புதன், டிசம்பர் 08, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கம்பு
சோளம் பற்றி பெரிய உரையே ஆற்றி விட்டீர்கள், அடுத்து இறுங்கு (கம்பு) தமிழ் மக்களின் உணவில் எத்தகிய முக்கியத்துவம் பெறுகிறது? என்று ஒரு புதிய கேள்விக்கணையை அவரை நோக்கித் திருப்பினேன். 
அவரும் அதை ஆமோதிப்பதுபோல் மெதுவாகச் சிரித்துக்கொண்டே ஆரம்பித்தார். "நல்ல கேள்விகளைத்தான் கேட்கிறீர்கள், இதன்மூலம் உங்கள் அறிவும் பெருகுகிறது, எனது தேடலும், ஞாபகசக்தியும் பலப்படுகிறது. சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம், தமிழ் நாட்டு மக்களின், ஏன் இந்திய மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு தானியம்தான் கம்பு(இலங்கைத் தமிழில் இறுங்கு) இந்தியாவில் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம் உண்டு. இந்தத் தானியத்தின் பிறப்பிடம் ஆபிரிக்கா என்றே நம்பப் படுகிறது". 
"அப்படியானால் இந்தியாவில் கம்பு எப்போது அறிமுகமானது என்று ஏதேனும் தகவல் உண்டா? என்றேன் நான். "இருங்கள் சொல்கிறேன்" என்று கையை காட்டியவர் தொடர்ந்தார்: "இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் இருந்து ஒரு விடயம் தெளிவாகியது, அது 2000 ஆண்டுகளுக்கு முன்பே கம்பு இந்தியாவில் பயிராகியிருக்கிறது என்பதுதான். கம்பு வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது, அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் வளரும் தன்மை உடையது".
நான் உங்களிடம் 'கம்பஞ்சோறு'(இறுங்குச்சோறு) மற்றும் கம்பில் தயாரிக்கப் படும் உணவுகள் பற்றி அறிய ஆவலாயிருந்தேன்" என்று அவரது உரையை வேறு பக்கம் திருப்பினேன்.
கம்பஞ்சோறு
அவர் தொடர்ந்தார். "கம்பஞ்சோறு மிகவும் சத்துள்ள ஒரு உணவு மட்டுமின்றி நீண்டநேரம் பசியைத் தாக்குப் பிடிக்கக் கூடியது. கம்பஞ்சோறுக்குப் பழைய மீன்குழம்பு எத்தகைய பொருத்தம் என்று தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களைக் குறிப்பாகத் திருச்சி, சேலம் மாவட்ட மக்களைக் கேட்டுப் பாருங்கள்" என்றார். "அதுதான் எஜமான் படத்தில் பாடல் எழுதிய கவிஞர் பாடல் முழுவதுமே 
"கம்பஞ்சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு,
நேத்து வச்ச மீன் குழம்பும் இங்கேயிருக்கு"  
என்ற வரியைத் திரும்பத் திரும்ப உபயோகித்திருந்தாரா? என்றேன் நான்.
"ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் அந்தப் பாடலை எழுதியவர், தமிழ்நாட்டு மக்களின் வாயில் நாவூறச் செய்கின்ற அத்தனை உணவுகளையும் வகைப் படுத்தியிருப்பாரல்லவா? 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' பாடலுக்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்களை வாயூற வைத்த பாடல் அது என்றால் மிகையாகாது" சரி கம்பில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று கேட்டீர்கள் அல்லவா சொல்கிறேன்., கம்பை இடித்த மாவிலிருந்து பெரும்பாலும் கூழ், களி போன்ற உணவுகளைத்தான் தயாரிப்பார்கள் இருப்பினும் அரிசி மாவுடன் சேர்த்து 'அடை', 'தோசை' போன்றவற்றைத் தயாரித்தால் அவற்றின் சுவையை எழுத வார்த்தைகளே கிடையாது"
"அடடா கம்பு இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமா? நமது இலங்கையில் அதை வெறும் பொரி உருண்டையாகவும், மரணச் சடங்கில் உபயோகிக்கப் படும் 'பொரியாகவும்' அல்லவா தமிழ் மக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றேன் நான். இடையில் குறுக்கிட்டார் அவர் "இல்லையில்லை, நீங்கள் சொல்வது தவறு, சிங்கள மக்கள், இந்தத் தானியத்தை பல வகைகளிலும் உணவாக உட்கொள்கிறார்கள்" என்றார்.
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

3 கருத்துகள்:

HN சொன்னது…

வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

கருத்துரை எழுதும்போது தயவுசெய்து சற்று விரிவாக, விவாதங்களை தொடரக்கூடிய முறையில் முன்வையுங்கள். அதன்மூலம் ஏனைய வாசகர்களுக்கும், அந்திமாலை ஆசிரியரின் சிந்தனைக்கும் வேலைகொடுங்கள்.

சே.ஜெ சொன்னது…

அன்புள்ள ஆசிரியருக்கு, படையப்பா திரைப்படத்திலிருந்து, ஒரு பாடல் வரி "வெறும் கம்பன் களி தின்னவனும் மண்ணுக்குள்ள" என்று வருகிறது. அது குறிப்பிடுவதும் இந்த கம்பு என்ற தானியத்தையா?

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

வாசகர் சே.ஜெ.யின் கேள்விக்கான பதில்:
நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரியானது. இம்மண்ணில் பிறந்தவன் அவன் ஏழையானாலும் , பணக்காரனானாலும் இறப்பது உறுதி என்பதைக் காட்டுவதற்காக கவிஞர் அவர்கள்(வைரமுத்து என்று எண்ணுகிறேன்) "வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள, அட தங்கப் பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள" என்று பாடல் வரைந்திருந்தார். இதில் 'கம்பங்களி' என்பது நான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த தானியத்தையே குறிக்கும். தங்கம் நீங்கள் அனைவரும் அறிந்ததே. பஸ்பம் என்பது தமிழில் 'சாம்பல்' என்று பொருள்படும். பணக்காரர்கள் தமது உடலை மெருகோடு, பலத்தோடு வைப்பதற்கு 'தங்கத்தை சாம்பலாக்கி உண்பார்கள்' என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தங்கம் உடலுக்கு எந்த நன்மையையும் செய்யாது. தங்கத்தைச் சாம்பலாக்க முடியாது என்பது அறிவியல் உண்மை.
ஆசிரியர்.

கருத்துரையிடுக