வெள்ளி, அக்டோபர் 01, 2010

'எந்தக் குழந்தையும்' - அத்தியாயம் 2


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
குழந்தை வளர்ப்பைப் பற்றிக் கவிஞர்.புலமைப்பித்தன் ஒரு பாடலிலேயே சுருங்கக் கூறி விளங்கவைத்த சிறப்பைக் கடந்தவாரம் பார்த்தோம். இவ்வாரத்திலிருந்து, குழந்தை வளர்ப்பைப் பற்றி நிபுணர்களும், உளவியல் ஆய்வாளர்களும் கூறும் கருத்துக்களையும் சிறிது கவனிப்போம்.

முதலில் ஒரு நல்ல குழந்தை இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்னால் உள்ள, காலப்பகுதியாகிய, தாயின் கருவறையில் இருக்கும் காலப்பகுதியையும், அந்தப் பத்து மாதத்திற்குட்பட்ட காலத்தில் அக்குழந்தையின், தாயும், தந்தையும் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைப் பற்றியும் பாப்போம்.

குழந்தை வளர்ப்பைப் பற்றி பல ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சிமுடிவுகளைப் பற்றிய கட்டுரைகளையும், பத்திரிகைகள் வெளியிடத்தொடங்கி சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. குழந்தைவளர்ப்புக் கலை பற்றிப் பாலர் பள்ளி தொடங்கிப் பல்கலைக் கழகம் வரை விவாதத் தலைப்புக்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இருப்பினும் நம்மில் பலருக்குக் குழந்தையானது தன் தாயின் கருவில் இருக்கும்போதே, அதன் குழந்தைப் பருவம் தொடங்கிவிட்டது என்பது தெரிவதில்லை. தாயின் கருவில் இருக்கும் சிசுவை அது ஒரு சதையாலான சடப் பொருளாக எண்ணும் நிலை இன்றுவரை தொடர்கிறது.
ஆனால் விஞ்ஞானிகள் சொல்வதெல்லாம், பிறந்த குழந்தைக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதைவிடப் பலமடங்கு முக்கியத்துவத்தை அது தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கொடுங்கள் என்பதுதான்.

குழந்தை கருவாக இருக்கும்போது அதன் பெற்றோர் அதிலும் முக்கியமாகத் தாயானவள் கவனிக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.


கர்ப்பகாலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை கடைப்பிடிக்க வேண்டியவை.

1. தான் கருவுற்ற விடயமானது இந்தப் பூமியின், மற்றும் இயற்கையின் வியப்பான செயற்திட்டங்களில் ஒன்று என எண்ணுதல் வேண்டும்.

2. இந்தப் பூமியில் மனித இனத்திற்கு தனது பங்களிப்பை இயற்கையும், பிரபஞ்ச சக்தியும் எதிர்பார்ப்பதாலேயே, இந்தக் கருவானது, தனது கருப்பையில் உருவாகியுள்ளது என்று பெருமித உணர்வு தாய்க்கு வரவேண்டும்.

3. கருவில் உருவாகியுள்ள சிசுவை ஒரு ஆரோக்கியமுள்ள, திறமைகளுள்ள, அறிவுமிக்க குழந்தையாகப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை தனக்குள்ளது என்பதை அவள் உணர வேண்டும்.


(அடுத்த வாரமும் தொடரும்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக