வெள்ளி, அக்டோபர் 29, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 6


உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ, அப்பொருள் மிகவும் விலைகூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும், 'பிளாட்டினத்தின்' விலை அதிகம்தானே? என்று தனது கருத்திற்கு வலுச் சேர்த்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.
ஆம், நீங்கள் சொல்வது மிகவும் சரி, தங்கத்தைவிட மிக அருமையாக
கிடைப்பதால்தான் 'பிளாட்டினத்தின்' விலை தங்கத்தைவிட மிக அதிகம்
என்று, ஊரில் பாடசாலையில் படிக்கும்போது எங்கள் 'விஞ்ஞான ஆசிரியர்' கூறி இருக்கிறார், அது மட்டுமல்லாமல், நான் டென்மார்க் நாட்டிற்கு வந்த புதிதில், பெரும்பாலான டேனிஷ் பெண்களின் கழுத்திலோ, காதிலோ தங்க நகைகள் இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன், பின்பு விசாரித்தபின்புதான் தெரியவந்தது, பெரும்பாலான பெண்கள் வெள்ளி நகைகளையும், குறிப்பிட்ட வீதத்தினர் இங்குள்ள தரம்குறைந்த(18 கரட்) தங்கத்தையும், பணக்காரப் பெண்கள் 'பிளாட்டினத்தாலான' நகைகளையும் அணிகிறார்கள் என்று" எனது அனுபவம், மற்றும் ஞாபகசக்தியுள்ள விடை அவர்க்குத் திருப்தியளித்ததுபோல் தோன்றினாலும், அவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்,


"நாங்கள் செட்டிநாட்டு உணவு வகைகளிலிருந்து அரிசிக்கு வந்தோம், இப்போது அரிசியிலிருந்து எங்கள் உரையாடல் நகைகளுக்குத் திரும்புகிறது, அரிசி பற்றிய உங்கள் சந்தேகம் அநேகமாகத் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்" என்றார் ஓர் பெருமிதத்துடன்.
ஆனால் நானோ அவரை மேலும் பேசவைக்க வேண்டும் என்ற ஆவலால் எனது புதிய சந்தேகமொன்றைக் கேள்வியாகத் தொடுத்தேன்.

"இல்லையில்லை அரிசி பற்றி எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன, தாங்கள் தயவுசெய்து அவற்றைத் தீர்த்து வைக்கவேண்டும்" என்றேன். "சரி கேளுங்கள் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். "சரி கவிஞர்கள் பாடல்கள் எழுதும்போது தனியே 'சோறு' என்று எழுதாமல் ஏன் குறிப்பிட்டு(specific) 'நெல்லுச் சோறு' என்று எழுதுகிறார்கள்? உதாரணமாக; கண்ணதாசன் அவர்கள் "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய்மணக்கும் கத்திரிக்கா" என்றும், கங்கை அமரன் அவர்கள் "நிதமும் நெல்லுச் சோறாக்கி, நெத்திலி மீனும் கொழம்பாக்கி, மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்" என்று எழுதும் போதும், 'நெல்லுச்சோறு' என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனித்தீர்களா? நெல்லுச்சோறு என்ற வார்த்தை 'சந்தத்திற்காக அல்லது எதுகை மோனைக்காக' பயன்படுத்தப் பட்டுள்ளதா? "எங்களூரில்(இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல்(ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றார்...

(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், அக்டோபர் 26, 2010

நாடுகாண் பயணம் - அங்கோலா


நாட்டின் பெயர்:
அங்கோலா 

முழுப்பெயர்:
அங்கோலாக் குடியரசு 

அமைவிடம்:
ஆபிரிக்கா 

தலைநகரம்:
லுவாண்டா 
நாட்டு எல்லைகள்:
- வடக்கு: கொங்கோ ஜனநாயகக் குடியரசு.
- தெற்கு: நமீபியா  
- கிழக்கு: சம்பியா 
- மேற்கு: அத்திலாந்திக் சமுத்திரம் 

நாட்டின் பரப்பளவு:
1,246,700 சதுர கிலோமீற்றர்கள்


சனத்தொகை:
18,498,000 (2009 மதிப்பீடு)

நாணயம்:
கிவான்சா 

நாட்டு மொழி:
அலுவலக மொழி - போர்த்துக்கேய மொழி
தேசிய மொழிகள் - கொங்கோ, சொக்வீ ,
வட உம்புண்டு, தென் உம்புண்டு.

அரசாங்கமுறை:
ஜனாதிபதியால் ஆளப்படும் குடியரசு.

ஜனாதிபதி:
ஜோஸ் எடுவார்டோ டொஸ் சண்டோஸ்.

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
௦௦-244

சமயங்கள்:
93,5 % ரோமன் கத்தோலிக்கர்
4,7 % பழமைவாத இயற்கையியல் சமயம்,
0,6 % முஸ்லீம்கள்,
0,9 % அக்நோஸ்,
0,2 %  நாத்தீகர் 


கல்வியறிவு:
67,4%

ஆயுட்காலம்:
47 வருடங்கள் 

பிரதான வருமானம் தரும் தொழில்துறை:பெற்றோலிய ஏற்றுமதி.


ஏற்றுமதிப்பொருட்கள்: வைரக்கற்கள், தங்கம், செப்பு.


கனியவளங்கள்: பெற்றோலியம், தங்கம், செப்பு.


வரலாற்றுக் குறிப்பு: 400 வருடங்களுக்கு மேலாக(1575 தொடக்கம்) போர்த்துக்கல்லிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது, சுதந்திரமடைந்த 1975 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டுவரை உள்நாட்டுப் போரால் சீரழிந்தது. உலகின் பெரிய நாடுகள் வரிசையில் 23 ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித்தரும் தகவல்கள்/தரவுகள் : 

  • குழந்தைகள் இறப்பு வீதம் அதிகமுள்ள நாடு. 1000 பிறப்புகளில் 130 மரணங்கள்.
  • ஆபிரிக்கக் கண்டத்திலேயே அதிகளவில் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2 ஆவது இடத்தில் இருந்தாலும், உலகிலுள்ள வறிய நாடுகளில் 2 ஆவது இடத்திலும், ஆபிரிக்காவிலுள்ள வறிய நாடுகளில் 44 ஆவது இடத்திலும் உள்ளது.
  • 27 வருட உள்நாட்டு யுத்தத்தால் 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
  • மனித உரிமைகளை மதிக்காத நாடு.
  • ஊழல், வறுமை, லஞ்சம் தலைவிரித்தாடுகின்ற நாடுகளுள் ஒன்று.
  • ஊழல் நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது.
  • பழங்கள்(விசேடமாக வாழைப்பழம்), கோப்பி, போன்றவற்றை ஆபிரிக்க நாடுகளுக்கு அள்ளி வழங்கிய விளை நிலங்கள் 'கண்ணிவெடிகளால்' நிரம்பி வழிகின்றன.
  • ஆபிரிக்க நாடுகளுக்கு பெருமளவில் உணவுப்பொருட்களை ஏற்றுமதிசெய்த நாடு, இன்று தனது உணவுத்தேவைக்காகத் தென்னாபிரிக்காவிடமும், போர்த்துக்கல்லிடமும் 'கையேந்துகிறது'



ஞாயிறு, அக்டோபர் 24, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 6

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது


உலகில் ஒரு மிகச்சிறிய நாட்டில், சுமார் 50 லட்சம் மக்கள் அவர்களது நாட்டில், நிலத்திற்கடியில் ஒரு சொட்டுக் குடிநீர்கூட இல்லாத சூழலிலும், தமது திறமைகளைப் பலவழிகளிலும் பயன்படுத்தித் தண்ணீரைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர், அந்நாடு எது? என்ற கேள்வியுடன் கடந்த வாரக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்திருந்தேன். உங்களில் பலர் அல்லது ஒரு சிலரேனும் விடையைக் கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை சிங்கப்பூர் என்பதுதான்.
சரி, சிங்கப்பூரில் நிலத்திற்கடியில் ஒருசொட்டுக் குடிநீர்கூட இல்லாத சூழலில் அங்கு வாழும் சுமார் 50 லட்சம் மக்கள் குடிநீருக்கு என்ன செய்கின்றனர்? அவர்கள் பருகும் குடிநீர் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது? இக்கேள்விகளுக்கான விடைகளையே இவ்வாரமும், எதிர்வரும் வாரத்திலும் பார்க்க இருக்கிறோம்.


சிங்கப்பூர் மக்கள் குடிநீரை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று ஆய்வு செய்வதற்கு, சிங்கப்பூர் என்ற நாட்டைப் பற்றியும், அந்நாட்டின் வரலாறு பற்றியும் ஓரளவு நாம் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். நமது 'அந்திமாலையில்' ஒவ்வொரு வாரமும் 'நாடுகாண் பயணம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு நாட்டைப் பற்றிய தகவல்களையும், ஓரளவு விரிவாகப் பார்த்து வருகிறோம். அந்த நாடுகளின் வரிசையில் 'சிங்கப்பூரும்' நிச்சயமாக இடம்பெறும் என்ற காரணத்தால் இக்கட்டுரையில், சிங்கப்பூரைப் பற்றி விரிவாகக் கூறாது, மிகவும் சுருக்கமாக ஆராயவுள்ளேன்.


சிங்கப்பூர் பற்றி நம் ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிட்ட தொகையினரான தமிழர்களுக்கும் தெரிந்ததெல்லாம், சிங்கப்பூர் ஒரு பணக்கார நாடு, அது ஒரு மிகச்சிறிய நாடு, அது ஒரு சுற்றுலா நாடு, அங்கு சுத்தமான தங்கநகை வாங்கலாம், அங்கு தமிழர்கள் வாழ்கின்றனர், அங்கு இந்தியக் கலாச்சாரப் பொருட்களிலிருந்து, கைவினைப் பொருட்கள்வரை வாங்கலாம் போன்ற தகவல்களே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் சிங்கப்பூரின் வரலாறோ, அதன் புவியியல் அமைவிடம் பற்றியோ பலரும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு.


நான் பாடசாலையில் படித்த காலத்தில், பெரியவர்கள் பேசுவதை ஆர்வமாகக் கேட்கும் பருவத்தில், அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்டதெல்லாம், "சிங்கப்பூர் என்பது எமது யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பைக் கொண்ட ஒரு சிறிய நாடு என்பதாகும்" இதில் "யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பு" என்ற கருத்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில் யாழ்ப்பாண நகரின் நிலப்பரப்பு 20,2 சதுர கிலோமீற்றர்களாகும், ஆனால் சிங்கப்பூரின் நிலப்பரப்பு 710,2 சதுர கிலோமீற்றர்கள். சிலவேளை புவியியல் 'அறியாமை' காரணமாக யாழ்மக்களில் சிலர் "சிங்கப்பூர், யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது" எனக் கூறியிருப்பின் அது ஓரளவுக்கேனும், ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். ஏனெனில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பரப்பு 1025 சதுர கிலோமீற்றர்கள். இது சிங்கப்பூரின் நிலப்பரப்பிலிருந்து 314,8 சதுர கிலோமீற்றர்கள் அதிகமானதாகும். சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பரப்பளவைப் பற்றித் துல்லியமாகத் தெரியாத எவரேனும் சிங்கப்பூர் நாடு, யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது என்று கூறினால் அதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.
(அடுத்த வாரமும் தொடரும்)    
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், அக்டோபர் 21, 2010

திருமண வாழ்த்துக்கள்


கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 5

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தான் செய்வது ஒரு திருட்டு என்பதையும், தவறு என்பதையும் அறியாத கொலம்பஸ், தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும், காற்று வீசிய திசையை நோக்கிப் படகானது நீரைக் கிழித்துக்கொண்டு நகர ஆரம்பித்தது. அவன் கையிலிருந்த துடுப்பை உபயோகிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்த அளவிற்கு வேகமாக படகு பயணத்தைத் தொடர்ந்தது. கொலம்பஸ் தன் கையிலிருந்த துடுப்பைப் படகின் ஓரமாக வைத்தான். காற்று வீசும் வேகத்திற்கேற்ப படகும் அலைகளில் ஆடி, ஆடித் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அவனுக்கோ அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவனிடமிருந்து மெல்ல, மெல்ல விடைபெறும் கடற்கரையையும், அவனைக் கைநீட்டி வரவேற்கும் 'பல்மாரியா' தீவையும் மாறி, மாறிப் பார்த்தான். அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு. இந்த இனிய தருணத்தைக் கொண்டாடத் தன் நண்பன் 'அன்டோனியோ' அருகில் இல்லாததை நினைத்தான். இந்த உற்சாகப் பயணத்தில் பங்கு கொள்ளாமல், 'பயந்தாங்கொள்ளியாக' ஓடிப்போய்விட்ட தன் நண்பனை நினைக்கையில் ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் 'பரிதாப உணர்வும்' அவனுக்கு ஏற்பட்டன.

படகானது ராட்சதப் பேரலைகளுக்கு நடுவே, மிதந்து சென்றுகொண்டிருந்தது. இடையிடையே தன் கையிலிருந்த துடுப்பால் வலித்துக் கொண்டான். அவனது மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. படகானது இப்போது அவன் எதிர்பார்த்த 'பல்மாரியா' தீவு இருக்கும் திசையில் செல்லாமல், எதிர்ப்பக்கமாக உள்ள 'லிகுரியான்' பெருங்கடலை நோக்கிச் சென்றது. அவன் பலங்கொண்டமட்டும் துடுப்பால் வலித்துப் படகைத் தான் விரும்பிய திசைக்குச் செலுத்த முயற்சித்தான். அந்தகோ! பெருங்காற்றுடன், மோதிய ராட்சதப் பேரலைகளுடன், பத்து வயதுச் சிறுவனால் போரிடமுடியுமா என்ன? அவன் நினைத்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. படகை தனது விருப்பபடி தீவை நோக்கியோ, அல்லது தான் புறப்பட்ட கடற்கரை நோக்கியோ திருப்புவது நடவாத காரியம் என்பதைக் கொலம்பஸ் உணர்ந்து கொள்வதற்கு வெகுநேரம் எடுத்தது. ஆனால் அதை அவன் உணர்ந்து கொள்வதற்கிடையில் அவனது சிறிய படகு பெருங்கடலின் எதிர்முனையிலுள்ள 'பிரெஞ்சுக்' கடற்பகுதிக்கு வந்துவிட்டது.

அவன் தான் எடுத்து வந்திருந்த சிறிய பாய்மரமும், பாயும் தனது பயணத்திற்கு முற்றிலும் உதவாத பொருட்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டான். அலைகள் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கின. இப்போது வானம் கறுக்கத் தொடங்கியிருந்தது, மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவனைப் பசியும், தாகமும், கூடவே அவன் வாழ்வில் 'முதற்தடவையாகப்' பயமும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தன. படகானது பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இங்கும், அங்குமாக சென்றுகொண்டிருந்தது. இப்போது அவனுக்குத் தனது அன்னையின், சகோதரர்களின் நினைவு எழுந்தது. கூடவே, கடற்கரைக்குச் செல்வதைக் கண்டிக்கும் அவனது தந்தையின் நினைவும் வந்து பயமுறுத்தியது.
இப்போது மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. அவன் தெப்பமாக நனைந்துவிட்டான். இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவனுக்குக் கடலே காட்சியளித்தது. மிகத்துணிவோடு பயணத்தை ஆரம்பித்தவனை, வானின் கருமை நிறமும், ராட்சதப் பேரலைகளும், திசைதெரியாமல் அலையும் அவனது சிறிய படகும் பயமுறுத்த ஆரம்பித்தன. தன்னைக் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தாவது ஒரு படகு வராதா? என்று எண்ணி ஏங்கத் தொடங்கினான்.

இரண்டு மணிநேரத் தவிப்பின் பின்னர், அவனது எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், 'பிரெஞ்சுக்' கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த 'மொனாக்கோ' நாட்டு மீனவர்கள், நடுக்கடலில் தன்னந் தனியாக அலைந்து கொண்டிருக்கும், இச்சிறுவனின், மிகச்சிறிய படகை நோக்கித் தமது படகைத் திருப்பி வந்தனர்.
அவர்களது படகு கொலம்பஸின் படகை அண்மித்ததும், படகிலிருந்தவர்கள் தாங்கள் கண்ட காட்சியால் திகைப்படைந்தனர். தனியொரு சிறுவன், சிறிய படகில் குளிரால் விறைத்து, நடுங்கிய வண்ணம், அலைகளின் இழுப்பிற்கேற்ப அலைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தமாக அவனை நோக்கிக் குரலெழுப்பு முன்னரே சிறிய படகிலிருந்து, அவர்களை நோக்கி பின்வரும் வாசகங்கள் அலைகள் ஊடாக மிதந்து வந்தன. "எனது பெயர் கொலம்பஸ், நான் கிறிஸ்தோபர் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் ஜெனோவா நாட்டில் 'போட்டோ அண்டிகோ' கிராமத்தைச் சேந்தவன், நான் ஆபத்தில் இருக்கிறேன், எனக்கு உதவுங்கள்"
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், அக்டோபர் 20, 2010

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்

  • ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
  • உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
  • ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
  • நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
  • நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.

பி.கு.:
எனது பொன்மொழித் தொகுப்பைப் பாராட்டிய அனைத்து வாசக உள்ளங்களுக்கும், என் உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன் சி.சக்திதாசன்

செவ்வாய், அக்டோபர் 19, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 5


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

என்னது! கனடாவில் நெல்விளைகிறதா? என்றேன் நான் ஆச்சரியம் தாங்க மாட்டாதவனாக,   அவர் தொடர்ந்தார், கனடா உட்பட வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் நெல் விளைகிறது. ஆனால் ஆசிய நாடுகளைப் போல் பெருமளவில் அல்ல. இந்நாடுகளில் கோடைகாலம் மூன்று மாதங்களுக்குக் குறைவாக இருப்பதாலும், இரவில் குளிர் அதிகமாக இருப்பதாலும் குறிப்பிடத்தக்க அளவில் நெல் விளைவிக்கப் படவில்லை. அத்துடன் மேற்கத்தைய நாட்டவர்களின் உணவுகள் பெரும்பாலும் 'கோதுமை' சார்ந்ததாக இருப்பதாலும், கோதுமையும் அது போன்ற ஏனைய தானியங்களும் குளிரைத் தாங்கி வளரும் என்பதாலும் இவர்கள் கோதுமையை அதிகளவில் விளைவிக்கிறார்கள். அத்துடன் இவர்களிடம் 'அரிசிக்கு' போதுமான சந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் நெற்செய்கையில் போதிய ஆர்வம் காட்டவுமில்லை என்று முடித்தார் திரு.பழனிச்சாமி அவர்கள்.
அப்படியானால் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலோ, கனடாவிலோ 'பாசுமதி' அரிசி விளைகிறதா என்றேன் விடாப்பிடியாக. அவர் தொடர்ந்தார், உங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறவேண்டியிருக்கிறது. 'பாசுமதி' அரிசி என்பது இந்தியாவின் பூர்வீகத் தானியங்களில் ஒன்று. இந்த பாசுமதி நெல் வகையானது இந்திய சீதோஷ்ண நிலையிலேயே நன்றாக விளையும் தன்மை கொண்டது, இருப்பினும் இந்திய மண்வகைகள், காலநிலை போன்றவற்றைக் கொண்ட பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பாசுமதி நெல் விளைகிறது. ஆனால் 'பாசுமதி' அரிசியின் தாயகம் என்றால் அது இந்தியாதான், அதுமட்டுமல்ல உலகத்தோர் அனைவரும் உச்சரிக்கும் 'பாசுமதி' என்ற பெயர்கூட இந்தியாவின் தொன்மையான மொழியாகிய சம்ஸ்கிருத மொழிச் சொல்லாகும். சமஸ்கிருதத்தில் 'பாசுமதி' என்றால் 'வாசனை மிக்கது' என்று அர்த்தம். என்று ஒரு குட்டிப் பிரசங்கத்தையே நிகழ்த்தினார் அந்தப் பெரிய அனுபவசாலி.
சரி இன்றைய உலகில் மிகவும் விலைகூடிய அரிசி என்று 'பாசுமதியைத்தான்' கூறுவீர்களா? என்றேன் அவரிடமிருந்து மேலதிகமாக அறிவைப் பெறும் நோக்கத்துடன்.
அவர் தொடர்ந்தார் , "இன்றைய இருபதாம் நூற்றாண்டில் உலகில் ஏறக்குறைய 40000 அரிசியினங்கள் அல்லது நெல் இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரேசில், மெக்சிக்கோ நாடுகளில், காடுகளில் இயற்கையாகவே விளையும்
'காட்டு அரிசி'(wild rice)
'காட்டு அரிசி'(wild rice) என்றழைக்கப் படும் அரிசியே உலகில் விலைகூடிய அரிசியாகும், காரணம் ஒரு கிலோ பாசுமதி அரிசியின் சர்வதேசச் சந்தை விலை ஏறக்குறைய 3 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட 'காட்டு அரிசியின்' விலை ஒரு கிலோவுக்கு இன்றைய சர்வதேசச் சந்தை நிலவரப்படி, ஏறக்குறைய 20 அமெரிக்க டொலர்களாகும்" என்றார்.
உங்களுடைய தகவல்கள் என்னைத் திகைப்பும், அளவுக்குமீறிய ஆச்சரியமும் கொள்ள வைக்கின்றன என்றேன் நான். "எதனால்? என்றார் அவர், "உலகில் அரிசியில் நாற்பதினாயிரம் வகைகள் என்ற தகவல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது, அதேபோல் ஒரு கிலோ 'காட்டு அரிசியின்' விலை இலங்கை ரூபாயில் 2200 என்ற தகவல் என்னைத் திகைப்படையச் செய்கிறது" என்றேன். "இதில் எந்தவித திகைப்பும் கொள்ளத் தேவையில்லை, உலகில் எந்தப் பொருள் அருமைத் தன்மையாகக் கிடைக்கிறதோ அது மிகவும் விலை கூடியதாக இருப்பது இயற்கைதானே? தங்கத்தைவிட மிக அருமையாகக் கிடைக்கும் 'பிளாட்டினத்தின்' விலை அதிகம் தானே? என்று தனது கருத்திற்கு வலு சேர்த்தார்.

(அடுத்த வாரமும் தொடரும்)

நாடுகாண் பயணம் - அண்டோரா


நாட்டின் பெயர்:
அண்டோரா

முழுப்பெயர்:
அண்டோரா சிற்றரசு

அமைவிடம்:
ஐரோப்பா

தலைநகரம்:
அண்டோரா லா வெல்லா (ஐரோப்பாவிலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் தலைநகரம், 1023 மீற்றர் உயரத்தில் உள்ளது)

நாட்டு எல்லைகள்:
- வடக்கு: பிரான்ஸ்
- தெற்கு:  ஸ்பெயின்
- கிழக்கு: பிரான்ஸ்
- மேற்கு: ஸ்பெயின்







நாட்டின் பரப்பளவு:
468 சதுர கிலோமீற்றர்கள்


சனத்தொகை:
 83,888 (2009 மதிப்பீடு)

நாணயம்:
யூரோ

நாட்டு மொழி:
காத்தலான்

அரசாங்கமுறை:
பாராளுமன்ற ஜனநாயகம், மற்றும் இருநாட்டுச் சிற்றரசு அதிகாரம்.

பிரதமர்:
யாமு பார்த்துமியூ

நாட்டுத் தலைவர்கள்:
பிரான்ஸ், ஸ்பெயின் ஒப்பந்தப்படி, பிரான்ஸ் நாட்டு  ஜனாதிபதியும், ஸ்பெயினின் அர்ஜேல் மாகாண பிஷப்பும் சம உரிமையுள்ள இளவரசர்கள்.

தற்போதைய கூட்டுறவு இளவரசர்கள் : ஸ்பெயின் சார்பாக: ஜோன் என்றிக் விவஸ் சிசிலியா,
பிரான்ஸ் சார்பாக : பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோசி

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
௦௦-376

நாட்டு இனத்தவர்கள்:
அந்தோறான் 36,6 %
ஸ்பானியர்கள் 33%
போர்த்துக்கேயர்கள் 16,3 %
பிரெஞ்சுக்காரர்கள் 6,3 %
ஏனையோர் : 7,8 %

சமயம்:
90% ரோமன் கத்தோலிக்கர், 10% அங்கிலிக்கன், புரட்டஸ்தாந்து திருச்சபைகள், முஸ்லீம் சமயத்தவர். சிறிய அளவில் இந்து, பஹாய், மற்றும் யூதர்கள்.

கல்வியறிவு:
100%

ஆயுட்காலம்:
83.5 வருடங்கள்

பிரதான வருமானம் தரும் தொழில்துறை:
சுற்றுலாத்துறை. ஒரு வருடத்தில் ஒரு கோடியே 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள்.

ஏற்றுமதிப்போருட்கள்:
காய்கறிகள், புகையிலை, சுருட்டு,சிகரெட்டு, செம்மறியாடு, கம்பளி, தளபாடங்கள், மின்சாரம், மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீர்.

கனியவளங்கள்:
சுத்தமான குடிநீர், இரும்பு, ஐம்பொன், ஈயம், காரீயம்.
நாட்டின் பெருமைகள்:
உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு. 100% பேரும் வேலைசெய்கின்றனர். நாட்டுச் சனத்தொகையில் 100% பேரும் கல்வியறிவுடையவர்கள், உலகில் அதிக ஆயுட்காலமுள்ள மக்கள் இந்நாட்டில் உள்ளனர். சராசரி ஆயுட்காலம் 83.5 வருடங்கள்.

வரலாற்றுக் குறிப்பு:
1278 ஆம் ஆண்டு ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளால் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்லாத ஆனால், 'யூரோ' வை நாணயமாகக் கொண்டுள்ள நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் நாடு.

நினைவில் நின்ற பொன்மொழிகள்



தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்

  • எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
  • வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
  • நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
  • நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
  • ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்
  • தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
  • அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
  • பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 5 -

நீரின்றி அமையாது உலகு

இன்னும் இருபது வருடங்களில் இவ்வுலகிலுள்ள மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தினால் படப்போகும் துன்பத்தைப் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். ஆனால் இவ்வுலக மக்களில் பெரும்பான்மையானோர் இதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப் படாதது ஏன் என்ற கேள்விக்கு விடை என்னவாக இருக்கும்? அதற்கு விடை ஒன்றே ஒன்றுதான் அதாவது, இன்றைய உலக வாழ்க்கையானது பரபரப்பு நிறைந்தது, மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள், எதைநோக்கி? ஆடம்பரங்களையும், சொகுசு வாழ்க்கையையும் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு, அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பூமியைப் பாடாய்ப் படுத்தப் போகும் 'தண்ணீர்ப் பஞ்சத்தைப்பற்றிக்' கவலையில்லை, அவர்களுடைய கவலையெல்லாம் 'இன்னும் ஐம்பது வருடங்களில் இவ்வுலகை ஆட்டிப்படைக்கப் போகும்' பெட்ரோலியத் தட்டுப்பாட்டிற்கு என்ன தீர்வு? என்பதுதான். வேடிக்கையாகத் தெரியவில்லையா? உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமான தண்ணீரைப் பற்றிக் கவலைப்படாத இந்த உலகம், ஆடம்பரப் பொருளாகிய வாகனங்களுக்குப், பெட்ரோல் இல்லாமல் போய்விடப் போகிறதே என்று கவலைகொள்கிறது. பெற்றோலியத்திற்கு மாற்றீடாக, இயற்கை எண்ணைகள், தானிய எண்ணைகள், காய்கறி எண்ணைகள் போன்றவற்றை உபயோகிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சியில் அறிவியல் துறையினர் அல்லும்,பகலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் சம்பந்தமாக ஆராய்ச்சிகளோ, பயனுள்ள திட்டங்களோ தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பாலான நாடுகளில் மக்கள் தண்ணீர்ப்பஞ்சம் இவ்வுலகைப் பயமுறுத்துவதைப் பற்றிக் கவலைகொள்ளாது இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:


  1. அறியாமை அல்லது போதிய உலக அறிவின்மை.
  2. தமது குடிநீர்க் கிணறுகளில் அல்லது நீர்நிலைகளில் இருந்து கிடைக்கும் நீரானது இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு அப்படியே கிடைக்கும் என்று நம்புவது.
  3. தண்ணீர், தமது நாட்டில் மிகவும் மலிவாகக் கிடைப்பதால் / இலவசமாகக் கிடைப்பதால்  அது ஒரு அருமைத் தன்மையற்ற (இயற்கையாகக் கிடைக்கின்ற) வளம் என்ற நம்பிக்கை.
  4. உலகின் ஏனைய பகுதி மக்களை வாட்டுகின்ற பிரச்சனை, தமக்கு ஏற்படாதவரை அது தமது பிரச்சனை அல்ல என்று எண்ணுகின்ற 'சுயநலப் போக்கு'


இன்னும் காரணங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இம்மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை, உலகின் தண்ணீர்த் தேவையில் 26% த்தை நிறைவு செய்கின்ற உலகின் 173 முக்கிய நதிகளில் பிரதானமானவையாகக் கருதப்படும், நைல்நதி, அமேசான் நதி, சிந்துநதி, கங்கைநதி, யாங்சிநதி, மஞ்சள்நதி போன்றவை முன்னெப்போதும் இல்லாதவாறு மாசடைந்து விட்டன. இந்நதிகளை குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு நதிகள் மாசடைவதற்குக் காரணமான விடயங்களைத் தவிர்ப்பதற்கோ, தடுப்பதற்கோ முன்வராத அரசுகள், பரஸ்பரம் அண்டை நாடுகளையும், பெரிய தொழிற்சாலைகளையும் குற்றம் சாட்டித் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால் பாதிக்கப் படுவது, பாதிக்கப் படப்போவது சாதாரண அடித்தட்டு மக்களே.
இவ்விடத்தில் உங்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தைக் கூறியே ஆகவேண்டும், உலகில் ஒரு மிகச்சிறிய நாட்டில் சுமார் 50 லட்சம் மக்கள், அவர்களது நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு சொட்டுக் குடிநீர் கூட இல்லாத சூழலில், தமது திறமைகளைப் பலவழிகளிலும் பயன்படுத்தித் தண்ணீரைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். அந்நாடு எது? என்று சற்றுச் சிந்தியுங்கள்.
(அடுத்த வாரமும் தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்
  • மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
  • ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
  • பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
  • மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 4

கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:
7. கர்ப்பவதியாக இருக்கும் தாய்க்கு, போதிய சத்துள்ள உணவுகள் அவசியம் என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம், எந்த அளவுக்கு சத்துள்ள உணவுகள் அத்தியாவசியமானதோ, அதேயளவு கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியமாகும். ஒரு சாதாரண மனிதன் உறங்கும்போது, அவனது மூளையில் உள்ள பல கலங்கள்(செல்கள்) புதுப்பிக்கப் படுவதோடு, உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள கலங்கள் பழுது பார்க்கப் படுவதாகவும், இதானால் சராசரியாக உழைக்கின்ற ஒரு மனிதனுக்கு 8 மணித்தியாலங்கள் உறக்கம் அவசியம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். தனது கருவில் ஒரு குழந்தையைச் சுமக்கும் தாயின் விடயத்தில் இது 8 தொடக்கம் 10 மணித்தியாலங்களாக அமைதல் நலம் என்பது மருத்துவ உலகினரின் கணிப்பாகும். நம் ஈழத்தமிழரிடையே ஒரு மரபுவழி நம்பிக்கை நிலவுகிறது, அதாவது "கர்ப்பவதியான தாய் அதிகம் தூங்கினால், கருவிலுள்ள குழந்தையின் தலை பெருத்துவிடும்" இது பிரசவத்தின் போது மிகவும் சிக்கலை
ஏற்படுத்தும் என்பதே அந்த நம்பிக்கையாகும், ஆனால் இது மருத்துவ உலகினரால் உறுதிசெய்யப்படாத, 'தவறான' நம்பிக்கையாகும். ஆனால், எமது மக்களால் அடிக்கடி உபயோகிக்கப்படும் வாசகமாகிய "கர்ப்பிணிப் பெண்ணைத் திடீரென்று (தூக்கத்திலிருந்து) எழுப்பக் கூடாது, அவளது கர்ப்பப் பையில் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும், பிரம்மனின் படைப்புத் தொழில் இதனால் பாதிப்படைகிறது" என்ற வாசகம் மருத்துவ உலகினரின் கருத்தோடு ஒத்துப் போகிறது. அதாவது 'பிரமன்' 'படைப்புத் தொழில்' என்ற விடயங்களில் நம்பிக்கையில்லாத விஞ்ஞான உலகம் கூட 'தூங்குகிற கர்ப்பிணியைத்' தொந்தரவு செய்தல் ஆகாது என்ற விடயத்தில் சாதாரண மக்களின் நம்பிக்கையோடு உடன்படுகிறது.

-அடுத்த வாரமும் தொடரும்- 

வெள்ளி, அக்டோபர் 15, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
எமது கிழக்குச் சீமையின் நாயகி தன் அண்ணனுக்கும், மண்ணுக்கும், மாமரத்துக்கும் விடைகூறி 'வாழ்க்கைப்பட்டு' புகுந்த வீட்டிற்குச் சென்ற நெகிழ்வான காட்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். அதில் மண்ணுக்கு அடுத்த படியாக அவள் 'மாமரத்திற்கு' விடையளித்தமைக்கான காரணங்களையும் சிறிது ஆய்வு செய்வோம். முக்கனிகளில் ஒன்று 'மாம்பழம்', தமிழ் மக்களின் வீடுகளுக்கருகில் அல்லது காணிகளில் மண் வளமுள்ள பெரும்பாலான நிலங்களில் இந்த மாமரம், பரிவோடு வளர்க்கப்படுகிறது.(தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த சில மரங்களைப் பற்றி எதிர் வரும் அத்தியாயங்களில் பார்க்கவுள்ளோம்) இம்முக்கனிகளில் வாழையானது, கிணற்றுக்கு அருகில் அல்லது தோட்டங்களில் வளர்க்கப் படுவது. பலாமரமானது தமிழ் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் வளருகின்ற ஒரு மரமல்ல. ஆகவே மாமரம் மட்டுமே எந்த மண்ணாக இருப்பினும், எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் ஒரு கனிதரும் மரமாகும். 
இம்மாமரத்தைத் தமிழ் மக்கள், தாம் குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகிலேயே தமது செல்லப் பிராணிகளுக்கு இணையாகப் பாசத்தோடு வளர்ப்பர்(இதில் நான் குறிப்பிடுவது புலம்பெயர்ந்த தமிழ் மக்களையல்ல என்பதை அறிவீர்கள்) இவ்வாறு மாமரம் வீட்டிற்கு அருகில் வளருகின்ற சூழலில், வளருகின்ற குழந்தையானது, தான் வளர்கின்ற காலப்பகுதியில் அம்மரத்தோடு ஒரு பாச உணர்ச்சியை வளர்த்துக் கொள்கின்றது, மாமரத்தின் ஒவ்வொரு பருவகாலமும் அக்குழந்தையானது ஆண்குழந்தையாக இருப்பினும், பெண்குழந்தையாக இருப்பினும் ரசிக்கின்ற அல்லது மகிழ்கின்ற பருவமாக அமைகிறது. சாதாரண நாட்களில் குழந்தையானது 'ஊஞ்சல்' கட்டி ஆட உகந்த மரமாக' இம்மாமரமே விளங்குகிறது. அதே மாமரம் பூக்கின்ற காலத்தில் சிறந்த நறுமணத்தினால் அயலிலுள்ள அத்தனை பேருக்கும் அறிவித்தல் விடுக்கிறது, "இன்னும் சில நாட்களில் உங்களுக்கு நான் என் 'கைமாறாகக்' காய்கள் தரவுள்ளேன்". என்கிறது.

மாம்பூவின் மணத்தில், மயங்கிநிற்கும் பிள்ளைக்குப் பெற்றோர்கள் கூறுகின்றனர் "மாமரம் காய்க்கப் போகிறது, மாமரத்தில் ஏறி விளையாடுவதைக் குறைத்துக்கொள், மாம்பிஞ்சுகளைப் பறிக்கக் கூடாது, அது மாமரத்திற்கு வலிக்கும்" என்றெல்லாம் கூறி மாமரத்தை ஒரு உயிருள்ள, உணர்வுள்ள பிராணி என்பது போன்றதொரு பிம்பத்தைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றனர். மாமரத்திற்கு வலிக்கும் என்பதை உணர்கின்ற அதே குழந்தை, மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது என்கிற கட்டளையை உதாசீனம் செய்து விடுகிறது.


(அடுத்த வாரமும் தொடரும்)

வியாழன், அக்டோபர் 14, 2010

டென்மார்க்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழா

ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன்
கடந்த இரு வாரங்களாக எமது 'அந்திமாலை' இணையத்திலும், டென்மார்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் எமது நட்பு இணையமாகிய 'இனி' இணையத்திலும், நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் எமது மற்றொரு நட்பு இணையமாகிய 'கலையகம்' இணையத்திலும் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டதுபோல், நான்கு பிரபல எழுத்தாளர்களின் நூல்களை டென்மார்க் வாழ் தமிழ் வாசகப் பெருமக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் சிறப்பான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.10.2010) மாலை தெற்கு டென்மார்க்கிலுள்ள, 'வயன்' (Vejen) நகரில்அமைந்துள்ள Lindetorv மண்டபத்தில் 'இனி' வாசகர் வட்டம் ஒழுங்கு செய்திருந்த 'அமரர்.முல்லையூரான்' நினைவுக்கூடத்தில், நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள பொதுமக்கள், ஐரோப்பாவின் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க் நாடுகளிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளப் பெருமக்கள், கவிஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள், வாசகர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வானது மாலை 3.00 மணியளவில் விழாவில் முக்கிய பங்காற்றிய 'வயன்' நகரப் பெருந்தகைகளின் 'மங்கல விளக்கேற்றலுடன்' இனிதே ஆரம்பிக்கப் பட்டது. வரவேற்புரையை 'இனி' வாசகர் வட்டம் டென்மார்க்கைச் சேர்ந்த கரவைதாசன் அவர்கள் நிகழ்த்தினார்.

பிரபல எழுத்தாளர்
திரு.வ.ஜீவகுமாரன்
அதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் தலைநகரப் பகுதியில் வாழ்ந்துவரும் பிரபல எழுத்தாளரும், வெளிநாட்டவர் நூலகப் பிரிவின் தமிழ்ப்பகுதி ஆலோசகருமாகிய திரு.வ.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய 'யாவும் கற்பனையல்ல' என்ற சிறுகதைத் தொகுதி நூல் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. நூலாசிரியரை சபையோருக்கு அறிமுகம் செய்யும் 'அறிமுகவுரையை'ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அதன் பின்னர் மேற்படி நூலை அறிமுகம் செய்யும் 'மதிப்புரையை' திரு.முரளி அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, நூலாசிரியர் திரு.ஜீவகுமாரன் தனது நூல்பற்றிய ஒரு சிறிய விளக்கவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வாசகரின் மதிப்பீட்டு உரையை 'அந்திமாலையின்' நிர்வாகி திரு.இ.சொ.லிங்கதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அதன் பின்னர் இடம்பெற்ற வாசகரின் கேள்விகளுக்கு நூலாசிரியர் திரு.வ.ஜீவகுமாரன் அவர்கள் தனது அனுபவத்திலிருந்தும், தனது நூலிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பதிலளித்தார். அதன் பின்னர் சபையோருக்கு தேநீர் இடைவேளை விடப்பட்டது.

பிரபல அரசியல் விமர்சகர் திரு.கலையரசன்
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் வாழ்ந்துவரும் நெதர்லாந்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், பிரபல அரசியல் விமர்சகரும், 'கலையகம்' இணையத்தளத்தின் நிர்வாகியுமாகிய திரு.கலையரசன் அவர்கள் எழுதி, முதற்தடவையாக டென்மார்க்கில் வெளியீடு செய்யப்பட்ட 'ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா' என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. மேற்படி நூலையும், நூலாசிரியரையும் சபையோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அறிமுகவுரையை, டென்மார்க், கோர்சன்ஸ் நகரத்தில் வசிக்கும், உளவியல் நிபுணரான
உளவியல் நிபுணர்
திரு.வி. ஸ்ரீ கதிர்காமநாதன்
திரு.வி. ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், மானுடவியலிலிருந்தும், ஆபிரிக்க வரலாற்றிலிருந்தும் பல உதாரணங்களைக் கலையரசனின் நூலோடு ஒப்பீடு செய்து உரையாற்றினார். அதன் பின்னர் நூலுக்கான மதிப்பீட்டுரையை, இங்கிலாந்தில் வாழ்ந்துவருபவரும், 'எதுவரை' இதழின் ஊடகவியலாளருமாகிய திரு.எம். பௌசர் அவர்கள் நிகழ்த்தினார். அதன்பின்னர் வாசகர் உரையை 'அந்திமாலையின்' திரு.இ.சொ. லிங்கதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில், நூலாசிரியருக்கும் தனக்குமிடையிலான 'நட்பு' பற்றியும், 'அந்திமாலைக்கும்', 'கலையகத்திற்குமிடையிலான' நட்பு பற்றியும் பாராட்டிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நூலாசிரியர்களின் 'புத்தகவிற்பனை' இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சபையோருக்கு இராப்போசனம் வழங்கப்பட்டது.

இரவுணவைத் தொடர்ந்து, செவிக்கு உணவு வழங்கும் விதமாக, 8.00 மணியளவில் 'மெல்லத் தமிழ் இனி' என்ற தலைப்பில் சுவையான கவியரங்கம் ஒன்று 'நடிக வினோதன் யோகராஜா' தலைமையில் இடம்பெற்றது. இக்கவியரங்கத்தில் கவிஞர்களான இணுவையூர்.சக்திதாசன், எம்.சி.லோகநாதன், வேலணையூர்.பொன்னண்ணா, கவிதாயினி.சுஜிக்கா மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மூத்த இடதுசாரிக்கவிஞரான.V.T.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் திரு.V.T.இளங்கோவனின் நூலாகிய 'இளங்கோவன் கதைகள்' என்ற நூலும், தமிழறிஞர்.திரு.த.துரைசிங்கம் அவர்களின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்' என்ற நூலும் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது இந்நிகழ்வானது எழுத்தாளர் திரு.ஜீவகுமாரன் மற்றும் ஒல்போ நகரத்தில் வசிக்கும்  'விநோதக் கலைஞர்' திரு.சி.ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கவிதாயினி திருமதி.வேதா இலங்காதிலகம்
இறுதியாக டென்மார்க் ஓகூஸ் நகரில் வசிக்கும் பிரபல கவிதாயினி திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் 'உணர்வுப் பூக்கள்' எனும் கவிதைத் தொகுதி நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்.வேலணையூர் பொன்னண்ணா, திரு எம்.சி.லோகநாதன், திருமதி.சரஸ்வதி ராஜகோபாலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
திருமதி.சரஸ்வதி ராஜகோபாலன்
மேற்படி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்நிகழ்வானது, நள்ளிரவு 11.00 மணிக்கு நிறைவு பெற்றது. ஏனைய கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாதபோதும் சபையோர்கள் அனைவரும் மாலை 3.00 மணியிலிருந்து, நள்ளிரவு 11.00 மணிவரை தமது பெறுமதியான  நேரத்தைக் கலைக்காகவும், இலக்கியத்திற்காகவும் செலவு செய்திருந்தமை பாராட்டத்தக்க சிறப்பம்சமாகும்.

-அந்திமாலைக்காகத் தொகுத்தவர்-
உங்கள் இ.சொ.லிங்கதாசன்