திங்கள், பிப்ரவரி 28, 2011

சுசானாவிற்கு வாழ்த்துக்கள்!

Susanne Bier
 டேனிஷ் திரைப்பட இயக்குனர் திருமதி. சுசானா பியர் அவர்கள் (Susanna Bier) நேற்றைய தினம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் முதல் தடவையாக விருது பெற்றுள்ளார். 'சிறந்த வேற்று மொழித் திரைப்படத்திற்கான' (ஆங்கிலம் தவிர்ந்த) விருது இவருக்குக் கிடைத்துள்ளது. இவர் தயாரித்த 'Hævnen' (ஆங்கிலத்தில் 'Revenge' எனவும் தமிழில் 'பழிவாங்கல்' எனவும் அர்த்தம் கொள்க) எனும் டேனிஷ் மொழித் திரைப்படத்தை இயக்கியமைக்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது(இத்திரைப்படத்திற்கு இவர் ஆங்கிலப் பெயராக "In a better world" எனப் பெயர் சூட்டியிருந்தார்). 51 வயதாகும் சுசானா அவர்கள் பல டேனிஷ் திரைப்படங்களையும், ஒரு சில ஆங்கிலத் திரைப்படங்களுமாக மொத்தம் 14 திரைப்படங்களை இதுவரையில் இயக்கியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய 'திருமணத்திற்குப் பின்' (Efter Brylluppet) எனும் பெயர்கொண்ட டேனிஷ் மொழித் திரைப்படமும் ஆஸ்கார் விருதுக்குச் 'சிபார்சு' செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. சுசானாவிற்கு டென்மார்க்கின் பல பிரிவினரிடமிருந்தும், உலகின் பல பாகங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. டென்மார்க் நாட்டின் புகழை உலகத் திரைப்பட அரங்கில் தூக்கி நிறுத்தியுள்ள சுசானாவை அந்திமாலை ஆசிரிய பீடம் உளமார வாழ்த்துகிறது.

Hævnen slideshow

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. (45)

பொருள்: இல்வாழ்க்கை அன்பும், அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

நன்றி மடல்

அன்பார்ந்த வாசகர்களே!
'அந்திமாலை' இணையத்தளம் கடந்த தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அல்லைப்பிட்டிக் கிராமத்தில் வாழ்ந்துவரும் கவிஞர் சேவியர் வில்பிரெட்   பாலசிங்கம் அவர்களின் நாற்பதாண்டுகாலக் 'கவிப்பணியைப்' பாராட்டி அவருக்குக் 'கவி வித்தகர்' எனும் விருதினை வழங்கிக் கௌரவித்தமை நீங்கள் அறிந்ததே. மேற்படி 'கவி வித்தகரிடமிருந்து' அந்திமாலைக்குக் கிடைக்கப் பெற்ற நன்றி மடலை வாசகர்களுக்காகக் கீழே தருகிறோம்.3 ஆம் வட்டாரம் 
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை .

பிரதம ஆசிரியர்,
அந்திமாலை இணையத் தளம்,
டென்மார்க்

அன்புடையீர்!

பிரதம, நிர்வாக ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவர்க்கும் எனது அன்பு வணக்கம். யாவும் நலம், நலமறிய ஆவல், "அன்புதான் உலக ஜோதி, அன்புதான் உலக மகாசக்தி" எமது உறவுகள் பலமடைந்து வளர இறைவன் ஆசிப்பாராக. அந்தத் தீர்க்க தரிசன வார்த்தையோடு தங்களை மடல்மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு நல்ல எழுச்சியுள்ள சிந்தனையாளனை மடல்மூலம் வந்தனை கூறி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 'முகஸ்துதிக்கு முகம் கழுவும்' சந்தர்ப்பவாதம் நிறைந்த நம் உலகிலே எந்த நிலையையும் எடுத்தியம்பும் முந்து குரலாக இருக்கும் ஒருவரை உளமார நினைப்பதில் உவகையடைகிறேன்.

எனது சிறுவயதில் எழுதிய கவிதைகளை பிஞ்சாக இருக்கும்போதே நெஞ்சமதில் அரங்கேற்றிய ஒரு கலா ரசிகனை தொடர்பு கொண்டதில் பேருவகையடைகிறேன். 

நாற்பதாண்டு காலம் இலை மறை காயாக இருந்த என்னைக் கலை உறையும் கவிஞனாக மாற்றிய முதல் ஊடகமான 'அந்திமாலை' இணையத் தளத்திற்கு வந்தனங்கோடி என் நெஞ்சில் எழுகிறது.

"உண்மை, அஞ்சாமை, நடுநிலைமை" என்னும் வரைவிலக்கணத்தோடு வளரும் அந்திமாலை இணையத் தளம் என்னைக் 'கவி வித்தகராக்கி' , சான்றிதழும், புலமையைப் பொறித்த கேடயமும், இலங்கைப் பணத்தில் ரூபா பத்தாயிரமும், அந்திமாலையில் வெளிவந்த எனது கவிதைகளின் துண்டுப் பிரசுரமும் ஆகிய நால்வகையான உங்களின் மனமார்ந்த உதவிக்கு கரம்கூப்பி, சிரம்தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.

இவ்வகை கவி எழுதும் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனைகளும் அவ்வப்போது தந்துதவிய தங்களின் சகோதரர் எனது அன்புக்கும், மதிப்புக்கும்  உரிய தம்பி சதீஸ் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
"சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும்" என்பதை நீங்கள் கூறியபோது, ஒருகணம் எனது உள்ளம் சிலிர்த்தது. ஒரு கவிஞன் எத்தனை விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறான், எத்தனை விதமான சோதனைகள் அவனை ஆட்கொள்கிறது என்பதை யதார்த்தமாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

நீங்கள் கூறிய கருத்துக்கள் அவ்வளவும் எனது நெஞ்சில் ஆணித்தரமாகவே பதியப்பட்டுள்ளது. நீங்கள் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் காலமெனும் கருவறைக்குள் வேரோடிய வித்துக்கள், வைரத்தில் பொறிக்கப்பட்ட முத்துக்கள்.

இத்துடன் அந்திமாலை இணையத் தளமும், அதன் நிர்வாகிகளும் நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மடலை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.

இப்படிக்கு 
அன்பு மறவாத 
ச.சேவியர் வில்பிரெட்(பாலசிங்கம்)
3 ஆம் வட்டாரம் 
அல்லைப்பிட்டி 

குறிப்பு: தங்களால் எனக்குக் 'கவி வித்தகர்' விருது வழங்கப்பட்ட நிகழ்வை அறிந்த உள்நாடு மற்றும் வெளிநாடுவாழ் உறவுகள், தொலைபேசியில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு இப்படி ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்த அந்திமாலைக்கும் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தாய் உறவு, தாய்மொழிப் பற்று, தாய் நாட்டின்மீது நேசம் போன்றவை ஒருவனின் உள்ளத்தில் இருந்தால் அதுவே உரிமை முழக்கமாகக் கர்ச்சிக்கும். நன்றி.


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பழியஞ்சிப் பாத்துஊண் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை 
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் (44)

பொருள்: பழி பாவங்களுக்கு அஞ்சி தேடிய பொருளை அனைவரோடும் கூடிப் பகுத்து உண்ணும் இல்லறத்தானுடைய வாழ்க்கை களங்கமற்றதாகும். 

சனி, பிப்ரவரி 26, 2011

எந்தக் குழந்தையும் -அத்தியாயம் 13

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

நான் மேலே குறிப்பிட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில் காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
அதேபோல் பல சந்தர்ப்பங்களில் இப்பெண்கள் தாம் கர்ப்பமுற்று உள்ளதை அறியாமலே, ஒரு சில மாதங்கள் மதுபானம் அருந்துதல், புகைத்தல், போதைப் பொருட்களை உபயோகித்தல் போன்ற தீய செயல்களைத் தொடருகின்றனர். இவர்கள் தாம் கர்ப்பமுற்று இருக்கின்ற நிலை தெரிய வரும்போது அது பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையாகவே இருக்கிறது. இருந்தும் தமது கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு, ஆரோக்கியத்திற்கு கேடான செயல்களில் இறங்கியிருப்பதான எவ்வித 'குற்ற உணர்வும்' இவர்களை ஆட்கொள்வதில்லை. ஐரோப்பாவில் பல நாடுகளில் குறிப்பாக டென்மார்க்கில் கர்ப்பமுற்ற ஒரு இளம்பெண், தான் கர்ப்பமுற்ற பன்னிரண்டு வாரங்களுக்குள் (ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குள்) தனது 'சுய விருப்பத்தின்' பேரில் கருக்கலைப்புச் செய்துகொள்ள சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டம் 1973 ஆம் ஆண்டு தொடக்கம் டென்மார்க்கில் அமுலில் உள்ளது. இச்சட்டம் 'உயிர்க்கொலைக்கு' ஆதரவாக உள்ளது என்ற ஒரு பார்வையும், அதிருப்தியும் மக்களில் ஒரு பங்கினரிடம் உள்ளமையையும், காணக் கூடியதாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது சமுதாயத்தில் பெற்றோரின் 'போதுமான' கவனிப்பு இல்லாமல் போகக்கூடிய ஏதுநிலை உள்ள குழந்தைகள் உருவாவதை அரசு விரும்பவில்லை, மிகக் குறைந்த வயதில் ஒரு இளம்பெண் கர்ப்பமுற்று, ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பட்சத்தில் அக்குழந்தை போதுமான கவனிப்பு கிடைக்காமல், நேரிய முறையில் வளர்க்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. அக்குழந்தை பின்னர் நாட்டிற்குச் சுமையாக, குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரஜையாக மாறுகின்ற வாய்ப்பும் உள்ளது. ஆகவே 'கவனிப்பார் இன்றி' அதிக குழந்தைகள் வளர்வதை அரசு விரும்பவில்லை ஆதலால் 'கருக்கலைப்புக்கு' அரசின் பூரண  அனுமதி உள்ளது என்ற அரசாங்கத் தரப்பு வாதம் ஏற்புடையதே. 
ஆனாலும் இக்கருக்கலைப்பு விடயத்தில் சகல நெறிமுறைகளையும் 'காற்றில் பறக்கவிட்டு' அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக நாம் முடிவுக்கு வரக் கூடாது. ஏனெனில் 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு இளம் பெண்ணிற்கே கருக்கலைப்பு விடயத்தில் இவ்வாறு தனது சுய விருப்பத்தின் பேரில்(தன்னிச்சையாக) முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அப்பெண் 18 வயதிற்குக் குறைந்தவளாக இருந்தால் அவளது பெற்றோர் அல்லது கர்ப்பத்திற்குக் காரணமான அவளது காதலன்(ஐரோப்பிய நாடுகளில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே காதலனுடன் சேர்ந்து வாழ்தல் சாதாரண ஒரு விடயம் என்பதை ஆசிய நாட்டு வாசகர்கள் அறிக) மருத்துவரின் ஒப்புதலுக்கு அழைக்கப் படுவர். இதுவே பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியாக இருக்கும் பட்சத்தில் மேற்படி கர்ப்பத்திற்குக் காரணமான இளைஞன் சிறுமியை விடவும் வயதில் மூத்தவனாக இருப்பின் அவன் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்திற்குக் காரணமான ஆடவன் சிறுமியை விடவும் வயதில் மூத்த ஒரு ஆணாக இருப்பின் அவர் சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியுடன் பாலுறவு வைத்துக் கொள்வது டேனிஷ் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இச்சட்டமே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப் படுகிறது எனக் கருதுகிறேன். இதுவே கர்ப்பத்திற்குக் காரணமான அல்லது அச்சிறுமியோடு பாலுறவில் ஈடுபட்ட இளைஞன் பதினான்கு வயதிற்கு உட்பட்டவனாக இருப்பின் அவனைத் தண்டிப்பதற்கு டேனிஷ் சட்டத்தில் இடமில்லை ஆதலால் அவன் ஒரு நன்னடத்தைப் பள்ளிக்கு(சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) அனுப்பப் படுவான்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்; தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை. (43)

பொருள்: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும்.   

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

மண்ணும், மரமும், மனிதனும். அத்தியாயம் 15

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சரி இவ்வாறு நம் முன்னோர்களின் கருத்துப்படி உணர்வு குறைந்தோர், முற்றாகப் பண்பை இழந்தோர் மரமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், மரத்திற்கு 'உயிர்' உள்ளது, அதற்கு  'உணர்வு' கிடையாது என்ற எம்மவர்களின் கருத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எம்மவர்கள் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்கிறது, ஆனால் அவற்றிற்கு 'உணர்வு' கிடையாது என்று கூறுகிறார்களே, இது உண்மையா?(சரியா?) என்ற கேள்விக்கு விடை தேடினேன். கிடைத்த விடையோ என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
முதலில் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, அது சுவாசிக்கிறது, கரியமில வாயுவை(carbon dioxide) உள்வாங்கிப் பிராண வாயுவை (oxygen) வெளியிடுகிறது, தனது இலைகளின் ஊடாக  ஒளிச்சேர்க்கையை(ஒளித்தொகுப்பு / Photosynthesis) நிகழ்த்தித் தனக்குத் தேவையான உணவைத் தயாரிக்கிறது. பெரும்பாலான தாவரங்களில் பூக்களின் ஊடாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது, அது தனக்கும், தன் சந்ததிக்கும் தயாரிக்கும் உணவில் ஒரு பகுதியை அல்லது பெரும்பகுதியை, மிருகங்களும், மனிதர்களும் பங்குபோட்டுக் கொள்கிறோம் என்பது போன்ற இன்னோரன்ன கருத்துக்கள் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி அத்தகைய ஆராய்ச்சிகளின் படிநிலை வளர்ச்சியில் அரும்பெரும் உண்மைகளையும் கண்டுபிடித்துள்ளார்கள் அதாவது மனிதர்களுக்கு இருப்பதுபோல் மரபணுக்கள்(genes) தாவரங்களுக்கும் உள்ளன. 
தாவரங்களின் மரபணுக்களை மாற்றியமைத்தால் நமக்கு நல்ல விளைச்சலைத் தரக்கூடிய  புதிய ஒரு சந்ததி(Kind) அல்லது இனம்(race) கிடைக்கும் என்ற உண்மைகளையும் அவர்கள் கண்டுபிடித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதை செயற்படுத்தியும் விட்டார்கள். நான் ஆசிய நாடுகளில் அல்லது இலங்கையில் ஒரு போதுமே பார்த்திராத மிகப்பெரிய பூசணிக்காய், மிகப்பெரிய கோவா(முட்டைக்கோஸ்), மிகப்பெரிய அவரைக்காய், வெள்ளரிக்காய், வத்தகைப் பழம் (watermelon/ தண்ணிப் பழம்) போன்றவற்றை ஐரோப்பியச் சந்தைகளில் பார்த்து வியந்திருக்கிறேன். எவ்வாறு இத்தகைய பெரிய காய்கறிகளை உருவாக்குகிறார்கள்? என்று சிந்தித்தபோதுதான் இந்த விஞ்ஞானிகளின் 'மரபணுக்களை மாற்றுதல்' என்ற சூத்திரம் (theory) தெரிய வந்தது. உண்மையில் நம் இலங்கையிலும், இந்தியாவிலும் இந்த 'மரபணுக்களை மாற்றுகின்ற' செயல்முறை அல்லது நுட்பம்(technique) ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே தோன்றி விட்டது என்ற உண்மை எனக்கு அண்மையில்தான்   தெரிய வந்தது, மட்டுமல்லாமல், வியப்பையும் தந்தது. நம்மூரில் செயற்படுத்தப்படும் 'ஒட்டு மாங்கன்று' செயற்திட்டம் முழுக்க முழுக்க

மரபணுக்களை மாற்றும் ஒரு செயல்முறைதானே?புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும்  ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே?  இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை (42)

பொருள்: துறவிகளுக்கும், வறுமையாளர்க்கும், தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும், (யாசித்தவர்களுக்கும்) இல்லறம் நடத்துகின்றவன் துணையாய் இருக்க வேண்டும்.

வியாழன், பிப்ரவரி 24, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 19

ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் 
ஒவ்வொரு வணிக அதிகாரியும் சாதாரண படைவீரர்களுக்குரிய திறமைகளை விடவும், மேலதிக திறமையாக அயல் நாடுகளுக்குக் கடற் பாதைகளைக் கண்டுபிடித்தல், தமது நாட்டுக்குக் கொண்டுவரப்படும் செல்வங்களைப் பாதுகாப்பாகத் தமது இராச்சிய எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தல், நாடுகள், சமுத்திரங்கள், குறுகிய பயணத்தால் சென்றடையும் வழிகள் பற்றிய பூகோள அறிவு, தமது இராச்சியம் அண்டைநாட்டின்மீது அல்லது தூர நாட்டின்மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான படைவீரர்கள், ஆயதங்கள், படகுகள், கப்பல்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் பணியை 'நிர்வாகம்' செய்யும் திறமையையும் கொண்டிருந்தனர்.
இந்த நடைமுறைகளின் அடிப்படையில் கொலம்பஸ் ஜெனோவா மற்றும் சவோனா மன்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான 'வணிக அதிகாரியாக' விளங்கினார்.

இவர் தனது ஆரம்ப கால கடற்பயணங்களை ஐரோப்பாவிற்கு உள்ளேயே மேற்கொண்டார். இவர் சரக்குகளை இறக்கும் துறைமுகங்களாக இங்கிலாந்தின் பிரிஸ்டல் (Bristol), அயர்லாந்து ஆகியவற்றையும் தொலைதூர நாடாகிய ஐஸ்லாந்தையும் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொலம்பஸ்ஸின் மூத்த சகோதரனாகிய பார்த்தோலோமியோ(Bartolomeu) தனது தொழிலின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டின் தலைநகராகிய லிஸ்பன்(Lisbon) இல் குடியேற நேர்ந்தது. பார்த்தோலோமியோவும் கொலம்பஸ்சிற்கு எந்த விதத்திலும் குறைந்தவராக இருக்கவில்லை. அவரும் படையினருக்குத் தேவையான வரைபடங்கள் வரைதல், நாடுகளின் படங்கள் வரைதல், கடல் பயணத்திற்குத் தேவையான 'கடற்பாதைகளின்' படங்கள் வரைதல் போன்ற பணிகளில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தை(இது ஆங்கிலத்தில் Cartography என அழைக்கப்பட்டது)  லிஸ்பன் நகரத்தில் நடத்தி வந்தார். தனது அண்ணன் குடியிருந்த நாடு என்ற என்ற காரணத்தால் கொலம்பஸ் அடிக்கடி போர்த்துக்கல் நாட்டிற்குச் செல்லவும், அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் 1479 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கொலம்பஸ் வர்த்தக நடவடிக்கைகளின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. அக்காலத்தில் மன்னர்கள் தவிர்ந்த ஏனைய பிரிவினர் அதிகளவில் காதலிகளை அல்லது ஆசைநாயகிகளை(இக்காலத் தமிழில் வைப்பாட்டி அல்லது 'சின்ன வீடு') வைத்துக் கொள்வது அரிது. இருப்பினும் கடலோடிகள்(கடற்படையினர்), கடல் வணிகர்கள் போன்ற பிரிவினருக்கு இவ்விடயத்தில் 'விதிவிலக்கு' அளிக்கப் பட்டிருந்தது. இவ்விடயத்தில் வணிக அதிகாரியாகிய கொலம்பஸ்சும் விதிவிலக்காக இருக்கவில்லை. இவருக்கும் இவர் வணிக நிமித்தம் பயணம் செய்த இங்கிலாந்து, ஐஸ்லாந்து மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் 'காதலிகள்' இருந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பல காதலிகள் அல்லது ஆசைநாயகிகள் வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு அவனது 'செல்வம்' அல்லது 'பதவி' யைக் காரணமாக வைத்துத் தமது புதல்விகளுள் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பதற்கு ஒரு தந்தையானவன் தயங்குவதில்லை. இவ்வாறு ஒரு வணிகனுக்கோ அல்லது வணிகப் பங்காளனுக்கோ, படையதிகாரிக்கோ தனது மகளைத் திருமணம் செய்து வைப்பது ஒரு 'கௌரவமான' நடவடிக்கையாக அக்காலத் தந்தையர்களால் கருதப் பட்டது. இந்த வகையில் போர்த்துக்கல் நாட்டின் போர்ட்டோ சண்டோ(Porto Santo) தீவின் ஆளுநராகிய பார்டோ லோமியோ பெரேஸ்டெறேல்லோ(Bartolomeu Perestrello) தனது மகளாகிய பிலிப்பா (Filipa Moniz Perestrello) என்பவளைக் கொலம்பஸ்சிற்கு திருமணம் செய்து வைத்தான். அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது கொலம்பஸ் இன்னொரு நாட்டில் குடியேறும்போது தனது மகளாகிய பிலிப்பா, கொலம்பஸ்சால் கைவிடப் படுவாள் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 
  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்ஆற்றின் நின்ற துணை. (41) 

பொருள்: இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.

புதன், பிப்ரவரி 23, 2011

ஓர் அறிமுகம்

ஒரு விஞ்ஞானி அத்தியாயம் 4

நிலம் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற இவரது ஆய்வுக் கட்டுரையை இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் நிதிஸ் பிரியதர்சி(Nitish Priyadarshi) அவர்கள் தனது nitishpriyadarshi.blogspot.com என்ற தனது வலைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தற்பொழுது "பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது" என்ற இவரது  இரண்டாவது புத்தகம் 'நியூ செஞ்சுரி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நில அதிர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் 
சிறிய வயதில் விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்திருக்கிறது. இவரது பெற்றோரின் ஆசையும் அதுவேயாகும். சிறு வயதில் பெற்றோருடன் சர்ச்சுக்கு(தேவாலயத்திற்கு) செல்வது வழக்கம். இவர் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ஞாபகார்த்தமாக இவருக்கு 'ஐன்ஸ்டீன் பொன்முடி' என்று ஞானஸ்நானப் பெயர் வழங்கப் பட்டது.
பெயரைத் தெரிவு செய்தது இவரது தந்தையார், ஆனால் விஞ்ஞானியானது நிச்சயம் எதிர்பாராத ஒன்றுதான் எனக் கூறும் இவர் "எல்லாமே ஒரு நொடியில் மாறிவிட்டது" என்கிறார்.
அதேபோல் இவர் தன் நண்பர்களுடன் ஏதாவது ஒரு அற்ப விசயத்தைப் பற்றிப் பேசினாலும் அதன் ஆதி முதல் அந்தம் வரையிலும் விரிவாக அலசுவாராம். இதனால் நண்பர்கள் "போதும் விட்டுடுய்யா" என்று கூறி முடித்த பிறகும் அது தொடர்பான சிந்தனையில் இருந்து விடுபட முடியாமல் அதே விடயம் சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததும் "சரி நான் வருகிறேன்" என நண்பர்கள் புறப்பட்டதும் உண்டு, சில நண்பர்களால் "இதுக்கு மேலே இதப் பற்றிப் பேசினே ......! என்று மிரட்டப் பட்டதும் உண்டு.ஆனால் ஒரு நண்பர் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "இவர் ஒரு விளிம்புநிலை மனிதர்" என்று குறிப்பிட்டதும் இவருக்கு நினைவிருக்கிறதாம்.
எதற்கும் ஒரு அறிவியல் ரீதியான விளக்கத்தைத் தேடுவது அல்லது கூறுவது இவரது பழக்கமாகவே இருந்திருக்கிறது. இவருக்கு ஒரே ஒரு மனக்குறைதான் உள்ளது, அதாவது தன் மகன் விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்ட அந்தத் தந்தை இப்போது உயிரோடு இல்லை. அவருக்குத் தெரியாது அவரது ஆசை நிறைவேறியது என்ற விடயம்.    
(முற்றும்)
அந்திமாலைக்காகத் தொகுத்தவர் . இ.சொ.லிங்கதாசன் 


அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக 'அந்திமாலையில் அறிவியல்' பகுதியில் எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக, கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009 அன்று இடம்பெற்ற அவரது நேர்காணல் இடம்பெற்றமை நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் இவ்வாரம் மேற்படி நேர்காணலின் மூன்றாவது பகுதி இடம்பெறுகிறது. விஞ்ஞானி அவர்களைக் கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'சந்தித்த வேளையில்' நிகழ்ச்சிக்காக நேர்கண்டவர் 'பிரபல அறிவிப்பாளர்' திரு. ரமேஷ் பிரபா அவர்கள்.

சுனாமி ஏன்? எதற்கு? எப்படி? கலைஞர் தொலைக்காட்சி நேர்காணல் பாகம் 3
குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு 
உயற்பாலது ஓரும் பழி. (40)

பொருள்: ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே. 'ஓரும்' என்பன இரண்டும் அசை நிலை.

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

நாடுகாண் பயணம் - பெல்ஜியம்


நாட்டின் பெயர்:
பெல்ஜியம் (Belgium)

முழுப்பெயர்:
பெல்ஜிய இராச்சியம் 

அமைவிடம்:
மேற்கு ஐரோப்பா 

எல்லைகள்:
வடக்கு: நெதர்லாந்து மற்றும் வட கடல்
தெற்கு: பிரான்ஸ் 
கிழக்கு: ஜேர்மனி
தென்கிழக்கு: லக்சம்பேர்க்

தலைநகரம்:
பிரசெல்ஸ் (Brussels)

அலுவலக மொழிகள்:
டச், பிரெஞ்சு, ஜேர்மன்

கல்வியறிவு:
98 % 

ஆயுட்காலம்:
ஆண்கள்:76 வருடங்கள் 
பெண்கள்: 82 வருடங்கள் 

இனங்கள்:
பெல்ஜியன் 78 %
ஏனையோர் 22 %
பிரசெல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் 

சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம்: 75 %
ஏனைய சமயங்கள்: புரட்டஸ்தாந்துகள், இஸ்லாமியர், யூதர், இந்துக்கள், புத்த சமயம்.       

ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான மன்னர் ஆட்சி மற்றும் பாராளுமன்றக் கூட்டாட்சி.

நெதர்லாந்திடமிருந்து சுதந்திரமடைந்த தேதி:
19.04.1839

பரப்பளவு:
30, 528சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
10, 827, 519 (2010 மதிப்பீடு) 

நாணயம்:
யூரோ 

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-32 

இயற்கை வளங்கள்:
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம்.
தங்கம், இரும்பு, செப்பு, நாகம், பொஸ்பரஸ், பொஸ்பேட்டுகள்.

ஏற்றுமதிப் பொருட்கள்:
இயந்திரங்கள், இயந்திர உதிரிப்பாகங்கள், வைரக்கற்கள், இரசாயனப் பொருட்கள், உலோகங்கள், உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மதுபானங்கள்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:
  • ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் இந்நாடும் ஆபிரிக்காவில் பல நாடுகளை நூறாண்டுகளுக்கு மேலாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
  • ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகமும், ஐ.ஒ. பாராளுமன்றமும் இந்நாட்டின் தலைநகராகிய 'பிரசெல்சில்' அமைந்துள்ளன.
  • ஐ.ஒ.தலைமையகம் அமைந்துள்ளதால் இந்நாடு ஐரோப்பிய நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது.
  • பரப்பளவில் சிறிய நாடாக இருப்பினும் ஒரு கோடிக்குமேல் சனத்தொகையைக்(சுமார் இரண்டுகோடி) கொண்ட நாடு.
  • ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவில் ஒரு 'செல்வந்த நாடு' ஆகும்.
  • இந்நாட்டில் சுமார் 7000 வரையான இந்தியர்கள் வாழ்கின்றனர்.
  • இந்நாட்டில் சுமார் 12,000 வரையான தமிழர்கள்(இலங்கை, இந்தியத் தமிழர்) வாழ்கின்றனர்.(இத்தகவல் 'காற்றுவெளி' எனும் இதழிலிருந்து எடுக்கப் பட்டது. மேற்படி தகவலுக்காக திரு. மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுக்கும், டில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும், காற்றுவெளி இதழிற்கும் அந்திமாலை ஆசிரியபீடம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. .

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்தான் வருவதே இன்பம்; மற்றுஎல்லாம்
புறத்த புகழும் இல. (39)

பொருள்: அறத்தோடு பொருந்தி வரும் இன்பமே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவனவாகும்; அவை புகழும் இல்லாதவை ஆகும்.


திங்கள், பிப்ரவரி 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஹ்தொருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல். (38) 

பொருள்: ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலானது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்.  

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்துஆறு இதுஎன வேண்டா; சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)

பொருள்: பல்லக்கைச் சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையது என்று சொல்ல வேண்டியதில்லை. அது நேரில் அறியப்படும். 

சனி, பிப்ரவரி 19, 2011

1 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

பொருள்: பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தை நாள்தோறும் செய்ய வேண்டும். அதுவே உடம்பிலிருந்து உயிர் நீங்கும் காலத்து அழியாத துணையாய் இருக்கும்.