வியாழன், பிப்ரவரி 24, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 19

ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் 
ஒவ்வொரு வணிக அதிகாரியும் சாதாரண படைவீரர்களுக்குரிய திறமைகளை விடவும், மேலதிக திறமையாக அயல் நாடுகளுக்குக் கடற் பாதைகளைக் கண்டுபிடித்தல், தமது நாட்டுக்குக் கொண்டுவரப்படும் செல்வங்களைப் பாதுகாப்பாகத் தமது இராச்சிய எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தல், நாடுகள், சமுத்திரங்கள், குறுகிய பயணத்தால் சென்றடையும் வழிகள் பற்றிய பூகோள அறிவு, தமது இராச்சியம் அண்டைநாட்டின்மீது அல்லது தூர நாட்டின்மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான படைவீரர்கள், ஆயதங்கள், படகுகள், கப்பல்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் பணியை 'நிர்வாகம்' செய்யும் திறமையையும் கொண்டிருந்தனர்.
இந்த நடைமுறைகளின் அடிப்படையில் கொலம்பஸ் ஜெனோவா மற்றும் சவோனா மன்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான 'வணிக அதிகாரியாக' விளங்கினார்.

இவர் தனது ஆரம்ப கால கடற்பயணங்களை ஐரோப்பாவிற்கு உள்ளேயே மேற்கொண்டார். இவர் சரக்குகளை இறக்கும் துறைமுகங்களாக இங்கிலாந்தின் பிரிஸ்டல் (Bristol), அயர்லாந்து ஆகியவற்றையும் தொலைதூர நாடாகிய ஐஸ்லாந்தையும் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொலம்பஸ்ஸின் மூத்த சகோதரனாகிய பார்த்தோலோமியோ(Bartolomeu) தனது தொழிலின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டின் தலைநகராகிய லிஸ்பன்(Lisbon) இல் குடியேற நேர்ந்தது. பார்த்தோலோமியோவும் கொலம்பஸ்சிற்கு எந்த விதத்திலும் குறைந்தவராக இருக்கவில்லை. அவரும் படையினருக்குத் தேவையான வரைபடங்கள் வரைதல், நாடுகளின் படங்கள் வரைதல், கடல் பயணத்திற்குத் தேவையான 'கடற்பாதைகளின்' படங்கள் வரைதல் போன்ற பணிகளில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தை(இது ஆங்கிலத்தில் Cartography என அழைக்கப்பட்டது)  லிஸ்பன் நகரத்தில் நடத்தி வந்தார். தனது அண்ணன் குடியிருந்த நாடு என்ற என்ற காரணத்தால் கொலம்பஸ் அடிக்கடி போர்த்துக்கல் நாட்டிற்குச் செல்லவும், அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் 1479 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கொலம்பஸ் வர்த்தக நடவடிக்கைகளின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. அக்காலத்தில் மன்னர்கள் தவிர்ந்த ஏனைய பிரிவினர் அதிகளவில் காதலிகளை அல்லது ஆசைநாயகிகளை(இக்காலத் தமிழில் வைப்பாட்டி அல்லது 'சின்ன வீடு') வைத்துக் கொள்வது அரிது. இருப்பினும் கடலோடிகள்(கடற்படையினர்), கடல் வணிகர்கள் போன்ற பிரிவினருக்கு இவ்விடயத்தில் 'விதிவிலக்கு' அளிக்கப் பட்டிருந்தது. இவ்விடயத்தில் வணிக அதிகாரியாகிய கொலம்பஸ்சும் விதிவிலக்காக இருக்கவில்லை. இவருக்கும் இவர் வணிக நிமித்தம் பயணம் செய்த இங்கிலாந்து, ஐஸ்லாந்து மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் 'காதலிகள்' இருந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பல காதலிகள் அல்லது ஆசைநாயகிகள் வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு அவனது 'செல்வம்' அல்லது 'பதவி' யைக் காரணமாக வைத்துத் தமது புதல்விகளுள் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பதற்கு ஒரு தந்தையானவன் தயங்குவதில்லை. இவ்வாறு ஒரு வணிகனுக்கோ அல்லது வணிகப் பங்காளனுக்கோ, படையதிகாரிக்கோ தனது மகளைத் திருமணம் செய்து வைப்பது ஒரு 'கௌரவமான' நடவடிக்கையாக அக்காலத் தந்தையர்களால் கருதப் பட்டது. இந்த வகையில் போர்த்துக்கல் நாட்டின் போர்ட்டோ சண்டோ(Porto Santo) தீவின் ஆளுநராகிய பார்டோ லோமியோ பெரேஸ்டெறேல்லோ(Bartolomeu Perestrello) தனது மகளாகிய பிலிப்பா (Filipa Moniz Perestrello) என்பவளைக் கொலம்பஸ்சிற்கு திருமணம் செய்து வைத்தான். அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது கொலம்பஸ் இன்னொரு நாட்டில் குடியேறும்போது தனது மகளாகிய பிலிப்பா, கொலம்பஸ்சால் கைவிடப் படுவாள் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக