இத்தொடரானது கடந்த 4.11.2010 அன்று வெளியானது. இதன் தொடர்ச்சி நீண்டகால இடைவெளியின் பின்னர் இன்று வெளிவருவதால், உங்களுக்காக மறுபிரசுரமாகிறது.
இரண்டு மணிநேரத் தவிப்பின் பின்னர், அவனது எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், 'பிரெஞ்சுக்' கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த 'மொனாக்கோ' நாட்டு மீனவர்கள், நடுக்கடலில் தன்னந் தனியாக அலைந்து கொண்டிருக்கும், இச்சிறுவனின், மிகச்சிறிய படகை நோக்கித் தமது
படகைத் திருப்பி வந்தனர்.
அவர்களது படகு கொலம்பஸின் படகை அண்மித்ததும், படகிலிருந்தவர்கள் தாங்கள் கண்ட காட்சியால் திகைப்படைந்தனர். தனியொரு சிறுவன், சிறிய படகில் குளிரால் விறைத்து, நடுங்கிய வண்ணம், அலைகளின் இழுப்பிற்கேற்ப அலைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தமாக அவனை நோக்கிக் குரலெழுப்பு முன்னரே சிறிய படகிலிருந்து, அவர்களை நோக்கி பின்வரும் வாசகங்கள் அலைகள் ஊடாக மிதந்து வந்தன. "எனது பெயர் கொலம்பஸ், நான்
கிறிஸ்தோபர் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் ஜெனோவா நாட்டில் 'போட்டோ அண்டிகோ' கிராமத்தைச் சேந்தவன், நான் ஆபத்தில் இருக்கிறேன், எனக்கு உதவுங்கள்" சிறுவனின் இந்த வாசகங்கள் மீன்பிடிப் படகிலிருந்த பெரும்பாலான மீனவர்களுக்கு புரியவில்லை, காரணம் சிறுவன் பேசியது 'இத்தாலிய' மொழியாகும், ஆனால் படகிலிருந்தவர்களது மொழி 'பிரெஞ்சு' மொழியாதலால், அவர்களால் 'கொலம்பஸ்' கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் சூழ்நிலையை வைத்து, அச்சிறுவனின் நிலையை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
அக்காலத்தில் ஐரோப்பாவில் ஒரு நாட்டவர் பக்கத்து நாட்டவர்களின் மொழியை அறிந்து வைத்திருப்பது மிக அபூர்வம், இருப்பினும் மேற்படி மீனவர் படகிலிருந்த 'மீனவர் தலைவன்' இத்தாலிய மொழியை ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருந்தான், இருப்பினும் அம்மொழியாற்றலின் துணைகொண்டு சிறுவன் 'கொலம்பஸ்' நடுக்கடலுக்குத், தன்னந்தனியனாக சிறிய படகில் ஏன் வந்தான்? என்று கேட்டறிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு 'இத்தாலிய மொழியில்' அம்மீனவர் தலைவன் புலமை பெற்றிருக்கவில்லை.
இப்போது மீனவர்களின் முன்னால் நான்கு சிக்கல்கள் எழுந்திருந்தன, 1. இத்தகைய பரிதாபகரமான நிலையில் இச்சிறுவனைக் கைவிட்டுச் செல்ல அவர்களது 'மனிதாபிமானம்' இடம்தரவில்லை. 2. இச்சிறுவனை அவனது 'ஜெனோவாக் கடற்கரைக்கு' கொண்டுசென்று, மீனவர்களிடமோ, அல்லது பெரியவர்களிடமோ ஒப்படைப்பதற்கு 'கால அவகாசம்' எடுத்துக் கொண்டால் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் 'மீன்கள்' பழுதடைந்துவிடும். 3. சிறுவனை சொந்த ஊரில் ஒப்படைப்பதில் நேரம் செலவு செய்யப்பட்டால் இம்மீனவர்கள் பிடித்துவைத்திருக்கும் மீன்களை அவர்களது நாட்டில் 'சந்தைப் படுத்துகின்ற' வாய்ப்பு இழக்கப்படும். 4. சிறுவனை தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றால், அடுத்த நாள் அவனை அவனது நாட்டுக்கு அழைத்துச் சென்று ஒப்படைப்பது 'சம்பிரதாயங்கள்' நிறைந்த மிகவும், சிரமமான காரியமாகும்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
1 கருத்து:
det er fint.
கருத்துரையிடுக