திங்கள், டிசம்பர் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று. (591)
பொருள்: ஊக்கம் உடைமையே 'உடையவர்' என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது. ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.


இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்?

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்படலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுக் கடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்த்து விடும்!,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்வது அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலக் காடுகளில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!
சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்ததாக கூறுகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமாவை  அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
எவ்வாறு இது சாத்தியமானது?
கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!
வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!
இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!
விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!
நன்றி :  வால்பையன் வலை

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஒரு கலைஞனின் மறைவில்

இலங்கை வானொலி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'கோமாளிகள்' நகைச்சுவை நாடகத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒருவராகிய உபாலி S.செல்வசேகரன் அவர்கள் நேற்றைய தினம்(டிசம்பர் 29) கொழும்பில் காலமானார். இது குறித்து இலங்கை வானொலி அறிவிப்பாளர்  லோஷன் அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த பதிவை இங்கு அவருக்குரிய நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.
உபாலி S.செல்வசேகரன் 
இலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர். லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின்  தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.

அந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.
நான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும். எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.

அன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு. எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் தந்து வளர்த்துவிட்டவர்கள்.

பின்னாளில் சூரியன் வானொலியில் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.

வெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.

தமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.

இப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.

இந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர். மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.

'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான். இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

உபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.


தகவலுக்கு நன்றி:www.4tamilmedia.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 59 ஒற்றாடல்
 
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. (590)
பொருள்: பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புகளைச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மறை பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வேற்றுமை பாராட்டாமல் மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி எமது உள்ளத்தில் உதிக்காத வரையில் இரைதேடி, இனம் பெருக்கி, உண்டு, உறங்கி வாழ்கின்ற மனித மிருகங்களே நாம்.

சனி, டிசம்பர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
  
 
ஒற்றுஒற்று  உணராமை ஆள்க; உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும். (589)

பொருள்: ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; இவ்வாறு மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்து உண்மை தெளிய வேண்டும்.

இன்றைய பழமொழி

இங்கிலாந்துப் பழமொழி 
காலமும் வெள்ளமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

வெள்ளி, டிசம்பர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588) 
 
பொருள்: ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து, ஒப்புமை கண்ட பின் உண்மையை அறிதல் வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

மௌனமாக இருப்பதன்மூலம் மற்றவர்களுடைய குறைகளை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அதே சமயம் நம்மிடமிருக்கும் குறைகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கவும் முடியும்.

வியாழன், டிசம்பர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை 
ஐயப்பாடு இல்லதே ஒற்று. (587)
 
பொருள்: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய், தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் அலன் 

தூரத்தில் இன்பம் இருக்கிறதா என்று எண்ணி ஏங்குகிறான் முட்டாள். ஆனால் புத்திசாலியோ இன்பம் தன் காலடியிலேயே கொட்டிக் கிடப்பதைக் காண்கிறான்.

புதன், டிசம்பர் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
  
 
துறந்தார் படிவத்தார் ஆகி இறந்துஆராய்ந்து 
என்செயினும் சோர்விலது ஒற்று. (586)

பொருள்: துறந்தவர் வேடத்தோடு அரிய இடங்களுக்கும் சென்று ஆராய்ந்து ஐயுற்றவர் என்ன செய்தாலும் சோர்வடையாதவரே ஒற்றர் ஆவர்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

சத்தியம் தனியாகப் பயணம் செய்யும், பொய்யிற்குத்தான் துணை வேண்டும்.

வாசகர்களின் கவனத்திற்கு

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
இன்றைய தினம் உங்கள் அந்திமாலையில் வெளியாகியுள்ள 'மலாக்கா முத்துகிருஷ்ணன்' அவர்கள் எழுதிய "குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும்" எனும் கட்டுரையில் குங்குமப் பூவின் பெறுமதி மலேசியாவின் நாணயமாகிய ரிங்கிட்டில்(Ringgit) குறிக்கப் பட்டுள்ளது. ஒரு மலேசிய ரிங்கிட்டின் இலங்கைப் பெறுமதி சுமார் 42 ரூபாய் என்பதையும் இந்தியப் பெறுமதி சுமார் 18 ரூபாய் என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன் 
ஆசிரியர் 
அந்திமாலை 
www.anthimaalai.dk   

குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும்

ஆக்கம்:K.S.முத்துக்கிருஷ்ணன்,ஈப்போ, பெராக், மலேசியா.

மலேசியா, ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடர் வெளிவருகிறது. இந்தக் கட்டுரை மே 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


மஞ்சுளா. பள்ளி ஆசிரியை. வயது 25. படித்துப் பட்டம் பெற்றவள். நிறைமாதக் கர்ப்பிணி. தலைப்பிரசவம். சிவப்பான குழந்தை வேண்டும். அதற்காக கல்கண்டு லேகியம், கானாங்கெளுத்தி லேகியம், தொட்டால் சிணுங்கி லேகியம், தொடாப் பிடாரி லேகியம் என்று பார்க்கின்ற லேகியங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டாள்.

அவளுடைய கணவன் சற்று அடர்த்தியான நிறம். பிறக்கிற குழந்தையும் கணவனைப் போல நிறத்தில் இருக்க வேண்டாம். சிவப்பாக வேண்டும் என்கிற சின்ன பெரிய ஆசை.

அந்த நேரம் பார்த்து ஊசிமணி விற்கிற ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். அவளுடைய பெயரும் ஊசிமணி. மூட்டையை அவிழ்த்துக் கடை  கட்டினாள். மருந்து மாய ஜாலங்களைப் பார்த்த மஞ்சுளாவிற்கு மனசுக்குள் மெலிதான ஒரு மயக்கம். சும்மா சொல்லக்கூடாது.
 
ஊசிமணி அள்ளிப் போட்ட மருந்துகள் எல்லாம், பிறக்கிற குழந்தையைச் சிவப்பாக்கிப் பார்க்கின்ற மூலிகை வேதங்கள்.  கடைசியில் அசல் அசாம் நாட்டு குங்குமப்பூ மஞ்சுளாவிற்குப் பிடித்துப் போனது.

குங்குமப்பூவின் பெயர் அசாம் அங்கானா. கேள்விபட்டிருக்கிறீர்களா.  நானும் கேள்விபட்டதில்லை. அந்தக் குங்குமப்பூவைத் தான் பர்மாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். நூற்றில் 99 குழந்தைகள் அங்கே சிவப்பாகப் பிறக்கிறார்களாம்.

அப்புறம் அந்த அசாம் அங்கானா, அமெரிக்காவில் உள்ள பெண்களை ஐஸ்வர்யா மாதிரி வெள்ளையாக ஆக்குகிறதாம். அத்தனையும் கொலம்பஸ் காலத்து புள்ளிவிவரங்கள். நம்ப கேப்டன் ஜெயகாந்த் தோற்றார் போங்கள்.


ஒரு டப்பா குங்குமப்பூ முன்னூறு ரிங்கிட். குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்றால் சும்மாவா. காசு என்ன, இன்றைக்கு இருக்கும். நாளைக்குப் போய்விடும். காசு கைமாறியது. பற்றாக்குறைக்கு வீட்டில் இருந்த நாலைந்து சேலைகளையும் மஞ்சுளா தானம் செய்தாள்.

நல்லபடியாக ஊசிமணியை அனுப்பியும் வைத்தாள். பிறக்கப் போகும் குழந்தையின் சிவப்பு நிறத்தில் இனம் தெரியாத கற்பனை. பரவச நிலையில் ஒரு புதுமையான வாழ்க்கை.

அசாம் நாட்டு இறக்குமதியை அவள் சர்வலோக சித்தமாக நினைத்தாள். ஒரு நாளைக்கு மூன்று வேளை. சுத்த பத்தமாகச் சாப்பிட்டாள். எண்ணி வைத்து ஏழாவது நாள்.

என்ன நடந்தது தெரியுமா? ... மேலும் 

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 59 ஒற்றாடல்

 

கடாஅ  உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585)
பொருள்: சந்தேகப்படாமல் இருக்க உருவுடன், பார்த்தவர்களுக்கு அஞ்சாமல் அறிந்ததை யார்க்கும் வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 
 தீர்ப்புச் சொல்வதற்குக் கண்ணும் காதும் மட்டும் போதாது. அறிவும் அனுபவமும் அத்தியாவசியம்.

கிறிஸ்துமஸ் தினக் கவிதை

ஆக்கம்: 'கவி வித்தகர்' சேவியர் வில்பிரட் 
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.
 
பொங்கும் இதயத்தில் பூத்த ஒளி

• திங்கள் ஒளி தங்கக் கதிர் பரப்ப
தமிழும் திருப்புகழ் பாடி மகிழ
எங்கும் மானிடம் மகிழ்ச்சி பொங்க
ஏதிலியானவர் வாழ்வு மலர்ந்திட
பொங்கும் இசையினில் புனிதம் மலர்ந்திட
புலம்பும் இதயங்களில் புதுமை வளர்ந்திட
அங்கம் நொடியினில் சிலிர்த்து பணிந்திட
அன்பர் யேசு அவனியில் உதித்தார்
 
• வேதனை உலகில் என்றும் மறைந்திட
வீடுகள் தோறும் அவலங்கள் நீங்கிட
தூதனாம் யேசுவின் வரவைப் புகழ்வோம்
துயரங்கள் போக அவரடி பணிவோம்
சாதனை வீரனாய் உலகில் தோன்றிய
சீரிய செம்மலை சிரம் தாழ்த்தி பணிவோம்
சோதனை விலக்கும் சோதரர் யேசுவை
செந்தமிழாலே பாடிப் பணிவோம்
 
• உத்தமர் யேசுவின் சத்திய வேதம்
உலகம் அழிவதைக் கூறிநின்றதா?
எத்தனை இடர்கள் உலகில் வருமென்று
எம்மான் யேசு மொழிந்து நின்றாரா?
ஒத்து வாழ்வதும் ஒற்றுமை காப்பதும்
ஒவ்வொரு மனங்களில் யேசு போதனை
கர்த்தராம் யேசுவின் ஒளியினில் வாழ
கரங்கள் இணைத்து நிற்போம் அனைவரும்
 
• எப்படியும் உலகில் வாழலாமென
எத்தனை இதயங்கள் வாழ்ந்திட்ட போதும்
செப்படி வித்தையில் வாழ்வெலாம் இழந்துமே
செழுமை நலங்கள் அழிந்தும் சிதைந்தும்
இப்படி வாழ்வது மனித பலமென
இகலுக்கு நல்ல நெறிகள் வகுத்த
ஒப்பிலா இயேசுவின் பிறப்பை
ஒன்றுபட்டே வாழ்த்தி மகிழ்வோம்.
திங்கள், டிசம்பர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதவர் என்றுஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. (584) 
 
பொருள்: ஒற்றர் வேலை செய்பவர், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல், செயல்களால் ஆராய்பவனே ஒற்றனாவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

பிடிவாதமும் முயற்சியும் இருந்தும் "அறிவு" இல்லாவிட்டால் ஒருவன் தன் சாதனையை நிலையாக வைத்திருக்க முடியாது. அது வேறொருவருடையதாகவே ஆகிவிடும்.

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
பிராந்திய மொழி: கன்னடம்
நாடு: இந்தியா
மாநிலம்: கர்நாடகம்/கர்நாடகா 
பாடல்: கோகிலியே ஷேமவே
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: மண்ணின்ன தோணி

பாடியவர்: எஸ்.ஜானகி 

இசை: ஹம்சலேகா(நூற்றுக் கணக்கான கன்னடப் படங்கள், பத்திற்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்கள், மற்றும் சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் இவர் இசையமைத்த பாரதிராஜாவின் 'கேப்டன் மகள்' மற்றும் 'கொடி பறக்குது' போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத் தக்கவை. சிறந்த பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், வசன கர்த்தாவுமான இவர் பல தடவைகள் மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார்) 

நடிகர்கள்: அம்பரீஷ், சுதாராணி
இயக்கம்: எம்.எஸ்.ராஜசேகர் 

காணொளி உதவிக்கு நன்றி:Shemarookannada
சட்டபூர்வ உறுதிமொழி/Disclaimer: The video clip is posted for viewing pleasure and as an archive for good old songs. By this I (R.S.Lingathasan) don't wish to violate any copyright owned by the respective owners of this song. I don't own any copyright of the song. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from our blog.
பாடலைப் பற்றிய குறிப்பு: தமிழுக்கு அடுத்த படியாக தமிழ் மக்களால் மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடிய திராவிட மொழி மலையாளம் என முன்பொரு தடவை குறிப்பிட்டிருந்தேன். அந்த வரிசையில் மலையாளத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது கன்னட மொழியாகும். மேலே உள்ள பாடலின் தொடக்கம் "கோகிலியே ஷேமவே" என்று ஆரம்பிக்கிறது இதில் 'கோகிலி' என்றால் தமிழில் 'குயில்' என்று அர்த்தம். நமது தமிழ் மொழியிலும் 'கோகிலம்' என்பது குயிலைக் குறிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். "குயிலே நலமாக இருக்கிறாயா? "மானே நலமாக இருக்கிறாயா? என்று கதாநாயகி பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

தமிழ்த் திரையுலகில்: 'சூப்பர் ஸ்டார்' ரஜினி மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோரது தாய்மொழி கன்னடம் ஆகும். நடிகைகளில் ஐஸ்வர்யா ராயின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவருக்கு கன்னட மொழி பேசத் தெரியாது என்பதுடன் கன்னடப் படங்களிலும் அவர் நடித்ததில்லை. மறைந்த பிரபல நடிகை சௌந்தர்யா மற்றும் நடிகை சங்கவி ஆகியோரின் தாய்மொழி கன்னடம் ஆகும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்து இல். (583) 
 
பொருள்: ஒற்றரால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத மன்னவன், வெற்றி பெறத் தக்க வழி வேறு இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி...

 
வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று வேதனைப் படுவார்கள்.

அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.

அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா?

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
 எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நன்றி:Velmahesh.blogspot.com

சனி, டிசம்பர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில். (582) 
 
பொருள்: எல்லாரிடத்திலும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றரைக் கொண்டு விரைந்தறிதல் வேந்தனுடைய தொழில் ஆகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  
நாம் வாங்கிய கடனாகிய சுமையோடு காலையில் துயிலெழுவதைவிட கடன் வாங்காமல் பட்டினியோடு இரவில் உறங்கச் செல்வது மேல்.

உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

*

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

1.
தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

*

2.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.

*

3.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

*

4.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

*

5.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

*

6.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

*

7.
மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.

*

8. 
சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.


***


தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள்:


தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.


1. தைலங்கள்;தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

*

2. எளிதில் ஜீரணமாகும்:
தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

*

3. வயிற்றுப் புண்கள்:
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

***

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
1. மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

*

2. வைரஸ் எதிர்ப்பு:தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

*

3. ஆண்மைப் பெருக்கி:
முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.


***


இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

1.
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

2.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

3.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.

4. 
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

5.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

6.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

7.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

 நன்றி: இருவர் உள்ளம் 

வெள்ளி, டிசம்பர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண். (581) 
 
பொருள்: ஒற்றரும், புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இந்த இரண்டு கருவிகளையும் மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகக் கருத வேண்டும்.

இன்றைய பழமொழி

இங்கிலாந்துப் பழமொழி 

எதிர்ப்பு எங்கு இல்லையோ அங்கு வெற்றி இல்லை. எதிர்ப்பைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் உண்மையான வெற்றியாகும்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
  
 
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர், நயத்தக்க 
நாகரிகம்  வேண்டு பவர். (580)

பொருள்: யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர் தம்மோடு நெருங்கிப் பழகியவர் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அதனை உண்டு பின்னும் அவரோடு பொருந்தியிருப்பர்.