ஞாயிறு, டிசம்பர் 19, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது 
இவ்வாறு கழிவு நீரைக் குடிநீராக்கும் திட்டம் சிங்கப்பூரில் மட்டும் நடைமுறைப் படுத்தப் படவில்லை, போதுமான தண்ணீர் வசதியுள்ள அமெரிக்காவின் ஒரு சில பெரிய நகரங்களிலும் நடைமுறையிலுள்ளது என்பதுடன் மிகச்சிறிய நாடாகிய சிங்கப்பூர் தனது இத்தொழில் நுட்பத்தை மிகப்பெரிய நாடாகிய சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.


இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதில் முக்கிய பங்காற்றும் திட்டம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமாகும்.(Desalination process) இத்திட்டத்தின்மூலம் சிங்கப்பூர் தனது தண்ணீர்த் தேவையில் 30% தை பூர்த்தி செய்கிறது. இத்திட்டம் பற்றியும் சிறிது விரிவாகப் பார்ப்போம்:


கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்(Desalination Process)
இத்திட்டமானது போதுமான குடிநீர் கிடைக்காத பல நாடுகளில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் திட்டமாகும். 
பல நாடுகளிலும் தண்ணீரானது  மக்களின் தேவைக்குப் போதுமான அளவில் கிடைக்காமல் போன அரிதான சூழலில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பாகும். அதற்கு முற்பட்ட காலப் பகுதியில் யாரும் அல்லது எந்த நாடும் இத்தகைய திட்டங்கள் பற்றிச் சிந்திக்கவில்லை,  காரணம் அக்காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை உலகை நெருக்கடிக்குள் தள்ளியதில்லை.
நாம் அனைவரும் கடல்நீரின் சுவை எத்தகையது என்பதை அறிவோம், நமது வாய்க்குள் சிறிதளவு கடல்நீரை விட்டுச் சுவைத்தால் அது 'உப்புக் கரிக்கிறது.' உடனே நாம் ஒரு முடிவிற்கு வருகிறோம் "கடல் நீரில் நூற்றுக்கு நூறுவீதம் உப்புக் கலந்துள்ளது, கடல்நீர் எதற்கும் உபயோகமில்லாதது" என்ற முடிவிற்கு வந்துவிடுகிறோம். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான கருத்தாகும். ஏனெனில் அறிவியல் உண்மைகளின்படி கடல்நீரில் 3.5 சதவீதம் மட்டுமே உப்பு அடங்கியுள்ளது,(இது கடலுக்குக் கடல் அல்லது சமுத்திரத்திற்குச் சமுத்திரம் வேறுபடலாம்). இருப்பினும் சமுத்திரங்களில் கலக்கும் ஆறு அல்லது  நதிகளின் அளவிற்கேற்ப 3.1 வீதத்துக்கும் 3.8 வீதத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கும். அதாவது ஒரு லீற்றர் கடல் நீரில் 35 கிராம் மட்டுமே உப்புக் கலந்துள்ளது. மீதமுள்ள 96.5 சதவீதமும் நன்நீராகும்(குடிப்பதற்கு ஏற்றது) இந்த அறிவியல் உண்மையைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் கடல் நீரிலிருந்து இந்த சிறிய பகுதியாகிய உப்பை நீக்கி விட்டால் கிடைப்பது சுத்தமான குடிநீராகும் என்ற உண்மையையும் கண்டறிந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமான பணியாக இருக்கவில்லை. 
காரணம் மேற்படி கடல்நீரிலிருந்து உப்பைப் பிரிப்பதற்கு ஏராளமான இயந்திர சாதனங்கள் தேவைப்பட்டன. அத்துடன் கடல்நீரைக் கொதிக்க வைப்பதற்குப் பெருமளவில் மின்சாரமும் தேவைப் பட்டது. அத்துடன் உலோகத்திலான இராட்சத இயந்திரங்கள் கடல்நீரினால் விரைவில் துருப்பிடித்துப் போகும் நிலையைத் தடுக்க முடியாமல் போனது. இவை மட்டுமல்லாது தண்ணீர் பற்றாக்குறையாகவுள்ள மாநிலம், நகரம், அல்லது கிராமம் கடற் பிரதேசத்திலிருந்து வெகு தொலைவிலிருந்தால் மேற்படி தொழிற்சாலையை எங்கே அமைப்பது? என்ற கேள்வியும் எழுந்தது. காரணம் மிகவும் அதிக செலவில் கடல் நீரிலிருந்து குடி நீரைத் தயாரித்தபின்னர் குழாய்கள் வழியாகவோ, போக்குவரத்துச் சாதனங்கள் மூலமாகவோ தண்ணீர் தேவைப்படும் மக்களை நோக்கித் தண்ணீரை எடுத்துச் செல்வது மிகுந்த செலவுமிக்க ஒரு விடயமாக இருந்தது. இருப்பினும்இத்திட்டத்தின் மூலம்  இன்றுவரை பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 13, 080 நகரங்களில் இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.


கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சில தரவுகள்: 

  • உலகிலேயே மிகப்பெரிய திட்டம்:-(தொழிற்சாலை) ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள(U.A.E) ஜெபெல் அலி(Jebel Ali) எனும் நகரத்தில் இயங்குகிறது.
  • தெற்காசியாவில் மிகப்பெரிய திட்டம்:- தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நரிப்பையூர், குயவன்குடி கிராமங்களில் இயங்குகிறது. இத்திட்டங்களின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 264 கிராமங்களைச் சேர்ந்த இலட்சக் கணக்கான மக்கள் தண்ணீர் பெறுகின்றனர்.
  • அமெரிக்காவில்:-புளோரிடா மாநிலத்தில் உள்ள Tamba Bay என்ற இடத்திலும் ஒரு மிகப்பெரிய திட்டம் செயற்படுத்தப் படுகிறது.
  • மேற்படி திட்டம் தற்போது நடைமுறையிலுள்ள நாடுகள்:-இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மால்டா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம்(துபாய்) மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள்.
  • திட்டத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ள நாடுகள்:- அபுதாபி, அரூபா, அவுஸ்திரேலியா, சைப்பிரஸ், ஜிப்ரோல்டர், இஸ்ரேல், மாலை தீவுகள், ஐக்கிய இராச்சியம்(இங்கிலாந்து)
  • சென்னையில்:- குடிதண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் சென்னையின் சேரிப் பகுதிகளுக்காக 1977-1978 காலப்பகுதியில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பாண்டிச்சேரியில்:- காரைக்கால் பகுதி மக்களின் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • திட்டத்தைப் பயன்படுத்தும் ஏனைய தரப்பினர்:- வல்லரசு நாடுகளின் 'விமானம் தாங்கிக் கப்பலில்' பணியாற்றும் விமானப்படை மற்றும் கடற்படையினர்.

(தொடரும்) 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.2 கருத்துகள்:

suthan சொன்னது…

i like this webside you are doing nice

mathanagopal denmark சொன்னது…

jeg kan godt lide den.

கருத்துரையிடுக