புதன், ஏப்ரல் 30, 2014

உங்களுக்குள்ளே ஒரு 'அதிசயம்' உள்ளது தெரியுமா?

இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது (ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)

தமிழில்:ஆசை 

மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.
யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது. 

தொலைத்துவிட்ட பாதை
வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான். 

கண்டுபிடிப்புகளின் அடிப்படை
விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.
இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. 

சுதந்திரம் ஒருபோதும் அழியாது
நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது. 

நீங்கள் இயந்திரங்கள் அல்ல
போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.
உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்! 

கடவுளின் சாம்ராஜ்யம்
17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.
மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன. 

புதியதோர் உலகைப் படைப்போம்!
அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.
இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!
சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.
அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்! 

மேற்படி கட்டுரை கடந்த 16.04.2014 அமரர் சார்லி சாப்ளின் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி(125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு) வெளியிடப் பட்டதாகும்.
நன்றி:The Hindu

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். (1078)
பொருள்: பெரியவர்களிடம் நமது குறைகளைச் சொன்ன உடனேயே மனமிரங்கி உதவி செய்து அடுத்தவர்களைப் பயன்பெறச் செய்வர். ஆனால் கீழ் மக்களாகிய 'கயவர்கள்' கரும்பை முறித்துப் பிழிவது போல வலியவர்கள் யாராவது நையப் புடைத்து, நெருக்கியபோதுதான் பயன்படுவர்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வாழ்வில் வறுமையையோ, ஏமாற்றத்தையோ சந்திக்கும்போது உன்னைவிட மோசமான நிலையில் வாழும் மனிதரை உன்னோடு ஒப்பிட்டுப் பார். வாழ்வில் உன் உயர்வு பற்றிச் சிந்திக்கும்போது மட்டும் உன்னைக் காட்டிலும் உயர்ந்தவனை வைத்து ஒப்பிட்டுப் பார்.

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

பரீட்சைத்தாள்களும்; பெறுபேறுகளும்

 ஆக்கம்: வி. ஜீவகுமாரன், டென்மார்க்


விஸ்வநாதன்
நான் விரும்பிப் பார்க்கும் தொடர்கள் இரண்டு:
ஒன்று மகாபாரதம்.

மகாபாரத்தின் தெரியாத பல கிளைக்கதைகளை அறியவும் அதன் பிரமாண்டத்தை ரசிப்பதற்காகவும் பார்க்கின்றேன்.

மற்றது ஒவ்வீஸ் (Office).

கணனி உலகத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகள்… சூழ்ச்சிகள்… கால் வாருதல்கள்…உலகச் சூழலில் ஒரு நிறுவனம் தப்பித்து வாழ படாதபாடுபடும் பிராயத்தனங்கள் என பல விடயங்கள் என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றது.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அந்த நிறுவனத்தின் ஒரு பிரிவின் இயக்குனராக வரும் விஸ்வநாதன் என்ற சுமார் 50-55 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம்.

அவருடைய நேர்மை… சவால்களை எதிர் கொள்ளம் தன்மை… முகத்துக்கு நேரே தனது கருத்துகளை சொல்லம் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும்.
சுகி சிவத்தினதும் ஓஷோவின் ஆன்மீக உரைகள் ஒரு விதம் என்றால் இது இன்னோர் விதம்.

அவர் சொல்லும் விதம் பல நாட்களாக மனதில் தங்கி இருக்கும்.
அண்மையில் வாழ்வு பற்றிய பொதுப்பார்வை உடைய ஒருவருக்கு அவர் கூறும் அறிவுரை பின்வருவனபோல் அமைந்திருந்தது.
”வாழ்க்கை என்பது ஒரு சோதனைக் கூடத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கும்! பார்வைக்கு அனைவருக்கும் பரீட்சை நடப்பது போலத் தெரிந்தாலும்; ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் பரீட்சைத்தாள்கள் வித்தியாசமானது. அதில் உள்ள கேள்விகளும் வித்தியாசமானது. அதன் பதில்களும் வித்தியாசமானது!”
உண்மைதானே!

சீதைக்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் பாஞ்சாலிக்கு கொடுக்கப்படவில்லை!

பாஞ்சாலிக்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் கண்ணகிக்கு கொடுக்கப்பட்டவில்லை!!

என் தாய்க்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் என் மகளுக்கு கொடுக்கப்படவில்லை!!

எனது தந்தை ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுதிய சோதனைப் பேப்பரும் நான் டென்மார்க்கில் இருந்து எழுதும் சோதனைப் பேப்பரும் முற்றுமுழுதாக வேறுபட்டதை உணர்கின்றேன்.

ஆனால் நாம் அனைவரும் கேள்விகளை நன்கு வாசிக்காமல் மற்றவரின் விடைகளை எட்டி எட்டிப் பார்க்கின்றோம்.

அயலவன் போல இருக்க ஆசைப்பட்டு எங்களின் நிம்மதிகளையே இழந்து கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் ஒரு விடயத்தில் மனம் ஒன்றுபடுகிறது.
இந்த சோதனைத் தாள்களை திருத்தி பாஸா அல்லது பெயிலா என புள்ளிகள் இடுவது எங்களைச் சுற்றியுள்ள சமுதாயமே!

அதனிடம் இருந்து பாஸ்மாக்ஸ் எடுக்க ரொம்ப கடினமாக உழைக்கவேணும்!
கண்ணியமாக நடக்க வேண்டும்!

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. (1077)

பொருள்: கயவர்கள் தமது கன்னத்தை(பற்களை) உடைப்பதாக முறுக்கிய கையேடு மிரட்டும் பலம் வாய்ந்த பகைவர்களுக்கு மட்டுமே தமது செல்வத்தில் ஏதாவது பங்கு கொடுப்பர். அதைத் தவிர ஏனையோருக்கு தாம் உணவு உண்டுவிட்டுக் கழுவிய கையையும் தெறிக்க மாட்டார்கள்(எச்சில் கையால் ஈ ஓட்ட மாட்டார்கள்)

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை 

இயற்கையில் 'படைப்பு' மட்டும் அடங்கியுள்ளது என்று எண்ணாதே. இயற்கையின் படைப்பில் மூன்று தொழில்களும் அடங்கியுள்ளன என்பதை உணர்ந்து கொள். ஓர் இடத்தில் 'சூரியோதயம்' என்றால் மற்றோர் இடத்தில் 'சூரிய அஸ்தமனம்'. ஓர் இடத்தில் உயிர் ஒன்று பிறக்கிறது என்றால் மற்றொரு இடத்தில் உயிர் ஒன்று இறக்கிறது. உடலை உண்டு பண்ணுதல் என்றால் 'உணவை அழித்தல்' என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்கள் பிறந்துகொண்டிருக்கிற இதே பூமியில்தான் பழைய உயிர்களும் மாறி மாறி மடிந்துகொண்டும் இருக்கின்றன. படைப்புக்கும், அழிப்புக்கும் இடைப்பட்ட நிலை 'ஸ்திதி' என்று அழைக்கப் படும். ஆகவே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 'முச்செயலும்' முக்கோணம் போன்று ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை தெளிவாக அறிந்து கொண்டால் மற்ற இரண்டையும் எளிதில் அறிந்து கொள்வாய்.

திங்கள், ஏப்ரல் 28, 2014

சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

எடை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏற்கனவே மூட்டுவலி இருப்பதால் வாக்கிங் போவதும், ஜிம் பயிற்சி செல்வதும்  சாத்தியமில்லாமல் இருக்கிறது. சின்னச் சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

பொது மருத்துவர் சுந்தர்ராமன்

முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள்  உயரத்துடன் 100ஐக் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த  அளவைத் தாண்டும்போது மட்டுமே எடை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம்.  நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல்  நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி  இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை  தானாகவே குறையும்.

நன்றி: தினகரன்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட 
மறைபிறர்க்கு உய்த்துஉரக்க லான். (1076)
 
பொருள்: கீழ் மக்கள் தாம் கேட்ட இரகசியமான செய்திகளைத் தாங்கிச் சென்று, அவற்றைப் பிறர்க்குக் கூறுதலால், அறிவித்தல்களை விடுக்கும்போது அறையப்படும்(அடிக்கப்படும்) 'பறையினை' ஒத்தவர்கள் ஆவர். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இந்த உலகில் அஞ்சாதவனும், ஆசைப்படாதவனுமே உண்மையான உயர்ந்த மனிதர்கள் ஆவர்.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் 
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. (1075)
 
பொருள்: கீழ்மக்களிடத்து ஏதேனும் நல்லொழுக்கம் காணப்பட்டால் அது அவர்கள் அச்சமடைந்துள்ள தருணங்களில் மட்டுமே ஆகும். இல்லையேல் யாரிடத்திலேனும் பொருளைப் பெறும்போது 'நல்லொழுக்கம்' உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் பிற சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.

சனி, ஏப்ரல் 26, 2014

பேய்க் கதைகளின் 'சக்கரவர்த்தி' மறைந்தார்!

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்."
-பாப்லே நெருடா. 
ஆக்கம்: கரவைதாசன், டென்மார்க்.
மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று  அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது.  

எட்டு வயதுவரை தன் தாத்தா பாட்டி வீட்டில் விடப்பட்ட மாக்வெஸ் அவர்களின் பேய்வீட்டில் அவர்களிடம் கதை கேட்டே வளர்ந்திருக்கிறார். அவர்களது வீடு அப்படிதான். இருட்டாகவும் பழைய மாந்தீரீக கதைகளால் நிறைந்தது. அவரின் தாத்தாவைவிடவும்  பாட்டியிடமே அதிக கதைகள் கேட்டு வளர்ந்ததாக அவர் தனது நேர் காணல்களில் வாக்கியங்களாக விட்டுச் சென்றுள்ளார். அவரின் தாத்தாவிடம் உள்நாட்டுப் போர்க்காலங்களில் சில போர்க்கூறுகளை கேட்டறிந்தாலும். அவர் ஒரு காதல் மன்னன் என்பதே அவரது கருத்தாகும்.  தன் பாட்டியிடம் கதை கேட்கும்போது அவளின் முகத்தில் தோன்றும் கோடுகள் தான் தன் கதைகளின் அழகியல் விசயங்கள் என அவரே சொல்லிவந்தார். 

அவை `ஒரு நூற்றாண்டு கால தனிமை வாசம்` என்ற நாவலாக வெளிவந்தபோது ஸ்பானிய மொழியில் மட்டும் நாற்பது இலட்சம் பிரதிகள் விற்பனையாகின. `ஏற்கெனவே சொல்லப்பட்ட கதை`நூலாக வந்தபோது  பத்து இலட்சத்துக்கு மேல் விற்பனையாகின. 1982ல் இலக்கித்துக்கான நோபல் பரிசினை அவர் பெற்றபோது அவர் ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையில் மார்க்வெஸ் தென் அமெரிக்க கண்டத்தில் நிலவும் ஏழ்மை, சர்வாதிகார ஆட்சி, உள்நாட்டுப்போர் போன்ற அவலங்களை விவரித்து லத்தீன் அமெரிக்க மக்களாகிய தங்களுக்கு ஆண்டாண்டு காலமாக யதார்த்தத்தில் தாங்கள் விரும்பும் கனவுலகம் மறுக்கப்படுவதை விவரிக்கிறர். கதை சொல்லியான தான்  (மார்க்வெஸ்) யதார்த்தத்தில் மறுக்கப்பட்ட நீதி, கொளரவமான வாழ்வும், சாவும், சக மனிதர்களீடம் கொள்ளும் பிரியம் இவற்றையெல்லாம் பிரதியில் படைத்து வேறொரு கனவுலகத்தில் பிரிதொரு கதாபாத்திரங்கள் வாயிலாக புதிய மொழியில் எழுதிச் செல்கிறேன் என்கிறார். இந்த கனவு பிரதேசத்தில் எந்த மனிதனும் சகமனிதனை வெறுக்கமுடியாது மாறாக நேசிக்கவே முடியும் என்கிறார்அதனால்த்தான்  மார்க்வெஸின் எழுத்தினை  அராதிக்கத்தோன்றும். எரிந்திராவை சந்திக்க மனம் அலைபாயும். ரேபாக்கவையும் ஊர்சுலாவையும் நூறு வருடங்கள் ஆனாலும் மனம் காண காத்திருக்க முடிகிறது.  

கொலம்பியாவில் பிறந்த மார்க்வெஸ் தன் கண்டத்தில் நிகழும் இயற்கை சூறையாடல், சுரண்டல், அரசியல் வன்முறைகளை, ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி, ஒரு நாவிதன், வாடகைக்கு கார் ஓட்டுபவன், தச்சர், மீன்பிடிப்பவர், தையல்க்காரி, மாலுமிகள், கடல்க் கொள்ளைக்காரர்கள், ரசவாதிகள், பணிப்பெண்கள், பால்வினைத்தொளிலாரர்கள் போன்ற கதா பாத்திரங்களூடே வெளிக் கொணரும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல. சல்மான் ருஸ்டி சொல்வதுபோல் அவர் சார்லிசத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத யதார்த்தம். யாரும் எழுதுவதில்லை கர்ணலுக்கு என்ற நூலில் வரும் கரையான் அரித்த குடையும் நாம் உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்களும் எங்களிடம் அவரால் விட்டுச்செல்லப்பட்டுத்தானிருக்கின்றன. இவற்றையெல்லாம் காணுகின்றபோது விமர்சகன் இவரை பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி மாண்டு போய்விடுகின்றான். 


இயற்கையை விஞ்சுகின்ற பயங்கர கதைகளை அமைதிகொண்ட முகங்களுடன் காட்டுகின்ற  மார்க்வெஸ் பற்றிய அறிமுகம் பெரும்பாலும், அவருடைய இலக்கிய ஆளுமையைப் பற்றிதாகவே உள்ளது. இது அவருடைய இயல்பான ஆளுமையை குறைத்து மதிப்பீடு செய்வதாகவும், அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணியை புறக்கனிப்பதாகவும் உள்ளது. அவருக்கு வேறெரு மரபு இருக்கிறது. புரட்சிகர அரசியலின் இடதுசாரி அறிவுஜீவி மற்றும், காலணியாதிக்கத்திற்கு எதிரான மரபும் அவருக்கு உண்டு. ஒரு பராம்பரியமிக்க இடது சாரி மரபோடுதான்அவரை இணைத்துப் பார்க்க முடியும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்களோடும், மக்கள் ஜனநாயக இயக்கங்களோடும், மற்றும் அதன் அரசியல் தலைவர்களோடும் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய படைப்பின் மூலம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அசலான முகத்தை, அதன் போர்குனத்தை உலகத்துக்குத் தெரியப்படுத்தியவர். அவருடைய பல படைப்புகளின் முதல் வாசகனாக கியூபாநாட்டுத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோ இருந்திருக்கிறார். இருவரும் சந்திக்கும்போது கடல் பதார்த்தங்களை விரும்பி உண்டுகளித்திருக்கின்றார்கள். அந்தவேளையிலும்  கவர்லிய என்ற கடல் பதாத்தினை விரும்பி உண்பது பூர்ஷ்வாத்தனம் கொண்டவை எனக் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். 


லத்தீன் அமெரிக்க வெப்ப மண்டல நாடுகளிலே அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு அதன் நோய்பிடித்த கலாச்சாரத்துக்கு எதிராக மேலோங்கிவரும் லத்தீன் அமெரிக்க குரலாக மார்க்வெஸ்சை காண்கின்றோம். இவருடைய  இலக்கிய அரசியலைப் பின்பற்றுவது தான் இவருக்கு நாம் செய்யும் காணிக்கையும் அஞ்சலியுமாகும். 


பிற்குறிப்பு: கடந்த 17.04.2014 அன்று மறைந்த கொலம்பிய எழுத்தாளர் கப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் நினைவாக கடந்த 19.04.2014 அன்று டென்மார்க்கில் வாழும் திரு.கரவைதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இது.

எங்கள் வீட்டின் நடுவே புத்தர் இருந்தார்

ஆக்கம்: அமலதாஸ் பிரான்சிஸ் , பிரான்ஸ்

எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டே எங்கள் வீட்டில் புத்தர் படம் இருந்தது . புத்தர் படம் மட்டுமல்லாது காந்தி, நேரு, நேதாஜி, பாரதியார், கண்ணன், திருவள்ளுவர் என நிறையப் படங்கள் வீட்டினுள் வரிசையாக இருந்தன. நட்ட நடுவாய் பெரிய  இருதய ஆண்டவர் படம்மும் அதற்கு அடுத்தடுத்து மற்றப் படங்களும் இருந்தன.வீடு படங்களால் நிறைந்திருந்தது. வலது கோடியில்தான் கண்மூடித் தியானத்திலிருக்கும் புத்தர் படம் இருந்தது.
 நான் "புத்தரின் காது ஏன் நீண்டிருக்குது? புத்தருக்கு ஏன் கொண்டை இருக்குது?" என்று அம்மா தொடங்கி வீட்டுக்கு வரும் அனைவரையும் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் யாரும் பதில் சொன்னதே இல்லை.

எனக்கு ஐந்து வயது வந்து பள்ளிக்குச் செல்லும் வரை இந்தப் படங்களில் இருக்கும் பெரியவர்களோடுதான் என் பொழுது போகும். இருதய ஆண்டவரிடம் செபிப்பதும். வள்ளுவர் ஏன் ஆணி வச்சிருக்கிறார்? என்று ஆராய்வதும், சேட் இல்லாத காந்தியைப் பற்றிக் கவலைப் படுவதுமாய் இருந்த என்னையும் எங்கள் வீட்டின் அழகையும் ஒரு வேலி  கெடுத்தது.
எல்லாக் கிராமத்திலும் வரும் வேலிச் சண்டையும் பங்காளிச் சண்டையும் ஆக்களை மட்டுமல்ல உடைமைகளையும் தாக்கியது.அப்பாவின் சார்பில் இருதய ஆண்டவர் நெஞ்சிலே குத்துப் பட்டார். காமராஜருக்கு ஒரு கண்ணில்லை. நேருவின் தொப்பி தனியே கிடந்தது.

அந்தப் பேரிடரில் இருந்து தப்பியவர்கள் வெண்ணை உண்ணும் 'பால கிருஷ்ணனும்', புத்தரும் மட்டுமே. அப்போதுதான் நான் பள்ளிக்குப் போகத் தொடங்கியதால் படிப்பும் பள்ளி நண்பர்களும் பாடல்களும் கதைகளும் படங்களின் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.

சில நாட்களின் பின் திருமணம் முடித்து விருந்துக்கு வந்திருந்த ஒரு தம்பதிக்குப் பாலகிருஷ்ணர் பரிசாகப் போனார் .புத்தர் தனியாகவே இருந்தார் . வேறு படங்களை மாட்டி வைக்க அம்மா விரும்பவும் இல்லை .அதற்கான சூழலும் இல்லை.

நான் பள்ளி இறுதி வகுப்பு  படிக்கும் காலத்தில் இனப் பிரச்சினை உச்சத்திலிருந்தது எல்லா இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் அயலவருக்கும் புத்தர் படம் ஆச்சரியம் தந்தது."  புத்தர ஏன் வச்சிருக்கிறியள்?" என்ற கேள்விக்கு நாங்கள் யாரும் பதில்சொல்வதில்லை.




எல்லா ஊர்களும் இனப் பிரச்சினையில் இடம் பெயர்ந்தன. ஆனால் எங்கள் ஊரில் பெரிதாய்ப் பிரச்சினை வரவில்லை. இந்திய ராணுவம் வந்தபோதும் உரும்பிராய், கோண்டாவில் பக்கம் போல் எந்த அழிவும் இல்லை. நாங்கள் நல்லாய்த் தான் இருந்தோம்.புத்தரும் எங்களுடன் இருந்தார்.
 தொண்ணூறில் தீவுப் பகுதியில் ராணுவம் இறங்கியபோதுதான் முதலும் கடைசியுமாய் நாம் இடம் பெயர்ந்தோம் .புத்தரை எங்களுடன்  எடுத்துச் செல்லலாம் என்ற என் யோசனையை அப்பா நிராகரித்து ,புத்தரை நடு வீட்டில், 'வீடு பூரும் சிங்கள ஆமி'க்குத் தெரியும் வண்ணம் எங்கள் வீட்டின் காவல் தெய்வமாய் வைத்து விட்டு இடம் பெயர்ந்தோம்.

அதன் பின் நான் எங்கள் வீட்டுக்குப் போனதில்லை. எங்கள் அயலில் மற்ற வீடுகள் சூறையாடப் பட்டாலும் எங்கள் வீடு முற்றாக எரிக்கப் பட்டதாம் யாரோ சொல்லிக் கேள்விப் பட்டபோது  "  ம்ம் ..புத்தரும் போயிற்றார்"  என்ற ஆதங்கம் தான் வந்தது.

பிறகொரு நாள் இந்தியாவில் அப்பாவைச் சந்தித்தபோது அப்பா கேட்டார்  "ஆமிக்காரன் புத்தரைக் கண்டதால்தான் எங்கட வீட்டக் கொளுத்தினானா ? இல்லக் காணாமல் கொளுத்தினானா? சில வேளை புத்தரை ஒரு ஆமி எடுத்துக் கொண்டு போயிருப்பானோ?"  என்று பல கேள்விகளை என்னிடம் கேட்டார். எனினும் என்னிடமிருந்து அவர் பதிலை எதிர்பார்க்கவில்லை.

இன்று அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். பரிசின் புறநகர்ப் பகுதியில் வசித்துவரும் அவர் வீடு மாறி இருந்தார் .புது வீடு எப்படி இருக்கிறது எனப் பாக்கப் போனேன் .

அண்ணன் வீட்டின் நடுவிலும் ஒரு புத்தர் இருக்கிறார்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (1074)
பொருள்: கீழான குணமுடையவன் தன்னிலும் குறைந்த கீழான வாழ்க்கை வாழ்பவனைக் கண்டால், தான் அவரிலும் உயர்ந்திருப்பதால் தன் மிகுதியைக் காட்டிக் கர்வம் அடைவான்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்தும் அறிவைப் பெறுகிறான்.

வெள்ளி, ஏப்ரல் 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

தேவர் அனையர் கயவர்;அவரும்தாம் 
மேவன செய்துஒழுக லான். (1073)
 
பொருள்: கயவர்கள் தேவருக்கு ஒப்பானவர்கள். அது எவ்வாறு என்றால் கயவர்களும் தேவர்களைப் போலவே மனம் போன போக்கில் தாம் விரும்பிய விடயங்களைச் செய்து மகிழ்வர்.

இன்றைய சிந்தனைக்கு

ஆபிரிக்கப் பழமொழி

கடவுள் வாரந்தோறும் சம்பளம் கொடுப்பதில்லை; வாழ்க்கையின் முடிவில் கொடுக்கிறார்.

வியாழன், ஏப்ரல் 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையார் 
நெஞ்சத்து அவலம் இலர். (1072)
 
பொருள்: அறிவுடையவரைக் காட்டிலும் கீழ் மக்கள் எனப்படும் 'கயவர்கள்' கவலை எதுவும் இல்லாமல் வாழ்வர். ஏனெனில் அறிவுடையோர் எப்போதும் உலகில் நிகழும் அதர்மச் செயல்களைக் கண்டு கவலை கொள்வர். ஆனால் கயவர் தமது நெஞ்சத்தில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்கள் ஆவர்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளையிட்டு அவதானமாக இருங்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.

புதன், ஏப்ரல் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 108 கயமை

மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன 
ஒப்பாரி யாம்கண்டது இல். (1071)

பொருள்: கயவர்கள் உருவத்தால் முழுக்க, முழுக்க நன் மக்களைப் போலவே இருப்பர். ஆனால் குணத்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரித்தறிய முடியாத கடினமான ஒற்றுமை மனிதர் தவிர்ந்த வேறு எந்தப் பொருள்களிலும் நாம் கண்டதில்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வெற்றி பெற்ற மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் அதிகம் பேசுவதில் தமது நேரத்தை வீணடிப்பதில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை யாது? அதிகம் பேசுவோர் செயல் புரிவதில்லை. செயல் புரிவோர் அதிகம் பேசுவதில்லை.

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

பழச்சாறு (ஜுஸ்) குடிப்பதற்கு முன்பு இதைப் படியுங்கள்.

நன்றி: healthyfoodteam.com
பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.
மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.
அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.

நன்றி: தினமணி

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர் 
சொல்லாடப் போஒம் உயிர். (1070)

பொருள்: தம்மிடமுள்ள பொருளை மறைப்பவர் 'இல்லை' என்று கூறிய அந்தக் கணத்திலேயே பிச்சை கேட்டவரின் உயிர் போய்விடும். ஆனால் தமது பொருளை மறைத்து வைத்துப் பினனர் 'இல்லை' என்று சொல்லும்போது அந்த உயிர் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோ? 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

சிந்தனையும் செயலும் ஒன்ராகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதாகப் பெற்று விடலாம். இந்த 'உண்மை' வாழ்வின் இறுதிக் கட்டத்திலேயே நம்மில் பலருக்குத் தெரிகிறது

திங்கள், ஏப்ரல் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள 
உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)

பொருள்: பிச்சை எடுத்து வாழுகின்ற கொடுமையான வாழ்க்கையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இனி உள்ளதையும்(பொருட்கள், பணம் முதலியவற்றை) மறைத்து வைத்துக்கொண்டு இல்லையென்று கூறியவரின் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

எறும்பைப் பாருங்கள், அது நமக்கு எதையும் உபதேசித்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அது உணர்த்தும் சுறுசுறுப்பு உபதேசங்களை விட மேலானது.

தொப்பையை குறைக்க 14 எளிமையான வழிகள்.

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை(நவீன விரைவு உணவுகள்) தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பைத் தவிர்க்கவும்: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ(Avocado): அவகேடோவிலும்(அவகேடோ பழம்) உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை(புளிப்புள்ள பழங்களை) அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.


7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்(Salmon Fish): சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.


10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள்(நாவற்பழம், செர்ரி, ஸ்ட்ராபெரி போன்றவை) கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.


12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது. 


நன்றி: தினமணி

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (1068)
 
பொருள்: வறுமைக் கடலைக் கடக்க ஒருவன் கையில் எடுத்துக்கொண்ட கீழான செய்கையாகிய 'இரத்தல்'(பிச்சை எடுத்தல்) என்பது காவல் இல்லாத படகு போன்றது. அதன் வழியில் செல்லும்போது செல்வந்தர்கள் தமது சொத்தை 'மறைத்தல்' என்னும் பாறை தாக்குமாயின் படகு பிளந்து விடும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நிரந்தரமற்றவற்றின்மீது அன்பு செலுத்துவது அல்லது ஆசை கொள்வது உன் தோல்வியின் முதல்படியாக அமையும்.

லண்டனில் ஒரு யாழ்ப்பாணம்

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது.
தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல
வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்தப் பாடசாலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.
பெரும்பாலானவர்கள் "பாட்டி வடை சுட்டு விற்ற" கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை "ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா"? என்று நான் கேட்டு வைத்தேன். "கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும்" என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.
அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் 'பிளாஷ் பாக்கில்' வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.
இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.
குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை 'யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி' மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு 'தமிழ்க் கல்வி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
  நாம் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளில் கூட, அரச பாடசாலைகளில், கல்வி கற்பதற்கு நவீன முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். 'நவீனமொழிகள்' என்று அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய மொழிகளை அந்த மொழி பேசாத குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு ஐரோப்பியர்கள் நாளந்தம் புதிய உக்திகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மொழி மீதான விருப்பை உருவாக்கும் வகையில் புதிய வழிமுறைகள் எல்லாம் கையாளப்படுகின்றன.
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட ஆங்கிலம் கற்பிக்கும் போது லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக வந்த புகையிரதத்தைப்பற்றிப் போதிப்பதில்லையே.
ஐரோப்பிய நாடுகளில் சந்திக்கும் நாளந்தப் பிரச்சனைகளைக் கூட தமிழ் மொழியில் கதைகளாக மாற்றி குழந்தைகளுக்குப் போதிப்பது போன்ற சிறிய உக்திகளைக் கூட இவர்கள் கையாளாத 'பழமைவாதிகள்'.
தமிழ் கற்பித்தல்தான் இப்படி என்றால் அவர்களின் அடுத்த கனவு 'கர்நாடக சங்கீதம்'. பாடுவதற்கு ஆர்வமற்ற குழந்தைகள் கூட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க தெலுங்குக் கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
யாழ்ப்பாண உயர்குடிகளின் 'மையவாதம்' தான் இந்தப் பாடசாலைகளும் அவற்றில் 'துன்புறும்' ஒன்றுமறியாக் குழந்தைகளும்.
அண்மையில் கொரிய பாடசாலை ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. சனிக்கிழமைகளில் நடக்கும் அந்தப் பாடசாலையில் மொழி கற்பிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், முதலில் ஆங்கிலத்திலெயே கொரிய கலாச்சாரம் உட்பட ஏனைய நாடுகளின் கலாச்சரங்களையும் கற்பிக்கிறார்கள். சிந்து வெளி நாகரீகம் எல்லாம் கூட கற்பிக்கிறார்கள். பின்னர் மாணவர்களுக்கு ஒரு விருப்பு ஏற்பட்டதும் கொரிய மொழிகளின் சில பகுதிகளை அவர்களே உருவாக்கிய கதைகளின் ஊடாகக் கற்பிக்கிறார்கள்.
இது முழுமையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் ஒரு 'திட்டமிடல்' இருக்கிறது என்பதே இங்கு உண்மை.
யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல தமிழில் பொதிந்திருக்கும் 'அழுக்குகளையே' நமது சிறார்கள் கற்றுக்கொள்வார்கள்.

நன்றி:இனிய விழம்பன், ஐக்கிய இராச்சியம்

சனி, ஏப்ரல் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் 
கரப்பார் இரவன்மின் என்று. (1067)
 
பொருள்: பிறரிடம் சென்று பிச்சை கேட்கும் நிலையில் உள்ளோரிடம் நான் ஒரு விடயத்தைக் கூறுவேன். "நீங்கள் இரக்க வேண்டுமானால், தம்மிடம் உள்ள பொருளையோ, செல்வத்தையோ மறைப்பவர்களிடம் சென்று இரந்து  கேட்காதீர்கள்" என்று நான் இரந்து வேண்டிக் கொள்வேன்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறி விடுகிறது.

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

இத மட்டும் சாப்பிடுங்க, நூறு வயசு வாழுவீங்க!

 சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. எண்ணெய் வகை உணவுகளுமே காரணம். பொரியல், வதக்கல் என எல்லாமே எண்ணெய் வகை உணவுகளை உண்ண கூடாது. இது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


நன்றி: ஆனந்தவிகடன்