வெள்ளி, ஏப்ரல் 15, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.9


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

நானும், அண்ணனும் நண்பர்கள் புடைசூழ 'கணேப்பிள்ளையர்' வளவை நோக்கி, 'மாங்காய் தின்னும்' ஆவலில் வேகமாக நடந்து கொண்டிருந்தோம்.
தூரத்தில் ஒரு வளவு, அங்கே கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு மாமரங்கள் பசுமையோடும், ஆங்காங்கே மஞ்சள் நிறப் பூக்களோடும் காற்றில் நறுமணத்தைப் பரப்பியபடி நின்றுகொண்டிருந்தன. எங்கள் வரண்ட கிராமத்தைப் பொறுத்தவரையில் கணேப்பிள்ளையரின்(*கணபதிப் பிள்ளையின்) வளவு ஒரு 'சோலை' என்றுதான் கூறவேண்டும். 'கந்தையாப்பாவின்' வளவிற்கும் இந்த சோலைக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். இந்த வளவில் யாரும் குடியிருக்கவில்லை. அத்துடன் வேலிகளும் உரிய முறையில் அடைக்கப் படாமல் 'ஒழுங்கீனமாக' கிடந்தன. மாமரங்களை அண்மித்ததும் அண்ணனும் அவனது நண்பர்களும் தமது கைகளிலிருந்த புத்தகப் பைகளைக் கீழே போட்டுவிட்டு மாமரங்களை நோக்கி சிட்டாகப் பறந்தனர்.
அவர்களை அடியொற்றிச் சென்ற நானும் அங்கிருந்த புற்தரை ஒன்றில் எனது 'சிலேட்டை' வைத்துவிட்டு ஓட்டமாக ஓடினேன். மாங்காய் பொறுக்கும் 'ஆவேசத்தில்' எனது அண்ணனுக்கும், நண்பர்களுக்குமிடையில் இடையிடையே 'முறுகல்' நிலை ஏற்பட்டுத் தணிந்தது. நான் இந்தச் சண்டைகளில் பங்கெடுக்காமல் மாமரத்தின் கீழே, சருகுகளுக்கு இடையில் கிடந்த சில மாம்பிஞ்சுகளை எடுத்துக் கடித்தேன். அப்போது என் மனதில் ஏற்பட்ட சிந்தனை இதுதான். "இந்தக் கசப்பான மாம்பிஞ்சுகளுக்காக ஏன் சண்டை போடுகிறார்கள்? கீழே கிடந்து பொறுக்கிய 'மாம்பிஞ்சுகளுடன்' திருப்தியடையாத என் அண்ணனும், அண்ணனின் நண்பன் ஒருவனும் ஒரு மாமரத்தில் ஏற ஆரம்பித்தார்கள். அவர்கள் ஒரு பெரிய மரத்தில் என் முன்னால் ஏறுவது இதுவே முதற்தடவை என்பதால் நான் மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களது 'வீரப் பிரதாபத்தை' வாயைப் பிளந்தபடி பார்த்து நின்றேன். அவர்கள் மாமரத்திலிருந்து 'பெரிய மாங்காய்களைப்' பிடுங்கினார்களா? (*பறித்தார்களா?) இல்லையா என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஒரு கண இடைவெளியில் அவ்வளவின் மறு 
பக்கத்திலிருந்து "டேய், டேய் வம்பில பிறந்தவங்களே!(தகாத முறையில் பிறந்தவர்களே!) என்ற வாசகங்கள் கர்ண கடூரமாக ஒலித்தது. அவ்வொலியைக் கேட்டதுதான் தாமதம், நான் ஒரே ஓட்டமாக கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினேன். ஓடும்போது ஒரேயொரு தடவை சத்தம் வந்த திசையை நோக்கினேன். அங்கே இரண்டு கரிய நிறமுடைய மனித உருவங்கள் வந்து கொண்டிருந்தன. அவர்கள் பார்ப்பதற்கு 'ஆபிரிக்கர்களைப் போல்' இருந்தார்கள். அண்மையில் தொலைக்காட்சியில் மத்திய ஆபிரிக்க நாடாகிய 'கொங்கோவில்' நடக்கும் வன்முறைகளைப் பற்றிய காட்சியொன்றில் அவர்களைப் போல உருவமுள்ள சிலரைப் பார்த்தேன். அப்போதும் சிறு வயது ஞாபகம் ஒரு தடவை வந்து போனது.எங்கள் அம்மா அடிக்கடி கூறிப் பயமுறுத்தும் 'உம்மாண்டி'(*பூச்சாண்டி) அவர்களில் ஒருவராக இருக்கும் என்பது எனது சிறு வயதுக் கற்பனை.

யாழ் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் பிறந்து, வளர்ந்தவர்களுக்கு 'ஒழுங்கை'(*சந்து) என்றால் என்னவென்ற விளக்கம் அவசியமில்லை என்று நினைக்கிறேன். கண்ணில் தென்பட்ட ஒரு ஒழுங்கையால் 'கண்போன போக்கில்' ஓடத் தொடங்கினேன். எனது நோக்கம் அந்தக் 'கரிய' மனிதர்களின் கையில் பிடிபடாமல் தப்பித்துக் கொள்வது மட்டுமே. ஓடினேன், ஓடினேன், ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடியபின்னர் வீடுகள், மனிதக் குடியிருப்புகள் அற்ற ஆனால் 'தோட்டங்கள்'(*வயக்காடுகள்) அதிகமுள்ள ஒரு பகுதிக்கு வந்து விட்டபோதுதான் தெரிந்தது நான் ஓடிக்கொண்டிருப்பது எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒரு பிரதேசம் என்பது.
பெரும்பாலான தோட்டங்களில் ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். வேலை செய்துகொண்டிருந்தார்கள் என்பதைவிட நண்பகலில் மிளகாய், புகையிலைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டிய 'உயிர்ப்புத் தண்ணீர்'/'உசிப்புத் தண்ணி'(*வரண்ட பிரதேசங்களில் மிளகாய்/புகையிலை நாற்றுகள் நட்டு ஒரு மாதத்திற்குள் நாற்றுகள் வெயிற் சூட்டால் வாடி வதங்குவதைத் தடுக்கு முகமாக யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் நண்பகலிலும் சிறிது நீர் ஊற்றுவார்கள்) ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரதேசம் முழுவதுமே பச்சைப் பசேலெனக் காட்சியளித்தது. இந்தப் பகுதியில் எங்கள் வீடு எங்கே இருக்கும் என்று என்னால் தேட முடியவில்லை. மனம்போன போக்கில் தோட்டங்கள் ஊடாக நடந்துகொண்டிருந்தேன். 
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன


நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக