சனி, ஏப்ரல் 30, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணி; அல்ல மற்றுப்பிற. (95)

பொருள்:வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
அவசரமாகக் கல்யாணம் செய்துகொண்டால், மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

துன்புறூஉம் துவ்வாமை இல்ஆகும் யார்மாட்டும் 
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு (94) 

பொருள்: யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.  

வியாழன், ஏப்ரல் 28, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.2


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
இப்போது எனது தாயார் புதிதாக தனது பாணியில் 'விசாரணையை' ஆரம்பித்தார். எங்கே, எவ்வாறு நான் தவற விடப்பட்டேன்? என்பதுதான் விசாரணையின் கருப்பொருள். என் அண்ணன் இந்தத் தடவை பதில் சொல்லுவதற்குப் பின்னடித்தான். தன்மீது முழுத் தவறு என்று தெரிந்ததாலோ என்னவோ, தத்தித் தடுமாறி, மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். விசாரணை என் பக்கம் திரும்பியது. நான் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், மாங்காய் பொறுக்குவதற்காகக் கணேப்பிள்ளையர் வளவிற்குச் சென்றது தொடக்கம், நான் காணாமல் போக நேர்ந்தது வரை கடகடவென்று கூறி முடித்தேன். இடையிடையே நான் 'பயந்துபோன' தருணங்களைப் பற்றி விபரிக்கும்போது அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன். அம்மாவின் கோபமான 'பார்வை' அண்ணாவின் பக்கம் திரும்பியது.
ஆச்சரியம் என்னவென்றால் அம்மா என் அண்ணாவுக்கு ஒரு அடிகூட அடிக்கவில்லை. அப்பா வந்தவுடன் நடைபெறப் போகும் 'விசாரணையில்' கண்டிப்பாக அடிவிழும் என்பது அம்மாவின் ஊகம் போலும். அம்மாவின் 'விசாரணை' அண்ணாவையும் என்னையும் பயமுறுத்துவதாகவே அமைந்திருந்தது.
"உன்னோடு வந்த சின்னப் பிள்ளையை, ஒழுங்காக வீட்ட கூட்டிக்கொண்டு வரவேண்டியது உன்ர பொறுப்பு, இடையில என்னத்துக்கடா மாங்காய் பொறுக்க போனனீங்கள்? எல்லாம் சரி, நீ என்னத்துக்கு 'சிலேற்ற' விட்டிட்டு  ஓடினனி? இக்கணம் கொப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிப்பார் றெடியா இருங்கோ"
அம்மாவின் விசாரணையில் அடி ஏதும் விழாதது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியே, ஆனாலும், அப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிக்கப் போகிறார் என்பதை நினைக்கையில் எனக்கு நடுக்கமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் 'முதுகுத் தோல் உரித்தல்/உரியும்' என்ற வார்த்தைகள் என் காதுகளில் விழும்போதெல்லாம் அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் பட்டால் எவ்வாறு இருக்கும் என்று 'கற்பனை' செய்து பார்த்து நடுக்கம் கொள்வது எனது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் படுவதில்லை என்பதை உணர்கின்ற வயது அதுவல்லவே? அது பயமுறுத்துவதற்காகக் கூறப்படும் வாக்கியம் என்பதை எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதுதான் உணர முடிந்தது. தமிழில் அது ஒரு 'உருவக அணி' என்பதை உயர்தர வகுப்பில் கல்வி கற்கும்போது தெரிந்துகொண்டேன்.
இந்த பயம் எம்மை ஆட்கொண்ட காரணத்தால் அன்று நானும் அண்ணாவும் வெளியே சிறுவர்களோடு விளையாடச் செல்லவில்லை. எங்கள் வீட்டிற்குப் பின் பக்கமே எங்கள் விளையாட்டிடம் ஆனது.  வீட்டின் கோடிப்புறத்தில் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் அழகாக ஒரு சிறிய குழியை ஏற்படுத்துகின்ற ஒருவகைப் பூச்சியினம் வாழ்ந்துவரும். அந்த மணலில் வாழ்ந்துவரும் மிகச் சிறிய பூச்சிகளைப் பிடித்து 'சிரட்டைகளால்' மூடி வைப்போம்.ஒரு சில நிமிடங்களால் சிரட்டையைத் திறந்துபார்த்தால் அந்தப் பூச்சி மாயமாய் மறைந்திருக்கும். அந்தப் பூச்சி மணலைக் கிளறியபடி ஏதாவது ஒரு வழியால் தப்பித்துப் போய்விடுகின்ற விடயம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும்.
இன்றைக்கு அப்பா தாமதாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்தால், மாங்காய் பொறுக்கப் போனதற்காகவும், என்னை தவற விட்டதற்காகவும் அண்ணாவுக்கு அடியும், சிலேற்றை தொலைத்ததற்காக எனக்கும் அடி விழும் அல்லவா? அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தால் நாங்கள் நித்திரையில் இருப்போம். நித்திரையாய் இருக்கும் எங்களை எழுப்பி 'விசாரணை' செய்ய மாட்டார். 
நான் எதிர்பார்த்ததற்கு மாறாகவே அன்று நடந்தது.அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார்.
வீட்டிற்கு வந்த அப்பா எங்களோடு சேர்ந்து 'இரவுணவை' உண்ணும்போது, என் மனதில் 'முதுகுத் தோல்' உரியும் நிகழ்வு படமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இருந்த பயத்தில் அன்று அம்மா தந்த 'சோறும் நண்டுக் குழம்பும்' சுவையாக இருந்ததா? சோறு இரைப்பையில் ஒழுங்காக சென்று இறங்கியதா? என்பவையெல்லாம் இன்றுவரை ஞாபகமில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

புதன், ஏப்ரல் 27, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை, ஒருமுறையாவது தன்மேல் சவாரி செய்யும் எஜமானனைக் கீழே தள்ளாமல் விடாது. 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் 
இன்சொல் இனிதே அறம். (93) 

பொருள்: முகமலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

நாடுகாண் பயணம் - பிரேசில்





நாட்டின் பெயர்:
பிரேசில் 

முழுப் பெயர்:
ஒருங்கிணைந்த ஒன்றியங்களின் பிரேசில் குடியரசு(Federativ Republic of Brazil)

அமைவிடம்:
தென் அமெரிக்கா

எல்லைகள்:
கிழக்கு - அத்திலாந்திக் சமுத்திரம் 
வடக்கு - வெனிசுவெலா, கயானா, சூரினாம், பிரெஞ்சு கயானா 
வடகிழக்கு - கொலம்பியா 
மேற்கு - பொலிவியா, பெரு
வடமேற்கு - ஆர்ஜென்டீனா, பராகுவே 
தெற்கு: உருகுவே 
Brazil Beaches

தலைநகரம்:
பிரேசிலியா(Brasilia)

மிகப்பெரிய நகரம்:
சாவோ பவுலோ(Sao Paulo)

இனங்கள்:
48.43%வெள்ளையர் 
43.80%கலப்பு இனங்கள் 
6.84%கறுப்பினத்தவர் 
0.58%ஆசியர் 
0.28%அமர் இந்தியர் 

அலுவலக மொழி:
போர்த்துக்கேய மொழி 
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 73.8%      
புரட்டஸ்தாந்துகள் 15.4%
சமய ஈடுபாடு இல்லாதோர் 7.4%
ஆத்ம சமயம் 1.3%
ஏனையோர் 2.1%
ஆயுட்காலம்:
ஆண்கள் 68.9 வருடங்கள் 
பெண்கள் 76.2 வருடங்கள் 

கல்வியறிவு:
88.6 %

ஆட்சிமுறை:
மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி 

ஜனாதிபதி:
டில்மா ரௌஸ்ஸெப்(Dilma Rousseff)

போர்த்துக்கேய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
29.08.1825 
பரப்பளவு:
8,514,877 சதுர கிலோமீட்டர் 

சனத்தொகை:
190,732,694 (2010 மதிப்பீடு)

நாணயம்:
ரியல்(Real /BRL)

இணையத்தளக் குறியீடு:
.br

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-55
விவசாய உற்பத்திகள்:
கோப்பி(காபி), சோயா அவரை, கோதுமை, அரிசி, தானியங்கள், கரும்பு, கொக்கோ, புளிப்பான பழங்கள், மாட்டிறைச்சி.

தொழிற்சாலை உற்பத்திகள்:
துணிகள், சப்பாத்துகள், இரசாயனங்கள், சீமெந்து, இரும்பு, ஈயம், தகரம், உருக்கு, விமானங்கள், வாகன இயந்திரங்கள்,ஏனைய இயந்திரங்கள்.

ஏற்றுமதிகள்:
வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், இரும்பு, ஈயம், சோயா, காலணிகள், காபி.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • ஈக்குவடோர், சிலி ஆகிய இரண்டு நாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள நாடு.
  • உலகில் பரப்பளவில் பெரிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய நாடு.
  • உலகில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் 'வாங்கும் சக்தி' அதிகமுள்ள மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
  • இருப்பினும் இந்நாட்டில் 26% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • உலகில் கோப்பி(காபி) அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் முதலாமிடத்தில் உள்ளது.
  • தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப்பெரிய அரசியல், பொருளாதார சக்தியாக பிரேசில் விளங்குகிறது.
  • உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவராகிய ரொனால்டினோ(Ronaldinho) இந்நாட்டைச் சேர்ந்தவர்.
  • தென் அமெரிக்க நாடுகளிலேயே முதல் தடவையாக எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் 'பிரேசிலில்' நடைபெறவுள்ளன.








திங்கள், ஏப்ரல் 25, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின். (92)

பொருள்:முகமலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்.

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

உயிர்த்த ஞாயிறு தினக் கவிதை

இறவா உடலம் நிறைவாய் எழுந்தது.


வீரம் மிகுந்த உடலம்
விவேகம் மிகுந்த உடலம்
பாரச்சிலுவையின் பழுவினால்
பலமுறை விழுந்த உடலம்
இரக்கமற்ற ஈனர்களினால்
இடித்து நொருக்கிய உடலம்
சீரமைய உயிர்த்து எழுந்தது
சாவை வென்ற சத்தியம்

கானம் பாட விண்ணவர்
கனகம் சொரிய மண்ணவர்
மோனம் பாட முத்தமிழ்
மீட்பை தந்த ஒளிவடிவு
மானம் இழந்து தலைசாயா
மாண்புமிகு நல்விடிவு
ஈனம் போக்கும் உத்தமர்
ஈடில்லா உவமை தத்துவர்
கூனம் நிமிர எழுந்தனர்
குவலய மக்கள் மகிழ்ந்தனர்

புனைவு: 'கவி வித்தகர்' சேவியர் பாலசிங்கம் அல்லைப்பிட்டி, இலங்கை 

சனி, ஏப்ரல் 23, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) 

பொருள்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

மண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 18

விஞ்ஞானி திரு.சந்திரபோஸ் 
விஞ்ஞானி திரு ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
அதாவது X-ray கருவியைக் கண்டுபிடித்த ஜேர்மனிய விஞ்ஞானியாகிய ரொன் ஜன்(Wilhelm Conrad Röntgen) மற்றும் காந்தப் புல அதிர்வுகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியாகிய பியரி கியூரி(Pierre Curie) ஆகியோரே அந்த இரு விஞ்ஞானிகள் ஆவர். இந்த இரு விஞ்ஞானிகள் சம்பந்தமாக சில தகவல்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் நான் முதலில் குறிப்பிட்ட ரொன் ஜன் என்ற ஜேர்மனிய விஞ்ஞானி தனது கண்டுபிடிப்பாகிய 'எங்கள் உடலைப் படமெடுக்கும்' X-ray கருவிக்குக் காப்புரிமை வாங்காது விட்டு விட்டார். "மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கவே இதனைக் கண்டுபிடித்தேன். ஆகவே இதிலிருந்து கிடைக்கும் வருமானமோ, லாபமோ எனக்கு வேண்டாம்" என்று கூறி விட்டார். உலகின் பெரும்பாலான நாடுகளில் நமது உடலின் உட்பகுதியை(உள்ளுறுப்புகளை) படம் எடுக்கும் முறையை X-ray என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் டேனிஷ் மக்கள்(டென்மார்க் மக்கள்) தமது மொழியில் மேற்படி விஞ்ஞானியைக் கௌரவிக்கு முகமாக X-ray படத்தை 'ரொன் ஜன் படம்'(Røntgenbillede) என்றே அழைக்கின்றனர். டேனிஷ் மக்கள் தமது மொழியால் ஒரு விஞ்ஞானியைக் கௌரவிக்கும் விதம் என்னை நெகிழச் செய்கிறது. இவ்வாறு ஏனைய நாட்டு மக்களும் தமது மொழியில் விஞ்ஞானிக்கு 'கௌரவம்' வழங்கியுள்ளார்களா? என்பதை நானறியேன். அவ்வாறு தெரிந்தால் வாசகர்கள் எனக்கு எழுதலாம்.
அதேபோல் காந்தப் புல அதிர்வுகளையும், மக்னீசியம் என்ற 'இரசாயனத்தின்' பயன்பாட்டையும் பற்றிக் கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கிய பிரெஞ்சு விஞ்ஞானியாகிய 'பியரி' என்பவரும், வறுமையில் வாடியவர் என்பதுடன், நமக்கெல்லாம் சிறு வயதிலேயே பாடப் புத்தகங்களில் நன்கு அறிமுகமான 'ரேடியத்தைக்' கண்டுபிடித்த பெண் விஞ்ஞானியாகிய 'மேரி கியூரி அம்மையாரின்' கணவர் என்பதும், இந்தத் தம்பதிகள் தமது ஆராய்ச்சிக் காலங்களில் வீட்டு வாடகை செலுத்துவதற்குக் கூட பணம் கிடைக்காமலும், உணவு, வீட்டை வெப்பமாக வைத்திருப்பதற்கு தேவைப்படும் விறகு போன்றவற்றை வாங்குவதற்குக் கூட வழியில்லாது திண்டாடினர் என்பதை 'வரலாறு' நமக்குக் கூறுகிறது.
இந்த நிலையில் இந்திய விஞ்ஞானி திரு.போஸ் அவர்களைப் போல், தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை(Patent right) வாங்காது விட்ட பிரெஞ்சு விஞ்ஞானி 'பியரி' அவர்களுக்கு அறிவியல் உலகம் தலைவணங்கும் அதே வேளை மனித சமுதாயம் அவருக்கு 'பிழைக்கத் தெரியாத மனிதன்' என்று பட்டம் சூட்டியிருப்பது வேதனையைத் தருகிறது.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

வியாழன், ஏப்ரல் 21, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்,
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து 
நோக்கக் குழையும் விருந்து. (90)

பொருள்:அனிச்சமலர் நுகர்ந்த பொழுதே வாடிவிடும். ஆனால், விருந்தினர், முகம் மாறுபட்டுப் பார்க்கிற அளவிலேயே வாடி விடுவர்.

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.1


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக "டேய் பொடியா இஞ்ச வா"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.
Murugan Kovil (முருகன் கோவில்)
மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலயம் 
தயக்கத்தோடும்,பயத்தோடும் அவரருகில் சென்றேன். என்னத்துக்கு அழுகிறாய், இது அவரது கேள்வி, எனது பதில் இரண்டு மடங்காக அவரிடம் திரும்பியது. "எங்கட வீட்டக் காணேல்ல(*காணோம்), அண்ணா பாவம்". எனது பதில் அவருக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டும். இக்காலத்து 'வடிவேலு', அல்லது 'சந்தானமாக' இருந்தால் "ஆமா உங்கட வீட்டையும், உன் அண்ணனையும் காக்கா தூக்கிக்கொண்டு போயிட்டுது" என்று கூறியிருப்பார்கள். அந்த மனிதர் மிக நல்ல மனிதர் போலும், "சரி அழுகிறத நிப்பாட்டு, நீ ஆற்ற மோன்?(*யாருடைய மகன்?) ஒரு கட்டளையும், கேள்வியும் அவரிடமிருந்து வந்தன. என் தந்தையாரின் பெயரை மிகவும் தவறான உச்சரிப்பில் 'ஊர்ப்பாணியில்' கூறினேன். "அட நீ சொர்ணலிங்கத்தின்ர மோனா?(*மகனா? சரி, சரி இப்பிடி இந்தப் பூவரச மரத்துக்குக் கீழ கொஞ்ச நேரம் இரு, நான் உன்ன வீட்ட கூட்டியண்டு போறன், என்ன" என்றார். அந்த மனிதர் உடம்பில் ஒரு சாறமும்(*கைலியும்) தலையில் தலைப்பாகையும் கட்டியிருந்தார். பார்ப்பதற்கு 'மகாகவி பாரதியார்' போலக் காட்சியளித்தார்.அவரது பேச்சு 'நம்பிக்கையூட்டுவதாக' அமைந்திருந்ததால் அவர் கூறியபடியே பூவரச மரத்திற்குக் கீழே அமர்ந்தேன். வெயில் முகத்தில் அனல் காற்றாக வீசியது. சுமாராக ஒரு மணி நேரம் கடந்தபின்னர், தனது தோட்ட வேலையை முடித்துகொண்ட அவர். "சரி வெளிக்கிடு போவம்" என்று கூறிய அந்த மனிதர், என் தலையில் தொப்பி எதுவும் இல்லாததைக் கண்டார். ஏதோ யோசித்தவராக, தனது தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து எனக்குத் 'தலைப்பாகையாக' கட்டினார். தன் கையிலிருந்த பட்டையை(*தண்ணீர் ஊற்றும் பாத்திரம், பனையோலையால் ஆனது) தனது தலையில் தொப்பியாகக் கவிழ்த்தார். வெயிலின் கொடுமையிலிருந்து தன்னையும், என்னையும் காப்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்பதை அறியாத நான் அவருக்குப் 'பைத்தியம்' என எண்ணிக் கொண்டேன். 
அவர் அழைத்துச் சென்ற பாதையில் முட்கள் அதிகமில்லை, இருப்பினும் ஓரிரு சிறிய முட்கள் காலில் தைத்தன. அவற்றைக் காலிலிருந்து அகற்றியபடியே, அந்த மனிதருடன் நம்பிக்கையோடு நடந்து சென்றேன். ஏனைய கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'மண்டைதீவில்' குளங்களுக்குப் பஞ்சமில்லை. மண்டைதீவில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அவர் அழைத்துச் சென்ற பாதையிலும் ஒரு பெரிய குளம் குறுக்கிட்டது. குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அணைகளின் வழியாக என்னைப் பத்திரமாக, 'கையைப் பிடித்து' அழைத்துச் சென்றார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நடந்த பின்னர் எங்கள் வீட்டை அடைந்தோம்.அப்போது என் மனதில் "இவர் பிள்ளை பிடிகாரர் இல்லை" என்ற தெளிவு பிறந்தது. எங்கள் வீட்டில், எனக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்ட என் அண்ணனைக் கண்டபோது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அந்த மனிதர் 'நடந்த சம்பவத்தை' விலாவாரியாக விபரித்து, மிகப்பெரிய 'நன்றியறிதலை' என் அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். நானும் என் தலையில் கட்டியிருந்த அவரது சால்வையை(*துண்டு) அவரிடம் திரும்ப ஒப்படைத்தேன்.
அவர் தனது வீட்டை நோக்கிச் சென்றவுடன் அந்த மனிதரைப் பற்றிய 'பாராட்டுப் பத்திரம்' ஒன்று என் தாயாரால் வாசிக்கப் பட்டது. எனது தாயார் அந்த மனிதரைப் பற்றிக் கூறிய புகழுரைகளிளிருந்து அம்மனிதரின் பெயர் 'கார்த்திகேசு' எனவும், எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்தாறு வீடுகள் தள்ளி வசிப்பவர் என்பதும், முருகனின் நூற்றுக்கணக்கான பெயர்களில் 'கார்த்திகேயன்' என்பதும் ஒன்று எனவும், எங்கோ காணாமல் போய், கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து சாக இருந்த பிள்ளையாகிய என்னை என் அம்மா தினமும் வணங்கும் முருகன்தான் 'கார்த்திகேசு' எனும் மனித வடிவில் வந்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார். எனவும் என் தாயாரால் 'சிலாகிக்கப் பட்டது'. என் தாயார் கூறியதில் 'உண்மை' இல்லாமலில்லை. ஏனெனில் 'மண்டைதீவு' உட்பட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் 'கிணறுகள்' நில மட்டத்தோடு இருக்கும். இவற்றில் சிறு பிள்ளைகள் தவறி வீழ்ந்து இறப்பது உண்டு. பெரும்பாலும் மழைக் காலங்களில் இது அதிகமாக இடம்பெறுவதுண்டு. அம்மா கூறிய 'முருகன்' கதை எத்தனை வீதம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'தெய்வம் மனித வடிவில் வந்து' உதவுவதாகத்தானே 'வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
இதேபோல் என் தாயார் கூறிய ஒரு கருத்து என்னால் என்றுமே மறக்க முடியாதது. அதாவது ஒரே கிராமத்தில் இரண்டு 'முருகன்' கோயில்கள் இருப்பது மிக மிக அபூர்வம் என்றும், 'மண்டைதீவு', 'அல்லைப்பிட்டி' ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டுமே இது 'திருவுள சித்தப்படி' நிகழ்ந்துள்ளது என்றும், இது தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் அல்ல என்றும், இதுவும் 'இறைவனின் சித்தம்' எனவும் கூறியிருந்தார். இவ்விடயத்தை நான் ஆராய்ந்து, விசாரித்துப் பார்த்ததில்லை. காரணம் என் தாயாரின் 'நம்பிக்கையை' சிதறடிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே.
  (தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

புதன், ஏப்ரல் 20, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு. (89) 

பொருள்: செல்வ நிலையிலும் உள்ள வறுமை என்பது, விருந்தோம்பாத அறியாமையாகும். அது அறிவுடையாரிடம் உண்டாகாது. அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.0


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
தோட்டங்கள் ஊடாக நடந்துகொண்டிருந்தாலும், குடிமனைகள் இருக்கும் பகுதியை எவ்வாறு சென்றடைவது என்பது எனக்குப் புலப்படவில்லை. காலில் மிகவும் சிறிய நெருஞ்சி முட்கள் குத்தத் தொடங்கின. ஒவ்வொரு பத்து மீட்டர் தூரமும் நடந்தபின்னர், என் காலில் தைத்த சிறிய முள்ளை காலிலிருந்து அப்புறப் படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டதால் என் நடையில் வேகம் தடைப்பட்டது. செருப்போடு நடந்து செல்வோர் 'பாக்கியவான்கள்' என்று நினைத்துக் கொண்டேன். எனக்குச் செருப்புக் கிடைக்காமல் போனதற்கும் என் அண்ணனே காரணம். ஏனெனில் தனக்குக் கிடைத்த செருப்பை பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு நாடகளுக்குள் என் அண்ணன் தொலைத்ததால், நானும் செருப்பைத் தொலைக்கக் கூடும் என்று என் தந்தையார் கருதியதால், எனக்கு 'செருப்பு' வாங்கித் தரவில்லைப் போலும். பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்லித் தந்த பாடலாகிய: 
"குடைபிடித்து, செருப்புமிட்டுப் 
புத்தகமும் கொண்டு.
குடுகுடென நடந்து வரும் 
குழந்தைகளே கேளும்" 
பாடலை எல்லோரும் வகுப்பில் சேர்ந்து பாடும்போது, என் கண்களிலிருந்து நீர் வழிந்ததை, அந்தத் 'தேவதை' போன்ற டீச்சரோ, அல்லது என் பெற்றோர்களோ அறிய வாய்ப்பேதுமில்லை. இப்போது இனம்புரியாத பயமொன்று என்னைப் பற்றிக்கொண்டது. அதாவது என் அண்ணனும், நண்பர்களும் என்ன ஆனார்களோ? என்ற கேள்வியும், பயமுமே அதுவாகும். என் அண்ணனும் அவனது நண்பர்களும் அந்தக் கரிய உருவமுடைய மனிதர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள், அவர்களை அந்த மனிதர்கள் 'கட்டி வைத்து' தடியால்(*பிரம்பால்) அடிப்பார்கள் என்பதை எண்ணும்போது அழுகை, அழுகையாக வந்தது. அதைவிடவும் எனது 'அருமைப் பெருமையான' சிலேட்டை விட்டுவிட்டு ஓடிவந்தேன் என்பதும் நினைவுக்கு வந்து, அதற்காக வீட்டில் கிடைக்கப் போகும் தண்டனையை நினைத்துப் பார்க்கும்போது உள்ளம் 'பகீரென்றது'. 
இத்தனை குழப்பங்களோடும், பயத்தோடும் நடந்துகொண்டிருந்த எனக்கு அதிக தூரம் நடந்தும்கூட எங்கள் வீடு தென்படாதது ஏமாற்றத்தையும், அழுகையையும் ஏற்படுத்தியது. இப்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக "டேய் பொடியா இஞ்ச வா"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.
தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.