செவ்வாய், டிசம்பர் 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. (960)
 
பொருள்: ஒருவர் தமக்கு நன்மையை விரும்புவாராயின், வெட்கப்படவேண்டிய செயல்களுக்கு வெட்கப்படுகின்ற 'நாணமுடைமை' அவருக்கு வேண்டும். உயர்ந்த குடும்பத்திற் பிறந்த பெருமையை ஒருவர் விரும்புவாராயின் பணிவு கொள்ள வேண்டிய யாவரிடத்திலும் 'பணிவுடைமையை' விரும்புவாராக.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன்ஒரு அத்தியாயத்தினை அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கை நாள்தோறும் படிப்பானாகில்  ஆயிரம் வருடங்கள் முடியும் வரையில் மானுடப்பிறப்பு(மனிதப் பிறவி) எடுத்து மகிழ்ந்திருப்பான்.

திங்கள், டிசம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் 
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 
 
பொருள்: நிலத்தின் இயல்பை அந்த நிலத்திலிருந்து முளைத்த முளை காட்டி விடும். அதுபோல் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உயர்வையும், தாழ்வையும் அவருடைய வாயிலிருந்து பிறக்கும் சொல் வெளிப்படுத்தி விடும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பெரிதாக வாக்களித்துவிட்டு ஒன்றுமே கொடுக்காதவனை விட, வாக்குறுதி எதுவுமே கொடுக்காமல் சிறிதளவு கொடுப்பவன் உயர்ந்தவன்.

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக் 
குலத்தின்கண் ஐயப் படும். (958)
 
பொருள்: உயர்ந்த, கௌரவமான குடும்பத்தில் பிறந்தவனிடம் 'இரக்கம் இல்லாமை' எனும் தாழ்ந்த குணம் காணப்படுமாயின் உலகத்தார் அவன் பிறந்த 'குடிப்பிறப்பு' பற்றிச் சந்தேகம் கொள்வர்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ என்பதை உணர்ந்து போராடு.

சனி, டிசம்பர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்; விசும்பின் 
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்யும் குற்றம் சிறிதாக இருந்தாலும் ஆகாயத்தில் உள்ள சந்திரனிடத்தில் காணப்படும் களங்கத்தைப்(கறை) போல எல்லோருக்கும் நன்றாகத் தெரியவரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

தேவையில்லாததை நீ வாங்கினால் - விரைவில் 
உனக்குத் தேவையானதை விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவாய்.

வெள்ளி, டிசம்பர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற 
குலம்பற்றி வாழ்தும்என் பார். (956)
 
பொருள்: குற்றமற்ற, பண்பான குடும்பத்தில் பிறந்தவர்கள் தாம் வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையான செயல்களைச் செய்து, தமது குடும்ப புகழுக்குப் பொருந்தாத இழிவான நிலைக்குச் செல்ல மாட்டார்கள்.  

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

எதிலும் ஆசை வேண்டாம். துன்பங்கள் அனைத்திற்கும் மூல காரணமே ஆசைதான். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு உலக வாழ்வின் 'கை விலங்கோ', 'கால் விலங்கோ' கிடையாது. அவன் துன்பத்தில் உழல்வது இல்லை.

வியாழன், டிசம்பர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பின் தலைப்பிரிதல் இன்று. (955)
 
பொருள்: பல நெடுங் காலமாக புகழ்வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தம்மிடம் தானம் செய்வதற்குப் போதுமான செல்வம் இல்லாதபோதும் தமது பண்பு எனும் செல்வத்தைக் கைவிட்டு விடமாட்டார்கள்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மனத்தூய்மையே நேர்மை.
மற்றவையெல்லாம் வெறுங் கூச்சல்.

'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
இலங்கைத் தமிழர்கள் 'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.
கடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் 'கிருஸ்துமஸ்' வாழ்த்துத் தெரிவிக்கும்போது "இனிய நத்தார் வாழ்த்துக்கள்" என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன 'நத்தார்' வாழ்த்துக்கள்? என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி  'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ? என்று
எண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது. 'நத்தார்' என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள். போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் 'நத்தால்' என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய 'நத்தால்' என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் 'கிறிஸ்துமஸ்' தினத்தைக் குறிப்பதற்கு 'நத்தால்' அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது 'சுப நத்தாலக் வேவா' (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து 'நத்தார்' ஆக மாறியது.
எவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த 'நத்தார்' என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன? உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். 'கிறிஸ்துமஸ்' தினத்தை 'யூல்' என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமே.
இலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் 'நத்தார்' என்று பெயர்? என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.உங்கள் அனைவர்க்கும் இனிய 'கிருஸ்துமஸ்' வாழ்த்துக்கள்; மற்றும் பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2014 உங்கள் அனைவர்க்கும் ஏற்றத்தையும், செழிப்பையும் அள்ளித் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

புதன், டிசம்பர் 25, 2013

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் 
குன்றுவ செய்தல் இலர். (954)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் பலவாறாக அடுக்கிய கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றாலும் ஒழுக்கத்திற்குக் குறைவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
உயிர் வாழ எதை உண்பது, எதை குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் .உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை.
கவலைப்படுவதால் உங்களில் எவராவது  தமது உயரத்தோடு ஒரு முழத்தைக் கூட்டமுடியுமா?

செவ்வாய், டிசம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (953)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எவை என்றால்; வறியவர்கள் உதவி கேட்டு வந்தபோது முக மலர்ச்சியும், இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும், இனிய சொற்களைக் கூறுதலும், அடுத்தவர்களை இகழ்ந்து பேசாதிருத்தலும் ஆகிய நான்கு உயர்ந்த பண்புகளும் ஆகும் என்று பெரியோர் கூறுவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலாம். ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது. அது போலவே நல்ல செயல்களும்.

திங்கள், டிசம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
 
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய இம்மூன்றிலும் அடுத்தவர்களால் வஞ்சகமாகக் கற்பிக்கப் பட்டாலன்றி இயல்பாகத் தாமாகவே தவறமாட்டார்கள்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன் ஒரு அத்தியாயமாவது தினமும் படித்தால் இறைவனான சிவன் வசிக்கும் 'ருத்திர லோகத்தை' அடைந்து, சிவனுடைய படை வீரர்களில் ஒருவனாகி அங்கு நித்திய ஆயுளுடன் வாழ்வான்.

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

இல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)
 
பொருள்: செம்மையும் நாணமும் ஒரு சேர உயர் குடியில் பிறந்தவர்களைத் தவிர  பிறரிடம் இயற்கையாக அமையாது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அழகென்பது ஒரு நல்ல செயலிலும் அதைச் செய்பவனின் உள்ளத்திலுமே உள்ளது. அதைத் தவிர வேறு அழகில்லை.

சனி, டிசம்பர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று 
அப்பால்நால் கூற்றே மருந்து. (950)
 
பொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோயைப் போக்க வல்ல மருந்து, நோயாளியைக் கண்காணிப்பவன் ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றிற்கொன்று ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே நோய் குணமாகும். ஆகவே 'மருந்தால் மட்டும்' நோய் குணமாகும் என நம்ப வேண்டாம்.

இன்றைய சிந்தனைக்கு

 சுவாமி விவேகானந்தர்

வாழ்வில் ஏற்படும் போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே. மிருகத்தைப் போல வாழாதே! "இல்லை" என்று ஒரு போதும் சொல்லாதே! "என்னால் இயலாது" என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.

வெள்ளி, டிசம்பர் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 95 மருந்து

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் 
கற்றான் கருதிச் செயல். (949)
பொருள்: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், நோயுற்ற காலத்தையும் ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உழைப்பில்லாதவன் மட்டுமல்ல, நிலையான தொழில் இல்லாதவனும் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.

வியாழன், டிசம்பர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)
 
பொருள்: நோயைக் குணம், மற்றும் குறிப்புகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிவாக உணர்ந்து, நோயைத் தீர்க்கும் வழிவகைகளை அறிந்தே ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் இதன் மூன்றில் ஒரு பகுதியைப் படிப்பானாயின் கங்கையில் மூழ்கி, புண்ணிய யாத்திரை செல்பவர்களின் பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கைப் படிப்பவன் யாகங்களிலேயே உயர்ந்ததாகிய 'சோம யாகத்தைச்' செய்ததற்கு உரிய பலனை அடைகிறான்.

புதன், டிசம்பர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் 
நோய்அளவு இன்றிப் படும். (947)
 
பொருள்: பசி என்ற நெருப்பின் அளவைக் கவனிக்காமல், காலமும், அளவும் அறியாதபடி, பெருமளவு உண்டால் அந்த மனிதனிடத்தில் எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

ஒருவனுக்கு அவனது வாழ்க்கையில் தன்னுடைய சுய புத்தியில் நம்பிக்கை இல்லை என்றால் எதிர்காலம் என்ற ஒன்றே அவனுக்கு இருக்க முடியாது.

செவ்வாய், டிசம்பர் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து 

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபேர் இரையான்கண் நோய். (946)

பொருள்: அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பதுபோல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 


மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.


திங்கள், டிசம்பர் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)
 
பொருள்: குடலுக்குச் சிக்கல் தராத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால் உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் என்பது இல்லை.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பணக்காரனாக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துகொண்டாலே போதும்.

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல 
துய்க்க துவரப் பசித்து. (944)
 
பொருள்: முன்பு உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடு இல்லாத, வயிற்றுக்குச் சிக்கல் தராத உணவுகளைக் கடைப்பிடித்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

சமுதாயக் கயிறுகளால் கட்டுண்டு கிடக்கும் சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள்! நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சனி, டிசம்பர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)
 
பொருள்: ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த பின்பு உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்பது பெறுவதற்கு அரிய மனித உடலைப் பெற்ற இந்தப் பிறவியில் அதனை நீண்ட காலம் வாழ வைக்கும் வழியாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அன்பு, மரியாதை ஆகிய நற்குணங்களை இயற்கையாகவே கொண்டிருப்பவன் ஏழையாகப் பிறந்தாலும் இந்த உலகில் எதையும் சாதித்து விடுவான்.

வெள்ளி, டிசம்பர் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது 
அற்றது போற்றி உணின். (942)
 
பொருள்: ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை(சமிபாடு அடைந்ததை) அறிந்து அதன்பின்னர் அடுத்த வேளை உணவை உண்டானாயின் அவன் உடலுக்கு மருந்து என்ற வேறு ஒன்று வேண்டுவதில்லை.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

மனவி, குழந்தைகள் எனும் சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, அனைத்துக் கவலைகளையும் விட்டு விலகியவனுக்கு, உலக ஆசைகளைத் துறந்தவனுக்கு, பந்தம், பாசம் ஆகிய எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.

வியாழன், டிசம்பர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 95 மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று. (941)
பொருள்: ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம், பித்தம், கபம் முதலிய மூன்று விடயங்களும் அவனுக்கு நோயைத் தரும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புக்கள் தேடிவரும். வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவனுக்குத்தான் 'வெற்றியின் தேவதை' கை கொடுப்பாள்.

புதன், டிசம்பர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் 
உழத்தொறும் காதற்று உயிர். (940)
 
பொருள்: செல்வத்தை இழக்கும்போதெல்லாம், மேன்மேலும் சூதாட்டத்தின்மீது விருப்பம் ஏற்படுவதைப்போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த எமது உயிர் மேன்மேலும் இந்த அழிகின்ற உடலை அதிகமாக விரும்பும்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்பவன் பசுக்களைத் தானமாகக் கொடுப்பதால் விளையக் கூடிய புண்ணியத்திற்கு ஈடான புண்ணியத்தைப் பெறுகிறான் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

செவ்வாய், டிசம்பர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் 
அடையாவாம் ஆயம் கொளின். (939)  

பொருள்: ஒருவன் சூதாடுவதை மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பணமும் நிம்மதியும் பிறவிப் பகைகள்;
இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

திங்கள், டிசம்பர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து 
அல்லல் உழப்பிக்கும் சூது. (938)
 
பொருள்: சூது என்பது ஒருவனிடம் உள்ள பொருளை அழித்து, பொய்பேசி வாழும் வாழ்க்கையை ஏற்படுத்தி, அருளையும் கெடுத்து, இம்மை, மறுமை ஆகிய இரு பிறப்புகளிலும் துன்பம் தருவதாகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
அடுத்த மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
அடுத்த மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

ரணம்

என் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை.
இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்குப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கிறது.
சாப்பிட்டபிறகுதான் தெரிந்தது – அதில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருந்தது என்று.
கையை வாய்க்குள் விட்டு வாந்தியா எடுக்க முடியும்?
ஆனால் அதன் ருசி நன்றாகக் தான் இருந்தது என்பது இப்பொழுதும் எனக்கு ஞாபகம்.
அதற்காக அதனைத் தேடிப் பின்பு போகவில்லை – போகவிருப்பம் இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பாவம் கிடைக்கும் என்று அம்மாவும் அம்மம்மாவும் சின்னனில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது இப்பவும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
*
வெள்ளிக்கிழமை தவிர எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் இருக்கும். காலநிலைக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு எந்த மீன்கள் மலிவோ அதுவே அதிகமாக எங்கள் வீட்டுச் சட்டிக்குள் வரும். பொதுவாக மாதச்சம்பளத்தில் வண்டியோட்டும் குடும்பங்களின் நிலையும் இதுதான்.
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது – மழைகாலம் என்றால் ஒட்டி ஓராவும், முரல் காலம் என்றால் முரல்புட்டும் எங்கள் வீட்டில் எப்பொழுதும் இருக்கும்.
எதுவுமே இல்லாவிட்டாலும் இறால் எல்லாக் கறிகளுக்கும் கொஞ்சமாகவோ அன்றில் அதிகமாகவோ போடப்பட்டிருக்கும். தவிரவும் வெந்தயக் குழம்பாக. . . சொதியாக. . . சின்ன வெங்காயத்துடன் சேர்த்து பொரித்த பொரியலாக. . .
இதில் இறாலுக்கு மட்டும் ஒரு விசேடம் உண்டு. முதன்நாளோ. . .அன்றில் அதிகாலையில் பிடிக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக பத்துமணிக்கு சந்தை கூடும் பொழுதும் அதில் பல இறப்பதில்லை. அம்மா, அல்லது அம்மம்மா அதன் தோலை நீக்க முதல் அவற்றைச் சட்டிக்குள் போட்டு சுடுநீரை ஊற்றும் பொழுது அவை ஒரு தரம் துள்ளிவிட்டு அடங்கிப் போகும்.
பாவங்களாய்த்தான் இருக்கும். ஆனால் அந்த பரிதாப உணர்ச்சியும் கண்களால் பார்ப்பதோடு செத்துப் போகும். இறால் பொரியலை கடைசியாக சாப்பிடும் பொழுது அது ஒன்றும் கண்ணுக்கு முன் வருவதில்லை.
*
ஆனால் டென்மார்க்கிற்கு வந்த பின்பு கடற்கரையில் விற்ற கல்லுப் போன்ற ஒரு மீனை
குசினித் தொட்டியில் போட்டு விட்டு அதனைக்  கழுவுவதற்காக கொஞ்சம் சுடுநீரைத் திறந்து விட்ட பொழுது அவை இறக்காமல் இருந்ததனால் அவை துள்ளிப் பாய்ந்து நிலத்தில் விழுந்து துடித்ததும். . .சியாமளா பயந்து சத்தம் போட்டுக் கொண்டு மாடிப்படியில் ஓடியதும். . .  நான் மீன்களைப் பிடித்து உடனே ஐஸ் பெட்டியில் போட்டு அவற்றை விறைக்க வைத்து சாக்கொண்டதும். . .  பின் ஒரு கிழமையாக சியாமளா என்னுடன் கதைக்காமல் ஒரு கொலைபாதகனைப் பார்த்துக் கொண்டு திரிந்தது போல நடந்தது கொண்டமையும். . . எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.
அப்பொழுது அவள் நாலுமாதக் கர்ப்பம் வேறு.

மாமிசம் என்றாலே  என்ன என்று தெரியாமல் வளர்ந்த அவளுக்கு அன்று நான் செய்தது பெரிய உயிர்க்கொலை தான்... மேலும்

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின். (937)
 
பொருள்: சூதாடுகின்ற களத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைய செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பணம் நம்மை ஆட்டி வைக்காமல், நாம் பணத்தை ஆட்டி வைப்பதுபோல் நன்மை தரும் வாழ்க்கை இப்பூமியில் வேறு எதுவும் இல்லை.

சனி, டிசம்பர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும் 
முகடியால் மூடப்பட் டார். (936)
 
பொருள்: சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் இந்தப் பிறப்பில் வயிறார உண்ணாமல், வறுமையில் நரகத் துன்பத்தை அனுபவிப்பர்.