ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
தாய்லாந்து நாட்டின் உருவ அமைப்பானது இதன் கிழக்குப் பகுதி யானையின் காது ஆகவும், தெற்குப் பகுதி தும்பிக்கையாகவும், யானை உருவில் தாய்லாந்து உள்ளதாகவும் தாய்லாந்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். (படத்தில் காணலாம். எல்லை நகரங்களைக் கோடிட்டுள்ளேன் மலேசியா அடியில் உள்ளது.) தாய்லாந்தின் மேற்கு, வடமேற்குப் பகுதி மியன்மார் – பர்மா தேசமும், வட கிழக்கு, கிழக்கில் லாவோஸ், அல்லது கம்போடியாவாகவும், தெற்கில் மலேசியாவும் எல்லையாக உள்ளது.
மொத்தம் 76 மாகாணங்களாக தாய்லாந்தைப் பிரித்துள்ளனர். தத்தமது பிரிவின் தலை நகரப் பெயரே மாகாணப் பெயராக உள்ளது. பாங்கொக் தனி மாகாணமாக இன்றி, தனி ஒரு விசேட பிரிவாக உள்ளது
இப்போது (2009) ஆளும் அரசரின் பெயர் 'பூமிபோல் அதுல் யாதேஜ்' , அதாவது ராமா 9.ஆவார்.
நாம் அடுத்தொரு பயணமாக கோறல் ஐலண்ட், கோறல் தீவுக்கு, (பவளத்தீவுக்குப்) போவதாகப் புறப்பட்டோம். இருவருக்கும் செலவு 1000 பாத் ஆகியது. 150 டெனிஷ் குரோனர். இது பயணம், பகல் சாப்பாடு உள்ளாக அடங்குகிறது.
அதிகாலை ஏழரை மணிக்கு பயணம் ஆரம்பமானது.பாங்கொக்கின் கிழக்குப் பகுதிக்குப் பயணமாகும் போது வாகனச் சாரதி ஜேர்மனி, பிரான்ஸ் போல தெருவிற்கு கட்டணம் கட்டினான். அதாவது றோட் ராக்ஸ் போகும் போது 30 பாத், வரும் போது 30 பாத் கட்டினான். ( படத்தில் பாங்கொக், பட்டாயா இரு இடமும் காணக்கூடியதாக கோடிட்டுள்ளேன்.)
போக முதல் கடற்கரையில் போடக் கூடிய பாதணி அதாவது பீச் ஸ்லிப்பர்ஸ், நீச்சலாடை, துவாலையும் தேவையென அறிந்து கொண்டோம்.
பாதையில் தெருவின் மேலேயுள்ள பாலங்களில் தாய்லாந்து ராசா ராணியின் படங்கள் 2, 3 விதமான படங்களாகப் பெரிதாக்கி மாட்டியிருந்தனர். இது எமக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.
அடுத்து இங்கு ஐரோப்பாவில் மின்சாரத் தொடர்பு இணைப்புகள் (அதாவது வயர்கள்) நிலத்தின் கீழே அல்லவா நம்மால் கண்டு கொள்ள முடியாதவாறு புதைக்கிறார்கள்! அங்கு தோரணம் தொங்குவது போல கண்டபடி வயர்கள் தெருவின் ஓரங்களில் அசிங்கமாகத் தொங்குகிறது, இதைப் பார்க்கக் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருந்தது.
பயணத்தின் பாதையில் வாழைமரம், தென்னை மரங்கள், ஐரோப்பாவில் பெரிய வாழைப் பழங்களே பார்த்த கண்ணுக்கு கதலி வாழைப்பழம் போல குட்டி வாழைப் பழங்கள் காணக் கூடியதாக இருந்தது.
நாம் 'பட்டயா' எனும் நகரத்திற்குச் சென்றோம். நல்ல உல்லாசப் பயண நகரம் தான் 'பட்டயா' ஒரு கடற்கரையோர நகரம்.
இதுவரை சனநெருக்கடி கொண்ட பாங்கொக்கை விட்டுக் காற்றாட வந்துள்ளோம். ஒன்றரை இரண்டு மணிநேர வாகன ஓட்டத்தின் பின் எம்மை அழைத்துப் போனவர்களின் கந்தோரில் சென்று அமர்ந்து அவர்களின் அடுத்த மணி நேரத் திட்ட விளக்கங்களைக் கேட்டோம்.
சுமார் 10.45க்கு கடற்கரையோரம் வந்து அமர்ந்தோம். கன்வஸ் சாய்மானக் கதிரைகள் வரிசையாகப் போடப்பட்டு சூரியக் குளிப்புக்குத் தயார் நிலையில் கடற்கரை இருந்தது. பால் வெள்ளை மணல். சளக் சளக்கென அலையடிக்கும் கடல். தூரத்தில் பல உயர் மாடிக் கட்டிடங்கள். அழகான காட்சியது.
வயதான வெள்ளையர்கள் அரைக் கால்சட்டை ரி சேட்டுடன் அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றி இளம் 'தாய்லாந்துக் கன்னிகள்' சுளன்றபடி திரிந்தனர். "பார்! பென்சனை எடுத்து விட்டு வெள்ளைகள் வந்து செய்கிற வேலை இது தான்"!’ என்று என் கணவர் நமட்டுப் புன்னகையுடன் கூறினார். நாம் சுமார் பத்துப் பேர், வேகப் படகில், ஸ்பீட் போட்டில் போகத் தயாரானோம். மொழி பெயர்ப்பாளர் வந்த பினனர் எம்மைப் புகைப் படங்கள் எடுத்தனர். அதாவது அவர்களது புகைப்படப் பிடிப்பாளர் எம் அனைவரையும் படம் எடுத்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் எம்மைப் படம் எடுக்கும்படி அவர்களைக் கேட்கவே இல்லையே என்று.
ஆனால் என் கணவர் ‘ பாரேன்! எவ்வளவு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்று! சடுதியில் ஏதும் விபத்து ஏற்பட்டாலும் ஒரு பாதுகாப்புக்கு படம் எடுக்கிறார்களப்பா’ என்று விழியகலக் கூறினார். நினைத்துப் பார்க்கும் போது இது சரியாகவே இருந்தது.
பட்டயாவிலிருந்து கிழக்குப் பட்டயா ஓரமாக தாய்லாந்து வளைகுடாவில் 7கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோ லான் (koh larn) எனும் பெயர் கொண்ட கோறல் தீவுக்குப் புறப்பட்டோம். 44சதுர மீட்டர்கொண்டது இத்தீவு. அருகருகாக 3 தீவுகள் உள்ளது. கோ குறொக், (koh krok) கோ சக் (koh sak) என்பன மற்றைய தீவுகள் பெயர்.