கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம்.
மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.
கனவுகள் என்றால் என்ன?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.
இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.
2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.
கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், ‘என்னாயிற்று உனக்கு?’என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்
3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் ‘நினைவுகள்’ என்றுகூடச் சொல்லலாம்.
4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.
கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு” என்று சொல்லலாம்.
இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம்.
கனவுகளை பற்றிய சில உண்மைகள்
சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.
அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.
குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் நமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விஷயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்,
கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?
சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?
(இதற்கான விடைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை(4.07.2014) வரை பொறுத்திருங்கள்)
நன்றி:ttamil.com
1 கருத்து:
சிறந்த பகிர்வு
கருத்துரையிடுக