வெள்ளி, மே 31, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் 
நல்ஆள் உடையது அரண். (746)
 
பொருள்: அகத்தாருக்குத்(உள்ளே இருப்பவர்) தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய் போர் நெருக்கடியான நேரத்தில் உதவக்கூடிய நல்ல வீரர்களையுடையது அரண் ஆகும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம். ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீம்கள் சிறந்த முஸ்லீம்களாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மத வழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

வியாழன், மே 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
 
 
கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் 
நிலைக்குஎளிதாம் நீரது அரண். (745)

பொருள்: பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடம், உணவுப் பொருளைக் கொண்டதாயும், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாயும் அமைந்தது அரண்.

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு

நீரைவிடப் பலவீனமானது வேறொன்றுமில்லை. ஆனால் வன்மையை வெற்றி கொள்வதில் அதைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கின்ற, ஆனால் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய பேருண்மை. கரைகளையும், அணைகளையும் உடைத்துச் சிதறிச், சீறிப் பாய்ந்து வரும் வெறி பிடித்த வெள்ளமும் வெறும் தண்ணீர்தானே?  கல் நெஞ்சையும் கரைக்கும் 'கண்ணீர்' என்பதும் ஒரு வகைத் தண்ணீர்தானே? கடைசிக் காலத்தில் அனைத்தையும் அடையாளம் இல்லாமல் அழித்துத் தன்  வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளக் காத்திருக்கும் பிரளயம் என்கிற ஆழிப் பேரலையும்(சுனாமி) தண்ணீரின் ஒரு வடிவம்தானே? இருப்பினும் மென்மை  என்பது வாழ்வின் தோழன்; வன்மை என்பது சாவின் தோழன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம்.

ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த காய்கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது.
ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில் கால்சியம், ரிபோபிளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள் வெங்காயத்தில் உள்ள வாசனை கந்தகப் பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாசனை மறைய நீண்ட நேரம் ஆவதற்கு இதுதான் காரணம் இப்படிக் கடித்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி, முதலியன குணமாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரிபோபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகிறது.

சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என்றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள்தான் உள்ளன.
தரம் மாறலாமா? வெங்காயத்தை வதக்கியோ வேகவைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்துவிடாமல் அப்படியே கிடைக்கும். உறைப்பு அதிகமுள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமுங்கூட அழிந்துவிடாமல் அப்படியே கிடைக்கும்.
உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறுநீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்கவைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். கபத்தை வெளிக் கொண்டுவரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங்காயம் சிறந்த உணவு மருந்தாகத் திகழ்கிறது.
இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்.

நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.
காய்ச்சல், சிறு நீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச்சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறாகச் சாப்பிடுகிறவர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.
உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காயத்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு எனப் பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குளிர்காய்ச்சல் குணமாக வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்! இதயப் பையின் சுவர்தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத்துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும், நெஞ்சு வலியும் குணமாகும். இதனால்தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல்... மேலும்

புதன், மே 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை 
ஊக்கம் அழிப்பது அரண். (744)
 
பொருள்: காக்க வேண்டிய வாயில் சிறியதாய், உள்ளே அகன்ற இடத்தை உடையதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்க வல்லதாய் உள்ளதே அரண் ஆகும்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

செவ்வாய், மே 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் 
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். (743)
 
பொருள்: உயர்ச்சியும், அகலமும், திண்மையும், பகைவரால் கடத்தற்கு இயலாத அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை அரண் என்று சொல்லுவார் நூலோர்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள் 


7. புல்லினும் அற்பமானது எது?
 புல்லினும் அற்பமானது கவலை.

8. தேசாந்திரம்(தூர தேசம்) போகிறவனுக்கு யார் தோழன்?
தேசாந்திரம் போகிறவனுக்குத் தோழன் அவன் கற்று வைத்திருக்கிற வித்தை(தொழில்) ஆகும்.

9. வீட்டில் இருக்கிறவனுக்கு யார் தோழன்(நட்பு)?
 வீட்டில் இருக்கிறவனுக்கு அவனது மனைவியே தோழன்(நட்பு) ஆவாள். 

திங்கள், மே 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் 
காடும் உடையது அரண். (742)
 
பொருள்: நீலமணி போன்ற நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும் கொண்டுள்ளதே பாதுகாப்பான அரண் ஆகும்.

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் ஆபன் ஹீம் 

தூரத்தில்தான் இன்பம் இருப்பதாக எண்ணி ஏங்குகிறான் முட்டாள். ஆனால் புத்திசாலியோ இன்பம் காலடியில் கிடக்கிறது என்ற உண்மையைக் கண்டு பிடிக்கிறான்.

ஞாயிறு, மே 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
 


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் 
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: படையெடுத்துப் போர் செய்யச் செல்பவர்க்கு அரண் (கோட்டை) சிறந்ததாகும்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.

சனி, மே 25, 2013

பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள்  சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திரு டி. எம்.சௌந்தரராஜன் அவர்கள்  இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
மதுரையில், 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். 1950ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" பாடல் மூலமாக சௌந்தரராஜன் தமிழ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
அதன்பிறகு தொடர்ந்து அவரது இனிய குரலால் பல்வேறு திரைப்பட பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தமிழில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். புரட்சித் தலைவர் M.G.R மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற பிரபல நடிகர்களுக்காக இவர் பாடிய பல நூற்றுக் கணக்கான பாடல்கள் தமிழ்
மக்களின் மனங்களை விட்டு அகலாதவை. புரட்சித் தலைவருக்காக இவர் பாடிய "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" மற்றும் நடிகர் திலகத்திற்காகப் பாடிய "பூ மாலையில் ஓர் மல்லிகை" மற்றும் பக்திப் பாடல்களில் "அழகென்ற சொல்லுக்கு முருகா", "உள்ளம் உருகுதையா முருகா" "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்", ஆகியவையும் புரட்சிப் பாடல்களில் "அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்", "அச்சம் என்பது மடமையடா" போன்ற பாடல்களும், தத்துவப் பாடல்களில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" போன்ற பாடல்களும் காலத்தால் அழியாதவை. இது தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இசை உலகில் ஒரு முத்திரை பதித்த சாதனைக் கலைஞன் அமரர் T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கு அந்திமாலையின் அஞ்சலிகள். 

அமரர் T.M. சௌந்தரராஜன் அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று அந்தி மாலையின் வாசகர்களுக்காக:

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே 
வேந்துஅமைவு இல்லாத நாடு. (740)
 
பொருள்: ஒரு நாட்டில் நல்ல ஆட்சி அமையவில்லையானால் தேவையான எல்லா வளங்களையும் உடையதாக அந்நாடு இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி
 

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொருள்: எத்தகைய உயர்வான பொருளாக இருப்பினும் அது தாராளமாகக் (அடிக்கடி) கிடைத்தால் அதன் மதிப்பை நாம் உணர மாட்டோம். தமிழ்ச் சமுதாயத்தில் 'பால்' எல்லாத் தரப்பு மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கும் பானம் அல்ல. அத்தகைய 'பால்' அடிக்கடி கிடைத்தால் அதன் சுவையை நாம் அனுபவித்து உணர மாட்டோம். விரும்பிய ஒன்றை நாம் அடைந்து விடுகிறோம் எனும் நிலை வரும்போது தொடர்ந்து அதன்மேல் பிடிப்பு இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதை விளக்கவே நம் முன்னோர்கள் இந்தப் பழமொழியைக் கூறி வைத்தனர்

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்?

ஆக்கம்:ஆனந்த், சென்னை.
நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!
நன்றி: joyfulever.blogspot.com

வெள்ளி, மே 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு
 
 
நாடென்ப நாடா வளத்தன; நாடு அல்ல 
நாட வளம்தரும், நாடு. (739)

பொருள்: வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி எல்லா வளங்களும் தன்னகத்தே கொண்டதே நல்ல நாடு என்பர். பிறர் உதவியால் வாழும் நாடு, நாடு ஆகாது.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட குணங்களையும், பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் தாங்கி, எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்தான். மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும். அதுவே உயர்ந்த மார்க்கம்.

வியாழன், மே 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம்  ஏமம் 
அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. (738)

பொருள்: நோய் இல்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு 

'இன்மை' 'வெறுமை' என்பன எளிமையைக் குறிக்கும். "நிறைந்திருப்பது" என்பது கர்வத்தைக் குறிக்கும். பணிவும் மென்மையும் எளிமையின் அடையாளம். சம பலமுடைய படைகள் சந்திக்கும்போது பணிவு உடையவனே வெற்றி பெறுவான். "நீரைப்(தண்ணீரைப்) போன்றவனே சிறந்த மனிதன். எல்லாப் பொருள்களுக்கும் தண்ணீர் பயன்படுகிறது; ஆனால் அவற்றோடு தண்ணீர் போட்டியிடுவதில்லை. எல்லோரும் ஏளனமாய்க் கருதும் தாழ்வான இடங்களில்தான் அது வசிக்கிறது. ஆனால் அது இல்லாது போனால் உலகின் மூச்சு நின்று போய் விடும்". வன்மைதான் வெற்றி பெறும் என்று உலகமே நம்புகிறது. அது மூடத்தனம். மென்மைதான் வெற்றி பெறும் என்பது அறிவாளிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
 

புதன், மே 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு. (737)
 
பொருள்: ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும்(கோட்டை) நாட்டிற்கு அங்கங்களாகும்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்


கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை.

வல்லாரை மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரையை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அது மாத்திரையாகவும் உட்கொள்ளுகிறோம். அது ஞாபக சக்தி மட்டும் இல்லாமல் மற்றதுக்கும் ( உடல் நலத்துக்கு ) இது நல்லது.

வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. சரசுவதிக் கீரையென்றும் வெறு பெயருடனும் அழைக்கின்றனர்.


இக்கீரையின் ச‌த்துக்க‌ள்:

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

3. இந்தக் கீரையில்... மேலும்

செவ்வாய், மே 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை. (736) 
பொருள்: பகைவரால் கெடுதல் இல்லாததாய், கெட்டாலும் தன் வளத்தில் குறையாததாய் உள்ள நாடே எல்லா நாடுகளிலும் தலைமையானது என்று கூறுவர் அறிஞர்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

4. பூமியைக் காட்டிலும் கனமானது எது?
மக்களைத் தாங்கும் தாய் பூமியைக் காட்டிலும் கனமானவள்.

5. ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
 பொறுப்புணர்வோடு தன் குழந்தைகளைக் காக்கும் தந்தை ஆகாயத்தைக் காட்டிலும் உயந்தவன்.

6. காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?
காற்றைக் காட்டிலும் விசை கொண்டது மனம்.

திங்கள், மே 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் 
கொல்குறும்பும் இல்லது நாடு. (735) 
பொருள்: பல வகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், மன்னனை வருத்துகின்ற கொலை வெறியுள்ள குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

இன்றைய பழமொழி

இத்தாலியப் பழமொழி

ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்து விடுகிறது.

ஞாயிறு, மே 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு. (734)

பொருள்: மிக்க பசியும், நீங்காதநோயும், வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் விளங்குவதே நல்ல நாடாகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில், நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கு வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.

சனி, மே 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 74, நாடு

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறைஒருங்கு நேர்வது நாடு. (733)
பொருள்: வேற்று நாட்டவரையும் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைபொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே நல்ல நாடாகும்.