திங்கள், ஏப்ரல் 11, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.8


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
இது எனது பாலர் பாடசாலையின் மூன்றாவது நாள். ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பள்ளிக்கூடம் விட்டவுடன் வேறெங்கும் மினக்கெடாமல்
(*மெனக்கெடாமல்) வீடுவந்து சேரவேண்டும் என்பது அம்மாவின் 'கட்டளை'. நாங்களும் மிகவும் 'சிரத்தையாக' சம்மதித்தோம். எங்களுக்குத் தெரியும்' வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால், முடிவுகளை எடுப்பது 'நாங்கள்' மட்டுமே என்பது.
அன்றும் பள்ளியில் மிகவும் இனிய நாளாகக் கழிந்தது. டீச்சர் சுதனையோ, என்னையோ நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பற்றி எதுவுமே கேட்காதது எனக்கு ஆச்சரியமே. இருப்பினும் அதைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளவுமில்லை. எங்கள் இவருடைய குடும்பங்களுக்குமிடையில் ஏற்பட இருந்த சண்டையை அந்த டீச்சர் எவ்வாறு தடுத்தார்? என்பது இன்றுவரை எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது. நான் நடந்த சம்பவத்தைப் பற்றி சுதனிடம் மூச்சு விடவும் இல்லை. அவனோடு சேர்ந்து மிகவும் அன்பாக விளையாடினேன்.
அன்றைய நாளும் அந்தப் பாலர் பள்ளியில் இனிதே நிறைவு பெற்றது. என்னை அழைத்துச் செல்வதற்கு என் அண்ணனும், அவனது குழாமும்(*குழுவினரும்)
வந்திருந்தனர். நான் எனது சிலேட்டைக் கையில் தூக்கிக் கொண்டு, டீச்சருக்கு "வணக்கம் டீச்சர் போயிற்று வாறோம்"(வணக்கம் டீச்சர் போய்ட்டு வர்றோம்) என டீச்சர் கற்றுக் கொடுத்த முறையில் விடையளித்தபின் பாலர் பாடசாலையின் படிக்கட்டுகளில் துள்ளித், துள்ளி இறங்கினேன்.அவ்வாறு டீச்சரிடம் விடைபெறும்போதோ, படிகளில் துள்ளித் துள்ளி இறங்கும்போதோ எனக்குத் தெரியாது இப்பாலர் பாடசாலைக்கும் எனக்கும் இடையிலான உறவு இன்றுடன் முடிவடைகிறது என்பது.
இன்றைய தினம் எங்கள் புதிய முயற்சி, வீடு போய்ச் சேர்வதற்கு முன்னால்  கணேப்பிள்ளையர்(*கணபதிப்பிள்ளை) வளவிற்குள் நிற்கும் மாமரங்களில் இருந்து மாங்காய்களில் சிலவற்றை பிடுங்கி 'ருசிபார்த்து' விடவேண்டும் என்பது.
இந்த இடத்தில் இலங்கையிலும், தமிழகத்திலுமுள்ள பெற்றோருடன் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்:
###############################################
  • உங்கள் பிள்ளை பாடசாலைக்குச் சென்று விட்டு நேரே வீட்டுக்கு வந்து சேர்கிறதா? என்பதைக் கண்ணும் கருத்துமாக கண்காணியுங்கள்.
  • இவ்வாறு பள்ளிக்கூடம் போகும்போதும், திரும்பி வீட்டுக்கு வரும்போதும் ஏற்படும் தவறான 'நட்புகள்' பிள்ளையைத் திசை திருப்பி, தவறான செய்கைகளில் ஈடுபடுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
  • பள்ளிக்கூடம் விட்டதும் 'குழப்படிகாரச்'(சேட்டை செய்கின்ற) சிறார்களுடன் சேர்ந்து மாங்காய், புளியங்காய், இலந்தைப் பழம், நாவல்பழம் போன்றவற்றைப் பொறுக்குவதற்கு/திருடுவதற்குச் செல்கின்ற பிள்ளை நாளடைவில் பெரிய அளவில் 'திருட்டுக்களில்' ஈடுபடுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். பாடசாலையில் 'வெண்கட்டி'(*சாக்பீஸ்) திருடிய சிறுவன், அவனது அன்னை கண்டிக்காமல் விட்டதால் நாளடைவில் மிகப்பெரிய திருடன் ஆனான் என்பதும், சிறைக்குச் செல்லும்போது தன்னைக் கண்டிக்காமல் விட்ட அன்னையின் 'மூக்கைக்' கடித்துத் துப்பினான். எனவும் தமிழில் ஒரு கதை உண்டு என்பது பெரும்பாலான பெற்றோர்கள் அறிவீர்கள். இந்தக் 'கதை' தெரியாத பெற்றோர், உங்கள் உறவினர், நண்பர்களில் 'வயதானவர்களிடம்' கேட்டுப் பாருங்கள்.
  • இவ்வாறு மாங்காய், புளியங்காய், நாவற்பழம்,இலந்தைப் பழம் போன்றவற்றைப் பொறுக்கி அல்லது திருடி உண்கின்ற பிள்ளைகள்  உயிர்ச்சத்து C (*வைட்டமின் C) அல்லது தாதுப் பொருட்கள்(minerals) குறைபாடு காரணமாகவே அவ்வாறு செய்கிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இக்கருத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்வதோடு, இவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்குச் 'செலவு' அதிகம் ஆகாது என்பதையும் தெரிந்து கொள்ள்ளுங்கள்.
  • மாங்காய் திருட்டில் ஆரம்பித்துப் பெரிய திருட்டு அல்லது பெரிய குற்றச் செயல் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு உங்கள் ஆழ்ந்த 'கண்காணிப்பு' மற்றும் 'வருமுன் காக்கும் கொள்கை' போன்றவை மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
###############################################
நானும், அண்ணனும் நண்பர்கள் புடைசூழ 'கணேப்பிள்ளையர்' வளவை நோக்கி, 'மாங்காய் தின்னும்' ஆவலில் வேகமாக நடந்து கொண்டிருந்தோம்.
(தொடரும்)

 உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன
நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக