தாரமும் குருவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாரமும் குருவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 27, 2012

தாரமும் குருவும் பகுதி 7.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 7.3
ஒன்பதாம் வகுப்பு நினைவலைகள்
திடீரென்று பாலர் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பை நோக்கித் தாவி விட்டேன் என நினைக்காதீர்கள். எல்லாம் காரணத்தோடுதான். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய இத்தொடரில் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தில் வகுப்பில் \மாணவர் தலைவர்\ ஆவதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் நான் ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் படித்த பள்ளியாகிய யாழ்/புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் மாணவர் தலைவன் ஆவதற்குரிய தகுதிகளைப் பற்றியும் சில வரிகள் கூற விரும்புகிறேன். நான் முன்னமே குறிப்பிட்டதுபோல் அது ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் ஒரு தனியார் பாடசாலை. அது மிகவும் பிரபலமான வரலாற்றைக் கொண்ட பாடசாலை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அந்தப் பள்ளியில் 1980 களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆவதென்றால் பின்வரும் தகுதிகள் மேற்படி மாணவனுக்கு இருத்தல் வேண்டும்.
  • மாணவன் சிறு வயது முதலே அக்கல்லூரியில் கல்வி கற்றவனாக இருத்தல் வேண்டும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மாணவன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
அல்லது
  • அந்தக் கல்லூரியில் புகழ்பெற்ற மாணவனாக விளங்கிய ஒரு தந்தையின் மகனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த, அந்தக் கல்லூரியின் நிர்வாகத்துடன் சம்பந்தப் பட்ட குருவானவர்கள், கன்னியாஸ்திரிகளுடன் ஏதாவது ஒரு வகையில் அறிமுகம் உள்ள ஒரு மாணவனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • உயர்ந்த பதவிகளை வகிக்கும் பெற்றோர்களின் பிள்ளையாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு தகுதிப் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில் மேலே குறிப்பிட்ட எந்தத் தகுதிகளும் இல்லாத நான், அந்தப் பள்ளியில் சேர்ந்து மூன்றே மாதங்களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆகி விட்டேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அல்லது நான் பழுகுகிறேன்/பொய் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் நான் சொல்வது சத்தியமான வார்த்தைகள்.
நீங்கள் கேட்கலாம் "மேலே குறிப்பிட்ட தகுதிகளில் நீல நிற எழுத்துக்களில் எழுதப்பட்ட தகுதிகூட உன்னிடம் இருக்கவில்லையா? என்று கேட்டால் எனது பதில் "இல்லை" என்பதுதான். காரணம் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் எனது வகுப்பில் படித்த மாணவ, மாணவிகளோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் கெட்டிக்காரனே தவிரவும் யாழ்/சம்பத்திரிசியார் கல்லூரியில் என்னோடு கல்விகற்ற கல்விச் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள், பரம்பரைக் கோடீஸ்வரர்கள் போன்றோரின் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் நான் வெறும் சராசரி மாணவன்(Average Student) மட்டுமே. அப்படியிருக்கையில் நான் எவ்வாறு 'மாணவர் தலைவன்' ஆக முடிந்தது? என்பதுதானே உங்கள் கேள்வி. மேலே நான் குறிப்பிட்ட எல்லாத் தகுதிகளை விடவும் விசேடமாக ஒரு தகுதி என்னிடம் இருந்தது.(இப்போதும் இருக்கிறது) அது வேறொன்றும் இல்லை என்னிடம் இருந்த/இருக்கின்ற 'தமிழ்ப்புலமை' தான் அது. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு தனியார் பாடசாலையில் தமிழ்ப் புலமைக்கு மதிப்புத் தரப்பட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா? எனது விளக்கத்தை அறிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள்.
(தொடரும்)

சனி, மார்ச் 31, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.9

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.9
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பள்ளியில் படித்தால், முதலிரு பிள்ளைகள் மட்டுமே வசதிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாவது பிள்ளை கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும் மேற்படி இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கட்டணம் செலுத்த முடியாத வறுமையில் வாடிய பெற்றோர்களும் இருந்தனர். இத்தகைய பெற்றோர்களால் மேற்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாத்தியாரிடம், குறிப்பாகப் பாடசாலை அதிபரிடம் பல தடவைகள் 'பிரம்படி' வாங்க வேண்டிய சூழ்நிலையும் எமது கிராமத்தில் 1980 களில் நிலவியது என்பது மறக்க முடியாத சோகம்.
ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட சம்பத்திரிசியார் கல்லூரியில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கு கல்வி கற்பதற்கு பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதிக் கதவுகள் திறந்திருந்தன.இது ஆண்கள் மட்டுமே கல்வி கற்ற பாடசாலை. இங்கு கல்வி கற்ற மாணாக்கர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் பணக்காரர்கள். சிலர் மருத்துவர்கள், சிலர் பொறியியலாளர்கள், சிலர் ஆசிரியர்கள், சிலர் உயர்ந்த அரச உத்தியோகத்தர்கள். நான் இந்தக் கல்லூரியில் படித்த காலத்தில் யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபரின் மகனும், எங்கள் வகுப்பில், ஆனால் வேறு பிரிவில் படித்தான். அவனை ஒரு சில ஆசிரியர்களும், பல மாணவர்களும் சேந்து ஆகா! ஓகோ! என்று பாராட்டி தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் பட்டணத்திற்குப் படிக்கப் போயிருந்த 'பட்டிக்காட்டான்' ஆகிய எனக்கு இது பெரும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நான் வளர்ந்து பெரியவன் ஆன பின்னரே அத்தகைய 'துதிபாடல்கள்' அல்லது 'தனி மனித வழிபாடுகளில்' உள்ள சூட்சுமங்கள் புரிய ஆரம்பித்தது. நீங்கள் என்னிடம் கேட்கலாம் அப்படியானால் இங்கு பணக்கார்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மட்டும்தானா படித்தார்கள்? என்று. ஆம், இங்கு ஒரு மாணவன் கல்வி கற்க வேண்டுமாயின் அவனுக்கு இருக்க வேண்டிய முதலாவது தகுதியே 'பணக்கார வீட்டுப் பிள்ளை' எனும் தகுதிதான். ஏனைய தகுதிகள் எல்லாம் அடுத்த பட்சம்தான். ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இங்கு படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துப் படகுகளை வைத்துக் கூலியாட்களையும் வைத்துக் கடற்றொழில்(மீன்பிடி) செய்கின்ற ஒரு 'சம்மாட்டி'(*மீனவர் தலைவனை இலங்கைத் தமிழில் இவ்வாறு அழைப்பர்) ஆக இருப்பார். இங்கு ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் கல்வி கற்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துக் கூலியாட்களை வைத்து விவசாயம் செய்யும் நிலச் சுவான்தாராக இருப்பார். ஆகவே 'பணம்' என்ற ஒன்றே இப்பள்ளியில் படிப்பதற்கான 'அடையாள அட்டை' என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதே பள்ளியில் என் போன்ற ஒரு சில நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகளும் படித்தார்கள் அவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25 கூட வராது. நான் குறிப்பிடும் இப்பாடசாலையின் மாணவர் தொகை என்ன தெரியுமா? மொத்தம் 2,500 மாணவர்கள். இவர்களில் நான் குறிப்பிடும் நடுத்தர வர்க்கத்து மாணவர்களுக்கும் 'பண உதவி' செய்வதற்கு கொஞ்சம் வசதி கூடிய யாரோ ஒரு கனவான்/சீமாட்டி இருந்தார். இவ்வாறு எனக்குப் பண உதவி செய்தவர் எனது தாய் மாமா என்பதை முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அவரும் நான் படித்த அதே பாடசாலையில் கணக்காளராக பதவி வகித்தார்.அவர் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை எனது கல்விக்காக செலவிட நேர்ந்தது. ஏனெனில் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாதாந்தக் கட்டணம் 120 ரூபாய்.(தற்போதைய நிலையில் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்) இந்தத் தொகையை மாணவர்களிடம் இருந்து பள்ளி நிர்வாகம் ஏன் வசூலித்தது என்றால். பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டும் 64 பேர்.


உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.
தொடரும் 

சனி, மார்ச் 24, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.8

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.8
அல்லைப்பிட்டி 1977
"அந்த அல்லி அரசாணி எந்தக் காலப் பகுதியில் அல்லைப்பிட்டியை ஆண்டார்? "அவர் அல்லைப்பிட்டியை மட்டும் தனது ஆட்சிப் பகுதியாகக் கொண்டிருந்தாரா? "இலங்கையை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் ஆண்டார்கள். ஆகவே இந்த அல்லி ராணியின் காலம் எத்தனையாம் நூற்றாண்டு? என்றெல்லாம் கேட்போமாக இருந்தால் பதில் எதுவுமே கிடைக்காது. காரணம் இந்த 'அல்லி ராணி சமாச்சாரமே' நமது முப்பாட்டன், கொப்பாட்டன் காலத்திலிருந்து சந்ததி சந்ததியாகக் கூறப்பட்டு வரும் ஒரு 'புனைவுக் கதை' என்பதுதான் கசப்பான உண்மையாகும். 
இதனை நான் எந்தவிதமான சந்தேகமும் இன்றி நூறு வீதம் அடித்துக் கூறுவேன். காரணம் இலங்கையை ஆண்ட மன்னர்கள், குறுநில மன்னர்கள் வரிசையில் பெண்கள் யாருமே இலங்கை நாட்டை முழுமையாகவோ, சிறு பகுதியாகவோ ஆட்சி செய்யவில்லை என்றே இலங்கையின் வரலாறு கூறுகிறது. பல நாடுகளிலும் அரச வம்சத்தில் வரும் பெண்கள் தமது தந்தையின் மறைவுக்குப் பின்னர் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும் பட்சத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பர். ஐரோப்பா தொடங்கி ஆபிரிக்கா வரை இந்த வழமை நிலவியிருக்கிறது. ஆனால் தமிழ் மன்னர்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், மன்னரின் இறப்புக்குப் பின்னர் ஏற்படும் வெற்றிடத்தை மன்னனின் மகளைத்(இளவரசியை) திருமணம் செய்யும் இளவரசனோ அன்றி மன்னவனின் ஆண் சகோதரர்களோ அன்றேல் நெருங்கிய உறவில் உள்ள ஆண்களோ அல்லது மன்னருக்கு மிகவும் நெருக்கமான மந்திரிகளோ ஈடு செய்து ஆட்சியைக் கைப்பற்றுவர். பெண்ணைத் 'தெய்வம்' எனப் போற்றி வணங்கிய எமது தமிழ் மன்னர்கள் அதே பெண்ணை ஆட்சி அதிகாரத்தில் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. எமது தமிழ் ஆண்களின் 'பெண்ணடிமைத்தனம்' எங்கிருந்து ஆரம்பிக்கிறது? என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். "பட்டத்து யானை மாலை போட்டதால் ஏழைப் பெண் ஒருத்தி அரசியானாள்" என்பதெல்லாம் திரைப்படத்திற்கு வேண்டுமானால் ரசிக்கத்தக்க விடயமாக அமையலாம்.
இந்த நிலையில் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 'அல்லி அரசாணி' என்னும் பெயரில் ஒரு பெண் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்களே இல்லாதபோது அதே 'அல்லி' அல்லைப்பிட்டியை ஆண்டார் என்று கூறுவதை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் ஏளனமாகவே பார்ப்பார்கள். ஆதலால் எனது இந்தத் தொடரைப் படித்துவரும் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவோ, பூர்வீகமாகவோ கொண்ட எனதருமை உறவுகள் "அல்லி அரசாணி ஆண்டதனால் 'அல்லைப்பிட்டி' என்று பெயர் வந்தது" என்ற செவி வழி வந்த கட்டுக்கதையை அடுத்தவர்களிடம் கூறுவதை நிறுத்தி விடுங்கள். 'அல்லைப்பிட்டி' என்று பெயர் ஏற்படுவதற்கு வேறன்ன காரணங்கள் இருக்கலாம்? என்பதை நீங்களும் நானும் இணைந்தே கண்டு பிடிப்போம்.
அதற்கும் மேலாக இன்னுமொரு வரலாற்றுத் தகவலையும் உங்களிடம் கூறி விடுகிறேன். இலங்கையில் எந்தவொரு அரசியுமே சிறு நிலப்பரப்பையோ அன்றேல் பெரு நிலப் பரப்பையோ ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை. இலங்கையை ஆண்ட மன்னர்களின் மனைவிமாரின் பெயர்களை வரலாற்று நூல்களிலும், இணையங்களிலும் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாகத் தேடினேன்+தேடி வருகிறேன். எந்த ஒரு இடத்திலும் 'அல்லி அரசாணி' அல்லது 'அல்லி அரசி' என்ற பெயர் என் கண்ணில் படவேயில்லை. அது மட்டுமன்றி அரச வம்சங்களில் அந்தப்புரங்களில் மட்டுமே பெண்களை வைத்திருந்த தமிழ்ச் சமுதாயம் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் அரசனின் 'கோப்பெருந்தேவி' பெயரையே எழுதாது இருட்டடிப்புச் செய்துள்ளது. இவ்வளவுதான் தமிழ்ச் சமுதாயம் பெண்ணுக்குச் செய்யும் மரியாதை.
நான் கடந்த மூன்று மாத காலத்தில் வரலாற்று நூல்களில் தேடியபோது எனது கண்ணில் பட்ட இலங்கைத் தமிழ் அரச வம்சத்துப் பெண்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. மகாராணி பொன்னம்மை தேவி. இவர் எல்லாள மன்னனின் தாயார் ஆவார்.
  2. குருவிச்சி நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  3. நல்ல நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  4. சிறிய நாச்சியார் (கண்டி இராச்சியம்)
  5. ஊமைச்சி நாச்சியார்("ஊர் மெச்சி நாச்சியார்" என்ற பெயர் தமிழில் திரிபடைந்து "ஊமைச்சி நாச்சியார்" என மாறியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.)
  6. தாரணி அல்லது "தாரண நாச்சி" (இவர் எல்லாள மன்னனின் தங்கை.)
  7. நளாயினி. இவர் பண்டார வன்னியனின் தங்கை.(வன்னி இராச்சியம்)
  8. அம்மங்கா தேவி. இவர் ஒரு சோழ இளவரசி, சோழ மன்னன் இராஜேந்திர சோழனின் மகள், இராஜ இராஜ நரேந்திரனின் மனவி (சோழ இராச்சியம், தஞ்சாவூர்)
  9. திருபுவன மகாதேவியார், முக்கோக்கிலான் பஞ்சவன் மாதேவியார், வீரமாதேவி இவர்கள் மூவரும் இராஜேந்திர சோழனின் அரசிமார்கள்(மனைவிகள்).(சோழ இராச்சியம், தஞ்சாவூர்)
இவ்விடத்தில் கடைசி வரிசையில் சோழ அரசிகளின் பெயர்களை நான் சேர்த்தமைக்குக் காரணம் நமது இலங்கை நாடு பல நூற்றாண்டுகள் சோழர்களின் ஆட்சிக்குள் உட்பட்டிருந்தது. இலங்கையை ஒரு குடைக்கீழ், நீதி நெறி வழுவாது 44 ஆண்டுகளாகத் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் இன பேதம் பாராது ஆட்சி செய்த 'எல்லாளன்' என்ற மன்னன் சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்கிறது இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாகிய 'மகா வம்சம்'.
நான் மேலே குறிப்பிட்ட அரச வம்சத்துப் பெண்களின் பெயர்களில் ஓரிடத்தில் கூட "அல்லி அரசாணி" என்ற பெயர் தென்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? "அல்லி அரசாணியால் ஆளப்பட்டதால், எமது கிராமத்திற்கு அல்லைப்பிட்டி என்று பெயர் உருவானது" என்பது வெறும் கற்பனைக் கதையே.
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

சனி, மார்ச் 17, 2012

தாரமும் குருவும் - பகுதி 6.7

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.7
இவ்வாறு 'முன்னெச்சரிக்கையுடன்' உதவும் மனப்பானமையுடன் செயல்படும் ஆசிரியர்களை இலங்கையில் மிகவும் அரிதாகவே கண்டேன். மேற்படி செயல் என் மனதில் 'கமலினி டீச்சருக்கென்று' மிகப்பெரிய இடத்தை ஒதுக்கி விட்டது. அவரைப் போன்ற உதவும் மனப்பான்மை உள்ள ஒரு ஆசிரியையை 32 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டில் கண்டேன். ஆனால் அவர் ஒரு டேனிஷ் பெண்மணி(வெள்ளைக் காரி) 32 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வெள்ளைக்காரி போல சிந்தித்த எங்கள் கமலினி டீச்சர் எங்கிருந்தாலும் வாழ்க! 
இலங்கையில் பாடசாலைகளில் படித்த காலங்களில் வகுப்பு ஆசிரியர், ஆசிரியை, அதிபர்(தலைமை ஆசிரியர்) போன்ற பாத்திரங்களுக்கு அடுத்த படியாக நீங்களும் நானும் மறக்காத ஒரு பாத்திரம் என்று ஒன்று உண்டென்றால் அது மொனிட்டர்(Monitor) என்ற கதாபாத்திரமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த 'மொனிட்டர்' என்ற பாத்திரம் பள்ளி வாழ்கையின் தவிர்க்க முடியாத, முக்கியமான பாத்திரம் அல்லவா? இந்த மொனிட்டர் பதவியை தமிழகப் பள்ளிகளில் கிளாஸ் லீடர்(Class Leader) என்று அழைப்பார்கள். முற்காலத்தில் இந்தப் பதவியை??? தமிழில் 'சட்டாம்பிள்ளை' என்று அழைத்தார்களாம். நான் கூறுவது தவறாக இருக்கும் பட்சத்தில் பெரியோர்கள் என்னை மன்னிக்கவும். இவர்களின் பணி என்னென்ன என்பதை நான் கூறி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. வகுப்பிற்கு வெண்கட்டி(Chalk Piece) எடுத்து வருவது, துடைப்பான்/அழிப்பான்(Duster) எடுத்து வருவது,பிள்ளைகளுக்கு ஆசிரியர் அடிப்பதற்கு உதவியாக அலுவலகத்திற்குச் சென்று 'பிரம்பு' எடுத்து வருவது(கிராமப் புறப் பள்ளியாயின் 'பூவரசு மரத்தில்' ஏறி,  'தடி'(குச்சி) முறித்து வந்து ஆசிரியரிடம் கொடுப்பது. ஆசிரியருக்கு வரவுப் பதிவேடு(Attendance register) எடுத்துக் கொடுப்பது, இலங்கையில் கிராமப் புறப் பாடசாலைகளாயின் அங்கு ஆசிரியருக்குக் குடிப்பதற்கு செம்பில் தண்ணீர் எடுத்து வருவது என்று 'மகா கனம்' பொருந்திய மொனிட்டரின் பணிகள் நீண்டு செல்லும். இந்தப் பணிகளோடு முக்கியமாக 'வாத்தியாரிடம்/டீச்சரிடம் ஏனைய மாணவர்களைப் பற்றிக் 'கோள் மூட்டுவது'(போட்டுக் குடுக்கிறது/வத்தி வைக்கிறது) என்பதையும் சேர்க்க வேண்டும் என்பது கனடாவில் வாழும் எனது நண்பன் ஸ்ரீ என்ற தர்ம குலசிங்கத்தின் ஆசையாகும். இந்தப் பதவியினால் மாணவனுக்கோ,மாணவிக்கோ எந்தவித நன்மையையும் கிடையாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதினாலும் இந்தப் பதவியை இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் பல பெற்றோர்கள், மாணவர்கள் ஒரு 'கௌரவத்தின் சின்னமாக' கருதுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
மேற்படி 'மொனிட்டர்' பதவியைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவினாலும், உளவியலாளர்களின் கருத்துப்படி இந்தப் பதவி மாணவனின்/மாணவியின் மனதில் 'தன்னம்பிக்கை' விருட்சத்தின் விதையை சிறு வயதிலேயே விதைக்கிறது. மாணவனிடத்தில் தலைமைத்துவப் பண்பை வளர்க்கிறது, ஆளுமையை விருத்தி செய்கிறது, உளவியல் கட்டுமானத்தை உறுதி செய்கிறது என நீண்டு செல்கிறது பட்டியல். ஆனால் "பிள்ளை வாத்தியாருக்கு/டீச்சருக்கு உதவி செய்யிறதுக்காக அங்கையும், இங்கையும் ஓடித் திரியிறதால பிள்ளையின்ர படிப்புத்தான் கெடுகுது" என்று குறைபட்டுக் கொள்ளும் பல பெற்றோர்களையும் நான் கண்டிருக்கிறேன்.
இலங்கையில் நான் படித்த மூன்று பாடசாலைகளையும் குறிப்பிடுவதாயின் முதல் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை படித்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில்(நான் படித்த காலத்தில் 'வித்தியாசாலை' இப்போது 'வித்தியாலயாமாக' மாற்றப் பட்டுள்ளது) வகுப்பில் மொனிட்டராக வருவதானால் பின்வரும் தகுதிகள் அந்த மாணவனுக்கு/மாணவிக்கு இருக்க வேண்டும்.
1) பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும்
அல்லது 
2) வகுப்பில் முதலாம் பிள்ளையாக அல்லது இரண்டாம் பிள்ளையாக வரும், படிப்பில் 'கெட்டிக்காரப் பிள்ளையாக' இருக்க வேண்டும்.
அல்லது 
3) அதே பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மகனாக/மகளாக இருக்க வேண்டும். 
மேற்கூறிய தகுதிகளில் இரண்டாவது தகுதி மட்டும் என்னிடம் இருந்ததால் அல்லைப்பிட்டியில் நான் படித்த காலத்தில் பல தடவைகள் வகுப்பில் 'மொனிட்டராக' வர முடிந்தது. அவ்வாறு வகுப்பில் மொனிட்டராக பல தடவைகள் 'பதவி' வகித்த காலத்தில் என்னிடம் 'கர்வம்' ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
அதன் பின்னர் ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளை யாழ்ப்பணத்தில் உள்ள புனித சம்பத்திரிசியார் கல்லூரியில்(St.Patrick's College) கற்றேன்.இந்தக் கல்லூரியின் பெருமைகளைக் கூறுவதானால் மூன்று நான்கு அத்தியாயங்கள் எழுத வேண்டும். அந்த அளவு புகழ் வாய்ந்த கல்லூரி அது. இத்தகைய கல்லூரிகளில் கற்பதற்கு என் போன்ற ஏழைகளுக்கு தகுதியே கிடையாது. இருப்பினும் தனது அக்காவின் பிள்ளைகளில் ஒன்று உயர்ந்த தராதரம் கொண்ட, புகழ்வாய்ந்த பாடசாலையில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காகப் பணம் செலவு செய்த என் தாய்மாமன். சிவ.பரிமளகாந்தன் என்பவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
நான் முன்பு கூறியது போல இந்தப் பாடசாலை ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்து, மற்றும் இத்தாலியத் திருச் சபையினரால் உருவாக்கப் பட்டு 130 வருடங்களாக தனியார் பாடசாலையாக இயங்கியது. பின்னர் 1980 களில் "அரசாங்க உதவி பெறும் தனியார் பாடசாலையாக" மாற்றம் பெற்றது. நான் முதலில் படித்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் 1980 களில் ஒரு மாணவன்/மாணவி கல்வி கற்பதற்கு கைமாறாக பாடசாலையின் வசதியை உயர்த்தும் பொருட்டு நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை 2 ரூபாயை(இலங்கை ரூபாய்) பள்ளிக்குச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தின் பெயர் 'வசதிக் கட்டணம்'(Facilities Fees). ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பள்ளியில் படித்தால், முதலிரு பிள்ளைகள் மட்டுமே வசதிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாவது பிள்ளை கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும் மேற்படி இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கட்டணம் செலுத்த முடியாத வறுமையில் வாடிய பெற்றோர்களும் இருந்தனர். இத்தகைய பெற்றோர்களால் மேற்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாத்தியாரிடம், குறிப்பாகப் பாடசாலை அதிபரிடம் பல தடவைகள் 'பிரம்படி' வாங்க வேண்டிய சூழ்நிலையும் எமது கிராமத்தில் 1980 களில் நிலவியது என்பது மறக்க முடியாத சோகம்.
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

*எனது இந்தத் தொடரைத் தமிழக வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பல இலங்கைத் தமிழ்ச் சொற் பிரயோகங்களை இந்தியத் தமிழ் வார்த்தைகளாக அடைப்புக் குறிக்குள் தந்துள்ளேன். உரையாடல் மொழி 'இலங்கைத் தமிழ்' என்பதைத் தமிழக வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

சனி, மார்ச் 10, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.6

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.6
அல்லைப்பிட்டி 1977
"நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் எத்தனை நூற்றாண்டுகள் நின்று நிலைத்து இந்தப் பூமியை அழிக்க இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்."
என்ற வரிகளுடன் கடந்த இரு வாரங்களுக்கு முந்திய தாரமும் குருவும் பகுதி 6.4 ஐ நிறைவு செய்திருந்தேன்.இத் தொடரினை பல வாரங்களாக தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் ஒரு சிலருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதாவது அல்லைப்பிட்டியைப் பற்றி கூறப் புகுந்த நான் இடையில் அதனை நிறுத்தி விட்டு எனது பார்வையை 'மாலைதீவின்' பக்கமும், 'பூமி வெப்பமடைதல்' பற்றியும் 'பிளாஸ்டிக்கினால் இந்த உலகிற்கு ஏற்பட இருக்கும் கேடு பற்றியும் கடந்த சில அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்து எழுதியிருந்தேன். அல்லைப்பிட்டிக்கும் மேற்படி விடயங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று கூட உங்களில் ஒரு சிலர் சிந்தித்திருக்கக் கூடும். ஆனாலும் மனிதர்களின் தவறுகளால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தீவுகள் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே போல மனிதர்களின் கடந்தகால, நிகழ்கால தவறுகளால் எங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல தீவுகளும் அழிந்து போகும் வாய்ப்பு உண்டல்லவா? அதில் எனது கிராமமாகிய அல்லைப்பிட்டியும் அடங்குகிறது என்றே நான் கருதுகிறேன். இப்போது மாலைதீவுக்கும், புவி வெப்பமடைதலுக்கும் அல்லைப்பிட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இவ்வளவு காலமும் பொறுமையாக எனது தொடரை வாசித்து வரும் அன்பு வாசக உள்ளங்களில் ஒருவராவது எனது இத் தொடரை வாசித்துச் சிந்தித்துச் செயலாற்றியிருந்தால் அதுவே எனது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி என நான் கருதுவேன். எனது இந்தத் தொடர் அல்லைப்பிட்டி பற்றிய முழுமையான ஒரு பார்வையை உங்களுக்கு வழங்குகிறதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். எனது நோக்கமெல்லாம் எங்கள் கிராமத்தைச் சாராத ஒருவர், இணையத்தில்(Google இல்) 'அல்லைப்பிட்டியைப்' பற்றித் தேடினால் அவருக்குப் போதும், போதும் என்று கூறத் தக்க அளவில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்பதே. அதில் ஒரு சிறிய பங்கை என்னால் முடிந்த வரையில் எனது இந்தத் தொடரின் மூலம் இட்டு நிரப்பி உள்ளேன். தற்போது கூகுளில் அல்லைப்பிட்டியைப் பற்றித் தேடினால் எனது தொடரையும் கூகுள் நிறுவனம் தேடுதலுக்குரிய  விடையாகத்(Searching result) தருகிறது. இதை எனது முயற்சிக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன். இனி வரும் காலங்களில் எங்கள் அல்லைப்பிட்டிக் கிராமத்தைப் பற்றி வரலாறு, சமூகம், புவியியல் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத இருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.


உப பிரிவு அ. 


'அல்லைப்பிட்டி' பெயர்க் காரணம் 
'அல்லைப்பிட்டி' என்று உங்கள் கிராமத்திற்குப் பெயர் ஏற்படக் காரணம் என்ன? என்று அல்லைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லது அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்த ஒருவரைக் கேட்டால் உடனடியாகக் கிடைக்கும் பதில் இதுதான் "அது அல்லி அரசாணி(அல்லி ராணி) ஆண்ட இடம், அதுதான் அல்லைப்பிட்டி என்று பெயர் வந்தது". "முதலில் அல்லியின் பெயரில் தொடங்கும் 'அல்லிப் பிட்டி' என்று இருந்து பின்னர் 'அல்லைப் பிட்டி' என்று மருவியது" என்று பதில் கிடைக்கும். நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முதலாவது விடயமே இந்தப் பதில் எந்தளவுக்கு உண்மையானது? எனபதுதான்.மேற்படி பதில் எந்தளவுக்கு வரலாற்று ரீதியான உண்மை? என்பதையும் எதிர்வரும் வாரங்களில் ஆராய இருக்கிறேன். மேற்படி கருத்து பொய்யானது என்று நிரூபிப்பதால் எனக்கு எந்தவிதமான லாபமும் கிட்டப் போவதில்லை. ஆனால் சந்ததி சந்ததியாக ஒரு தவறான கருத்தை நாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதிலிருந்து விடுபட வேண்டியது அந்த ஊரில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவருடைய கடமையும் அல்லவா?
சரி, மேற்படி 'அல்லி இராணி' அல்லது 'அல்லி அரசாணி' விடயத்தை அல்லைப்பிட்டி பற்றிய கேள்விக்குப் பதிலாக "அள்ளி விடும்" ஒருவரிடம் "அந்த அல்லி அரசாணி எந்தக் காலப் பகுதியில் அல்லைப்பிட்டியை ஆண்டார்? "அவர் அல்லைப்பிட்டியை மட்டும் தனது ஆட்சிப் பகுதியாகக் கொண்டிருந்தாரா? "இலங்கையை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் ஆண்டார்கள்.ஆகவே இந்த அல்லி ராணியின் காலம் எத்தனையாம் நூற்றாண்டு? என்றெல்லாம் கேட்போமாக இருந்தால் பதில் எதுவுமே கிடைக்காது. காரணம் இந்த 'அல்லி ராணி சமாச்சாரமே' நமது முப்பாட்டன், கொப்பாட்டன் காலத்திலிருந்து சந்ததி சந்ததியாகக் கூறப்பட்டு வரும் ஒரு 'புனைவுக் கதை' என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
(இன்னும் சொல்வேன்)

சனி, மார்ச் 03, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.5

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.5
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
எனது சித்தியைக் காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைத்த சித்தப்பாவின் ஞாபகம் வந்தபோதே நான் வெரித்தாஸ் வானொலியில் ஒரு தடவை கேட்ட நகைச்சுவைத் துணுக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் காரணமாகவே இரு வாரங்களுக்கு முன்னால் மேற்படி 'ஜோக்கை' உங்களுக்காகத் தந்தேன் .அது தவிரவும், ஏனைய சமயங்களைக் கிண்டலடிக்கும் நோக்கம் எனக்குத் துளியளவும் கிடையாது.
##########################################
ஒருவாறு எனது அழுகையிலிருந்து மீண்டு, சித்தப்பாவுடன் பாலர் பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் அழத் தொடங்கினேன். என்னை சமாதானப்படுத்தி பாலர் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த சித்தப்பாவுக்கு, நான் மீண்டும் அழத் தொடங்கியது எரிச்சலூட்டியிருக்க வேண்டும் தனது குரலை சிறிது உயர்த்திக் கொண்டு "இப்ப என்னத்துக்கடா அழுகிற? நான்தான் உன்ன பள்ளிக்குடத்தில கொண்டுபோய் விடுறன் எண்டு சொல்லுறன்,பிறகு எதுக்கு அழுகிற? என்றார் சிறிது உஷ்ணமாக. முதலில் என்னை 'அப்பு', 'ராசா' என்று அழைத்தவர் இப்போது கோபமாகப் பேசியதும் எனது அழுகை அதிகரித்தது. நான் எனது அழுகையை நிறுத்தாமலே "சித்தப்பா, சித்தப்பா, டீச்சர் பாட்டுப் பழகிறத்துக்கு பாவைப் பிள்ளை(*பொம்மையை யாழ்ப்பாணத் தமிழில் 70 களில் இவ்வாறுதான் அழைத்தோம்) கொண்டு வரச் சொன்னவா, நான் வீட்டில மறந்துபோய் விட்டுட்டு வந்திட்டன்" என்றேன் அழுது கொண்டே. "சரி பறுவாயில்ல, நான் உங்கட டீச்சரிட்ட சொல்லுறன், உன்ன அடிக்க வேண்டாம் எண்டு. சரியா? என்றார். எனக்குத் தெரியும், 'கருணையே உருவமாக' இந்த மண்ணில் அவதரித்த, ஒரு வார்த்தை இரைந்து பேசத் தெரியாத, எங்கள் கமலினி டீச்சர் என்னை அடிக்கவோ,ஏசவோ(திட்டவோ) போவதில்லை என்பது எனக்கு அந்த வயதிலும், நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும் 'பாப்பாப் பாடல்' பழகுவதற்கு எல்லாப் பிள்ளைகளும் பொம்மை கொண்டு வரும்போது, என்னிடமும் 'சித்தியிடம் இரவல் வாங்கிய' பொம்மை இருந்தும் அதை நான் கொண்டு செல்லாமல் 'வெறுங் கையுடன்' செல்வது எனக்குப் பலத்த அவமானம் என்று உணர்ந்து அழுதேன். மானம், அவமானம், கௌரவப் பிரச்சினை எல்லாம் பார்க்கத் தெரியாத வயது அது. இருப்பினும் ஏதோ ஒன்று என்னை அழ வைத்தது. எல்லாப் பிள்ளைகளும் என்னை ஏளனமாய்ப் பார்ப்பார்கள் எனும் மனப் பிரமை காரணமா? என்பது எனக்குத் தெரியாது. "சித்தப்பா! எல்லாப் புள்ளையளும், பாவப் பிள்ள கொண்டு வருவினம், என்னட்ட மட்டும் இல்ல" என்றேன் மறுபடியும் அழுதபடி. எனது பேச்சு அவருக்கு மிகவும் எரிச்சலை ஊட்டியிருக்க வேண்டும். "அதுக்கு இப்ப என்ன என்னடா செய்யச் சொல்லுற? திரும்ப வீட்ட போய் எடுத்துக் கொண்டு வருவமா? என்று சத்தமாய்க் கேட்டார். நான் "இல்ல, இல்ல" என்றேன் முந்திக் கொண்டு. ஐந்தரை வயது என்றாலும் எனக்குத் தெரியும் திரும்ப வீட்டுக்குச் சென்று பொம்மை எடுத்து வருவதற்குள் பாலர் பள்ளிக்கு மிகவும் தாமதமாகப் போய் விடும் என்பது தெரிந்திருந்தது. எனது மறுப்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சித்தப்பா, என்னோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். "அப்பிடியெண்டா ஒழுங்கா, அழாமக் கொள்ளாம, நல்ல புள்ளையா நடந்து வர வேணும்" என்று கட்டளையிட்டார். நானும் அவரது சொற்படியே 'நல்ல பிள்ளையாக' சத்தம் செய்யாமல், அழாமல் அவர்பின் சென்றேன்.
நானும், சித்தப்பாவும் பள்ளியை அடைந்தபோது வகுப்பு ஆரம்பமாகி இருந்தது. காலையில் என்னை விட்டுவிட்டுப் போய் விட்ட டீச்சரைக் கண்டதும் எனக்கு மீண்டும் அழுகை அழுகையாக, வந்தது. அதை விடவும் பாலர் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கையில் 'பொம்மையுடன்' நின்றதைப் பார்த்து, என்னிடம் பொம்மை இல்லையே என்ற ஏக்க உணர்வு எனது அழுகையை இரட்டிப்பாக்கியது. ஓடிச் சென்று சென்று டீச்சரைக் கட்டிக் கொண்டு அழுதேன். எனது அழுகையைப் பார்த்து ஏனைய பிள்ளைகள் கலவரமடைந்து விடக் கூடாது என்பதில் கமலினி டீச்சர் மிகவும் அவதானமாக இருந்தார். தம்பி! தாசன் இஞ்ச பார்., முதல்ல அழுகைய நிப்பாட்டு, இப்ப என்ன நடந்திற்றுது எண்டு இப்பிடி அழுகிறாய்? குழந்தப் பிள்ளையள் மாதிரி இது என்ன பழக்கம்? சீச்சீ ! என்று அவர் கூறவும் முதலில் திகைத்து நின்ற பிள்ளைகள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சிரிக்க ஆரம்பித்ததைப் பார்த்ததும் நான் எனது அழுகையை நிறுத்திக் கொண்டேன். டீச்சரும் எனது தலையை தடவி என்னை ஆறுதல் படுத்தினார். அந்தத் தருணத்திற்காக காத்திருந்த சித்தப்பாவும் என்னிடமிருந்து விடை பெற்றார். அன்று மீண்டும் "சின்னப் பாப்பா, எங்கள் செல்லப் பாப்பா" என்ற பாடலைக் கற்க ஆரம்பித்தோம். இடையில் நான் "டீச்சர் நான் பாவப் பிள்ள கொண்டுவர மறந்து போயிற்றன்" என்றேன் மிகவும் தயக்கத்துடன். "பறுவாயில்ல நான் பிள்ளைக்கு ஒரு பாவப் பிள்ள தாறன். நாளைக்கு மறக்காம வீட்டிலயிருந்து வரேக்க பாவப் பிள்ள கொண்டு வர வேணும் சரியா? என்றார். நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.டீச்சர் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பொம்மையை எடுத்து என்னிடம் நீட்டினார். அவர் வைத்திருந்த பையில் மேலதிகமாக இரண்டு பொம்மைகள் இருந்தன. யாராவது ஓரிரண்டு பிள்ளைகள் பொம்மை கொண்டுவர மறந்தாலும் அவர் கொண்டு வரும் பொம்மைகள் உதவட்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் வீட்டிலிருந்து வரும்போதே பொம்மை கொண்டுவரும் டீச்சரை நீங்கள் எங்காவது இந்த இருபதாம் நூற்றாண்டில் கண்டதுண்டா? ஆனால் நான் குறிப்பிடும் இந்தச் சம்பவம் 1977 இல் அல்லைப்பிட்டியில் நடந்தது. இவ்வாறு 'முன்னெச்சரிக்கையுடன்' உதவும் மனப்பானமையுடன் செயல்படும் ஆசிரியர்களை இலங்கையில் மிகவும் அரிதாகவே கண்டேன். மேற்படி செயல் என் மனதில் 'கமலினி டீச்சருக்கென்று' மிகப்பெரிய இடத்தை ஒதுக்கி விட்டது. அவரைப் போன்ற உதவும் மனப்பான்மை உள்ள ஒரு ஆசிரியையை 32 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டில் கண்டேன். ஆனால் அவர் ஒரு டேனிஷ் பெண்மணி(வெள்ளைக் காரி) 32 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வெள்ளைக்காரி போல சிந்தித்த எங்கள் கமலினி டீச்சர் எங்கிருந்தாலும் வாழ்க!
(இன்னும் சொல்வேன்)

*எனது இத் தொடரில் வரும் உரையாடல்கள் 'இலங்கைத் தமிழில்'(பேச்சு வழக்குத் தமிழில்) உள்ளன என்பதைத் தமிழக வாசகர்களுக்கு அறியத் தருகிறேன்.
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

சனி, பிப்ரவரி 25, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.4

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.4 
அல்லைப்பிட்டி 1977

நீங்கள் செய்கின்ற 'பூமித் தாயைச் சூடாக்குகின்ற' கெடுதலான செயலைக் குறைப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உங்கள் கைளில் உள்ளன.நீங்களும் நானும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்தால் பூமித் தாயை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் கேடுகளில் 'தீவுகளின் அழிவு' முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என இரண்டு வாரங்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்னுமொரு கேட்டைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் பூமியையும், ஏனைய கோள்களாகிய சூரியன், சந்திரன் ஆகியவற்றையும் படைத்த இயற்கை அன்னை இந்தப் பூமியில் வாழப் போகின்ற உயிரினங்களின் நன்மை கருதி, அவைகள் சூரிய வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பூமியில் வாழப் போகும் அத்தனை ஜீவராசிகளுக்காகவும் ஒரு 'குடையை' விரித்து வைத்தாள். என்ன, குடையா? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? ஆம் அதை விஞ்ஞானிகள் 'குடை' என்றுதான் அழைக்கிறார்கள்.


இயற்கை அன்னை தந்த குடை
பூமியின் வயது பல கோடி ஆண்டுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமி எப்போது உருவாகியது எனபது உங்களுக்கும் எனக்கும் திட்டவட்டமாகத் தெரியாததால் விஞ்ஞானிகளின் கூற்றை மறு பேச்சில்லாமல் ஏற்றுக் கொள்வோம். இந்தப் பூமி உருவாகியபோது இயற்கையானது சூரியனின் கடும் வெப்பம் இந்தப் பூமியை நேரடியாக வந்து தாக்காமல் இருப்பதற்காக ஒரு 'பாதுகாப்பு' ஏற்பாட்டைச் செய்தது. அதன் பெயர் ஓசோன் படலம் அல்லது ஓசோன் படை (Ozone Layer) என்பதாகும். இதன் பணி யாதெனில் சூரியனில் இருந்து புறப்படும் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையா வண்ணம் காப்பது ஆகும். இவ்வாறு சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையுமானால் நாமும் பூமியில் உள்ள ஏனைய உயிரினங்களும், செடி கொடிகளும்,மரங்களும் பொசுங்கி, வெந்து சாக வேண்டிய நிலை ஏற்படும். இதனைக் கருத்திற் கொண்டே இயற்கை அன்னை எமக்காக மேற்படி 'ஓசோன் படலம்' எனும் குடையை விரித்து வைத்தாள். மனிதர்களாகிய நாம் இயற்கை அன்னை எமக்காகப் படைத்தருளிய இந்தப் போற்றுதலுக்குரிய 'குடைக்காக' அவளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டாமா? ஆனால் இந்த நன்றிகெட்ட மனித இனம் என்ன செய்தது தெரியுமா? இயற்கைத் தாய் எமக்குப் பரிசளித்த அந்தக் குடையின் மீது பல ஓட்டைகளை ஏற்படுத்தி விட்டது. ஆம், பூமியின் பல இடங்களில் மேற்படி ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் மேற்படி ஓட்டை விழுந்த பகுதியில் உள்ள நாடுகளில் சூரிய ஒளி+வெப்பம் மக்களை நேரடியாகத் தாக்குகிறது. இதனால் அவர்கள் வெந்து மடிவது மட்டுமன்றி, அவர்களின் தோலைச் சூரிய வெப்பம் மற்றும் ஊதாக் கதிர்கள் தாக்குவதால் அவர்கள் 'தோல் புற்று நோய்க்கும்' ஆளாகின்றனர்.


யார் காரணம்?
விஞ்ஞானிகளைக் கேட்டால் "நாம் அனைவருமே காரணம்" என்கின்றனர். ஆனால் குறிப்பிட்டுச் சொன்னால், எந்தெந்த நாடுகளில் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் உள்ளனவோ, எந்தெந்த நாடுகளில் வாகனங்கள் அதிகமோ அத்தனை நாடுகளும் இந்த இயற்கைச் சீரழிவுக்குப் பொறுப்பு ஆகின்றனர். ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதற்கு பூமில் ஏற்படும் வெப்பம் ஒரு காரணமாக இருந்தாலும், பூமியில் இருந்து மேலெழுந்து செல்லும் 'கரி அமில வாயு'(Carbon Dioxide) பிரதான காரணமாக அமைகிறது. ஆகவே கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் நாடுகள் இதற்குப் பொறுப்பாகின்றன. அது மாத்திரமன்றி சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் அனைவருமே இந்த இயற்கையை அழிக்கும் செயலுக்குத் துணை போகின்றனர். புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற வாசகர்களில் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உங்கள் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக ஒப்படைத்து, அதனைத் திரும்பப் பெறும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன, உங்கள் வாகனங்களிற்கு புதிய உதிரிப் பாகங்கள்(டயர் உட்பட) பொருத்தும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் 10% வரை(environmental charge) இந்த இயற்கையை, பூமித் தாயைச் சேதப்படுத்தியமைக்காகச் செலுத்தும் 'தண்டத் தொகை'(குற்றப் பணம்) என்பதை அறிவீர்களா?
இந்த ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டை விடயத்தில் இன்னுமொரு விசித்திரம் கலந்திருக்கிறது. நீங்கள் வெளியேற்றும் கரியமில வாயு உங்கள் நாட்டின் மேல் உள்ள ஓசோன் 'குடையில்' ஓட்டையை ஏற்படுத்தாது. மாறாக பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் நாடுகளின் மேல் உள்ள ஓசோன் படலத்தின் மீது ஓட்டையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக சீனாவின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை,கரியமில வாயு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு மேலே உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகிறது. ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு தென் அமெரிக்க நாடுகளாகிய பிரேசில், ஆர்ஜென்டீனா, சிலி ஆகிய நாடுகளின் மேல் காணப்படும் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. யாரோ செய்த பழிக்கு யாரோ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கை அன்னையின் வித்தியாசமான தீர்ப்பாகத் தோன்றுகிறதா?
இயற்கையை சீரழிக்கும் பல எதிரிகளில் முதன்மையான காரணிகளைப் பார்த்து வருகிறோம். இவற்றில் அடுத்த நூற்றாண்டில் மிகப் பெரிய சவாலாகத் திகழப் போவது 'பிளாஸ்டிக்' ஆகும். இன்று மனிதனின் நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட, நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு சக்தியாக விளங்கும் இந்தப் பிளாஸ்டிக் நாளை எமது இயற்கை அன்னையை அழித்தொழிக்கப்  புறப்பட்டிருக்கும் ஒரு 'புதிய எதிரி' என்பது அறிவீர்களா?


பிளாஸ்டிக் என்றால் என்ன?
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்கள் தொடக்கம், கைத்தொலைபேசி, கணணி, வாகன உதிரிப் பாகம் வரை ஆயிரக் கணக்கான பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. சரி, நீட்டி முழக்காமல் விடயத்திற்கு வருகிறேன். 'பிளாஸ்டிக்' என்பதே பெற்றோலியம் மற்றும் ரப்பர்க் கழிவுகளின் 'கூட்டமைப்பு' ஆகும். பெரும்பாலான மென்மையான பிளாஸ்டிக் கலவைகள் மற்றும் மூலப் பொருட்கள் யாவுமே பெற்றோலியக் கழிவிலிருந்து உருவாக்கப் படுகின்றது.


உங்களை விட ஆயுசு கெட்டி.
இந்தப் பூமியை அழித்தொழிக்கக் காத்திருக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் நம்மை விட ஆயுள் கூடியவை என்பது நீங்கள் அறிந்தது. ஒழுங்கான முறையில் அகற்றப் படாமல் மண்ணில் வீசப்படும் ஒவ்வொரு பொருளும் மண்ணில் சிதைவடைந்து மண்ணோடு மண்ணாக உக்கிப் போவதற்கு/மட்கிப் போவதற்கு எடுக்கும் காலப் பகுதியை கீழே உள்ள பட்டியலில் காண்க.
  1. வாழைப்பழத் தோல் மற்றும் தோடம் பழத்(ஆரஞ்சுப் பழம்) தோல்: 3 தொடக்கம் 6 வாரங்கள் 
  2. காகிதத்தால்(பேப்பர்) தயாரிக்கப் பட்ட பை மற்றும் செய்தித் தாள்(News Paper): 4 தொடக்கம் 6 வாரங்கள் 
  3. அட்டைப் பெட்டி(Hard Board): 8 வாரங்கள் 
  4. கம்பளிக் காலுறை(Socks): 1 வருடம் 
  5. சிகரெட்டின் பின்பகுதியில் இருக்கும் பஞ்சு (filter): 1 தொடக்கம் 50 வருடங்கள்.
  6. கடையில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள்: 20 தொடக்கம் 100 வருடங்கள்.
  7. தகரத்தால்(tin) செய்யப்பட்ட குளிர்பான, மதுபான டின்கள்: 50 வருடங்கள்.
  8. அலுமினியத்தால் தயாரிக்கப் பட்ட குளிர்பான மற்றும் மதுபான டின்கள்: 200 தொடக்கம் 500 வருடங்கள்.
  9. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குளிர்பானப் பாட்டில்கள்(போத்தல்கள்): 450 வருடங்கள் மற்றும் அவற்றின் மூடிகள் 800 வருடங்கள் வரை.
  10. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பாட்டில்கள்: 450 தொடக்கம் 1000 வருடங்கள்.
  11. குழந்தைகளின் கழிவு வெளியேற்றத்திற்குப் பயன்படுத்தப் படும் சுகாதார நப்கின்கள் (Diapers): 550 வருடங்கள்.
  12. பிளாஸ்டிக்கினால் ஆன தேநீர்க் கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள்: 100,0000(பத்து லட்சம்) ஆண்டுகள்.
  13. தமிழ் மக்கள் 'ரெஜி போம்' என அழைக்கும் styrofoam பஞ்சு: 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல்.
  14. கண்ணாடிகள், கண்ணாடியால் ஆன பாத்திரங்கள், கண்ணாடிப் பாட்டில்கள்: 10 லட்சம் தொடக்கம் 20 லட்சம் ஆண்டுகள் வரை.

தகவலுக்கு நன்றி: Be healthyandrelax.com 

நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் எத்தனை நூற்றாண்டுகள் நின்று நிலைத்து இந்தப் பூமியை அழிக்க இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

சனி, பிப்ரவரி 18, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
தினமும் டீச்சருடன் 'வாயாடித் தனமாக' பேசிக்கொண்டு சென்று வந்ததால் பள்ளிக்கூடம் செல்லும் பாதையைச் சரியாகக் கவனித்து, ஞாபகத்தில் வைக்கத் தவறி விட்டேன் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் நடந்துகொண்டிருக்கும் பாதை எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத பாதையாகத் தென்பட்டது. இனம்புரியாத 'பயம்' என்னைக் கவ்விக் கொண்டது. எவ்வளவு தூரம் நடந்தும் பள்ளிக்கூடம் தென்படாததால் அழத் தொடங்கினேன்.
ஆம், என் வாழ்வில் முதல் தடவையாக, எனது 'பதினொரு தலைமுறையினர்' வாழ்ந்த கிராமத்தில் நான் தொலைந்து போனேன்.
தெருவில் போவோர், வருவோரிடம் பள்ளிக்கூடத்தை அடைவதற்கு எந்த வழியால் செல்ல வேண்டும்? என்று கேட்டிருந்தாலே யாராவது ஒருவர் முன்வந்து உதவியிருப்பார்கள். ஆனால் வீதியால் செல்வோர்களில் பெரும்பாலானவர்கள் 'பிள்ளை பிடிகாரர்கள்' என்றல்லவா எனக்குச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள். "பக்கத்துக் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று பிள்ளைகளை, பிள்ளை பிடிகாரர்கள்(பிள்ளைகளைப் பிடித்துச் செல்வோர்) பிடித்துச் சென்று விட்டார்களாம்", அவர்கள் பிள்ளைகளை கையில் இனிப்பு(மிட்டாய்) வைத்துக் கொண்டு அழைப்பார்களாம், அவர்கள் தரும் இனிப்பை உண்கிற பிள்ளைகள் மயங்கி சரிந்து விடுவார்களாம், அந்தப் பிள்ளைகளை அவர்கள் உடனடியாகக் காரில் ஏற்றி, கண்காணாத தேசத்திற்குக் கொண்டு சென்று 'புதையல்' எடுக்கும்போது 'மனிதக் குழந்தைப் பலி' கொடுப்பார்களாம், அல்லது அவர்களது வீட்டில் காயும் கருவாட்டைக் காவல் காக்கும்(காகம், பருந்து போன்ற பறவைகளிடம் இருந்து) வேலையில் அமர்த்தி விடுவார்களாம். அங்கு கொண்டு செல்லப்படும் பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவை வெறும் சோறும், தண்ணீரும் தருவார்களாம். ஒரு மீனை(கருவாட்டை) பறவை தூக்கிச் சென்று விட்டால் 'இரும்புக் கம்பியினால்' அடிப்பார்களாம். என்றெல்லாம் சொல்லி பிள்ளைகளைப் பயமுறுத்தி வளர்க்கும் சமுதாயம் அல்லவா எனது சமுதாயம்?. தசாப்தங்கள் ஓடிவிட்டன, கம்பியூட்டர் காலம் வந்துவிட்டது. ஆனாலும் இந்த 'அம்மாக்கள்' மாறியதாகத் தெரியவில்லை. பிள்ளை உணவருந்தாமல் அடம் பிடித்தாலோ, குழப்படி செய்தாலோ "உன்னைப் பிள்ளை பிடிகாரரிடம்(பிள்ளை பிடிக்கிறவனிடம்) பிடித்துக் கொடுத்து விடுவேன்" என்பதும், "உன்னை உம்மாண்டியிடம்(பூச்சாண்டியிடம்) பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுவதும் தொடரத்தான் செய்கிறது.
இப்படி நிலைமை இருக்கையில் எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நிலைமை எப்படி இருந்திருக்கும்? கையில் சாக்குப் பையுடன் வரும் 'தாத்தாக்களைப்' பார்த்து நான் அலறியடித்து ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளது. அப்படியிருக்கையில் தெருவில் செல்வோரிடம் பாலர் பள்ளிக்குச் செல்வதற்கு வழி கேட்கும் 'துணிவு' எனக்கு வருமா? எனது நிலைமை வங்காள மொழி எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந் எழுதிய "காணாமல் போன குழந்தை' எனும் கதையில் வரும் 'குழந்தையை' ஒத்ததாக இருந்தது. நான் தேம்பித், தேம்பி அழுதபடி சென்றதையும் யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள் காரணம் எனக்கு சத்தமாக அழவும் தெரியாது.
மெல்ல, மெல்ல நடந்து, அழுதபடியே மனித நடமாட்டம் மிகவும் குறைவான ஒரு 'பனங் கூடல்' வழியாக(பனந் தோப்பு) நடந்தேன். அப்போது அந்த பனங் கூடல் வழியாக நடந்து வந்துகொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டதும் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது வேறு யாருமில்லை நான் ஏற்கனவே ஒரு தடவை குறிப்பிட்ட எனது 'சித்தப்பா'தான் அது. என்மீதும், என் சகோதரர்கள்மீதும் அதிக பாசம் வைத்திருக்கின்ற, ஆனால் தினமும் குடித்துவிட்டு வந்து எனது சித்தியை அடித்து, உதைக்கின்ற என் சித்தப்பா அந்தக் கணத்தில் மட்டும் என் கண்களுக்கு "ஆபத் பாந்தவனாக, அநாத ரட்சகனாக, கண்ண பரமாத்மாவாகத்" தெரிந்தார். அவரைக் கண்டதும் ஆனந்தம் உண்டாகியது என்னமோ உண்மைதான். ஆனாலும் நான் அழுகையை நிறுத்தவில்லை. என்னை வியப்புடன் நோக்கிய சித்தப்பா "ராசன், ஏனப்பு அழுகிற? இஞ்ச என்னத்துக்கப்பு வந்தனி? என்று பரிவோடு எனது தலையைத் தடவியபடியே கேட்டார். நான் விக்கி விக்கி அழுதுகொண்டே "சித்தப்பா, டீச்சர் என்ன விட்டுட்டு போயிட்டா, நான் பள்ளிக்குடம் போக வேணும்" என்றேன். நிலைமையை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பள்ளிக்கூடத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

நான் குறிப்பிடும் இந்தச் 'சித்தப்பா' என்மீது எவ்வளவு பாசமாக இருந்தாலும், எனக்கு அவர்மீது துளியளவும் பாசம் ஏற்பட்டதில்லை. அவருக்கு என்மீது மிகுந்த பாசம் இருந்ததற்குக் காரணங்கள் இரண்டு. அவருக்கு ஆண் பிள்ளைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவருக்கு இரண்டும் பெண் பிள்ளைகள்(பின் நாளில் அது மூன்றானது), மட்டும்தான். நான் அவரது ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் அவருக்கு(என் சித்திக்கு) குழந்தை பிறக்கும்போது சித்தியும், சித்தப்பாவும் ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனார்களாம். இதனாலேயே சித்திக்கும், சித்தப்பாவுக்கும் என்மீதும், என் அண்ணனின் மீதும் என் தம்பியின் மீதும் மிகுந்த பாசமாம். ஆனால் எனக்கோ இந்தச் சித்தப்பாவைக் கண்டதும், என்னையறியாமலே ஒருவித பயம் என்னைப் பற்றிக் கொள்ளும். என் கண்முன்னால் அவர் என் சித்தியை அடித்து, உதைக்கின்ற காட்சிகள் படம்போல விரியும். இனம் புரியாத 'திகில்' என்னை ஆட்கொள்ளும்.
இவ்வாறு தனது மனைவியைக் குடித்துவிட்டோ அல்லது குடிக்காமலோ தினமும் அடித்து உதைக்கின்ற 'ஆண் சிங்கங்களைப்' பற்றி பிறிதொரு தருணத்தில் எழுத இருக்கிறேன். இருப்பினும் அந்தக் 'கனவான்களுக்கு'????? நமது வேதங்களும், இதிகாசங்களும் உரைத்த ஒரு சில வாசகங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.
########################################

  • பெண்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் குடும்பம் மாத்திரமின்றி, சமுதாயமும் சபிக்கப் படுகிறது.
  • தனது பத்தினியை(மனைவியை) அடித்து, உதைத்துத் துன்புறுத்தும் ஒரு ஆடவன், ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டி, பதினாயிரம் ஏழைகளுக்கு உணவளித்தாலும் 'நரகக் குழியில்' வீழ்வது உறுதி.
  • தன்னை விடவும் வலிமை குறைந்தவளாகிய தனது தாரத்தை அடித்து, உதைப்பவனை நோக்கித் தேவர்களின் கோபப் பார்வை திரும்புகிறது.
  • கண்ணகி அழுதாள் மதுரை எரிந்தது; சீதை அழுதாள் இலங்காபுரி அழிந்தது; பாஞ்சாலி(திரௌபதி) அழுதாள் அஸ்தினாபுரமே அழிந்தது.
இதிகாசங்களும், புராணங்களும் உண்மையா? என்று கேட்காதீர்கள். அவை நமக்குக் கூறும் செய்தியை, படிப்பினையை மட்டும் பாருங்கள்.
############################################
இவ்வாறு எனது சித்தியைக் காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைத்த சித்தப்பாவின் ஞாபகம் வந்தபோதே நான் வெரித்தாஸ் வானொலியில் ஒரு தடவை கேட்ட நகைச்சுவைத் துணுக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மேற்படி 'ஜோக்கை' மேலே உங்களுக்காக தந்துள்ளேன்.அது தவிர வேறு சமயத்தைக் கிண்டலடிக்கும் நோக்கம் எனக்குத் துளியளவும் கிடையாது.
*எனது இந்தத் தொடரில் வரும் உரையாடல்கள் 'இலங்கைத் தமிழில்' உள்ளன என்பதைத் தமிழக வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(இன்னும் சொல்வேன்)    

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.2


ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.2 
அல்லைப்பிட்டி 1977

"மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயராக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது".
எனும் கருத்துடன் கடந்த இரு வாரங்களுக்கு முந்திய எனது இந்தத் தொடரை நிறைவு செய்திருந்தேன். இன்றைய இந்தத் தொடரை எழுதுவதற்கு முன்பாகவே கடந்த வாரத்தில் மாலைதீவு அரசியல் கொதிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவை பற்றி விரிவான செய்திகளை உங்களுக்குத் தருவதற்குப் பல இணையங்களும், பத்திரிகைகளும் இன்னபிற ஊடகங்களும் இருப்பதால் அவற்றை இங்கு விபரிப்பதைத் தவிர்த்து விடுகிறேன்.
இருப்பினும் நான் கூறவந்த விடயங்களை சுருக்கமாக கூறி விடுகிறேன். அதாவது இன்னும் 47 வருடங்களில் மாலைதீவுகள் முற்றாகக் கடலில் மூழ்கி விடும் என்று முன்பு கூறியிருந்தேன் அல்லவா? மாலைதீவுகள் மட்டுமன்றி உலகிலுள்ள முக்கியமான தீவுகளில் 200 இற்கும் மேற்பட்ட தீவுகள் அடுத்த நூற்றாண்டுக்குள் கடலில் மூழ்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இவற்றில் பல முக்கியமான சுற்றுலாத் தீவுகளும் அடக்கம். இந்தத் தீவுகளின் அழிவுக்கு நீங்களும் நானும்தான் காரணம் என்று கூறினால் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்தான். ஆனால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் 'புவி வெப்பமடைவதற்கு' யாரெல்லாம் காரணமோ அவர்கள் யாவருமே இந்தத் தீவுகளின் அழிவுக்கும், இத் தீவு மக்களின் அழிவுக்கும் காரணமாகின்றனர். கொஞ்சம் ஜீரணிக்க முடியாத விடயமாயினும் அறிவியல் ரீதியாகச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.
சரி, இத் தீவுகளின் அழிவுக்குக் காரணம் என்ன? கடலின் நீர் மட்டம் அதிகரிப்பு. கடலின் நீர் மட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? ஆர்டிக், அந்தார்டிக் கண்டங்கள், கனடாவின் வடக்குப் பகுதி, கிரீன்லாந்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றில் காணப்படும் 'பனி மலைகள்' உருகுதல். பனி மலைகள் உருகுவதற்குக் காரணம் என்ன? வரலாற்றில் என்றுமில்லாதவாறு பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு. பூமியின் வெப்பநிலை 'கண்மண்' தெரியாமல் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? மனிதர்கள் தங்கள் 'அலட்சியமான' செய்கைகளால் பூமியை அளவுக்கு அதிகமாகச் சூடாக்குகின்றனர் என்பதே. இவ்வாறு ஒரு 'விடுகதை' போல இந்தச் சுழற்சியைப் பற்றிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இருப்பினும் உங்களுக்குப் புரியும் விதத்தில் சுருக்கமாக் கூறியுள்ளேன்.
பூமி சூடாகுவதற்குக் காரணமான செய்கைகளை நூற்றுக் கணக்கில் பட்டியலிடலாம். இருப்பினும் ஒரு சிலவற்றைப் பட்டியலிடுகின்றேன். பட்டியலைப் பார்த்து அதில் உங்கள் பெயரும், எனது பெயரும் இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  1. அணு உலைகள், அணு மின்சாரத் தயாரிப்பு, ராக்கெட் தொழிற்பாடு, ஏவுகணைகள் பயன்படுத்தல், தொழிற்சாலைகள், ஆயுதத் தயாரிப்பு, உலோகங்களை உருக்கும் தொழிற்சாலைகள்.
  2. விமானப் பயணங்கள், கப்பல் பயணங்கள், புகையிரதப் பயணங்கள், வாகனப் பயணங்கள் செய்வோர் மற்றும் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர். 
  3. வீட்டில் மின்சார அடுப்பு, எரிவாயு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்போர்.வீட்டில் இறைச்சியை, மீனை, காய்கறியை அவித்து உண்போரை விடவும் 'பொரித்து' (வறுத்து) உண்போர் பூமியை அதிகம் சூடாக்குகின்றனர் என்பதை அறிவீர்களா? இவ்விடத்தில் முட்டையை, மீனைப் பொரித்து உண்போர்.மற்றும் கத்தரிக் காயைப் பொரித்துக் 'குழம்பு' வைக்கும் நம்மவர்கள் என் நினைவில் வந்து போகின்றனர்.
  4. கட்டற்ற மின்சாரப் பயன்பாடு, வெப்பமேற்றிகளின்(Heater) பயன்பாடு, இணையப் பயன்பாடு, கணனிப் பயன்பாடு, தொலைக்காட்சி, வானொலிப் பயன்பாடு.
  5. இந்தப் பூமியில் கைத் தொலைபேசி(mobile) உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இப் பூமி வெப்பமடைதலுக்குக் காரணம் ஆகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 
இவ்வாறு பூமியை வெப்பமடையச் செய்வோரைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். உங்களின் புரிதலுக்காக ஒரு சிலவற்றைப் பட்டியலிட்டேன். மேற்படி செயல்களைச் செய்து பூமியை வெப்பமடையச் செய்வோரின் பட்டியலில் உங்களுடைய பெயரும் என்னுடைய பெயரும் நிச்சயமாகப் பல இடங்களில் இருக்கும் என்பது உறுதி. "இல்லை" என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நீதிக்குப் புறம்பாகப் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்.

என்ன செய்யலாம்?
விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியின் பயனாக நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ நவீன தொழிநுட்பக் கண்டு பிடிப்புகளை உபயோகிப்பதையோ, அவற்றின் மூலம் பயன் பெறுவதையோ, பூமியைச் சூடாக்குவதையோ தவிர்க்கவோ, நிறுத்தவோ முடியாத ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் அவற்றை எல்லாம் குறைப்பதற்கு நம் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன் வருவதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. இது இந்த நூற்றாண்டின் 'சாபக் கேடு' அடுத்த தடவை 'புவி வெப்பமடைவதற்குக்' காரணமான ஒவ்வொரு செயலிலும் இறங்கும்போதும், மாலைதீவு மக்களையும், இந்தப் பூமியில் அடுத்த நூற்றாண்டுக்குள் அழிவைச் சந்திக்க இருக்கின்ற 200 இற்கு மேற்பட்ட தீவு வாழ் மக்களையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்கின்ற 'பூமித் தாயைச் சூடாக்குகின்ற' கெடுதலான செயலைக் குறைப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உங்கள் கைளில் உள்ளன.நீங்களும் நானும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்தால் பூமித் தாயை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். 

நான் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகி விட்டன. அப்ப நீங்க?
(தொடரும்)

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.1


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.1
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
ஏனைய தீவகக் கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'அல்லைப் பிட்டியில்' ஒழுங்கைகள்(சந்துகள்) குறைவு. இருப்பினும் தன்னந் தனியே மூன்றாம் வட்டாரத்தில் இருக்கும் பாலர் பள்ளியை சென்றடைவது 'வாஸ்கோட காமாவின் ஆபிரிக்கப் பயணம்' போல எனக்குத் திகிலை ஊட்டியது. இருப்பினும் ஓரளவு துணிவை வரவழைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினேன்.
தினமும் டீச்சரோடு பாலர் பாடசாலைக்குச் சென்று வரும்போது, மதிய நேரத்தில் பெரும்பாலும் தகிக்கும் வெயிலாக இருக்கும். அவ்வாறான தருணங்களில் எல்லாம் டீச்சர் தன்னிடமிருந்த சிறிய குடையை எடுத்து விரித்து, அதன் நிழலில் என்னையும் சேர்ந்து நடந்து வரும்படி கூறுவார். அத்தகைய 'தாய்மையுள்ளம்' கொண்ட டீச்சர்களை நான் வளர்ந்தபின் மிகவும் அரிதாகவே கண்டேன். அதேபோல் காலையில் டீச்சரோடு பள்ளிக்குச் செல்லும்போதும், டீச்சரின் மிதமான வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்து செல்வது என் மனதிற்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. 
காலையும், மாலையும் டீச்சரோடு நடந்து செல்கையில் என்னவெல்லாம் செய்தேன் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். சில வேளைகளில் டீச்சருக்கு முன்பாக ஓடி, நடந்து சென்று, நான் நின்றுகொண்டிருக்கும் இடத்தை டீச்சர் நெருங்கியதும் மறுபடி ஓடத் தொடங்கி விடுவேன். அப்போதெல்லாம் "பாத்து ஓடப்பு" என்று ஒரு அன்புக் கட்டளை டீச்சரிடமிருந்து பிறக்கும். டீச்சர் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்பது எனக்குப் புரிவதில்லை. சில வேளைகளில் நான் ஓடிக்கொண்டிருக்கையில் டீச்சர் என்னிடம் "கவனம், கவனம்" என்று சத்தம் போட்டுக் கூறுவார். நாங்கள் செல்லும் வீதியில் வரும் வாகனங்களில் நான் மோதுப்பட்டு விடக் கூடாது என்பது தான் டீச்சரின் கவனமாக இருந்தது. ஒரு கிராமத்தில் உள்ள வீதியில் ஒரு சில சைக்கிள்களையும், ஒரு சில மணல் ஏற்றும் டிராக்டர்களையும், ஓலை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளையும் தவிர வேறென்ன வாகனம் இருந்துவிடப் போகிறது? ஆனாலும் டீச்சரின் கவனத்திற்கும் "கவனம்" என்று என்னை எச்சரிக்கும் பாங்கிற்கும் குறைவே இருந்ததில்லை.
இதேபோல் பாலர் பாடசாலை நோக்கிய எனது தினசரிப் பயணத்தின்போது, டீச்சர் என்ற அந்தத் தேவதையின் அழகை ரசிப்பதற்கும், அதே தேவதையை கேள்விகளால் துளைத்து எடுப்பதற்கும் நான் தவறுவதேயில்லை. அழகை ரசித்தேன் என்று கூறியதால் 'தவறாக' எண்ணி விடாதீர்கள். நான் நினைத்ததெல்லாம் இதுதான்: "எங்கள் அம்மாவோ,சித்திகளோ, எங்கள் அயலில் வாழும் பெண்களோ ஏன் டீச்சர் போல நல்ல நிறமாக இல்லை? ஊரில் பெரும்பாலானவர்கள் பொது நிறமாக இருக்க, டீச்சரும், ஊரில் உள்ள ஒரு சில பெண்களும் ஏன் 'வெள்ளை' நிறம்? இப்படிப் பல சிந்தனை ஓட்டங்கள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
டீச்சருடன் நான் பள்ளிக்குச் சென்ற ஒரு வருடத்தில் நான் டீச்சரிடம் கேட்ட நூற்றுக் கணக்கான கேள்விகளில் சில பின்வருமாறு.
  1. டீச்சர் காலம என்ன சாப்பிட்டிட்டு வந்தனீங்கள்?
  2. டீச்சர் நீங்கள் எந்தப் பள்ளிக்குடத்தில படிச்சனீங்கள்?
  3. டீச்சர் நீங்கள் கட்டியிருக்கிற சீல(புடவை) எங்க வாங்கினது?
  4. டீச்சர் நீங்க பிறந்து வளந்ததுக்கு எத்தின தரம் யாழ்ப்பாணம் போனனீங்கள்? 
  5. டீச்சர் உங்கட வீட்ட ரேடியோ இருக்கா?
*மேலேயுள்ள கேள்விகள் இலங்கைத் தமிழின் பேச்சு வழக்குத் தமிழில் உள்ளன என்பதைத் தமிழக வாசகப் பெருமக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு நான் தொணதொணத்துக் கொண்டு செல்வதை ஒரு 'தொல்லையாகக்' கருதாமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளிக்கும் கமலினி டீச்சரின் பொறுமை அந்தக் காலத்தில் எனக்கு வெறுப்பையும், சலிப்பையும் தந்தது என்னவோ உண்மைதான், இப்போது 34 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவரின் பொறுமையை நினைந்து, அவர் இருக்கும் திசை நோக்கிக் கைகூப்பித் தொழவேண்டும் போல் தோன்றுகிறது. "டீச்சர் உங்கள் சேவைக் காலத்திலேயே உங்களிடம் அதிக கேள்விகள் கேட்டுத் தொல்லைப்படுத்திய மாணவன் நானாகத்தான் இருப்பேன். என்னை மன்னியுங்கள். நான் எழுதும் இந்தத் தொடரின் மூலம் வீண் வாதப் பிரதிவாதங்கள்(Controversy) ஏற்படாமல் தடுக்கும் முகமாகவே இத்தொடரில் உங்கள் பெயரை மாற்றியுள்ளேன். இருப்பினும் உங்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நடந்து செல்லும் வழியில் நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் "பள்ளிக்குடம் போனதும் பதில் சொல்லுறன், இப்ப ஓடி நடவப்பு" என்று சிரித்துக் கொண்டே கூறிய நீங்கள் கடைசிவரைக்கும் பதில் சொல்லவே இல்லையே! உதாரணமாக நீங்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று பதிலளிக்கக் கூடிய கேள்விகளாகிய "டீச்சர் உங்களுக்கு *புழுக்கொடியல் விருப்பமா?, டீச்சர் உங்களுக்கு *பினாட்டு(பனாட்டு) விருப்பமா? என்ற கேள்விகளுக்குக் கூட இன்றுவரை எனக்குக் கிடைத்த பதில் உங்கள் 'புன்னகை' மட்டும்தானே. 
*புழுக்கொடியல் என்பது பனங்கிழங்கினை அவித்து வெயிலில் காயவைத்துப் பெறப்படும் ஒரு உணவு.
*பினாட்டு என்பது பனம்பழத்தின் களியை(சாற்றை) வெயிலில் காயவைத்துப் பெறப்படும் ஒரு உணவு.
#########################################
தினமும் டீச்சருடன் 'வாயாடித் தனமாக' பேசிக்கொண்டு சென்று வந்ததால் பள்ளிக்கூடம் செல்லும் பாதையைச் சரியாகக் கவனித்து, ஞாபகத்தில் வைக்கத் தவறி விட்டேன் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் நடந்துகொண்டிருக்கும் பாதை எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத பாதையாகத் தென்பட்டது. இனம்புரியாத 'பயம்' என்னைக் கவ்விக் கொண்டது. எவ்வளவு தூரம் நடந்தும் பள்ளிக்கூடம் தென்படாததால் அழத் தொடங்கினேன்.
(தொடரும்)

சனி, ஜனவரி 28, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.0

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.0 
அல்லைப்பிட்டி 1977
மாலைதீவு விமான நிலையத்தில் தரித்து நிற்கும் விமானம்
மாலைதீவு கடலில் மூழ்கினால் அக்கால கட்டத்தில் மாலைதீவின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக எவ்வாறு நகர்த்துவது? என்பன போன்ற திட்டங்கள் பற்றி அரசு இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டது. மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் அரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வரும் ஒரு நாடு. மாலைதீவு எதிர்காலத்தில் தனது முதலீடுகளை அரபு நாடுகளில் மேற்கொள்வதற்கும் சிந்தித்து வருகிறது. நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் போது ஒவ்வொரு வெளிநாட்டிலும் தனது மக்களில் எத்தனை பேரைக் குடியேற்றுவது என்பது சம்பந்தமாகவும் மாலைதீவு அரசு சிந்தித்து வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் 'மாலைதீவு' பற்றிய எனது பதிவினை நிறுத்தியிருந்தேன். மாலைதீவைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பினும், உரிய தருணம் வரும்போது அந்திமாலையில் 'நாடுகாண் பயணம்' பகுதியில் மாலைதீவும் இடம்பெறும் என்பதால் விரிவான தகவலகளைத் தவிர்த்து விட்டு, ஒரு சில பொது அறிவுத் தகவல்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
******************************
மாலைதீவு திவேஹி இனச் சிறுமி
மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பது உங்களில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் மொழியைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? அவர்களின் மொழியின் பெயர் 'திவேஹி'(Dhivehi) என்பதாகும். இம்மொழி உலகில் வேறெந்த நாட்டிலும் பேசப்படுவதில்லை. ஆனால் இம்மொழி 'பாலி' மொழியிலிருந்து உருவாகியது என்பதால் இதனை 'சிங்களத்தின் கிளை மொழி' என்று அழைப்பர். இவர்கள் பேசுவது சிங்கள மக்களுக்கு ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்நாட்டில் ஆரம்ப காலங்களில்(வரலாற்றுக் காலத்தில்)  குடியேறியவர்கள் சேர நாட்டவர்கள். சேர நாடு 'தமிழ்த் தேசம்' என்பதுடன் கடந்த 500 வருடங்களுக்கு முன்னர் அத் தேசம் கேரள தேசமாக மாறியதுடன், அங்கு பேசப்பட்ட தமிழ் மொழியும், திரிபடைந்து 'மலையாள' மொழியாக மாறியது. இதனாலேயே மலையாளத்தில் பேசினால் தமிழர்களும், தமிழில் பேசினால் மலையாளிகளும் இலகுவில் புரிந்து கொள்கின்றனர். மலையாள மொழியின் எழுத்து வடிவம் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியின் கலப்பு ஆகும். எழுத்து வடிவம் மாறியுள்ளதே தவிர அவர்கள்(மலையாளிகள்) 'முன்னாள் தமிழர்கள்' என்பதே வரலாறு. அல்லைப்பிட்டியைப் பற்றிப் பேச ஆரம்பித்து, பின்னர் அதை விடுத்து 'மாலைதீவைப்' பற்றிப் பேச ஆரம்பித்த நான் இறுதியில் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் 'முல்லைப் பெரியாறு அணை' விவகாரத்தால் உறவு 'கொதிநிலை' அடைந்திருக்கும் இந்தத் தருணத்தில் மலையாள மொழியைப் பற்றியும், மலையாளிகளின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்வது பொருத்தமான செயலாக இருக்காது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் 'மாலை தீவைப்' பற்றிப் பேசுவோம். நான் மேலே குறிப்பிட்டபடி சேர நாட்டில் இருந்தும், ஆபிரிக்காவில் குறிப்பாக 'மடகஸ்கார்' தீவில் இருந்தும் குடியேறியவர்களே மாலைதீவு மக்களின் 'மூதாதையர்கள்' எனக் கருதப் படுகிறது. இவர்கள் தமது சிறிய நிலப் பரப்பில் 
'திவேஹி'(Dhivehi) எழுத்து வடிவம்
ஒரு சில நூற்றாண்டுகள் வரை சுதந்திரமாக எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி செய்து வந்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்துத் தமிழ் மன்னர்களும், இலங்கையின் சிங்கள மன்னர்களும் இச் சிறிய நாட்டின் மீது படையெடுத்து இந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். இந்நாட்டைக் குறுகிய காலங்கள் சோழ மன்னனாகிய 'இராஜ ராஜ சோழனும்' அதிக காலங்கள் இலங்கையின் சிங்கள மன்னனாகிய 'மகா பராக்கிரம பாகுவும்' ஆண்டனர். பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பௌத்த ஆலயங்கள் கட்டப் பட்டன என இலங்கையின் 'மகா வம்சம்' கூறுகிறது. இலங்கையின் பராக்கிரம பாகுவின் ஆட்சி, இந்நாட்டை 'அராபியர்கள்' கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவே இவர்களது 'திவேஹி மொழி' உச்சரிப்பு சிங்கள மொழியை ஒத்ததாக இருப்பினும் எழுத்து வடிவம் அராபிய எழுத்துக்களுடன் ஒத்துப் போகிறது. மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர் ஆக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது.
(தொடரும்)