வியாழன், ஏப்ரல் 21, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.1


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக "டேய் பொடியா இஞ்ச வா"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.
Murugan Kovil (முருகன் கோவில்)
மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலயம் 
தயக்கத்தோடும்,பயத்தோடும் அவரருகில் சென்றேன். என்னத்துக்கு அழுகிறாய், இது அவரது கேள்வி, எனது பதில் இரண்டு மடங்காக அவரிடம் திரும்பியது. "எங்கட வீட்டக் காணேல்ல(*காணோம்), அண்ணா பாவம்". எனது பதில் அவருக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டும். இக்காலத்து 'வடிவேலு', அல்லது 'சந்தானமாக' இருந்தால் "ஆமா உங்கட வீட்டையும், உன் அண்ணனையும் காக்கா தூக்கிக்கொண்டு போயிட்டுது" என்று கூறியிருப்பார்கள். அந்த மனிதர் மிக நல்ல மனிதர் போலும், "சரி அழுகிறத நிப்பாட்டு, நீ ஆற்ற மோன்?(*யாருடைய மகன்?) ஒரு கட்டளையும், கேள்வியும் அவரிடமிருந்து வந்தன. என் தந்தையாரின் பெயரை மிகவும் தவறான உச்சரிப்பில் 'ஊர்ப்பாணியில்' கூறினேன். "அட நீ சொர்ணலிங்கத்தின்ர மோனா?(*மகனா? சரி, சரி இப்பிடி இந்தப் பூவரச மரத்துக்குக் கீழ கொஞ்ச நேரம் இரு, நான் உன்ன வீட்ட கூட்டியண்டு போறன், என்ன" என்றார். அந்த மனிதர் உடம்பில் ஒரு சாறமும்(*கைலியும்) தலையில் தலைப்பாகையும் கட்டியிருந்தார். பார்ப்பதற்கு 'மகாகவி பாரதியார்' போலக் காட்சியளித்தார்.அவரது பேச்சு 'நம்பிக்கையூட்டுவதாக' அமைந்திருந்ததால் அவர் கூறியபடியே பூவரச மரத்திற்குக் கீழே அமர்ந்தேன். வெயில் முகத்தில் அனல் காற்றாக வீசியது. சுமாராக ஒரு மணி நேரம் கடந்தபின்னர், தனது தோட்ட வேலையை முடித்துகொண்ட அவர். "சரி வெளிக்கிடு போவம்" என்று கூறிய அந்த மனிதர், என் தலையில் தொப்பி எதுவும் இல்லாததைக் கண்டார். ஏதோ யோசித்தவராக, தனது தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து எனக்குத் 'தலைப்பாகையாக' கட்டினார். தன் கையிலிருந்த பட்டையை(*தண்ணீர் ஊற்றும் பாத்திரம், பனையோலையால் ஆனது) தனது தலையில் தொப்பியாகக் கவிழ்த்தார். வெயிலின் கொடுமையிலிருந்து தன்னையும், என்னையும் காப்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்பதை அறியாத நான் அவருக்குப் 'பைத்தியம்' என எண்ணிக் கொண்டேன். 
அவர் அழைத்துச் சென்ற பாதையில் முட்கள் அதிகமில்லை, இருப்பினும் ஓரிரு சிறிய முட்கள் காலில் தைத்தன. அவற்றைக் காலிலிருந்து அகற்றியபடியே, அந்த மனிதருடன் நம்பிக்கையோடு நடந்து சென்றேன். ஏனைய கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'மண்டைதீவில்' குளங்களுக்குப் பஞ்சமில்லை. மண்டைதீவில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அவர் அழைத்துச் சென்ற பாதையிலும் ஒரு பெரிய குளம் குறுக்கிட்டது. குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அணைகளின் வழியாக என்னைப் பத்திரமாக, 'கையைப் பிடித்து' அழைத்துச் சென்றார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நடந்த பின்னர் எங்கள் வீட்டை அடைந்தோம்.அப்போது என் மனதில் "இவர் பிள்ளை பிடிகாரர் இல்லை" என்ற தெளிவு பிறந்தது. எங்கள் வீட்டில், எனக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்ட என் அண்ணனைக் கண்டபோது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அந்த மனிதர் 'நடந்த சம்பவத்தை' விலாவாரியாக விபரித்து, மிகப்பெரிய 'நன்றியறிதலை' என் அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். நானும் என் தலையில் கட்டியிருந்த அவரது சால்வையை(*துண்டு) அவரிடம் திரும்ப ஒப்படைத்தேன்.
அவர் தனது வீட்டை நோக்கிச் சென்றவுடன் அந்த மனிதரைப் பற்றிய 'பாராட்டுப் பத்திரம்' ஒன்று என் தாயாரால் வாசிக்கப் பட்டது. எனது தாயார் அந்த மனிதரைப் பற்றிக் கூறிய புகழுரைகளிளிருந்து அம்மனிதரின் பெயர் 'கார்த்திகேசு' எனவும், எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்தாறு வீடுகள் தள்ளி வசிப்பவர் என்பதும், முருகனின் நூற்றுக்கணக்கான பெயர்களில் 'கார்த்திகேயன்' என்பதும் ஒன்று எனவும், எங்கோ காணாமல் போய், கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து சாக இருந்த பிள்ளையாகிய என்னை என் அம்மா தினமும் வணங்கும் முருகன்தான் 'கார்த்திகேசு' எனும் மனித வடிவில் வந்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார். எனவும் என் தாயாரால் 'சிலாகிக்கப் பட்டது'. என் தாயார் கூறியதில் 'உண்மை' இல்லாமலில்லை. ஏனெனில் 'மண்டைதீவு' உட்பட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் 'கிணறுகள்' நில மட்டத்தோடு இருக்கும். இவற்றில் சிறு பிள்ளைகள் தவறி வீழ்ந்து இறப்பது உண்டு. பெரும்பாலும் மழைக் காலங்களில் இது அதிகமாக இடம்பெறுவதுண்டு. அம்மா கூறிய 'முருகன்' கதை எத்தனை வீதம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'தெய்வம் மனித வடிவில் வந்து' உதவுவதாகத்தானே 'வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
இதேபோல் என் தாயார் கூறிய ஒரு கருத்து என்னால் என்றுமே மறக்க முடியாதது. அதாவது ஒரே கிராமத்தில் இரண்டு 'முருகன்' கோயில்கள் இருப்பது மிக மிக அபூர்வம் என்றும், 'மண்டைதீவு', 'அல்லைப்பிட்டி' ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டுமே இது 'திருவுள சித்தப்படி' நிகழ்ந்துள்ளது என்றும், இது தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் அல்ல என்றும், இதுவும் 'இறைவனின் சித்தம்' எனவும் கூறியிருந்தார். இவ்விடயத்தை நான் ஆராய்ந்து, விசாரித்துப் பார்த்ததில்லை. காரணம் என் தாயாரின் 'நம்பிக்கையை' சிதறடிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே.
  (தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக