இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.7
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
ஆச்சி ஒரேயொரு நிபந்தனை விதித்தார். அதாவது மரத்தில் காய்த்திருக்கும் நெல்லிக் காய்களில் பெரும்பாலானவை 'பிஞ்சாக' இருப்பதால், அவற்றைப் பிடுங்காமல்(*பறிக்காமல்) 'கீழே விழுந்து கிடக்கும்' நெல்லிக் காய்களை மட்டுமே பொறுக்கவேண்டும்.எங்கள் குழுவினரும் அதற்குச் சம்மதித்தோம்.
பாட்டியின் அனுமதி கிடைத்ததுதான் தாமதம் நாங்கள் அனைவரும் அவரது வளவிற்குள் நெல்லிக்காய் மரம் நின்ற இடத்தை நோக்கி ஓடினோம். ஆச்சி சத்தமாக எங்களை எச்சரித்தார். "கவனமடா, பார்த்துப் போங்கோ, ஓடுற வீச்சில கிணத்துக்குள்ள விழுந்திடாதேயுங்கோ (*பசங்களா, பார்த்து போங்க, ஓடுற வேகத்துல கெணத்துக்குள்ள விழுந்திடாதீக)
ஆச்சியின் எச்சரிக்கையை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தோம். நெல்லிக்காய் மரத்தை அண்மிக்கும்போது எனது காலில் மிகவும் 'குளிர்ச்சியான' ஏதோ ஒரு பொருள் மிதிபட்டது. இதனால் எனது வேகம் தடைப் பட்டது. குனிந்து எனது வலது காலைப் பார்த்தேன். அது ஒரு கோழியின் கழிச்சல்(எச்சம்) என் காலில் மிதிபட்டு இருந்தது. எனக்கு இருந்த 'அரியண்டத்தில்'(*அருவருப்பில்) காலை அருகிலிருந்த புற்தரையில் பல தடவைகள் தேய்த்தேன்.
இப்போது என் அண்ணனும், நண்பர்களும் நெல்லிக்காய் பொறுக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றிக் கவலையில்லை. நானோ என் கால் மிகவும் அசுத்தமாகி விட்டது என்ற உணர்வில், என் காலை 'வெட்டி எறிய வேண்டும்' எனும் உணர்வில், என் காலை மீண்டும், மீண்டும் நிலத்தில் தேய்த்தபடி நின்றேன். நெல்லிக்காய் மரத்தின் கீழேயும் பல இடங்களில் கோழிகள் எச்சமிட்டிருந்தன. என் அண்ணனுக்கும் அவனது நண்பர்களுக்கும் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் மும்முரமாக நெல்லிக் காய்களைப் பொறுக்கி அவர்களது பொக்கற்றுகளில்(*சட்டைப் பைகளில்) திணித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிமிடத்திலிருந்து எனக்கு 'நெல்லிக்காய்' என்றால் என்ன? என்று அறியும் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. கீழே நிலத்தில் விழுந்து கிடக்கும் ஒவ்வொரு நெல்லிக்காயிலும் கோழியின் 'மலம்' ஒட்டியிருப்பதாக உணர்ந்தேன். ஒரு நெல்லிக் காயைக் கூட தொடாமல் 'சிலையாக' நின்று கொண்டிருந்தேன். காலில் இப்போதும் கோழிக் கழிச்சலின் 'நாற்றம்' வீசிக் கொண்டிருந்தது. அங்கு வந்த ஆச்சி, நான் நெல்லிக் காய்களைப் பொறுக்காமல் நிற்பதைப் பார்த்து, என்மீது இரக்கப் பட்டு, ஐந்தாறு நெல்லிக் காய்களைப் பொறுக்கி, என்னிடம் கொடுத்தார். நான் அவைகளைப் பத்திரமாக என் கைகளில் வைத்துக் கொண்டேன். ஆச்சியின் வளவை விட்டு வெளியே வந்ததும் அவற்றை என் அண்ணனிடமும், நண்பர்களிடமும் 'கொடை வள்ளலாக' வழங்கினேன். நான் ஒரு நெல்லிக் காயைக் கூட வாயில் போடவில்லை என்பதையோ, இன்று புது நடவடிக்கையாக எனக்குக் கிடைத்ததை 'வாரி வழங்குகிறேன்' என்பதைப் பற்றியோ அவர்கள் அலட்டிக் கொண்டதாகவோ தெரியவில்லை. முப்பத்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. எனக்கு அந்த நெல்லிக்காயின் மீது வெறுப்புத்தான், நெல்லிக்காயைக் கண்டாலே கூடவே 'கோழிக் கழிச்சலும்', அதன் நாற்றமும் நினைவுக்கு வந்து குடலைப் புரட்டும்.
"முதல் அனுபவம் இறுதிவரை நிலைத்து நிற்கும்" என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.(First impression is the best impression) அது முதல் அனுபவம் எப்போதும் நல்லதாக அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. ஆனால் என் விடயத்தில் அது ஒரு தவறான 'பதிவை' என் நினைவில் ஏற்படுத்தி விட்டது. நெல்லிக் காயில் இரண்டு வகை உண்டு என்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். புளிப்பானது(அரு நெல்லி) ஒன்று, இனிப்பானது(முழு நெல்லி) மற்றொன்று. இதில் எனக்கு 'தவறான' பதிவை ஏற்படுத்தியது 'புளிப்பான' நெல்லிக் காய் மட்டுமே. மற்றபடி 'இனிப்பான' நெல்லிக் காயை உண்டால் எனக்கு குமட்டல். வருவதில்லை.'கோழிக் கழிச்சலும்' நினைவுக்கு வருவதில்லை. இதில் இன்னொரு சிறிய அனுபவத்தையும் கூறியே ஆக வேண்டும். அதாவது நான் குறிப்பிட்ட 'இனிப்பான' நெல்லிக் காயை இலங்கையில் வாழ்ந்த காலங்களில் பல தடவைகள் சாப்பிட்டு, அதன் பின் தண்ணீரைக் குடித்து அந்த இனிமையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். அந்த ஆசையில் கடந்த வருடம் டென்மார்க்கில் ஒரு தமிழ்க் கடையில் 'இனிப்பு' நெல்லிக் காயைக் கண்டதும், கடுமையான ஆவலில் ஒரு 1/4 கிலோ வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக இரண்டு நெல்லிக் காய்களை எடுத்து உண்டேன். அது நாங்கள் ஊரில் சாப்பிட்ட நெல்லிக் காய்போல சுவையாகவோ, இனிப்பாகவோ இல்லை. வெறும் 'துவர்ப்பு'(*வெற்றிலைக்குப் போடும் பாக்கின் சுவை) சுவை மட்டுமே இருந்தது. தண்ணீரைக் குடித்தேன், இனிக்கவே இல்லை.ஊரில் அனுபவித்த சுவைகளை நினைவில் கொண்டு வாழும், அந்த நினைவிலேயே 'தமிழ்க் கடைகளில்' பொருட்களை வாங்கும் உங்கள் அனைவர்க்கும் ஒரு சிறிய செய்தி/எச்சரிக்கை, உங்கள் அனைவர்க்கும் ஐரோப்பிய மண்ணில்/மேற்கத்திய நாடுகளில் 'பலத்த ஏமாற்றம் காத்திருக்கிறது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன
நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக