இனிய உறவுகளே வணக்கம், எமது இந்த இணையப்பக்கத்தில் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பாடசாலையில் படித்த காலத்தில் பகுதிநேர நிருபராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்த கணப்பொழுதுகளில் என் மனதில் உதித்த ஆவல் சுமார் இருபது வருடங்களின் பின்னர் செயலாக மலர்கிறது. ஐரோப்பிய மண்ணில் கால் வைத்த காலப்பகுதியிலும் என் மனதை விட்டகலாத "ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்" என்ற கனவு, புலம்பெயர் மண்ணில் தமிழ் பத்திரிகைகள் செல்வாக்கிழந்து சென்றதாலும், இணையத்தளங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதாலும் 'இணையம்' ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியமாக மாறியது. இந்த இலட்சியத்தினை எட்டுவதற்கு, போதிய வாய்ப்புக்கள் வரும்வரை நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். சகல அம்சங்களும், உதவிகளும் கைகூடி வந்த இந்த இனிய தருணத்தில் 'அந்திமாலை' என்ற பெயருடன் இவ் இணையத்தளத்தினை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.
எனது ஆவலைப் பூர்த்தி செய்ய இடமளித்த கூகிள் நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இணையம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியபோது ஏற்பட்ட சந்தேகங்களுக்குத் தயங்காமலும், நல்லுள்ளத்தோடும் விளக்கமும் ஆலோசனையும் வழங்கிய என் இனிய இணையநண்பன் நெதர்லாந்துவாழ் கலையரசனுக்கும், கணனித் தொழில் நுட்பத்தில் உதவிகள் வழங்கி வரும் என் இனிய தோழி பிருந்தா இராமலிங்கத்திற்கும் எனது உளமார்ந்த நன்றிகள் .
அறிவுப்பசியோடு இந்தப்பக்கத்தில் வருகை தந்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும், எதிர்காலத்தில் ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்க காத்திருக்கும் படைப்பாளிகளுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
மிக்க அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்