செவ்வாய், நவம்பர் 30, 2010

பாராட்டுக் கவிதை

பாலசிங்கம் சேவியர்


எமது 'அந்திமாலை' யின் உதயம் பற்றிய செய்தியறிந்து, எமது ஆத்ம நண்பரும், கவிஞருமாகிய அல்லையூர் பாலசிங்கம் சேவியர் அவர்கள் வடித்த வாழ்த்துக் கவி ஒன்று வாசகர்களுக்காக:நாடுகாண் பயணம்

நாட்டின் பெயர்:
அரூபா

அமைவிடம்:
மத்திய அமெரிக்கா (கரீபியன்)

தலைநகரம்:
ஒராஞ்சஸ்டட்(Oranjestad)

நாட்டு எல்லைகள்:
நான்கு பக்கமும் கரீபியன் கடல்.

அயல் நாடு:
வெனிசுவெலா

ஆட்சிமுறை:
அரசியின் ஆட்சிக்குள் உள்ள கடல் கடந்த பிரதேசம்.(நெதர்லாந்து)

நாட்டின் தலைவி:
மாட்சிமை தங்கிய அரசி பியட்ரிஸ்(Beatrix) நெதர்லாந்து இராணி.

ஆளுநர்:
பிரடிஸ் ரெபுன்ஜோல்(Fredis Refunjol)

பிரதமர்:
மைக் எமன் (Mike Eman)

சுயாட்சி பெற்ற திகதி:
01.01.1986(நெதர்லாந்திடமிருந்து)

பரப்பளவு:
193 சதுர கிலோமீற்றர்கள்

சனத்தொகை:
103,065 (2009 மதிப்பீடு)

இனங்கள்:
மெஸ்டிஸோ - 80%
ஏனையோர் - 20%

கல்வியறிவு:
98%

ஆயுட்காலம்:
75.5 வருடங்கள்

நாணயம்:
அரூபன் புளோரின்

சர்வதேசத் தொலைபேசி இலக்க ஆரம்பம்:
00-297

பிரதான  வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத் துறை.

ஏற்றுமதி:
மிருகங்கள், விலங்குணவுகள், இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள்.

கனிய வளங்கள்:
சிறிய அளவில் பெற்றோலியம்.

உலக அரங்கில்:
நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாக இருப்பினும், அரூபா ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அல்ல.
இந்நாட்டில் நெதர்லாந்துச் சட்டமே பின்பற்றப் படுகிறது.
இந்நாட்டு மக்களுக்கு நெதர்லாந்துக் கடவுச் சீட்டே வழங்கப் பட்டுள்ளது.

ஞாயிறு, நவம்பர் 28, 2010

வாசகர் கருத்து

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான 'எந்தக் குழந்தையும்' என்ற கட்டுரைத் தொடரில் இடம்பெற்ற கவிஞர் 'புலமைப் பித்தன்' அவர்களின் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினை" என்ற பாடலை அண்மையில் வாசித்த வாசகரின் கருத்து.

எந்தக் குழந்தையும் 
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்" பாடலுடன் எனக்குப் பூரண திருப்தியில்லை, காரணம்: அப்பாடலில் "நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்று தாயின்மீது மட்டுமே பழிசுமத்தப் படுகிறது. இன்றைய நவீன உலகத்தில் குழந்தை வளர்ப்பில் தாய், தந்தை இருவருடைய பங்களிப்பும் அவசியம் என்பதை ஒரு தற்காலிக எஸ்.எவ்.ஓ.(S.F.O) தலைவராகவும், பல வருடங்களாகக் குழந்தைகளுடன் பணிபுரிந்த அனுபவத்தை வைத்தும் கூற விரும்புகிறேன்.
அன்புடன் 
வாசகன் க.ந.

ஆசிரியர் குறிப்பு 
வாசகர் க.ந. அவர்களின் கருத்துக்கு நன்றி.
டென்மார்க் தவிர்ந்த ஏனைய நாட்டு வாசகர்களின் கவனத்திற்கு:- S.F.O என்பது டேனிஷ் மொழியில் Skole Fritids Ordning என்ற வார்த்தைகளின் சுருக்கமாகும். SFO என்பது பாடசாலை தொடங்குவதற்கு முன்பாகவும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாணவர்களைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பராமரிக்கும் இடமாகும். இதன் மூலம், வேலை காரணமாகத் தாமதமாக வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்கும் பெற்றோர்களுக்குப் பாடசாலைக் கட்டமைப்பின் மூலம் உதவ முடிகிறது. இச்சேவைக்குக் கட்டணம் அறவிடப்படுகிறது என்பதும், இப்பராமரிப்பு நிலையத்தில் பிள்ளைகளுக்கு விளையாட்டு, கவின்கலைகள், கைப்பணி போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பு கிட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் அனைத்துப் பாடசாலைகளிலும் இத்தகைய ஏற்பாடு அமைக்கப் பட்டுள்ளது. 6 வயது தொடக்கம் 9 வயது வரையான மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.சனி, நவம்பர் 27, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 6

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டியவை:
 10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அபிமன்யுவும் சுபத்திராவும் 
இதை விளக்க இரண்டு கதைகளை உங்களுக்குக் கூற விரும்புகிறேன் முதலாவது எமது இலக்கியங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு சம்பவம், ஆனால் மிகவும் முக்கியமான சம்பவம், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கு மனைவியாகிய சுபத்திராவுக்கு, அவள் கர்ப்பிணியாக இருந்த காலப் பகுதியில், ஒரு முனிவர் நீதி இலக்கியங்களில் இருந்து எடுகோள்கள் எடுத்துக் கதை சொல்லிக்கொண்டிருந்தார். கதை கேட்டுக்கொண்டிருந்த தாயானவள், ஒரு இருக்கையோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள், இவ்வாறு சாய்ந்து இருந்தவள் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப் போய்விடுகிறாள், இதைக் கவனியாத முனிவர் தொடர்ந்து கதையைக் கூறிக் கொண்டிருந்தார், ஆனால் முனிவரின் கதையை தொடர்ந்து செவிமடுப்பதற்கு ஆதாரமாக "ம், ம், ம்" என்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் தாயானவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முனிவர் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார், அதாவது "ம்,ம்,ம்" என்று கதை கேட்டுக்கொண்டிருந்தது சுபத்திரா அல்ல, அவளது வயிற்றிலிருக்கும்(கர்ப்பப் பையிலிருக்கும்) குழந்தை என்பதை. அவ்வாறு கருவிலிருக்கும்போதே கதைகேட்ட குழந்தைதான் பின்நாளில் 'வீர அபிமன்யு' என்று புகழ்பெற்றான் என்கிறது மகாபாரதம். மகாபாரதம் உண்மைக் கதையா? இவ்வாறான சம்பவங்கள் உண்மையானவையா? என்பதல்ல இங்கு விடயம், நவீன மருத்துவ உலகினர் கூறுகின்ற "குழந்தை தனது மூன்றிலொரு பங்கு அறிவைத் தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற கருத்துடன், நான் மேலே கூறிய கதை ஒத்துப் போகிறதல்லவா?

அர்ச்சுனனும் சுபத்திராவும் 
 'தாயின் கருவிலிருக்கும் சிசுவானது புறச் சூழலிலுள்ள விடயங்களையும் உணரும் தன்மையுள்ளது' என்ற உண்மையை, எமது முன்னோர்கள் இத்தகைய கதைகளின்மூலம்  
மறைமுகமாக எமக்கு உணர்த்தியுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவே மேற்படி கதையை உங்களுக்குக் கூறுகிறேன். இக்கதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாசித்ததாகும். இதில் நான் ஞாபக மறதி காரணமாக பெயர்களை தவற விட்டிருந்தால், அல்லது மாற்றிக் கூறியிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். மேற்படி சம்பவத்தை வாசகர்களின் முன் சமர்ப்பிப்பதே எனது நோக்கமாக இருந்தது.
இதேபோல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 5

இக்கட்டுரை கடந்த 22.10.2010 அன்று அந்திமாலையில் வெளியாகியது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரமாகிறது.
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:


8. தாயானவள் தினமும் தன் கண்ணால் யாரைப் பார்க்கிறாளோ, யாருடன் அதிகநேரம் செலவிட நேர்கிறதோ, அல்லது பழக நேரிடுகிறதோ அந்த நபரின் நடை, உடை, பாவனை, நிறம், ஆற்றல், போன்ற அம்சங்களைக் கொண்ட குழந்தை பிறக்கிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை, ஆயினும் பல சமூகங்களிலும், உளவியல் சித்தாந்தங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். உதாரணமாக எமது தமிழ் சமூகத்தில் ஒரு குழந்தையைப் பார்த்து "இவன் பேரனைப் போல உள்ளான்", "இவன்
See full size imageமாமனைப் போல இருக்கிறான்", "இவள் உரித்து வைத்து பேத்தியாரைப் போல" என்றும் கூறப்படுவதற்குக் காரணம் என்ன? அந்தத் தாய் கர்ப்பவதியாக இருக்கும்போது, தினமும் யாரைப் பார்த்தாளோ, அந்நபரின் உருவம், விபரிக்க முடியாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத ஒரு சில அம்சங்கள் காரணமாக, குழந்தையின் உருவத்திலும், குணாதிசயங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தாயானவள் கர்ப்பக் காலம் முழுவதும், நல்ல மனிதர்களின் சகவாசம், இன்சொல், நற்செயல், நல்ல கொள்கை உடைய மனிதர்களைத் தினமும் பார்க்க, பழக, உரையாட நேர்ந்தால் அவர்களது குணத்தை ஒத்த குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத உண்மையாகும்.

Indian_child_29. இதேபோல் இக்காலப் பகுதியில் தாயானவள் தான் பார்க்கின்ற திரைப்படங்கள், வாசிக்கின்ற புத்தகங்கள், கேட்கின்ற கதைகள் பற்றியும் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இத்தகைய காரணிகள் கூட குழந்தையின் அறிவில், எதிர்கால செயற்பாட்டில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் நல்ல இசையைக் கேட்கும் வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையானது இசையில் நாட்டமுள்ள, திறமையுள்ள குழந்தையாக இருக்கிறது என்கிற விடயம் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

(அடுத்த வாரமும் தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளி, நவம்பர் 26, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 5

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
முல்லை 
இவ்வாறு தமிழ் மக்கள் தமது மண்ணோடு, மரங்களையும் செடி கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எங்கே எவ்வாறு ஆரம்பிக்கிறது? என்று ஆராய முற்பட்டபோது எனக்குக் கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்தன.
முதலாவதாக எமது தமிழ் இலக்கிய நூல்களில் விடை தேடியபோது கிடைத்தது ஒரு அதிசயமான செய்தி அது "முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி" என்று நம்மை வியப்படையச் செய்கிறது. அதாவது சங்க காலத்தில் வாழ்ந்த அல்லது ஆட்சிபுரிந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய 'பாரி மன்னன்' காட்டிற்கு வேட்டையின் நிமித்தம் சென்றபோது காட்டில் அவனது தேர் சென்ற பாதையில் கவனிப்பாரின்றி படர்ந்து கிடந்த ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு(பற்றிப் பிடித்துப் படர்வதற்கு ஏற்ற மரம்போன்ற ஒரு துணை)இல்லாததால் காற்றில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் பட்டுக் கிடப்பதைக் கண்டான், அதன் நிலை கண்டு இரங்கிய அம்மன்னன் தனது தேரிலிருந்து இறங்கி,
அத்தேரில் அம்முல்லைக் கொடியைப் படரவைத்துவிட்டுக் கானகத்திலிருந்து நடந்தே அரண்மனைக்கு சென்றான் என்று சாட்சி கூறுகிறது எமது சங்க இலக்கியம். கொடைக்குப் பெயர்போனவன் பாரி மன்னன் என்பது நம்மில் பலர் அறிந்த விடயமாகும், இருப்பினும் ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே தானமாக வழங்கிய அவனது பெருந்தன்மை யாருக்கு வரும்? அதனால் தான் இன்று வரை எம்மவர் நாவுகளில் 'வள்ளல்' என்ற அடைமொழிக்கு அர்த்தமாக பாரிமன்னன் நிலைத்து நிற்கிறான். எனது நண்பரொருவர் இந்தப் பாரி மன்னனின் செயலைப் பற்றிக் கிண்டலாக ஒரு கருத்துக் கூறினார், அது சரியா தவறா என்ற முடிவை வாசகர் பக்கமே விட்டு விடுகிறேன் அவர் கூறியது இதுதான்: "இக்காலத்தில் பெராரி(Ferrari) அல்லது
பெராரி (Ferrari)
ரோல்ஸ்ரோய்ஸ்(Rolls-Royce) கார்கள் போல அக்காலத்தில் மன்னர்களின் தேர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை, அவ்வாறு இருக்கையில் ஒரு பெறுமதியான தேரை, மன்னன் முல்லைக் கொடிக்காக இழந்தது எவ்வகையில் விவேகமானது? இதற்குப் பதிலாக தனது படை, பரிவாரங்களிடம் சொல்லி முல்லைக் கொடிக்கு ஒரு பந்தல் அமைத்துக் கொடுத்திருக்கலாமே? என்று என்னிடம் கேட்டார். அவருக்குக் கூறுவதற்கு என்னிடம் ஏற்புடைய பதில் இல்லாவிட்டாலும், அவரிடம் நான் பின்வருமாறு கூறி அவ்விவாதத்தில் இருந்து விடுபட்டேன் "அம்முல்லைக் கொடியின் அவலம் தீரவேண்டும் என்று எண்ணிய மன்னனுக்கு, இரக்கம் என்ற உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நின்றது, அவ்விரக்க உணர்ச்சிக்கு முன்னால் தேரின் பெறுமதி ஒரு பொருட்டாக அவனுக்குப் படவில்லை. அதனால்தான் தமிழ்ச் சரித்திரத்தில் இன்றுவரை அழியாமல் வாழ்கிறான் பாரி மன்னன்"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

வியாழன், நவம்பர் 25, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 4  
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இக்கட்டுரை கடந்த 22.10.2010 அன்று அந்திமாலையில் வெளியாகியது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரமாகிறது.
                                    
"மாமரத்திற்கு வலிக்கும்" என்று பெற்றோர்கள் கூறுகின்ற கருத்தைக் கவனத்தில் கொள்கின்ற சிறுவனோ, சிறுமியோ "மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது" என்கின்ற பெற்றோர்களின் கருத்தை நினைவில் கொள்வதில்லை. அத்தகு 'தடை செய்யப்பட்ட' செயலைச் செய்துபார்க்கவே ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது. ஏனெனில் ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு தடுக்கப்படும்போது, அச்செயலைச் செய்ய தூண்டப்படுவது மனித இயல்பாகிறது. இதற்கு மனித வரலாற்றைக் குறித்துவைத்துள்ளதாகக் கூறப்படும், 'புனித விவிலியத்தில்' வரும் ஆதிப் பெற்றோர்களான 'ஆதாமும், ஏவாளும்' கூட விதிவிலக்கு அல்ல.

இதனாலேயே குழந்தைகள் மாம்பிஞ்சுகளைப் பெற்றோருக்குத் தெரியாமல் பிடுங்கி உண்கின்றனர். புளிப்பும், கசப்பும் கலந்த அந்தப் பிஞ்சு மாங்காய்களின் சுவையானது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு 'தெவிட்டாத' சுவையாகி விடுகிறது. இதற்கு மருத்துவ ரீதியான ஒரு காரணமும் உள்ளது. அதாவது எந்தக் குழந்தை மாங்காயையோ, புளியங்காயையோ, புளியம்பழத்தையோ திருட்டுத் தனமாக, விரும்பி உண்கிறதோ அந்தக் குழந்தையின் உடலில் விட்டமின் C குறைவாகக் காணப்படுகிறது என்று அர்த்தம். இவ்வாறான தருணங்களில் பெற்றோர், குழந்தைக்குப் போதுமான விட்டமின் C சத்துள்ள   பழங்களையோ(புளிப்புச் சுவையுடைய பழங்கள்) அல்லது விட்டமின் C மாத்திரைகளையோ கொடுத்தல் அவசியம். இதேபோல் சில குழந்தைகள், ரகசியமாகச் சாம்பலையோ,(அடுப்பிலிருந்து கிடைக்கும் சாம்பல்) அல்லது களிமண், புழுதிமண் போன்றவற்றையோ உண்ணுதல் கூடும். இவ்வாறு உண்ணுகிற குழந்தைகளைப் பெற்றோர் "அவ்வாறு செய்யக் கூடாது" என்று அதட்டி, அடிப்பதை நான் பலதடவைகள் கண்டிருக்கிறேன். இவ்வாறு குழந்தைகள் செய்வதற்கும் 'அறிவியல் ரீதியான' காரணம் இருக்கிறது. அதாவது அவ்வாறு செய்கின்ற குழந்தையின் உடலில் ஏதோவொரு தாதுப்பொருள் (உதாரணமாக கல்சியம், பொஸ்பரஸ், சோடியம்) குறைவடைகிறது என்று அர்த்தம். மேற்படி குழந்தையின் உடலில் குறிப்பிட்ட ஒரு தாதுப்பொருள் குறைவடைகின்றமையை, இயற்கையானது நமக்குத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடே குழந்தை 'களிமண்ணை' உண்ணுதலாகும். ஆதலால் மேற்படி குழந்தையைத் தாயோ, தந்தையோ அடிக்காமல், உரிய மருத்துவரிடம், ஆலோசனை பெற்றுக் குழந்தைக்குத் தேவைப்படுகின்ற 'சத்து' எது என்பதைக் கண்டறிந்து, அச்சத்து குழந்தைக்குக் கிடைக்க ஆவன செய்தலே பொருத்தமான தீர்வாக அமையும்.
சரி, சிறு வயதில் மாங்காயின், அல்லது மாம்பழத்தின் சுவைக்கு அடிமையாகும் குழந்தை, அவன்/அவள் பதின்ம வயதை அடையும்போதும் அவர்கள் மனமானது, மாங்காய்க்காகவும், மாமரத்திற்காகவும் ஏங்குகிறது. பாடசாலைப் பருவத்திலுள்ள நமது நாட்டுச் சிறுவர்கள் அவர்களது வளவில் மாமரங்கள் இல்லாதுபோகும் பட்சத்தில், மாற்றாரின் காணிகளில் உள்ள மாமரங்களிலிருந்து, மாங்காய்களைத் திருடுகின்ற சம்பவங்கள், சாதாரணமாக நிகழ்வதை அறியாத தமிழர்களே இருக்கமுடியாது எனலாம். "திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்" என்ற பழமொழியைத் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்வாறு சிறுவர் முதல், பதின்ம வயதினர் வரை அனைவரும், 'மாங்காய்' தருகின்ற மரம் என்ற காரணத்திற்காக நேசிக்கின்ற ஒரு மரமாக 'மாமரம்' விளங்குகிறது. இதுபோன்ற இன்னோரன்ன காரணங்களாலேயே 'கிழக்குச் சீமையின்' நாயகியானவள் "மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா"   என்று பாட்டிசைத்தாள்.
இந்த மனிதர்கள், குறிப்பாகத் தமிழர்கள், தங்கள் மண்ணோடுசேர்த்து மரம், செடி, கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எதனால், எவ்வாறு, எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆராயப் புறப்பட்ட எனக்குக் கிடைத்த விடைகள் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சத்தியசீலன், 
ஸ்ரொக்கோம், சுவீடன்

 • வலிமைமிக்க தன்னம்பிக்கைதான் பயத்தையும், தோல்வியையும், கவலையையும் வெற்றிகொள்ளும் சக்திவாய்ந்த சாதனம்.

 • மனச்சாட்சியின் குரலை மதித்து, நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்பவன் ஒருபோதும் தோல்வியடைவதில்லை.

 • தீர்மானத்திற்கு வருமுன் யோசி, ஆனால் தீர்மானத்திற்கு வந்தபின் காலம் தாழ்த்தாதே, செயலில் இறங்கு.

 • உல்லாசமாய்ப் பறக்கும் பறவையைப் பார்த்து அதைப்போல் மாற முயற்சிக்காதே, எல்லையற்ற தூரங்களுக்குத் துணிந்து செல்லும் அதன் தேடல் துணிவை மட்டும் அதனிடமிருந்து கற்றுக்கொண்டு உன்னோடு சேர்த்துக்கொள்.

 • எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெறுவேன் என்று நம்புகிறவர்கள் மட்டுமே உறுதியாக வெற்றி பெறுகிறார்கள்.

 • முயற்சி செய்தால் நிச்சயம் நடக்கக்கூடிய சாத்தியம் எதுவோ, அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். நீண்டகாலத்திட்டமாக உங்கள் இலட்சியத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் மனத்திற்கு முழுவதும் பிடித்த வேலைத்திட்டமாகவும் இருந்தால் நீங்கள் மிகப்பெரிய வெற்றியை எய்துவீர்கள்.

 • வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு முறிந்து போய் விடாதீர்கள். பிரச்சினைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து முன்னேறுங்கள்.

 • அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக உள்ள ஒரே மந்திரச் சொல் "என்னால் வெற்றிபெற முடியும்" என்பதுதான்.

 • உண்மை ஒருபோதும் அழிவதில்லை. பொய் சிலகாலம் நிலைத்து நிற்கும்.

 • தர்மம் தரணி உள்ளவரை விரிந்து நிற்கும், அதர்மம் சொற்ப காலத்துக்குள் அழிந்துவிடும்.

புதன், நவம்பர் 24, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு -அத்தியாயம் 8


ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்


எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோளஞ்சோறு  பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.
அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தபடியே கூறத்தொடங்கினார்.
"சோளத்தில் சோறு சமைக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன், சரி அது போகட்டும், அது பாடலின் சந்த வசதிக்காக எழுதப் பட்டிருக்கலாம்,  ஆனால் சோள மாவில் 'கூழ்' காய்ச்ச முடியும்,  சோளத்தில் அல்லது சோளமாவில் ஏனைய தானிய வகைகளைப் போல் பல உணவுப் பண்டங்களைத் தயாரிக்க முடியும்.
சோள மாவில் தயாரிக்கப் படும் பிட்டு,ரொட்டி போன்றவற்றின் சுவையே அலாதியானது, மட்டுமல்லாமல் அத்தானியத்தில் மனித சமிபாட்டுத் தொகுதி சீராக இயங்குவதற்கான போதுமான நார்ப்பொருள்(Fibre) உள்ளது.இதிலுள்ள நார்ப்பொருளானது, அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் உள்ளதைவிட அதிகம். இவ்வாறு உணவில் சோளத்தைச் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மலச்சிக்கல்(Constipation) என்ற பிரச்சனையே ஏற்பட வாய்ப்பில்லை".என்றார்.
"அது தெரிந்துதான் ஐரோப்பியர்கள் தமது நாளாந்த உணவுகளில் குறிப்பாக சலாட்(Salad) போன்றவற்றில் சோளத்தையும், பாண், கேக் போன்றவற்றில் சோள மாவையும் சேர்க்கிறார்களா? என்றேன் நான். அதற்கு பதில் கூறுமுகமாக பின்வருமாறு கூறினார் அந்த அனுபவசாலி: "நீங்கள் கூறுவது மெத்தச் சரி, அத்துடன் ஐரோப்பாவில் விற்பனையாகும் போத்தலில் அடைக்கப்பட்ட பெரும்பாலான 'குழந்தை உணவுகளில்' சோளமும் குறிப்பிட்ட வீதத்தில் கலக்கப் பட்டிருக்கும், ஏனெனில் சோளத்தில் அரிசி, கோதுமையைவிட புரதச் சத்தும் அதிகம். அது மட்டுமன்றி மதுபானங்கள் தயாரிப்பிலும் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது"
"என்னது மதுபானத் தயாரிப்பில் சோளமா"? என்றேன் நான் வியப்புடன்.

(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

செவ்வாய், நவம்பர் 23, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 7

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்

இக்கட்டுரை கடந்த 2.11.2010 அன்று அந்திமாலையில் வெளியானது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக இங்கு மறு பிரசுரமாகிறது.

"எங்களூரில் (இலங்கையில்) நெல்லுச்சோறு என்ற பதம் உபயோகிக்கப் படுவதில்லை, ஏனென்றால் நெல்லில் இருந்து உமியை நீக்கியவுடன் கிடைக்கும் அரிசியில் பொங்கல் (ஈழத்தில் 'புக்கை' என்றும் அழைப்பர்), அல்லது கஞ்சி மட்டுமே சமைப்பார்கள்" என்று கேள்விக்குமேல் கேள்விகளைக் கேட்டு எனது சந்தேகங்களை அவர்முன் சமர்ப்பித்தேன்.
நீங்கள் கேட்டது மிகவும் பொருத்தமான, நியாயமான கேள்விகள், இதற்கு பதிலளிப்பதற்கு ஈழத்தவர்கள், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணவுகளில் 'தானியங்களின்' முக்கியத்துவம் பற்றிக் கூற வேண்டும்" என்றவர் தொடர்ந்தார்.

"தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உணவுகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாகவே இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் ஈழத்து மக்களின் உணவுகளும் அத்தகையதே. பெரிய மாறுபாடுகள் ஏதுமில்லை. இதுபோக 'இந்தியாவும் இலங்கையும்' ஒரே காலப் பகுதியில் ஆங்கிலேய ஆட்சிக்குள் வந்து, கிட்டத்தட்ட ஒரே தருணத்தில் சுதந்திரமடைந்தவையாகும். இவ்வாறு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதில் இவ்விரு நாட்டிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் உணவுக்காகத் தனியே நெல்லை மட்டும் நம்பியிருக்கவில்லை. நெல் தவிர்ந்த ஏனைய தானியங்களாகிய சோளம், கோதுவரை, கம்பு(ஆங்கிலத்தில் Millet என்பர், ஈழத்தில் 'இறுங்கு' என்றழைப்பர்), கேழ்வரகு(மேற்கத்திய நாட்டவர்கள் Ragi என்றழைப்பர்), குரக்கன்(தமிழ் நாட்டில் 'கேப்பை' என்பர்), வரகு, சாமை (ஈழத்தில் 'சாமி' என்பர்), தினை, கொள்ளு, வாற்கோதுமை(மேற்கத்திய நாட்டவர்கள் Barley என்றழைப்பர்) கோதுமை போன்ற இன்னோரன்ன தானியங்களை உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தி வந்தனர். இவற்றில் எந்தெந்தத் தானியங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்" என்று புதிய கேள்வியை என்னை நோக்கித் தொடுத்தார்.

அவரிடமிருந்து கிளம்பிய புதிய கேள்வியால் கொஞ்சம் தடுமாறிய நான் எனது தடுமாற்றத்தை வெளியே காட்டாமல் தொடர்ந்தேன், "சோளத்தை நன்கு அறிவேன், அவித்த சோளம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஊரில் வேர்க்கடலை(கச்சான்) வறுத்து விற்பவர்கள், கண்டிப்பாக சோளத்தையும் அதனுடன் சேர்த்து விற்பது வழக்கம், சுவை அடிப்படையில் வேர்க்கடலைக்கும் சோளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நானறியேன், 'கோதுவரை' என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, கம்பு அல்லது 'இறுங்கு' என்ற தானியத்தை இலங்கையில், நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் 'பொரி உருண்டை' என்ற பெயரில் தின்பண்டமாகக் கடைகளில் விற்பார்கள், ஒரு உருண்டையின் விலை பத்துச் சதம், அதற்குள் செயற்கையாக 'சிவப்பு' நிறத்தையும் சேர்த்திருப்பார்கள், பொரி உருண்டையை சாப்பிட்டதும் வாயெல்லாம், ஏன் பற்கள் கூட சிறிது நேரத்திற்கு 'சிவப்பு' நிறமாகக் காட்சி தரும். எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோழஞ்சோறு பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.

(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நாடுகாண் பயணம் - ஆர்மீனியாநாட்டின் பெயர்:
ஆர்மீனியா
முழுப் பெயர்:
ஆர்மீனியக் குடியரசு.
அமைவிடம்:
ஆசியா + ஐரோப்பா

தலைநகரம்:
யெரெவான் 


நாட்டு எல்லைகள்:
கிழக்கு: அசர்பைஜான் 
மேற்கு: துருக்கி 
வடக்கு: ஜோர்ஜியா 
தெற்கு: ஈரான் மற்றும் நக்சிவான் குடியரசு.
நாட்டின் பரப்பளவு:
29,743 சதுர கிலோமீற்றர்கள்.


சனத்தொகை:
3,250,000(2009 மதிப்பீடு)


நாணயம்:
டிராம்


நாட்டு மொழி:
ஆர்மீனியன்


அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு.

ஜனாதிபதி:
செர்ஸ் சர்க்ஸ்யான்


பிரதமர்:
டிக்றான் சர்க்ஸ்யான் 


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-374


சமயங்கள்:
கிறீஸ்தவம்(உலகில் அரசாங்க மதமாக கிறீஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு)
மிகச் சிறிய தொகையில் முஸ்லீம்கள் மற்றும் யூதர்கள்.


கல்வியறிவு:
100% (சோவியத் ஆட்சியினால் பெற்ற நன்மை)


ஆயுட்காலம்:
ஆண்கள்: 70 வயது 
பெண்கள்: 76 வயது


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
கைத்தொழிற் துறை, இயந்திர உற்பத்தி, மருத்துவப் பொருட்கள் உற்பத்தி, ஆடைகள் ஏற்றுமதி.


ஏற்றுமதிப் பொருட்கள்:
இரசாயனப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், பதனிடப்பட்ட உணவுகள், துணிவகை.


இயற்கை வளங்கள்:
செப்பு, துத்த நாகம், தங்கம், ஈயம்.


உலக அரங்கத்தில்:
நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை, அறிவியல் மேதைகளை உலகிற்குத் தந்த நாடு.
ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாட்டு மாணவர்கள் இந்நாட்டுப் பல்கலைக் கழகத்தில் 'மருத்துவக் கல்வி' கற்கின்றனர். உலகில் விண்வெளித் தொழில்நுட்பம், செய்மதித் தொழில்நுட்பம் போன்றவை ஏற்பட இந்நாட்டு விஞ்ஞானிகளே காரணமாக இருந்தனர்.

துயரம் தோய்ந்த வரலாறு:
முதலாம் உலகப் போரில் ஆர்மீனியாவின் மீது படையெடுத்த துருக்கிய இராணுவம் 15 லட்சம் ஆர்மீனியப் பொதுமக்களைக் கொன்று குவித்தது. லட்சக் கணக்கான பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர். பல லட்சம் பொதுமக்கள் வீடு, சொத்துக்களை இழந்து அகதிகளாயினர். இன்றும் உலகில் பல நாடுகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்மீனியர்கள் யுத்தம் தந்த வடுக்களின் சின்னங்களாக, அதன் சந்ததிகளாக, அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்.வெள்ளி, நவம்பர் 19, 2010

அறிவியல்

டேனிஷ் மொழியில்: ரொமினா மக்கின்னஸ் 
தமிழில்: இ.சொ.லிங்கதாசன் 

கண்ணீரும் கதை சொல்லும் அத்தியாயம் 3

ஒரு விவாதத்தில் தன் கருத்தைச் சரியான முறையில் தெரிவிக்க முடியாத நண்பன்/நண்பி ஏன் அழ நேரிடுகிறது? திடீரென்று கீழே விழ நேரிடும் ஒருவரின் கண்களில் இருந்து ஏன் கண்ணீர் வருகின்றது, இவையெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் ஒரு மனிதன் வெளிப்படுத்தும் ஒரு 'மொழியாகும்' என்கிறார் மறீச பியர். சரி துக்கமான சூழலில் கண்ணீர் வருவது இயற்கை, ஆனந்தமான சூழலிலும் கண்ணீர் துளிர்க்கிறதே அது ஏன்? காரணம் இருக்கிறது, அதாவது ஒரு மனிதனின் உடலில் அவன் ஒழுங்கான உடற்பயிற்சி செய்பவனாக இருந்தால், அவனது இரத்தத்தில் 'என்டோர்பின்'(Endorphin) என்ற நன்மை செய்யும் ஹோர்மோன் அதிகமாகக் காணப் படும், அதேபோல நல்ல மனநிலையோடும், மகிழ்ச்சியோடும், நேர்மறையான(positive thinking) எண்ணங்களோடும் வாழுகின்ற, தியானம் போன்ற வழிமுறைகளால் தனது 'உளச் சமநிலையை' பேணுகிற மனிதர்களின் உடலிலும் இது காணப் படும். அதேபோல நாம் அளவுக்கதிகமாகச் சிரிக்கும்போதும், வெற்றி அல்லது எதிர்பாராத விதத்தில் அடையும் அதீத மகிழ்ச்சியில் நாம் 'திக்குமுக்காடிப்' போகும்போதும்(surprise) எமது உடல்நிலையில் சமநிலையை பேணும் முகமாக உடலானது திடீரென்று, கோடிக்கணக்கில் 'என்டோர்பீன்களைச்' சுரக்கிறது. இத்திடீர் மாற்றத்தை எமது உடல் வெளிப்படுத்தும் மொழியே 'ஆனந்தக் கண்ணீராகும்'
இத்தகைய ஆனந்தக் கண்ணீர் எப்போதும் நாம் வெற்றியை அடையும் தருணங்களிலும், இன்ப அதிர்ச்சியின்போதும் மட்டுமே ஏற்படுவதில்லை என்று கூறும் பியர் , ஆனந்தக் கண்ணீர் ஏற்படும் வேறு சில தருணங்களையும் குறிப்பிடுகிறார், உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் அல்லது வீராங்கனை தனது உடலை மிகவும் கடுமையாக வருத்திப் பயிற்சி செய்யும் தருணங்களிலும், ஒரு ஆணோ/பெண்ணோ பாலுறவில் முழுத் திருப்தியை(satisfaction) அல்லது உச்சக்கட்டத்தை(orgasm) எய்தும்போதும் இத்தகைய ஆனந்தக் கண்ணீர் வருவது இயற்கை என்கிறார். மகிழ்ச்சியின் காரணமாக மட்டுமே ஆனந்தக் கண்ணீர் வரும் என்பதில்லை, நகைச்சுவையின் கனம் தாங்காது 'விழுந்து விழுந்து' சிரிப்பவர்களுக்கும், ஏன் கடுங்கோபம் போன்ற உள்ளார்ந்த உணர்ச்சியின்போதும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

SOS நான் ஆபத்தில் இருக்கிறேன் எனக்கு உதவி செய்/உன் உதவி தேவை, புரிகிறதா?

மேலே உள்ளவை ஒரு நாடகத்தின் வசனம் என்று எண்ண வேண்டாம் இவையும் கண்ணீரை 'மொழிபெயர்த்தால்' கிடைக்கும் வார்த்தைகளாகும். இவை எப்படிக் கண்ணீரின் மொழிபெயர்ப்பாகும் என்று கேட்கிறீர்களா?
(தொடரும்)
நன்றி: Metro உலகச் செய்திகள்,
24timer டென்மார்க்.


புதன், நவம்பர் 17, 2010

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சத்தியசீலன், 
ஸ்ரொக்கோம், சுவீடன்

 • ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.

 • இன்பமும் துன்பமும் வாழ்க்கைச் சக்கரம். மேலும் கீழுமாக மாறி வரும்.

 • மனச்சாட்சிக்கு அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.

 • செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.

 • உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.

 • மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.

 • எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.

 • வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.

 • "என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".

 • கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.

திங்கள், நவம்பர் 15, 2010

நாடுகாண் பயணம் - அங்குயிலா

நாட்டின் பெயர்:
அங்குயிலா

நாட்டு இறைமை:
பிரித்தானியாவின் கடல்கடந்த பிரதேசம்.

அமைவிடம்:
தென் அமெரிக்கா

தலைநகரம்:
த வலி


நாட்டு எல்லைகள்:
நாடானது நான்கு பக்கமும் கடலாற் சூழப்பட்ட தீவு என்பதால் நாட்டின் எல்லை என்பது, நான்கு பக்கமும் கடலேயாகும்(கரீபியன் கடல்) ஆனால் அண்டை நாடுகளாக சென்.மார்ட்டின், போர்ட்டோ ரிக்கோ, மற்றும் கன்னித் தீவுகளைக்(Virgin Islands) கூறலாம்.

நாட்டின் பரப்பளவு:
91 சதுர கிலோமீற்றர்கள்

சனத்தொகை:
13,600 (2006 மதிப்பீடு)

நாணயம்:
கிழக்குக் கரீபியன் டொலர்

நாட்டு மொழி:
ஆங்கிலம்(பிரித்தானிய உச்சரிப்பு)
சிறிய அளவில் கிரியோலி.

நாட்டு இனங்கள் :
கிழக்கு ஆபிரிக்கர்கள்(90%)
கலப்பு இனங்கள்(4.6)
ஐரோப்பியர்(3.7)
மிகுதி ஏனையோர்

ஆட்சிமுறை:
ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த பிரதேசம்.

நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத்.(இங்கிலாந்து அரசி)

ஆளுநர்:
வில்லியம் அலிஸ்ரெயர் கரிசன்

முதலமைச்சர்:
ஹூபர்ட் ஹுக்கஸ்

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-௨௬௪


சமயங்கள்:
கிறீஸ்தவம்(அங்கிலிக்கன், மெதடிஸ்ட், 7 ஆம் நாள் சாட்சிகள், பாப்டிஸ்ட், ரோமன் கத்தோலிக்கம்)

பிரதான வருமானம் தரும் தொழிற்துறை:
சுற்றுலாத்துறை.

ஏற்றுமதிப் பொருட்கள்:
உப்பு, மீன், சிங்க இறால்.

கவிதைத் துளி


ஞாயிறு, நவம்பர் 14, 2010

முதற்பரிசு மூன்றுகோடி அத்தியாயம் 8

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது 
1. தண்ணீரை இறக்குமதி செய்தல் 
singaporeசிங்கப்பூர் என்ற சிறிய நாடு பிரித்தானியாவிடமிருந்து 16.9.1963 இல் உத்தியோகபூர்வமாகச் சுதந்திரமடைந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் மலேசியக் கூட்டமைப்பில்(கூட்டிணைவில்) ஒரு மாநிலமாக இணைந்திருந்தது. அதன் பின் மலேசியக் கூட்டமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 9.8.1965 இல் மலேசியாவை விட்டுப் பிரிந்து சுதந்திர நாடாகியது. இந்நாடு மலேசியாவுடன் சேர்த்து பிரித்தானியர்களால் ஆளப் பட்டபோதும், மலேசியக் கூட்டமைப்பில் ஒரு ஒன்றியமாக(மாநிலமாக) இருந்தபோதும் மலேசியாவிடமிருந்து 'இராட்சதக் குழாய்கள்' மூலமாக, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருக்கும் சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள பாதை வழியாகச் சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்கல் நடைபெற்று வருகின்றது.இத்தண்ணீர் வழங்கலானது, இரண்டு நாடுகளுக்குமிடையில் 1965 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரானது சில சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தது. காரணம் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூர் விலகிய காலத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களின் தொகையானது, கடந்த நாற்பத்தைந்து வருடங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, இவ்வாறு மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப மூன்று மடங்கு தண்ணீரை மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நெருக்கடி சிங்கப்பூருக்கு ஏற்பட்டது. ஆனால் மலேசியாவும் சிங்கப்பூரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. சிங்கப்பூரின் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப ஏற்றுமதிசெய்யும் தண்ணீரின் அளவையும் அதிகரிக்கின்ற வல்லமை 
MIGD-Municipal-Plantமலேசியாவிடமும் இருக்கவில்லை. காரணம் மலேசியா தனது எல்லைப்புற மாநிலங்கள் அனைத்திலுமிருந்து சேகரித்த தண்ணீரை, சிங்கப்பூருக்கு அண்மையிலுள்ள தனது மாநிலமாகிய 'ஜோகூரில்'(Johor) ராட்சதத் தொட்டிகளில் ஒன்று சேர்த்து, சிங்கப்பூருக்கு அனுப்பி வருகிறது, இத்தண்ணீரின் அளவை அதிகரித்தால், மலேசியாவில் வாழும் தனது மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்குவர், இதன் மூலம் தனது சொந்த மக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை மலேசியா அரசுக்கு(நாட்டிற்கு) ஏற்படும். இதன் காரணமாகவே சிங்கப்பூரின் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப, ஏற்றுமதிசெய்யும் தண்ணீரின் அளவை மலேசியா அதிகரிக்கவில்லை. அத்துடன் இரண்டு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட 'தண்ணீர் ஒப்பந்தம்' எதிர்வரும் 2061 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது(காலாவதியாகிறது) "அதன்பின் உங்களுக்குத் தண்ணீர் தரமாட்டோம், அதற்கு 
முன்னதாக நீங்கள் 'தன்னிறைவு' அடையக்கூடிய மாற்று வழிகளைக் கண்டுபிடியுங்கள்" என்று மலேசியா அரசு சிங்கை அரசிடம் கூறியது. சிங்கை அரசு பலவித சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபின், மூன்று வகையான மாற்றுத் திட்டங்களைக் கண்டு பிடித்தது.
(தொடரும்)  
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன    

புதன், நவம்பர் 10, 2010

உள்ளத்தைத் தொட்ட பொன்மொழிகள்

தொகுப்பு: சி.சத்தியசீலன்,
ஸ்ரொக்கோம், சுவீடன்


 • நிரந்தர உறக்கத்திற்கு முன் சாதித்துவிடு, நீ வாழ்ந்ததை உலகிற்குப் போதித்துவிடு.

 • நதியைப் பார்த்ததும், நம்மால் நதியாக மாறமுடியவில்லையே என்று எண்ணாதே, எதையும் ஏற்றுச் சகித்து, மற்றவர்களைத் தூய்மையாக்கி, மண்ணையும் வளப்படுத்தும் பண்பை மட்டும் சேர்த்துக்கொள்.

 • மரம் விழுந்தால் வேர் தெரியும், மனிதன் உடல் விழுந்தால் பேர் தெரியும்.

 • குழப்பம் உன் பகைவன், அது நேரத்தைத் தின்றுவிடும், நிம்மதியைக் குலைத்துவிடும், முன்னேற்றத்தைத் தடுத்துவிடும்.

 • எண்ணம் என்பது சக்திவாய்ந்த ஒரு கருவி. உனக்கு நீயே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மூலம் உன் வாழ்க்கையைச் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.

 • செய்ய முடியும் என்று நம்பு, முதலில் அதை மனதுக்குள் செய்து பழகு.

 • ஆசைப்படு, அதுவே வெற்றியின் முதல்படி. எத்திசையில் வாழ்க்கை செலுத்தப்பட வேண்டும் என்று சொல்வதும் அதுதான்.

 • சிறிய செயலானாலும் சரி, அதைச் செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டு ஆரம்பி, செய்து முடி, தன்னம்பிக்கையை வளப்படுத்திக்கொள்.

 • அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்று காத்திருக்காதே, முயற்சியில் குதி, அதிர்ஷ்ட தேவதையை நீ போகும் வழியில் காண்பாய்.

 • உலகில் நல்ல சந்தர்ப்பங்களே அதிகம், அதைச் சரியாகப் பயன்படுத்துவதே உனது சாதுரியம்.
அறிவியல்

டேனிஷ் மொழியில்: ரொமினா மக்கின்னஸ் 
தமிழில்: இ.சொ.லிங்கதாசன் 
கண்ணீரும் கதைசொல்லும்! - பாகம் 2
மனிதர்கள் நாம் ஏன் அழுகிறோம்? விடை நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதானே, நம் உடல் அல்லது உள்ளம்(மனம்) தாக்கப் படும்போது அழுகிறோம். இன்றுவரை விஞ்ஞானிகளால் உறுதி செய்யப் படாவிட்டாலும், ஒரு உண்மை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது "உணர்வுகளால் தாக்கப்படும்போது அழுகின்ற, அல்லது உணர்ச்சிவசப்படும்போது கண்ணீர் சிந்துகின்ற ஒரேயொரு விலங்கு, 'மனிதன்' மட்டுமே". 1980 களில் அமெரிக்காவின் Minneapolis நகரத்திலுள்ள ராம்சே மருத்துவ கழகத்தைச் சேர்ந்த வில்லியம் பெய் என்ற விஞ்ஞானி கண்ணீரைப் பற்றிய தனது ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டார். அதன்படி "பிரதிபலிப்புக் கண்ணீரில் 98% தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும், ஆனால் 'உணர்வெழுச்சிக் கண்ணீரில்' பெருமளவில் மன அழுத்தக் ஹோர்மோன்கள் உள்ளது" என்றும் தெரிவித்தார். மனிதன் கவலையாக, துன்பத்தில் இருக்கும் போது அழுவது ஒரு அத்தியாவசியமான உடலியல் செயற்பாடு என்று கூறிய அவர் இதன் மூலம் உடலானது தன்னுள்ளே உருவாகிய நச்சுப் பொருட்களை (துன்பத்தின் காரணமாக ஏற்பட்ட நச்சுப் பொருட்கள்) வெளியேற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது, இதன்மூலம் மனித 'மனம்' பழைய நிலைக்கு, அல்லது மகிழ்ச்சியான நிலைக்குச் செல்வதற்கு உடலும், உள்ளமும் ஒத்துழைக்கின்றன.

டேனிஷ் மருத்துவ நிபுணர்களில் ஒருவராகிய மறீச பியர் உணர்வெழுச்சிக் கண்ணீருக்குக் காரணங்களாக பின்வருவனவற்றைப் பட்டியலிடுகிறார். ,

 1. ஆழமான(பலம் மிக்க) உணர்ச்சிகளாகிய கோபம், ஆத்திரம், விரக்தி, ஏமாற்றம், ஏக்கம், ஆனந்தம்,எல்லைமீறிய உணர்ச்சிவயப்படுதல்.
 2. "நான் கவலையாயிருக்கிறேன்" என்று ஒரு மனித உடல்+ஆன்மா, அடுத்தவர்களுக்குத் தெரியப் படுத்தும் ஒரு 'மொழி' கண்ணீராகும்.
"நான் துக்கமாயிருக்கிறேன், நான் ஆனந்தமாயிருக்கிறேன்"
ஒரு ஆழமான உணர்ச்சியின் காரணமாக எம் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலையிலிருந்து எம் மனதைத் தளர்விப்பதற்கு அழுகை இன்றியமையாததாகின்றது. இதன்மூலம் உள்ளத்தில் ஏற்பட்ட வலியும், உடலில் ஏற்பட்ட வலியும் நம்மைவிட்டு விலகுவதற்கு வழிபிறக்கிறது. உணர்சிகள் பலவகை, அவை பயம், ஆனந்தம், அதிர்ச்சி, வலி, துக்கம் என்று எண்ணிலடங்காதவையாக இருக்கலாம் ஆனால் அவற்றை மனிதர்கள் வெளிப்படுத்தும் விதம் அல்லது 'மொழி' அநேகமாகக் 'கண்ணீராகத்தான்' இருக்கும். இதை நீங்கள் அனுபவ ரீதியாக உணர்ந்திருப்பீர்கள், ஒரு விவாதத்தில் தன் கருத்தைச் சரியான முறையில் தெரிவிக்க முடியாத நண்பன்/நண்பி ஏன் அழ நேரிடுகிறது? திடீரென்று கீழே விழ நேரிடும் ஒருவரின் கண்களில் இருந்து ஏன் கண்ணீர் வருகின்றது, இவையெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் ஒரு மனிதன் வெளிப்படுத்தும் ஒரு 'மொழியாகும்' என்கிறார் பியர். சரி துக்கமான சூழலில் கண்ணீர் வருவது இயற்கை, ஆனந்தமான சூழலிலும் கண்ணீர் துளிர்க்கிறதே அது ஏன்?
(தொடரும்


நன்றி: Metro உலகச் செய்திகள்,
24timer டென்மார்க்.

செவ்வாய், நவம்பர் 09, 2010

நாடுகாண் பயணம் - ஆர்ஜென்டீனாநாட்டின் பெயர்:
ஆர்ஜென்டீனா 

முழுப்பெயர்:
ஆர்ஜென்டீனக் குடியரசு 


அமைவிடம்:
தென் அமெரிக்கக் கண்டம் 


தலைநகரம்:
பியூனஸ் அய்ரஸ்

நாட்டு எல்லைகள்:
மேற்கு: அண்டீஸ் மலைத்தொடர்,
கிழக்கு: அத்திலாந்திக் சமுத்திரம்,
வடக்கு: பராகுவே, பொலிவியா,
வடகிழக்கு: பிரேசில், உருகுவே,
தென்மேற்கு: சிலி நாட்டின் பரப்பளவு:
2,766,890 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
40,134,425 (2009 மதிப்பீடு)

நாணயம்:
பெசோ 


நாட்டு மொழி:
ஸ்பானிஷ் 


அரசாங்க முறை:
கூட்டாட்சிக் குடியரசு.


ஜனாதிபதி:
கிறிஸ்டீனா பெர்ணான்டஸ் டீ கிர்ச்நெர்சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
0054


சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 92%, அக்னொஸ்டிக் 3%, மிகச் சிறிய அளவில் முஸ்லீம்கள், யூதர்கள், புத்த மதத்தவர், கடவுள் மறுப்புக் கொள்கையினர். 


கல்வியறிவு:
97%


ஆயுட்காலம்:
76 வருடங்கள்

பிரதான வருமானம் தரும் தொழில்:
விவசாயம், கைத்தொழில், கல்விமான்களை ஏற்றுமதிசெய்தல்.


ஏற்றுமதிப் பொருட்கள்:
சோயா அவரை, தாவர எண்ணை வகைகள், கோதுமை, சோளம், மாட்டிறைச்சி, வாகன உதிரிப்பாகங்கள், மருந்து, இரசாயனப் பொருட்கள்.


இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், இயற்கை எரிவாயு, செப்பு.

உலக அரங்கத்தில்:
பிரபலமான உதைபந்தாட்ட வீரர்கள் மரடோனா, கெர்னான் கிறிஸ்டோ, கபிரியல் உமர் பட்டிஸ்டூடா போன்றவர்களையும், நூற்றுக்கணக்கான பிரபலமான இசையமைப்பாளர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உலகத்திற்குத் தந்த நாடு.