திங்கள், ஜூன் 30, 2014

நாம் ஏன் பொய் சொல்கிறோம்? சில உளவியல் உண்மைகள்

சரி சரி அத விடுங்க, நமக்கு எதுக்கு ஊர் வம்பெல்லாம்?! நாம பதிவுச் செய்தியப் பார்ப்போம். மேல சொன்ன பாட்டுல வர்ற மாதிரி இல்லைன்னாலும், நாம எல்லாரும் எதாவது ஒரு தருணத்துல, எதாவது ஒரு காரணத்துக்காக “பொய்” சொல்லத்தான் செய்றோம். அந்தப் பொய்கள்னால சில சமயங்கள்ல நல்லதும் நடக்குது, பல சமயங்கள்ல கெட்டதும் நடக்க வாய்ப்பிருக்கு இல்லீங்களா? இதப் போய் ஏன்னு கேட்டா சுத்த மடத்தனமா இருக்கேன்னு உங்கள்ல சில பேரு நெனக்கலாம். அதுதான் இல்ல?!

நம்மோட கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்குமே ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (உளவியல்) காரணங்கள் இருக்குங்கிறத உங்கள்ல பலர் ஒத்துக்குவீங்கன்னு நெனக்கிறேன். அதேமாதிரிதான் நாம பொய் சொல்றதுக்கும் சில உளவியல் காரணங்கள் இருக்கு. அது என்னென்ன, அதனால வர்ற நல்லது கெட்டது என்னென்ன, இப்படியான சில விஷயங்களைப் பத்தி (விரிவா) அலசப் போற “அலசல்” பதிவுதான் இன்றைய பதிவு!

 நாம் ஏன் பொய் சொல்கிறோம்?
 இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, “நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும்”தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க?!
“பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் “சுயமரியாதையுடன்” நெருங்கிய தொடர்புடையது. ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான்” அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் ‘மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன் !

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்!

உங்களுக்கே தெரியும்  நாம சொல்ற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று! சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றாங்க!
தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பதுபோல காட்டிக்கொள்ளவேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல. ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்துவிடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.
தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்!
பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப்போய்விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம்பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது!
உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்?! அடப் பாவிகளா…..!!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட….இது நல்லாருக்கே!
சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படிப்போடு…..! ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே?!
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல இருக்கிறது இது…….

“நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?!”
 
“ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்தவேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன்மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காகவேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்?!” 

“பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சிகொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்”

“கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்”

நண்பர்களே….இப்படியே எழுதிக்கிட்டே போனா, நானே நிறைய பொய்யான விஷயங்கள எழுதினாலும் எழுதிடுவேன் அப்படீங்கிறதுனால?!  , நாம இந்தப் பதிவ இத்தோட நிறுத்திக்குவோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில், மிகவும் சுவாரசியமான “பணியிடங்களிலும் சொல்லப்படும் பொய்கள்” குறித்த உளவியல் ஆய்வுக்கூற்றுகளை விரிவாக பார்ப்போம்! நன்றி.

ஆமா, இந்தப் பதிவு பத்தி நீங்க எதாவது பொய்…..மன்னிக்கணும் கருத்து சொல்ல விரும்புறீங்களா? 
உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

'நிறை அரியர் மன் அளியர்' என்னாது காமம்
மறை இறந்து மன்று படும். (1138)
 
பொருள்: இவர் மன உறுதி இல்லாதவர், அனுதாபத்துக்குரியவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக்  கடந்து மன்றத்துக்கும்(சபைக்கும்) வந்து விட்டது.

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ளவில்லையானால், அது அந்த நூலின் குற்றம் ஆகாது. அமிர்தத்தையும் விஷமாக்குபவர்கள் இந்தப் பூமியில் உள்ளனர் அன்றோ?. அவ்வாறு அவர்கள் செய்தால் அது 'அமிர்தத்தின்' குற்றம் ஆகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி உயர்வான சாஸ்திரத்தை கீழ்மக்கள் அர்த்தம் கொள்வார்கள் ஆனால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றம் ஆகாது. பல்லாயிரம் மக்களுக்கு அந்த சாஸ்திரம் வழிகாட்டியிருக்கிறது அல்லவா? புலனடக்கமும், தன்னலத் தியாகமும், தவமும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ் மக்களுக்கு எந்த சாஸ்திரமும் உதவாது என்பதறிக.

ஞாயிறு, ஜூன் 29, 2014

பிராய்லர் கோழிக்கறி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

பிராய்லர் கோழி தற்போது கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா?
 பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…


இன்னும் சில நாட்களில் கோழிக்கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால்அதன் விலை ரூபா 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள்
முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.


ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு.

ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.

பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



நன்றி:chakkarakatti.blogspot.in

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல். (1137)  
 
பொருள்: கடல் போன்ற காம நோயால் துன்புற்ற போதிலும், 'மடல் ஏறாமல்' (காதலைப் பொது இடத்தில் கூறி அடுத்தவரிடம் உதவி கேட்காமல்) தனது துயரத்தைப் பொறுத்துக்கொள்ளும் தகுதி பெண்களுக்கு உண்டு. 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

ஒரு தனிமனிதனிடம் மட்டுமன்றி, ஒரு சமுதாயத்திடமும் இருக்கும் உயர்ந்த ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்பது கல்வியே ஆகும்.

சனி, ஜூன் 28, 2014

இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்

ர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க? என்று  சொல்லி கும்பிட்டான்.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை பறிக்கும் தங்கமும், வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துரத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா?…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது உன்னுடைய  அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
நன்றி: envazhi.com

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள ராஜகோபுர திருப்பணி

சுவிஸ்வாழ் மண்டைதீவு மக்களின் நிதி பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான  பஞ்சதள ராஜகோபுர முதலாம் தளத்திருப்பணி! 

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான  வேலைகள் நிறைவுபெற்று, (23.06.2014) திங்கள் கிழமை அன்று  நண்பகல் 12.30 மணிக்கு முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத் திருப்பணி  சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின்  நிதி பங்களிப்புடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன்  அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதனை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கெள்கின்றோம்.

ஏனைய புலம்பெயர்  மக்களிடமிருந்து  மற்றைய தளங்களுக்கான  திருப்பணி  நிதி பங்களிப்பினை அன்புரிமையுடன் நாடுகின்றோம்.

திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
 
இங்ஙனம் 
தர்மகர்த்தாக்கள் 
பொ.வி.திருநாவுக்கரசு(மண்டைதீவு, இலங்கை)
இரத்தினசபாபதி யோகநாதன்(பிரான்ஸ்)

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற 
படல்ஒல்லா பேதைக்குஎன் கண். (1136)
 
பொருள்: மடலூர்தலைப் பற்றி(பொது இடத்தில் காதலைக் கூறி நாலு பேரிடம் உதவி கேட்டல்) நள்ளிரவிலும் நான் நினைக்கிறேன். காதலியைப் பிரிந்த துயரத்தால் என் கண்கள் உறங்க மறுக்கின்றன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

உன் சோம்பேறித்தனம்கூட உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம். எச்சரிக்கையாய் இரு!

உங்களோடு சில வார்த்தைகள் !

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
இன்றைய தினம் உங்கள் அந்திமாலையில் வெளியாகியுள்ள "உங்கள் பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்" என்னும் ஆக்கத்தை படித்தவர்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மூட நம்பிக்கைகளுக்குத் துணை போவதோ, அல்லது அவற்றை ஊக்குவிப்பதோ எமது நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய சோதிடம் சம்பந்தமான விடயங்களை நம்புபவர்களின் ஆர்வத்தையும் இடையிடையே பூர்த்தி செய்வதற்காகவே இத்தகைய படைப்புக்கள் அந்திமாலையில் வெளியாகின்றன என்பதை சோதிடக் கலையில் ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லாத வாசகர்கள் புரிந்து மதிப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். 

"ஒன்றுபட்டு உயர்வோம்"

மிக்க அன்புடன் 
ஆசிரியர் 
அந்திமாலை

வெள்ளி, ஜூன் 27, 2014

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் !

எழுத்து A
A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.


எழுத்து B  
உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


எழுத்து C

உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

எழுத்து D
உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

எழுத்து E
பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.


எழுத்து F
உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

எழுத்து G
நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

எழுத்து H
H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

எழுத்து I
நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

எழுத்து J
J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.


எழுத்து K
ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.


எழுத்து L
வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

எழுத்து M
M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக
இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

எழுத்து N
N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

எழுத்து O
அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

எழுத்து P
உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

எழுத்து Q
Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

எழுத்து R
உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

எழுத்து S
S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.
எழுத்து T
எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

எழுத்து U
அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

எழுத்து V
V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

எழுத்து W
W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

எழுத்து X
சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

எழுத்து Y
சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

எழுத்து Z
இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.
நன்றி: davidmeansbeloved.blogspot.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு 
மாலை உழக்கும் துயர். (1135)
 
பொருள்: மாலை போல் தொடர்ந்த சிறுவளையலை அணிந்த இவள், மடல் ஏறுதலோடு(பொது இடத்தில் காதலைச் சொல்வதால் ஏற்படும் துன்பத்தையும்) மாலைக் காலத் துயரத்தையும்('விரக தாபம்' எனும் காம நோயையும்) எனக்கு அளித்தாள்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என எவரிடத்தில் இருந்தாலும் இழிவிற்குரியது பொய்மை. ஏழையிடம் இருந்தாலும் போற்றித் துதிக்கப் படவேண்டியது மெய்மை.

கனவுகள் சொல்ல வரும் சேதி என்ன? ஏன்? எதற்கு? எப்படி?

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம்.
மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.
கனவுகள் என்றால் என்ன?

1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.
    இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.
கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், ‘என்னாயிற்று உனக்கு?’என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின்நினைவுகள் என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.
கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு என்று சொல்லலாம்.
இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம்.
  கனவுகளை பற்றிய சில உண்மைகள்
சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.
குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் நமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விஷயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
   கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்,
கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?
சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?
 (இதற்கான விடைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை(4.07.2014) வரை பொறுத்திருங்கள்)
 
நன்றி:ttamil.com