ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
தான் செய்வது ஒரு திருட்டு என்பதையும், தவறு என்பதையும் அறியாத கொலம்பஸ், தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும், காற்று வீசிய திசையை நோக்கிப் படகானது நீரைக் கிழித்துக்கொண்டு நகர ஆரம்பித்தது. அவன் கையிலிருந்த துடுப்பை உபயோகிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்த அளவிற்கு வேகமாக படகு பயணத்தைத் தொடர்ந்தது. கொலம்பஸ் தன் கையிலிருந்த துடுப்பைப் படகின் ஓரமாக வைத்தான். காற்று வீசும் வேகத்திற்கேற்ப படகும் அலைகளில் ஆடி, ஆடித் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அவனுக்கோ அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவனிடமிருந்து மெல்ல, மெல்ல விடைபெறும் கடற்கரையையும், அவனைக் கைநீட்டி வரவேற்கும் 'பல்மாரியா' தீவையும் மாறி, மாறிப் பார்த்தான். அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு. இந்த இனிய தருணத்தைக் கொண்டாடத் தன் நண்பன் 'அன்டோனியோ' அருகில் இல்லாததை நினைத்தான். இந்த உற்சாகப் பயணத்தில் பங்கு கொள்ளாமல், 'பயந்தாங்கொள்ளியாக' ஓடிப்போய்விட்ட தன் நண்பனை நினைக்கையில் ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் 'பரிதாப உணர்வும்' அவனுக்கு ஏற்பட்டன.
அவன் தான் எடுத்து வந்திருந்த சிறிய பாய்மரமும், பாயும் தனது பயணத்திற்கு முற்றிலும் உதவாத பொருட்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டான். அலைகள் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கின. இப்போது வானம் கறுக்கத் தொடங்கியிருந்தது, மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவனைப் பசியும், தாகமும், கூடவே அவன் வாழ்வில் 'முதற்தடவையாகப்' பயமும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தன. படகானது பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இங்கும், அங்குமாக சென்றுகொண்டிருந்தது. இப்போது அவனுக்குத் தனது அன்னையின், சகோதரர்களின் நினைவு எழுந்தது. கூடவே, கடற்கரைக்குச் செல்வதைக் கண்டிக்கும் அவனது தந்தையின் நினைவும் வந்து பயமுறுத்தியது.
இப்போது மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. அவன் தெப்பமாக நனைந்துவிட்டான். இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவனுக்குக் கடலே காட்சியளித்தது. மிகத்துணிவோடு பயணத்தை ஆரம்பித்தவனை, வானின் கருமை நிறமும், ராட்சதப் பேரலைகளும், திசைதெரியாமல் அலையும் அவனது சிறிய படகும் பயமுறுத்த ஆரம்பித்தன. தன்னைக் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தாவது ஒரு படகு வராதா? என்று எண்ணி ஏங்கத் தொடங்கினான்.
இரண்டு மணிநேரத் தவிப்பின் பின்னர், அவனது எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், 'பிரெஞ்சுக்' கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த 'மொனாக்கோ' நாட்டு மீனவர்கள், நடுக்கடலில் தன்னந் தனியாக அலைந்து கொண்டிருக்கும், இச்சிறுவனின், மிகச்சிறிய படகை நோக்கித் தமது படகைத் திருப்பி வந்தனர்.

(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக