ஆக்கம். இ.சொ. லிங்கதாசன்
சிங்கப்பூர் வழிகாட்டுகிறதுஉலகிலேயே தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நாடுகளின் வரிசையில் 'முதலாமிடத்தில்' இருப்பது சிங்கப்பூர் ஆகும். வழமையாக ஒரு நாட்டில், பல வருடங்கள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே அந்நாடு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் பட்டியலில் சேரும். இவ்வாறிருக்கையில் வருடாந்தம் 2400 மில்லி மீற்றர் மழை பெறும் 'சிங்கப்பூர்' எவ்வாறு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திற்கு வந்தது?
காரணம் இருக்கிறது. நான் இக்கட்டுரைத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டதுபோல் உலகில் மிகச்சிறிய ஒரு நிலப்பரப்பில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் அடர்த்தியாக வாழும் ஒரு நாடு என்றால் அது சிங்கப்பூர் மட்டுமே ஆகும். இதனால் அந்நாட்டின் தண்ணீர்த் தேவையும் அதிகம் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு புரியும். மேற்படி நாடு எந்தெந்த வழிகளில் தண்ணீரைப் பெறுகிறது என்பதையும், தனது தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெருமளவில் தனது அண்டை நாடாகிய மலேசியாவையே நம்பியிருக்கிறது என்பதையும், கடந்த அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இருப்பினும் தண்ணீர்த் தேவையையும், பற்றாக்குறையையும் சமாளிப்பதில் உலகில் முதலாமிடத்தில் உள்ளதும் சிங்கப்பூரே ஆகும். மலேசியாவிலிருந்து கிடைக்கும் தண்ணீர், கழிவு நீரைச் சுத்திகரித்துக் கிடைக்கும் தண்ணீர், கடல்நீரிலிருந்து குடிநீர் தயாரித்தல், மழைநீரைச் சேகரித்து உபயோகித்தல் போன்ற சகல முறைகளையும் பயன்படுத்தித் தனது தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துவரும் இந்நாடு ஏனைய நாடுகளுக்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. உலகில் இந்நாட்டு மக்களே தண்ணீருக்கு அதிக விலை கொடுக்கின்றனர். ஆனாலும் இந்நாட்டு அரசு மக்களின் நலன் காக்கும் அரசாகவே உள்ளது எனலாம். எவ்வாறெனில் சாதாரண ஒரு குடும்பத்தில், சராசரியாக மக்கள் குறைந்த அளவில் தமது பாவனைக்கு எவ்வளவு தண்ணீர் உபயோகிப்பார்களோ அத்தண்ணீருக்கு குறைந்த கட்டணமும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகத் தண்ணீரை உபயோகிப்பவர்களிடமிருந்து அதிக கட்டணமும் அறவிடப் படுகின்றது. அத்துடன் வர்த்தக நிறுவனங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிடமிருந்து மிக அதிக கட்டணமும் அறவிடப்படுகின்றது. இந்தியாவிலும், இலங்கையிலும் சாதாரண குடிமக்கள் ஒரு மின்சார அலகிற்கு(Unit) செலுத்தும் கட்டணத்தைவிட தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் போன்றவை செலுத்தும் கட்டணம் இரட்டிப்பானது அல்லது மும்மடங்கானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக