ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
வாழ்வில் மனிதர் தேகப்பயிற்சி செய்வதால் மனதில் உற்சாகத்தையும், அதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள்.
ஆனால் தேகப்பயிற்சி செய்வதால் மனிதன் களைப்பு அடைகிறான் என்று சிலர் எண்ணுவது தவறாகும். இதற்கு எதிர் மாறாகவே செயற்பாடுகள் நடைபெறுகிறது. தேகாப்பியாசத்தால் நல்ல உடல்நிலை, தசைகளின் நல்ல செயற்பாடு, நாளாந்த வேலைகளைக் குறைந்த உடற் சக்தியில் செய்வது, குறைந்த களைப்பு எனும் நன்மைகளே உருவாகிறது.
குறைந்தது முப்பது நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்வது நல்லது என்பது சுகாதாரப் பகுதியின் ஆலோசனையாகிறது. முப்பது நிமிட நேரத்திற்கும் குறைந்த நேரப் பயிற்சி நல்ல உடற் பயிற்சிக்கு ஆதாயமாக இருக்காது. ஆனால் அறுபது நிமிடப் பயிற்சி, இரத்தக் குழாய் அடைப்பைக் குறைத்து, அதனால் இறப்பு வருவதை அறுபது விகிதம் தடுக்கிறது என்கிறார்கள்.
நாங்கள் அசையும் போது எமது தசைகளைப் பாவிக்கிறோம். தசைகள் பாவிப்பதற்காகவே உருவாக்கப் பட்டது. இது ஒருவகைச் சுரப்பி போன்றது.
பாவித்தாற் தான் பயன் பாவிக்காவிடில் பாழ்.
தசைகளை இயக்குவதால் இன்சுலின் எரிந்து சீனிச் சத்தாகி, இரத்தத்தினூடு பாவனையில் கலக்கிறது. தசைகளைப் பாவித்தலால், அதாவது உடற் பயிற்சியால் ஈரல், இதயம் நன்றாக இயக்கப் படுகிறது.
மருந்துகள் செய்ய முடியாததை உடற்பயிற்சி (தேகாப்பியாசம்) தருகிறது.
உடலை அசைப்பது வாழ்வில் ஒரு ஒளிப் பாதையைக் காட்டுகிறது.
உடலிற்கு அமைதியை, மனதிற்கு மகிழ்வையும் உடற்பயிற்சி தருகிறது. மேலும் பய உணர்வை, மனக் குளப்பங்களைத் தீர்க்கிறது. படபடப்புக் குணம் குறைந்து, மனதிற்கு நிதானம் கிடைக்கிறது.
நானொன்றும் புதிதாக இவைகளைக் கூறிவிடவில்லை. எத்தனையோ அன்புச் சகோதர, சகோதரிகள் இவை பற்றியும், செயல்முறைகள், செயற் கருவிகள் என்று பல விளக்கத்துடன் வலையில் பதிவிடுகிறார்கள். அதனால் பயன் பெறுவதே சிறப்பு.
சோகம் வேண்டாம் வாழ்வில்.
சாக வேண்டாம் நோயால்.
யாகம் போலிதைச் செய்வதால்
தேகப்பயிற்சி வாழ்வில்
ஏகபோக பலம்(ன்) தரும்.
வேகமான பலன் பெறலாம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-1-2006.
(யேர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது.
இலண்டன் தமிழ் வானொலி அனுபவக் குறிப்பாகவும் ஒலிபரப்பானது.)