வெள்ளி, பிப்ரவரி 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம் சுடும் 
நாண்இன்மை நின்றக் கடை. (1019)
 
பொருள்: ஒருவன் ஒழுக்கம் தவறினால் அத்தவறு அவனுடைய குலப்பெருமையை அழித்துவிடும். ஆனால் ஒருவனிடம் நாணம் இல்லையென்றால் அது அவனுடைய எல்லா நலன்களையும் அழித்துவிடும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

திருப்தியும், பேரின்பமும் எம்முள்ளே எப்போதும் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப் படுவோம்.


*பெரிய + இன்பம்=பேரின்பம்

வியாழன், பிப்ரவரி 27, 2014

"மணியண்ணை ரைட்" புகழ் பாலா திடீர் மரணம்!

1503810_525435464237652_1155255854_nகணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்  நேற்றைய தினம்(26.02.2014) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.  10 ஜூலை 1944 கரவெட்டியில்  பிறந்த இவர் பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.
இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்தவர்.
இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம்  என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி  நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் மேலும்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான் நாணான் ஆயின் 
அறம்நாணத் தக்கது உடைத்து. (1018)
 
பொருள்: பிறர் நாணத் தக்க(வெட்கப்படத்தக்க) பழிச்செயலை ஒருவன் வெட்கப்படாமல் செய்வானாயின், அறம்(தர்மம்) அவனிடம் இருக்க நாணி(வெட்கப்பட்டு) அவனைக் கைவிடும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகழும் போய் விடுகிறது என்பதைச் சில வேளைகளில் நாம் மறந்து விடுகிறோம்.

புதன், பிப்ரவரி 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை 

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால் 
நாண்துறவார் நாண்ஆள் பவர். (1017)
 
பொருள்: நாணத்தை உயிராகக் கொண்டவர்கள் உயிரைக் காக்கும் பொருட்டு நாணத்தை விடமாட்டார்கள். அவர்கள் நாணம் அழியாமல் இருக்க உயிரையே விடும் தன்மை கொண்டவர்கள்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்



கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 102 நாணுடைமை

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலா யவர். (1016) 
பொருள்: மேன்மைமிக்க சான்றோர்கள் தமக்குக் காவலாக நாணமாகிய வேலியைக் கொள்வார்களேயல்லாமல் அகன்ற உலகத்தைக் காவலாகக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.  

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

நட்பு உண்டாவதற்கு அன்பு மட்டும் போதாது. இரண்டு உள்ளங்களுக்கு இடையில் இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.

திங்கள், பிப்ரவரி 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு. (1015)
 
பொருள்: பிறர்க்கு வரும் பழியையும், தமக்கு வரும் பழியையும் ஒன்றாக மதித்து அதற்காக நாணப்படுபவரை உலகத்தார் நாணத்துக்கு உறைவிடம் என்று கூறுவர்.

இன்றைய பொன்மொழி

ஸ்ரீ அன்னை 

ஒருவர் மௌனமாக இருக்கக் கூடிய திறனை மட்டும் வளர்த்துக் கொள்வாரேயானால் அதிலேயே மிகப்பெரிய வலிமை இருக்கிறது.

ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

அணிஅன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. (1014)
 
பொருள்: அறிவு, ஒழுக்கம் நிறைந்த சான்றோர்களுக்கு நாணுடைமை(வெட்கப் பட வேண்டிய விடயங்களுக்கு வெட்கப் படுதல்) அணியாகும். அந் நாணுடைமை இல்லையானால் அவருடைய பெருமிதமான நடை கண்டவர்க்குப் பிணியாகும். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒரு நல்ல நண்பன் உன்னில் பாதியாவான். அவனை உன்னுடைய மூன்றாவது கண் எனலாம்.

சனி, பிப்ரவரி 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

ஊனைக் குறித்த உயிர்எல்லாம்; நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. (1013)
 
பொருள்: உயிர்கள் யாவும் உடம்பைத் தமக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளன. அதுபோலச் சால்பு என்னும் நிறைகுணம் நாணம் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக் களனாகக் கொண்டுள்ளது.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

உண்மையின் ஒளி மிகுந்த பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப் போல் உலகம் முழுவதும் பிரகாசிக்கிறது.

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
 
ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல 
நாண்உடைமை மாந்தர் சிறப்பு. (1012)

பொருள்: உணவும், உடையும், மற்றவையும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாகும். பழி பாவங்களைத் தரும் செயல்களைச் செய்ய நாணுதல் மட்டுமே நன் மக்கட்குச் சிறந்த பண்பாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வாழ்க்கையில் நாம் முன்னேறி, முன்னேறிச் செல்கையில்தான் எமது திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

வியாழன், பிப்ரவரி 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் 
நல்லவர் நாணுப் பிற. (1011)
 
பொருள்: நன்மைக்குரிய நாணமாவது இழிந்த செயல்களைச் செய்வது காரணமாக நாணுதலாம். அஃதன்றி பிற நாணங்கள் அழகிய நெற்றியையுடைய உயர்குல மாதர்க்கு(பெண்களுக்கு) உரியனவாம்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்கு தெளிவாக கண் தெரியும்.

புதன், பிப்ரவரி 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் துஅனையது உடைத்து. (1010)

பொருள்: தம் செல்வத்தை மற்றவர்கள் வாழ்வதற்குக் கொடுக்கும் குணமுடைய செல்வர், சிறிது வறுமையுற்றாலும் அது மழையின்றி வறண்டதுபோலத் துன்பம் உண்டாக்கும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

நண்பர்கள் வாழ்க்கைப் பாதையில் உள்ள தூரத்தை எளிதாக்குகிறார்கள்.

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

அன்புஒரீஇத் தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர். (1009)
 
பொருள்: ஒருவன், சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமல், தானும் அனுபவியாது தன்னையும் அழித்துக் கொண்டு, அறம் செய்யாது தேடிய சிறந்த பொருளைக் கொண்டு போய்ப் பயன் பெறுபவர் பிறராவார்.

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர் 

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவை எனும் மார்க்கத்தை நாடுகிறான்; சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பிரார்த்தனை செய்கிறான்.

திங்கள், பிப்ரவரி 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் துஅற்று. (1008) 
 
பொருள்: வறியவர்க்கு அருகாமையில் வாழ்ந்தாலும் அடுத்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழும் செல்வந்தன் ஏனைய மனிதர்களால் விரும்பப் படாமல் வாழ்வதால் அவனுடைய செல்வம் ஊரின் நடுவே உள்ள நச்சு மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதற்கு ஒப்பானது ஆகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மரியாதை பெறுவதற்கு வழி அதனை முதலில் நாம் அடுத்தவர்களுக்குக் கொடுப்பதாகும்.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
 
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)

பொருள்: வறியவர்க்கு ஒன்றும் கொடுத்து உதவாதவனுடைய செல்வம் மிக்க அழகும், ஆரோக்கியமும் உள்ள ஒருத்தி மணம் செய்து கொடுப்பவரில்லாமையால் கணவன் இன்றித் தனியளாய் முதுமையுற்றது போலப் பலனின்றி அழியும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக  மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும்.

பாலுவின் மரணத்தால் நான் நிலை குலைந்து போய்விடவில்லை - கமல்...!

நமது சினிமாவில் எது நல்ல அம்சம், எது அப்படியல்ல என்பதைத் தெரிந்து வைத்திருந்ததில்தான் பாலுமகேந்திராவின் மேதமை அடங்கியிருந்தது.
புத்திசாலிகள் நிறைந்த ஊரில், அறிவும் ஞானமும் பெற்ற மனிதர் அதிகப்
பயனுள்ளவராக இருப்பார். பாலுமகேந்திரா படித்தவர். அதனாலேயே எங்களுக்குச் சினிமா அறிவு இருக்க வில்லை என்று சொல்லிவிட முடியாது. புதிய ஊடகமாக சினிமா வடிவம் இருந்ததால், நாடகம் மற்றும் இலக்கியத்திலிருந்து பெற்றிருந்த முன் அனுபவத்தை சினிமா என்ற முற்றிலுமான புதிய ஊடகத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்தப் புதிய ஊடகத்துக்கு வேறு வகையான கவர்ச்சி இருந்தது.
சினிமாவின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் அவரவர் துணிகரத்தில், இழப்பில்தான் கற்றுக்கொண்டார்கள் - சில நேரங்களில் மற்றவரின் இழப்பிலும். தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக அப்போது இருந்தவர்கள் அனைவரும், கடும் உழைப்பின் வழியாகவே தங் களை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்போது குருகுலம் போன்ற பயிற்சி முறை இருந்தது. நாங்களும் அதை பின்பற்றினோம்.

பாலுவும் அவரது நண்பர்களும் புனே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பள்ளியில் படித்து வந்தவர்கள். இந்திய சினிமா புதிய காற்றைச் சுவாசித்தது மட்டுமின்றி, அந்தக் காற்று இந்தியச் சினிமாவையே மாற்றியது. அப்போ திருந்த சினிமா தொழில்துறை தங்களுக்குத் தகுதியானதல்ல என்று பாலுவின் தலைமுறை மாண வர்களில் சிலர் நினைத்தார்கள். ஏனெனில், அவர்கள் சர்வதேசத் தரத்திற்குப் பயிற்சிபெற்றவர்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் அல்ல பாலுமகேந்திரா. அவருக்குத் தமிழராக இருப்பதில் பெருமை இருந்தது. தமிழ் சினிமாவைக் கேலி செய்யாமல், தனது நன்றியறிதலைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

நன்கு படித்த ஒரு மனிதன், கிராமத் துக்குத் திரும்புவதை போல அவர் திரும்பினார். அவருக்கு எந்த அம்சம் வலுவானது, எது தவறானது என்பது முழுமையாகத் தெரிந்திருந்தது. அவரது கணிப்பு சரியாகவும் இருந்தது. அப்படித் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

வித்தியாசமான பாணி
நாங்கள் பிரபலமாக ஆவதற்கு முன்பே, மிகுந்த தன்னம்பிக்கை உள்ள இளைஞனாக அவரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. "யார் இந்த ஆள்? இவரது எழுத்து நடையே வித்தியாசமாக உள்ளது" என்று கேட்டிருக்கிறேன். அவர் சம்பிரதாயமான முறையில் வேலை செய்யவில்லை.

ஷாட்களுக்கு அவர் ஒளியூட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. புகழ்பெற்ற இயக்குநர் ராமு காரியத்துடன் பணியாற்றப் போகிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்துடன் சேதுமாதவனோடு சேர்ந்து பணிபுரியலாம் என்றும் சொன்னார்கள்.

இயக்குனர் சுகதேவ் அலுவாலியா போன்றவர்கள், அவரது செட்டுக்கு வருவதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந் திருக்கிறேன். சுகதேவ் எனக்கு ஹீரோவைப் போன்றவர். அவரது விளம்பரப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தனிப் பாணி கொண்டவை அவை. பாலுவுக்கு எப்படியான சகாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நானும் அவரது நண்பனாக மாறிவிட்டேன்.

பாலு முதலில் ஒரு படத்தை இயக்க விரும்பியபோது, நான்தான் ஹீரோ என்று சொன்னார். வெறும் நட்பார்ந்த உறுதிமொழியாக அதைச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், கோகிலா படம் எடுத்தபோது அவர் வார்த்தையை நிரூபித்தார்.

நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த கனவு நனவானது. நாங்கள் அணியாகச் சேர்ந்து வேலையும் செய்தோம். நான் நடித்த பல படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

நாங்கள் தொடர்ந்து சந்தித்தோம். சினிமா பற்றிப் பேசினோம். கிசுகிசுவாகக்கூட ஒரு படம் ஏன் கிளாசிக்காக ஆகவில்லை என்பதைத்தான் பேசுவோம். தனிப்பட்ட நபர்களைப் பற்றிப் பேசியதே இல்லை.

நிறைய நினைவுகள்
அவருடன் சேர்ந்து பல நினைவுகள் எனக்கு உண்டு. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி விழும் இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நீந்திக் குளிப்போம். அருவியின் குறுக்காக யார் நீச்சலடித்துச் செல்ல முடியும் என்று பந்தயம் வைப்போம். நீரோட்டம் உங்களைக் கடுமையாக இழுக்கும். அந்த நூறு மீட்டரை வேகமாகக் கடக்க வேண்டும். நாங்கள் கடந்தோம்.

கேமராக்கள் குறித்தும் நாங்கள் நிறைய பேசியுள்ளோம். அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும். அப்போது தமிழகத்தில் ஒரே மாதிரியான திரையிடல் முறை இல்லாததால், ஒரு ஒளிப்பதிவாளரின் ப்ரேமிங் எந்த நேரத்திலும் மோசமாகிவிடும் வாய்ப்புண்டு. என்ன ப்ரேமை படத்தில் வைக்கிறோமோ அது தியேட்டரில் இருக்காது. ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு விதமான திரையிடல் இருந்தது.

உலகளாவிய அளவிலான தரநிலை அப் போது இல்லை. ஒரு அங்குல அளவுள்ள பொருள், திரையில் பெரிதாகத் தெரியும். நெருக்கமான ப்ரேமில், உதடுகளும், மூக்கின் முனையும் வைக்கப்பட்டிருந்தால், கிராமத்துத் திரையரங்கில் நம்மால் உதடுகளைப் பார்க்க முடியாது. அல்லது பாதி உதடுகள் தெரியும்.

பாலுமகேந்திரா அந்தத் திரையிடல் குறைபாடுகளைச் சின்ன ஒரு உத்தியைப் பயன்படுத்திச் சரிசெய்தார். அதை யாரும் செய்வதற்குத் துணியவில்லை. கேமராவின் செவ்வக ஆடியில் ஒரு தடுப்பை (மாஸ்க்கை) பொருத்தினார். கேமராவுக்கு வெளியே உள்ள உலகை அவர் சரிசெய்யாமல், தனது வேலைப் பரப்பைக் குறைத்துக்கொண்டார். அவர் ஏற்படுத்திக்கொண்ட முறையில் தவறே நிகழாது. நீங்கள் அதீதமாகக் குவித்தாலும், கருப்பு ப்ரேம்தான் வரும். அதை அதிகம் சுருக்கவும் முடியாது.

எல்லாரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர் அதைச் செய்தார். அதனால்தான் அவர் முன்னோடியாக இருந்தார். நாங்கள் சந்திக்கும்போது, உலகச் சினிமா மேதை கள் அனைவரின் படங்களையும் அவர் பார்த் திருந்தார். முக்கியமான திரைப்பட கர்த்தாக் கள் சிலரையும் நேரில் சந்தித்திருந்தார்.

விதிகளை உடைத்தவர்
பாக்ஸ் ஆபீசுக்கும் நல்ல சினிமாவுக்கும் இடையில் முதல் பாலத்தைக் கட்டியவர் பாலுமகேந்திராதான். அவர் எடுத்த மூன்றாம் பிறை வெள்ளி விழா கண்ட படம். தேசிய விருதும் பெற்றது. விருது வாங்கும் படங்கள் ஓடாது என்ற எழுதப்படாத விதியை அவர் உடைத்தார். ஒரு திரைப்பட இயக்குநராக எனது வளர்ச்சியில் பங்குபெற்றவர் அவர்.

ஒரு திரைக் கலைஞனாக எனது வளர்ச்சியில் பாலுமகேந்திராவின் பங்கு முக்கியமானது. எனது வளர்ச்சியில் கே. பாலச்சந்தரின் பங்கு முற்றிலும் மாறுபட்டது, அது தனிக்கதை. பாலுமகேந்திராவிடம் இருக்கும் பெரிய புகார் என்னவெனில் அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம். குறைந்த பட்சம் கூடுதலாக 20 படங்கள். நிறைய படங்களில் ஒளிப்பதிவாளராகவாவது பணியாற்றியிருக்கலாம்.

மூன்றாம் பிறை கதையை முதலில் அவர் என்னிடம் சொன்னபோது, 20 நிமிடம்தான் கேட்டேன். ஒப்புக்கொண்டேன். கிளைமாக்ஸை மட்டும் சரி செய்ய வேண்டும் என்று கூறினேன். மனம் உடைந்த மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை அதிகபட்சமாக நிகழ்த்து வதற்கு முயற்சித்தோம். மண்ணில் புரண்டு, மழையில் உருளும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவின் கிளைமாக்ஸில் மழைக்காகக் காத்திருந்தோம். சரியாக மழையும் பெய்தது. பாலு அதை மந்திரத் தருணம் என்று சொன்னார்.

பாலுவைக் கொண்டாடுவோம்
நாங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந் தோம். அவரது மரணத்தால் நான் நிலை குலைந்து போய்விடவில்லை. மரணம் நம் எல்லாருக்கும் வரும் என்று எனக்குத் தெரியும்.

அவர் நிறைய படங்களைச் செய்திருக்கலாம் என்பது மட்டுமே எனது ஒரே குறை. ஆனால், அவரது மாணவர்கள் அதைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். பாலுமகேந்திராவைப் போன்ற மனிதரை இழப்பதில் உள்ள சோகமான விஷயத்தை, அவருடன் எனக்கு ஏற்பட்ட மகத்தான தருணங்கள் பூர்த்தி செய்யும். அவரது மரணத்துக்காகத் துக்கிப்பதைவிட, அந்தத் தருணங்களைக் கொண்டாட வேண்டும்.

நான் அவரை மரணப் படுக்கையில் பார்த்திருந்தாலும், இதைத்தான் சொல்லியிருப்பேன். "கவலைப்படாதீர்கள் பாலு, உங்கள் படைப்புகள் வாழும்."

நன்றி: nanbendaaaaaa.blogspot.com

சனி, பிப்ரவரி 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல்இயல்புஅலா தான். (1006) 
 
பொருள்: தானும் அனுபவிக்காமல் தகுதியுடையவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்கும் குணமும் இல்லாதவன் தான் பெற்ற செல்வத்திற்கு ஒரு நோயாவான். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நம்பிக்கை, நல்நடத்தை, நல்லொழுக்கம், நல்லுறவு ஆகிய கதவுளைத் திறந்து சென்றால் 'வெற்றி' எனும் வீட்டுக்கு உள்ளே செல்லலாம்.

வெள்ளி, பிப்ரவரி 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

கொடுப்பதூஉம் தூய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடிஉண் டாயினும் இல். (1005)
 
பொருள்: பிறர்க்கு ஈவதும், தாம் அனுபவிப்பதும் ஆகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலவாக அடுக்கிய செல்வம் இருந்தாலும் ஒன்றும் இல்லாத 'வறுமை' நிலைக்குச் சமம் ஆகும்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 


"ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான்" ."ஒருவன் என்னை அடித்தான்".
  "ஒருவன் என்னை வெற்றி கொண்டான்". "ஒருவன் என் பொருளைக் கவர்ந்து சென்றான் " என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய பகைமை ஒருபோதும் தணியாது. அவன் வாழ்வில் 'இன்பம்' என்றால் என்னவென்று அறியாமல் வாழ்ந்து, மடிவது உறுதி.

வியாழன், பிப்ரவரி 13, 2014

இயக்குநர் பாலு மகேந்திரா திடீர் மரணம்!

balu_mahendraமூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பாலு மகேந்திரா   1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா. சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா. இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா. இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. 
தகவலுக்கு நன்றி: sivasinnapodi.wordpress.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

எச்சம்என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன். (1004)
 
பொருள்: ஒருவராலும் விரும்பப்படாதவனாய், தனது செல்வத்தைத் தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு வாழ்பவன் தான் இறந்தபின் இவ்வுலகில் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? 

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; போரில் பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்; தியானத்தையும், நல்லொழுக்கத்தையும் வாழ்வாகக் கொண்டவன் இவர்கள் அனைவரிலும் உத்தமன்.

புதன், பிப்ரவரி 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003) 
 
பொருள்: பொருளை ஈட்டுவதில் பேராசை கொண்டு, அப்பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதால் பெறக்கூடிய புகழை விரும்பாத மக்கள் இவ்வுலகில் பிறந்தது நிலத்துக்குப் பாரமேயாகும். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

படித்தவனால் மட்டுமே ஆழமாகச் சிந்திக்க முடியும்.
ஆழமாகச் சிந்திப்பவனால் மட்டுமே அரிய திட்டங்களைத் தீட்ட முடியும். அரிய திட்டங்களைத் தீட்டுபவனால் மட்டுமே சிறப்பாகச் செயலாற்ற முடியும். சிறப்பாகச் செயல் புரிபவனால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும்.

செவ்வாய், பிப்ரவரி 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
 
 
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் 
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (1002)

பொருள்: செல்வத்தைத் தேடி; அதை யார்க்கும் கொடுக்காமல் உலோபத்தனம் செய்யும் மயக்கத்தினால் ஒருவனுக்கு மாட்சிமையில்லாத இழிந்த பிறப்பே உண்டாகும்.

இன்றைய பழமொழி

சீனப் பழமொழி 


'சோகம்' என்னும் பறவை உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உங்களால் தடுக்க இயலாது. ஆனால் அது உங்கள் தலையிலே கூடுகட்டி வாழ்வதை உங்களால் தடுக்க இயலும்.

திங்கள், பிப்ரவரி 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். (1001)

பொருள்: பெருஞ் செல்வத்தை ஈட்டி வைத்தும் தன் உலோப குணத்தால் அதனை அனுபவிக்காதவன் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவனாகவே மதிக்கப்படுவான்.  

இன்றைய சிந்தனைக்கு

அறிஞர் அண்ணா

அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும் அமைதி.

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் துஅற்று. (1000) 
 
பொருள்: பண்பில்லாதவன் பெற்ற செல்வமானது, சிறந்த பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் குற்றத்தால் தன் இயல்பு திரிந்து கெடுவதுபோல் ஒருவர்க்கும் பயன்படாமல் கெட்டு அழியும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எதையும் ஆராய்ந்து அறிவது மட்டுமன்றி, தெளிந்த சிந்தனையோடு வாழ்க்கையை நடத்துவதும் ஒரு மனிதனின் உரிமை மட்டுமன்றி கடமையும்கூட.

சனி, பிப்ரவரி 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 100 பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம் 
பகலும்பால் பட்டுஅன்று இருள். (999)
 
பொருள்: பண்பு இல்லாமையால் ஒருவரோடும் கலந்து உள்ளம் மகிழ மாட்டாதவர்க்கு மிகப் பெரிய இவ்வுலகமானது பகற்பொழுதிலும் இருள் கவிந்தாற்போல இருக்கும்.    

இன்றைய பொன்மொழி

புத்தர் 
நல்ல செயல்களை மட்டுமே செய்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களைத் துன்பங்கள் அணுகாது. வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழக்கையில் நல்லறம்.

வாழ்க்கையில் வெற்றி பெற...

01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும்.

ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும்.

02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போதுதெளிவாக முடிவெடுக்கும் திறன், அசையாத தன்மை இவைகளே கலங்காத தன்மையாகும். இது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய ஆற்றலாகும்.

03. சாதாரண பிரச்சனைகளில் தளர்ந்து தள்ளாடும் ஒரு வைத்தியன் தனது நோயாளிகளிடம் பூரணமாக நம்பிக்கை இழக்கிறான்.

04. நல்ல குணமுள்ள சமமான தன்மையை அடைவதற்கு முதலாவது முக்கியமான ஒன்று உங்களோடு இருப்பவரிடம் அளவுக்கு அதிகமாக எதிர் பார்க்காமல் இருப்பதுதான்.

05. தோல்வி ஏமாற்றம் போன்றவற்றில் இருந்து உங்களால் தப்பிவிட முடியாது ஆகையால் மிக மோசமானவர்களையும் துணிவோடு எதிர்த்து நில்லுங்கள் வெற்றி வரும்.

06. தோல்வியின் வலியை சகித்துக் கொள்ள வேண்டும் அந்தச் சமயத்திலும் சந்தோஷமான சமநிலையுடன் இருப்பது அவசியம்.

07. ஆபத்து ஏற்பட்டு அழிவு வரும் என்றாலும் அதைத் தலை நிமிர்ந்து புன்னகையோடு எதிர் கொள்வது நல்லது. அது வரும்போது கெஞ்சுவதைவிட மேலானது. இலட்சியத்திற்காக நியாயத்திற்காக நீங்கள் போராடினால் தோல்வி நிச்சயம் என்றாலும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

08. பொறுமையினால் இதயங்களை வெற்றி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது ஆனால் இந்தப் பொறுமை என்பதன் கருத்தே வாழ்வின் சோதனைகளை வெற்றி கொண்டு மேலெழும் சமநிலை என்பதுதான்.

09. உராய்வில்லாமல் இரத்தினங்கள் பளபளக்க முடியாது, சோதனையின்றி மனிதரைச் சரியானவராக்க முடியாது.

10. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு வருவதை எதிர் கொள்ளுங்கள். சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும்போது சுமை தெரிவதில்லை.

11. அன்பான கடவுளே மாற்ற முடியாத தன்மைகளை அன்போடு ஏற்றுக் கொள்ளும் வலிமையைத் தாருங்கள், அதுபோல மாற்ற வேண்டிய விடயங்களை மாற்றும் தைரியத்தையும் தாருங்கள். அவ்வாறே இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஞானத்தையும் தாருங்கள்.

12. வாழ்க்கை முக்கியமல்ல அதில் நீங்கள் காட்டும் மனோதிடம்தான் முக்கியம்.

13. நமது உடலில் குறிப்பிட்ட அளவு விஷத்தை ஏற்றி உடலில் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுபோல இறைவன் வாழ்வில் எதிர்பாராத சோதனைகளை அனுப்புகிறான். அதை எதிர்கொண்டு முன்னேறுவதே வெற்றிகரமான வாழ்க்கை.

14. பொறுமையும் மனோதிடமும் எல்லாவற்றையுமே வெற்றி கொள்ளும்.

15. உன் தலையெழுத்தைத் தீர்மானிப்பவன் நீதான் உன் ஆன்மாவின் எஜமானனும் நீதான்.

16. ஒரு மனிதனின் நம்பிக்கை அவனுடைய பலவீனத்தை வெற்றி கொள்ளும்.

17. பல ஆறுகள், விண்ணில் இருந்து பொழியும் சுவையான மழை என்று எது சேர்ந்தாலும் கடலின் சுவை மாறுவதில்லை. அதுபோல தைரியமுள்ளவனின் மனதை சோதனையின் களம் தாக்குவதில்லை.

18. நீயும் கடவுளாக மாற வேண்டுமா ? பெரும் துன்பங்களுக்கு எதிராகப் போராடு, சித்திரவதை, எதிர்ப்பு, சிறை, சாவு, தூக்குமரம் எது வந்தாலும் கலங்காது நிதானமாக முன்னேறு.

19. பெரும்பாலான சோதனைகளின் முக்கிய அம்சம் நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதல்ல எவ்வளவு எதிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

20. அவமானத்துடன் வாழ்வதைவிட அன்போடு சமாதியாகலாம்.

21. நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல உங்களிடம் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

22. நீ இழந்த ஒவ்வொன்றுக்கும் ஈடான இன்னொன்றைப் பெற்றிருக்கிறாய்.

23. உனக்கு ஏற்பட்ட இழப்பை யோசிக்காதே.. என்ன மீதம் இருக்கிறது என்று பார் அதை வைத்து போராடு, அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும்.

24. ஏதோ ஒரு வழியில் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது நெருப்பினூடே சென்றுதான் தீர வேண்டும். நமது பலவீனங்கள், தோல்விகள் , குற்றங்களை நாம் வெற்றி கொள்ளாவிட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

25. போரில் என் கரங்களை இழப்பேன் என்று நான் நினைக்கவில்லை. அவற்றை இழந்த பிறகு அவை இருந்திருந்தால் பெற்றிருக்க முடியாத பல விஷயங்களை நான் பெற்றிருப்பதாக கருதுகிறேன். – போரில் கைகளை இழந்த இளைஞன் ஹெராட் ரஸல்

26. நம்மை அர்ப்பணிக்காமல், இன்றைய முக்கிய வேலைகளில் இறங்காமல் தாமதித்துத் தாமதித்தே நம்மில் பலர் வாழ்வை வீணடித்து வருகிறார்கள்.

27. தோற்கடிக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு அழிவில் சிக்கிக் கிடந்தாலும் கவலைப்படாதே..! காரணம் நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாய்..! தன்னம்பிக்கையுடன் நின்றால் மீண்டும் வென்றுவிடலாம். உலகில் உள்ள மிக வலிமை உள்ள ஆயுதம் தன்னம்பிக்கைதான் அது உன்னிடம் இருக்கிறது கவலைப்படாதே.

28. நோயும் ஊனமும் உடலுக்குத்தான் தடை மனதிற்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்.

29. உங்களுக்குத் தரப்பட்ட வேடத்தை நடித்தாக வேண்டியது உங்கள் கடமை. அதைச் சிறப்பாக செய்யுங்கள் என்ன வேடம் என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான்.

30. என் ஊனங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் அவற்றின் மூலமாகத்தான் என்னை, என் வேலையை, என் கடவுளை கண்டறிந்தேன். – கண்களை இழந்த ஹெலன் கெல்லர்.

பரிந்துரை செய்தவர்: செ.மதியழகன், 
விசுவமடு, முல்லைத்தீவு, 
இலங்கை.
நன்றி: அலைகள்