வியாழன், டிசம்பர் 30, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா கொடியவனா? - அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.


அந்த மீனவனே பரிவான குரலில் கூறினான் "நாங்கள் இப்போது ஜெனோவாவிற்குச் செல்கிறோம், உன்னை உன் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போகிறோம்" இந்த வார்த்தைகளைக் கேட்ட கொலம்பஸின் முகம் மலர்ந்தது. "உண்மையாகவா" என்று சிறிது ஐயத்தோடு கேட்டான். "உண்மையாகவேதான், இதோபார் எங்கள் படகு உனது தேசத்தை நோக்கித்தான் செல்கிறது, அங்கு தொலைவில் தெரிவது ஜெனோவாக் கடற்கரை, உனக்குத் தெரிகிறதா? என்று கேட்டான்.
அங்கு அந்த மீனவன் காட்டிய திசையில், கடலின் மறு பக்கத்தில் கறுப்பாகவும், சிறிதும் பெரிதுமாகவும் கட்டிடங்களும், சிறு குடிசைகளும் தெரிந்தன. ஆனால் அது தனது ஊர்தான் என்பதை அவன் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவில் அது அருகாமையில் இல்லாததால் அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. இருப்பினும் இந்த உரையாடலின் பின்னர் அவன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது, இன்று காலைவரை இருள் படர்ந்திருந்த அவனது மனத் திரையில் இப்போது ஒளிக்கற்றைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனது மகிழ்ச்சி அவனது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. "என்ன சந்தோசம்தானே? மீனவன் கடலலைகளின் இரைச்சலுக்கு மத்தியில் சத்தமாகக் கேட்டான்.


கடல் இரைச்சலுக்கு மத்தியில் பேசும்போது, சத்தமாக பேசுவது நடைமுறை என்பதைக் கொலம்பஸ் அறிந்தானில்லை, ஆதலால் அம்மீனவனின் இடி போன்ற குரல் அவனுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு மெல்லிய குரலில் "ஆம்" என்று பதிலளித்தான். ஆனால் அவனது பதில் மீனவனின் காதில் எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது.
படகில் இருந்த மீனவர்கள் ஒருவரோடு ஒருவர் மிகவும் இரைச்சலாக ஏதேதோ பேசிக்கொண்டார்கள், அவர்களின் பேச்சின் நடுவே ஒரு மீனவன் உரத்த குரலில் ஏதோ ஒரு பிரெஞ்சு மொழிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான், அவர்களின் பேச்சின் இடையிடையே 'மீனவர் தலைவன்' படகு செல்ல வேண்டிய திசை பற்றியும், பாய்மரத்தையும், பாயையும் சுருக்க வேண்டிய விதம் பற்றியும் உரத்த குரலில் கட்டளைகளை பிரெஞ்சு மொழியில் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரத்த குரலிலான பேச்சுக்கள் கொலம்பசுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் சில மணி நேரங்களின் பின்னர் அவன் கண்ணில் தனது 'ஜெனோவா' கடற்கரை தென்படவும் பயமெல்லாம் பறந்து போனது, உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது. 
(தொடரும்)     
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், டிசம்பர் 29, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 13ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:
வரகரிசிச் சோறும்,வழுதுணங் காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்) 
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
  எல்லா உலகும் பெறும்."
என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.

"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார்.
"எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, அதாவது பாட்டி ஒருநாள் பசியால் வாடிய நிலையில், 'புல்வேளூர்' என்ற ஊருக்கு வருகிறார், அவ்வூரில் பாட்டிக்கு உணவளிக்கக்கூடிய வசதிபடைத்த எத்தனையோ மனிதர்கள்(பணக்காரர்கள்) வசித்தபோதும், பாட்டி அவர்களிடம் உணவுகேட்டு 'யாசிப்பதற்கு' அவர்களது இல்லம் செல்லாமல், ஏழையான, ஆனால் பாட்டியின் மனதுக்குப் பிடித்த மனிதனாகிய 'பூதன்' என்பவனுடைய வீட்டிற்கு செல்கிறார், மிகப்பெரிய 'தமிழ்ப்புலவர்' தன் வீட்டிற்கு உணவு கேட்டு வந்ததை எண்ணி, ஒருபுறம் பெருமையும், அகமகிழ்வும், எய்தும் 'பூதன்' தன் வீட்டில் பாட்டிக்கு அளிப்பதற்கு உகந்த 'அறுசுவை' உணவு இல்லையே என்று 'சிந்தை கலங்கி' நின்றான், இருப்பினும் தன்னிடமுள்ள வரகரிசிச் சோற்றையும்,(அக்காலத்திலும் இக்காலத்திலும் வரகரிசிச் சோறு ஏழைகளின் உணவு) கத்தரிக்காயில் செய்த பொரியலையும், தயிரையும் பாட்டிக்குக் கொடுத்தான்"
இடையில் குறுக்கிட்ட பழனிச்சாமி கூறினார் "நீங்கள் கூறுவது எல்லாமே சரி, ஆனால் ஒரு சிறு திருத்தம்" என்றார்.
என்ன? என்பதைப்போல் அவரைக் கேள்வியுடன் நோக்கினேன், அவர் சொன்னார் "நீங்கள் 'தயிர்' என்று ஞாபகம் வைத்துள்ளீர்கள், ஆனால் பாட்டிக்குப் பூதனின் இல்லத்தில் கிடைத்தது தயிர் அல்ல மோர்" என்றார். அப்படியா? என்றேன் ஆச்சரியத்துடன். "இத்தனை வருடங்களாக 'தயிர்' என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன், அப்படியானால் தயிரும் அக்காலத்தில் ஏழைகளின் கைகளுக்குக் கிடைக்காத பொருளா? என்றேன்.
அவர் தொடர்ந்தார், "அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் 'தயிர்' பணக்காரர்களின் உணவுதான், ஏழைகளின் கைகளில் 'மலிவாகக்' கிடைப்பது மோர்தான்" என்றவர் "சரி நீங்கள் கூறிய பாட்டியின் கதையைத் தொடருங்கள் என்றார்".
மோர்
"பசியால் வாடியிருந்த ஒளவைப் பாட்டிக்கோ, வரகரிசிச் சோறும், கத்தரிக்காய்ப் பொரியலும், மோரும் 'தேவாமிர்தமாக' இருந்தது, இத்தகைய உணவுக்கு இணையான ஓர் உணவு எவ்வுலகிலும் கிடைக்காது, இந்த உணவுக்கு கைமாறாக ஈரேழு உலகத்தையும் எழுதித் தரலாம், என்ற பொருள்பட,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்  
என்று பாடினார், பாட்டிக்கு உணவளித்ததன்மூலம், 'புல்வேளூர்ப் பூதன்' என்ற அந்தக் குடியானவன், பாட்டியின் பாட்டில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இறவாப் புகழ் பெறுகிறான். ஒளவைப் பாட்டியின் பெயர் உள்ளவரைக்கும் தமிழுலகில் 'அம்மனிதனும்' வாழ்வான்". என்றேன் பெருமிதத்தோடு.
அவரும் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வது மெத்தச் சரி, அது மட்டுமன்றி, அவன் பாட்டிக்கு அளித்த உணவுமல்லவா தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது, என்று புதியதொரு பீடிகையைப் போட்டார்.
"என்ன சொல்கிறீர்கள்?  குழப்பத்துடன் கேட்டேன்.
'மோர்க் குழம்பைத்தான்' குறிப்பிடுகிறேன் என்றார்........

(தொடரும்) 
செவ்வாய், டிசம்பர் 28, 2010

நாடுகாண் பயணம் - அசர்பைஜான்நாட்டின் பெயர்:
அசர்பைஜான் (Azerbaijan)


முழுப்பெயர்:
அசர்பைஜான் குடியரசு.

தலைநகரம்:
பாகு (Baku)

அமைவிடம்:
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா சந்திப்பு.

எல்லைகள்:
கிழக்கு: கஸ்பியன் கடல்
மேற்கு: ஆர்மீனியா
வடக்கு: ரஷ்யா
வட கிழக்கு : ஜோர்ஜியா
தெற்கு: ஈரான்

அலுவலக மொழி:
அசர்பைஜானி

இனங்கள்:
அசர்பைஜானி 90,6%
மிகச்சிறிய தொகையில் - லெஸ்கின்கள், ரஷ்யர்கள், ஆர்மீனியர்கள், ரலீஸ், துருக்கியர்கள், ஜோர்ஜியர்கள்.

சமயங்கள்:
99% முஸ்லீம்கள், சிறிய தொகையில் கிறீஸ்தவர், யூதர், பஹாய், ஜெகோவாவின் சாட்சிகள், ஹரே கிருஷ்ணா அமைப்பினர்.

கல்வியறிவு:
100%(சோவியத் ஆட்சியினால் கிடைத்த நன்மைகளில் ஒன்று)

ஆயுட்காலம்:
66 வருடங்கள்
பாகு சர்வதேச விமானநிலையம் 

அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சிமுறை

ஜனாதிபதி:
இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev)

பிரதமர்:
ஆர்தர் ராசி ஸாடே (Artur Rasizade)

சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரமடைந்த தேதி:
18.10.1991
பாகு 

பரப்பளவு:
86, 600 சதுர கிலோமீற்றர்கள்.

சனத்தொகை:
9,047,000 (2010 மதிப்பீடு)

நாணயம்:
மனாட் (Manat)

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
பாகு 
00-994


இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, டைட்டேனியம், குரோமியம், மங்கனீஸ், கோபால்ட், மொலிப்தேனம்.


பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:
பெற்றோலியம், எரிவாயு, இயந்திரங்கள், பருத்தி, உணவுப்பொருட்கள்.


சிறு குறிப்பு:
சுற்றுலாத்துறையாலும் வருமானம் பெறும் நாடு.
நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக இருப்பினும், இவர்கள் மத சகிப்புத் தன்மை உள்ளவர்கள். ஏனைய இஸ்லாமிய நாட்டு மக்களைப் போல் 'மிதவாதிகள்' அல்லர்.ஞாயிறு, டிசம்பர் 26, 2010

மண்ணும் மரமும், மனிதனும் அத்தியாயம் 9

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
என் செல்லக் கண்மணி 
இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

அதற்கு முன்பாகக் காலத்தின் தேவை கருதி மேற்கத்தைய நாட்டவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் நேசிக்கும் ஒரு மரத்தைப்பற்றி உங்களிடம் கூறியே ஆகவேண்டும். அந்த மரத்தைத் தமது பிள்ளைகளுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள். எவ்வாறு தமது பிள்ளைகளை இனிய வார்த்தைகளால் அழைக்கிறார்களோ, அதே போலவே அம்மரத்தையும் " அன்பே, செல்லமே, இனிப்பே, கண்மணி, கண்ணே "   என்றெல்லாம் அழைக்கிறார்கள். அது என்ன மரம் என்ற கேள்வி மூளையைக் குடைகிறதா? சரி விடயத்திற்கு வருகிறேன். கிறிஸ்துமஸ்(நத்தார்) பண்டிகையை நேற்றைய தினம் கொண்டாடிய கோடிக்கணக்கான மேற்கத்திய நாட்டு மக்களின் வீடுகளில் காணப்படும் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்துக்குத்தான்(Evergreen Coniferous Tree) அத்தனை மதிப்பும், அன்பும், பாசமும் கிடைக்கிறது.


இவ்வாறு கிறீஸ்தவர்களின் தலைசிறந்த பண்டிகையாகிய நத்தாரில் இம்மரம் முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன? இந்த வழமை எப்போது, எங்கே ஆரம்பித்தது? போன்ற கேள்விகளுக்கு விடை தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இம்மரத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் அலங்கரித்து மகிழும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'லித்துவேனியாவிலும்', ஜேர்மனியிலும் ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தற்காலத்தில் இம்மரமானது மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. இம்மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது... 
(தொடரும்)

வெள்ளி, டிசம்பர் 24, 2010

பாடிப் பறந்த குயில்

ஆக்கம்.இ.சொ.சதீஸ்வரன் 
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் சுகயீனம் காரணமாக அண்மையில் சென்னையில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது முப்பத்தியேழு.
பாடகி ஸ்வர்ணலதா தன் வசீகரக் குரலால் 1990 இல் தமிழில் வெளிவந்த 'சத்ரியன்', 1995 இல் வெளியான 'ராணி ரத்னரபா' என்ற தெலுங்குப் படம், மற்றும் 1995 இல் ஹிந்தியில் வெளியாகியதும், A.R. ரஹ்மானுக்கு வட இந்தியாவில் புகழ் பெற்றுத் தந்ததுமாகிய 'ரங்கீலா' போன்ற திரைப்படங்களின் பாடல்கள் மூலம் ஏராளமான இசை ரசிகர்களின் உள்ளங்களில் தனக்கென்று ஓர் தனியிடத்தைப் பெற்றுக்கொண்டவர்.

'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா", 'சின்னத்தம்பி' படத்தில் "போவோமா ஊர்கோலம்", 'சத்ரியன்' படத்தில் இடம்பெற்ற "மாலையில் யாரோ மனதோடு பேச", 'தளபதி' படத்தில் "அடி ராக்கம்மா கையத் தட்டு", மற்றும் 'வள்ளி' படத்தில் இடம்பெற்ற "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்" போன்ற பாடல்கள் இவரைப் புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றதுடன் 'சிறந்த பின்னணிப் பாடகி' என்ற ஜனரஞ்சக அந்தஸ்த்தையும் இசை ரசிகர்களின் இதயத்தில் பெற்றுக் கொண்டார்.

பாடகி ஸ்வர்ணலதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உட்படப் பன்னிரண்டு இந்திய மொழிகளில் இதுவரையில் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். திரையுலகின் பிரபல இசை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான், தேனிசைத் தென்றல் தேவா, மற்றும் S.A. ராஜ்குமார் உள்ளிட்ட பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் B.B.C. செய்தி நிறுவனம் சர்வதேச அளவில் நடாத்திய(பன்னாட்டு, பலமொழிப் பாடல்கள் உள்ளடங்கலாக) இசைத் தேர்வில் 'தளபதி' படத்தில் ஸ்வர்ணலதா, S.P. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய "அடி ராக்கம்மா கையத்தட்டு" என்ற பாடல் மூன்றாவது இடத்தைப் பெற்றமையானது, தமிழ் இசையுலகிற்குப் பெருமையான விடயம். அது மாத்திரமின்றி இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான தொடரூந்து நிலையங்களில்(ரயில் நிலையங்களில்) பத்திற்கு மேற்பட்ட மொழிகளில் ஒலித்துகொண்டிருக்கும் "பயணிகள் கவனிக்கவும்" என்று தொடங்கும் அறிவிப்புகள் யாவும் ஸ்வர்ணலதாவின் குரலேயாகும்.

ஸ்வர்ணலதா ஒரு மிகச்சிறந்த பின்னணிப் பாடகி என்பதை நிரூபிக்குமளவிற்கு அவர் மொத்தம் 13 மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவைகளில் 'கருத்தம்மா' படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி"  என்ற பாடலுக்கான மத்திய, மாநில அரசு விருதுகளும், 'சின்னத்தம்பி' படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்" பாடலுக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கிய 'கலைமாமணி' விருதும் அடங்கும்.
இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 'சித்தூர்' ஆகும். அண்மைக்காலம்வரையில், சென்னையில் உள்ள சாலிக்கிராமத்தில் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த ஸ்வர்ணலதா சிகிச்சை பலனின்றிப் போகக் கடந்த 12.09.2010 அன்று காலை 11 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஸ்வர்ணலதாவின் மறைவானது, தமிழ் இசையுலகைப் பொறுத்த வரையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்லாமல், இசையுலகுக்கு ஓர் ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றே கூறவேண்டும்.

வியாழன், டிசம்பர் 23, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.அடுத்த நாட் காலையில் அவன் கண்விழித்தபோது, தனக்கருகில் தன் பெற்றோர்களோ, உடன்பிறப்புகளோ இல்லாததைக் கண்டும், தான் முன்பின் தெரியாத ஓரிடத்தில் படுத்திருப்பதைக் கண்டும் அதிர்ச்சியுற்ற கொலம்பஸ் மீண்டும் அழத்தொடங்கினான். அழுகின்ற அவனை மீனவர் தலைவனின் மனைவி அணைத்து ஆறுதல் கூறினாள். இவ்வாறு தம்மைவிட வயதில் மூத்த ஒரு 'அந்நியச் சிறுவன்' தமது தாயாரால் தேற்றப்படுவது கண்டு, மீனவர் தலைவனின் பிள்ளைகள் சிரித்தனர். கொலம்பஸ்ஸின் நிலையோ அவன் எதன் காரணமாக தமது தமது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான் என்பதோ, அவன் ஏன் அழுகிறான் என்பதோ அவர்கள் அறியாத விடயங்கள். அழுத சிறுவனைத் தேற்றிய அந்தத் தாய், அவனைக் காலைக் கடன்களை நிறைவேற்றுமாறு சைகையால் தெரிவித்தாள். அதனைப் புரிந்துகொண்ட கொலம்பசும் அவள் கூறியதுபடியே செய்தான். அதன்பின் அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து காலையுணவை உண்டான்.

காலையுணவின் பின்னர் தலைவனின் சொற்படி அவன் அவ்வீட்டிலிருந்து புறப்படவேண்டிய வேளை வந்தது. கொலம்பசும் அந்த மீனவர் தலைவன் கூறியவற்றை ஓரளவிற்கு புரிந்து கொண்டவனாக, புறப்படத் தயாரானான். தன்னைத் தனது பிள்ளைகளில் ஒன்றாகக் கருதிப் பராமரித்த அந்தத் தாயிடமிருந்தும், அவனை 'ஒரு வேற்றுக் கிரக வாசி போல' எண்ணி, அருகில் வரக்கூடப் பயந்த, மீனவர்தலைவனின் பிள்ளைகளிடமிருந்தும் விடைபெறவேண்டிய அந்தக் கட்டத்தில் அவர்களிடம் அவன் தன் 'நன்றியறிதலை' தெரிவிக்க நினைத்தான். இருப்பினும் 'மொழி' அதற்குத் தடையாக இருந்ததே! ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒரு தடவை 'நன்றிப் பெருக்கோடு' பார்த்துக் கொண்டான். அந்தப் பார்வை 'ஓராயிரம் வார்த்தைகளை' அவர்களோடு பேசியது.


மீனவர் தலைவனும், அந்தச் சிறுவனும் கடற்கரையிலிருந்த அந்தச் சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றபோது, அங்கு ஏராளமான மீனவர்கள் கூடியிருந்தனர். அவர்களில் கொலம்பஸ் நேற்றைய தினம் சந்தித்த, மீனவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் அவனைக் கழிவிரக்கத்துடனும், புன்னகையுடனும் நோக்கினர். இவனும் பண்பு கருதி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மீனவர்கள் அனைவரும் சத்தமாக, தமது தலைவனுடன் 'பிரெஞ்சு' மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டனர். அவர்கள் தன்னைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அச்சிறுவன் அறியவில்லை. இருப்பினும் அவன், அவர்களது பேச்சின் இடையிடையே தனது தாயகத்தின் பெயராகிய 'ஜெனோவா' என்ற பெயர் உச்சரிக்கப் பட்டதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.


அங்கு துறைமுகத்தில் நின்றிருந்த, அவர்கள் நேற்றைய தினம் பயணம் செய்த மிகப்பெரிய படகில் ஏறுமாறு மீனவர் தலைவன் கட்டளையிட்டான். மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்சும் ஏறினான். அப்போது அங்கு வந்த ஒரு புதிய மீனவன் இவர்களோடு சேர்ந்து கொண்டான். அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.    
(தொடரும்)
   உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், டிசம்பர் 22, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 12

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.
பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.


உங்கள் புகழ்ச்சிக்கு மிக்க நன்றி என்றவர் தொடர்ந்தார். "கம்பு பற்றி அநேகமாக  எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன் என்றே நினைக்கிறேன், இருப்பினும் ஒரேயொரு விடயம் கூற மறந்துவிட்டேன், 'கம்பு' சித்த மருத்துவத்தில் புகழ்ந்து பேசப்படும் ஒரு தானியம், உடல் சூடு உள்ளவர்கள் அரிசிக்குப் பதிலாக கம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடு தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது, அது மட்டுமன்றி நார்ப்பொருட்கள்(Fibre) உள்ள தானியங்களாகிய கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பெருங்குடலில் 'புற்றுநோய்' வராது தடுக்க முடியும் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் கூறுகின்றன" என்றார்.
"இப்போதுதான் எனக்கு இன்னொரு தானியத்தைப் பற்றி நினைவு வருகிறது, ஆனால் நான் அந்தத் தானியத்தைக் கண்ணால் கண்டதில்லை, ஆனால் நூல்களில் படித்ததோடு சரி அதைப்பற்றியும் உங்களிடம் கேட்கவேண்டும் என்றிருந்தேன்" என்று புதிதாக ஒரு தலைப்பை ஆரம்பித்தேன்.
அது என்ன தானியம்? என்றார் அவரும் ஆச்சரியத்துடன். "நாங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் படிக்கும்போது 'வரகு' என்றொரு தானியத்தைப் பற்றி சில குறிப்புகள் வருவதுண்டு, தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:


வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்)
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.


என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.
"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார். 


(தொடரும்)


செவ்வாய், டிசம்பர் 21, 2010

நாடுகாண் பயணம் - ஒஸ்திரியா                         

நாட்டின் பெயர்:
ஒஸ்திரியா (Austria)


முழுப்பெயர்:
ஒஸ்திரியக் குடியரசு

அமைவிடம்:
மத்திய ஐரோப்பா

தலைநகரம்:
வியன்னா

நாட்டு எல்லைகள்:
வடக்கு: ஜேர்மனி மற்றும் செக் குடியரசு.
தெற்கு: சுலோவேனியா மற்றும் இத்தாலி.
கிழக்கு: சுலோவாக்கியா மற்றும் ஹங்கேரி.
மேற்கு: சுவிட்சர்லாந்து மற்றும் லிக்டேன்ஸ்டின்.


பரப்பளவு:
83,872 சதுர கிலோமீற்றர்கள்


அரசாங்கமுறை:
பாராளுமன்றக் கூட்டாட்சி.

ஜனாதிபதி:
கைன்ஸ் பிஷர் (Heinz Fisher)

பிரதமர்/சான்சலர்:
வேர்னர் பெய்மான் (Werner Faymann)

தேசியப் பேரவைத் தலைவர்:
பார்பரா பிரம்மர் (Barbara Prammer)

சனத்தொகை:
8,356,707

அலுவலக மொழி:
ஜேர்மன்(ஒஸ்திரிய ஜேர்மன்)

அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகள்:
சுலோவீன், குரோசியன், ஹங்கேரியன்

கல்வியறிவு:
99%

இனங்கள்:
ஒஸ்திரியர்கள் - 91%
சிறிய தொகையில் யூகோஸ்லாவியர்கள், துருக்கியர்கள், ஜெர்மானியர்கள்.

Rejser til Østrig
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 74%
புரட்டஸ்தாந்துகள் 5%
நாத்தீகர்கள் 12%
சிறிய தொகையில் யூதர், மற்றும் ஏனையோர்.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 'புத்த சமயம்' அரசினால் ஒரு சமயமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

நாணயம்:
யூரோ

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-43

உலக அரங்கில்:
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு (1995)
18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் ஆகக் குறைந்தது 6 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
நான்கு பக்கமும் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளதால் நாட்டிற்கென்று 'கடற்படை' எதுவும் கிடையாது.

நாட்டின் பெருமைகள்:
உலகில் உள்ள செல்வந்த நாடுகளில் 12 ஆவது இடத்தில் உள்ளது.
மலைகளால் சூழப்பட்ட, இயற்கை எழில் கொஞ்சும் நாடு. ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியின் தென்பாகம் இந்நாட்டிலேயே உள்ளது, நாட்டின் நிலப்பரப்பில் 32% பகுதியே சம தரையாகும். அதுவும் கடல் மட்டத்திலிருந்து 500 மீற்றர்கள் உயரமாகும்.
உலகிற்கு ஏராளமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள், இசைமேதைகள், நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள் போன்ற படைப்பாளிகளைத் தந்த நாடு.

நாட்டின் புகழ்பூத்த பிரபலங்களில் சிலர்:
நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுனருமாகிய அர்னோல்ட் சுவார்ட்சநேகர் (Arnold Schwarzenegger),
'உளவியலின் தந்தை' என்று அழைக்கப்படும் சிக்மண்ட் பிராய்ட்(Sigmund Freud),
'இசைமேதை' மொசாட்(Wolfgang Amadeus Mozart).

இரண்டாம் உலகப்போரால் கோடிக்கணக்கான உயிர்களின் அழிவிற்குக் காரணமான அடொல்ப் ஹிட்லரும் இந்த நாட்டிலேயே பிறந்தார்.

பிரதான வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை(வருடமொன்றுக்கு 2 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள்)

இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், நிலக்கரி, இரும்பு, செப்பு, நாகம், காந்தம், மரங்கள், நீர் மின்சாரம்.

பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:
இயந்திரங்கள், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், கடதாசி, கடதாசி மட்டைகள், உலோகப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், துணி வகைகள், உணவுப் பொருட்கள்.

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது 
இவ்வாறு கழிவு நீரைக் குடிநீராக்கும் திட்டம் சிங்கப்பூரில் மட்டும் நடைமுறைப் படுத்தப் படவில்லை, போதுமான தண்ணீர் வசதியுள்ள அமெரிக்காவின் ஒரு சில பெரிய நகரங்களிலும் நடைமுறையிலுள்ளது என்பதுடன் மிகச்சிறிய நாடாகிய சிங்கப்பூர் தனது இத்தொழில் நுட்பத்தை மிகப்பெரிய நாடாகிய சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.


இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதில் முக்கிய பங்காற்றும் திட்டம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமாகும்.(Desalination process) இத்திட்டத்தின்மூலம் சிங்கப்பூர் தனது தண்ணீர்த் தேவையில் 30% தை பூர்த்தி செய்கிறது. இத்திட்டம் பற்றியும் சிறிது விரிவாகப் பார்ப்போம்:


கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்(Desalination Process)
இத்திட்டமானது போதுமான குடிநீர் கிடைக்காத பல நாடுகளில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் திட்டமாகும். 
பல நாடுகளிலும் தண்ணீரானது  மக்களின் தேவைக்குப் போதுமான அளவில் கிடைக்காமல் போன அரிதான சூழலில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பாகும். அதற்கு முற்பட்ட காலப் பகுதியில் யாரும் அல்லது எந்த நாடும் இத்தகைய திட்டங்கள் பற்றிச் சிந்திக்கவில்லை,  காரணம் அக்காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை உலகை நெருக்கடிக்குள் தள்ளியதில்லை.
நாம் அனைவரும் கடல்நீரின் சுவை எத்தகையது என்பதை அறிவோம், நமது வாய்க்குள் சிறிதளவு கடல்நீரை விட்டுச் சுவைத்தால் அது 'உப்புக் கரிக்கிறது.' உடனே நாம் ஒரு முடிவிற்கு வருகிறோம் "கடல் நீரில் நூற்றுக்கு நூறுவீதம் உப்புக் கலந்துள்ளது, கடல்நீர் எதற்கும் உபயோகமில்லாதது" என்ற முடிவிற்கு வந்துவிடுகிறோம். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான கருத்தாகும். ஏனெனில் அறிவியல் உண்மைகளின்படி கடல்நீரில் 3.5 சதவீதம் மட்டுமே உப்பு அடங்கியுள்ளது,(இது கடலுக்குக் கடல் அல்லது சமுத்திரத்திற்குச் சமுத்திரம் வேறுபடலாம்). இருப்பினும் சமுத்திரங்களில் கலக்கும் ஆறு அல்லது  நதிகளின் அளவிற்கேற்ப 3.1 வீதத்துக்கும் 3.8 வீதத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கும். அதாவது ஒரு லீற்றர் கடல் நீரில் 35 கிராம் மட்டுமே உப்புக் கலந்துள்ளது. மீதமுள்ள 96.5 சதவீதமும் நன்நீராகும்(குடிப்பதற்கு ஏற்றது) இந்த அறிவியல் உண்மையைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் கடல் நீரிலிருந்து இந்த சிறிய பகுதியாகிய உப்பை நீக்கி விட்டால் கிடைப்பது சுத்தமான குடிநீராகும் என்ற உண்மையையும் கண்டறிந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமான பணியாக இருக்கவில்லை. 
காரணம் மேற்படி கடல்நீரிலிருந்து உப்பைப் பிரிப்பதற்கு ஏராளமான இயந்திர சாதனங்கள் தேவைப்பட்டன. அத்துடன் கடல்நீரைக் கொதிக்க வைப்பதற்குப் பெருமளவில் மின்சாரமும் தேவைப் பட்டது. அத்துடன் உலோகத்திலான இராட்சத இயந்திரங்கள் கடல்நீரினால் விரைவில் துருப்பிடித்துப் போகும் நிலையைத் தடுக்க முடியாமல் போனது. இவை மட்டுமல்லாது தண்ணீர் பற்றாக்குறையாகவுள்ள மாநிலம், நகரம், அல்லது கிராமம் கடற் பிரதேசத்திலிருந்து வெகு தொலைவிலிருந்தால் மேற்படி தொழிற்சாலையை எங்கே அமைப்பது? என்ற கேள்வியும் எழுந்தது. காரணம் மிகவும் அதிக செலவில் கடல் நீரிலிருந்து குடி நீரைத் தயாரித்தபின்னர் குழாய்கள் வழியாகவோ, போக்குவரத்துச் சாதனங்கள் மூலமாகவோ தண்ணீர் தேவைப்படும் மக்களை நோக்கித் தண்ணீரை எடுத்துச் செல்வது மிகுந்த செலவுமிக்க ஒரு விடயமாக இருந்தது. இருப்பினும்இத்திட்டத்தின் மூலம்  இன்றுவரை பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 13, 080 நகரங்களில் இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.


கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சில தரவுகள்: 

 • உலகிலேயே மிகப்பெரிய திட்டம்:-(தொழிற்சாலை) ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள(U.A.E) ஜெபெல் அலி(Jebel Ali) எனும் நகரத்தில் இயங்குகிறது.
 • தெற்காசியாவில் மிகப்பெரிய திட்டம்:- தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நரிப்பையூர், குயவன்குடி கிராமங்களில் இயங்குகிறது. இத்திட்டங்களின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 264 கிராமங்களைச் சேர்ந்த இலட்சக் கணக்கான மக்கள் தண்ணீர் பெறுகின்றனர்.
 • அமெரிக்காவில்:-புளோரிடா மாநிலத்தில் உள்ள Tamba Bay என்ற இடத்திலும் ஒரு மிகப்பெரிய திட்டம் செயற்படுத்தப் படுகிறது.
 • மேற்படி திட்டம் தற்போது நடைமுறையிலுள்ள நாடுகள்:-இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மால்டா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம்(துபாய்) மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள்.
 • திட்டத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ள நாடுகள்:- அபுதாபி, அரூபா, அவுஸ்திரேலியா, சைப்பிரஸ், ஜிப்ரோல்டர், இஸ்ரேல், மாலை தீவுகள், ஐக்கிய இராச்சியம்(இங்கிலாந்து)
 • சென்னையில்:- குடிதண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் சென்னையின் சேரிப் பகுதிகளுக்காக 1977-1978 காலப்பகுதியில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.
 • பாண்டிச்சேரியில்:- காரைக்கால் பகுதி மக்களின் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
 • திட்டத்தைப் பயன்படுத்தும் ஏனைய தரப்பினர்:- வல்லரசு நாடுகளின் 'விமானம் தாங்கிக் கப்பலில்' பணியாற்றும் விமானப்படை மற்றும் கடற்படையினர்.

(தொடரும்) 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.வெள்ளி, டிசம்பர் 17, 2010

மண்ணும் மரமும் மனிதனும் அத்தியாயம் - 8

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தமிழ்நாட்டில் சோழர்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் 'பாண்டிய மன்னர்கள்' பராக்கிரம பாகுவின் உதவியையே நாடினர். பாண்டியர்களுக்கு உதவும் முகமாக 'பராக்கிரம பாகுவின்' படைகள் தமிழ்நாட்டில், இராமநாதபுரத்தில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்தன.
இத்தகைய பராக்கிரமம் நிறைந்த இம்மன்னனின் காலத்திலேயே இலங்கை இன்னொரு நாட்டைக் கைப்பற்றி ஆண்டது, அந்நாட்டில் இன்றளவும் சிங்களத்தின் கிளை மொழியே பேசப் படுகிறது அது எந்த நாடு? சிந்தியுங்கள். என்ற கேள்வியுடன் கடந்த வாரத் தொடரை நிறைவு செய்திருந்தேன்.
வாசகர்களில் ஒருசிலரேனும் விடை கண்டுபிடித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இருப்பினும் விடையைக் கண்டுபிடிக்காத வாசகர்களுக்காக இதோ விடை: மகா பராக்கிரம பாகுவின் படைகளால் கைப்பற்றப் பட்டு, இலங்கையால் ஆளப்பட்ட நாடு 'மாலை தீவுகள்' ஆகும். அங்கு பேசப்படும் மொழியின் பெயர் திவேகி(Dhivehi) என்பதாகும். அம்மொழியானது சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தாலும் 'சிங்களத்தின் கிளைமொழி'(Cognate dialect) என்றே அழைக்கப் படுகிறது. உதாரணமாக எமது திராவிட மொழிகளாக தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகள் திகழ்ந்தாலும் 'மலையாளம்' மட்டுமே தமிழின் கிளைமொழி என்று அழைக்கப் படுகிறது. காரணம் யாதெனில் தமிழிலிருந்து மலையாளமொழி பிரிந்து சென்று(திரிபடைந்து) ஏறத்தாழ அறுநூறு வருடங்களே ஆகின்றன. மலையாளத்தில் பேசினால் தமிழர்கள் சுலபமாக புரிந்து கொள்வர். தமிழில் பேசினால் மலையாளிகள் சுலபமாகப் புரிந்து கொள்வர் என்பதற்கான விளக்கம் இதுதான். இதேபோல் சத்யன்(சத்தியநேசன்) கதாநாயகனாக நடித்த 'செம்மீன்' என்ற மலையாளத் திரைப்படம் யாழ்ப்பணத்தில் வெற்றி பெற்றதையும், தமிழில் பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் கதாநாயகன் முழுக்க முழுக்க மலையாளத்தைப் பேசியிருந்த போதிலும் அது தமிழில் வெற்றிப் படமாகியது போன்ற உதாரணங்களையும் கூறலாம். 'செம்மீன்' படத்தில் வரும் "கடலின் அக்கர போனோரே" பாடலை மறந்த வயோதிபர்களோ, அல்லது 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் வரும் 'கவிதை அரங்கேறும் நேரம்' பாடலை மறந்த நாற்பதைத் தாண்டியவர்களும் எம்மத்தியில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. ஆனால் மலையாளிகள் தமிழைப் பேசினாலும், அவர்களது எழுத்து வடிவம் சமஸ்கிருதத்தை ஒத்ததாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பேச்சுவடிவத்தைத் தமிழிலிருந்தும், எழுத்துவடிவத்தை ஆரியர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர். இதே போல நிகழ்வுதான் 'மாலை தீவிலும்' நிகழ்ந்துள்ளது. மாலைதீவு மக்கள் பேச்சு மொழியை சிங்களத்திடமிருந்தும் தமது எழுத்துவடிவத்தை தம்மை பல நூற்றாண்டுகளாக ஆண்ட 'அராபியர்களிடமிருந்தும்' பெற்றுக் கொண்டனர். இது நமக்கெல்லாம் வியப்பைத் தருகிறதல்லவா?
கேரளத்து மக்கள் பேசுவது 'தமிழ்' (முழுக்க முழுக்க தமிழ் வாடை கலந்த மலையாள வார்த்தைகள்) எழுதுவது தமிழ் அல்ல. அதேபோல் மாலைதீவு மக்கள் பேசுவது 'சிங்களம்'(முழுக்க முழுக்க சிங்கள வாடை கலந்த திவேகி வார்த்தைகள்) ஆனால் எழுதுவது சிங்களம் அல்ல 'அரபு எழுத்து' இது வினோதம் அல்லவா?
சரி நம் பராக்கிரம பாகுவின் புகழைப் பற்றியும், அவனது நாட்டுப் பற்று பற்றியும் கூறப் புகுந்த நான் மாலைதீவு மொழி, மலையாள மொழி பற்றிய ஆராய்ச்சிக்குள் தெரிந்தோ, தெரியாமலோ இறங்கி விட்டேன். சரி போகட்டும். தன் மண்ணையும், மக்களையும் நேசித்த, நாட்டிற்குப் புகழ் தேடித் தந்த மன்னன் என்ற காரணத்தால் 'மகா பராக்கிரம பாகு' இந்தக் கட்டுரையில் ஒரு இடம் பிடித்துக் கொண்டார். இனி தமிழ் மக்கள் தாம் மண்ணையும், மரம், செடி கொடிகளையும், உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிப்பதைத் தமது மொழியில் எவ்வாறு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 16, 2010

நினைவில் நிற்கும் பெரியோர் மொழி

 தொகுப்பு .யோ. வேந்தன் 
கனடா 
 • நீதி, நேர்மை உலகில் எங்கும் நிறைந்திருக்கும். அதற்கு எப்போதும் அழிவில்லை. ஆனால் அநீதி சிலகாலம் நிலைத்து நிற்பதுபோல் தோன்றும், விரைவில் மறைந்துவிடும்.

 • நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்படுவோமேயானால், இறைவன் பார்வை நிச்சயம் எம்பக்கம்.

 • கடவுள் எனும் கல்லுக்கு ஊற்றும் பாலை முதலில் ஏழைப் பாட்டாளியின் பிள்ளைக்குக் கொடு.

 • உன்னால் தினமும் ஒரு ஏழைக்காவது உணவளிக்க முடியும், முயன்றுபார்! இறைவன் உனக்கு வழிவகுப்பான்.

 • முயற்சிகளின் பலனே வெற்றி, முயற்சியின்மையின் பலனே தோல்வி.

 • தோல்வி மனிதனை வெற்றியடைய வைக்கிறது, தோல்வியடையும்போது முயற்சிக்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்படுகிறது.

 • மனிதன் தன்னைத்தானே முதலில் அறியவேண்டும். எம்மை நாம் அறியும்போது, சரி எது, தவறெது என எளிதில் அறிய முடிகிறது.

 • ஆழ்ந்து சிந்திப்பதால் அறிவு விரிவடைகிறது, அவ்வறிவைக்கொண்டு நன்மை தீமைகளைப் பகுத்தறிய முடிகிறது.

 • நல்லதை நாடி, நல்லன செய்வோனுக்கு என்றும் நன்மையே கிடைக்கும்.

 • மிகப்பெரிய உண்மை எது? உங்களால் எல்லாம் முடியுமென்றும் சொல்லமுடியாது, அதேவேளை உங்களால் எதுவும் முடியாதென்றும் கூற முடியாது.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 9


ஆக்கம்:  இ.சொ.லிங்கதாசன் 
தனது வாழ்வில் தான் ஆர்வத்தின் காரணமாக பயணிக்க நினைத்த 'பல்மாரியாத் தீவு' இன்னமும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருந்துகொண்டிருந்தது. அவனது தாய்மண்ணாகிய 'ஜெனோவாக் கடற்கரைப் பிரதேசம்' அவனது கண்ணைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தது. இப்போது அவன் தன்னைக் காப்பாற்றிய மீனவர்களின் தாயகமாகிய 'மொனாக்கோ' நாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறான் என்பதனை அந்த அப்பாவிச் சிறுவன் அறியவில்லை.


எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த மாலைப் பொழுதில் மீனவர்களின் படகானது அவர்களின் சம்பாத்தியமான மீன், நண்டு, இறால் போன்றவற்றுடனும் அவர்கள் நடுக்கடலில் கண்டுபிடித்த 'கொலம்பஸ்' என்ற சிறுவனுடனும் மொனாக்கோ கடற்கரையைச் சென்றடைந்தனர். அங்கு கடற்கரையில் சீரற்ற கால நிலையையும் பொருட்படுத்தாது ஏராளமான மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காகக் காத்திருந்தனர். அவர்களில் மன்னரின் பணியாட்களும், அமைச்சர்களின் வேலையாட்களும், நிலப்பிரபுக்களின் வேலையாட்களும் அடங்குவர். அம்மக்கள் கூட்டம் இம்மீனவர்கள் கொண்டு வந்த மீன்களையும், கடலுணவுகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதற்காக படகை நோக்கி பரபரப்போடு வந்ததைக் கண்ட கொலம்பஸ் விபரமேதும் அறியாதவனாக, பயந்தான், குழம்பினான். இறுதியில் தெளிந்தான்.


அங்கு மீனவர்களின் மீன் வியாபாரம் சிறிது நேரத்திற்கு மும்முரமாக நடைபெற்றது. இறுதியில் மீனவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர், இருள் முற்றாகக் கவிந்து முழு இரவும் ஆரம்பித்து விட்டது. சிறுவன் கொலம்பஸ் பயத்துடனும், கவலையுடனும் அங்கு நடைபெறும் சம்பவங்களை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இறுதியில் அம்மீனவர் தலைவன் கொலம்பஸ்ஸை நோக்கி வந்தான். தன்னை நோக்கி வரும் அந்த 'மீனவர் தலைவன்' எனும் ராட்சத உருவமுடைய மனிதனை கொலம்பஸ் மறுபடியும் அவ நம்பிக்கையுடனும், மிரட்சியுடனும் நோக்கினான். இடி போன்ற குரலில் பிரெஞ்சு மொழியில் மீனவர் தலைவனானவன் "எழுந்து, என்னோடு என் வீட்டிற்கு வா" என்று கூறியதைக் கேட்ட கொலம்பஸ் அவன் கூறியது என்ன என்று புரியாவிட்டாலும், அவன் சைகை காட்டியபடியே எழுந்து, அந்தப் 'பருத்த உருவம்கொண்ட' மனிதனுடன் நடந்தான்.


மீனவர் தலைவனின் வீட்டில், கொலம்பஸ் மிகவும் அன்பாக வரவேற்கப் பட்டான். மீனவர் தலைவனின் மனைவியும் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் புதிய விருந்தாளியை ஆச்சரியத்துடனும், அதே வேளையில் உவகையுடனும் நோக்கினர். மீனவர் தலைவன் சொற்ப நேரத்துக்குள்ளேயே கொலம்பஸ் பற்றி முழுத் தகவலையும் தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் கூறினான். தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.
(தொடரும்)
   உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், டிசம்பர் 15, 2010

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 11

"அடடா கம்பு இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமா? நமது இலங்கையில் அதை வெறும் பொரி உருண்டையாகவும், மரணச் சடங்கில் உபயோகிக்கப் படும் 'பொரியாகவும்' அல்லவா தமிழ் மக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றேன் நான். இடையில் குறுக்கிட்டார் அவர் "இல்லையில்லை, நீங்கள் சொல்வது தவறு, சிங்கள மக்கள், இந்தத் தானியத்தை பல வகைகளிலும் உணவாக உட்கொள்கிறார்கள்" என்றார்.
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.


**********************************************************************************


திரு பழனிச்சாமி அவர்களுடன் பேசிய பின் 'கம்பு' என்ற தானியம் தமிழ்நாட்டில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது? என்று தமிழ்நாட்டு இணயத்தளங்களில் தேடினேன் அதில் ஒரு கவிதையும் சிக்கியது, முக்கியத்துவம் கருதி இத்தொடரில் அக்கவிதையை வாசகர்களுக்காகத் தருகிறேன்.

ஏக்கம் 

கம்பஞ் சோற்றுக்கும் 
தென்றல் காற்றுக்கும் 
ஒற்றையடிப் பாதைக்கும்
சைக்கிள் சவாரிக்கும் 
குளிர்ந்த மோருக்கும் 
பனைமர நுங்குக்கும் 
அம்மா அன்பில் பங்குக்கும் 
மனம் ஏங்குதடி ........


அவசர சாண்ட்விச்சும் 
பனிமழையும், குளிர்காற்றும் 
நெரிசல் ஹைவேயில் 
டொயோட்டாவிலும்
கப்புச் சீனோவும்
கோக் பாட்டிலுமாக
வாழ்க்கை தொடருதடி 
நன்றி: தாரா, http://siragugal.blogspot.com 

(தொடரும்)

செவ்வாய், டிசம்பர் 14, 2010

திருத்தம்

இன்றைய தினம் வெளியாகிய 'நாடுகாண் பயணத்தில்' அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கை முப்பதினாயிரம்(30,000) என்பதற்குப் பதிலாக முப்பது(30) என்று தவறுதலாகப் பிரசுரமாகியிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்-
அந்திமாலை

நாடுகாண் பயணம் - அவுஸ்திரேலியாநாட்டின் பெயர்:
அவுஸ்திரேலியா

முழுப்பெயர்:
அவுஸ்திரேலியப் பொதுநலவாயம்

தலைநகரம்:
கன்பெரா

அமைவிடம்:
தென் துருவத்திற்கு அண்மையில்(ஓசியானியா)

நாட்டு எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் கடல்.
வடக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் இந்து சமுத்திரம்.
தெற்கு மற்றும் கிழக்குப் பக்கங்களில் பசுபிக் சமுத்திரம்.

அயல் நாடுகள்:
வடக்கு - இந்தோனேசியா, கிழக்குத் தீமோர், பப்புவா நியூகினியா
வட கிழக்கு - சொலமன் தீவுகள், வனாச்சூ, நியூ கலிடோனியா
தென்கிழக்கு - நியூசிலாந்து

பெரிய நகரம்:
சிட்னி

அலுவலக மொழி:
ஏதுமில்லை

தேசிய மொழி:
ஆங்கிலம்

இனங்கள்:
ஆங்கிலேயர், ஐரிஷ், ஸ்கொட்டிஷ், இத்தாலியர், ஜேர்மன், சீனர், கிரேக்கர்.

சமயங்கள்:
கிறீஸ்தவம், மற்றும் சிறிய அளவில் புத்த மதம், இஸ்லாம், இந்து, யூத சமயம்.

கல்வியறிவு:
99%

ஆயுட்காலம்:
ஆண்கள்: 78.7
பெண்கள்: 83.5


அரசாங்கமுறை:
ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற, ஜனநாயக ஆட்சி, மற்றும் சம்பிரதாயபூர்வமான அரச ஆட்சி.

நாட்டின் அரசி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)

ஆளுநர்:
குவென்டின் பிரைஸ்(Quentin Bryce)

பிரதம மந்திரி:
ஜூலியா கில்லட்(Julia Gillard)

இங்கிலாந்திடமிருந்து சுதந்திரமடைந்த திகதி:
01.01.1901

பரப்பளவு:
7,617,930 சதுர கிலோமீட்டர்கள்

சனத்தொகை:
22,555 624(2010 மதிப்பீடு)

நாணயம்:
அவுஸ்திரேலிய டொலர்(AUD)

சர்வதேசத் தொலைபேசி:
00-61


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலா, கல்வி, வர்த்தகம்(வட்டிக்குப் பணம் கொடுத்தல்), விவசாயம்.

கனிய வளங்கள்:
நிலக்கரி, தங்கம், வெள்ளி, செப்பு, அலுமினியம், இரும்பு, தகரம், கண்ணாடி மணல், யூரேனியம், பெற்றோலியம், இயற்கை எரிவாயு.

ஏற்றுமதிப்பொருட்கள்:
இயந்திரங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கணனிப் பொருட்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், கோதுமை, கம்பளி, இறைச்சி, பாலுணவுகள், பழங்கள், திராட்சை இரசம்(வைன்)

முக்கிய குறிப்பு:
அவுஸ்திரேலியாவில் ஏறக்குறைய முப்பதினாயிரம்(30,000) தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.


நாட்டின் பெருமைகள்:
தனிநபர் வருமானம் அதிகமுள்ள(ஆண்டொன்றுக்கு 45,285 அமெரிக்க டொலர்கள்) மிகவும் செல்வச் செழிப்புள்ள நாடுகளுள் ஒன்று.

உலகின் ஆறாவது பெரிய நாடு.
ஒரு நாடு, ஒரு தீவு, ஒரு கண்டம் என மூன்று பெயர்களால் அழைக்கப்படும் பெருமை பெற்றது.

நாட்டின் சிறுமைகள்:
இந்நாடு 17 நூற்றாண்டில் ஐரோப்பியர்களால்(பிரித்தானியர்களால்) கைப்பற்றப் பட்டபோது, அந்நாட்டில் 48,000 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான 'ஆதிவாசிகள்(Aborigines) ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டனர்.
ஐரோப்பியர்கள் இந்நாட்டில் குடியேற்றங்களை ஆரம்பித்தபோது, பிரித்தானியாவில் குற்றச் செயல்களில்(கொலை, களவு, பாலியல் வல்லுறவு) ஈடுபட்ட குற்றவாளிகளே முதன் முதலில் குடியேற்றப் பட்டனர். ஆதலால் இந்நாட்டிற்கு 'குற்றவாளிகளின் தேசம்' என்ற பட்டப் பெயரும் உண்டு.