கிறிஸ்தோபர் கொலம்பஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தோபர் கொலம்பஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 17, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 20

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
இவ்வாறு பல காதலிகள் அல்லது ஆசைநாயகிகள் வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு அவனது 'செல்வம்' அல்லது 'பதவி' யைக் காரணமாக வைத்துத் தமது புதல்விகளுள் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பதற்கு ஒரு தந்தையானவன் தயங்குவதில்லை. இவ்வாறு ஒரு வணிகனுக்கோ அல்லது வணிகப் பங்காளனுக்கோ, படையதிகாரிக்கோ தனது மகளைத் திருமணம் செய்து வைப்பது ஒரு 'கௌரவமான' நடவடிக்கையாக அக்காலத் தந்தையர்களால் கருதப் பட்டது. இந்த வகையில் 1479 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் போர்த்துக்கல் நாட்டின் போர்ட்டோ சண்டோ(Porto Santo) தீவின் ஆளுநராகிய பார்டோ லோமியோ பெரேஸ்டெறேல்லோ(Bartolomeu Perestrello) தனது மகளாகிய பிலிப்பா (FilipaMoniz Perestrello) என்பவளைக் கொலம்பஸ்சிற்கு திருமணம் செய்து வைத்தான். அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது கொலம்பஸ் இன்னொரு நாட்டில் குடியேறும்போது தனது மகளாகிய பிலிப்பா, கொலம்பஸ்சால் கைவிடப் படுவாள் என்பது.
இந்தத் திருமணத்தின் ஊடாக கொலம்பஸ்-பிலிப்பா தம்பதிகளுக்கு 1479-1480 காலப் பகுதியில் டீகோ கொலம்பஸ்(Diego Columbus அல்லது போர்த்துக்கேய மொழியில் Diogo Colombo/Diego Colón Moniz) என்ற மகன் பிறந்தான். இவனும் பிற்காலத்தில் தனது தந்தையைப் போலவே புகழ் வாய்ந்த கடலோடியாகவும், போர்த்துக்கல் நாட்டினரால் ஆளப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சாண்டோ டொமிங்கோ போன்ற(தற்போதைய டொமினிக்கன் குடியரசு/ கெயிட்டியின் அயல்நாடு) நிலப் பரப்புகளுக்கு ஆளுநராகவும் விளங்கினான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இக்காலப் பகுதியும் கொலம்பஸ்ஸின் வாழ்வில் மிகவும் எழுச்சியான காலப் பகுதி என்றே கூறவேண்டும் ஏனெனில் 1482 தொடங்கி 1485 காலப் பகுதிக்குள் போர்த்துக்கல் நாட்டின் சார்பில் மேற்கு ஆபிரிக்க நாடுகளில்(மேற்கு சகாரா தொடக்கம் பெனின் வரை சுமார் 16 நாடுகள்) வர்த்தகத்தில் ஈடுபடும் பொறுப்பு போர்த்துக்கேய அரசரால் கொலம்பஸ் இற்கு வழங்கப் பட்டது. இப்பதவியானது அக்காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த, பொறுப்புமிக்க, செல்வச் செழிப்பு மிக்க ஒரு பதவியாகும். காரணம் வெளிநாட்டு வாணிபம் மற்றும் கடற்கலங்களைக் கொள்ளையடித்தல் போன்ற முயற்சிகளின் மூலம் சம்பாதிக்கப் படும் ஏராளமான செல்வங்களைக் கையாளும் பொறுப்பு வணிக அதிகாரியாகிய கொலம்பஸ் இற்கு உரியதாகும். இப்பதவியின் மூலம் கொலம்பஸ் தனது போர்த்துக்கேய அரசிற்கும், தனக்கும் ஏராளமான செல்வங்களைச் சேர்த்துக் கொண்டார். இக்காலத்தில் உள்ள அரசாங்க அமைச்சுப் பதவிகளுடன் கொலம்பஸ்ஸின் பதவியை ஒப்பிட்டால் 'வெளியுறவுத் துறை அமைச்சர்' அல்லது, 'வணிகத்துறை அமைச்சர்' போன்ற பதவிகளோடு ஒப்பிட முடியும். ஆனால் ஒரேயொரு வேறுபாடு இக்கால அமைச்சர்களுக்கு அரசினால் வழங்கப்படும் 'சம்பளம்' மட்டுமே 'செல்வம்' என்ற வரையறைக்குள் அடங்குகிறது.ஆனால் அக்காலத்தில் இத்தகைய வணிக அதிகாரிகள் அரசாங்கத்திற்குச் சேர்த்துக் கொடுக்கும் 'செல்வத்தின்' அடிப்படையில் அவர்களுக்கான 'ஊதியமோ' 'பாகமோ' அரசினால்/அரசனால்  தீர்மானிக்கப் படும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற மேலைத் தேசத்தவர்கள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக 'வியாபாரிகளாகவே' ஆசிய நாடுகளுக்குள் காலடி வைத்தனர் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
இவ்வாறாக கொலம்பஸ் பிலிப்பாவைத் திருமணம் செய்த ஒரு சில ஆண்டுகளுக்குள் போர்த்துக்கல் நாட்டின் வியாபாரக் கேந்திரமாக மேற்கு ஆபிரிக்காவின் கரையோரப் பகுதி நாடாகிய தற்போதைய கானாவில்(Ghana) உள்ள 'எல்மினா'(Elmina) எனும்  பெயர்கொண்ட நகரத்தில் நிறுவப்பட்ட 'போர்த்துகேய வியாபாரத் தலைநகரத்தை' நிர்வகிக்கும் பொறுப்பில் ஏறக்குறைய 6 ஆண்டுகளை கொலம்பஸ் செலவிட்டார்.இதே காலப் பகுதியில் கொலம்பஸ்ஸின் முதலாவது மனைவி பிலிப்பா போர்த்துக்கல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள்.திருமணத்தின் பின் கானாவில்(ஆபிரிக்காவில்) குடியேறிய கொலம்பஸ் ஆறு ஆண்டுகளில் ஒரு தடவைகூட போர்த்துக்கல்லில் வாழ்ந்த தன் மனைவி பிலிப்பாவைச் சந்தித்ததோ, கவனித்துக் கொண்டதோ கிடையாது. இவ்வாறு பிலிப்பாவுக்கு அவளது தந்தையால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட 'மண வாழ்வு' அவளது மரணத்துடன் முற்றுப் பெற்றது.  

(தொடரும்) 


வியாழன், பிப்ரவரி 24, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 19

ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் 
ஒவ்வொரு வணிக அதிகாரியும் சாதாரண படைவீரர்களுக்குரிய திறமைகளை விடவும், மேலதிக திறமையாக அயல் நாடுகளுக்குக் கடற் பாதைகளைக் கண்டுபிடித்தல், தமது நாட்டுக்குக் கொண்டுவரப்படும் செல்வங்களைப் பாதுகாப்பாகத் தமது இராச்சிய எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தல், நாடுகள், சமுத்திரங்கள், குறுகிய பயணத்தால் சென்றடையும் வழிகள் பற்றிய பூகோள அறிவு, தமது இராச்சியம் அண்டைநாட்டின்மீது அல்லது தூர நாட்டின்மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான படைவீரர்கள், ஆயதங்கள், படகுகள், கப்பல்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் பணியை 'நிர்வாகம்' செய்யும் திறமையையும் கொண்டிருந்தனர்.
இந்த நடைமுறைகளின் அடிப்படையில் கொலம்பஸ் ஜெனோவா மற்றும் சவோனா மன்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான 'வணிக அதிகாரியாக' விளங்கினார்.

இவர் தனது ஆரம்ப கால கடற்பயணங்களை ஐரோப்பாவிற்கு உள்ளேயே மேற்கொண்டார். இவர் சரக்குகளை இறக்கும் துறைமுகங்களாக இங்கிலாந்தின் பிரிஸ்டல் (Bristol), அயர்லாந்து ஆகியவற்றையும் தொலைதூர நாடாகிய ஐஸ்லாந்தையும் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொலம்பஸ்ஸின் மூத்த சகோதரனாகிய பார்த்தோலோமியோ(Bartolomeu) தனது தொழிலின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டின் தலைநகராகிய லிஸ்பன்(Lisbon) இல் குடியேற நேர்ந்தது. பார்த்தோலோமியோவும் கொலம்பஸ்சிற்கு எந்த விதத்திலும் குறைந்தவராக இருக்கவில்லை. அவரும் படையினருக்குத் தேவையான வரைபடங்கள் வரைதல், நாடுகளின் படங்கள் வரைதல், கடல் பயணத்திற்குத் தேவையான 'கடற்பாதைகளின்' படங்கள் வரைதல் போன்ற பணிகளில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தை(இது ஆங்கிலத்தில் Cartography என அழைக்கப்பட்டது)  லிஸ்பன் நகரத்தில் நடத்தி வந்தார். தனது அண்ணன் குடியிருந்த நாடு என்ற என்ற காரணத்தால் கொலம்பஸ் அடிக்கடி போர்த்துக்கல் நாட்டிற்குச் செல்லவும், அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் 1479 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கொலம்பஸ் வர்த்தக நடவடிக்கைகளின் நிமித்தம் போர்த்துக்கல் நாட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. அக்காலத்தில் மன்னர்கள் தவிர்ந்த ஏனைய பிரிவினர் அதிகளவில் காதலிகளை அல்லது ஆசைநாயகிகளை(இக்காலத் தமிழில் வைப்பாட்டி அல்லது 'சின்ன வீடு') வைத்துக் கொள்வது அரிது. இருப்பினும் கடலோடிகள்(கடற்படையினர்), கடல் வணிகர்கள் போன்ற பிரிவினருக்கு இவ்விடயத்தில் 'விதிவிலக்கு' அளிக்கப் பட்டிருந்தது. இவ்விடயத்தில் வணிக அதிகாரியாகிய கொலம்பஸ்சும் விதிவிலக்காக இருக்கவில்லை. இவருக்கும் இவர் வணிக நிமித்தம் பயணம் செய்த இங்கிலாந்து, ஐஸ்லாந்து மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் 'காதலிகள்' இருந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பல காதலிகள் அல்லது ஆசைநாயகிகள் வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு அவனது 'செல்வம்' அல்லது 'பதவி' யைக் காரணமாக வைத்துத் தமது புதல்விகளுள் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பதற்கு ஒரு தந்தையானவன் தயங்குவதில்லை. இவ்வாறு ஒரு வணிகனுக்கோ அல்லது வணிகப் பங்காளனுக்கோ, படையதிகாரிக்கோ தனது மகளைத் திருமணம் செய்து வைப்பது ஒரு 'கௌரவமான' நடவடிக்கையாக அக்காலத் தந்தையர்களால் கருதப் பட்டது. இந்த வகையில் போர்த்துக்கல் நாட்டின் போர்ட்டோ சண்டோ(Porto Santo) தீவின் ஆளுநராகிய பார்டோ லோமியோ பெரேஸ்டெறேல்லோ(Bartolomeu Perestrello) தனது மகளாகிய பிலிப்பா (Filipa Moniz Perestrello) என்பவளைக் கொலம்பஸ்சிற்கு திருமணம் செய்து வைத்தான். அப்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது கொலம்பஸ் இன்னொரு நாட்டில் குடியேறும்போது தனது மகளாகிய பிலிப்பா, கொலம்பஸ்சால் கைவிடப் படுவாள் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 
  

வியாழன், பிப்ரவரி 17, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 18

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்
ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே கொலம்பஸ் ஜெனோவா மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கடற்படைப் பிரதிநிதி ஆனான். அவனது இருபத்தியிரண்டாவது வயதில் கிரேக்க நாட்டுக்கருகில் இருக்கும் 'ஜெனோவ்' குடியிருப்புகள் அடங்கிய  தீவாகிய 'சியோஸ்'(Chios) எனும் நிலப்பரப்பு கொலம்பஸ்ஸின் பொறுப்பில் விடப்பட்டது.
அதற்கு அடுத்து வந்த காலப்பகுதிகளும் கொலம்பஸ்ஸின் வாழ்வில் எழுச்சியான காலப் பகுதிகளாகவே அமைந்தன. அக்காலத்தில் ஒவ்வொரு ஐரோப்பிய அரசும் மிகவும் சிறப்பான, வலிமையான கடற்படையினை வைத்திருந்தன. காரணம் வலிமையான கடற்படையை வைத்திருக்கும் அரசு மட்டுமே தனக்கு நேரும் ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், தனது நாட்டு வணிகர்கள் கொண்டுவரும் தங்கம், முத்து, யானைத் தந்தம், பட்டு போன்ற விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாப்பாகத் தனது எல்லைக்குக் கொண்டுவந்து சேர்க்கவும், கடலில் செல்லும் அந்நியக் கப்பல்களைக் கொள்ளையிட்டுச் செல்வம் சேர்க்கவும் முடியும் என்பதால் 'கடற்படை' என்பது ஒவ்வொரு அரசுக்கும் மிகவும் இன்றியமையாத ஒரு அமைப்பாக இருந்தது. (எகிப்திய, ரோமானியக் கடற்படைக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் வலிமையான கடற்படையை 'ராஜ ராஜ சோழன்' எனும் தமிழ் மன்னன் வைத்திருந்தான் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க)
அதற்குப் பின்னதாக ஏறக்குறைய 1476 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு புதியதொரு பதவி 'சவோனா' நாட்டு மன்னரால் வழங்கப் பட்டது. அதாவது சவோனா நாட்டிற்கு(இத்தாலியின் ஒரு பகுதி) ஆசியாவிலிருந்தும், ஆபிரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்தொகுதிகளில் சிலவற்றை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகக் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பொறுப்பாகச் செயற்படும் 'அதிகாரி' என்னும் பதவி கொலம்பஸ்சிற்கு வழங்கப் பட்டது. அக்காலத்தில் இத்தகைய 'அதிகாரி' பதவியைப் பெறுபவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைத் தாண்டியிருப்பார்கள். ஆனால் கொலம்பஸ் இப்பதவியைப் பெறும்போது அவனுக்கு வயது இருபத்தைந்து மட்டுமே.
இவ்வாறு 'அதிகாரி' பதவியிலிருப்பவர்களுக்குரிய தகுதியானது ஏனைய கடலோடிகள், படைவீரர்கள் போன்றவர்களைவிட வேறுபட்டதாயிருக்கும். காரணம், படைவீரர்கள் என்போர் சண்டையிடுதல், கொள்ளையடித்தல், கைப்பற்றிய நிலப்பகுதிகளைச் சூறையாடுதல் போன்ற தமது 'கடமைகளைச்' செய்வர். ஏனைய நாடுகளில், இத்தகைய செயல்களில் டென்மார்க்கின் வைகிங் (Vikings) மன்னர்களும், அவர்தம் படையினரும் கி.பி.900 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகமாக ஈடுபட்டனர் என்பதையும், அவர்கள் மிகவும் வலிமையான நாடுகளாகிய பிரித்தானியா, பிரான்சு, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து பெருமளவு செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்பதையும், உலகில் 150 இற்கு மேற்பட்ட நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து (Scotland) பகுதிகளைப் பல ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  
இக்காலப்பகுதிகளில் ஒவ்வொரு வணிக அதிகாரியும் சாதாரண படைவீரர்களுக்குரிய திறமைகளை விடவும், மேலதிக திறமையாக அயல் நாடுகளுக்குக் கடற் பாதைகளைக் கண்டுபிடித்தல், தமது நாட்டுக்குக் கொண்டுவரப்படும் செல்வங்களைப் பாதுகாப்பாகத் தமது இராச்சிய எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தல், நாடுகள், சமுத்திரங்கள், குறுகிய பயணத்தால் சென்றடையும் வழிகள் பற்றிய பூகோள அறிவு, தமது இராச்சியம் அண்டைநாட்டின்மீது அல்லது தூர நாட்டின்மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான படைவீரர்கள், ஆயதங்கள், படகுகள், கப்பல்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் பணியை 'நிர்வாகம்' செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.
(தொடரும்)

வியாழன், பிப்ரவரி 10, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? - அத்தியாயம் 17

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
ஏறக்குறைய 1470 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு 19 வயதாக இருக்கையில் அவன் தான் வாழ்ந்த தேசத்தின் கடல் எல்லையைக் காப்பாற்றும் 'கடற்படையில்' சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் 15 வயதைத் தாண்டியிருந்தால் தமது தேசத்தைக் காப்பாற்றுவதற்காக படையில் சேரவேண்டியது அவசியமானதாகும். சில தேசங்களில் இந்த வயதெல்லை 14 என்றோ 16 என்றோ அல்லது 18 என்றோ மாறுபட்டு காணப் பட்டது.


இக்காலப்பகுதியில் கொலம்பஸ் கடற்படையில் மிகவும் சிறப்பாகப் பணிபுரிந்ததால் பல மாலுமிகள், கடலோடிகள், கடல் ஊடாக வாணிபம் செய்கின்ற வணிகர்கள் போன்ற பல தரப்பினருடன் தொடர்புகள் ஏற்படலாயிற்று. அது மட்டுமன்றி நாடுகாண் பயணங்களில் ஈடுபட்டிருந்த, நாடுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அயல்நாடுகளில், இத்தாலிக்கு நட்பு நாடுகளாக விளங்கிய போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளின் இராசப் பிரதிநிதிகள், கடல் வாணிபர்கள் போன்றோருடனும் தொடர்புகளைப் பேணும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே கொலம்பஸ் ஜெனோவா மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கடற்படைப் பிரதிநிதி ஆனான். அவனது இருபத்தியிரண்டாவது வயதில் கிரேக்க நாட்டுக்கருகில் இருக்கும் 'ஜெனோவ்' குடியிருப்புகள் அடங்கிய  தீவாகிய 'சியோஸ்'(Chios) எனும் நிலப்பரப்பு கொலம்பஸ்ஸின் பொறுப்பில் விடப்பட்டது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், பிப்ரவரி 03, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 16

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.


அது மட்டுமன்றி, கொலம்பஸ்ஸின் அயலவர்கள் அவன் தன்னந்தனியே மேற்கொண்ட துணிச்சலான கடற்பயணம் பற்றி பெருமையாகப் பேசும்போதெல்லாம், தன் மகனைப்பற்றிப் பெருமை கொள்வதற்குப் பதிலாக, அவன் தொலைத்து விட்டு வந்த படகிற்காகத் தான் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகை பற்றியே ஞாபகம் வந்ததால், அந்த ஏழைத் தந்தையால் அவன்மீது கடும் கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது.
வருடங்கள் சில உருண்டோடின, அக்காலத்தில் இத்தாலியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறிய இராச்சியமாக இருந்து வந்தது. ஒரு சிறிய இராச்சியத்தில் வாழும் மக்கள் தமக்கு அயலிலுள்ள இராச்சியம் தமது அரசுக்கு பகை அரசாக இல்லாவிடில், தொழில் நிமித்தம் மேற்படி இராச்சியத்தில் குடியேறுவது வழமையாக இருந்து வந்தது. இவ்வாறே கொலம்பஸ்ஸின் தந்தையும், தனது நெசவுத் தொழில் பெரிய அளவில் வருமானத்தைத் தராததால், தனது இராச்சியத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த 'சவோனா' (Savona) எனும் பெயருடைய இராச்சியத்தில் தொழில் நிமித்தம் தனது குடும்பத்தினருடன் குடியேற நேர்ந்தது. அங்கு ஆரம்பத்தில் ஒரு பால் பண்ணையில் கூலியாளாக வேலைக்குச் சேர்ந்த அவர், சில வருடங்களின் பின்னர் சொந்தமாகவே ஒரு சிறிய பாலாடைக் கட்டி (Cheese) தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவினார். இதே காலப் பகுதியில் ஏறக்குறைய 1470 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு 19 வயதாக இருக்கையில் அவன் தான் வாழ்ந்த தேசத்தின் கடல் எல்லையைக் காப்பாற்றும் 'கடற்படையில்' சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் 15 வயதைத் தாண்டியிருந்தால் தமது தேசத்தைக் காப்பாற்றுவதற்காக படையில் சேரவேண்டியது அவசியமானதாகும். சில தேசங்களில் இந்த வயதெல்லை 14 என்றோ 16 என்றோ அல்லது 18 என்றோ மாறுபட்டு காணப் பட்டது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
     

வியாழன், ஜனவரி 27, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 15

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
அவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.
மிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.



அதாவது கொலம்பஸ் திருட்டுத் தனமாக எடுத்துக்கொண்டு சென்ற படகிற்குரிய பெறுமதியாகிய 200 புளோரின்களை(அக்காலத்து ஜெனோவா நாட்டு நாணயம்) படகிற்குச் சொந்தக் காரனாகிய ஒரு மீனவனுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். ஏழை நெசவுத் தொழிலாளியாகிய அத் தந்தையால் அவ்வளவு பெரிய தொகையை(இக்காலத்து நாணயத்தோடு ஒப்பிட்டால் 200 யூரோக்கள்) கொடுப்பதற்கு முடியாமல் போனது. இதற்காக தனது வீட்டிலிருந்த உலோகப் பாத்திரங்களையும், தனது கால்நடைகளையும், விற்கவேண்டிய நிலை அம்மனிதனுக்கு ஏற்பட்டது. 
இவ்வாறெல்லாம் செய்தும்கூட மேற்படி தொகையை அவரால் முழுவதுமாக திருப்பிச் செலுத்த முடியவில்லை, இதனால் அவர்களது நாட்டு வழக்கப்படி அவ்வூரில் வாழ்ந்த பணக்காரர்களில் ஒருவனாகிய அம்மீனவர் தலைவனின் வீட்டில் சில மாதங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்துடன் அடிமைகளாக இருப்பவர்கள் தேவாலயங்களில் நடைபெறும் 'பிரார்த்தனைகளில்' பங்குபற்றுவது தடைசெய்யப் பட்டிருந்ததால் கொலம்பஸ்ஸின் குடும்பத்தினர் தேவாலயங்களில் ஆராதனையில் பங்குபற்றுவது சில மாதங்கள் தடுக்கப் பட்டிருந்தது.
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

வியாழன், ஜனவரி 20, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 14

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எங்கள் சிறுவனைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள், வாருங்கள் எல்லோரும் சேர்ந்து மதுவருந்தி, உணவு புசிப்போம்" என்றான் ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன் தனது அறியாமையைச் சமாளித்தபடி.
அவர்கள் மதுவருந்திக் கொண்டிருக்கையில் 'கொலம்பஸ் கண்டுபிடிக்கப் பட்டான்' என்ற செய்தி அவன் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த கொலம்பஸ்ஸின் நண்பன் அன்டோனியோ வினாலேயே மேற்படி செய்தி கொலம்பஸ்ஸின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. கொலம்பஸ்சைக் கண்ட மாத்திரத்தில் தனது வீட்டிற்கு ஓடோடிச்சென்ற அன்டோனியோவுடன், கொலம்பஸ்சும் ஓடிப்போக நினைத்தான் ஆனால் ஜெனோவா நாட்டு மீனவர்களும், மீனவர் தலைவனும் அவனை அதட்டி கடற்கரைக்கு வெகு சமீபமாகவுள்ள ஒரு புற்தரையில் உட்காருமாறு பணித்தனர்.
 தனது நாட்டு மீனவர்கள் ஏன்இவ்வாறு முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பது சிறுவன் கொலம்பஸ் இற்கு புரியவில்லை, இருப்பினும் அவர்கள் சொற்படியே, தரையில் அமர்ந்தான்.
ஒரு சில நிமிடங்கள் இடைவெளியில் கொலம்பஸ்ஸின் தாயும், தந்தையும் சகோதரர்களும், உறவினர்களில் சிலரும் அக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். "காணாமல் போய்விட்டான்" என்றும், 'பிள்ளைகளைப் பிடிப்பவர்களால் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டான்' என்றும், "கடலில் மூழ்கி இறந்துவிட்டான்" எனவும் கருதப்பட்ட தங்கள் மகன் கொலம்பஸ் 'கண்டு பிடிக்கப் பட்டான்' என்ற செய்தியறிந்தபோது மிகவும் மகிழ்ந்த அவனது பெற்றோர், அவனை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்ற அந்தக் கணத்தில் தம்மை மறந்து, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் தாயானவள் ஒருவாறு தெளிந்தவளாய் ஓடோடிச் சென்று தனது மகனை அள்ளி அணைத்து, முத்தமழை பொழிந்தாள்.


கொலம்பஸ்ஸின் அருகில் சென்ற அவன் தந்தையும், உறவினர்களும் அவனது தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தனர். கொலம்பஸ்ஸின் சகோதரர்கள் அவனுக்கருகில் செல்லாமல் சிறிது தூரத்திலேயே நின்றபடி அவனை ஒரு 'வேற்றுக் கிரக வாசியைப்' பார்ப்பது போலப் பார்த்தனர். மௌனத்தைக் கலைத்தபடி, மீனவர் தலைவன் 'கடந்த 24 மணி நேரத்தில்' கொலம்பஸ்இற்கு என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கத்தைச் சுருக்கமாக அவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறினான். கொலம்பஸ் யாரால் காப்பாற்றப் பட்டான் என்பதையும் கூறி, மொனாக்கோ நாட்டு மீனவர்கள் அமர்ந்திருந்த திசையை காட்டினான், அம்மீனவர்களை நன்றிப் பெருக்கோடு பார்த்த கொலம்பஸ்ஸின் பெற்றோர், அவர்களை நோக்கிக் குனிந்து தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்தனர்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து தனது வீட்டிற்கு சென்று திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை ஒரு மிகப் பெரிய கூடையில் 'ஜெனோவா' நாட்டின் பிரபலமான சில காய்ந்த திராட்சைப் பழங்களையும், ஒலிவ மரத்தின் காய்களையும், கொண்டுவந்து 'மொனாக்கோ' நாட்டு மீனவர் தலைவனிடம் கொடுத்தார். அம்மீனவர் தலைவனும் அவற்றை நன்றி கூறிப் பெற்றுக் கொண்டான்.


அவற்றைப் பெற்றுக்கொண்டபின், மொனாக்கோ நாட்டு மீனவர்கள் 'ஜெனோவா' நாட்டு மீனவர்களைக் கட்டியணைத்து, வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றனர். அவர்கள் தங்கள் படகைச் செலுத்துவதற்கு தயாராக தண்ணீருக்குள் கிடந்த 'நங்கூரத்தை' எடுத்து படகில் வைத்தபடி, படகின் பாய்களை விரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ஜெனோவா நாட்டு மீனவர்கள் "மொனாக்கோ, ஜெனோவா ஒற்றுமை ஓங்குக" என்று கோஷமிட்டார்கள். அவர்களைப் போலவே படகிலிருந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களும் "ஜெனோவா, மொனாக்கோ ஒற்றுமை ஓங்குக" என்று கோஷமிட்டார்கள். அவர்களின் படகு நீரைக் கிழித்துக்கொண்டு எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தபோது கரையில் நின்ற ஜெனோவா நாட்டு மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்ஸின் தந்தையும் கைகளை அசைத்து அவர்களை மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார்.
மிகவும் மகிழ்வோடு அவர்களை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய கொலம்பஸ்ஸின் தந்தை இப்போது ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியவரானார்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், ஜனவரி 13, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 13

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
கொலம்பஸ் ஓடோடிச் சென்று தனது நண்பனைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். நண்பனின் செய்கை அண்டோனியோவைத் திகைப்பில் ஆழ்த்தியது. இதற்கிடையில் வேற்று நாட்டு மீனவர்கள் தங்கள் கரையில் வந்திறங்கிய செய்தியறிந்து ஜெனோவாவின் மீனவர்களின் தலைவன் அவ்விடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தான். அவனோடு கரையில் இருந்த மீனவர்களும் சேர்ந்துகொண்டு, கொலம்பஸ்சைக் கூட்டி வந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.


நீங்கள் எல்லாம் யார், எதற்காக இங்கு வந்தீர்கள்? எமது நாட்டில் உங்களுக்கு என்ன வேலை? என்பன போன்ற கேள்விகளே ஜெனோவா நாட்டு மீனவர்களிடமிருந்து பிறந்தன. அது மட்டுமில்லாமல் சில மீனவர்கள் வாள், ஈட்டி, கத்தி, கண்ட கோடரி, போன்ற ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர்களாய் அவர்களோடு ஒரு போருக்குத் தயாரானவர்களாய், தங்கள் தலைவனின் ஆணைக்காகக் காத்து நின்றனர்.


நிலைமை விபரீதமாகுவதை உணர்ந்துகொண்ட மொனாக்கோ நாட்டு மீனவர்களில் இத்தாலிய மொழி தெரிந்த மீனவன் பேச ஆரம்பித்தான். "கனவான்களே, நான் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள், நாங்கள் யாருமே தங்களுக்கு துன்பம் விளைவிக்கும் நோக்கில் இங்கு வரவில்லை, நாம் தீய எண்ணத்தோடு வந்திருப்போமானால், பகலில் இங்கு வந்திருக்க மாட்டோமே, தவிரவும் கையில் ஆயுதங்களோடு அல்லவா வந்திருப்போம். உங்கள் மத்தியிலிருந்து கடலலையால் அலைக்கழிக்கப் பட்டுக், காணாமல்போன இந்தச் சிறுவனை உங்கள் கைகளில் ஒப்படைப்பதற்காகவே வந்தோம், தயை கூர்ந்து எம்மைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று அவன் கூறி முடிக்கும்போது ஜெனோவா நாட்டு மீனவர்கள் அனைவரும் தங்கள் செய்கைக்காக வெட்கித் தலை குனிந்தனர். அவர்களில் பலர் தங்களது கைகளில் இருந்த ஆயுதங்களை ஒரு ஓரமாக மறைத்து வைக்கத் தொடங்கினர்.


மேற்படி இத்தாலிய மொழி தெரிந்த அம்மீனவன் சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த கொலம்பஸ்சைப் பார்த்து "சிறுவனே இங்கே வா, உனக்கு என்ன நடந்தது, என்பதை இவர்களுக்கு எடுத்துக் கூறு." என்று பணித்தான்.
நடந்துகொண்டிருக்கும் விடயங்களை மிகுந்த திகிலுடன் பார்த்துக் கொண்டு நின்ற கொலம்பஸ் அவர்களின் முன்னால் வந்து நின்றானாயினும், அவர்கள் மத்தியில் பேசுகின்ற துணிவை அவன் முற்றாக இழந்துவிட்டிருந்தான். பயத்தினால் அவனது கை,கால்கள் நடுங்க ஆரம்பித்தன. மெதுவாக விம்மிய படியே பேச ஆரம்பித்தான். "படகு...........பல்மாரியா.............காற்று.......மழை...........அந்நிய தேசம்" இவ்வாறு துண்டு துண்டாக உடைந்த வார்த்தைகளில் அவன் பேசியதை யாருமே புரிந்து கொள்ளவில்லையாயினும், சூழ்நிலையை வைத்து அவன் கூறியவைகள் என்ன என்று அவர்கள் புரிந்து கொண்டனர். இது இவ்வாறிருக்கையில் கொலம்பஸ் எடுத்துச் சென்று கடலில் மூழ்கவிட்ட படகுக்குச் சொந்தக்காரனான மீனவன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான், அவன் மிகவும் சுருக்கமாக நடந்தது என்ன என்று தனது மீனவர் தலைவனுக்கு எடுத்துரைத்தான். அவன் கூறியவைகளை உள்வாங்கிக் கொண்ட ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன், தனது மீனவர்களின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டவனாய் பிரெஞ்சு மொழியில் பேச ஆரம்பித்தான். "ஐயன்மீர் உங்களை வணங்குகிறேன், உங்களை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம், உங்கள் உதவி மிகவும் விலை உயர்ந்தது, ஜெனோவாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும், ஜெனோவா-பிரான்ஸ் ஒற்றுமை ஓங்கட்டும்" என்று ஒரு சிறிய ஆனால் மிகவும் பண்பான வரவேற்புரையை நிகழ்த்தினான்.


இடையில் குறுக்கிட்ட மொனாக்கோ மீனவன் "அன்பரே, ஒரு சிறிய திருத்தம்  நாங்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களில்லை 'மொனாக்கோ' நாட்டைச் சேர்ந்தவர்கள்" என்றான். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எங்கள் சிறுவனைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள், வாருங்கள் எல்லோரும் சேர்ந்து மதுவருந்தி, உணவு புசிப்போம்" என்றான் ஜெனோவா நாட்டு மீனவர் தலைவன் தனது அறியாமையைச் சமாளித்தபடி.
அவர்கள் மதுவருந்திக் கொண்டிருக்கையில் 'கொலம்பஸ் கண்டுபிடிக்கப் பட்டான்' என்ற செய்தி அவன் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது.
(தொடரும்) 

வியாழன், ஜனவரி 06, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 12


ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அவர்களின் பேச்சின் இடையிடையே 'மீனவர் தலைவன்' படகு செல்ல வேண்டிய திசை பற்றியும், பாய்மரத்தையும், பாயையும் சுருக்க வேண்டிய விதம் பற்றியும் உரத்த குரலில் கட்டளைகளை பிரெஞ்சு மொழியில் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரத்த குரலிலான பேச்சுக்கள் கொலம்பசுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் சில மணி நேரங்களின் பின்னர் அவன் கண்ணில் தனது 'ஜெனோவா' கடற்கரை தென்படவும் பயமெல்லாம் பறந்து போனது, உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது.
 
இதோ கடந்த 24 நான்கு மணி நேரங்களுக்கு மேலாக அவன் காண்பதற்குத் துடித்துக்கொண்டிருந்த தனது சொந்த நாட்டின் கடற்கரை தென்படுகிறது, இதை விடவும் அவனுக்கு ஆனந்தம் அளிக்கும் காட்சி வேறெதுவும் உண்டோ? தன் தாயை, தந்தையை, சகோதரர்களை இனி எப்போது காண்போம் என்று ஏங்கியிருந்த அந்தச் சிறுவன் உடலில் புது இரத்தம் பாய்ந்ததுபோல் 

Kids smiling boy 2உணர்ந்தான். அவன் உள்ளத்தில் தோன்றிய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இவ்வளவு நேரமும் பணிவோடு படகில் அமர்ந்திருந்த அவன் முதலில் படகில் எழுந்து நின்றான். தன்னை யாருமே, கடிந்து அல்லது அதட்டி எதுவும் கூறவில்லை என்று தெளிந்ததும் படகிலேயே துள்ளிக் குதித்தான். ஊ, ஊ, என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பினான். "என் தாயகம் வந்து விட்டது, என் தாயகம் கண்ணில் தெரிகிறது, ஆண்டவரே நன்றி, ஆண்டவரே நன்றி" என்று கூவியபடி இரண்டு கைகளையும் விரித்து வானத்தை நோக்கி நீட்டினான். இன்று காலைமுதல் தங்கள் படகில் மிகவும் கவலையோடு, அமைதியாக அமர்ந்திருந்த சிறுவனின் தற்போதைய செய்கை படகிலிருந்த மீனவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் தன் தாயகத்திற்கு வந்து சேர்ந்தவுடன் ஒரு சிறுவன் எவ்வாறு மகிழ்வான் என்பதை உணர்ந்த அந்த வயது முதிர்ச்சியுள்ள மீனவர்கள் அனைவருமே சிறுவனது செய்கையால் நெகிழ்ந்தனர்.


அரை மணி நேரப் பயணத்தின் பின்னர் அவர்கள் ஜெனோவாக் கடற்கரையில் தங்கள் படகை நங்கூரமிட்டனர். ஓரளவு ஆழமான கடற் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் நடக்கும்போது சிறுவனாகிய கொலம்பஸ்ஸை  மீனவர் தலைவன் தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவர்கள் கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கரையில் ஜெனோவா நாட்டு மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயவிட்டபடியும், படகுகளைப் பழுது பார்த்துக் கொண்டும், மீன்களை வெயிலில் உலர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். அன்று ஒரு வெயில் நாள் என்பதால் கடற்கரையில் பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நின்றனர். கொலம்பஸ் என்ற தங்கள் நண்பனைச் சுமந்தபடி ஒரு இராட்சத உருவமுள்ள மனிதன், பல மீனவர்கள் சகிதம் வருவதைக் கண்டு முதலில் பயந்தனர். பின்னர் ஆச்சரியத்தோடு நோக்கினர். அவர்களில் ஒருவன் கொலம்பஸ்ஸை நோக்கி "கொலம்பஸ், கொலம்பஸ், உனக்கு என்னவாயிற்று, நீ எங்கே போய்விட்டாய்? உன்னை உன் பெற்றோர் ஊர் முழுதும் தேடுகிறார்கள் தெரியுமா? என்று உரத்த குரலில் கூறினான். கொலம்பஸ் சத்தம் வந்த திசையை நோக்கினான். அங்கு நின்றது 
வேறு யாருமல்ல, அவனது உற்ற நண்பன் அண்டோனியோவே அங்கு நின்றிருந்தான். மீனவர் தலைவன் கொலம்பஸ்ஸை தனது தோளிலிருந்து இறக்கி விட்டான். கொலம்பஸ் ஓடோடிச் சென்று தனது நண்பனைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். நண்பனின் செய்கை அண்டோனியோவைத் திகைப்பில் ஆழ்த்தியது. இதற்கிடையில் வேற்று நாட்டு மீனவர்கள் தங்கள் கரையில் வந்திறங்கிய செய்தியறிந்து ஜெனோவாவின் மீனவர்களின் தலைவன் அவ்விடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தான். அவனோடு கரையில் இருந்த மீனவர்களும் சேர்ந்துகொண்டு, கொலம்பஸ்சைக் கூட்டி வந்த மொனாக்கோ நாட்டு மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.
(தொடரும்)         
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 30, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா கொடியவனா? - அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.


அந்த மீனவனே பரிவான குரலில் கூறினான் "நாங்கள் இப்போது ஜெனோவாவிற்குச் செல்கிறோம், உன்னை உன் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போகிறோம்" இந்த வார்த்தைகளைக் கேட்ட கொலம்பஸின் முகம் மலர்ந்தது. "உண்மையாகவா" என்று சிறிது ஐயத்தோடு கேட்டான். "உண்மையாகவேதான், இதோபார் எங்கள் படகு உனது தேசத்தை நோக்கித்தான் செல்கிறது, அங்கு தொலைவில் தெரிவது ஜெனோவாக் கடற்கரை, உனக்குத் தெரிகிறதா? என்று கேட்டான்.
அங்கு அந்த மீனவன் காட்டிய திசையில், கடலின் மறு பக்கத்தில் கறுப்பாகவும், சிறிதும் பெரிதுமாகவும் கட்டிடங்களும், சிறு குடிசைகளும் தெரிந்தன. ஆனால் அது தனது ஊர்தான் என்பதை அவன் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவில் அது அருகாமையில் இல்லாததால் அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. இருப்பினும் இந்த உரையாடலின் பின்னர் அவன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது, இன்று காலைவரை இருள் படர்ந்திருந்த அவனது மனத் திரையில் இப்போது ஒளிக்கற்றைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனது மகிழ்ச்சி அவனது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. "என்ன சந்தோசம்தானே? மீனவன் கடலலைகளின் இரைச்சலுக்கு மத்தியில் சத்தமாகக் கேட்டான்.


கடல் இரைச்சலுக்கு மத்தியில் பேசும்போது, சத்தமாக பேசுவது நடைமுறை என்பதைக் கொலம்பஸ் அறிந்தானில்லை, ஆதலால் அம்மீனவனின் இடி போன்ற குரல் அவனுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு மெல்லிய குரலில் "ஆம்" என்று பதிலளித்தான். ஆனால் அவனது பதில் மீனவனின் காதில் எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது.
படகில் இருந்த மீனவர்கள் ஒருவரோடு ஒருவர் மிகவும் இரைச்சலாக ஏதேதோ பேசிக்கொண்டார்கள், அவர்களின் பேச்சின் நடுவே ஒரு மீனவன் உரத்த குரலில் ஏதோ ஒரு பிரெஞ்சு மொழிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான், அவர்களின் பேச்சின் இடையிடையே 'மீனவர் தலைவன்' படகு செல்ல வேண்டிய திசை பற்றியும், பாய்மரத்தையும், பாயையும் சுருக்க வேண்டிய விதம் பற்றியும் உரத்த குரலில் கட்டளைகளை பிரெஞ்சு மொழியில் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரத்த குரலிலான பேச்சுக்கள் கொலம்பசுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் சில மணி நேரங்களின் பின்னர் அவன் கண்ணில் தனது 'ஜெனோவா' கடற்கரை தென்படவும் பயமெல்லாம் பறந்து போனது, உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தம் பிறந்தது. 
(தொடரும்)     
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 23, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.



அடுத்த நாட் காலையில் அவன் கண்விழித்தபோது, தனக்கருகில் தன் பெற்றோர்களோ, உடன்பிறப்புகளோ இல்லாததைக் கண்டும், தான் முன்பின் தெரியாத ஓரிடத்தில் படுத்திருப்பதைக் கண்டும் அதிர்ச்சியுற்ற கொலம்பஸ் மீண்டும் அழத்தொடங்கினான். அழுகின்ற அவனை மீனவர் தலைவனின் மனைவி அணைத்து ஆறுதல் கூறினாள். இவ்வாறு தம்மைவிட வயதில் மூத்த ஒரு 'அந்நியச் சிறுவன்' தமது தாயாரால் தேற்றப்படுவது கண்டு, மீனவர் தலைவனின் பிள்ளைகள் சிரித்தனர். கொலம்பஸ்ஸின் நிலையோ அவன் எதன் காரணமாக தமது தமது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான் என்பதோ, அவன் ஏன் அழுகிறான் என்பதோ அவர்கள் அறியாத விடயங்கள். அழுத சிறுவனைத் தேற்றிய அந்தத் தாய், அவனைக் காலைக் கடன்களை நிறைவேற்றுமாறு சைகையால் தெரிவித்தாள். அதனைப் புரிந்துகொண்ட கொலம்பசும் அவள் கூறியதுபடியே செய்தான். அதன்பின் அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து காலையுணவை உண்டான்.

காலையுணவின் பின்னர் தலைவனின் சொற்படி அவன் அவ்வீட்டிலிருந்து புறப்படவேண்டிய வேளை வந்தது. கொலம்பசும் அந்த மீனவர் தலைவன் கூறியவற்றை ஓரளவிற்கு புரிந்து கொண்டவனாக, புறப்படத் தயாரானான். தன்னைத் தனது பிள்ளைகளில் ஒன்றாகக் கருதிப் பராமரித்த அந்தத் தாயிடமிருந்தும், அவனை 'ஒரு வேற்றுக் கிரக வாசி போல' எண்ணி, அருகில் வரக்கூடப் பயந்த, மீனவர்தலைவனின் பிள்ளைகளிடமிருந்தும் விடைபெறவேண்டிய அந்தக் கட்டத்தில் அவர்களிடம் அவன் தன் 'நன்றியறிதலை' தெரிவிக்க நினைத்தான். இருப்பினும் 'மொழி' அதற்குத் தடையாக இருந்ததே! ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒரு தடவை 'நன்றிப் பெருக்கோடு' பார்த்துக் கொண்டான். அந்தப் பார்வை 'ஓராயிரம் வார்த்தைகளை' அவர்களோடு பேசியது.


மீனவர் தலைவனும், அந்தச் சிறுவனும் கடற்கரையிலிருந்த அந்தச் சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றபோது, அங்கு ஏராளமான மீனவர்கள் கூடியிருந்தனர். அவர்களில் கொலம்பஸ் நேற்றைய தினம் சந்தித்த, மீனவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் அவனைக் கழிவிரக்கத்துடனும், புன்னகையுடனும் நோக்கினர். இவனும் பண்பு கருதி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மீனவர்கள் அனைவரும் சத்தமாக, தமது தலைவனுடன் 'பிரெஞ்சு' மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டனர். அவர்கள் தன்னைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அச்சிறுவன் அறியவில்லை. இருப்பினும் அவன், அவர்களது பேச்சின் இடையிடையே தனது தாயகத்தின் பெயராகிய 'ஜெனோவா' என்ற பெயர் உச்சரிக்கப் பட்டதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.


அங்கு துறைமுகத்தில் நின்றிருந்த, அவர்கள் நேற்றைய தினம் பயணம் செய்த மிகப்பெரிய படகில் ஏறுமாறு மீனவர் தலைவன் கட்டளையிட்டான். மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்சும் ஏறினான். அப்போது அங்கு வந்த ஒரு புதிய மீனவன் இவர்களோடு சேர்ந்து கொண்டான். அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.    
(தொடரும்)
   உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 16, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 9


ஆக்கம்:  இ.சொ.லிங்கதாசன் 
தனது வாழ்வில் தான் ஆர்வத்தின் காரணமாக பயணிக்க நினைத்த 'பல்மாரியாத் தீவு' இன்னமும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருந்துகொண்டிருந்தது. அவனது தாய்மண்ணாகிய 'ஜெனோவாக் கடற்கரைப் பிரதேசம்' அவனது கண்ணைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தது. இப்போது அவன் தன்னைக் காப்பாற்றிய மீனவர்களின் தாயகமாகிய 'மொனாக்கோ' நாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறான் என்பதனை அந்த அப்பாவிச் சிறுவன் அறியவில்லை.


எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த மாலைப் பொழுதில் மீனவர்களின் படகானது அவர்களின் சம்பாத்தியமான மீன், நண்டு, இறால் போன்றவற்றுடனும் அவர்கள் நடுக்கடலில் கண்டுபிடித்த 'கொலம்பஸ்' என்ற சிறுவனுடனும் மொனாக்கோ கடற்கரையைச் சென்றடைந்தனர். அங்கு கடற்கரையில் சீரற்ற கால நிலையையும் பொருட்படுத்தாது ஏராளமான மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காகக் காத்திருந்தனர். அவர்களில் மன்னரின் பணியாட்களும், அமைச்சர்களின் வேலையாட்களும், நிலப்பிரபுக்களின் வேலையாட்களும் அடங்குவர். அம்மக்கள் கூட்டம் இம்மீனவர்கள் கொண்டு வந்த மீன்களையும், கடலுணவுகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதற்காக படகை நோக்கி பரபரப்போடு வந்ததைக் கண்ட கொலம்பஸ் விபரமேதும் அறியாதவனாக, பயந்தான், குழம்பினான். இறுதியில் தெளிந்தான்.


அங்கு மீனவர்களின் மீன் வியாபாரம் சிறிது நேரத்திற்கு மும்முரமாக நடைபெற்றது. இறுதியில் மீனவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர், இருள் முற்றாகக் கவிந்து முழு இரவும் ஆரம்பித்து விட்டது. சிறுவன் கொலம்பஸ் பயத்துடனும், கவலையுடனும் அங்கு நடைபெறும் சம்பவங்களை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இறுதியில் அம்மீனவர் தலைவன் கொலம்பஸ்ஸை நோக்கி வந்தான். தன்னை நோக்கி வரும் அந்த 'மீனவர் தலைவன்' எனும் ராட்சத உருவமுடைய மனிதனை கொலம்பஸ் மறுபடியும் அவ நம்பிக்கையுடனும், மிரட்சியுடனும் நோக்கினான். இடி போன்ற குரலில் பிரெஞ்சு மொழியில் மீனவர் தலைவனானவன் "எழுந்து, என்னோடு என் வீட்டிற்கு வா" என்று கூறியதைக் கேட்ட கொலம்பஸ் அவன் கூறியது என்ன என்று புரியாவிட்டாலும், அவன் சைகை காட்டியபடியே எழுந்து, அந்தப் 'பருத்த உருவம்கொண்ட' மனிதனுடன் நடந்தான்.


மீனவர் தலைவனின் வீட்டில், கொலம்பஸ் மிகவும் அன்பாக வரவேற்கப் பட்டான். மீனவர் தலைவனின் மனைவியும் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் புதிய விருந்தாளியை ஆச்சரியத்துடனும், அதே வேளையில் உவகையுடனும் நோக்கினர். மீனவர் தலைவன் சொற்ப நேரத்துக்குள்ளேயே கொலம்பஸ் பற்றி முழுத் தகவலையும் தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் கூறினான். தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.
(தொடரும்)
   உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 09, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 8



ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அழுகின்ற சிறுவனைத் தேற்றுகின்ற அளவுக்கு 'இத்தாலிய மொழி' தெரிந்த மீனவர்கள் யாரும் அப்படகில் இருக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதேதோ கூறி அவனைச் சமாதானப் படுத்த முனைந்தனர். ஆனாலும் அவன் அழுது கொண்டேயிருந்தான்.இவ்வாறு அவன் அவர்களது தேற்றுதலையும் பொருட்படுத்தாது அழுதுகொண்டிருக்கும் வேளையில்தான் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது.


அவன் பயணிப்பதற்கு பயன்படுத்திய அந்தச் சின்னஞ் சிறிய படகு கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதை தடுப்பதற்கு மீனவர்கள் யாரும் முனையவில்லை. அது இன்னொருவருடைய பொருளாக இருப்பினும், தான் அதைத் திருடிக்கொண்டு வந்திருப்பினும் அது தனது பொருளாகவே கொலம்பஸ் எண்ணினான். மூழ்குகின்ற அந்தப் படகை மூழ்கவிடாது தடுக்குமாறு அவன் மீனவர்களை நோக்கிக் கதறி வேண்டினான். ஆனால் மீனவர்கள் யாரும் அவனது கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அவன் இத்தாலிய மொழியில் கூறியது மீனவர்களுக்குப் புரியவில்லையாயினும், அவனது சைகையின் மூலம் அவன் என்ன கூறுகிறான் என்று அவர்களால் ஊகித்து உணரமுடிந்தது. இருப்பினும் அவர்கள் அப்படகைக் காப்பாற்ற முனையவில்லை. காரணம் அப்படகானது ஏற்கனவே மழையாலும், கடல்கொந்தளிப்பாலும் ஏற்கனவே தண்ணீரால் நிரம்பியிருந்தது. அவர்கள் சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்தச் சிறிய படகு கடலில் மூழ்கும் தறுவாயில் இருந்தது. இதனாலேயே அவர்கள் அச்சிறிய படகை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.


சிறுவன் கொலம்பஸின் அழுகையும், கதறலும் நின்றபாடில்லை. இறுதியாக அவனது அழுகையை நிறுத்துவதற்காக மீனவர்கள் அவனை அதட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. மீனவர்களின் அதட்டலுக்குப் பயந்த கொலம்பஸ் இறுதியாக அழுகையை நிறுத்தினான். தனது வாழ்வில் தான் ஆர்வத்தின் காரணமாக பயணிக்க நினைத்த 'பல்மாரியாத் தீவு' இன்னமும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருந்துகொண்டிருந்தது. அவனது தாய்மண்ணாகிய 'ஜெனோவாக் கடற்கரைப் பிரதேசம்' அவனது கண்ணைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தது. இப்போது அவன் தன்னைக் காப்பாற்றிய மீனவர்களின் தாயகமாகிய 'மொனாக்கோ' நாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறான் என்பதனை அந்த அப்பாவிச் சிறுவன் அறியவில்லை.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், டிசம்பர் 02, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இப்போது மீனவர்களின் முன்னால் நான்கு சிக்கல்கள் எழுந்திருந்தன, 1. இத்தகைய பரிதாபகரமான நிலையில் இச்சிறுவனைக் கைவிட்டுச் செல்ல அவர்களது 'மனிதாபிமானம்' இடம்தரவில்லை. 2. இச்சிறுவனை அவனது 'ஜெனோவாக் கடற்கரைக்கு' கொண்டுசென்று, மீனவர்களிடமோ, அல்லது பெரியவர்களிடமோ ஒப்படைப்பதற்கு 'கால அவகாசம்' எடுத்துக் கொண்டால் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் 'மீன்கள்' பழுதடைந்துவிடும். 3. சிறுவனை சொந்த ஊரில் ஒப்படைப்பதில் நேரம் செலவு செய்யப்பட்டால் இம்மீனவர்கள் பிடித்துவைத்திருக்கும் மீன்களை அவர்களது நாட்டில் 'சந்தைப் படுத்துகின்ற' வாய்ப்பு இழக்கப்படும். 4. சிறுவனை தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றால், அடுத்த நாள் அவனை அவனது நாட்டுக்கு அழைத்துச் சென்று ஒப்படைப்பது 'சம்பிரதாயங்கள்' நிறைந்த மிகவும், சிரமமான காரியமாகும்.


cold_boy.gifஇவ்வாறு சிந்தித்துக் கொண்டே அம்மீனவர்களின் தலைவனானவன், சிறுவனைத் தமது படகில் ஏற்றுமாறு தனது பணியாளர்களுக்குப் பணித்தான். குளிரால் நடுங்கி விறைத்துப் போயிருந்த சிறுவன் கொலம்பஸின் உடைகளைக் களைந்து, அவனுக்கு படகிலிருந்த தனது சக மீனவர்களின் சில உடைகளை அணிவிக்குமாறு கூறினான். மழையில் நனைந்து போயிருந்த சிறுவனைத் துணியொன்றினால் ஈரம்போகத் துடைத்து விடுமாறும், உடம்பில் சூடு ஏற்படுத்துவதற்காக, உள்ளங்கை, மற்றும் பாதங்கள் போன்றவற்றைத் தேய்த்து விடுமாறு கட்டளையிட்டான் அந்தக் கருணையுள்ளம் கொண்ட மீனவர் தலைவன். சிறுவன் கொலம்பஸ் பசியால் வாடியிருக்கிறான் என்பது, அவனைப் பார்க்கும்போதே தெரிந்தது, இருப்பினும் அவனுக்கு வழங்குவதற்கு அம்மீனவர்களிடம் எவ்விதமான உணவுப் பதார்த்தங்களும் கைவசம் இருக்கவில்லை, இருப்பினும் அவர்கள் மரக்குடுவையில் தம்மோடு எடுத்துவந்திருந்த சுடுநீரை சிறுவன் கொலம்பசிற்குக் குடிக்கக் கொடுத்தனர். 


இத்தகைய பேருதவிகளைச் செய்த அம்மீனவர்களைக் கொலம்பஸ் சந்தேகத்துடனும், பயத்துடனுமே நோக்கினான். காரணம் அவர்களது கரடு முரடான தோற்றம், மற்றும் அவன் தனது ஊரவர்கள், உறவினர் தவிர்ந்த அந்நியர்களை ஒருபோதுமே சந்தித்ததில்லை, அது மாத்திரமின்றி அவன் ஒருபோதும் குளிரால் விறைத்து அதற்காக முதலுதவி பெற்றதில்லை.மீனவர்கள் குளிரைப் போக்குவதற்காக இவனுக்கு சிகிச்சை செய்தபோது, அவனோ இவர்கள் தன்னைக் கொல்ல முற்படுகிறார்கள் என்றே நினைத்தான். இப்போது தனது பெற்றோர்களை நினைத்து அழத் தொடங்கினான். அழுகின்ற சிறுவனைத் தேற்றுகின்ற அளவுக்கு 'இத்தாலிய மொழி' தெரிந்த மீனவர்கள் யாரும் அப்படகில் இருக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதேதோ கூறி அவனைச் சமாதானப் படுத்த முனைந்தனர். ஆனாலும் அவன் அழுது கொண்டேயிருந்தான்.
இவ்வாறு அவன் அவர்களது தேற்றுதலையும் பொருட்படுத்தாது அழுதுகொண்டிருக்கும் வேளையில்தான் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது.
(தொடரும்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

வியாழன், அக்டோபர் 21, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 5

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தான் செய்வது ஒரு திருட்டு என்பதையும், தவறு என்பதையும் அறியாத கொலம்பஸ், தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும், காற்று வீசிய திசையை நோக்கிப் படகானது நீரைக் கிழித்துக்கொண்டு நகர ஆரம்பித்தது. அவன் கையிலிருந்த துடுப்பை உபயோகிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்த அளவிற்கு வேகமாக படகு பயணத்தைத் தொடர்ந்தது. கொலம்பஸ் தன் கையிலிருந்த துடுப்பைப் படகின் ஓரமாக வைத்தான். காற்று வீசும் வேகத்திற்கேற்ப படகும் அலைகளில் ஆடி, ஆடித் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அவனுக்கோ அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவனிடமிருந்து மெல்ல, மெல்ல விடைபெறும் கடற்கரையையும், அவனைக் கைநீட்டி வரவேற்கும் 'பல்மாரியா' தீவையும் மாறி, மாறிப் பார்த்தான். அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு. இந்த இனிய தருணத்தைக் கொண்டாடத் தன் நண்பன் 'அன்டோனியோ' அருகில் இல்லாததை நினைத்தான். இந்த உற்சாகப் பயணத்தில் பங்கு கொள்ளாமல், 'பயந்தாங்கொள்ளியாக' ஓடிப்போய்விட்ட தன் நண்பனை நினைக்கையில் ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் 'பரிதாப உணர்வும்' அவனுக்கு ஏற்பட்டன.

படகானது ராட்சதப் பேரலைகளுக்கு நடுவே, மிதந்து சென்றுகொண்டிருந்தது. இடையிடையே தன் கையிலிருந்த துடுப்பால் வலித்துக் கொண்டான். அவனது மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. படகானது இப்போது அவன் எதிர்பார்த்த 'பல்மாரியா' தீவு இருக்கும் திசையில் செல்லாமல், எதிர்ப்பக்கமாக உள்ள 'லிகுரியான்' பெருங்கடலை நோக்கிச் சென்றது. அவன் பலங்கொண்டமட்டும் துடுப்பால் வலித்துப் படகைத் தான் விரும்பிய திசைக்குச் செலுத்த முயற்சித்தான். அந்தகோ! பெருங்காற்றுடன், மோதிய ராட்சதப் பேரலைகளுடன், பத்து வயதுச் சிறுவனால் போரிடமுடியுமா என்ன? அவன் நினைத்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. படகை தனது விருப்பபடி தீவை நோக்கியோ, அல்லது தான் புறப்பட்ட கடற்கரை நோக்கியோ திருப்புவது நடவாத காரியம் என்பதைக் கொலம்பஸ் உணர்ந்து கொள்வதற்கு வெகுநேரம் எடுத்தது. ஆனால் அதை அவன் உணர்ந்து கொள்வதற்கிடையில் அவனது சிறிய படகு பெருங்கடலின் எதிர்முனையிலுள்ள 'பிரெஞ்சுக்' கடற்பகுதிக்கு வந்துவிட்டது.

அவன் தான் எடுத்து வந்திருந்த சிறிய பாய்மரமும், பாயும் தனது பயணத்திற்கு முற்றிலும் உதவாத பொருட்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டான். அலைகள் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கின. இப்போது வானம் கறுக்கத் தொடங்கியிருந்தது, மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவனைப் பசியும், தாகமும், கூடவே அவன் வாழ்வில் 'முதற்தடவையாகப்' பயமும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தன. படகானது பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இங்கும், அங்குமாக சென்றுகொண்டிருந்தது. இப்போது அவனுக்குத் தனது அன்னையின், சகோதரர்களின் நினைவு எழுந்தது. கூடவே, கடற்கரைக்குச் செல்வதைக் கண்டிக்கும் அவனது தந்தையின் நினைவும் வந்து பயமுறுத்தியது.
இப்போது மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. அவன் தெப்பமாக நனைந்துவிட்டான். இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவனுக்குக் கடலே காட்சியளித்தது. மிகத்துணிவோடு பயணத்தை ஆரம்பித்தவனை, வானின் கருமை நிறமும், ராட்சதப் பேரலைகளும், திசைதெரியாமல் அலையும் அவனது சிறிய படகும் பயமுறுத்த ஆரம்பித்தன. தன்னைக் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தாவது ஒரு படகு வராதா? என்று எண்ணி ஏங்கத் தொடங்கினான்.

இரண்டு மணிநேரத் தவிப்பின் பின்னர், அவனது எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், 'பிரெஞ்சுக்' கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த 'மொனாக்கோ' நாட்டு மீனவர்கள், நடுக்கடலில் தன்னந் தனியாக அலைந்து கொண்டிருக்கும், இச்சிறுவனின், மிகச்சிறிய படகை நோக்கித் தமது படகைத் திருப்பி வந்தனர்.
அவர்களது படகு கொலம்பஸின் படகை அண்மித்ததும், படகிலிருந்தவர்கள் தாங்கள் கண்ட காட்சியால் திகைப்படைந்தனர். தனியொரு சிறுவன், சிறிய படகில் குளிரால் விறைத்து, நடுங்கிய வண்ணம், அலைகளின் இழுப்பிற்கேற்ப அலைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தமாக அவனை நோக்கிக் குரலெழுப்பு முன்னரே சிறிய படகிலிருந்து, அவர்களை நோக்கி பின்வரும் வாசகங்கள் அலைகள் ஊடாக மிதந்து வந்தன. "எனது பெயர் கொலம்பஸ், நான் கிறிஸ்தோபர் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் ஜெனோவா நாட்டில் 'போட்டோ அண்டிகோ' கிராமத்தைச் சேந்தவன், நான் ஆபத்தில் இருக்கிறேன், எனக்கு உதவுங்கள்"
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

புதன், அக்டோபர் 13, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 4

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
தனது நண்பனாகிய அன்டோனியோ, தனது படகுப்பயணத் திட்டத்தைக் கேட்டதும், பயந்தாங்கொள்ளியாக தப்பித்து ஓடுகிறான் என்பதைத் துணிச்சலுள்ள சிறுவன் கொலம்பஸ் ஒரு நொடியில் புரிந்து கொண்டான். அவன் கலங்கவுமில்லை, பதட்டப்படவுமில்லை, தனது சவால்நிறைந்த திட்டத்தைக் கைவிடவுமில்லை. அவன் சிந்தனையில் நின்றதெல்லாம், தன் பெற்றோர் தன்னைத் தேடுவதற்கு முன்பாக இந்தப் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.
அவன் தனக்கு அருகில் நின்றிருந்த, தான் வழமையாகப் பயிற்சியிலீடுபடும், ஒரு சிறிய படகை கூர்ந்து நோக்கினான். அது அவனுக்குத் தெரிந்த ஒரு ஏழை மீனவனுடையது. அந்தப் படகை வைத்துக்கொண்டு, அந்த மீனவன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்வதில்லை என்பதும், கரையை அண்டிய கடற்பரப்பிலேயே அந்த மீனவன் மீன்பிடியில் ஈடுபடுவான் என்பதும் கொலம்பஸ் அறிந்திலன். அத்துடன் பெரிய கப்பலுக்கும், நடுத்தரமான படகிற்கும், மிகச்சிறிய வள்ளத்திற்குமிடையிலான வேறுபாடுகூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. அது மாத்திரமின்றி தான் செய்ய முடிவெடுத்திருக்கும் இந்தப் பயணமானது, தனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதும் அச்சிறுவனுக்குத் தெரியாது.
அவன் அந்தப் படகைக் கட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்ட தூணிலிருந்து, அப்படகின் கயிற்றை மெதுவாக விடுவிக்கத் தொடங்கினான். யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றிவரப் பார்த்துக் கொண்டான். தன்னை யாரும் அவதானிக்கவில்லை என்பதை உறுதி செய்தவன், அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு படகில் கிடந்த துடுப்பு ஒன்றையும், அதற்குள் கிடந்த கிழிந்த துணியாலான பாய் ஒன்றையும், ஒரு பெரிய பாய்மரம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். அந்தப் பாயும், பாய்மரமும், தான் பயணம் செய்யத் தீர்மானித்திருக்கும் சிறிய படகிற்கு எந்தவிதத்திலும் பயன்படப் போவதில்லை என்பதும், தான் செய்வது ஒரு 'திருட்டு' என்பதும் அவனுக்குத் தெரியாது.
தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும் காற்று வீசிய...


(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

புதன், அக்டோபர் 06, 2010

'கிறிஸ்தோபர் கொலம்பஸ்' சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 3


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

கொலம்பஸ் தனது நண்பன் அன்டோனியோவிடம், தனது நீண்டகால உள்ளக் கிடக்கையை வெளியிட்டான். "நண்பா அதோ தூரத்தில் தெரிகிறதல்லவா 'பல்மாரியா' தீவு, அந்தத் தீவுக்கு நாமிருவரும் ஒரு சிறிய படகுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பிவிடுவோம், தீவு ஒன்றும் அவ்வளவு தூரமில்லை, நம்மால் முடிந்தளவு துடுப்பால் வலிப்போம், அதற்கப்பால் காற்றுவீசும் திசைக்கேற்ப ஒரு பாய்மரத்தையும், பாயையும் உபயோகிப்போம்" என்றான். தனது நண்பன் கொலம்பஸின் இந்தத் திட்டத்தைக் கேட்ட அன்டோனியோ, ஒருகணம் திகைத்துப் போய்விட்டான். 'துடுப்பு வலித்தல்', 'பாய்மரம்', பாய்' போன்ற வார்த்தைகள் அவனுக்கு அந்நிய மொழி வார்த்தைகள்போலக் காதில் விழுந்தன, அதுமட்டுமன்றி அந்தச்சிறுவன் நடுங்கிப்போனதற்குப் பல காரணங்கள் இருந்தன. 1. அவர்களிருவரும் கடற்கரையில் கட்டுமரங்களில் மட்டுமே படகுப்பயணம் செய்து பயிற்சி பெற்றுள்ளார்கள், ஆனால் 'பல்மாரியா' தீவு, மிகவும் ஆழமான கடலைத்தண்டி வெகுதொலைவில் இருந்தது(உண்மையில் பல்மாரியா தீவு அவர்களது ஜெனோவா கடற்கரையிலிருந்து 20 மைல்கள் தொலைவிலேயே இருந்தது ஆனால் அந்தச் சிறுவனாகிய அன்டோனியோவுக்கு அது நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவுபோலத் தென்பட்டது) 2. கொலம்பஸ் பயணம் செய்யத் திட்டமிட்ட அந்தப் 'பல்மாரியா' தீவில் பேய்களும், பூதங்களும், ராட்சத முதலைகளும் அல்லது 'டிராகன்களும்' (வேதாளங்கள்) வாழ்வதாகவும் பேசப்பட்டதை அன்டோனியோ நன்கு அறிவான். உண்மையில் இவைகள் எல்லாம் கட்டுக்கதைகளே என்பதை அந்த அப்பாவிச் சிறுவர்கள் அறியர். இடைநடுவில் மேற்படி 'பல்மாரியா' தீவைப் பற்றியும், மேற்படி பயமூட்டும் கட்டுக்கதைகளுக்கான பின்னணிகளையும் சிறிது பார்ப்போம்.

'பல்மாரியா தீவு' (PalMaria Island)
'பல்மாரியா' என்ற இத்தாலிய வார்த்தைக்குத் தமிழில் 'பனைமரம்' என்று அர்த்தம். ஆகவே மேற்படி தீவானது 'பனைமரத்தீவு' என்று பொருள் கொள்ளப்பட்டது. பனைகளே இல்லாத ஐரோப்பிய மண்ணில் பனைமரத்தீவு எப்படி இருக்கமுடியும்? அதாவது ஐரோப்பியர்கள் பனையைப் போல தோற்றமளிக்கும் கடற்கரையோர தாவரமாகிய, ஒரு தாவரத்தை (பேரீச்சமரம் அல்லது ஈச்சம்பற்றை போலக் காட்சியளிக்கும்) பல்மைரா(palmyra) அல்லது பாம்(palm) என்றே அழைக்கின்றனர். மேற்படி தீவில் அந்தத் தாவரங்கள் அதிகம் காணப்பட்டதால் அது 'பல்மாரியா தீவு' என்று அழைக்கப்பட்டது. மேற்படி தீவில் பகலில் மீனவர்களும், இரவில் கடற்கொள்ளையர்களும் தங்குவது வழக்கம். கடற்கொள்ளையர்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக மீனவர்கள் எவரும் அந்தத் தீவிற்கு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு பேய்கள், பூதங்கள் பற்றி கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தனர்.
பி.கு.: தற்காலத்தில் மேற்படி தீவு இத்தாலிக்கு அதிக வருமானம் பெற்றுத்தரும் உல்லாசப் பயணிகள் தீவாக விளங்குகிறது.


கொலம்பஸின் கேள்வியால் மிரண்டு போய்விட்ட சிறுவன் அன்டோனியோ தனது பயத்தை வெளியே காட்டாமல், தற்காலச் சிறுவர்கள் போலவே ஒரு நடிப்பை அரங்கேற்றினான். அதாவது தனக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருப்பதாகவும், தான் உடனடியாகத் தனது அன்னையிடம் செல்லவேண்டும் என்றும் கொலம்பசிடம் கூறியவன், அந்த இடத்தைவிட்டே ஓடிப்போய்விட்டான்.
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. 

புதன், செப்டம்பர் 29, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ், சாதனையாளனா, கொடியவனா? - அத்தியாயம் 2


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
கொலம்பஸின் பெற்றோர்கள் எப்போதுமே தமது கிராமத்துடனும், அதனை அண்டிய தொழில்களிலுமே தமது வாழ்நாட்களைச் செலவிட்டனர். ஆனால் சிறுவன் கொலம்பஸின் அக்கறையும், பொழுதுபோக்குகளும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. அவன் எப்பொழுதுமே கடற்கரையை அண்டியே விளையாடச் செல்வான். மீனவக் குடும்பத்துச் சிறுவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டான். கடலையும், அதில் மீன்பிடிப்பதற்குச் செல்லுகின்ற, மீன்பிடித்துக்கொண்டு கரைக்குத் திரும்புகின்ற மீன்பிடிப் படகுகளையும், ஆழக் கடலில் செல்லுகின்ற, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகக் கப்பல்களையும் நீண்டநேரம் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்பான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து, விரிந்துகிடக்கும் கடலையும், வானத்தையும் நீண்டநேரம், கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்பது அவனது வழமையான பொழுது போக்குகளில் ஒன்று.
அவனுக்குப் பத்து வயதாகும்வரை, அவன் தனது தாயிடமும், தந்தையிடமும் ஆயிரக்கணக்கான தடவைகள் இரண்டு கேள்விகளைமட்டுமே கேட்டிருக்கிறான். அந்தக் கேள்விகள் இவைதான் 1. இந்த வானம் எங்கே முடிவடைகிறது? 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாகக் காட்சியளிக்கும் இந்தக் கடல் எங்கே முடிவடைகிறது? இந்த இரு கேள்விகளுக்கும் விடையாக அவனது பெற்றோர்களிடமிருந்து, பெரும்பாலான நேரங்களில் "உன் வாயை மூடு" என்ற பதிலே கிடைத்தது. ஆனால் விதிவிலக்காகச் சிலவேளைகளில் அவனது தந்தையிடமிருந்து சில வேடிக்கையான பதில்கள் கிடைக்கும். அதாவது அவனது தந்தை மனச்சுமை எதுவும் இல்லாது, ஓய்வாக இருக்கும் தருணங்களில், நகைச்சுவை உணர்வோடு பின்வருமாறு பதிலளிப்பார்: "இந்த நீல வானம் 'வெனிஸ்' நகரத்தில் முடிகிறது, இந்த நீலக்கடல் 'ரோமாபுரியில்' முடிவடைகிறது" என்பார். சிலவேளைகளில் அவனைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு, பதிலை மாற்றுவார். "இந்த வானம் 'மிலான்' நகரத்துடன் முடிகிறது, இந்தக்கடல் 'நேப்பில்ஸ்' நகரத்துடன் முடிகிறது என்பார். ஞாபக சக்தி அதிகமுள்ள சிறுவன் கொலம்பஸை இத்தகைய வெவ்வேறு பதில்கள், குழப்பமூட்டுவதுடன், எரிச்சலூட்டவும் செய்தன. அவன் தந்தையிடம் திருப்பிக் கேட்பான், "அன்று அவ்வாறு சொன்னீர்கள், இன்று இவ்வாறு சொல்கிறீர்களே" என்று. அதற்குத் தகுந்தாற்போல் தந்தையும் பதிலளிப்பார், "அன்று விடை தெரியாததால், தவறாகச் சொன்னேன், இன்று சொன்னது சரியான விடை" என்பார். போதிய புவியியல் அறிவில்லாத அந்த, ஏழைத் தந்தைக்குத் தெரியவில்லை, பின்நாளில் சரித்திரம் படைக்கப்போகும் தன் மகனைத் தனது அறியாமையாலும், வேடிக்கை உணர்வாலும், பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது.

கடற்கரையில் தினமும் விளையாடச் செல்லும் சிறுவன் கொலம்பஸ், அங்கே தினமும் விளையாட வரும், மீனவச் சிறுவர்களில் ஒருவனான 'அன்டோனியோவை' தனது நெருங்கிய நண்பனாக்கிக் கொண்டான். இவர்களிருவரும் தினமும், கடற்கரையில், தண்ணீரில் நனைவதும், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சிறிய மீன்பிடிப் படகுகளில் ஏறிப், பின் தண்ணீரில் குதிப்பதும், சிறிய கட்டுமரங்களை எடுத்துக் கடற்கரையோரம் படகுப்பயிற்சி செய்வதும் இப்படியாக அவர்களது விளையாட்டுக்கள் தொடர்ந்தன. ஒருநாள் கொலம்பஸ் தன் நண்பனான அன்டோனியோவை, ஒரு புதிய விளையாட்டுக்கு அழைத்தான், ஆனால் அது உண்மையில் ஒரு விளையாட்டு அல்ல, உயிருக்கே உலை வைக்கும் விஷப்பரீட்சை. இந்த விளையாட்டை இருவரும் சேர்ந்து விளையாடலாமா? என்று சிறுவன் கொலம்பஸ், அண்டோனியோவைக் கேட்டபோது அன்டோனியோ நடுநடுங்கிப் போய்விட்டான்.
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.