துணைக் கறியாக' இருக்கும். இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.  
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன  

புதன், ஜனவரி 26, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்". என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடியே கேட்டார்.
அவர் கேள்வியை முடிக்குமுன்னரே இடையில் குறிக்கிட்ட நான் "இல்லையில்லை, நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 'நெத்தலி மீன்' என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தமல்ல, சிறு வயதில் என் பேர்த்தியார் சமைத்த நெத்தலி மீன் குழம்பையும், நெத்தலிமீன் பொரியல், நெத்தலிக்கருவாட்டுப் பொரியல் போன்றவற்றையும் நாக்கைச் சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் அதை நினைக்கையில் வாயூறுகிறது. இருப்பினும் நெத்தலிக் கருவாடும், நெத்தலி மீனும் இன்றுவரை இலங்கையில் அடித்தட்டு மக்களின் உணவாகவே இருந்து வருகிறது, மேல்தட்டு மக்கள் நெத்தலி மீனையோ, நெத்தலிக் கருவாட்டையோ விரும்பி/தேடி உண்பார்கள் என்று நான் எண்ணவில்லை" என்று எனது பங்கிற்கு கூறினேன்.
அவர் தொடர்ந்தார். நீங்கள் கூறுவது ஓரளவுக்குச் சரியானது, ஆனால் இந்த நெத்தலி மீன் (Anchovy/White Bait), கருவாடு தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் உணவு என்று உறுதியாகக் கூற முடியாது காரணம் அதன் சுவை. அதன் சுவையில் கிறங்கிப் போயிருக்கும் பல பணக்காரக் குடும்பங்களை நான் அறிவேன். நெத்தலி மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் ஏனைய மீனினங்களை விடவும் சுவை அதிகமானவை. அத்துடன் இந்த மீனினம் அத்தனை மீன் இனங்களிலும் மிகவும் சிறியது, குறிப்பாக ஒரு முழு வளர்ச்சியடைந்த 'நெத்தலி மீன்' 6 சென்டி மீட்டர்களுக்குமேல் வளர்வதில்லை. மிகவும் சிறிய மீனினமாக இருப்பதால் ஏனைய மீன் இனங்களைவிடவும் அதிக அளவில் உயிர்ச் சத்துக்களையும் (Vitamins), கல்சியம், இரும்பு போன்ற தாதுப் பொருட்களையும், குறைந்த அளவில் கொழுப்பையும், அதிக அளவில் புரதத்தையும் கொண்டுள்ளது. இது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு மிகச் சிறந்த உணவாகும். குழந்தைகளின் பல், எலும்புகள் வளர்ச்சியடைவதற்கும், வலுப் பெறுவதற்கும் உதவும் ஒரு மலிவான திட உணவாகும். ஏனைய மீன்களைப்போல் சாப்பிடும்போது 'தொண்டையில் முள் சிக்கிவிடும்' என்று குழந்தைகள் பயப்படத்தேவையில்லை. ஏனென்றால் நெத்தலி மீனின் முட்கள் மிகச் சிறியவை, அவை குழந்தைகளின் பற்களாலேயே அரைபடக் கூடிய தன்மை உடையவை. மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் நாடுகளில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப் பட்டு கடைகளில் விற்கப்படும் 'தின் பண்டங்களில்' நெத்தலிக் கருவாடு சேர்க்கப் படுகிறது" என்று நிறுத்தினார்.
"என்னது குழந்தைகளின் தின்பண்டங்களில் நெத்தலிக் கருவாடா? என்றேன் வியப்புடன். அவர் தொடர்ந்தார். "நான் ஏற்கனவே கூறியதுபோல், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, கர்ப்பிணித் தாய்மாருக்கும் மிகச் சிறந்த ஒரு சத்துள்ள உணவு இது. இதன் மகத்துவம் தெரியாமல் பாட்டிமார்கள் சொல்கின்ற செவி வழி வந்த நம்பிக்கையாகிய "நெத்தலி மீன் ஒவ்வாமையை (Alergi) ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். இது மருத்துவ ரீதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படவோ, நிரூபிக்கப் படவோ இல்லை"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

முருங்கைக்காய் நெத்தலிக் கருவாடு குழம்பு


ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

முருங்கைக்காய் - 2
நெத்தலிக் கருவாடு - 50 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


நெத்தலிக் கருவாட்டை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
முருங்கைக்காயை ஓரளவு துண்டுகளாக்கி இரண்டாக பிளக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் நெத்தலிக் கருவாட்டை சேர்த்து வேகவிடவும்.
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும். இதை சோறு, புட்டு, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
Note:
விரும்பினால் பால் அரை கப் சேர்க்கலாம்.

 நன்றி: www.arusuvai.com




புதன், ஜனவரி 19, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 16

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
"நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன்" என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
"ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். "நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள்" என்றார் அந்த அனுபவசாலி.



அதன் பின்னர் அவர் என்னிடம் கொடுத்த 'மோர்க்குழம்பு' செய்முறையைக் கடந்த வாரம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
"சரி இப்போது கூறுங்கள் பாடல்களில் சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது ஏன் நெல்லுச் சோறு என்று குறிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்? புதிய கேள்வியொன்றை திரு.பழனிச்சாமி என்னை நோக்கி வீசினார். பல விளக்கங்களை அவரிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்த காரணத்தால் எனது பதிலைப் படபடவென்று ஒப்புவித்தேன்.
"அதாவது, தமிழ்நாட்டில் சோறு தயாரிப்பதற்கு அரிசி மட்டும் உபயோகிக்கப் படுவதில்லை, கம்பு, வரகு, தினை, சாமை, போன்ற தானியங்களும் உபயோகிக்கப் படுவதால் மக்கள், அதுவும் கிராம மக்கள் எப்போதும் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியினால் தயாரித்த சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது 'நெல்லுச் சோறு' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இலங்கையில் பெரும்பாலான மக்கள் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியிலிருந்தே 'சோறு' தயாரிக்கிறார்கள், ஆதலால் அவர்கள் வெறுமனே 'சோறு' என்று மட்டுமே அழைக்கிறார்கள். ஏனைய தானியங்களிலிருந்து சோறு தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் அருகிப் போய்விட்டது. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களில் 'சோறு' தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் 'வேடுவர்கள்' மத்தியில் மட்டுமே இன்றுவரை தொடர்கிறது. அவர்களும் இப்போது மெல்ல மெல்ல 'அரிசிக்கு' மாறிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசி முடித்தேன்.


"அருமை, அருமை நீங்கள் மிகவும் சிறந்த ஒரு புரிதலைப் பெற்றுவிட்டீர்கள்" என்று பாராட்டியவர் தொடர்ந்தார். "அதேபோல் தமிழ்நாட்டில் சோற்றை மக்கள் அழைக்கும் வார்த்தைகள் வேறுபடும் உதாரணமாக உணவகங்களில் சோற்றை 'சாப்பாடு' என்பார்கள், நடுத்தர மக்கள் பெரும்பாலும் 'சாதம்' என்றே அழைப்பார்கள், ஏழை மக்களும், கிராம வாசிகளும் 'கஞ்சி' என்று அழைப்பார்கள். அவர்கள் 'கஞ்சி' என்று கூறும்போது சோற்றைக் குறிப்பிடுகிறார்களா அல்லது உண்மையிலேயே 'கஞ்சியைத்தான்' குறிப்பிடுகிறார்களா? என்று நாம் உண்மையிலேயே குழம்பித்தான் போவோம். ஆனால் மலையாளிகள் எப்போதுமே 'சோறு' என்றுதான் கூறுவார்கள். இது இலங்கைத் தமிழ் மக்களின் வழக்கத்தோடு ஒத்துப் போகிறது" என்றவர், அதேபோல் நீங்கள் பொங்கலைப் 'புக்கை' என்று அழைப்பதைப் போல, தமிழ்நாட்டில் பொங்கலைப் 'பொங்கச் சோறு' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தமிழ்நாட்டில் யாராவது 'பொங்கச் சோறு' என்று கூறினால் நீங்கள் சோற்றைக் குறிப்பிடுகிறார் என்று எண்ணிவிடக் கூடாது, ஏனெனில் 'சர்க்கரைப் பொங்கலையும்' 'பொங்கச் சோறு' என அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழ்நாட்டில் நடுத்தர உணவகங்களில் நீங்கள் போய் 'பொங்கல்' கொடுங்கள் என்று கேட்டால் 'உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய் போன்றவை சேர்த்துத் தயாரித்த 'வெண் பொங்கல்' தான் உங்களுக்குக் கிடைக்கும். அது மட்டுமன்றி உணவகங்களின் விலைப் பட்டியலிலும், சாதாரண பட்டியலிலும்(Menu) இவ்வெண் பொங்கலை 'பொங்கல்' என்றே எழுதுவார்கள் அவ்விடத்தில் நீங்கள்  'சர்க்கரைப் பொங்கலை' எண்ணி ஏமாந்து விடவேண்டாம்" என்றார் எச்சரிக்கும் குரலில்.

சரி கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு வருகிறேன் "நிதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனும் குழம்பாக்கி" என்கிறாரே, நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்".
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், ஜனவரி 12, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 15

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
இருங்கள் சொல்கிறேன் என்றவர் ஆரம்பித்தார். "கத்தரிக்காய்க் கறி, வெண்டிக்காய்க் கறி, பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய் (இலங்கைத் தமிழில் 'நீத்துப் பூசணிக்காய்) சுரைக்காய்க் கறி போன்ற குழம்புகளில்  ஏதேனுமொன்றில் மோர் கலந்து சமைக்கப் பட்டிருந்தால் சுவை எப்படிப் பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "என்னால் அந்தச் சுவையை ஊகிக்க முடிகிறது" என்றேன். 
சரி இந்த மோர்க்குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமா? புதியதொரு கேள்வியைப் போட்டேன். அவர் தொடர்ந்தார்.என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், தமிழ்நாட்டு மக்களால் மறக்கமுடியாத விடயங்களில் மோர்க்குழம்பும் ஒன்று. வெளிநாடுகளில் வாழும் தமிழ் நாட்டு மக்களைக் கேட்டுப் பாருங்கள் கூறுவார்கள் அதன் சுவையை, மகத்துவத்தை.வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நீங்கள் இழந்தவை எவை என்று கேட்டால், மோர்க்குழம்பையும் சொல்வார்கள் என்றார்.
அப்படியா? என்னால் நம்பவே முடியவில்லை, இலங்கையில் இப்படியொரு குழம்பை யாரும் தயாரிப்பார்கள் என்றோ, உண்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை, நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன் என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள் என்றார் அந்த அனுபவசாலி.
#############################################################################
திரு.பழனிச்சாமி அவர்கள் என்னிடம் தந்த மோர்க்குழம்பு தயாரிக்கும் முறையை வாசகர்களுக்காகத் தருகிறேன். இது முழுக்க முழுக்க இந்தியத் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதால், இந்தியத் தமிழில் உள்ள சில வார்த்தைகளை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்காக அடைப்புக் குறிக்குள்,   இலங்கைத் தமிழில் தந்துள்ளேன். 


மோர்க்குழம்பு 


தேவையான பொருட்கள்:
மோர் - 2 கப் (தடிப்பானதாக இருந்தால் நல்லது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் (தேக்கரண்டி)
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா(கொத்தமல்லி) - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் (மேசைக் கரண்டி)
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்(செத்தல் மிளகாய்) - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு (சிறிதளவு)
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.


  • பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

  • மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது(மேலே குறிப்பிட்ட சரக்குச் சேர்வை) மஞ்சள் தூள், உப்பு இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

  • ஒரு வாணலியில்(தாச்சியில்) எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும். 

குறிப்பு:
தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால்(முட்டை அடிக்கும் அடிப்பான்) நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு(வழுவழுப்பு) போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை(கடலை வடை)  குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

நன்றி:adupankarai.kamalascorner.com
**************************************************************

அன்பார்ந்த வாசகர்களே இந்தத் தொடரில் உணவு வகைகளைப் பற்றிக் கலந்துரையாடும்போது, அதனைத் தயாரிப்பது எப்படி என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையானதே என்பதைக் கருத்தில் கொண்டே மேற்படி சமையற் குறிப்பை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.
(தொடரும்)