ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
4. தாயின் சிந்தனைகள் அனைத்துமே குழந்தையின் உடல், உள வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதால் தாயானவள் தனது சிந்தனைகள் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், இக்காலப்பகுதியில் தாயானவள் அழுகை, ஏமாற்றம், விரக்தி, கோபம், அதிர்ச்சி, கவலை, வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகளுக்கு உட்படாமல் தன்னைக் காத்துக் கொள்ளல் வேண்டும். இதற்குக் குழந்தையின் தந்தையும், சுற்றத்தாரும் மிகுந்த உறுதுணையாக இருத்தல் சமுதாயக் கடமையாகும். உடல் நலக்குறைபாடுகள் உள்ள குழந்தை பிறப்பெடுப்பதற்கும், வாழ்நாள் முழுவதும் உடல், உள, ஊனத்தோடு வாழும் குழந்தைகள் பிறப்பதற்கும் 75% வரை பிள்ளையின் தந்தையும், சுற்றத்தாரும் காரணமாகிறார்கள். "ஒரு கர்ப்பிணிப்பெண் இச்சமுதாயத்தால் எவ்வாறு நடத்தப்பட்டாள்(பராமரிக்கப் பட்டாள்) என்பதைப் பொறுத்தே, அச்சமுதாயத்தில் அறிவான, பண்பான, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன" என்ற சமுதாயவியல் வல்லுனர்களின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.5. இக்காலப் பகுதியில் தாயானவள் முடிந்தளவு, சமச்சீரான சத்துணவுகளை உண்ணல் வேண்டும். உணவு உண்ணும் விடயத்தில் தனது விருப்பு, வெறுப்புகளை இந்தப் பத்துமாத காலத்திற்காவது தியாகம் செய்தல் வேண்டும். விரிவாகக் கூறின் பெண்ணானவள் சிறுவயதிலிருந்தே சில உணவுப் பதார்த்தங்களைத் தனக்குப் பிடித்ததென்றும், பிடிக்காததென்றும் வகைப்படுத்தியும், பிடித்ததை மட்டுமே உண்பவளாகவும், பிடிக்காததை முற்றுமுழுதாகத் தவிர்ப்பவளாகவும் இருத்தல் கூடும். இத்தகைய செய்கையினால் குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய சில அத்தியாவசியமான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் தாயானவள் பிறக்கப் போகும் தனது குழந்தையின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு குழந்தைக்கு நன்மை பயக்கக் கூடிய உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்ணல் அவசியம்.
6. தாயானவள் ஒருபொழுதேனும் பட்டினியாக இருத்தல் தவிர்க்கப் படவேண்டும். கர்ப்பிணியான ஒரு பெண் பட்டினி கிடக்க நேரிட்டால், அதற்கு அவளது கணவனும், அவள் சார்ந்திருக்கும் குடும்பமுமே முழுப் பொறுப்பாகின்றனர். ஒரு கர்ப்பிணிப் பெண் பட்டினி கிடக்கும் சூழல்களிளெல்லாம், அவளது கருவிலிருக்கும் குழந்தையின் எதிர்காலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி அழிக்கப்படுகிறது. அதன்பின் அவள் பெற்றெடுக்கும் குழந்தையானது, சமுதாயத்திற்கு ஒரு பாரமாக மட்டுமே விளங்கும். அந்தக் குழந்தை ஒருபோதும் நாட்டிற்கோ, வீட்டிற்கோ பயன்தரப் போவதில்லை. இதனாலேயே சமூகத் தொண்டு நிறுவனங்கள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கு முகமாக, அவர்களுக்குச் சத்துணவுகளை வழங்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன.
(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக