ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை

உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை
(அந்நாடுகளின் மொத்த சனத்தொகை அடைப்புக்குறிக்குள்)

1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000)
2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000)
3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000)
4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000)
5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000)
6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000)
7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000)
8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000)
9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000)
10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000)
11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000)
12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000)
13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000)
14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000)
15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000)
16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000)
17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000)
18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000)
19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000)
20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000)
21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000)
22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000)
23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000)
24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000)
25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000)
26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000)
27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010)
28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000)
29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000)
30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000)
31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000)
32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000)
33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000)
34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000)
35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000)
36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000)
37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000)
38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000)
39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000)
40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000)
41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000)
42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000)
43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000)
44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000)
45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000)
46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000)
47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000)
48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000)
49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000)
50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000)
51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000)
52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000)
53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000)
54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000)
55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000)
56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000)
57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000)
58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000)
59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000)
60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000)
61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000)
62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000)
63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000)
64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000)
65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000)
66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000)
67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000)
68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000)
69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000)
70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000)
71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000)
72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000)
73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000)
74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000)
75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000)
76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000)
77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000)
78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000)
79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000)
80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000)
81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000)
82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000)
83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000)
84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000)
85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000)
86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000)
87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000)
88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000)
89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000)
90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000)
91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000)
92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000)
93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000)
94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000)
95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000)
96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000)
97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000)
98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000)
99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000)
100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000)
101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000)
102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000)
103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000)
104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000)
105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000)
106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000)
107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000)
108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000)
109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000)
110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000)
111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000)
112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000)
113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000)
114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000)
115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000)
116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000)
117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000)
118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000)
119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000)
120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000)
121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000)
122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000)
123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000)
124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000)
125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000)
126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000)
127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000)
128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 )
129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000)
130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000)
131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000)
132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000)
133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000)
134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000)
135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000)
136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000)
137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000)
138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000)
139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000)
140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000)
141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000)
142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000)
143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000)
144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000)
145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000)
146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000)
147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000)
148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000)
149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000)

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு(1200)
 
பொருள்: ஓ நெஞ்சமே! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய். அதைவிட நீ மிக எளிதாக கடலைத் தூர்ப்பதற்கு(மண்ணால் மூடுவதற்கு) முயற்சி செய்யலாம்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின் உன் வாழ்வின் முதல் பெரிய தோல்வி அதுவாகத்தான் இருக்கும்.

படுத்தவுடன் தூங்கிப் போக என்ன செய்ய வேண்டும்?

Stop Being Lazy Step 1 Version 3.jpgதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.
ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்


செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.

அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.

நன்றி:kiruukkal.blogspot.com

சனி, ஆகஸ்ட் 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. (1199)

பொருள்: நான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் காதுகளுக்கு இனிமையாகத்தான் இருக்கின்றது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

நூலறிவு(புத்தகத்தால் வரும் அறிவு) குளம் போன்றது.
மெய்யறிவு நீர் ஊற்றைப் போன்றது.

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்!

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

picture couresy: naturalfoodworld.wordpress.com
மென்பொருள்(சாப்ட்வேர்) நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.
 
picture courtesy: naturalfoodworld.wordpress.com
வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.
தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.
நன்றி:naturalfoodworld.wordpress.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி 

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 
வாழ்வாரின் வன் கணார் இல் (1198)

பொருள்: காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களைவிட வன்கண்மை(வலிய நெஞ்சம்) உடையவர் யாரும் இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

நன்றாக மனம் விட்டுச் சிரியுங்கள். உங்களுடைய சிரிப்பில் உலகம் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள்; உங்களுடைய அழுகையில் யாரும் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.நீங்கள் மட்டும்தான் அழுது கொண்டு இருப்பீர்கள். உங்களுடைய வருத்தம்(கவலை) இந்த உலகத்திற்குத் தேவையில்லாத ஒன்று. ஆகையால் சந்தோஷத்தைப் பற்றிப் பேசி, அவற்றை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். (வில்காய்ஸ்மித்)

வியாழன், ஆகஸ்ட் 28, 2014

கண்ணீர் அஞ்சலி

எமது இணையத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரும், அரசியல் நோக்கரும், பத்தி Billede: நட்புக்கும் தோழமைக்குமான கலையரசனின் அப்பா காலமாகிவிட்ட செய்தியை கொடுந்துயருடன் அறியத்தருகின்றேன. கலையரசனின் தந்தையார் அமரர் சின்னர் தர்மலிங்கம். முன்னாள் லிகிதர் இலங்கை இராணுவம்எழுத்தாளரும், kalaiy.blogspot.com எனும் பெயரில் வலைப்பதிவை நிர்வகித்து, இயக்கி வருபவருமான நண்பர்.த.கலையரசன் அவர்களின் தந்தையார் திரு.சின்னர் தர்மலிங்கம் அவர்கள் இன்றைய தினம்(28.08.2014) அதிகாலை இலங்கையில் காலமானர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறோம். அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.
இங்ஙனம்
ஆசிரியபீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
 
 
பருவரலும் பைதலும் காணான் கொல் காமன் 
ஒருவர்கண் நின்று ஒழுகு வான். (1197)

பொருள்: இருவரையும் சேர்த்து வைத்து காதல் நாடகத்தை நடத்தாமல், ஒருவரிடம் மட்டுமே நின்று காமன் (மன்மதன்) நாடகம் நடத்துவதால் (வாட்டுவதால்) என் வருத்தத்தையும் அவன் அறியானோ?

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

எப்போதும் நீ உனது எதிரியைக் குறைவாக மதிப்பிடாதே.

புதன், ஆகஸ்ட் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல 
இருதலை யானும் இனிது. (1196)
 
பொருள்: 'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது. காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்தால் அதுவே மிகவும் இனிமையானது.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
 

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளக் கடை. (1195)
பொருள்: நாம் காதல் கொண்டவர், நம் மீது காதல் கொள்ளாவிட்டால் நமக்கு என்ன நன்மை அவர் செய்யப் போகிறார்.


இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்


 
பெண்கள் மதிப்புடனும், வளமுடனும், நலமுடனும் வாழும் நாடுதான் சிறப்படையும்; உயர்வடையும்.

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 7.(கடந்த 19.08.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
 
 சதுரம் 1.
திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2
இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய
காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.
விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க
நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை.....
(தொடரும்) 
இந்தத் தொடரின் பகுதி 8 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (02.09.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.  

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். (1194) 
பொருள்: காதலரால் விரும்பப்படும் தன்மையைப் பெறாத மகளிர் முன் செய்த நல்வினைப் பயனை உடையவர் அல்லர். 

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
நீருள்ள குளத்தைத் தேடி தவளைகளும், தடாகத்தைத் தேடி அன்னப் பறவைகளும் தாமாகவே வருகின்றன. அதேபோல் முயற்சியும், உயர்ந்த குறிக்கோளையும் உடையவனைத் தேடி இன்பமும், புகழும் வந்து சேரும். 

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

கூகுள் செய்து முடித்த மெய் சிலிர்க்கும் சாதனை!

ஆக்கம்: கி.செ.துரை, டென்மார்க்
சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்..
உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது...
இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும்.
goo3தமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும்.
” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம் கொடுத்து உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியவர் தவத்திரு. தனிநாயகம் அடிகளார்.
உலக மக்கள் எல்லோருமே ஒருவருக்கு மற்றவர் உறவினர் என்று கணியன் சொன்ன கருத்தின் உட்பொருள் யாது..? 
” ஒன்றே உலகம் என்ற கொள்கையை அமல்படுத்த உலகில் யார் முயன்றாலும் அதை நாம் செய்யவில்லை என்று பேதம் காணக்கூடாது அச்செயலானது நமது உறவுகளின் செயலே..” என்று பொதுமைப்படுத்திப் பார்ப்பது நமது கடமை என்கிறார் அவர்.
கணியன் வழியில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றான் வள்ளுவன், உலகெல்லாம் உணர்ந்தோதற்கு அரியவன் என்று முதற் பாடலிலேயே உலகத்தைப் பாடினார் சேக்கிழார்.. அவர்கள் கருத்தை இணையம் சிரமேற்கொண்டு, இணைய முகவரிகள் டபிள்யூ என்ற எழுத்தில் உலகத்தை முதலாவதாகக் கொண்டு ஆரம்பித்தன.. இது பழைய கதை.
இனி வரப்போவது புதிய கதை..
ஒன்றே உலகம் என்ற கருத்தை நிறைவேற்றும் உலக அரசாக மாறிக்கொண்டிருக்கிறது இணையம், இந்த இணைய உலகில் மாபெரும் சக்தியாக இருப்பதுதான் கூகுள் நிறுவனம்.
சேர்ஜி பிறின்ற், லரி பேஜ் என்ற இரண்டு இளைஞர்களும் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நவீன கற்பனையே இன்று கூகுளாக மலர்ந்து நிற்கிறது.
1995ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2000 ம் ஆண்டில் ஒரு பில்லியன் மக்களால் பாவிக்கப்படும் தேடல் இயந்திரமாக உருவெடுத்தபோது உலகம் அதன் காலடியில் சுழன்றது.

goo22006ல் உலகப் பிரசித்தி பெற்ற காணொளி ஊடகமான யூருப்பை விலைக்கு வாங்கியது, 2012ம் ஆண்டில் 50.000 பேர் பணியாற்றும் நிறுவனமாக மாறியது, 2014ல் கூகுள் கிளாஸ் என்ற புதிய கண்ணாடியை அறிமுகம் செய்தது, 2015ல் உலகம் முழுவதிற்குமான காற்றலை மின்சாரம் வழங்கும் கேபிளை அறிமுகம் செய்யவுள்ளது, சாரதி இல்லாமல் ஓடும் கார், பறக்கும் பலூனில் சற்லைற் 2019ல் சர்க்கரை வியாதியை அளவிடும் கண்களில் மாட்டும் கூகுள் கொன்ராக்ற் லென்ஸ், 3 டி கைத்தொலைபேசி என்று அசுர வேகத்தில் முன்னேறிச் செல்கிறது.
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் என்ற தாரக மந்திரத்திற்கு அமைவாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விடயத்தை அறிமுகம் செய்யும் புதுமைத்தாபனமாக ஒளி வீசுகிறது கூகுள்.
இதுதவிர பல தொழில்களிலும் பெரு முதலீடு செய்து வருகிறது.. உதாரணமாக 2011ம் ஆண்டு 168 மில்லியன் டாலரில் சூரிய ஒளி மூலம் சக்தியை உருவாக்கும் ஒளித்தோட்டத்தை கலிபோர்ணியாவில் உருவாக்கியது, அதே நேரம் 100 மில்லியன் டாலரில் காற்றாடி மின்சாரம் உருவாக்கும் பண்ணையை உருவாக்கியது. 2015ல் அதிசிறந்த புதுவகை மின் காற்றாடியை அறிமுகம் செய்யவுள்ளது.
உலகத்தின் அதிசிறந்த றோபோக்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தையும் கூகுள் வாங்கிவிட்டது, எக்ஸ்புளோருக்கு போட்டியாக முன்னேறிவிட்டது.. இப்படி அதன் வளர்ச்சியை அடுக்கிக் கொண்டே போகலாம்..

இருப்பினும் இந்தப் பீடிகைகளை எல்லாம் தாண்டி இப்போது கூகுள் வைத்துள்ள புதிய காலடிதான் நம்மை வெகுவாகச் சிந்திக்க வைக்கின்றன.
goo6அமெரிக்காவின் கலிபோர்ணியாவில் உள்ள சி.ஐ.ஏ உளவுப்பிரிவு கட்டிடத்தின் நடுப்பகுதியில் உலகத்தில் யாருமே நெருங்க முடியாத பாதுகாப்புப் பகுதியில் பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டியிறைத்து மிகமிக இரகசியமான ஆய்வு கூடம் ஒன்றை கூகுள் அமைத்துள்ளது.
பெயர் குறிப்பிடாத விஞ்ஞானி ஒருவர் தரும் தகவல்களின்படி.. இங்கு உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலரை பணிக்கு அமர்த்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட புதுவகையான ஆய்வுகளை கூகுள் செய்து கொண்டிருக்கிறது.
புதுமைப் பொருளாதாரம்.. அறிவால் உலகத்தை ஆட்சி செய்யும் புதுமை வலு.. என்று கூகுள் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றிபெற்றால் நிச்சயமாக எதிர்கால உலகத்தை வெற்றி கொள்ளப்போகும் புதிய அரசு இணையம்தான்.. அதன் சக்கரவர்த்தியாக முடிசூடப்போவது கூகுள்தான் என்று இலகுவாகக் கூறிவிட முடியும்.
சூரிய ஒளியிலும், காற்றிலும் உலகத்தின் சக்திவள தேவையை பூர்த்தி செய்ய கூகுள் முயல்கிறது.. வெற்றி கிட்டினால் எண்ணெய்வள நாடுகளின் முதன்மை தானாகவே மறைந்து போய்விடும்.
இதுதவிர மிகவும் அபார சக்தி கொண்ட ரோபோக்களை உருவாக்கும் பணிகள் இன்னோரிடத்தில் நடக்கின்றன.. உதாரணம் 150 கிலோ எடையைத் தூக்கி பணிபுரியும் புதுவகை ரோபோக்கள் தொழிற்கூடங்களில் குவிந்து மனிதனால் முடியாத பணிகளை செய்யப்போகின்றன… போர்க்களத்திற்கும் ரோபோக்கள் வரும்..
goo4எல்லாவற்றையும் விட முக்கியம் மரபணு மாற்றம் மூலமாக மனிதர்கள் அனைவரையும் நூறாண்டு காலம் வாழவைக்கும் புதுவகை ஜீன் தொழில் நுட்பத்தை கூகுள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது… புற்றுநோய் வந்தவர்கள் கூட உயிர் தப்பி நூறாண்டு காலம் வாழ வழிசெய்யப்போகிறது கூகுள்.. இதனால் கிடைக்கும் வருமானம் சொல்லி முடியாத தொகை...

சென்ற ஆண்டே கூகுள் எக்ஸ் வேலைத்திட்டத்திற்காக ஒரு பாரிய (கொன்ரேனர்) கொள்கலத்தில் மிகவும் இரகசியமான அதிக விலை கூடிய பொருட்களை கூகுள் இறக்குமதி செய்துள்ளது, இதில் இருப்பது யாருக்குமே தெரியாத மர்மமாக உள்ளது.
இந்த ஆண்டு 2.1 பில்லியன் டாலர் செலவில் சிந்தனையின் ஆழம் என்ற கண்டு பிடிப்பை விலைக்கு வாங்கியுள்ளது, இதை ஆதாரமாக வைத்து மனிதனின் மூளையை 2029ம் ஆண்டில் உருவாக்கிவிட முயற்சி எடுத்துள்ளது. இந்த மனித மூளைத் தேடல் இயந்திரம் அசப்பில் மனித மூளையாகவே இருக்கும்.
goo5மேலும் என்னென்ன காரியங்களை எல்லாம் கூகுள் ஆய்வு செய்கிறது என்று தெரியவில்லை விஞ்ஞானி அஸ்ரோ ரெலர் தலைமையில் பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இணைந்து கூகுள் எக்ஸ் என்ற இப்பணியை முன்னெடுத்துள்ளார்கள்.
அமெரிக்க அரசு இதற்குத் துணையாக இருக்கிறது.
உலகத்தை வெற்றிகொள்ள சீனர்களும், ரஸ்யர்களும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தை கனவேகத்தில் முந்திவிட கூகுள் இரகசியமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகயுத்த காலத்தில் அணு குண்டை உருவாக்க நடந்த போட்டியில் ஜேர்மனியை அமெரிக்கா வெற்றி கொண்டு முதலாவது அணு குண்டை உருவாக்கியது போன்ற அறிவியல் போட்டி இதுவாகும்.
அரசியல், பொருளாதாரம், சமுதாயம், போர், மதம் என்று அலைக்கழியும் இன்றைய உலகம் ஒரு கட்டத்தில் மறைந்துவிட முழு உலக உருண்டையையும் ஒன்றாக்கி இயக்கும் ஒரேயொரு இணைய யுகம் மலரும் நாள் மிகவும் அண்மையில் தெரிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஒன்றே உலகம்…
அன்று ஆதித் தமிழன் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது கூகுள்..
கூகுள் எக்ஸ் உலகத்தை வெல்லுமா..? கூகுளை வெல்லக்கூடிய பலமுள்ள இன்னொன்று அப்பிள் நிறுவனம் அதுவும், கூகுள் அளவுக்கு தன்னை விஸ்த்தரிக்கவில்லை.
21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பாய்ச்சலில் கூகுள் நிற்கிறது இதை அவதானிப்பது தமிழர் அறிவியல் கடமையாகும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே 
வாழுநம் என்னும் செருக்கு. (1193)
பொருள்: காதலருடைய அன்பைப் பெற்றவர்க்குப் பிரிவுத்துயரம் வந்தாலும் மறுபடியும் கூடுவோம் என்று நம்பிக்கை இருப்பது இயல்பு.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

ஒழுக்கம் என்பது பெரிய ஒரு ஆறு.
அதன் கிளை ஆறுகள்தான் நல்ல பழக்கங்கள்.

சனி, ஆகஸ்ட் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

வாழ்வார்க்கு வானம் பயந்துஅற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)
பொருள்: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கின்றவர்க்கு வானம் மழை பெய்து உதவினாற் போன்றது.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால் சாத்தானையே நீ ஏமாற்றி விடலாம்.

போலாமா....போலாமா....மீனு வாங்க போலாமா....?

ஆக்கம்: தோழன் மபா, சென்னை, தமிழ்நாடு.இந்தியா 


ஞாயிற்று கிழமை வந்தாலே....மட்டனா, சிக்கனா அல்லது மீனா எது வாங்குவது?  என்று வீட்டில்   'இங்கி பிங்கி' போட்டு பார்ப்போம்.  என்னதான் அலசி ஆராய்ந்தாலும்,  கடைசியில் மீன் வாங்குவது என்று முடிவாகும்.  அவ்வப்போது மட்டன் வாங்கினாலும் சிக்கன் பக்கம் அவ்வளாவாக தலைகாட்டுவதில்லை.  ஏனோ தெரியவில்லை சிக்கன் மீது எப்போதும் ஒரு பயம் உண்டு.  மீன் அப்படி அல்ல, துணிந்து வாங்கலாம்.  பிரச்சனை இல்லாதது. 

    சென்னையில் திருமுல்லைவாயில், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் பழவேற்காடு மீன்கள் கிடைக்கும். பழவேற்காடு இறா(இறால்) சற்று பெரியதாக இருக்கும்.  இங்கு கிடைக்கும் மீன்கள் நல்ல ருசியாக இருக்கும் என்பது நிஜமான ஒன்று.  
கடற்கரை நகரான சென்னையில் என்றுமே மீன் தட்டுப்பாடு வந்ததில்லை. மீன்பிடி கட்டுப்பாடு காலங்களில் கூட ஆந்திராவிலிருந்து மீன்கள் சென்னைக்கு வந்துவிடும்.
    

சிலநேரங்களில் மீன் வாங்க காசிமேட்டுக்கு போவதுண்டு. சுற்றி கண்டைனர் லாரி அணிவகுத்து நிற்க கடற்கரையில் மீன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.  அங்கு சிறிய சிறிய படகுகள் வந்த வண்ணம் இருக்கும். பெரிய பெரிய 'வஞ்சிரம்' மீன்கள் ஏலம் போகும். யார் வேண்டுமானாலும்  ஏலம் கேட்கலாம். 4அல்லது 5 கிலோ எடை உள்ள வஞ்சிரம் மீனை 2 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து பிரித்துக் கொள்வோம்.அங்கே இருக்கும் மீன் சுத்தம் செய்பவர்களிடம் கொடுத்துவிட்டல் போதும் அவர்கள் மிக நேர்த்தியாக  யாருக்கும் கூடுதல் குறைவின்றி சமமாக  பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.  அவர்கள் மீனை பிரிக்கும் முறை நிச்சயம் பாராட்டுக்குரியது. இங்கு கை நீளமுள்ள பெரிய பெரிய இறா(ள்) இங்கு சல்லிசாக கிடைக்கும். 

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது காசிமேடு மீன் மார்கெட்டுக்கு போய் பாருங்க...காவிரி மீனை காசுகொடுக்காமல் கொண்டுவந்தேன்.


எங்கள் ஊர் திருவாலங்காடு (நாகை மாவட்டம்) காவிரி ஆற்றில் பிரசித்தமான 'வாளை' மீன் கிடைக்கும். நல்லா நீளமா...வழ வழவென்று பார்க்கவே அழகா இருக்கும். அந்த மீன் வாங்க வேண்டுமென்றால் விடியற்காலை 5 மணிக்கு  சட்ரசுக்கு (காவிரியிலிருந்து விக்ரமாதித்யன் ஆறு பிரியும் இடம்)  செல்லவேண்டும். அப்போதுதான் வாளை மீன் கிடைக்கும். இருள் பிரியாத அந்த நேரத்தில் கிராமத்து மக்கள்  போர்வையை போர்த்திக் கொண்டு  ஆத்துப்பக்கம் நடையை கட்டுவார்கள். ஆற்றில் பெரும் பெரும் கூடையை கயிரில் கட்டி தண்ணி வெளியே பீச்சிக் கொண்டு வரும் வழியில் கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீர் வரும் வழியில்  ஏறி வரும் மீன்கள்   துள்ளி குதிக்கும்போது அந்தக் கூடையில் விழுந்துவிடும்.  இதில் அதிகமாக 'கெண்டை குஞ்சு' போன்ற மீன்கள்தான்  கிடைக்கும்.  வாளை மீனை வலைவைத்து பிடிப்பார்கள்.  அன்றும் அப்படித்தான்.  நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக்கொண்டு இருந்த நேரம். என்னை மீன் வாங்க அனுப்பினார்கள்.  எனது 'ஹெர்குளிஸ் கேப்டனை' எடுத்துக் கொண்டு அங்கு போனால், அந்த விடியற்காலை நேரத்திலும்  நல்ல கூட்டம் இருந்தது. இப்போது போல் அப்போதெல்லாம் எடை வைத்து மீன் விற்பதில்லை. மீனை கண்ணால் பார்த்தே விலையை சொல்லி விடுவார்கள்.  ஒரு பெரிய கூடையில் மீன்களை போட்டு விற்பனை செய்தார்கள்.  நானும் கூட்டத்தில் நின்றுக் கொண்டு கையை நீட்டிக் கொண்டு இருந்தேன். எல்லோர் கைக்கும் மீன் சென்றது என் கைக்கு மீன் வரவில்லை. கையை இன்னும் நீட்டவே மீனை என் கையில் திணித்தார் விற்பவர். மீனை வாங்கி ஒயர் கூடையில் போட்டுக் கொண்டு பணத்தை நீட்டினால் அவர் வாங்குவதாக இல்லை. நானும் ஒரு அரை மணி நேரமாக 'பணம் இந்தாங்க வாங்கிக்கிங்க" என்று கிளிப்பிள்ளையாய் கூவிக் கொண்டு இருந்தேன். அவர் கண்டுக் கொள்வதாயில்லை.  பொறுத்துப் பொறுத்து பார்த்த நான், பணத்தையும் மீனையும் எடுத்துக் கொண்டு சிட்டாய் சைக்கிளை  எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.   அன்று பணம் கொடுக்காமலேயே வாளைமீன் எங்க வீட்டில் வாழை இலைக்கு வந்தது.
  

இன்றும் எனது அம்மா இதை சொல்லி சொல்லி  என்னை கேலி செய்வார். 


முன்பெல்லாம் எங்கள் ஊருக்கு மாலையில்தான் கடல் மீன் வரும். என் தாத்தா வாங்கிக்கொண்டு வருவார். வாழமட்டையில் வைத்துதான் மீனை கட்டித்தருவார்கள். 

காசிமேடு மார்க்கெட்


மீன் வகைகள்
உலகில் 22000 வகை மீன்கள் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது.   என்னென்ன நல்ல சமாச்சாரம்  உள்ளனவோ அவை அனைத்தும்  மீன் உணவில் இருக்கிறது.  அத்தகைய சக்தி வாய்ந்தது மீன் உணவு.  உலகம் 75 சதவீதம் நீரால்  சூழப்பட்டு இருப்பதால் மீன் உணவிற்கு என்றுமே பஞ்சமே ஏற்பட்டதில்லை.  

மீன்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கடல் மீன்கள் மற்றொன்று நாட்டு மீன்கள்.  ஆறு, குளம், ஏரி, கண்மாய், குட்டை போன்ற இடங்களில் வாழக்கூடியது நாட்டு மீன்கள். உப்பு நீரில் மட்டுமே வாழ்வது கடல் மீன்கள். இது இரண்டுமே  அந்தந்த வாழ்விட மக்களால் உண்ணக்கூடியது. எங்கள் ஊரில் நாட்டு மீனைவிட கடல் மீனைத்தான் அதிகம் விரும்புவர். ஏனென்றால் நாட்டு மீனில் சேற்று நாற்றம் சிறிது அடிக்கும். அதனை நிறைய பேர் விரும்பமாட்டார்கள். நாட்டு மீன்களில், விரால், ஆரா, கெளுத்தி, கெண்டை,  கட்ளா, அயிரை, கொறவை, தொய்மா, சிலேப்பி, சார, வாளை போன்ற மீன்கள், மனிதர்கள் சாப்பிடும் பட்டியலில் இருக்கின்றது. கடல் மீன்களில் சங்கரா, வஞ்சிரம், வௌவால், கொடுவா, கிழங்கான், நெத்திலி, அயிலை(கானாங் கெழுத்தி), மத்தி. உறி, பாரை, தேங்கா பாரை, திருக்கை, சுறா, பால் சுறா, சுதும்பு, காரப்பொடி, சூரமீன், காளா, நாக்கு மீன், கவலை, பொறுவா, வாளை,ஓரா, உளுவை, கீச்சான், கோளா, ஷீலா, சூடான், பன்னா  போன்ற மீன்கள் மனிதர்களின் தேவைக்காக  கடலில் உயிர் வாழ்ந்துக் கொண்டு  இருக்கிறது.  மீன் ஆயுளுக்கும் துணை புரியும். 


மீன் உணவில் ரொம்ப முக்கியமானது ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட்.  இதில் உள்ள ஓமேகா 3 வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால்தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைத்துவிடுகிறது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

உலகம் முழுவதும் மீன் உணவை வைத்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் கண்கள், இருதயம், தோல் போன்றவைக்கு  மிகவும் நல்லது என்கிறது ஒரு ஆய்வு. அதோடு தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது இன்னொரு ஆய்வு. 


பூஜைகளில் மீன்கள்.

பூஜையில் மீன்

என்னது பூஜைகளில் மீனா? என்று திகைக்க வேண்டாம்.
                       
மீன்கள் உலக மக்களிடையே எப்போதும் இணக்கமாகவே இருந்து வருகிறது. ஆதிகாலம் தொட்டு உலகில் முதலில் தோன்றிய உயிரினம் என்ற அடிப்படையில் மனிதர்கள் அதனை சில இடங்களில் பூஜிக்கவே செய்கின்றார்கள். வங்காள பிராமணர்கள் தங்களது திருமண சடங்கின் போது மீனையே தெய்வமாக வைத்து வணங்குவார்கள்.  மீனை 'கடல் புஷ்பம்' என்று கொண்டாடுவார்கள். திருமண சடங்கின்போது மீனே பிரதானமாக அமையும்.  திருமண சடங்கு முடிந்த பின் அனைவருக்கும் மீன் உணவே பரிமாறப்படும். வங்காள பிராமணர்கள் சமையலில் மீன்ககள் தினந்தோறும் இடம் பெறும்.
     

மணமக்கள் அலங்காரத்தில் மீன்கள்

இந்தியாவின் வடக்கே 'லடாக்' பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆறு மற்றும் குளங்கள் வற்றிப்போய் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் மீன்களை பிடித்து நீர் ஓடும் ஆற்றில்  விடுவார்கள். அப்படி செய்வது புண்ணியத்தைத் தரும் எனவும் தாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாய் இருக்கும் என்றும்  நம்புகின்றனர்.  அதனால், அவர்கள் மீன் உணவை சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      நம்மூரில் கோயில் குளங்களில் இன்றும் மீன் வளர்ப்பதை பார்த்திருக்கின்றோம். எந்நேரமும் சலசலவென்று மீன்கள் இயங்கிக்கொண்டு இருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசப்படுத்துகிறது. 


அதேபோல் ஊர் குளமோ அல்லது கோயில் குளமோ இப்போதெல்லாம் காண்ட்ராக்ட் விட்டு மீன் வளர்க்கின்றனர். அதனால் அந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதிலை.  பயன்படுத்த முடிவதில்லை.  'இப்போதெல்லம் யாரும் குளத்தில் குளிப்பதேயில்லை' என்ற எனது கட்டுரை கல்கியில் வெளிவந்தது.    இதனால் கிரமங்களில் கூட ஆறு குளம் மீன் போன்றவை நமக்கு அந்நியமாகவே மாறிவிட்டன எனலாம்.


நமது தென் மாவட்டங்களில் கூட கோயில் குளங்களில்  'மீன் கொடை' கொடுக்கப்படுகிறது.  ஊர் பெரியவர்களால்  நல்ல நாள் குறித்து அன்று கோயில் குளத்தில் மீன் பிடித்து எடுத்துக் கொள்வார்கள்.  அவரவர் பிடிக்கும் மீன் அவரவருக்கு. 

இப்படி காலம்காலமாக மனிதன் மீன்களை சார்ந்தே தனது வாழ்க்கையை அமைத்திருக்கின்றான். ஆறுகளின் ஓரத்தில் நாகரிகம் வளர்ந்ததும் ஒரு காரணம்.  மீன்கள் பிடிப்பதும் அதை உணவாக சமைப்பதும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அது அந்தந்தப் பகுதி கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. 
'மீன் வாங்கும் போது நாறும் சமைக்கும் போது மணக்கும்(வாசனை)'  என்று கேலியாய் கூறினாலும் மீன்  உலக மக்களை என்றென்றும் வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

'நாளை ஞாயிற்றுக் கிழமை...... 
மீண்டும் முதல் பாராவைப்(பந்தியைப்) படிக்கவும்!'

நன்றி:tamilanveethi.blogspot.com