செவ்வாய், ஏப்ரல் 15, 2014

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க

டாக்டர் எம்.ஆனந்த்பிரதாப், நிலைய மருத்துவ அதிகாரி,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,
சென்னை, இந்தியா 
கோடை காலத்தின் துவக்கத்திலேயே, வெயில், வறுத்தெடுக்க துவங்கி விட்டது. தினமும், இரண்டு வேளை குளிப்பது, பருத்தி ஆடைகள் அணிவது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவற்றின் மூலம், ஓரளவிற்கு, பாதிப்பில் இருந்து தப்பலாம். தோலில் ஏற்படும் சிறு கட்டிகள், தோல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதால், விழிப்போடு இருப்பது நல்லது

1. வெயில் காலத்தில், என்ன மாதிரி நோய் பாதிப்பு வரும்?
வெயிலின் தாக்கத்தால், தேமல் போன்ற சரும நோய்கள் வர வாய்ப்புள்ளது. அவற்றைச் சொரியக் கூடாது; சொரிந்தால், வேறு இடங்களுக்கும் பரவி விடும். அதோடு, ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பாதிப்பு அதிகமானால், மருத்துவரை சந்திப்பது நல்லது. கோடை காலத்தில், நாள் முழுவதும் ஒரே உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உள்ளாடைகளை, இரண்டு முறையாவது மாற்றுவது நல்லது. பருத்தி ஆடைகளையே பயன்படுத்த வேண்டும். காலை, மாலை என, இரண்டு வேளையும், குளிக்க வேண்டும்.
2. வேனல் கட்டி அதிகம் வருகிறதே ஏன்?; தடுக்க என்ன வழி?
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பால், உடலில் அக்னிக் கட்டிகள் (வேனல் கட்டி) வரும். கை, கால், முகத்தில் அதிகம் வர வாய்ப்புள்ளது. உச்சி வெயில் நேரத்தில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தால், தலையில் தொப்பி போட்டுக் கொண்டோ, குடை பிடித்துக் கொண்டோ செல்வது நல்லது. வேனல் கட்டிகள், நான்கு, ஐந்து நாட்களில் தானாக சரியாக விடும். வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்சத்துள்ள பழங்களை சாப்பிடலாம்.

3. கோடையில் அம்மை பாதிப்பு அதிகமாக வருகிறதே?
கோடையில், அம்மை நோய் அதிகம் வர வாய்ப்புள்ளது. வாய் ஓரம், வயிறு, மார்பு பகுதிகளில் பொரிப்பொரியாக பட்டை கோடு போட்டது போன்ற, தட்டம்மை வரும். அரிப்பு உள்ளது என, சொறிந்தால், ‘சீல்’ பிடிக்கும். வெயிலில் செல்லக்கூடாது. தளர்வான உடைகளையே அணிய வேண்டும்.அடுத்தது, நீர் கொப்பளம் எனப்படும், ‘சிக்கன் பாக்ஸ்’ அம்மை வரும். வைரஸ் பாதிப்பால் வருவதால், இது எளிதில் மற்றவர்களுக்கு பரவக் கூடியது. இதனால், வெளியில் வராமல் இருப்பது நல்லது. இதற்காக, டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஒரு வாரத்தில் சரியாகி விடும். அம்மை நோயுடன், காய்ச்சல், வலி இருந்தால், டாக்டரை பார்ப்பது நல்லது.

4. தோல் நிறம் மாறுவது ஏன்?; கோடை காலத்தில் தாகம் அதிகம் எடுக்கிறதே?
‘மெலனின்’ சுரப்பி அதிகரிப்பால், தோல் கறுப்பு நிறத்திற்கு மாறும். மாநிறத்தில் உள்ளோரும் கறுப்பாகி விடுவர். ‘சன் கன்டிரோல் ஆயின்மென்ட்’ கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, கை, கால், முகத்தில் தேய்த்துக் கொள்வது நல்லது. வியர்வை அதிகம் வரும். நாக்கு வறண்டு போகும். உதடுகளில் வெடிப்பு ஏற்படும். உடல் நீர், வெப்பத்தால் ஆவியாகி விடுவதால், தாகம் அதிகம் எடுப்பது இயல்பு தான். தினமும், 4 முதல், 5 லிட்டர் தண்ணீர் குடித்தால், இந்த பாதிப்பில் இருந்து தப்பலாம்.

5. வெயிலில் வேலை செய்வோருக்கு, கோடையால் என்ன பாதிப்பு வரும்?
வெயிலில் அதிகம் வேலை செய்வோருக்கு, வேர்க்குரு பாதிப்பு வரும். குளிர்ச்சியான உணவு, நீர் ஆகாரம் சாப்பிடுவது நல்லது. கடைகளில், வேர்க்குரு பாதிப்பை தடுக்கும் பவுடர்கள், பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சந்தனம் தடவுவதும், நல்ல பலன் தரும். நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்வோருக்கு, ‘சன் ஸ்டிரோக்’ என்ற மயக்க வியாதி வரும். திடீரென மயங்கி விழுவர். இவர்களுக்கு, காக்கா வலிப்பு வர வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்பு வருவோர், உடனடியாக டாக்டரை பார்த்து, சிகிச்சை பெற வேண்டும். மூன்று வேளையும் நன்கு சாப்பிட வேண்டும், மயக்கத்துடன், பசியுடன் வேலை செய்யக்கூடாது.

6. நீர் சுறுக்கு பாதிப்பு வரும் என்கின்றனரே, அப்படியென்றால் என்ன?
கோடையில் உடல் வெப்பம் அதிகரிப்பால், சிறுநீர் கழிக்கும் போது, கடும் எரிச்சல் வரும்; சிறு நீர் சொட்டுச் சொட்டாக செல்லும். இதைத் தான், நீர் சுறுக்கு என்கிறோம்.
இத்தகைய பாதிப்புள்ளோர், மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டும். அதற்காக, போலி டாக்டர்களிடம் போய் ஏமாற வேண்டாம்; அவர்கள் கண்ட மருந்துகளைக் கொடுத்து, நிலைமையை சிக்கலாக்கி விடுவர். இது ஆரம்ப நிலை என்றால், எலுமிச்சை சாறு, தர்பூசணி, இளநீர், வெள்ளரி, கிர்னி பழம் போன்றவற்றை, தொடர்ந்து சாப்பிடுவதால் நிலைமை சரியாகும்.

7. ‘டாஸ்மாக்’ கடைகளே கதி என கிடக்கும் ‘குடிமகன்’களுக்கு என்ன பாதிப்பு வரும்?
தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரக பாதையில் கல் அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எப்போதும் ‘டாஸ்மாக்’ கடைகளே கதி என கிடப்போருக்கு, இந்த பாதிப்பு அதிகம் வரும். இவர்கள் போதையேற்றினாலும், தண்ணீர் சரியாக குடிக்க மாட்டார்கள். ஆரம்ப நிலையில், வாந்தி, கீழ் முதுகு வலி, சிறுநீர் செல்லும்போது வலி இருக்கும். சிறுநீரில் ரத்தம் வரவும் வாய்ப்புள்ளது. பரிசோதனையில், சிறு கற்கள் இருப்பது கண்டறிந்தால், சிறுநீரக சிகிச்சை பிரிவுகளில், ஒலி அலைகள் மூலம், கல் உடைக்கும் கருவியைக் கொண்டு, கற்களை உடைத்து விடலாம். கற்களின் அளவு பெரிதாக இருந்தால், அறுவைச் சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும்.

8. சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கு எந்த மாதிரி பாதிப்பு வரும்?
கோடை காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்; இந்த சூழல், வெளிநாட்டினருக்கு ஒத்து வராது. மயக்கம், உதட்டில் வெடிப்பு வரும். சூரிய வெப்பத்தை தணிக்கும் களிம்புகளை தடவிக் கொள்ளலாம்; வெண்ணெயும் தடவிக் கொள்ளலாம். புற ஊதா கதிர்கள் பாதிப்பால், தோலில் சிறு கட்டி வரலாம். அது, தோல்
கேன்சராகவும் இருக்க வாய்ப்புள்ளது.

9. கிராமப்புறங்களில் பெரிய அளவில் பாதிப்பு வருமா?
கிராமப்புறத்தில், குடிநீரின் தரம், சரியாக இருக்கும் என, கூற முடியாது. இதனால், வாந்தி, பேதி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீரை, ‘ரோல் பாய்லிங்’ முறையில் காய்ச்சி, ஆற வைத்து குடிப்பது நல்லது. வெயிலில் செல்வோர், கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து கொள்வது நல்லது.

10. கோடைக்கும், வழுக்கைக்கும் தொடர்புண்டா; அசைவ உணவுகள் சாப்பிடலாமா?
தலையில், பொடுகு பாதிப்பு வரும். தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். உடம்புக்கு ஒத்து வராது என, பலர், தினமும் தலை குளிப்பதில்லை. வாரத்திற்கு ஓரிரு முறை தலை குளிக்கும் பழக்கம் உள்ளது. இது சரியல்ல. கோடை காலத்தில், தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். இல்லாவிட்டால், முடி கொட்டும்; அலட்சியமானால் வழுக்கை விழவும் வாய்ப்புள்ளது. கோடை காலத்தில், கோழிக்கறி (சிக்கன்) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது, உடல் வெப்பத்தைக் கூட்டச் செய்து, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடும். முடிந்த அளவு, எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். மொத்தத்தில், கோடை கால பாதிப்பில் சிக்காமல் தப்புவது, அவரவர் கையில் தான் உள்ளது.


நன்றி: தினமலர்

2 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு .

anthimaalai@gmail.com சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.

கருத்துரையிடுக