வியாழன், டிசம்பர் 31, 2015

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

"ஒன்றுபட்டு உயர்வோம் "
மிக்க அன்புடன் 
-ஆசிரியர் -

அந்திமாலை 

இன்றைய சிந்தனைக்கு

நகைச்சுவையான  தமிழ்நாட்டுப் பழமொழிகள் 


1. அவசரத்துக்கு அண்டாக்குள்ளயும் கை நுழையதாம். 

2. கோணல் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

3. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?

4. போகாமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.

5. "அடியேன்னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபால கிருஷ்ணனாம்".

6. ஏண்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இருன்னானாம்". 

  

செவ்வாய், டிசம்பர் 29, 2015

'கடற்கன்னி' என்பது உண்மையா? கட்டுக் கதையா?

கடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: "அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்" எனக் கூறுகின்றது.


ஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

திங்கள், டிசம்பர் 28, 2015

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்துஊடி நிற்போம் எனல். (1260)  

பொருள்: தீயில் கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிர்க்கு 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஓடும் தன்மை உண்டோ? 

இன்றைய பொன்மொழி

கன்ஃபூஷியஸ் 

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது;
நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது;
நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

செவ்வாய், நவம்பர் 17, 2015

மரண அறிவித்தல்

காசிலிங்கம் படிகலிங்கம் 
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், 798 கட்சன் வீதி, வட்டக் கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த, தற்போது விசுவமடுவில் வசித்தவருமாகிய திரு.காசிலிங்கம் படிகலிங்கம் அவர்கள் நேற்றைய தினம்(16.11.2015)  இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காசிலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  
காலஞ்சென்ற கௌசலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவக்கொழுந்து ('அல்லைப்பிட்டி ஆச்சி') தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(குலசிங்கம்) தங்கம்மா தம்பதியினரின்அன்பு மருமகனும், 
சந்திரகாந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத்தந்தையும், லீலாவதி(இலங்கை), கமலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராஜா, மற்றும் செல்வரத்தினம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), 

இராசம்மா(யோகபுரம்,மல்லாவி),தெய்வானை(அல்லைப்பிட்டி), நாகம்மா(மண்டைதீவு), மற்றும் திருமதி.சிவகுரு கனகம்மா(மண்டைதீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(மண்டைதீவு), செல்லத்துரை-'சாத்திரியார்'(விசுவமடு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிஷ்யந்தி(அவுஸ்திரேலியா),கஜந்தி(இலங்கை) கஜன்(அவுஸ்திரேலியா), ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் நேற்றைய தினம்(16.11.2015) திங்கட்கிழமை பிற்பகல் அவரது விசுவமடு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு 12 ஆம் கட்டையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.
உற்றார், உறவினர்,நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  


தகவல்:திருமதி. சாருமதி சொர்ணலிங்கம்(சகோதரி)தொடர்புகளுக்கு :
குடும்பத்தினர்.
0094-779671954

செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


"ஒன்றுபட்டு உயர்வோம்"
ஆசிரிய பீடம் 
அந்திமாலை. 

சனி, அக்டோபர் 24, 2015

இன்று நேர மாற்றம்! மறக்க வேண்டாம்.!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (24.10.2015)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

5 ஆவது ஆண்டு நிறைவில் உங்கள் அந்திமாலை


இணைய உலகில் கால் பதித்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாவது ஆண்டை நோக்கிப் பயணிக்கும் இந்த நாளில்(20.09.2015) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 
உளமார்ந்த அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

'மயக்கம்'

A short film about a social issue. Film made by Tamils in Denmark.
டென்மார்க்கில் வாழும் தமிழ் இளையோர் நடித்த + தயாரித்த 'மயக்கம்' என்ற குறும்படம். புலம்பெயர் தமிழர்களையும் பாதித்து வரும் ஒரு சமூகப் பிரச்சனையே படத்தின் பேசு பொருளாகும். படத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து ஊக்குவித்து ஆதரவு வழங்குமாறு உங்களை அன்போடு வேண்டுகிறோம்.டென்மார்க்கில் வாழும் தமிழர்களால் வெளியிடப் படும் முதலாவது 'குறும்படம்' இதுவாகும். இதைத் தயாரித்த, நடித்த இளையோரின் முதலாவதுமுயற்சி இது. தமிழக மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய 'இலங்கைத் தமிழ்' இப்படத்தில் உரையாடல் மொழியாக உபயோகிக்கப் பட்டுள்ளது என்பதை எமது தமிழக வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.


உங்கள் மேலான ஆதரவைப் படக் குழுவினர் வேண்டி நிற்கிறார்கள்.

திங்கள், ஜூன் 15, 2015

அறிவையாளும் யுக்தி


அறிவையாளும் யுக்தி அவன் தான் ஷோபாசக்தி! 
 

அல்லையூர் பெற்றெடுத்த அரிய மைந்தனே!
அவனியெலாம் புகழ் மணக்கும் எழுதுகோல் வேந்தனே!
பல்கலையும் நடமாடும் ஷோபா நீவாழ்க
பாக்களாலும் பூக்களாலும் உன் புகழை வாழ்த்தினேன் 

சிந்தையெல்லாம் இனிக்கின்ற செந்தமிழின் தேனாறே
எந்நிலையும் எடுத்தியம்பும் முந்து குரலொலியே
குந்தியிருந்து உந்தன் படைப்பை  

சிந்தைக்கு ஏற்றுதல் நமக்கன்றோ பெருமை
இயல் இசை நாடகம் உன் கைவந்த கலை
அதைத்தவிர  உனக்கு ஊரில் என்ன வேலை?
எமக்குத் தெரிந்த அன்று 
தெருப்புலவன், சுவர்க்கவிஞன்
இன்றோ புலத்தில்  குடிபெயர்ந்து
அருந்தமிழ் அன்னையின் ஆற்றல்மிகு பிள்ளையாய் 

அவதாரம் எடுத்தான் சிறந்து - எம்
மனக்கண்ணில் காண்கிறோம் வியந்து.

'தீபன்' ஒளிப்படத்தில் தீபமாய் ஒளிர்ந்தாய்
திறமையெனும் பாதையில் தீர்க்கமாய் நடந்தாய்
விருதுகள் பலபெற்று விவேகியாய் நிமிர்ந்தாய்
உலகம் வியந்திடக்  கலைஞனாய் உயர்ந்தாய்

பூந்தமிழ் மனமெல்லாம் பூத்திருந்து வாழ்க
ஏந்து புகழ்மோகனமாய் என்றென்றும் வாழ்க
மாந்தர்கள் வாழ்த்துகின்ற அறிஞனாய் வாழ்க
நீந்துகின்ற உயர் அறிவில் நீடு வாழ்க.


ஆக்கம் 'கவி வித்தகர்' பாலன் சேவியர்,
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை 

வியாழன், ஏப்ரல் 30, 2015

கலைஞருக்கு மரியாதை

அன்புறவுகளே வணக்கம்.
நீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான கவிதாயினி.திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். "திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி" என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
மிக்க அன்புடன் 
இ.சொ.லிங்கதாசன் 
ஆசிரியர் 
அந்திமாலை 
 
 


செவ்வாய், ஏப்ரல் 07, 2015

ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்


அனைவருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகூஸ் நகரத்தில் வசிக்கும்; 'கவிதாயினி' திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் தினத்தில் (02.05.2015) இவரை வாழ்த்த விரும்புபவர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

இங்ஙனம்
க .துஷ்யந்தன் 
ஓகூஸ்  தமிழர் ஒன்றியம்
டென்மார்க் 

சனி, மார்ச் 28, 2015

இன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 28.03.2015 சனிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 29.03.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில்  'நேரமாற்றம்' நிகழ்கிறது  என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 08.03.2015 அன்று நிகழ்ந்தமையும், 

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 05.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.ஆசிரியபீடம் 
அந்திமாலை 

ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

நவீன புத்தர்

ஓஷோ சொன்ன குட்டிக் கதைகள்:-

அறிவுரைக்கான தகுதி  

ஒரு பெண் தனது குழந்தையினால்
மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில்

குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை
கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம்
அடிக்கடி செல்வாள். ஒருநாள் அவள் தனக்குள் இவ்வாறு சிந்தித்தாள் "இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை, அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால்
இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும்". என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த
ஞானியிடம் கூட்டி சென்று, "இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை.
நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக
பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது
ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க
முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு
'விஷம்' என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை 'வெள்ளை விஷம்'. அதனால்
நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள்
மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்" என்றாள்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார்.
அவர், "என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு
வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற
முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல" என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. அவர் கூறிய பதில்  இன்னும் அபாயகரமானது என்று அப்பெண் நினைத்தாள். ஆனால் அந்தக் குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான்.
அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், "என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து
சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினர். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன
சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன்" என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், "நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறேன், அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால்
இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான்
தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான்
வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது
உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும்
வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும்" என்றார்.

அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதைக் கடைப்பிடிக்க
முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையைக் கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை எனத் திகைத்தாள்.

இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், "மகனே, அது கடினம்தான். ஆனால்
இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க
முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். இப்போது உனக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதி இருக்கிறது என நீ
நினைக்கிறாயா?  எனக்கு நீ  அனுமதியளித்தால்
என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும்" என்றார்.

அந்த பையன், "எதுவும் கூற வேண்டிய
தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காகத் தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல்
இருப்பது, தானே ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக இருப்பது என்பது 'நம்பிக்கையுணர்வு' வைக்க தகுதியானதே. நான்
உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல்
நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றான்.

நன்றி:ஓஷோ சாஸ்வதம், அவினாசி, திருப்பூர், தமிழ்நாடு.

வியாழன், ஜனவரி 15, 2015

பொங்கல் வாழ்த்துக்கள்

எமது அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எமது உளங்கனிந்த தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்நாளிலும்,இனிவரும் நாட்களிலும் உங்கள் வாழ்வு சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.
 

 
"ஒன்றுபட்டு உயர்வோம்"
 
மிக்க அன்புடன் 
-ஆசிரியர்-
அந்திமாலை இணையம் 

புதன், ஜனவரி 07, 2015

தாத்தா !

ஆக்கம்:சக்தி காண்டீபன், ரணாஸ், டென்மார்க்.
கார்த்திகை மாதம். சேவல் கூவியது. மணி காலை 5.45 ஆகிவிட்டது. மண்ணின் வாசம் மழையுடன் கலந்து வீசியது. வீதியில் வெதுப்பக வண்டி ரீங்காரமிட்டு கொண்டு சென்றது.
75 வயதான சொக்கர் எனும் சொக்கலிங்கம் ஐயா வழக்கம்போல் சேவலோடு போட்டா போட்டி போட்டுக்கொண்டு எழும்பினார். சேவலின் சப்தத்தால் அல்ல, ஏனெனில் ஆண்டவன் கிருபையால் 60 வயதிலிருந்தே அவருக்கு காது கேட்பது படிப்படியாக குறைந்து வந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோதான், பிறகு அவருக்கு காது, சுத்தமாய்க் கேட்காது. தினமும் 5.45 மணிக்கு எழும்பி எழும்பி, அது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது அவருக்கு. இப்போது, சொக்கர் ஐயாதான் அவர் வீட்டாருக்கு அலாரம்.

காலைக்கடன் முடித்து, திவ்யமாக ஒரு குளியல் போட்டார். சலவை செய்த வேட்டி ஒன்றை எடுத்துக்கட்டினார். எதேச்சையாக கண்ணாடியில் தன்னைப் பார்க்கையில் மெலிந்த தேகமும், தேங்காய்ப்பூப்போல் வென்மையான கேசமும், கண்களில் விழுந்த பூவும், தனக்கும் பல் இருக்கின்றது என்று பெயருக்கு இருக்கின்ற 10-12 பற்களும் சொக்கர் தன் வாழ்வின் கடைசி அத்யாயத்தில் நிற்பதை அவருக்குக் காட்டியது.
பின்னர் தன் தோட்டத்தில் அன்று பூத்திருந்த செவ்வரத்தை, நித்தியகல்யாணி மலர்களை பறித்து, அலம்பி, வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தன் அனைத்து பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நன்றாக இருக்கவேண்டுமென மனமாற வேண்டிக்கொண்டார். அதுவும் நாளை மறுநாள் வெளிநாட்டில் உள்ள பேத்தி, முதன்முதலில் இலங்கைக்கு வருகின்றாள்! அவர்கள் நல்லபடியாக வந்துசேரும்படி வேண்டினார்.
கண்களை மூடி வேண்டிக்கொள்கையில், வழக்கம்போல் மங்களத்தின் முகமும் வந்துபோகத்தான் செய்தது.
மங்களம்; தனது 13ஆவது வயதிலேயே சொக்கருக்கு வாக்கப்பட்டு, இவர் குறை, நிறைகளை அனுசரித்து வாழ்ந்து, வம்சத்தையும் வளர்த்து, பூவோடும் பொட்டோடும் மங்களகரமாய் 5 வருடத்திற்கு முன்பு போய் சேர்ந்த புண்ணியவதி.
என்னதான் சொக்கர் தன் இளமைக் காலங்களில் ஆணாதிக்கம் பிடித்தவராக இருந்தாலும், முதுமைக்காலம் நெருங்க நெருங்க, மங்களம், ஒரு தாரமாக மட்டுமின்றி, தனக்கு ஒரு தாயாகவும், நல்ல ஒரு சினேகிதியானதையும் அவர் உணர்ந்தார். ஆண்மகனாயிற்றே, அதனால் உள்ளுக்குள் எண்ணியிருந்தாலும், இதுவரை அவர் இதை வாய்விட்டு சொன்னதில்லை. அது மங்களத்திற்கு அவசியமும் இல்லை. ஏனெனில், அவளுக்குத் தெரியும்.
இளமையிலும், தகப்பனாகவும் மட்டும் இருக்கையில் " இவளை என்ன கேட்பது?" என்று தன் விருப்பம்போல் எதிலும் முடிவெடுத்தவர்தான். ஆனால், வயது போகப்போகவும், பிள்ளைகள் திருமணம் செய்து, மாமனார் ஆனபோதும், ”அவளின் அவிப்பிராயத்தையும் கேட்டால் என்ன?" என்று தோன்றியது. இது தன்முடிவின்மீது நம்பிக்கை குறைந்ததால் என்று
சொல்லமுடியாது. ஆனால் தன் முடிவுகள் அனைத்தும் அறிவு சார்ந்ததாகவே இருந்தமை, சில நேரங்களில் காலை வாரிவிட்டதை அவர் உணர்ந்தார். சில உணர்வு ரீதியான தொலைநோக்கு பார்வையும், அனைவரிடமும் அனுசரித்துப் போகும் நெளிவுசுளிவுத் திறமைகளும், பெண் என்ற வகையில் மங்களத்திடம் அபாரமாகவே இருந்தது, அவை அவருக்கு பல சமயங்களில் உதவியாகவும் இருந்தது.
தானே ஒருகட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய தனது சகோதர்களைக்கூட திரும்ப ஒன்றாய் அரவனைத்துக்கொண்டவள் மங்களம். இன்றும் சொக்கரைத் தேடி அவரது சகோதர்கள் வந்து போகிறார்கள் என்றால், அது அன்று மங்களத்தின் அன்புக்கு அவர்கள் கொடுத்த அங்கீகாரம்.

பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து, பேரப்பிள்ளைகளையும் கண்டபின், பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சொக்கர் வேலையில் இருந்தும் ஓய்வு பெற்றார். அப்போதுதான் தன் சாய்மணை நார்க்காலியில் அமர்ந்திருந்து மங்களத்துடன் மெல்ல மெல்ல மனம் விட்டு பேசலானார். இதுவரை அவர்கள் உரையாடியதெல்லாம் ஏதாவது ஒரு தேவையைப் பொறுத்தே இருந்தது. வரவு, செலவுக்கணக்குகள் பற்றியோ, பிள்ளைகளின் படிப்பு, வளர்ப்பு பற்றியோ வேறு ஏதும் கடமைகள் பற்றியோ இருக்கும்.
ஆனால், இப்போது அவரிடம் எந்தக் கடமையும் இல்லை.
பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக மெல்ல மெல்ல இவரின் பொறுப்புகளை வாங்கிக்கொண்டார்கள். இனி பேச என்ன உள்ளது என்று எண்ணுகையில், எதேச்சையாக தங்களைப்பற்றியே பேசத்தொடங்கினார்கள். மங்களமும் அவர் அருகில் தரையில் அமர்ந்து, அரிசி பொடைத்தவண்ணமோ, மிளகாய்களுக்கு காம்புகளை கிள்ளிய வண்ணமோ, அவருக்கு வெத்திலை மடித்துக் கொடுத்தவண்ணமோ, கதைப்பாள்.
மெல்ல மெல்ல இருவரும் தாங்கள் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடத்தொடங்கினார்கள். இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டனர். ஆனால் அப்போதுகூட சொக்கரின் மனம் புண்படாதவண்ணம் மங்களம் பார்த்துக்கொண்டாள்.
தான் மங்களத்திற்கு நல்ல கணவராக இருந்தாரே தவிர, நல்ல நண்பனாக இருக்கவில்லையோ என்ற கவலை இப்போதும் அவர் மனதை வாட்டியது. என்ன செய்ய, சொக்கரின் காலத்தில் அவர்கள் பழக்கவழக்கங்கள் அப்படி. ஆண்கள் பெண்களிடம் நிறைய பேசமாட்டார்கள். அதுவும் கோபத்தைத்தவிர, வேறு எந்த உணர்வையையும் வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள்.
இந்தப்பழக்கம் எல்லா உறவுகளையும் தள்ளிவைத்தே பழகவிடும். இந்தப்பழக்கம் காரணமாக பிள்ளைகள்கூட தள்ளி நின்றேதான் அன்பைச் செலுத்துவார்கள். பிள்ளைகளின் அன்பை சொக்கர் ஒருபோதும் சந்தேகப்பட்டதும் இல்லை, குறைத்து எடைபோட்டதில்லை. தன்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், தனக்கு ஒன்டென்றால் அவர்கள் பதறுவதையும் அவன் நன்கு அறிவார். ஆனால், பிள்ளைகள் தன்னிடம் காட்டும் அன்பிற்கும், அவர்கள் மங்களத்திடம் காட்டும் அன்பிற்கும் வேறுபாடு உள்ளதை உணர்ந்தார்.

மங்களத்திடம் பிள்ளைகள் காட்டும் அன்பு, ஒரு உரிமையும், சுகந்திரமும் கலந்த அன்பு. அதுவே அவர்கள் தன்னிடம் காட்டும் அன்பு, ஒரு மரியாதையும், கட்டப்பாடும் கலந்த அன்பாக இருந்தது. மனதின் ஓரத்தில் அவருக்கு மங்களத்தின்மீது லேசாக பொறாமையும் வரத்தான் செய்தது. தன்னை இப்படி வளர்த்துவிட்ட தன் பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் இப்போதெல்லாம் அடிக்கடி சினம் வந்தது. விதிவிலக்காக வாழ்பவர்களைப் பற்றி  அவர் சிந்திக்கத் தயாராக இல்லை. தன் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் தன்னைப்போல்தான் வாழ்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.
ஏனோ சின்ன வயதில் பிள்ளைகளுடன் இருக்கும் நெருக்கத்தை அவர்கள் வளர, வளர தகப்பன்மார் மறைத்துக்கொள்கின்றனர். மறைக்கச் சொல்லி அவரின் சுற்றம் வலியுறுத்துகிறது. கண்டிப்பான முகமூடி ஒன்றை அணிந்தே எப்போதும் இருப்பார்கள். பிள்ளைகள் இல்லாத சமயம் மங்களத்திடம் மட்டும் அவர்களைப்பற்றி வாஞ்சையோடு விசாரிப்பார். ஏனெனில் யாரேனும் ஒரு பெற்றாருக்கென்றாலும் பிள்ளைகள் பயப்படவேண்டும் என்று கற்பிக்கப்படும். இதில் பூச்சாண்டி பட்டம் வாங்குவதென்னவோ இந்த தகப்பன்மார்கள்தான். " அப்படி செய்தால் அப்பாவிடம் சொல்லுவேன், இப்படி செய்யாவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன் - அப்பா வந்தால் என்ன நடக்கும் என்று தெரியும்தானே?" என பிள்ளைகள் மிரட்டப்படுவார்கள். உண்மையில் அப்பா வந்தால் என்ன நடக்குமென்று யாருக்குமே தெரியாது, ஏன்? சொக்கருக்கேகூடத் தெரியாது.
தன் பிள்ளைகளை அவர் கை நீட்டி அடித்ததில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு வரவில்லை. சொக்கரின் கடைக்கண் பார்வைபோதும், அனைத்து விவாதங்களையும் பிள்ளைகள் நிறுத்திக்கொள்வார்கள். அவர் பேச்சுக்கு மறுபேச்சும் இருக்காது. இந்த பயம் கலந்த மரியாதை, மங்களத்திற்கும் சொக்கருக்கும் பிள்ளைகளை நல்லபடி வளர்ப்பதற்கும், பிள்ளைகள் ஊருக்குள் நல்ல பெயர் எடுப்பதற்கும் வழிவகுத்தது. பிள்ளைகளுக்கு தேவையானவற்றை, அவர்கள் நல்வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அவர்களைக் கேட்காமல், அவரே பார்த்துப் பார்த்து செய்தார். அதற்கேற்றார்ப் போல் அவர்களும் இப்போது கண்ணுக்கு நிறைவாய்த்தான் வாழ்ந்தார்கள்.

பொதுவாகவே சொக்கரிடம் பிள்ளைகள் ஏதேனும் மேல்முறையீடு செய்வதாக இருந்தால்கூட நேரடியாக சொல்லமாட்டார்கள். முதலில் அவர்கள் அதை மங்களத்தின் காதில் போடுவார்கள். மங்களத்திற்க்கும் அவர்கள் சொல்வதில் உடன்பாடு இருந்தால் மட்டுமே, அந்த முறையீடு சொக்கரிடம் வரும். இல்லையேல், அந்த முறையீடு மங்களத்தைத் தாண்டி வராது. இப்படி ஒரு சூட்சுமம் இருந்ததே மங்களத்தின் கடைசிக் காலத்தில் தான் சொக்கருக்கு தெரியவந்தது.
இப்போது சிந்திக்கும்போது, தன் பிள்ளைகள் எது எதெற்கெல்லாம் ஆசைப்பட்டார்களோ? அவை கிடைக்காது என்று தன் பிடிவாதத்திற்கு பயந்து மங்களம் மறுக்க, அவர்கள் எப்படி எல்லாம் துயரப்பட்டார்களோ?
இவை எல்லாம் எதனாலே? பிள்ளைகள் மனம் விட்டு தங்கள் தகப்பனிடம் தாங்களே நேரடியாக விவாதிக்க முடியாத ஒரு மாயையை, சூழலை நாம் அவர்கள்மீது திணித்ததால். இது தன் பிள்ளைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். கூட்டுக்குடும்பமாக வாழும்போது சில பழக்கவழக்கங்கள் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுக்காமலே வந்தவிடுகிறது. தன் பேரப்பிள்ளைகளும் தன் பிள்ளைகளைப் போலவே, தாய்மாரிடன் கிசுகிசுப்பதை அவர் பார்த்திருக்கிறார். பிள்ளைகள் மட்டுமன்றி பேரப்பிள்ளைகளும் அவரிடத்திலும் தம் தகப்பனமாருடனும் ஒரு மரியாதை கலந்த அன்போடே பழகுகிறார்கள். தனது பேரப்பள்ளைகள் தன்மீது வைத்துள்ள அன்பு, அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பைப்போலவே தூய்மையானது, மரியாதை நிரம்பியது. தாத்தாவிற்கு எந்தவகையிலும் தொந்தரவு இருக்கக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்தார்கள். "குடிக்க ஏதும் கொண்டுவரவா தாத்தா?" "சாப்பிட வாங்க தாத்தா" "ஏதாவது வேணுமா தாத்தா?", "போய்ட்டு வாறன் தாத்தா" இவைகள்தான், இதுவரை பேரப்பிள்ளைகள் சொக்கரிடம் சொன்ன வார்த்தைகள். வேலைக்குப் போன காலத்திலும், மங்களம் இருந்த காலத்திலும், அவருக்கு இதை கவனிக்க நேரம் அமயவில்லை. இப்போதுதான் அவரிடம் நேரம் மலையாய் குவிந்து கிடக்கிறதே? அதனால் அனைத்தையும் கவனித்தார்.

சொக்கருக்கு உள்ளூர ”இப்படி இருக்கவேண்டாம். இப்படி இருந்துவிட்டு, பிறகு என்னைப்போல் நெருங்கிவரத்தெரியாமல் அல்லாடவேண்டாம்” என்று சொல்லத் தோன்றிய போதும், வாய்விட்டு அவர் அதைச் சொன்னதில்லை. எப்படி சொல்லமுடியும். ஐந்தில் வழையாதது, ஐம்பதிலேயே வழையாது, இனி எழுபதிலா வரையப்போகிறது? ஆனால், சொக்கர் வழைய ஆசைப்பட்டார் என்பது உண்மை. தன் பேரப்பிள்ளைகளாவது தன்னுடன் உரிமையுடன் அன்பு செலுத்தவேண்டும், தன்னை எதிர்த்து கேள்விகேட்கவேண்டும், தன்னுடன் சண்டைபிடிக்கவேண்டும் பின்பு சமாதானமாக வேண்டும் என்றெல்லாம் விரும்பினார். இந்த மரியாதை என்ற திரையைத் தாண்டிவர, அதை கிழித்தெறிய அவர் ஆசைப்பட்டார். அதற்கு தான்தான் முதலில் மாறவேண்டும் எனபதையும் அவர் உணராமல் இல்லை. அது எப்படி என்றுதான் அவருக்கு இன்னமும் புலப்படவில்லை. அம்பாளை மறுபடி ஒருமுறை கும்பிட்டுவிட்டு, விட்டை நோக்கி நடந்தார்.


'உதயன்' செய்தித்தாள் இவருக்காகவே காத்திருந்தது. மருமகள் போட்ட தேநீருடன், தன் சாய்மனை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அன்றைய தின செய்திகளை வாசிக்கத்தொடங்கினார். சொக்கரின் சராசரி நாள் இப்படித்தான் இருக்கும். கோவிலுக்குப் போவார், செய்தித்தாளை வாசிப்பார். சாப்பிடுவார், சிலநேரங்களில் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். பின்பு வருபவர்களும் தின்ணையில் இருந்து உரையாடுவார். பின்பு இரவு சாப்பாடு, மறுபடியும் தூக்கம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலே போய்க்கொண்டிருந்தது அவரின் வாழ்க்கை. அடுத்த சில நாட்களும் அப்படியே போனது.
நேற்று நள்ளிரவு தாண்டிக்கூட தூங்கமுடியாமல் பேத்தியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் இருந்தவர், பிறகு எப்படி தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. அடுத்தநாள் வீடே ஆரவாரப்பட்ட சப்தத்தில்தான் சொக்கரே எழும்பினார். இன்றுதான் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் வருகிறார்கள் என்பது அவருக்கு ஞாபகம் வந்தது. மதியதிற்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அன்று கொஞ்சம் உற்சாகத்துடன் கோவிலுக்குச் சென்றார். மங்களத்தின் இறுதிச்சடங்கிற்கு பிறகு, இன்றுதான் மறுபடியும் தன் மகனையும் மருமகளையும் நேரில் பார்க்கப்போகின்றார். குறிப்பாக தன் பேத்தியை இப்போதுதான் முதல்முறையாக நேரில் பார்க்கப்போகின்றார். தாயின் ஞாபகமாக பேத்திக்கும் 'மங்களா' என்றே அவரது மகன் பெயர் சூட்டி இருந்தான்.
கோவில் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து இருப்புக்கொள்ளாமல் அங்கும் இங்குமாக திரிந்தார். 'உதயனால்கூட' அவரின் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. அவர் கண்கள் செய்தித்தாளுக்கும் வாசலுக்கும் நடுவே பந்தாடப்பட்டது. இதை கவனிக்க தவறாத சொக்கரின் மகள், தனக்குள்தானே சிரித்துக்கொண்டாள்.
தூரத்தில் வாகனம் ஒன்று வரும் ஓசை கேட்டது. தன்னால் இயன்ற வரையும் காதை கூர்மையாக்கிக்கொண்டு அந்த ஒலியை கவனித்தார். ஒலி நெருங்கி, நெருங்கி வர, வர, சொக்கருக்கு படபடப்பு கூடிக்கொண்டே போனது.
வாசலில் வாகனம் வந்து நின்றபோது மகிழ்ச்சியில் இயதமே நின்றுவிடும் போல் இருந்தது சொக்கருக்கு. அதன்பின் நடந்ததெல்லாமே ஒரே சமயத்தில் அதிவேகமாகவும், மிக மெதுவாகவும் நடப்பதுபோல் தோன்றியது சொக்கருக்கு. கதவுகள் திறக்கப்பட்டன, பெட்டிகள் இறக்கப்பட்டன, ஓட்டுனருடன் சேர்த்து நான்கு ஜோடி பாதங்கள் இறங்கின, கைகள் குலுக்கப்பட்டது, கட்டிப்பிடிக்கப்பட்டது, சிரித்தார்கள், அழுதார்கள், கதைத்தார்கள், நகைத்தார்கள், பரிசு கொடுத்தார்கள், வாங்கினார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நான்கு வயதான பேத்தி மங்களாவின் கண்கள் மட்டும் ஒவ்வொருத்தரையும் நன்கு கூர்ந்து கவனித்தது, எடைபோட்டது, முடிவெடுத்தது. தாத்தாவிற்கு பேத்தியை அறிமுகப்படுத்தினார்கள். தன்னையும் அந்த சின்ன கண்கள் எடைபோட்டதை அவர் கவனித்தார். என்னதான் தாத்தாவகவே இருந்தாலும் நேரில் காணும்வரை யாருமே அந்நியன்தான் என்பதை அவர் அறிவார். பயனக்கழைப்பு காரணமாக அன்றைய நாள் வெகு வேகமாகவே முடிந்தது.
மறுநாள் காலை சொக்கர் வழக்கம்போல் கோவிலுக்கு போய் வந்தார். வாசலை நெருங்கையில் "ஹாய் தாத்தா" என்ற ஒலி கேட்டு திரும்பினார். திண்ணையில் வீட்டு நாயோடு நின்றிருந்தாள் 'மங்களா'. வேறு யாரையும் காணவில்லை. எங்கே நாயை தொட்டுவிடுவாளோ என்ற பயந்து " நாயை தொடாதே பிள்ளை" என்றார் சொக்கர். அவர் சற்றும் எதிர்பாராத வகையில் மங்களா " ஏன் தொடக்கூடாது தாத்தா?" என்று கேட்டாள். அவரை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டது இதுவே முதல் தடவை. எதிர்த்து கேள்வி கேட்கின்றாளே என்ற எண்ணத்தையும் தாண்டி அவருக்குள் ஏதோ ஒருவித ஆனந்தம் பரவியது. ஒரு நிமிடம் அப்படியே உறைந்துதான் போனார். தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு "நாய் ஊத்தை புள்ள, பிறகு உனக்கு காய்ச்சல் வரும், தொடாத" என்றார். "நீங்க நாயை குளிப்பாட்டேல்லையா?" மங்களா கேட்டாள். "சீ, சீ, நாயை குளிப்பாட்டுறதா? அதெல்லாம் நாங்கள் செய்யிரேல்ல". சொக்கர் சொன்னார். "இது உங்கட வீட்டு நாய்தானே?" "ஓம்" "அப்ப நீங்கள் தானே குளிப்பாட்ட வேணும்?" " ஏய் மங்களா! என்னது, தாத்தாவை எதிர்த்து கதைத்துக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்ட வண்ணம் வந்தான் மகன். அவளை மேற்கொண்டு கதைக்கவிடாமல் உள்ளே அனுப்பினான். " அதொண்டும் இல்ல அப்பா, வெளிநாட்டில பிள்ளைகள் எல்லாத்துக்கும் ஏன், எதுக்கு என்டு கேப்பினம். அதையே இவள் இங்கையும் செய்யுறாள்". " அதுக்கென்ன, சின்னப் புள்ள தானே. நீ ஒண்டும் அவாவை ஏசாத." "சரி அப்பா". இந்த 'சரி அப்பா' என்ற வார்த்தைதானே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் என்று பெருமூச்சு விட்டார். இனி மங்களாவும் தன்னிடமிருந்து தள்ளியே நிற்பாளோ என்று பயந்தார். ஆனால் மங்களா இரண்டடி மேகம்போல் மிதந்தாள், கேள்வி மழையாய்ப் பொழிந்தாள். சொன்ன ஒவ்வொரு பதிலிலிருந்தும் புதுக் கேள்வி பிறந்தது. " அது அப்படித்தான்" என்ற பதிலை அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பொறுமையாக அவளின் கேள்விகள் அனைத்திற்கும் இதற்காகவே காத்திருந்தவர்போல் பதில் சொன்ன சொக்கரைப் பார்த்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வியந்தனர். அவருக்குள் இதுநாள்வரை இருந்த ஏக்கம்தான் இப்போது வெளிப்படுகின்றது என்பதை அவர்கள் மெல்ல மெல்ல உணர்ந்தார்கள். மங்களாவைத் தாத்தா கோவிலுக்கு கூட்டிச் செல்வார். அவளின் கோபத்தைப் பார்ப்பதற்காகவே அவளை சீண்டுவார். அவளின் உடைந்த தமிழ் உச்சரிப்பைக் கேட்டு சிரிப்பார். மங்களாவுடன் தாத்தா பழகும் விதம் மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் அவரிடம் இன்னும் நெருங்கிப் பழகும் ஆர்வத்தைக் கொடுத்தது. இதுவரை அவர்களின் நடுவே இருந்த மரியாதை என்ற திரை மறையவில்லை, மாறாக அந்தத் திரையில் 'உரிமை' என்ற ஒரு சின்ன ஜன்னல் உருவாகியது. தங்கள் தாத்தாவை உரிமையுடன் நெருங்கினார்கள். அவரும் பாலைவனத்தில்

நீரைக்கண்டவனைப்போல் அவர்களை வாரி சேர்த்துக்கொண்டார். மங்களாமூலம் அவர் அடைந்த மகிழ்ச்சி மட்டற்றது. ஆனால் தனது மற்ற பேரப்பிள்ளைகள்அருகிலேயே இருந்தும் கூட விலகியே இருந்தது கொடுமை. அதை வாய்விட்டு சொல்லமுடியாமல் அவர் பட்ட வேதனைகளை இனியும் அவர் அனுபவிக்கத் தயாராக இல்லை. தன்னைப்போல் தன் பிள்ளைகளும் காலம் சென்றபின் ஏங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் தந்தை தனக்குக் கற்றுத்தர தவறிவிட்டார், அதே தவறை சொக்கர் செய்யத்தயாராக இல்லை. மாற்றத்துக்கான முதலடியை நானே எடுத்து வைக்கிறேன். கொஞ்சம் கரடுமுரடான பாதைதான், ஆனால் தொடர்ந்து நடைபோட்டால், ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகாதா?அது தன் பள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்காதா? தான் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, தனது பிள்ளைகள் அனைவர்மீதும் தான் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேன் என்று அறிந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களின் அப்பாவை நல்லபடிதான் பார்த்துக்கோண்டோம் என்ற மனநிறைவுடன்தான் அவர்கள் தன்னை வழியனுப்பி வைக்கவேண்டும்.
தனக்கு இந்த ஒன்றே போதும். காது இன்னமும் கேட்கும்போதே, கண்கள் இன்னமும் பார்க்கும்போதே தனது கனவு நனவானதை எண்ணி மகிழ்ந்தார். ஏற்ற இறக்கமில்லாமல் சீராய், நேராய் சுவாரஷ்யம் இன்றிப் போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்க்கைக் கோட்டில், இப்போது இதயத்துடிப்பாய் ஓர் சலனம். .....ஆனால் அதுதானே வாழ்வின்
அறிகுறி?


வியாழன், ஜனவரி 01, 2015

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

"ஒன்றுபட்டு உயர்வோம் "
மிக்க அன்புடன்
-ஆசிரியர் -

அந்திமாலை இணையம்