சனி, ஜூன் 28, 2014

இந்தாப்பா உன் சந்தோஷம்! – ஜென் கதைகள்

ர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க? என்று  சொல்லி கும்பிட்டான்.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை பறிக்கும் தங்கமும், வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துரத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா?…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது உன்னுடைய  அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
நன்றி: envazhi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக