வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.3

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

இவ்வளவு 'கலவரங்களுக்குப்' பின்னர் எங்கள் குடும்ப 'அமைச்சரவையில்' பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
  1. எதிர்வீட்டுச் 'சுதனுடன்' நானோ, அண்ணாவோ எந்தவித பேச்சுவார்த்தையோ, 'நட்போ' வைத்துக் கொள்ளக் கூடாது.
  2. பள்ளிக்குச் செல்லும்போதோ, திரும்பி வரும்போதோ 'சுதனுடன்' சேர்ந்து செல்லக் கூடாது. மீறினால் 'நாயடி, பேயடி' வாங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
  3. நாளை 'வெளியுறவுத் துறை அமைச்சராகிய' என் அம்மா என்னைப் பாலர் பாடசாலையில் ஒப்படைக்கும்போது 'ஆசிரியையிடம்' நடந்த சம்பவம் பற்றி முறையீடு செய்வார்.
என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேற்கூறிய தீர்மானங்களில் முதலிரண்டு தீர்மானங்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. ஏனெனில் அந்த நடைமுறை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப் படுகிறதா? இல்லையா? என்பதைக் கண்காணிக்க அம்மாவோ,அப்பாவோ ஒவ்வொரு நாளும் எங்களோடு சேர்ந்து பள்ளிக்கு வரப்போவதில்லை. ஆனால் மூன்றாவதாக இயற்றப்பட்ட தீர்மானத்தைக் கேட்டபோது எனக்கு 'வயிற்றில் புளியைக் கரைத்தது' காரணம் நாளை பள்ளியில் ஆசிரியையின் முன்னால் என்னுடைய 'வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போகிறது' (*விஷயம் அம்பலமாகப் போகிறது) இதற்கிடையில் இந்த விடயத்தை 'நல்ல பிள்ளையாக' ஒப்புக்கொண்டு' நாளை அம்மா+ஆசிரியை சந்திப்பை தடுப்பதற்குத்தான் எனக்கு விருப்பம், ஆனால் இவ்விடயத்தில் சிறிதும் அசைந்து கொடுக்காத என் அண்ணனின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்பதால் என் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது. நாளை நடக்கவிருக்கும் 'விஷப் பரீட்சையை' நினைத்து எனக்கு உறக்கமில்லை என்றே சொல்லலாம், அருகில் என் அண்ணனோ 'எந்த வித கவலையுமில்லாமல்' உறங்கிக் கொண்டிருந்தான்.
எனது பாலர் வகுப்பின் இரண்டாவது நாள், அன்று நடைபெற இருக்கும் 'துன்பியல்' சம்பவத்தை எதிர்நோக்கியபடி மிகவும் 'கவலையோடு' தொடங்கியது. அம்மாவின் வலது கைப்பிடியில் நான், எனது வலது கைப்பிடியில் என் 'சிலேற்று'(*சிலேட்டு), அம்மாவுக்கு இடதுபுறமாக புத்தகப் பை சகிதம் என் அண்ணா என மூவரும் நடந்து சென்றோம். முதலில் அண்ணாவின் பள்ளிக்கூட வாசலில் அவனைக் கொண்டுபோய் விட்ட அம்மா, திரும்பி என்னோடு எனது பாலர் பாடசாலையை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். எனக்கு நெஞ்சு 'திக் திக்' என அடித்துக் கொண்டிருந்தது. அருகில் அந்த ஊருக்கே பெருமை சேர்க்கும் 'பிள்ளையார் கோவில்' இருந்தது. அந்தப் பிள்ளையாரிடம் "பிள்ளையாரே என் அம்மா, ரீச்சரிடம்(*டீச்சரிடம்)மேற்படி 'சுதன்' விடயத்தைப் பேசவே கூடாது" அல்லது மறந்துபோய்விட வேண்டும், என்று மனமுருகி+மனதிற்குள் வேண்டிக் கொண்டேன்.
அம்மா என்னோடு பாலர் பாடசாலையின் படிக்கட்டுகளில் ஏறி உள்ளே வந்தார்."அற நனைந்தவனுக்குக் கூதல் என்ன? குளிர் என்ன?" என்பது போன்றதுதான் என் நிலை. அம்மாவைப் பார்த்து அந்த டீச்சர் என்ற 'தேவதை' ஒரு புன்னகையை சிந்தினார். எனது அம்மாவும் சம்பிரதாயபூர்வமாக புன்னகை பூத்த முகத்துடன் பேச்சை ஆரம்பித்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கவும் நான் சென்று நாற்காலியில் அமரவும் சரியாக இருந்தது. என்னே ஆச்சரியம், "பிள்ளையாரின் அருளை என்னவென்று சொல்வது?" அன்று 'சுதன்' பள்ளிக்கூடம் வரவில்லை.
டீச்சரிடம் விடைபெற்று அம்மா சென்றுவிட்டார். எனது ஆனந்தத்திற்கு அளவேயில்லை. பாலர் பாடசாலையை ஒரு மிகச்சிறிய தேவாரத்துடன் ஆரம்பிப்பது வழமை. அதில் 'மந்திரமாவது நீறு' என்ற தேவாரம் முக்கிய இடம் பிடித்திருந்தது, அதற்கான காரணத்தை நான் பெரியவனாக வளர்ந்தபின் அறிந்து கொண்டேன். அதாவது 'குழந்தைகளால் மிகவும் இலகுவாக உச்சரிக்கக் கூடியது' என்பதால் பாலர் பள்ளி ஆசிரியைகள் அதை மாணவர்களை பாட வைப்பது வழமை.
'பிரார்த்தனை' என்ற பெயரில் 'மந்திரமாவது நீறு' பாடியாகி விட்டது. இப்போது மாணவர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தோம் உடனடியாகவே டீச்சர் என்னை அழைத்தார் "லிங்கதாசன் இங்க வாங்கோ" என்று தனது  இனிய குரலால் அவர் என்னை அழைக்கவும், நான் இருப்பது 'தேவ லோகத்திலா? என்று ஒருகணம் வியந்தேன். ஏனெனில் எங்கள் கிராமத்தில் எந்த ஆசிரியையும்/ஆசிரியரும் மாணவரை 'வாங்கோ/போங்கோ' என மரியாதையாக அழைப்பதில்லை. பெற்றோர்கூட பிள்ளைகளை வாங்கோ/போங்கோ என மரியாதையாக அழைப்பது மிக மிக அபூர்வம். ஆனால் இந்த ஆசிரியை ஒரு ஏழை வீட்டுப் பிள்ளையைக் கூட மரியாதையாக 'விளித்தது' எனக்கு அந்த வயதில் தேனாக இனித்தது. அந்த டீச்சரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
"நேற்று பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும்போது என்னப்பன் (*என்ன ராசா) நடந்தது?"
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக