வெள்ளி, டிசம்பர் 10, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 
இதேபோல் இலங்கையிலும் ஒரு மன்னன் வரலாற்றுப் புகழ்மிக்க வாசகத்தை உதிர்த்தான். அம்மன்னனின் பெயர் 'மகா பராக்கிரம பாகு' என்பதாகும். அவன் உதிர்த்த வாசகம்தான் என்ன? "எமது இலங்கை மண்ணில் வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளியும் பெறுமதியானது, அவை அத்தனையும் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், இம்மண்ணின் நீரானது ஒரு துளிகூட வீணாகக் கடலில் கலக்கக் கூடாது, இந்நாட்டில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த ஏனைய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படல் வேண்டும்" என்று அறைகூவல்
விடுத்தான். அவனது கூற்றை மக்கள் செவி மடுத்தனர். அவனது ஆட்சிக்காலத்திலேயே இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் புதிய குளங்கள் வெட்டப்பட்டன. மலையிலிருந்து சம தரையை நோக்கி ஓடிவரும் தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கங்கள் உருவாகின. இலங்கையில் இருக்கும் மிகப்பெரிய நீர்த்தேக்கம் ஒன்றுக்கு இலங்கை அரசு 'பராக்கிரம சமுத்திரம்' என்று பெயர் சூட்டுகின்ற அளவுக்கு அவனது புகழ் நிலைத்து நிற்கிறது. அவனது காலத்திலேயே இலங்கையின் புகழ் உலகெங்கும் பரவியது. நான் கூறும் தகவல்கள் வாசகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கலாம். இவனது ஆட்சிக்காலத்திலேயே இலங்கையிலிருந்து அரிசியானது பாரசீகம்முதல்(இன்றைய ஈரான்) சாவகம் வரை(இன்றைய இந்தோனேசியா) ஏற்றுமதி செய்யப்பட்டது.

அவனது காலத்தின் பின்னர் எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து இலங்கை சுதந்திரமடைந்த காலத்தின் பின்னரும்கூட இலங்கையால் 'அரிசியை' ஏற்றுமதி செய்கின்ற அளவுக்குத் 'தன்னிறைவு' அடைய முடியவில்லை. இப்போதும் சீனாவிலிருந்தும்,பர்மாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இலங்கை அரிசியை இறக்குமதி செய்த வண்ணமே உள்ளது. 1984 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையின் அமோக நெல் விளைச்சலைக் கருத்தில் கொண்டு "இவ்வாண்டு முதல்(1984) இலங்கையிலிருந்து அரிசி வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்" என்று கூறினார். ஆனால் இயற்கை செய்த சதியால் 'இலங்கை முழுவதுமே' வெள்ளத்தில் மூழ்கியதால் லட்சக் கணக்கான விவசாயிகளின் விளைச்சல்கள் நீரில் மூழ்கின. விவசாயிகள் அனைவருமே ஏழைகளாயினர். அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு இலங்கை விவசாயிகளுக்குப் பல வருடங்கள் பிடித்தன.

இலங்கையின் வரலாற்றிலேயே 'மகா பராக்கிரமபாகுவின்' ஆட்சிக் காலமே 'பொற்காலம்' எனலாம். ஏனெனில் இவனது ஆட்சியிலேயே மக்கள் தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். என்னைப் பொறுத்தவரையில் இவன் ஒரு சிறந்த மன்னன் என்பதைவிட ஒரு சிறந்த 'தேசபக்தன்'. இவனது ஆட்சியிலேயே இலங்கை ஒரு பலமான, செல்வச் செழிப்புமிக்க நாடாகியது, அது மட்டுமன்றி ஏனைய நாடுகளின்மீது படையெடுக்கும் அளவுக்குப் பலம்பொருந்திய நாடாகவும் விளங்கியது. இம்மன்னனின் புகழை உலகமே போற்றியது. உதாரணத்திற்குச் சில: தன்னை அவமதித்த குற்றத்திற்காக இலங்கையைவிடப் பத்து மடங்கு பெரிய நாடாகிய பர்மாவின்மீது படையெடுத்த மகா பராக்கிரமபாகு அந்நாட்டு மன்னனைப் பணிய வைத்ததோடு, பல வருடங்களுக்கு பர்மிய மன்னன் இலங்கைக்குத் 'திறை' செலுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டான். தமிழ்நாட்டில் சோழர்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் 'பாண்டிய மன்னர்கள்' பராக்கிரம பாகுவின் உதவியையே நாடினர். பாண்டியர்களுக்கு உதவும் முகமாக 'பராக்கிரம பாகுவின்' படைகள் தமிழ்நாட்டில், இராமநாதபுரத்தில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்தன.
இத்தகைய பராக்கிரமம் நிறைந்த இம்மன்னனின் காலத்திலேயே இலங்கை இன்னொரு நாட்டைக் கைப்பற்றி ஆண்டது, அந்நாட்டில் இன்றளவும் சிங்களத்தின் கிளை மொழியே பேசப் படுகிறது அது எந்த நாடு? சிந்தியுங்கள்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

suthan சொன்னது…

very good i like this story reading

கருத்துரையிடுக