புதன், ஜனவரி 19, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 16

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
"நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது 'ரசம்' அல்லது நமது நாட்டில் இடியப்பத்திற்காகத் தயாரிக்கப்படும் 'சொதி' போன்ற சுவையுடையதாக இருக்குமென்று நினைக்கிறேன்" என்று எனது ஐயத்தை வெளியிட்டேன். .
"ஒரு உணவை உண்டுபார்க்காமல் அதைப் பற்றி எவ்வாறு நாம் விவாதிக்க முடியும்? என்றவர் தொடர்ந்தார். "நான் வேண்டுமென்றால் அதன் தயாரிப்பு முறையை உங்களுக்குக் கூறுகிறேன், முடிந்தால், விருப்பமிருந்தால் தயாரித்துப் பாருங்கள். ஆனால் ஒரு விடயம் உறுதி. இதை நீங்கள் ஒரு தடவை பரீட்சித்தால் பின்னர் விடவே மாட்டீர்கள்" என்றார் அந்த அனுபவசாலி.அதன் பின்னர் அவர் என்னிடம் கொடுத்த 'மோர்க்குழம்பு' செய்முறையைக் கடந்த வாரம் வாசகர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
"சரி இப்போது கூறுங்கள் பாடல்களில் சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது ஏன் நெல்லுச் சோறு என்று குறிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்? புதிய கேள்வியொன்றை திரு.பழனிச்சாமி என்னை நோக்கி வீசினார். பல விளக்கங்களை அவரிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்த காரணத்தால் எனது பதிலைப் படபடவென்று ஒப்புவித்தேன்.
"அதாவது, தமிழ்நாட்டில் சோறு தயாரிப்பதற்கு அரிசி மட்டும் உபயோகிக்கப் படுவதில்லை, கம்பு, வரகு, தினை, சாமை, போன்ற தானியங்களும் உபயோகிக்கப் படுவதால் மக்கள், அதுவும் கிராம மக்கள் எப்போதும் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியினால் தயாரித்த சோற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது 'நெல்லுச் சோறு' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இலங்கையில் பெரும்பாலான மக்கள் நெல்லிலிருந்து கிடைத்த அரிசியிலிருந்தே 'சோறு' தயாரிக்கிறார்கள், ஆதலால் அவர்கள் வெறுமனே 'சோறு' என்று மட்டுமே அழைக்கிறார்கள். ஏனைய தானியங்களிலிருந்து சோறு தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் அருகிப் போய்விட்டது. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களில் 'சோறு' தயாரிக்கும் வழக்கம் இலங்கையில் 'வேடுவர்கள்' மத்தியில் மட்டுமே இன்றுவரை தொடர்கிறது. அவர்களும் இப்போது மெல்ல மெல்ல 'அரிசிக்கு' மாறிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசி முடித்தேன்.


"அருமை, அருமை நீங்கள் மிகவும் சிறந்த ஒரு புரிதலைப் பெற்றுவிட்டீர்கள்" என்று பாராட்டியவர் தொடர்ந்தார். "அதேபோல் தமிழ்நாட்டில் சோற்றை மக்கள் அழைக்கும் வார்த்தைகள் வேறுபடும் உதாரணமாக உணவகங்களில் சோற்றை 'சாப்பாடு' என்பார்கள், நடுத்தர மக்கள் பெரும்பாலும் 'சாதம்' என்றே அழைப்பார்கள், ஏழை மக்களும், கிராம வாசிகளும் 'கஞ்சி' என்று அழைப்பார்கள். அவர்கள் 'கஞ்சி' என்று கூறும்போது சோற்றைக் குறிப்பிடுகிறார்களா அல்லது உண்மையிலேயே 'கஞ்சியைத்தான்' குறிப்பிடுகிறார்களா? என்று நாம் உண்மையிலேயே குழம்பித்தான் போவோம். ஆனால் மலையாளிகள் எப்போதுமே 'சோறு' என்றுதான் கூறுவார்கள். இது இலங்கைத் தமிழ் மக்களின் வழக்கத்தோடு ஒத்துப் போகிறது" என்றவர், அதேபோல் நீங்கள் பொங்கலைப் 'புக்கை' என்று அழைப்பதைப் போல, தமிழ்நாட்டில் பொங்கலைப் 'பொங்கச் சோறு' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தமிழ்நாட்டில் யாராவது 'பொங்கச் சோறு' என்று கூறினால் நீங்கள் சோற்றைக் குறிப்பிடுகிறார் என்று எண்ணிவிடக் கூடாது, ஏனெனில் 'சர்க்கரைப் பொங்கலையும்' 'பொங்கச் சோறு' என அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழ்நாட்டில் நடுத்தர உணவகங்களில் நீங்கள் போய் 'பொங்கல்' கொடுங்கள் என்று கேட்டால் 'உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய் போன்றவை சேர்த்துத் தயாரித்த 'வெண் பொங்கல்' தான் உங்களுக்குக் கிடைக்கும். அது மட்டுமன்றி உணவகங்களின் விலைப் பட்டியலிலும், சாதாரண பட்டியலிலும்(Menu) இவ்வெண் பொங்கலை 'பொங்கல்' என்றே எழுதுவார்கள் அவ்விடத்தில் நீங்கள்  'சர்க்கரைப் பொங்கலை' எண்ணி ஏமாந்து விடவேண்டாம்" என்றார் எச்சரிக்கும் குரலில்.

சரி கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு வருகிறேன் "நிதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனும் குழம்பாக்கி" என்கிறாரே, நெல்லுச் சோறுக்கும், நெத்தலி மீனுக்கும் அத்தகைய ஒரு அரிய சுவை (Combination) இருக்கிறதா? என்றேன் அவரிடமிருந்து மேலும் தகவல்களை அறியும் நோக்கத்தில்."என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள், நெத்தலி மீனாகட்டும், நெத்தலிக் கருவாடு ஆகட்டும் தமிழ் மக்களில்(அசைவம் உண்பவர்களில்) ஒரு அங்கமாயிற்றே, இதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்".
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

suthan france சொன்னது…

very nice food i like fish fry and curry

கருத்துரையிடுக