வெள்ளி, ஏப்ரல் 04, 2014

நல்ல மட்டன்(ஆட்டுக்கறி) வாங்குவது எப்படி?!?!

 ஆக்கம் : ஸிசிஃபஸ் அயோலஸ் Sisyphus Aeolus
மட்டன் வாங்குவது போர்த்தந்திரத்துக்கு ஒப்பானது என்றெல்லாம் சொல்லி உங்களைப் பயமுறுத்த மாட்டேன். ஆனால் கொஞ்சம் சூதானமாச் செய்ய வேண்டிய விஷயம். ஊரில் அதிகாலையில் முதல் ஆளாகப் போய் மட்டன் வாங்கினால் அத எடுங்க , இத எடுங்க என்று அதிகாரம் செய்து வாங்கிக் கொள்ளலாம். தவிர ஊரில் பசும்புல்லில் வளர்ந்த ஆடுகள். எப்படியும் ருசியாகத்தான் இருக்கும். சென்னையில் பெரும்பாலும் காய்ந்த புல் மற்றும் பேப்பர் தின்னும் ஆடுகள். இங்கே அதிகாரம் செய்தால் நீங்கள் ஆடாக்கப்படுவீர்கள். எனவே கவனமாக வாங்க வேண்டும்.பெரும்பாலான கடைகள் திறப்பதே ஏழு மணிக்குத்தான். பதினோரு மணி வரை புதிய ஆடுகள் வெட்டப்பட்டு கொண்டே இருக்கும். நான் விரும்பி வாங்குவது தொடைப் பகுதிதான்.பின்னங்கால் என்றால் கூடுதல் பிரியம். கறியின் மென்மையும் ருசியும் தவிர்த்து , சத்து மிகுந்த நல்லி எலும்பும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. நான் எட்டரை மணி வாக்கில் செல்வேன்.
கடையில் நுழைந்தவுடன் முதல் வேலை அட்டெண்டன்ஸ் போடுவது. "அண்ணே நமக்கு ஒரு கிலோ " என்று சொல்லிவிட்டு அவர் கவனத்தைப் பெற்று விட்டு ஒதுங்கி விடுவேன். எந்த பாகம் தற்போது வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நமக்குப் பிடித்தமான கால் பகுதி என்றால் "ஐயகோ" அது வேறு யாருக்கும் போய்விடுமோ?என்று அலற ஆரம்பிக்க வேண்டாம். ஆட்டுக்கு நான்கு கால்கள் உண்டுதானே?. நீங்கள் உண்ணும் காலில் உங்கள் பெயர் கண்டிப்பாக இறைவனால்(அல்லது இயற்கையால்) எழுதப்பட்டிருக்கும். நமது கால் வரும் வரை பொறுமையாக மற்றவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது நடிக்க வேண்டும். "சாருக்கு அரைக்கிலோதான் , ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு போட்டு அனுப்புங்க, நான் வெயிட் பண்றேன் " என்று ஓவர் ஆக்ட் பண்ணாமல் சூசகமாக நடிக்க வேண்டும். அடுத்த தொடையை கொஞ்சம் நெருங்கும்போது லேசாக புலம்ப வேண்டும். "அண்ணா எம்மா நேரம் வெய்ட் பண்றது " என்று.

சரி கால் வந்தாச்சா ? "உங்களுக்கு எவ்ளோ சார் ?" என்று கேட்பார், இல்லையேல் கேட்க வையுங்கள். இதுதான் பிரம்மாஸ்திரம் "ஒரு கிலோ வேணும்ணா, அந்தத் தொடைய அப்டியே எடுத்து வைங்க எவ்ளோ இருக்குன்னு பாப்போம்" என்று கேளுங்கள். எடுத்து வைப்பார். "ஒண்ணு நூறு இருக்கே போட்டுரவா ?" என்பார். ஒரு நொடி யோசிப்பது போல் நடித்துவிட்டு " போடுங்கண்ணே இருக்கட்டும் " என்று நீங்கள் பிரம்மாஸ்த்திரதைப் பயன்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? கடைக்காரர் கீழே மீதமிருக்கும் சில்லறைகளையெல்லாம்(குட்டித் துண்டு இறைச்சிகள்) எடுத்துப் போடுவார். அது ஒரு கிலோ தேறாது என்று அவருக்கும் தெரியும். ஆனால் யாரிடம் விற்பது? சில்லறைகள் போக மீதமுள்ள எடைக்கு நமக்கு பிரியமான தொடைக் கறியிலிருந்து லேசாக ராவிக் கொடுப்பார். வெட்டும்போது இப்படி வெட்டுங்க அப்படி வெட்டுங்க என்று அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். (இமேஜ் பில்டப்). உங்களுக்கு பிடித்த அளவில் வீட்டுக்குச் சென்று வெட்டிக் கொள்ளுங்கள்.

சரிப்பா நான் ரொம்ப லேட்டா போயிட்டேன் கடையில கூட்டமும் இல்ல, தொடையும் இல்ல, இப்ப என்ன பண்றது? என்கிறீர்களா? இன்னொரு 'அஸ்திரம்' இருக்கிறது. " போன வாரம் கடையில உங்க தம்பி இருந்தாருண்ணா , நம்மள ஆள் தெரியாதா .. ஒரே எலும்பும் , சில்லறையுமா கெடந்துச்சு. வீட்டுல ஒரே திட்டு. வேற கடைல போய் வாங்குன்னு அம்மா ஒரே சத்தம். நமக்குதான் கடைய மாத்த மனசு வரல" என்று சொல்லிப் பாருங்கள். உள்ளதில் நல்லது கிடைக்கும் (இதை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. அம்மாவுக்கு பதில் மனைவி என்று சொன்னால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள்).
சரி அந்த 'சில்லறையெல்லாம்' யார் வாங்குவாங்க? என்று கடைக்காரருக்காக பரிதாபப்படுவது தெரிகிறது. கவலை வேண்டாம். வாங்கிவிட்டுத் திரும்பிப் பாருங்கள். சமீபத்தில் திருமணமான, கறி வாங்குவதில் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத ஓர் 'இலட்சிய இளைஞன்' உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பார். அவர் கண்ணில் இந்த ஆக்கம் படாதிருப்பதாக!!

நன்றி:nidurseasons.com

3 கருத்துகள்:

ஹஜாஸ் சொன்னது…

அட அப்படியே என்னுடைய அனுபவம் போலவே இருக்கு

பெயரில்லா சொன்னது…

பின் தொகையை விட முன் தொடை ருசி அதிகம். கழுத்து பாகத்தில் எலும்பு இருந்தாலும் அதுதான் பெஸ்ட் .அடுத்ததாக மார்கண்டம் .

பெயரில்லா சொன்னது…

nenjelumbu

கருத்துரையிடுக