சனி, பிப்ரவரி 25, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.4

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.4 
அல்லைப்பிட்டி 1977

நீங்கள் செய்கின்ற 'பூமித் தாயைச் சூடாக்குகின்ற' கெடுதலான செயலைக் குறைப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உங்கள் கைளில் உள்ளன.நீங்களும் நானும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்தால் பூமித் தாயை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் கேடுகளில் 'தீவுகளின் அழிவு' முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என இரண்டு வாரங்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்னுமொரு கேட்டைப் பற்றியும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் பூமியையும், ஏனைய கோள்களாகிய சூரியன், சந்திரன் ஆகியவற்றையும் படைத்த இயற்கை அன்னை இந்தப் பூமியில் வாழப் போகின்ற உயிரினங்களின் நன்மை கருதி, அவைகள் சூரிய வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பூமியில் வாழப் போகும் அத்தனை ஜீவராசிகளுக்காகவும் ஒரு 'குடையை' விரித்து வைத்தாள். என்ன, குடையா? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? ஆம் அதை விஞ்ஞானிகள் 'குடை' என்றுதான் அழைக்கிறார்கள்.


இயற்கை அன்னை தந்த குடை
பூமியின் வயது பல கோடி ஆண்டுகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமி எப்போது உருவாகியது எனபது உங்களுக்கும் எனக்கும் திட்டவட்டமாகத் தெரியாததால் விஞ்ஞானிகளின் கூற்றை மறு பேச்சில்லாமல் ஏற்றுக் கொள்வோம். இந்தப் பூமி உருவாகியபோது இயற்கையானது சூரியனின் கடும் வெப்பம் இந்தப் பூமியை நேரடியாக வந்து தாக்காமல் இருப்பதற்காக ஒரு 'பாதுகாப்பு' ஏற்பாட்டைச் செய்தது. அதன் பெயர் ஓசோன் படலம் அல்லது ஓசோன் படை (Ozone Layer) என்பதாகும். இதன் பணி யாதெனில் சூரியனில் இருந்து புறப்படும் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையா வண்ணம் காப்பது ஆகும். இவ்வாறு சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாகப் பூமியை வந்தடையுமானால் நாமும் பூமியில் உள்ள ஏனைய உயிரினங்களும், செடி கொடிகளும்,மரங்களும் பொசுங்கி, வெந்து சாக வேண்டிய நிலை ஏற்படும். இதனைக் கருத்திற் கொண்டே இயற்கை அன்னை எமக்காக மேற்படி 'ஓசோன் படலம்' எனும் குடையை விரித்து வைத்தாள். மனிதர்களாகிய நாம் இயற்கை அன்னை எமக்காகப் படைத்தருளிய இந்தப் போற்றுதலுக்குரிய 'குடைக்காக' அவளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டாமா? ஆனால் இந்த நன்றிகெட்ட மனித இனம் என்ன செய்தது தெரியுமா? இயற்கைத் தாய் எமக்குப் பரிசளித்த அந்தக் குடையின் மீது பல ஓட்டைகளை ஏற்படுத்தி விட்டது. ஆம், பூமியின் பல இடங்களில் மேற்படி ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் மேற்படி ஓட்டை விழுந்த பகுதியில் உள்ள நாடுகளில் சூரிய ஒளி+வெப்பம் மக்களை நேரடியாகத் தாக்குகிறது. இதனால் அவர்கள் வெந்து மடிவது மட்டுமன்றி, அவர்களின் தோலைச் சூரிய வெப்பம் மற்றும் ஊதாக் கதிர்கள் தாக்குவதால் அவர்கள் 'தோல் புற்று நோய்க்கும்' ஆளாகின்றனர்.


யார் காரணம்?
விஞ்ஞானிகளைக் கேட்டால் "நாம் அனைவருமே காரணம்" என்கின்றனர். ஆனால் குறிப்பிட்டுச் சொன்னால், எந்தெந்த நாடுகளில் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் உள்ளனவோ, எந்தெந்த நாடுகளில் வாகனங்கள் அதிகமோ அத்தனை நாடுகளும் இந்த இயற்கைச் சீரழிவுக்குப் பொறுப்பு ஆகின்றனர். ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதற்கு பூமில் ஏற்படும் வெப்பம் ஒரு காரணமாக இருந்தாலும், பூமியில் இருந்து மேலெழுந்து செல்லும் 'கரி அமில வாயு'(Carbon Dioxide) பிரதான காரணமாக அமைகிறது. ஆகவே கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் நாடுகள் இதற்குப் பொறுப்பாகின்றன. அது மாத்திரமன்றி சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் அனைவருமே இந்த இயற்கையை அழிக்கும் செயலுக்குத் துணை போகின்றனர். புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற வாசகர்களில் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உங்கள் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காக ஒப்படைத்து, அதனைத் திரும்பப் பெறும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன, உங்கள் வாகனங்களிற்கு புதிய உதிரிப் பாகங்கள்(டயர் உட்பட) பொருத்தும்போது செலுத்தும் கட்டணமாக இருந்தாலென்ன நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் 10% வரை(environmental charge) இந்த இயற்கையை, பூமித் தாயைச் சேதப்படுத்தியமைக்காகச் செலுத்தும் 'தண்டத் தொகை'(குற்றப் பணம்) என்பதை அறிவீர்களா?
இந்த ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டை விடயத்தில் இன்னுமொரு விசித்திரம் கலந்திருக்கிறது. நீங்கள் வெளியேற்றும் கரியமில வாயு உங்கள் நாட்டின் மேல் உள்ள ஓசோன் 'குடையில்' ஓட்டையை ஏற்படுத்தாது. மாறாக பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் நாடுகளின் மேல் உள்ள ஓசோன் படலத்தின் மீது ஓட்டையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக சீனாவின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை,கரியமில வாயு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு மேலே உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகிறது. ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு தென் அமெரிக்க நாடுகளாகிய பிரேசில், ஆர்ஜென்டீனா, சிலி ஆகிய நாடுகளின் மேல் காணப்படும் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. யாரோ செய்த பழிக்கு யாரோ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கை அன்னையின் வித்தியாசமான தீர்ப்பாகத் தோன்றுகிறதா?
இயற்கையை சீரழிக்கும் பல எதிரிகளில் முதன்மையான காரணிகளைப் பார்த்து வருகிறோம். இவற்றில் அடுத்த நூற்றாண்டில் மிகப் பெரிய சவாலாகத் திகழப் போவது 'பிளாஸ்டிக்' ஆகும். இன்று மனிதனின் நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்ட, நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு சக்தியாக விளங்கும் இந்தப் பிளாஸ்டிக் நாளை எமது இயற்கை அன்னையை அழித்தொழிக்கப்  புறப்பட்டிருக்கும் ஒரு 'புதிய எதிரி' என்பது அறிவீர்களா?


பிளாஸ்டிக் என்றால் என்ன?
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்கள் தொடக்கம், கைத்தொலைபேசி, கணணி, வாகன உதிரிப் பாகம் வரை ஆயிரக் கணக்கான பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. சரி, நீட்டி முழக்காமல் விடயத்திற்கு வருகிறேன். 'பிளாஸ்டிக்' என்பதே பெற்றோலியம் மற்றும் ரப்பர்க் கழிவுகளின் 'கூட்டமைப்பு' ஆகும். பெரும்பாலான மென்மையான பிளாஸ்டிக் கலவைகள் மற்றும் மூலப் பொருட்கள் யாவுமே பெற்றோலியக் கழிவிலிருந்து உருவாக்கப் படுகின்றது.


உங்களை விட ஆயுசு கெட்டி.
இந்தப் பூமியை அழித்தொழிக்கக் காத்திருக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் நம்மை விட ஆயுள் கூடியவை என்பது நீங்கள் அறிந்தது. ஒழுங்கான முறையில் அகற்றப் படாமல் மண்ணில் வீசப்படும் ஒவ்வொரு பொருளும் மண்ணில் சிதைவடைந்து மண்ணோடு மண்ணாக உக்கிப் போவதற்கு/மட்கிப் போவதற்கு எடுக்கும் காலப் பகுதியை கீழே உள்ள பட்டியலில் காண்க.
 1. வாழைப்பழத் தோல் மற்றும் தோடம் பழத்(ஆரஞ்சுப் பழம்) தோல்: 3 தொடக்கம் 6 வாரங்கள் 
 2. காகிதத்தால்(பேப்பர்) தயாரிக்கப் பட்ட பை மற்றும் செய்தித் தாள்(News Paper): 4 தொடக்கம் 6 வாரங்கள் 
 3. அட்டைப் பெட்டி(Hard Board): 8 வாரங்கள் 
 4. கம்பளிக் காலுறை(Socks): 1 வருடம் 
 5. சிகரெட்டின் பின்பகுதியில் இருக்கும் பஞ்சு (filter): 1 தொடக்கம் 50 வருடங்கள்.
 6. கடையில் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள்: 20 தொடக்கம் 100 வருடங்கள்.
 7. தகரத்தால்(tin) செய்யப்பட்ட குளிர்பான, மதுபான டின்கள்: 50 வருடங்கள்.
 8. அலுமினியத்தால் தயாரிக்கப் பட்ட குளிர்பான மற்றும் மதுபான டின்கள்: 200 தொடக்கம் 500 வருடங்கள்.
 9. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குளிர்பானப் பாட்டில்கள்(போத்தல்கள்): 450 வருடங்கள் மற்றும் அவற்றின் மூடிகள் 800 வருடங்கள் வரை.
 10. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பாட்டில்கள்: 450 தொடக்கம் 1000 வருடங்கள்.
 11. குழந்தைகளின் கழிவு வெளியேற்றத்திற்குப் பயன்படுத்தப் படும் சுகாதார நப்கின்கள் (Diapers): 550 வருடங்கள்.
 12. பிளாஸ்டிக்கினால் ஆன தேநீர்க் கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள்: 100,0000(பத்து லட்சம்) ஆண்டுகள்.
 13. தமிழ் மக்கள் 'ரெஜி போம்' என அழைக்கும் styrofoam பஞ்சு: 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல்.
 14. கண்ணாடிகள், கண்ணாடியால் ஆன பாத்திரங்கள், கண்ணாடிப் பாட்டில்கள்: 10 லட்சம் தொடக்கம் 20 லட்சம் ஆண்டுகள் வரை.

தகவலுக்கு நன்றி: Be healthyandrelax.com 

நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் தொடக்கம் பல மூலப் பொருட்கள் எத்தனை நூற்றாண்டுகள் நின்று நிலைத்து இந்தப் பூமியை அழிக்க இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக