புதன், டிசம்பர் 22, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 12

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.
பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.


உங்கள் புகழ்ச்சிக்கு மிக்க நன்றி என்றவர் தொடர்ந்தார். "கம்பு பற்றி அநேகமாக  எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன் என்றே நினைக்கிறேன், இருப்பினும் ஒரேயொரு விடயம் கூற மறந்துவிட்டேன், 'கம்பு' சித்த மருத்துவத்தில் புகழ்ந்து பேசப்படும் ஒரு தானியம், உடல் சூடு உள்ளவர்கள் அரிசிக்குப் பதிலாக கம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் சூடு தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது, அது மட்டுமன்றி நார்ப்பொருட்கள்(Fibre) உள்ள தானியங்களாகிய கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பெருங்குடலில் 'புற்றுநோய்' வராது தடுக்க முடியும் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் கூறுகின்றன" என்றார்.
"இப்போதுதான் எனக்கு இன்னொரு தானியத்தைப் பற்றி நினைவு வருகிறது, ஆனால் நான் அந்தத் தானியத்தைக் கண்ணால் கண்டதில்லை, ஆனால் நூல்களில் படித்ததோடு சரி அதைப்பற்றியும் உங்களிடம் கேட்கவேண்டும் என்றிருந்தேன்" என்று புதிதாக ஒரு தலைப்பை ஆரம்பித்தேன்.
அது என்ன தானியம்? என்றார் அவரும் ஆச்சரியத்துடன். "நாங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் படிக்கும்போது 'வரகு' என்றொரு தானியத்தைப் பற்றி சில குறிப்புகள் வருவதுண்டு, தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:


வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்)
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்.


என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.
"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார். 


(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக