வெள்ளி, ஜனவரி 21, 2011

மண்ணும் மரமும் மனிதனும் அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்துமஸ் மரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்த ஆரம்பித்தபோதும், டென்மார்க்கில் முதல் முதலாக 1808 ஆம் ஆண்டிலேயே டேனிஷ் மக்கள் இம்மரத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் உபயோகிக்க ஆரம்பித்தனர்.


இலங்கையில், மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பதிலாக 'சவுக்கு மரம்' என அழைக்கப்படும்'கஷோரினா' (Casuarina) மரத்தை உபயோகிக்கும் வழக்கம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இவ்வாறு நம்பப் படுவதற்கும் காரணங்கள் அல்லது பின்னணிகள் உள்ளன. உதாரணமாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூன்று வெவ்வேறு நாட்டவர்கள் ஆசிய நாடுகளை நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக ஆண்டுவந்த போதிலும், யாருடைய ஆட்சிக் காலத்தில் எமது நாடுகள் ஓரளவேனும் வளர்ச்சி கண்டன என நம் நாட்டிலுள்ள வயதான தலைமுறையினரைக் கேட்டால், 'ஆங்கிலேயர்' ஆட்சிக் காலமே ஒரு பொற்காலம் என்று கூறுவார்கள். ஏன்? எனக் காரணம் கேட்டால், "போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையை ஆண்ட காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை, அவர்கள் எங்கள் நாட்டை முடிந்தளவு கொள்ளையடித்து 'தங்கள்' நாடுகளுக்குச் செல்வங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருந்தனர். அதாவது அவர்கள் ஆசிய  நாடுகளையும், அந்நாட்டு மக்களையும் கொள்ளையடிப்பதுடன் நின்றுவிடாமல், அந்நாடுகளை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் இறங்கினர்.
 இவற்றில் குறிப்பாகச் சொல்வதானால் இன்றுவரை இலங்கை நாட்டின் 'முதுகெலும்பாக' விளங்கும், இலங்கைக்கு 80% இற்கு மேல் அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் தேயிலை, இறப்பர்த் தோட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப் பட்டன. இந்தத் தோட்டங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களினால் 'அடிமைகளாக' அழைத்துவரப்பட்ட  தமிழ்நாட்டுத் தமிழர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் சகிக்கமுடியாத கடின வேலைகளாலும், பசியினாலும், நோய்களாலும், பாம்புக்கடியினாலும், அட்டைக்கடியினாலும் இறந்துபோயினர் என்பதும் வரலாற்றில் ஒரு 'கறுப்புப் பதிவாக' இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கை நாட்டை ஓரளவு முன்னேற்றினர் என்றே கூறலாம் காரணம் இவர்களது காலத்திலேயே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் 'கல்வியறிவுள்ள' ஒரு சமுதாயம் உருவாகியது. அதற்கு முற்பட்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மக்களைக் 'கல்வியறிவுள்ளவர்கள்' ஆக்கும் எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை. இதுதவிரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே உணவு, உடை, உறையுள் போன்ற விடயங்களில் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் உடை பற்றி முக்கியமாக கூறவேண்டும். காரணம் இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய காலப் பகுதியில் இலங்கை மக்களில் 50% இற்கு மேற்பட்டோர் 'அரை நிர்வாணமாகவோ' அல்லது 'முழு நிர்வாணமாகவோ' காட்சியளித்தனர். ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு ஒரு சில தசாப்த காலங்களுக்குள் அம்மக்கள் தொகையினரில் 90% மானோர் 'ஆடை அணிந்த' மனிதர்களாகக் காட்சி தந்தனர்.
இதேபோல் போக்குவரத்து வசதிகளும், வீதிகள் அமைக்கப்பட்டமையும் ஆங்கிலேய ஆட்சியினால் விளைந்த நன்மைகள் என்று கூறலாம். இலங்கையில் மிகவும் நீளமான வீதியாகிய A-9 நெடுஞ்சாலை என அழைக்கப்படும் கண்டி-யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே உருவாகியது. 
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக